என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -12
அதிகாலை மணி மூன்று. விகாஸ், ஆழ்ந்த யோசனையில் இருந்தான். முதல் நாள் நள்ளிரவில் வந்த இரண்டு இன்டர்நேஷனல் அழைப்புகள் விகாஸின் தூக்கத்தைப் பறித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் இவர்களின் டீம் மேட்டாக இருந்த ஆலிவரும், சீனாவில் இருந்த யுவான் ச்சாங்கும் ஒரே நேரத்தில் மரணத்தை சந்தித்திருந்தனர். இருவரது மரணமும் கேட்பவரை உறையவைப்பது போல இருந்தது.
ஆலிவர், விடுமுறையை என்ஜாய் செய்கிறேன் என்று நியூசிலாந்தில் bungee jumping செய்யப் போயிருக்காறான். யாரும் எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் கீழே விழுந்து தூள் தூளாக சிதறிப் போனான். அத்தனை பாதுகாப்பான நடைமுறையில் இப்படி சம்பவம் நடந்தது குறித்து அந்நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் எதிர்தரப்பு அதற்கு கொடுத்த பதில் அவர்களை வாய் மூடி மௌனமாக்கிவிட்டது.
அடிக்கடி இது போன்ற சாகசங்களை விரும்பிச் செய்யும் ஆலிவர் அன்று தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்துவிட்டுச் சென்றிருக்கிறான். நிர்வாகத்தினர் அது சட்டத்திற்கு புறம்பானது, ஏதாவது விபரீதம் நடந்தால் எங்களுக்கு பிரச்சினை ஆகிவிடும் என்று சொல்லியும் கேட்காமல் சென்றிருக்கிறான். மறுநாளே அவர்கள் ஆதாரத்துடன் தங்கள் தரப்பில் தவறில்லை என்று நிரூபிக்க, இப்போது அனைவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அவசியத்தை வலியுறுத்தி செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.
அவனது மொபைலை ஹோட்டலிலேயே விட்டுச் சென்றிருக்கிறான். குடும்பத்தினர் வந்து அவனது உடைமைகளைப் பெற்றுக் கொண்டபோது தான் சில குறிப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. கடைசியாக அவன் அழைத்தது ஒரு இந்திய நம்பர் என்று தெரிந்து குழப்பம் அடைந்துள்ளனர். விகாஸை அழைத்துப் பேசிய போது தான் இருவரும் xyz கம்பெனியில் வேலை செய்பவர்கள் என தெரியவந்தது. உறவினர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை என்பதால் ஆலிவர் பற்றிய விஷயத்தை விகாஸிடம் சொல்லிருந்தார்கள்.
சிட்னியில் இருந்த xyz அலுவலகம் இவனது மரணத்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல இயங்கியது. நிர்வாகம் சார்பில் ரஞ்சன் தான் அனைத்து அலுவருக்கும் ஒரு இரங்கல் செய்தி அனுப்பி இருந்தான். அந்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம், ரெஸ்ட் இன் பீஸ் போன்ற செய்திகளை பகிர்ந்து ஆலிவரை அனைவரும் மறந்து விட்டார்கள்.
இந்த ஐவர் குழுவின் ஒரு பொதுவான விருப்பம் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ். அது தான் இவர்களை முதலில் இணைத்தது. ஆலிவர் நியூசிலாந்து சென்றது கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறையில். அதே நேரத்தில் ஷாங்காய் அலுவலகத்தில் இருந்த யுவான் ச்சாங்கும் வார இறுதியில் ஊர் சுற்ற முடிவெடுத்திருக்கிறான்..
ஹுவாங்பு நதியில் கப்பல் பிரயாணம் செய்ய (huangpu river cruise) தனது மனைவி மற்றும் மகளையும் அழைத்துக் கொண்டு சென்றான். அழகான இரவுப் பயணம்,மனைவியும் மகளும் நதியின் அழகையும் ஷாங்காய் நகரத்தின் அழகையும் கேமராவில் படம்பிடித்துக் கொண்டிருக்க, அங்கே ரூஃப் டாப் பாரில் அமர்ந்து மூச்சு முட்டும் அளவுக்கு குடித்துக் கொண்டிருந்தான் யுவான்.
முழு போதையில் இருந்தவன் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறான். அவளுடன் வந்தவர்களுடன் கைகலப்பாகி டெக்கில் களேபரம் ஏற்பட்டது. பொறுப்பாளர்கள் வந்து தடுப்பதற்குள் எதிரணியில் இருந்த ஒருவன் இவனை பலமாகத் தாக்க கம்பிகளில் ஏறி நின்றவன் தடுமாறி நதிக்குள் விழுந்தான்.
டிசம்பர் மாதத்தில் ஷாங்காய் நகரம் உறைபனிக்குச் சென்று கொண்டிருந்தது. நதியின் நீரும் ஐஸ் கட்டி போலிருந்தது. முப்பதே அடி ஆழம் உள்ள நதி தான், யுவானும் நீச்சல் தெரிந்தவன் தான். ஆனால் அவனது விதி அன்று முடியவேண்டும் என்றிருந்தது போலும். கப்பல் பணியாளர்கள் விரைந்து செயல்பட்ட போதும் அவனது உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஒரு இரங்கல் செய்தியுடன் அவனும் காற்றில் கரைந்த கற்பூரம் ஆனான்.
இந்த இரண்டு மரணங்களையும் கேள்விப்பட்ட விகாஸுக்கு ஒன்றும் புரியவில்லை. இது நிஜமாகவே தற்செயலாக நடந்த ஒன்றா அல்லது கமல் சக்சேனாவின் மரணம் போல திட்டமிடப் பட்டதா என்ற குழப்பம் அவனுக்குள். அவர்களது ஐவர் குழுவில் எஞ்சி இருப்பது அவனும் இன்னொருவனும் மட்டுமே. அந்த ஐந்தாவது நபருக்கு இந்த பயங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எதையும் அசால்ட்டாக ஹேண்டில் செய்தான்.
அனைத்தையும் தாண்டி இவர்களை ஆட்டி வைப்பவன், அவன் யாரென்று தெரிந்து கொள்ள இதுவரை அவன் செய்த முயற்சி அனைத்தும் வீணாகக் தான் போனது. இவனை நேரில் சந்திக்கும் போதும் இருட்டில் தான் சந்திக்கிறான், முகம் தெரியாத வண்ணம் தான் காட்சி அளிக்கிறான்.
ஆனால் அவனது நடை உயரம் இவற்றை பார்க்கும் போது பழகிய மனிதனாகவே தெரிந்தது. ஆனாலும் அவனை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.
அவனை மேலும் யோசிக்க விடாமல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் என்று திகைத்தவன் உள்ளே நுழைந்த முகமூடி மனிதனைப் பார்த்ததும் ஷாக்கானான். எப்படி இவனை நினைத்தவுடன் வந்து சேருகிறான் என்று அதற்கும் விழித்தான்.
“என்ன விகாஸ், தூக்கம் வரலை போலிருக்கே! உன் ட்ராமாவோட க்ளைமாக்ஸ் வர டைம் ஆச்சு. அதனால இனிமேல் தூக்கமே கிடையாது உனக்கு. இவன் எப்படி நாம நினைச்ச உடனே வந்துடறான்னு யோசிக்கிறயா, நல்லா யோசி. அதே மாதிரி நான் யாரா இருக்கும்னு சேர்த்து யோசி. எனக்கு நீங்க யாரும் எதிரி இல்லை. ஆனால் என் பாதையில் வந்த முள்ளை கிள்ளி எறிஞ்சால் தானே அது க்ளியரா இருக்கும். அந்த வேலையைத் தான் நான் செய்யறேன். டோன்ட் வொர்ரி, நீ போறதுக்குள்ள உன்னோட கடைசி கூட்டாளியும் போயிட்டான்னு நல்ல செய்தி வரும். மேல போய் கூட்டணிய கன்டிநியூ பண்ணுங்க. குட் லக்” என்று இவன் தலையில் பெரிய பாராங்கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு அந்த உருவம் வெளியே சென்றுவிட்டது.
“ஓ மை காட்! அவனுக்கு ஒரு வார்னிங்காவது கொடுக்கணுமே” என்று அந்த அதிகாலை வேளையிலேயே அழைத்து விட்டான். முதல் முறை அழைப்பு ஏற்கப்படவே இல்லை. ஆனால் அவனிடம் பேசியே தீரவேண்டும் என்ற தீவிரத்தை உணர்ந்த விகாஸ் விடாது அழைத்தான்.
மூன்றாவது முறையாக மொபைல் அழைத்த போது தூங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் கொண்டான். இன்னும் விடிந்து விடவில்லை என்று உணர்ந்தவன், யாருடா இது, இந்த நேரத்தில் அழைப்பது என்ற எரிச்சலுடன்
தூக்கக் கலக்கத்தில் மொபைலை எடுத்துப் பார்க்க அது அழைப்பது விகாஸ் என்றது. அவனுக்குத் தெரிந்த வரையில் விகாஸ் கோமாவில் இருக்கிறான். அப்படித்தான் உலகமே நம்பிக்கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் யார் அவனது நம்பரில் இருந்து அழைப்பது என்று அழைப்பை ஏற்காமல் விட்டான்.
மறுமுனையில் விகாஸின் பொறுமை போய்க்கொண்டிருந்தது. விடாமல் மறுபடியும் அழைத்தான். இப்போது வேறு வழியின்றி மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ **** ஹியர். ஹூ இஸ் திஸ்” என்றவன் மறுமுனையில் வந்த குரலைக் கேட்ட உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டான்.
“விகாஸ்!!!!!????”
“ஆமா… விகாஸ் தான். எத்தனை தடவை கூப்பிடறது உன்னை. முக்கியமான விஷயம் இல்லாமல் கூப்பிட மாட்டேன்னு தெரியாதா?” தனது கோபத்தை எல்லாம் அவன் மேல் கொட்டினான் விகாஸ். ஒரு கட்டத்தில் மறுமுனையில் இருந்தவனுக்கும் பொறுமை போய்விடும் போலிருந்தது.
“எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லாத விகாஸ். கோமால இருக்கான்னு சொன்ன ஒரு ஆள் கிட்ட இருந்து அர்த்த ராத்திரியில் ஃபோன் வந்தால் நீயும் இப்படிதான் பிஹேவ் பண்ணுவ. நீ ப்ளான் பண்ணி நடிக்கிறேன்னு எங்க கிட்ட சொன்னியா, சொல்லி இருந்தால் இன்னும் அலர்ட்டா இருந்திருக்கலாம். இப்போ பாரு இன்னும் இரண்டு பேர் அவுட். அடுத்து நான் தானா? அதைச் சொல்லத் தான் கூப்பிட்டியா?”
“ஓகே.. ஓகே.. நான் செஞ்சது தப்பு தான்..” உடனே சரண்டர் ஆன விகாஸ் அவனுடன் அடுத்து என்ன செய்வது என்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கவனமாக இரு என்று அவன் அறிவுறுத்தியதெல்லாம் மற்றவன் காதில் விழுந்தது, ஆனால் அதைக் கடைப்பிடித்தானா என்று தான் தெரியவில்லை.
*********
ஷாம் அன்று காலையில் விகாஸைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்திருந்தான். தன் பங்குக்கு ஒரு வெடிகுண்டை எடுத்து வீசினான்.
“நான் இரண்டு வாரம் ஒரு கான்பரன்ஸுக்காக ஸ்விட்சர்லாந்து போறேன் விகாஸ். உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை, டேட்டா கலெக்ட் பண்றதுல பிஸியா இருந்துட்டேன். உனக்கு அல்டர்நேட் அரேஞ்ச்மென்ட் என்ன பண்றதுன்னு புரியல. உன் விஷயம் இப்போதைக்கு இங்கே நாலு பேருக்கு தான் தெரியும். அந்த நம்பர் ஜாஸ்தி ஆறதுல எனக்கு விருப்பம் இல்லை, அது நல்லதும் கிடையாது. என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு. நான் நாளை மறுநாள் ஏர்லி மார்னிங் கிளம்பிடுவேன்.”
விகாஸிடம் இருந்து பதிலேதும் இல்லை. என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஷாம் தொடர்ந்து பேசினான்.
“டைம் ரொம்ப கம்மியா இருக்கு விகாஸ். நீ சொல்றதை வச்சுத்தான் நான் அரேஞ்ச் பண்ண முடியும். ட்ரைனிங் பீரியட்ல இருக்கறஜூனியர் டாக்டர்ஸ் யாரையாவது பார்த்துக்கச் சொல்லலாம். மத்தபடி இங்கே இருக்கும் ஸ்டாஃப் நர்ஸ் இரண்டு பேரும் விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துப்பாங்க. என்னைப் பொறுத்தவரை இது தான் பெஸ்ட் அல்டர்நேடிவ். நீ என்ன சொல்ற?”
விகாஸுக்கு சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. “தாங்க் யூ ஷாம். உன்னோட கொள்கைகள் எல்லாம் விட்டு எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு. தாங்க் யூ ஸோ மச்” என்றான் உருக்கமாக. அவனது உள்ளுணர்வு உணர்த்தும் செய்தியை ஷாமிடம் பகிர்ந்து கொள்ள அவன் விரும்பவில்லை. ஆனால் ஷாம் அவனது முகவாட்டத்தை உணர்ந்து கொண்டான்.
“என் கஸ்டடியில் இருக்கும் வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது விகாஸ். தேவையில்லாமல் பயப்படாதே. இப்பவும் எதுவும் லேட் ஆகலை. இந்த ட்ராமா இனிமேலும் தேவையான்னு யோசி, உன் வைஃபை வரச்சொல்லி பேசு. காலுக்கு பக்காவா ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு வீட்டுக்கு போயிடலாம். நீ அநாவசியமாக பயப்படறியோன்னு தோணுது எனக்கு.”
“நான் எந்த மாதிரியான சிச்சுவேஷன்ல இருக்கேன்னு உனக்குப் புரியாது ஷாம். என் ஃபேமிலிக்கும் தெரிய வேண்டாம். எனக்கு என்ன ஆனாலும் இந்த ட்ராமா விஷயம் என் வைஃபுக்கோ என் பொண்ணுக்கோ தெரியக் கூடாது ஷாம்” என்று அழுத்தமாகச் சொன்னவன் தன் வாயாலேயே அதைச் சொல்லி விட்டோம் என்பதை அறிந்து கொள்வானா? காலம் அதனை அனுமதிக்குமா?
“ஹூம்.. நீ இப்படி சொல்லும் போது நான் என்ன செய்ய.. சரி விடு, பார்த்துக்கலாம்” என்று விடைபெற்றுக் கொண்டான் ஷாம்.
மறுநாள் காலையில் தனது ஜூனியரை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தவன், “டேக் கேர் விகாஸ், ஜனவரி பத்தாம் தேதி வந்துடுவேன்” என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அந்த ஜூனியரும் நிலைமையை நன்றாகவே சமாளித்தான். பேசிப் பேசி விகாஸிடம் இருந்து பல தெரியக் கூடாத விஷயங்களை தெரிந்து கொண்டான்.
டிசம்பர் 31ந்தேதிநள்ளிரவு, புத்தாண்டு பிறக்க இன்னும் சில நிமிடங்களே இருந்தது. மெதுவாக ஒரு உருவம் விகாஸ் இருந்த அறைக்குள் நுழைந்தது. லேசான சத்தம் தான் என்றாலும் விகாஸ் உடனே விழித்துக் கொண்டான்.
“யார் அது?” என்றவன் அங்கே தெரிந்த முகத்தைப் பார்த்ததும் ஆசுவாசம் அடைந்தான்.
“ஓ… என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கலை இல்லையா?” என்றது அந்த உருவம்.
“சே.. சே.. அப்படி இல்லை.. நியூ இயர் செலிபிரேஷன்ஸ்ல பிஸின்னு நினைச்சேன்.”
“நான் உங்களுக்கு நியூ இயர் விஷ் சொல்லத் தான் வந்தேன். பிறக்கப் போகும் புது வருஷத்தில் புது உலகத்தைப் பார்க்கப் போகும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் விகாஸ்” என்றது அந்த உருவம்.
அதன் உட்பொருளை அறியாமல், “தாங்க் யூ ஸோ மச். விஷ் யூ தி ஸேம்” என்று வாழ்த்தி முடித்த போது அவனது மூளை வேலை செய்வதை நிறுத்தி இருந்தது.
“வெரி ஹேப்பி நியூ இயர் விகாஸ்!” என்று சிரித்த அந்த உருவம் சத்தமில்லாமல் திரும்பிச் சென்றது.
மறுநாள் காலை ட்யூட்டிக்கு வந்த நர்ஸ் அவனது நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். ஷாம் அழைத்து வந்த ஜூனியர் டாக்டரை எங்கும் காணவில்லை, அவனது மொபைலுக்கு அழைத்த போது அப்படி ஒரு எண் உபயோகத்தில் இல்லை என்றது நெட்வொர்க். பதட்டத்தில் ஷாமிற்கே அழைத்து விட்டாள் அந்த நர்ஸ்.
கான்ஃபரன்ஸூக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு கடும் அதிர்ச்சி. தனது மருத்துவமனையில் யார் அந்த கருப்பு ஆடு என்று கொதித்தான். ஆனால் விகாஸை அடுத்து என்ன செய்வது என்பதே பிரதானமாக இருந்ததால் அங்கிருந்தே சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.
அதன் படியே விகாஸின் குடும்பத்திற்கு விஷயம் சொல்லப்பட்டது. “கோமா நிலையில் இருந்து திரும்பாத நிலையில் அவனது மூளையில் ஏற்பட்ட ஒரு கட்டி வெடித்து மூளைச்சாவு ஏற்பட்டது” என்று மருத்துவ அறிக்கை தயாரானது.
அவனது குடும்பம் அதை அப்படியே ஏற்றுக் கொண்டது. சிலரைத் தவிர விகாஸின் மரணத்தை வேறு யாரும் சந்தேகமாகப் பார்க்கவில்லை. அதற்கான வாய்ப்பை அவன் வழங்கவில்லை.
இதைக் கேட்ட கார்த்திக்கும் ஈஸ்வரும் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
*******
“குட் மார்னிங் ரஞ்சன்!” என்று காலை வணக்கம் வைத்தபடி உள்ளே வந்தாள் மலர்விழி.
“குட் மார்னிங் மை டியர் ஃப்ளவர்!” என்ற ரஞ்சனின் குரலில் அவன் வழக்கத்தை விட மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது போல தோன்றியது அவளுக்கு.
“என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது? என்ன விஷயம்னு சொன்னா நானும் சந்தோஷப்படுவேனே”
“சொல்லலாம் சொல்லலாம்.. உன் கிட்ட சொல்லாமலா.. “ என்றவன் தன் லேப்டாப்பை அவள் புறம் திருப்பினான்.
“இதோ பாரு, இந்த இரண்டு எக்ஸாம் தான் இந்தியாவில் நிறைய பேர் எழுதற எம்பிஏ என்ட்ரன்ஸ் எக்ஸாம்ஸ். இது இரண்டுமே இப்போ பேப்பர் பென்சில் மெத்தட்ல இருந்து ஆன்லைன் எக்ஸாமா மாத்தறதுக்கான ப்ரோஸல் இருக்கு. ஒன்னு கவர்மென்ட் எக்ஸாம், ஒரு வருஷத்துக்கு கிட்டத்தட்ட அஞ்சு லட்சம் பேர் எழுதுறாங்க. இன்னொன்னு ப்ரைவேட் எக்ஸாம், இது வருஷத்துக்கு லட்சம் பேர் வரை எழுதுறாங்க.
“வாவ்.. இது கிடைச்சா நமக்கு இந்தியாவில் பிஸினஸ் பெரிசாகும்”
“ஆமா, அது தான் ஒரு பெரிய ப்ரஷரா இருக்கு. சைனா, ஆஸ்திரேலியா ஏன் ஜப்பானும் சிச்கப்பூரும் கூட பிஸினஸ லோக்கல் மார்க்கெட்லயும் கொண்டு வந்துட்டாங்க. இந்தியாவில் தான் ஒன்னு கூட கிடையாது. ஆனால் நாம தான் மத்த எல்லா கன்ட்ரீஸோட பாஸா இருக்கோம். மத்த எல்லாரும், குறிப்பா சைனாவும் ஆஸ்திரேலியாவும் ஹெட் க்வாட்டர்ஸ மாத்துங்க, இல்லேன்னா நாங்க டைரக்டா யூஎஸ்ஸுக்கே ரிப்போர்ட் பண்ணிக்கிறோம்னு போர்க்கொடி தூக்கறாங்க.”
“உங்களைப் பார்த்து பொறாமையும் இருக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று பெருமையுடன் சிரித்தாள் மலர். பின்னே, அத்தனை சிறிய வயதில் அவன் வகிக்கும் பொறுப்பு என்பது பெரிது தானே.
“பொறாமையா… அது சரி.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்ற மாதிரி இருக்கு நீ சொல்றது.. வேற யாரும் கேட்டா சிரிச்சுடுவாங்க” என்று தானும் சிரித்தான் ரஞ்சன். அவனே தொடர்ந்து பேசினான்.
“நீ சொல்றதும் ஒரு விதத்தில் சரி தான். கமல் சக்சேனா வயசுலயும் சரி அனுபவத்திலயும் சரி சீனியர். அவர் இருந்த போது சிஇஓ போஸ்ட் இருந்ததால கேள்விகள் வரலை, இப்போ ஏதோ போனால் போகுதுன்னு ஒரு பதவி, அதற்கு ஒரு சின்னப் பையன் பொறுப்பு, அவன் கிட்ட நாங்க ரிப்போர்ட் பண்ணனுமான்னு கேள்வி வருது. அது நியாயம் தான், தப்புன்னு சொல்ல முடியாது.”
“அதனால சார் என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?”
“எதையாவது செய்து நானும் ரவுடி தான்னு ப்ரூவ் பண்ணப் பார்க்கறேன். எனக்கு ஆசிர்வாதம் பண்ணு” என்று அருகில் வந்து தலையைக் குனிந்தான்.
“வாட்!! ஆசிர்வாதமா? ஹலோ சார்! என்ன ஆச்சு உங்களுக்கு? ஆஃபீஸ்ல இருக்கீங்க ஞாபகம் இருக்கா?” என்று தள்ளி நின்றாள் மலர்விழி.
“சரி சரி, ஆஃபீஸ் தான். நான் சீரியஸா தான் பேசிட்டு இருந்தேன். நீ தான் ரூட்ட மாத்தி விட்ட. எங்கே விட்டேன்.. ஹான் எல்லாருக்கும் என்னைப் பார்த்து பொறாமை தான்.. அதனால தான் இந்த இரண்டு எக்ஸாமையும் டார்கெட் பண்றேன். இந்த ****** எக்ஸாம் மட்டும் கிடைச்சுட்டா ஐ வில் பி ஆன் தி டாப் ஆஃப் தி வேர்ல்ட்.” அத்தனை நம்பிக்கை அவனது வார்த்தைகளில்.
அவன் நினைத்ததைச் சாதிக்க அவன் தேர்ந்தெடுத்த வழிகள் அவனது முகத்திரையைக் கிழித்து யாரென்று மலர்விழிக்குக் காட்டியது. அறிந்து கொண்ட விஷயம் அவளது உயிருக்கே ஆபத்தானது.