• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 33

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
442
13
43
india
பகலிரவு பல கனவு – 33

மரம், செடி, கொடிகளிடம் மனம் விட்டுப் பேசியபடி தோட்டத்தில் மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்தான் பிரபாகரன். முருகானந்தமும் அவரது பாசமலர் தங்கையும் ஆடிய ஆட்டத்தில், தாய், தங்கை, அப்பத்தா மட்டுமே அவனது உறவு என்று தனது உறவு வட்டத்தை சிறு வயதில் இருந்தே வெகுவாக சுருக்கிக் கொண்டுவிட்டான். மனித உறவுகளிடம் மட்டுமே தள்ளி இருந்தான்.

மற்றபடி விவரம் தெரிந்த நாள் முதல் செடி கொடிகளோடு பேசிப் பேசி அவை எல்லாம் அவனது உற்ற உறவாகிப் போனது. மகிழ்ச்சியோ துக்கமோ அவன் முதலில் பகிர்ந்து கொள்வது அந்த உறவுகளிடம் தான். இவனைப் புரிந்தது போல அவை அசைந்தாடி மெல்லிய காற்றால் இவனை வருடிக் கொடுக்கும். கடைகளின் எண்ணிக்கை அதிகமான போது செடிகளிடம் அவன் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வந்து, திருமணம் முடிந்த பின்னர் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் கிட்டத்தட்ட நின்றே போனது. சம்யுக்தாவுடன் கைகோர்த்து தோட்டத்தில் உலா வர வேண்டும், அவனது பசுமைத் தோழர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் போன ஜென்மத்தில் நடந்தது போலாகிவிட்டது.

சம்யுக்தாவை சந்தித்த நாள் முதல் திருமணம் பற்றிய ஏகப்பட்ட கனவுகளைக் கொண்டிருந்தவன், ஆனால், கனவு வேறு நிஜம் வேறு என்று அவனுக்குப் புரிந்த போது அவனுக்குப் பிரியமான உறவுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. யாரிடமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் வாழப் பழகிக் கொண்டிருந்தான். இப்போது ஜனித்திருக்கும் புதிய உயிர் அவனைப் பழைய நண்பர்களிடம் அழைத்து வந்திருந்தது.

“என் குட்டிக் குழந்தை உன்னை விட ஸாஃப்டா இருக்கும் தெரியுமா?” என்று ஒரு பூவிடம் கேட்டுக் கொண்டிருந்தவனை மொபைலில் யாரோ அழைத்தார்கள். அதைக் கண்டு கொள்ளாமல் தனது கவனத்தை பூக்களில் வைத்திருந்தவனை அங்கே வந்த கதிரேசன் வியப்புடன் பார்த்தார்.

“என்ன சார், ஆச்சரியமா பார்க்கறீங்க? இவங்க தான் ரொம்ப வருஷமா எனக்கு ஃப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் எல்லாம்.”

“அது எனக்கு நல்லாவே தெரியுமே பிரபாகரன். ஆனால், உங்க வைஃப் கால் பண்றத அவாய்ட் பண்ணிட்டு அப்படி என்ன ஃப்ரெண்ட்ஸோட பேசறீங்கன்னு தான் ஆச்சரியம்.”

“வாட் !! வைஃபோட காலா?” என்று அதிர்ந்தவனுக்கு அப்போது தான் சற்று முன் ஒலித்த ரிங்டோன் ஞாபகம் வந்தது.

“ஓ மை கடவுளே! மணி என்ன ஆச்சு? எட்டு தானே ஆகுது. அதுக்குள்ள எழுந்துட்டாளா?” புலம்பிக் கொண்டே மனைவிக்கு அழைப்பு விடுத்தான்.

“சம்யூ! இன்னைக்கு லீவு தானே. எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்ச? உடம்புக்கு ஏதாவது செய்யுதா? ஜுஸ் போட்டு வச்சிட்டு வந்தேனே, குடிச்சிட்டியா? வாமிட் பண்ணிட்டியா?” பதில் சொல்ல வாய்ப்பு கொடுக்காமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

“ஷப்பா!!! பிரபாஆஆஆ! முடியல.. கொஞ்சம் கேப் விட்டு கேளுங்க. எனக்கு பதில் மறந்து போயிடும்.” அவளது குரலில் இருந்த சோர்வு அவனை இன்னும் பதட்டமடைய வைத்தது.

“நான் தோட்டத்தில இருந்து கிளம்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்தில வந்துடுவேன்.” எதற்காக அழைத்தாள் என்பதை அறியாமலே புல்லட்டில் பறந்தான்.

அரைமணி நேரத்திற்கும் முன்பே வீடு வந்து சேர்ந்தவன் அவசரமாக புல்லட்டை நிறுத்தி விட்டு மாடிப்படியில் கால் வைத்தவன் கண்களில் அங்கே கலவரத்துடன் நின்று கொண்டிருந்த சம்யுக்கதாவைக் கேள்வியாகப் பார்த்தான்.

“என்ன சம்யூ, எதுக்கு இந்த வந்து நிக்கற? ஹாஸ்பிடல் போகணுமா?”

“ம்ச். எனக்கு ஒன்னும் இல்ல பிரபா. மலர் அண்ணி வந்திருக்காங்க போல. கீழ் வீட்டில ஒரே சத்தம். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அதான் உங்களை உடனே கூப்பிட்டேன்.”

“மலர் வந்தது…” என்று ஆரம்பித்தவன் கீழ் வீட்டில் இருந்து வந்த சத்தத்தில் அமைதியானான்.

“ஹலோ காமாட்சி மேடம், நீங்க குடியிருக்கிற வீடு அவன் பேர்ல தான் இருக்கு, ஞாபகம் இருக்கா? அவ்வளவு ரோஷம் இருக்கிறவங்க, நீங்க தானே இந்த வீட்டை விட்டு போயிருக்கணும், ஒன்னாந் தேதியானா உங்க அக்கவுன்ட்ல விழற பணத்தை வேணாம்னு சொல்லி இருக்கணும், மாசா மாசம் வர்ற மளிகையை வேண்டாம்னு சொல்லி இருக்கணும். அவன் வேண்டாம், அவன் பணம் மட்டும் வேணுமா?” மலர்விழி கோபத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

காமாட்சி திகைத்து நிற்க, மலர்விழி தொடர்ந்தாள். “இப்போ மட்டும் அவனோட கடமைன்னு உங்க மைன்ட் வாய்ஸ் சொல்லுமே.”

பிரபாகரனுக்கு உள்ளே செல்லவும் மனமில்லை, தாயைக் கேள்வி கேட்பதும் பிடிக்கவில்லை. செய்வதறியாது தவித்தான்.

“ஏ புள்ள மலரு! கொஞ்சம் நேரம் சும்மா இருத்தா. எம்மருமகள எல்லாரும் சேர்ந்து அடிச்சா அவ தாங்க மாட்டா. இப்படி கேட்கத்தான் சொல்லாம கொள்ளாம வந்து நிக்குறியா?” அப்பத்தா, பேத்தியைக் கேட்க ஆரம்பித்தார்.

அவரது கேள்வியில் சற்றே நிதானத்துக்கு வந்த பிரபாகரன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு மாடியேறிவிட்டான். இப்போது அவன் மனதில் மலர்விழியின் திடீர் வருகைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஏகப்பட்ட கேள்விகள் முளைத்தன. விட்டத்தை வெறித்தபடி யோசனையில் ஆழ்ந்தான்.

“பிரபா!” அருகில் வந்து அவனைத் தொட்டாள் சம்யுக்தா.

“ஹான்.. என்ன சம்யூ? என்ன செய்யுது?” பதறி எழுந்தவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

“ஓ மை கடவுளே! இப்பவே கண்ணைக் கட்டுதே! இன்னும் எட்டு மாசம்.. இருநூத்தி நாப்பது நாள்.. ப்ரக்னன்ஸிய கூட சமாளிச்சிடுவேன்.. இந்த மனுஷன எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே.”

“ஏய்! ஒரு மனுஷன் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போய் வந்தா, உனக்கென்ன நக்கலா இருக்கா?”

“நீங்க செய்யறது அப்படி இருக்கு சார். கால் பண்ணினா எதிர இருக்கிறவங்க என்ன பேச வர்றாங்கன்னு கேட்காமல் நீங்களா ஏகப்பட்ட கேள்வி கேட்டு பதிலையும் நீங்களே சொல்லி.. பதறிப் போய் பறந்து வந்தாராம்.. என்ன விஷயமனு காது கொடுத்து கேட்டிருந்தா பதற வேண்டிய அவசியம் வந்திருக்குமா?”

“சரி.. சரி.. தெரியாமல் செஞ்சுட்டேன். விட்டுடு.”

“அது போகட்டும்.. இப்போ எதுக்கு பேயறைஞ்சது மாதிரி உட்கார்ந்திருக்கீங்க? அண்ணி பேசினதை யோசிச்சிட்டு இருக்கீங்களா?”

“ஹும்.. அது ஒரு பக்கம் இருக்கு. வேற ஒரு விஷயம் தான் ரொம்ப உறுத்துது..”

“ஒன்னும் புரியல.. எதுக்கு இப்படி puzzle மாதிரி பேசிட்டு இருக்கீங்க? கொஞ்சம் தெளிவா பேசுங்க.”

“இந்த ஃப்ளவர் யார் கிட்டயும் சொல்லாம திடீர்னு கிளம்பி வந்திருக்கா.”

“ஆச்சி கேட்டதை வச்சு சொல்றீங்களா? அண்ணி அத்தை கிட்ட சொல்லி இருக்கலாமே.”

“உங்க அத்தை கிட்டயும் சொல்லல.”

“அதெப்படி உங்களுக்கு தெரியும்? அத்தை சொன்னாங்களா?” கண்களில் சந்தேகத்துடன் கேள்வி கேட்டவளை முறைத்தான்.

“காலங்காத்தால அஞ்சு மணிக்கு வந்து இறங்குறா. பொண்ணு வரான்னு சொன்னா அர்த்த ராத்திரி ஆனாலும் வாசல்ல வந்து வழிமேல விழிவச்சு காத்திருப்பாங்க உங்க அத்தை. இன்னைக்கு அப்படி ஒன்னும் நடக்கல.”

“ஓ….”

“அப்புறம் மேடம் தனியா வரல.. ஹீரோ மாதிரி ஒரு ஆளு ஜாகுவார் கார்ல வந்து ட்ராப் பண்ணிட்டு போறாரு.”

“வாட்? அண்ணியா? உங்களுக்கு எப்படி தெரியும்?”

“நான் தான் அந்த சீன என் இரண்டு கண்ணால பார்த்தேனே. மேடம் கெத்தா வந்து இறங்குனதையும் பார்த்தேன் .. டிரைவர் சீட்டில இருந்து இறங்குன ஹீரோ.. ம்ச்..” அவன் சொல்லாமல் விட்டது என்னவாக இருக்கும் என்று ஓராயிரம் கற்பனைகள் சம்யுக்தாவின் கண் முன்னே வந்து போயின. அது சரி.. பாம்பின் கால் பாம்பறியுமே!

“அண்ணி கிட்ட கேட்டீங்களா? என்ன சொன்னாங்க? யாராம் அது?”

“நான் கீழே இறங்கி போறதுக்குள்ள கார் பறந்திடுச்சு. மேடம் வானத்துல மிதந்துகிட்டே வந்தாங்க. என்னைப் பார்த்து கொஞ்சம் ஜெர்க் ஆன மாதிரி தான் இருந்தது. உடனே சுதாரிச்சிட்டா. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஃப்ரெண்ட் கார்ல வந்தேன்னு ஒரு கதை வேற. நானும் தோட்டத்துக்கு போற அவசரத்தில பெரிசா கண்டுக்காம போயிட்டேன். இப்போ அவ கத்துறத பார்த்தா விஷயம் பெரிசுன்னு தெரியுது. என்னவோ நடக்கப் போகுது. அது நல்லதா இருக்கப் போறதில்லைன்னு மட்டும் புரியுது.”

இது நாள் வரையில் கண்டிராத ஒரு விரக்தி பிரபாகரனின் குரலில். சம்யுக்தாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ‘ஏற்கனவே வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களை தினம் தினம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனையோ?’ என்று சலிப்பு ஏற்பட்டது.

“அவளை ட்ராப் பண்ணது யாரா இருக்கும்? ஐடி கம்பெனில வேலை பார்க்கிற ஃப்ரெண்ட் ஜாகுவார் கார் வச்சிருப்பானா? வெறும் ஃப்ரெண்ட் தானா, இல்லை வேற ரிலேஷனா? இந்த அம்மா என்ன செய்ய காத்திருக்காங்களோ தெரியலையே!” பிரபாகரன் தன் போக்கில் புலம்பிக் கொண்டே இருந்தான்.

“நீங்களும் எல்லாரையும் மாதிரி தான் யோசிப்பீங்களா? ஏன், ஃப்ரெண்ட் யாரும் கார்ல கூட்டிட்டு வரக்கூடாது, ஹக் பண்ணக் கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்களா? நிதானமா பேசிப் பார்த்தா தெரியப் போகுது. மலர் அண்ணி லவ் பண்ணினா உங்க கிட்ட சொல்லாம இருக்க மாட்டாங்க.”

“கரெக்ட்.. அதுனால தான் இது லவ் மட்டும் இல்ல.. வேற எதுவோ பெரிசா செஞ்சிட்டு வந்திருக்கான்னு சொல்றேன்.”

“சும்மா எதையாவது கற்பனை பண்ணாதீங்க பாஸ். லவ் இல்லை.. வேற எதுவோன்னா என்ன அர்த்தம், கல்யாணமே செஞ்சிருப்பாங்கன்னு சொல்றீங்களா? மலர் அண்ணியா? சான்ஸே இல்லை.”

“உனக்கு புரியாது சம்யூ. மலர் சின்ன வயசுல இருந்தே எதையும் வேணும்னு கேட்கவே மாட்டா. ஆனா ஒன்னு வேணும்னு நினைச்சிட்டா, எப்படியாவது அதை சாதிச்சிடுவா. செஞ்சிட்டு வந்து தான் நம்ம கிட்ட சொல்லுவா, நாமளும் வேற வழியே இல்லாமல் அக்சப்ட் பண்ணிக்க வேண்டியதாயிடும். இப்போதும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். நம்ம வீட்டு நிலவரம் அவளுக்கு நல்லாவே தெரியும். காதல்னு வந்து நின்னா அம்மாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு சொல்லவே முடியாது. இதையெல்லாம் யோசிச்சு தானே முடிவெடுத்திருப்பா. நீ அவங்க இரண்டு பேரையும் பார்த்திருந்தா ஃப்ரெண்ட்ஸுன்னு சொல்லவே மாட்ட.”

“என்ன பிரபா, ஏதேதோ சொல்றீங்க? கொஞ்ச நேரத்தில உங்க பாசமலர் இங்கே வந்து ஒரு நாம தனியா வந்தது பத்தி என்கொயரி வைப்பாங்க. அப்போ விவரமா விசாரிச்சுக்கோங்க. இப்போ, உங்க புள்ள சோறு கேட்டு என் வயித்த பிராண்டுது. சீக்கிரம் எதையாச்சும் செஞ்சு தாங்க. போங்க.” அவனை அடுப்படியில் தள்ளி விட்டாள்.

“தங்கச்சியை நினைச்சுட்டு என் சாப்பாட்டுல கை வச்சிடாதீங்க” என்றவள் அவன் பிடியில் சிக்காமல் ஹாலில் வந்து அமர்ந்தாள்.

காலை உணவை முடித்த பின்னர் மறுபடியும் பிரபாகரன் மலர்விழி பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தான்.

“ஃப்ரெண்டா இருந்தா வீட்டுக்குள்ள கூப்பிட்டிருக்கலாமே..” என்று ஆரம்பித்த பிரபாகரனின் தோளில் பலமாக ஒரு அடி விழுந்தது.

“பிரபா! என்னால முடியல.. தயவு செஞ்சு என்னை விட்டிருங்க. நான் வேணும்னா மலர் அண்ணிக்கு ஃபோன் போட்டு மேல வரச் சொல்லவா?”

“வேண்டாம், அவளே வருவா. நான் குளிச்சிட்டு கடைக்கு போயிட்டு வரேன். உனக்கு மதியத்துக்கு என்ன வேணும்னு சொல்லு. செஞ்சு வச்சிட்டு போறேன்.’

“ஃபுல் டே கடையில இருக்கப் போறீங்களா?”

“மதியம் வந்து சாப்பிட்டு போறேன். அப்போ செய்ய முடியாதில்ல.. அதான்..”

“ஓ.. எனக்கு எங்க கண்ணகி அக்கா செய்யற புளிக்குழம்பும் சேனைக் கிழக்கு வறுவலும் சாப்பிடணும் போல இருக்கு. அதையே செஞ்சிடுங்க.”

“என்னாதூ..?”

“தெரியாதா? ஆக்சுவலா நண்டு வறுவல் தான் கேட்கலாம்னு நினைச்சேன். உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு தான் சிம்பிளா கேட்டேன். செய்ய முடியாதா??” பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

“கண்ணகி அக்கா சமையலுக்கு நான் எங்க போவேன்? ஏதோ யூடியூப் பார்த்து சமைக்கற மாதிரி எதையாவது சொல்லுங்க மேடம்.” பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கையெடுத்து கும்பிட்டான்.

“சரி. போனால் போகுது.. பொழச்சு போங்க. சீக்கிரம் எதையாவது செய்ங்க. சாப்பிடற மாதிரி இருக்கணும்.”

“அடிங்க.. உனக்கு வர வர கொழுப்பு கூடிப் போச்சு.“

“ஹா.. ஹா.. கண்டிப்பா நீங்க செஞ்சு கொடுத்த சாப்பாடு தான் அதுக்கு காரணம். பிரபா! இப்ப தான் ஞாபகம் வருது. என் க்ளாஸ்மேட் காயத்ரியோட அம்மா புளி சாதம் மிக்ஸ் செஞ்சு கொடுத்தாங்க. நேத்து சொல்ல மறந்து போயிட்டேன். சாதம் மட்டும் வைங்க, புளி சாதம் மிக்ஸ் பண்ணிக்கலாம். வரும் போது கொஞ்சம் சிப்ஸ் வாங்கிட்டு வாங்க.”

“நம்ம வீட்டு பெரிசுங்க எல்லாம் மூஞ்சிய திருப்பிட்டு இருக்குதுங்க. யார் யாரோ ஹெல்ப் பண்றாங்க. எத்தனை நாளைக்கு இப்படின்னு தெரியல.”

பேசிக்கொண்டே சாதம் வடித்து புளி சாதம் தயார் செய்தவன் அவளுக்கு மாதுளை ஜுஸையும் தயாரித்து வைத்தான்.

“ஓகே சம்யூ. நான் கிளம்பறேன். நீ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு. நான் சாவி எடுத்துட்டு போறேன்.” பிரபாகரன் கதவில் கை வைத்தபோது, “நான் உள்ள வரலாமா?” என்று மலரின் குரல் கேட்டது. பிரபாகரன் எதுவும் சொல்லாமல் நின்றான்.

“வாங்க அண்ணி. இதென்ன புதுசா, உள்ள வரலாமான்னு கேக்குறீங்க?”

“வேறென்ன செய்ய? நிலைமை அப்படி இருக்கே. இதோ எங்க அண்ணன் வான்னு வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லல. முறைச்சிட்டு நிற்கிறான்” என்றபடி உள்ளே வந்தாள்.

“எனக்கு கடைல வேலை இருக்கு சம்யூ, வெட்டிக் கதை பேச எனக்கு டைம் இல்ல” என்று வேகமாக வெளியேறினான் பிரபாகரன். மலர்விழி அவன் பின்னால் சென்று அழைப்பதற்குள் அவனது புல்லட் கிளம்பி விட்டது. சற்று நேரம் அவன் போன திசையிலேயே பார்த்திருந்த மலர்விழி, “நான் அப்புறம் வரேன் அண்ணி” என்று கீழே இறங்கி விட்டாள்.

அவள் தன்னிடம் ஏதாவது விசாரிப்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள் சம்யுக்தா. கதவைச் சாற்றி உள்ளே சென்று படுத்தவள் உடனே உறங்கி விட்டாள்.

அவளது அறைக்குள் மலர்விழி ஆழ்ந்த யோசனையில் அமர்ந்து இருந்தாள். அவள் கைகளில் ஒரு ஃபைல். அதை எடுத்துப் பார்த்தவள் கட்டிலில் வைத்தாள். மீண்டும் எடுத்தாள்.

“இன்னைக்கு எப்படியாவது சொல்லியே ஆகணும்…” என்று முனகினாள்.

அந்த நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் காமாட்சி. அவரைக் கண்டதும் அவசரமாக கையில் இருந்த ஃபைலை மறைக்க முயன்றாள், முடியவில்லை. காமாட்சி அதை வாங்கித் திறந்து விட்டார்.

“என்ன இது?”

“....”

காமாட்சி ஃபைலைத் திறந்து உள்ளே இருந்த காகிதத்தை எடுத்தார்.

அவரது கண்கள் அந்த எழுத்துகளில் நின்று போனது.

“Marriage Certificate.”

மெதுவாக தலை உயர்த்தி மலர்விழியைப் பார்த்தார்.

“மலர்… இது என்ன?” அவரது குரலில் அதிர்ச்சி.

“நான்… நான்.. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டேன் அம்மா.” மலர்விழி அமைதியாக சொன்னாள். அந்த வார்த்தைகள் அறைக்குள் எதிரொலித்தது.. காமாட்சி பதிலேதும் பேசவில்லை. மீண்டும் அந்தச் சான்றிதழைப் பார்த்தார். அதில் இருந்த பெயரை படித்தார்.

“கார்த்திக்.”

அடுத்து அதில் இருந்த தேதியைப் பார்த்தார். ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியிருந்தது. சற்று நேரம் கண் மூடி அமைதியாக நின்றார்.

ஃபைலை மகளிடம் கொடுத்து விட்டு அமைதியாக வெளியே சென்று விட்டார்.

“அம்மா! என்னம்மா எதுவும் சொல்லாம போறீங்க? ஏதாவது பேசுங்க.” அவர் பின்னால் ஓடிவந்த மலர்விழியைத் திரும்பியும் பாராமல் தனது அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தினார். மலர்விழி விக்கித்து நின்று விட்டாள்.

 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 33
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Brindha Ganesh