அத்தியாயம் – 1
“அம்மா. உங்க அன்புத் தொல்லைக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு. ரெண்டு நாள் வெளியூர் வந்ததுக்கு இந்த ‘பில்டப்’பா? நேரத்துக்குச் சாப்பிடறேன். குளிக்கிறேன்.என்னைப் பத்திக் கவலைப்படாமல் உங்க செல்லப் பையனுக்கு ஊட்டி வளர்த்துங்க.. அவன் தான் இன்னும் வளராமல் படிச்சுட்டே இருக்கான்” எனக் கைப்பேசியில் சொல்லிக் கொண்டிருந்தாள் எழில்மலர்.
மாலைவேளை என்பதால் பெங்களூரு லால்பாக் தாவரவியல் பூங்காவில் மக்களின் கூட்டம் கணிசமாகக் குறைய ஆரம்பித்திருந்தது. காற்றின் இசைக்கேற்ப மரக்கிளைகள் நளினமாக நெளிந்து கொண்டிருக்க, அதன் குளுமையை ரசித்தவாறே, தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாள் எழில்மலர்.
அவ்வேளையில் பொன்னிற வண்ணத்துப்பூச்சி ஒன்று காற்றை மேடையாக்கி, அங்கும், இங்கும், ‘சால்சா’ நடனமாடி எழில்மலரின் கவனத்தைத் தன் பால் ஈர்த்தது. அதன் எழிலில் மயங்கியவள், “அம்மா, அவசரமாக ஒரு முத்தம் கொடுக்கணும். நைட் கூப்பிடறேன்” என அன்னையிடம் சொல்ல, “என்னடி உளர்ற?” என அவர் அவளை விடவும் அவசரமாக அலறினார்.
“ரொம்பக் கற்பனை பண்ணாதீங்க. இப்போதைக்குச் சின்னப் பட்டாம்பூச்சி மேலே ஒரு லவ்வு. அவ்வளவு தான்” எனச் சொன்னவள், அன்னையின் பதிலை எதிர்பார்க்காமல் கைப்பேசியை வைத்துவிட்டு அதை எட்டிப் பிடிக்க எம்பிக் குதித்தாள்.
காற்றையே அவளுக்குப் பரிசாகத் தந்த வண்ணத்துப்பூச்சி மனம் போன போக்கில் வளைந்து மிதந்து சென்றது. அதனைப் பின்பற்றி ஓடிய எழில்மலர், தான் முன்பு நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தூரம் விலகிச் சென்றிருந்தாள். ஆனால் அதெல்லாம் அவள் கவனத்தில் பதியவில்லை.
அந்த வண்ணத்துப்பூச்சிக்கு முத்தமொன்றைப் பதித்துவிடவேண்டும் என்பதே அவளது குறிக்கோளாக இருந்தது.
இளைப்பாறவென்று இலையில் இறங்கிய வண்ணத்துப்பூச்சியைக் கொய்து தன் பட்டு இதழ்களில் ஒத்தி எடுக்க நினைக்கையில், “ம்ம்ம். நல்லா அம்சமா, அழகா இருக்க. ஆனால் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” எனத் தமிழில் பேசிய ஓர் ஆணின் குரல் கேட்டது.
திடுக்கிட்ட எழில்மலரின் கையில் அகப்பட்டிருந்த பட்டாம்பூச்சிக்கு உடனே விடுதலை கிட்ட, ‘ஏமாந்தியா?’ என அது சிறகடித்துப் பறந்தே போனது.
எழில்மலருக்குச் சுறுசுறுவென்று கோபம் வர, ‘என் முத்தத்தைத் தட்டிப் பறிக்க எவனுக்குத் தைரியம்? எவன்டா அது?’ எனச் சுற்றும், முற்றும் திரும்பிப் பார்க்க, அங்கே ஒருவரையும் காணவில்லை.
“என்னப் பார்க்கிற? முழி எல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனா பாரு, நீ இப்போ என்னை உசுப்பேத்தி விட்டுட்ட” - மீண்டும் அதே குரல்.
குரல் வந்த திசையை நோக்கி மெல்ல எட்டு வைத்த எழில்மலர், ‘எவன்டா அது..?’ என அங்கிருந்த ஓர் பெரிய மரத்தின் பின்னால் மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
“உனக்கெல்லாம் பேச்சுக் கூடாது. செயல்ல காட்டறேன் பாரு. ‘ட்டோடடையிங்.’” என ஓர் இளைஞன் சட்டையில்லாமல், வெறும் ஜீன்ஸ் மட்டும் அணிந்துகொண்டு அவள் முன்னாள் வந்து குதித்தான்.
அப்படித் திடீரென்று ஓர் இளைஞன் தன் முன்னால் குதிக்கவும், “ஐயோ. அம்மா” எனத் திடுக்கிட்டு ஓர் அடி பின்னால் நகர்ந்தாள் எழில்மலர். தான் ஏதோ ஓர் சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என மூளை படு பயங்கரமாக எச்சரிக்கை விடுக்க, ‘சரியான கிராக்கா இருப்பான். விடு ஜூட்’ என அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள்.
எழில்மலர், அரக்கப் பறக்க ஓடி வருவதைப் பார்த்த தோழி சம்யுக்தா, அலுவல் விஷயமாகக் கைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, “ஏன்டி. இப்படித் தலைத்தெறிக்க ஓடி வர்ற?” எனக் கேட்டாள்.
சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் தோழியின் கேள்விக்கு, ‘தலை எப்படித் தெறிக்க முடியும்? அதென்ன திரவமா?’ என அதை வைத்துக் கடித்திருப்பாள். சம்யுக்தாவும், ‘தலைத் தெறிக்க என்றால் வேகமாக என்று அர்த்தம்’ என்று அவளுக்கு விளக்கியிருப்பாள்.
ஆனால் எழில்மலர் தான் யாரோ ஒரு வில்லனைப் பார்த்து பயத்தில் ஓடி வருகிறாளே. அதனால், “அங்கே.. ஒருத்தன். சட்டையில்லாமல். என்னை” எனத் தந்தி முறையில் அவள் செய்தி வாசிக்க,
தோழியின் செய்தியை நூல் பிடித்த சம்யுக்தா உடனே கைப்பேசியை அணைத்து, “எங்கடி அவன்? இதோ வரேன்” என எழிமலர் காட்டிய திசையில் சென்றாள்.
சற்று மறைவான இடத்தில் சட்டையில்லாமல் நின்று கொண்டிருந்த அதே இளைஞன் தன் கையிலிருந்த பையில் எதையோ துழாவியவாறே, “ச்சே.. மிஸ் ஆயிட்ட. அடுத்தமுறை சிக்காமலா போயிடுவ. உன்னை விடமாட்டேன்” எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தான்.
இவன் தான் தன் தோழியிடம் வம்பு செய்திருப்பான் என அவன் பேச்சிலேயே சம்யுக்தாவுக்குப் புரிய, துரிதமாகச் செயல்பட்டு தன் கருப்பு நிறத் தோள்பையில் இருந்த ‘பெப்பர் ஸ்ப்ரேயை’ எடுத்து அந்த இளைஞனின் முகத்தில் ‘புஸ் புஸ்’ என்று அடித்தாள்.
“ஆ. அம்மா. ஐயோ. எரியுதே.” எனக் கத்திய அந்த இளைஞனின் கையிலிருந்த பை நழுவிக் கீழே விழ, விழிகளைத் தன் இரு கைகளால் கசக்க ஆரம்பித்தான்.
“ஏய் எழில், தமிழ் பேசறான்டி” எனச் சம்யுக்தா சொல்ல, “எப்ப இருந்து ‘சென்ட்டை’ இப்படி எரியற மாதிரி செய்ய ஆரம்பிச்சாங்க? மட்டமான ‘ப்ராண்ட்’டா இருக்கு.. கண்டிப்பா ஊத்திக்கும்” என்றான் பெப்பர் ஸ்ப்ரேயை முகத்தில் வாங்கியவன்.
“என்னது ‘சென்ட்’டா?” எனத் தன் கையிலிருந்த ‘பெப்பர் ஸ்ப்ரேயை’ ஓர் பார்வை பார்த்த சம்யுக்தா, மீண்டும் அதை அவன் கண்களில் அடிக்க, “பின்னே ‘சென்ட்’ இல்லையா? அப்புறம் அதை எதற்கு என் மேலே அடிக்கறீங்க?” என்றான்.
“விளையாடறீங்களா? பொது இடத்தில் அநாகரீகமாகச் சட்டையில்லாமல் நின்னதுமில்லாமல், என் ஃபிரெண்ட்கிட்டே தப்பா நடந்துக்கிட்டீங்க. அப்புறம் உங்கமேலே ‘பெப்பர் ஸ்ப்ரே’ பண்ணாம, இதை வச்சு பெப்பர் சிக்கனா செஞ்சு கொடுப்பாங்க.?” என்றாள் சம்யுக்தா.
மெதுவாக கண்களைத் திறந்த கதிர் என்ற அந்த இளைஞன், தன் முன்னாலிருந்த சம்யுக்தாவைப் பார்த்ததும் ஆச்சர்யமானான். அவள் சொன்னதைக் கருத்தில் கொள்ளாமல், “அட, நீங்களா?” என்றான்.
தினமும் தொழில் ரீதியாகப் பலவிதமான ஆட்களைச் சந்திக்கிறாள் சம்யுக்தா. அப்படிச் சந்திப்பவர்கள் அனைவரையும் அவளால் ஞாபகத்தில் நிறுத்திக்கொள்ள முடியாததால், “உங்களுக்கு என்னைத் தெரியுமா?” என அவனிடமே அதற்கான விடையைத் தேடினாள்.
“உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்” எனக் கதிர் சொல்ல, “இந்தப் பழைய ‘டெக்னிக்’ எல்லாம் இங்க வேண்டாம். பேச்சை வளர்க்கிற வேலை எங்ககிட்ட நடக்காது. சொல்லுங்க.. எதுக்கு அப்படி தப்பா நடந்துக்கிட்டீங்க?” என்றாள் எழில்மலர்.
“ஹூ மீ? நான் தப்பா நடந்துகிட்டேனா? என்ன விளையாடறீங்களா?” எனப் புருவத்தைச் சுருக்கி, கண்களை அந்தச் சமுத்திரத்தை விடவும் அகன்று விரித்துக் கேட்ட கதிர், கீழே விழுந்த தன் பையிலிருந்த ஓர் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான்.
“அம்சமா இருக்க.’ ‘உசுப்பேத்தி விட்டுட்ட.’ ‘உன்னை என்ன செய்யறேன் பாரு.’ என என் முன்னால் சட்டையில்லாமல் வந்து நின்னீங்களே” என எழில்மலர் அவனை முறைக்க,
“ஆமாம் சொன்னேன். ஆனால் உங்களைப் பார்த்தா சொன்னேன்? நல்லா யோசிச்சுப் பாருங்க. நான் வந்து நின்னேனா, இல்லை, நீங்க என் முன்னாடி வந்து குதிச்சீங்களான்னு?” என எதிர்க் கேள்வி கேட்டான் கதிர்.
‘அதானே. நான் தானே குரல் வந்த திசையைப் பார்த்துப் போனேன். அவன் எங்கே வந்தான்?’ என யோசித்த எழில்மலருக்கு, தான் பெரிய பல்பு வாங்கியது நன்றாகவே புரிந்தது.
“என்னடி பல்பா?” எனக் கிசுகிசுத்த சம்யுக்தாவிடம், ‘ஆமாம்’ என்று தலையாட்டினாள் எழில்மலர்.
“சரி, சமாளிப்போம்” எனத் தோழியிடம் சொன்னவள், “யார் வந்து நின்னா என்ன? எதுக்கு இப்படிச் சட்டையில்லாமல் நிக்கறீங்க?” என மிரட்டல் தொனியில் கேட்டாள் சம்யுக்தா.
“யூ சீ ஒன்ஸ் அப்பான் எ டைம்.” எனக் கதிர் ஆரம்பிக்க, “உங்க கதையைக் கேட்கவெல்லாம் நேரமில்லை. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க, இல்லை, போலீஸைக் கூப்பிடட்டுமா?” என அதே மிரட்டல் குரலில் பேசினாள் சம்யுக்தா.
“நீங்களும் உங்க ஃபிரெண்ட் மாதிரி முந்திரிக்கொட்டையா எல்லாத்துக்கும் அவசரப்படக்கூடாது. ‘பொறுமையில்லாத பெண்ணும், பெருமையில்லாத ஆணும் வாழ்ந்ததா சரித்தரமில்லை..’” என்றான் கதிர்.
“சார் தத்துவம் சொல்லிட்டாருடி. கல்வெட்டுல பொறிச்சு வச்சுக்கோ.” எனப் பரிகாசமாகச் சம்யுக்தா சொல்ல, “யூ சீ. ஒன்ஸ் அப்பான் எ டைம்” என கதிர் மீண்டும் ஆரம்பித்தான். இப்போது பெண்கள் இருவருக்குமே பொறுமை பறக்க ஆரம்பித்தது.
“ஒரு தடவை பஸ்ஸில் ட்ராவல் பண்ணினேன். அப்போ தன் குட்டிப் பாப்பாவை என் மடில உட்கார வச்சுக்கச் சொல்லிக் கேட்டார் ஒரு அப்பா. நமக்குத் தான் உதவி செய்யறது ‘புல் டைம்’ பதவி ஆச்சே. அதனால் வாங்கி உட்கார வச்சுக்கிட்டேன்.
ஆனா கொஞ்ச நேரத்துல அந்த பாப்பா என் மேலே மூச்சா போயிடுச்சு. அப்போ அந்த அழுக்குச் சட்டையை மாத்த முடியாமல் நான் பட்ட திண்டாட்டம் எனக்குத் தானே தெரியும். அப்போதிலிருந்து எங்கே போனாலும் ஒரு செட் ‘ட்ரெஸ்’ எடுத்துட்டுப் போவேன்” எனத் தன் பையைச் சுட்டிக் காண்பித்தான் கதிர்.
சின்னதாக நடந்த சம்பவத்தை, ‘கண்ணே. மணியே.’ போன்ற இடைச்சொருகலுடன், நீண்ட கதையைப் போல் சொல்லி மிகவுமே பிரமாதப்படுத்தியிருந்தான் அவன்.
இப்போது சம்யுக்தாவின் பொறுமை முற்றிலும் பறந்துவிட, “ஸ்ஸ்ஸ். போலீஸைக் கூப்பிடுடி” எனத் தோழியைப் பார்க்க, “இருடி. சார் என்ன சொல்ல வர்றார் எனப் பார்க்கலாம்” என சுவாரசியமானாள் எழில்மலர்.
“இது அழகான பிள்ளைகளுக்கு நல்லது” எனக் கதிர் முறுவலிக்க, ‘ம்ம்ம்?’ என இருவரும் முறைத்தனர்.
“ச்சே. இது நல்ல பிள்ளைகளுக்கு அழகுன்னு சொல்ல வந்தேன். நாக்கு தடம் புரண்டிடுச்சு” என்ற கதிர், தன் கதையைத் தொடர்ந்தான்.
“நம்ம காக்காக்கு எல்லாம் என்ன ‘பாத்ரூம்’ கட்டிக் கொடுத்தோமா? இல்லையே.. அதனால் மேலே போன காக்கா என் சட்டையில் எச்சம் பண்ணிடுச்சு. சட்டையை மாத்தறதுக்கு முன்னாடி காக்காவை மிரட்டிட்டு இருந்தேன்” என்றான் கதிர்.
கதிர் சொன்னதைக் கேட்டதும், அவன் காக்காவிடம் பேசியதைக் கேட்டுத் தான் தவறாக நினைத்ததை எண்ணி எழில்மலருக்குச் சிரிப்பு வர, பக்கென்று சிரித்துவிட்டாள்.
“சென்னைக்குப் போனதும், காக்காக்கு எல்லாம் பாத்ரூம் கட்டப் ‘பிளான்’ போடறதை தான் செயல்ல காட்டறேன்னு சொல்லிக்கிட்டிருந்தேன். அதுக்குள்ளே காக்கா பறந்துடுச்சு. நான் ஒரு ஆர்கிடெக்ட் யூ நோ. ” என்றான் கதிர்.
சம்யுக்தா ஓர் படி மேலே போய், “ஏண்டி, இந்த டம்மிப் பீசைப் பார்த்துத் தான் அப்படி ‘பில்ட் அப்’ கொடுத்து ஓடி வந்தியா?” என எழில்மலரிடம் கேட்க, “ஹூ, மீ டம்மி பீஸ்?” எனக் கண்களை மீண்டும் அகல விரித்தான் கதிர்.
கதிரின் கலகலப்பான பேச்சில் எழில்மலரின் குறும்புக் குணம் தலைத்தூக்க, “சார், தெரியாமல் சொல்லிட்டோம். உங்க கொள்ளிக் கண்ணால் எங்களைக் கொளுத்திப் போடாதீங்க சார். பயமாயிருக்கு” எனப் பயந்ததைப் போல் நடித்தாள்.
வேண்டுமென்றே கண்களை மேலும் அகல விரித்தவன், “வாட்? கொள்ளிக்கண்ணா? லவ்லி கண்ணுங்க. என் காலேஜ் ஃபிரெண்ட்ஸ்கிட்டே கேளுங்க என்னைப் பத்தி. அவ்வளவு பாப்புலர். காலேஜ்ல பாக்சிங் சாம்பியன். ஆணழகன். மிஸ்டர். ஐஸ். இப்படி ஏகப்பட்ட பட்டம் வாங்கியிருக்கேன்” என்றான் பெருமையாக.
“இப்படியெல்லாம் டிசைன், டிசைனா பட்டம் உங்க ‘காலேஜ்’ல விக்கிறாங்களா என்ன?” என அவனைப் போலவே கண்களை விரித்துப் போலியான அதிசயத்துடன் எழில்மலர் கேட்க,
“எல்லோருக்கும் அவ்வளவு ஐஸ் வைப்பீங்களா? கேட்க மாட்டோம்ங்கற தைரியத்துல சும்மா ரீல் விடாதீங்க சார்” என்றாள் சம்யுக்தா.
“இப்படிக் கேட்பீங்கன்னு தெரிஞ்சு தான் இதையும் கையோட வச்சு அலைஞ்சிட்டு இருப்பேன். சரித்திரம் ரொம்ப முக்கியம் பாருங்க” என்ற கதிர் மீண்டும் கைப்பையினுள் கையைவிட்டு,
“இதைப் பாருங்க” என ஓர் காகிதக்கற்றை எடுத்து நீட்டினான்.
அதில் அவனைப் பற்றிய அனைத்து விஷயங்கள், அதாவது சுயபுராணம் அடங்கியிருந்தன. அவர்கள் கண்களில் பட்ட ஓர் செய்தித்தாளில் அவன் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளிவந்து, அவன் சற்று முன்னால் சொன்ன, ‘பாக்சிங் சாம்பியன். ஆணழகன்” என்றதை உறுதியும் செய்தது.
“உங்க பேர் என்ன பெ. பீதாம்பரமா?” என எழில்மலர் புன்னகையை அடக்கியவாறே கேட்க,
“பீதாம்பரம்? யூ மீன் பொன்னாடை? அதைப் போர்த்திக்கிற அளவுக்கா இருக்கு நான் செய்த சாகசங்கள்? நோ. நோ. பெருசா நான் ஒண்ணும் செய்யலை. என் பெயர் கதிர்” என்றான் தன்னடக்கத்துடன்.
“ரொம்பவும் நெனப்புத் தான். உங்க புகழை நீங்களே இப்படிப் பாடறீங்களே. அதான் பெருமை பீதாம்பரமான்னு கேட்டா எழில். பெருமையில்லாமல் ஆண் வாழ்ந்ததா சரித்திரமில்லைன்னு வேற தத்துவம் சொன்னீங்க” என சம்யுக்தா விளக்க,
“ஏங்க, சினிமால நடிக்கிற ஹீரோவுக்கே விளம்பரம் முக்கியம் எனும் போது, என்னை மாதிரி சாதாரண ஆட்களுக்கு விளம்பரம் எவ்வளவு முக்கியம்?” என அசராமல் கதிர் பதில் தந்தான்.
தோழிகள் இருவருக்கும் சிரிப்புப் பீறிட, “அது சரி. வேற என்னென்ன சாகசங்கள் செய்து வச்சிருக்கீங்க?” எனக் கேட்டாள் எழில்மலர்.
“சொல்ல மறந்துட்டேன். நான் ஒரு ரைட்டர் யூ நோ” என்றான் கதிர்.
சிரிப்பதை விட்டுவிட்டு இப்போது அவனைச் சுவாராசியமாகப் பார்த்த சம்யுக்தா, “அப்படியா? என்ன எழுதியிருக்கீங்க?” எனக் கேட்டாள்.
அவள் ஓர் பிரபல பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக இருக்கிறாள். அதனால் கதிர் அப்படிச் சொன்னதும் அவனைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினாள்.
“அது கணக்கேயில்லாமல் நிறைய எழுதியிருக்கேன்.. எதைன்னு சொல்லறது. அப்போ நீங்கெல்லாம் ரைட்டர் இல்லையா?” என்றான்.
“நீங்க ரைட்டர்னா நாங்களும் ரைட்டரா இருக்கணுமா என்ன?” என எழில்மலர் அவனை மடக்க, “நான் ஒரு ஜெர்னலிஸ்ட்” என்றாள் சம்யுக்தா.
“அப்படியா? ரொம்பச் சந்தோஷம். சீக்கிரம் உங்க எழுத்தை வச்சு இந்த உலகத்தை மாத்துங்க” என்றவன், “தெரியாமல் தான் கேட்கிறேன். ரைட் (வலது) கையில எழுதினா ரைட்டர் தானே? நான் ரைட்ல தான் எழுதுவேன்” என்றான் கதிர்.
இப்போது அவன் ‘ரைட்டர்’ என்று சொன்னது புரிய, “ஐயோ தாங்க முடியலை சார் உங்க மொக்கை.” என்றாள் சம்யுக்தா.
சிரித்துக் கொண்டிருந்த சம்யுக்தாவைப் பார்த்த கதிர், “ஜர்னலிஸ்ட்டா இருக்கிறதால் நீங்க தைரியமான பெண்ணா இருப்பீங்க. கருத்து கந்தசாமியா இருந்தாலும் உங்க குரலில் இருக்கும் இனிமை அப்படியே வார்த்தைகளை வழுக்கவிட்டு மனதைத் தொட வச்சிடுது.
திட்டறது கூட கொஞ்சற மாதிரி தான் இருக்கு. உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன். உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு” என அவளிடம் பட்டென்று சொன்னான்.
சம்யுக்தாவின் குரலில் தேன் தடவிய இனிமை என்று சொல்வார்களே அப்படி ஓர் இனிமை இருக்கும். கதிர் மட்டும் அல்ல, இதுபோல் பலரும் அவளிடம் அவள் குரலைப் பற்றிப் பாராட்டியுள்ளார்கள்.
ஆனாலும் இப்படிப் பார்த்ததும் பட்டென்று தன் மனதில் உள்ளதைச் சொன்னவன் இவன் மட்டுமே.
“என்ன சார். பார்த்ததும் லவ்வா?” என சம்யுக்தா முறைக்க, “ம்ஹூம். அப்படிக் கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க” எனக் காதைப் பொத்திக் கொண்டு அலறினான் கதிர்.
Author: siteadmin
Article Title: அத்தியாயம் – 1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் – 1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.