என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -14
அலுவலகத்தில் மலர்விழி அனைவரிடமும் ஓர் ஒதுக்கம் காட்டினாள். யாரை நம்புவது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ரஞ்சனோ அந்தப் புதிய எக்ஸாம் வேலையில் பிஸியாக இருந்ததால் இவளது ஒதுக்கத்தை உணரவில்லை. தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் நேரில் சந்தித்து பேசினாலும் பேச்செல்லாம் அலுவலகம் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. தனது குறிக்கோளை அடைவதில் மிகவும் கவனமாக இருந்தான்.
அந்த வகையில் மலர்விழி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அவனைப் பற்றி அரையும் குறையுமாகத் தெரிந்த இந்த வேளையில் அவன் காதல் மொழி பேசினாலும் இவளுக்கு மனது ஒட்டாது.
ரஞ்சன் எவ்வளவோ முயன்றும் இரண்டில் ஒரு எக்ஸாம் தான் அவனுக்குக் கிடைத்தது. அவன் நினைத்தபடியே அரசாங்க தேர்வு ABCக்குப் போய் விட்டது.
அவர்கள் மெயின் சர்வர் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று போட்ட கண்டிஷனைக் கூட இவன் சமாளித்து விட்டான். இவர்கள் கோட் (Quote) செய்திருந்த எக்ஸாம் ஃபீஸும் மிகக் குறைவு. அதனால் கம்பெனிக்கு, அட்லீஸ்ட் முதல் சில ஆண்டுகள் நஷ்டம் தான் ஏற்படுமே அன்றி லாபம் என்று ஒரு பைசா கூட வராது. ஆனாலும் இந்தியாவில் பிஸினஸ் வளர இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று தனது மேலிடத்தைச் சமாதானம் செய்திருந்தான்.
ஆரம்பத்தில் இருந்தே xyz & ABC இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் எங்கு இவர்கள் பின்தங்கிப் போனார்கள் என்பது தான் தெரியவில்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று தோன்றியது. கூட்டத்தில் யார் அந்த கருப்பு ஆடு என்று கொதித்தான்.
அதைத் தான் தீவிரமாக அறிய முயன்று கொண்டிருக்கிறான். எத்தனை கடுமையான முயற்சி, எப்படி வீணாகும்? யார் தயவும் இன்றி அவனே நேரடியாக செய்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவனுக்கு பலமான அதிர்ச்சி அளித்தது. இவர்களை விட ஒரே ஒரு நூறு ரூபாய் வித்தியாசத்தில் எக்ஸாம் ஃபீஸ் கோட்(quote) கொடுத்து ABC அந்த கான்ட்ராக்டைத் தட்டிச் சென்றிருந்தது.
இதை அறிந்த உடனேயே யார் வேலையாக இருக்கும் என்று புரிந்து போனது. இன்னும் குறிப்பிட்ட நபரை எதுவும் செய்ய விருப்பம் இல்லை, அது நிச்சயம் சந்தேகத்தைக் கிளப்பி விடும் என்று அவனுக்குத் தெரியும். எதைச் செய்தால் அந்த கான்ட்ராக்டை இவர்கள் பெற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தான். அது தானே அவனது அல்டிமேட் எய்ம்.
இதற்கென எத்தனையோ இடைத்தரகர்கள் மார்கெட்டில் இருந்தார்கள். இவனிடம் ஒன்றிரண்டு பேரின் எண்கள் தான் இருந்தது. அதிலும் ஒரு பெண் இருந்தாள். குறிப்பிட்ட நபரைத் திருப்திப் படுத்த எப்போதும் அவள் கேட்பதெல்லாம் விதம் விதமான இளம் பெண்கள் மட்டுமே, பணம் எல்லாம் எதிர் தரப்பில் வாங்கிக் கொள்வாள் போலும். அதிலும் சில நேரங்களில் குடும்பப் பெண்களை டார்கெட் செய்கிறாள் என்பதை விகாஸ் விவகாரத்தில் அவன் அறிந்தே இருந்தான்.
கமல் சக்சேனா பற்றி அவனுக்கு அதிகம் தெரியாது. அவனிடம் நெருங்கிப் பழகியதில்லை. கமல் சக்சேனா கலகலப்பாகப் பழகக் கூடிய ஆள் தான் என்றாலும் இவனது பாஸ் என்கிற எல்லையில் ரஞ்சன் நின்று கொள்வான். அவனைப் பற்றித் தெரிந்திருந்தால் ஜிக்யாசாவை முதலிலேயே கண்டு கொண்டிருப்பான்.
“அதானே.. இந்த நாட்டுல எதெதுக்கோ பெண்ணுரிமை பேசுறாங்க. ஆனால் இப்படியான பெண்களை எதுவும் சொல்றது இல்லை. பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சொல்றது தப்பே இல்லை” என்று சத்தமாக யோசித்தான்.
என் கிட்ட யாரைக் கேட்க முடியும் என்று தெனாவெட்டாக யோசித்தவன் மலர்விழியை அந்த இடத்தில் சற்றும் யோசிக்கவே இல்லை. ஆனால் அந்த இடைத்தரகர் பெண் ஞாபகப்படுத்தி விட்டாள்.
“யூ ஸீ மிஸ்டர்.ரஞ்சன்! உங்க கிட்டயே ஒரு ஃப்ரஷ் ஃப்ளவர் இருக்கும் போது நான் ஏன் வெளியே யாரையும் தேடணும்? இது உங்களுக்கு ஓகேன்னா நாம டீல் பேசலாம், இல்லேன்னா அந்த எக்ஸாம் உங்களுக்கு இல்லைன்னு சமாதானம் ஆகிக்கோங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றவள் அமைப்பைத் துண்டித்து விட்டாள்.
“ஃப்ளவரா… ஃப்ளவர்னா சொன்னா? How dare she is?” என்று கொதித்துப் போனான்.
கண் மூடி அவளது கோரிக்கையை அசை போட்டுக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் குரலை, பேசும் விதத்தை எங்கோ கேட்டது போல் இருந்தது. யோசித்து யோசித்து மண்டை காய்ந்து போய் காஃபி குடிக்கலாம் என்று கிளம்பி விட்டான்.
“அவளுக்கு எப்படி ஃப்ளவரைத் தெரியும்?” என்று யோசனை செய்து கொண்டே காரிடாரில் நடந்தவனுக்கு அதற்கான பதில் உடனே கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட அறையில் பேச்சுக் குரல் கேட்க சற்று தாமதித்தான். உள்ளே என்ன பேசினார்கள் என்று கேட்டவனுக்கு ரத்தம் கொதித்தது. “ஜிக்யாஸா..” என்று பல்லைக் கடித்தான்.
எதைச் செய்யக்கூடாது என்று நினைத்தானோ, அதைச் செய்ய முடிவெடுத்தான்.
மறுநாள் காலையில் மலர்விழி அலுவலகம் வந்த போது அனைவரும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
“வா.. மலர்.. இந்த ஜிக்யாஸா நேத்து ராத்திரி ஸ்விம்மிங் பூல்ல மூழ்கி இறந்து போயிட்டா. அதான் கம்பெனி சார்பா நாங்க போயிட்டு வரலாம்னு கிளம்பி இருக்கோம். கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு, நீ அங்கே எல்லாம் வரவேண்டாம்” என்று ஒருத்தி பதில் சொன்னாள்.
“அச்சோ.. இவ எதுக்கு ஸ்விம்மிங் தெரியாமல் ஸ்விம்மிங் பூல் போனா? அதுவும் ராத்திரியில்..” என்று கேள்வி எழுப்பினாள் மலர்விழி.
“அதெல்லாம் மேடம் ஸ்விம்மிங் தெரிஞ்சவங்க தான். ரெகுலரா ஸ்விம் பண்ற டைம் தானாம். ஆனால் ஒரே ஒரு வித்தியாசமா நேத்து நைட்டு மேடம் ஃபுல் போதைல இருந்திருக்காங்க. அதான் பேலன்ஸ் பண்ண முடியாமல் போயிடுச்சு. வயித்துல குழந்தையோட குடிக்க வேற செஞ்சா இப்படித் தான் ஆகும்” என்றாள் இன்னொருத்தி
“அதானே, இதைக் கேளு.. கல்யாணம் ஆகாத அந்த மேடம் ப்ரக்னென்ட்டா இருந்திருக்காங்க. நம்ம கிட்ட நான் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆளுன்னு எப்படி எல்லாம் சீன் போடுவா? விகாஸ் கூட இவ வந்தாலே நடுங்குவார். இப்படி ஆள் கூட எல்லாம் வேலை பார்த்திருக்கோம் பாரு” என்று காதைக் கடித்தாள் அக்கவுண்ட் செக்ஷனில் இருந்த ரேணுகா.
.
“ஆக்சுவலா அவ மேல அரசல் புரசலாக இன்னொரு கம்ப்ளைன்ட் கூட உண்டு. க்ளையன்ட்டுக்கு பொண்ணுங்க அரேஞ்ச் பண்ணிக் கொடுக்கற வேலை பார்க்கிறான்னு.”
“மாடர்ன் மாமின்னு தெளிவா சொல்லு..”
“அதே தான், கவுன் போட்ட மாமி. ஒரு வேளை அந்த வேலையை நல்லவன் எவன் கிட்டயாவது காண்பிச்சு அவன் இவளைப் போட்டுத் தள்ளிட்டானோ?”
“இருக்கும்.. இருக்கும்.. அவன் யாருன்னு தெரிஞ்சா ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்”
“ஆமா… இந்த ப்ரக்னென்ஸிக்கு காரணம் யாரா இருக்கும்?”
“வேற யார், நம்ம பழைய பாஸ் அந்த கமல் சக்சேனாவா தான் இருக்கும். இவ அவன் கூடத் தான் ரொம்ப சுத்திட்டு இருந்தா.. ஒரு வேளை அவன் போறதுக்கு முன்னாடியே இவ ப்ரக்னென்ட்னு தெரிஞ்சிருக்கலாம். அவனை இவ மிரட்டி இருக்கணும்.. ஒரு வேளை இவளே ஏதாவது பண்ணி அவனைப் போட்டுத் தள்ளி இருப்பாளோ?”
“ஆமா.. நான் கூட அவங்க இரண்டு பேரையும் சில கண்றாவி ஃபோட்டோஸ்ல பார்த்திருக்கேன். நீ சொல்றது கரெக்டா இருக்கலாம்.”
அவளைப் பற்றி ஆளாளுக்கு பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்த மலர்விழியின் கண்களோ ரஞ்சனைத் தேடியது. ஜிக்யாஸா ஒரு அலட்டல் பேர்வழி என்று அவளுக்குத் தெரியும். அவளது நடவடிக்கைகள் சரியில்லை என்றும் தெரியும். ஆனால் ஒரு பெண்ணாக அவளை வேறு விதமாக நினைக்க மலர்விழியின் மனம் மறுத்தது.
கார்த்திக்கோ ஈஸ்வரோ அவளைப் பற்றி கண்டுபிடித்த விஷயங்களை மலரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த மரணத்தில் ரஞ்சனின் பங்கு ஏதாவது இருக்குமோ என்று நினைத்து நினைத்து நொந்து போனாள்.
ஆனால் அன்றிலிருந்து இரண்டாம் நாள் நடந்த விஷயம் ரஞ்சனின் வேலை தான் இது என்று அவளை நம்ப வைத்தது.
**********
ஒரு வாரமாக முரளிதரனுக்குத் தூக்கமே இல்லை. எப்படியும் மாட்டிக் கொள்வோம் என்று தெரியும். மாட்டினால் என்ன நடக்கும் என்றும் தெரியும். மனைவியும் குழந்தைகளும் தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தால் என்ன செய்வார்கள் என்று அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் இந்த அவஸ்தையோ என்று நினைத்து நினைத்து நொந்து போனான்.
இடது பக்கம் லேசாக வலிப்பது போல இருந்தது. எனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் கொடு கடவுளே என்று கடவுளைத் துணைக்கு அழைத்தான். “நான் தான் உன்னை ஃப்ராட் வேலையெல்லாம் பார்க்கச் சொன்னேனா. அப்போதெல்லாம் மனசாட்சி மூலமா வார்னிங் கொடுத்துட்டே இருந்தேனே. அதையெல்லாம் காதுலயே வாங்காமல் விட்டு இப்போ வந்து என் கிட்ட ஹெல்ப் கேட்கிறியா?” என்று கடவுள் காரிதுப்புவது போலிருந்தது.
“உனக்கு இரண்டே நாள் தான் டைம். அதுக்குள்ள என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ”
“அச்சோ.. இரண்டு நாள் தானா.. ஒரு வாரமாவது என் குடும்பத்தோட இருக்கேனே”
“நோ சான்ஸ்.. இந்த இரண்டு நாள் கூட அவங்களுக்காகத் தான்.. யுவர் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் நவ்”
கடவுளே, இன்னும் இரண்டு நாள் தானா என்று யோசித்தவன், அர்த்த ராத்திரியில் லேப்டாப்பைத் திறந்து உட்கார்ந்தான். தனது ரகசிய அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை என்ன செய்வது என்று புரியவில்லை.
யாருக்கும் பயன்படாமல் போவதை அவன் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் விகாஸ் மிஸ்ரா போல இருக்க முடியாது என்று முடிவு செய்தான். இவனுடைய சம்பளம் வருடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமானது தான். ஆனாலும் அந்த பணத்தை வைத்து இவ்வளவு சேமிக்க முடியுமா என்று கேள்வி வரும்.
தற்போதைய இருப்பு ஐம்பது கோடி என்று காட்டியது அந்தக் கணக்கு. மும்பையில் இருக்கும் பில்டர்களைத் தேடினான். அவன் இருப்பதே பிரதானமான பகுதி தான், தீப்பெட்டி போல வீடு வாங்க வேண்டும் என்றாலே கோடிகளில் அழவேண்டும்.
இவன் நான்கு படுக்கை அறை கொண்ட ஃப்ளாட்டைத் தேடினான். அவர்களது வளாகத்திலேயே ஒரு ஃப்ளாட் விற்பனைக்கு இருந்தது. கிட்டத்தட்ட இருபது கோடி. மீதமுள்ள முப்பது கோடியை என்ன செய்வது? அந்த நேரத்திலும் அவன் மூளை சரியாக வேலை செய்தது.
கவனத்துடன் தேடியதில் அருகிலேயே ஒரு பென்ட் ஹவுஸ் விலைக்கு வந்தது. ரெஜிஸ்டிரேஷன் வரையிலான செலவு நாற்பது கோடிகளைத் தொட்டது. மறுநாளே அதனை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டான்.
மனைவி மக்கள் ஏன் அவனுமே கூட வீட்டைக் கண்ணால் பார்ப்பதற்கு முன்பு வீடு முரளிதரனின் மனைவி பெயரில் ரெஜிஸ்டர் ஆகிவிட்டது. வீடும் அவர்களுக்குப் பிடித்திருக்க, யாரும் பணத்தைப் பற்றி கேட்கவே இல்லை.
ஸ்விம்மிங் பூலுடன் கூடிய முழுமையாக ஃபர்னிஷ் செய்யப்பட்ட பெரிய வீடு. வீட்டின் உரிமையாளர் லண்டன் செல்வதால் அவசரமாக வீட்டை விற்றுவிட்டார். உள்ளேயே சில உபகரணங்களுடன் ஜிம் வேறு இருந்தது.
வீடு குடியேறுவதற்குத் தயாராக இருக்க, ரெஜிஸ்டர் செய்த கையோடு நாள் நட்சத்திரம் என்று எதையும் பாராமல் பால் காய்ச்சி சிறிய அளவில் கிரகப்பிரவேசமே செய்து விட்டான்.
அன்றிரவே அங்கே குடியேறி விட்டார்கள்.
பால் காய்ச்சுவதற்கு மலர்விழியின் குடும்பம் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தது. வெகு இருந்து வீட்டைப் பார்த்த மலர்விழிக்கு இத்தனை பணம் இவருக்கு எப்படி வந்திருக்கும் என்று தான் முதலில் தோன்றியது. முரளியின் பழைய கம்பெனியும் ABC தான். ஒரு வேளை இவன் தான் அந்த லாஸ்ட் ப்ராஜக்ட்டா இருக்குமோ என்று சந்தேகம் வந்தது அவளுக்கு.
“வாவ்! பியூட்டிஃபுல் ஹவுஸ் முரளி. உள்ளேயே ஜிம், ஸ்விம்மிங் பூல்னு எல்லா வசதிகளும் இருக்கு. எல்லாரும் ஃபிட்டா இருக்கலாம். ஆன்ட்டிக்கு நல்லா பொழுது போகும்.” என்று பாராட்டினாள்.
கூடவே, “எனக்குத்தான் இனிமேல் வெரைட்டியா ஃபுட் கிடைக்காது. ஐ வில் மிஸ் யூ ஆல்” என்று ஃபீல் பண்ணவும் செய்தாள்.
“அதுக்கு ஒரு ஈஸி மெத்தட் இருக்கு மலர். நீ ஈவ்னிங் ஆஃபீஸ்ல இருந்து நேரா இங்கே வந்திடு. சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்” என்று ஐடியா கொடுத்தான் முரளிதரனின் மகன்.
“ஆமா, இட் இஸ் எ குட் ஐடியா!” என்று பாராட்டிய அவனது உடன்பிறப்புகள், “அப்படியே வீக் என்ட்ல மிஸ்டர்.மலர்விழியையும் கூப்பிட்டு இங்கே வந்திடு. எங்களுக்கும் நல்லா டைம் பாஸ் ஆகும்” என்றனர்.
“அது சரி..” என்று சிரித்தபடி பதில் சொல்லாமல் விட்டாள் மலர்.
சந்தோஷமாக அங்கே இருந்து கிளம்பியவள் மறுநாளே முரளிதரன் இறந்து விடுவான் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
இன்னும் பத்து கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றான் முரளிதரன். வீட்டில் அனைவரும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இவனது மனம் யோசனையில் இருந்தது. முகம் வெளுத்துப் போய் இருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தாள் அவன் மனைவி.
“என்ன ஆச்சுங்க? ஏதோ யோசனையில் இருக்கீங்க? வீடு வாங்கினதுல நிறைய கடன் ஆயிடுச்சா? எப்படி அடைக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
“இல்லம்மா.. அதெல்லாம் நம்ம சேவிங்க்ஸ்ல இருந்து தான் வீடு வாங்கி இருக்கேன். அதைப் பத்தி எதுவும் கவலைப் படத் தேவையில்லை”
“அப்புறம் ஏன் முகம் ஒரு மாதிரியாக இருக்கு?”
“அது.. நம்ம இருபத்தைந்தாவது கல்யாண நாள் வருதே.. அதுக்கு உனக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலை.. அதான்” என்று கோர்வையாக பொய் சொல்லி முடித்தான்.
“அதுக்கு இன்னும் முழுசா நாலு மாசம் இருக்கு. இப்பவே எதுக்கு யோசிக்கிறீங்க?”
“அதுவரைக்கும் நான் இருக்கணுமே…”
“வாட்!!! என்ன சொல்றீங்க?” என்று படபடத்தாள் அவள்.
“அது… வந்து…. எனக்கு டெபுடேஷன்ல சைனா போகிறது மாதிரி இருக்கு. ஆறு மாசம் வரைக்கும் அங்கே இருக்கணும். அதான் இப்பவே ப்ளான் பண்றேன்.. போதுமா.. க்ளியரா…”
“ப்பூ… இவ்வளவு தானா.. இதுக்குத் தான் அவ்வளவு ஃபீல் பண்ணீங்களா? சைனா தானே, எனக்குக் கூட ரொம்ப நாளா அங்கே போகணும்னு ஆசை. வெட்டிங் டேக்கு நாங்க எல்லாரும் அங்கே வந்துடறோம். சூப்பரா செலிபிரேட் பண்ணிடலாம். ஓகே” என்று அவனுக்கு சமாதானம் சொன்னாள்.
அப்போது டிவியில் ஒளிபரப்பான விளம்பரம் ஒன்றைப் பார்த்து மகள்கள் இருவரும், “அப்பா எங்களுக்கு அதே மாதிரி பென்டன்ட் வேணும்” என்றனர்.
“அடியேய்.. அதெல்லாம் கோடி ரூபாய் இருக்கும். இரண்டு போட்டேன்னா. பென்டன்ட் வேணுமாமில்ல” என்று கையை ஓங்கினாள் தாய்.
“எவ்வளவு விலையா இருந்தால் என்ன, என் பசங்களுக்கு என்னால வாங்கித் தர முடியும். வாங்கடா இப்போவே ஆர்டர் போடலாம்” என்று மீதம் இருந்த பத்து கோடியையும் காலி செய்தான்.
அவனது பிரதான அக்கவுண்ட்டில் எப்போதும் இருபது லட்சம் பணம் இருக்கும். அதைத் தவிர நிறைய இன்வெஸ்ட்மென்ட் இருக்கிறது. தனது பிள்ளைகளின் கல்விக்கு எந்த தடையும் ஏற்படாது என்று உறுதி செய்து கொண்டவன், இனி தனக்கு என்ன ஆனாலும் சரி என்ற முடிவுக்கு வந்தான்.
மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஜிம்முக்குள் நுழைந்து கொண்டான். ட்ரெட்மில்லுக்கு வாய் இருந்தால் அழுதிருக்கும். அத்தனை ஸ்பீடாக நடக்க ஆரம்பித்தான். அளவுக்கு அதிகமாக வியர்த்தது. இதயத்தின் ஓர் ஓரத்தில் வலித்தது. ஆனாலும் இவன் வேகத்தைக் குறைக்கவில்லை. இன்னும் இன்னும் என்று வேகத்தைக் கூட்டினான். ஒரு கட்டத்தில் அவனது வேகத்தைத் தாங்க முடியாமல் இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
செய்தி அறிந்த ரஞ்சன், “Project completed” என்று முணுமுணுத்தான்.
மலர்விழியோ இது தான் ரஞ்சனின் pending project என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.
கல்யாணத்தை நிறுத்துவது எப்படி என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். இன்னும் ஒரு வாரத்தில் பத்திரிகை ப்ரிண்ட் செய்ய கொடுத்து விடுவார்கள். அதற்குள் ஏதாவது செய் பிள்ளையாரப்பா என்று வேண்டிக் கொண்டாள்.
மலர்விழிக்கு அன்று முதல் உறக்கம் என்பதே இல்லை. எப்படியாவது, எதையாவது செய்து கல்யாணத்தை நிறுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளுக்கு ரஞ்சனைப் பிடிக்கும் தான். ஆனால் அவனது வெளியே தெரியாத அவனது இன்னோரு முகத்தைப் பற்றி நினைக்கவே விருப்பம் இல்லை அவளுக்கு.
இத்தனைக்கும் அவளுக்கு முழு விவரங்கள் எதுவும் தெரியாது. மேலோட்டமாகப் பார்க்கும் போதே பயமாக இருக்கிறது, இதில் முழுவதும் தெரிந்து கொண்டால் என்ன ஆகுமோ?
கார்த்திக் ஆரம்பத்திலேயே ரஞ்சனை தனக்குப் பிடிக்கவில்லை, அவனிடம் ஏதோ ஒரு பொய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தான். “உன் வக்கீல் மூளை, டிடெக்டிவ் மூளையெல்லாம் வீட்டுக்குள்ளே கொண்டு வராத கார்த்திக்!” என்று அவன் தங்கை தான் அவன் வாயை அடைத்து விட்டாள். ஆனாலும் அவன் இப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறான்.
எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று யோசித்து யோசித்து தலைவலி வந்தது. ஆனால் தப்பிக்கும் வழி வெகு சீக்கிரத்தில் அவளுக்குக் கிடைத்தது.
அன்று கேண்டீனில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. இப்போதெல்லாம் தனியே இருக்கப் பழகிக் கொண்டாள். இத்தனை நாட்களாக வேறு விஷயங்களில் கவனமாக இருந்தவன் இவளது ஒதுக்கத்தை உணரவில்லை. அனைத்தையும் சரி செய்துவிட்டு இன்று தான் கொஞ்சம் ஃப்ரீயாகி இருக்கிறான். மனதில் இருந்த பாரம் இறங்கியதால் மனம் சமநிலைக்கு வந்தது.
சாதாரணமாக கேண்டீன் பக்கம் வந்தவன் தனியாக அமர்ந்திருந்த மலர்விழியைப் பார்த்தவுடன் வேகமாக அவளருகில் வந்தான். “ஹாய் மலர்! எனக்கு ஒரு காஃபி சொல்லேன். ரொம்பவே டயர்டா இருக்கு” என்று உட்கார்ந்து கொண்டான்.
அவனது முகத்தில் களைப்பு அப்பட்டமாக தெரிந்தது. அதையும் மீறி ஒரு சந்தோஷத்தை அங்கே காண முடிந்தது.
காபியுடன் வந்தவள் சாதாரணமாகவே பேச்சை ஆரம்பித்தாள். “என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது. நினைச்சதை சாதிச்சதாலயா?”
“அஃப்கோர்ஸ் மலர். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று புன்னகையுடன் சொன்னவன், “ஹேய் வேறெதுவோ சொன்னியே.. என்ன அது? நினைச்சதை சாதிச்சேனா.. நீ எதை மீன் பண்ற.. எனக்குப் புரியலை” என்றான்.
“இரண்டு எக்ஸாமையும் தட்டித் தூக்கிட்டீங்களே அதைத் தான் சொன்னேன்..” என்று சிரித்தாள் மலர்.
“எத்தனை பாடு பட்டிருக்கிறோம்.. கிடைக்காமல் போகுமா?” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் அவன்.
காஃபியைக் குடித்து முடித்தவன், “ஃப்ளவர், எனக்கு இன்னும் பசிக்குது. நான் ஏதாவது வாங்கிட்டு வந்துடறேன். எழுந்து போயிடாத.. இங்கேயே வெயிட் பண்ணு.. கொஞ்சம் பேசணும்.” என்று எழுந்தான். அவன் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரும் கீழே விழுந்தது.
அதை எடுத்து ஓரமாக வைக்கப் போன மலர்விழி தனது பெயரைப் பார்த்ததும் பிரித்துப் படித்தாள்.
அடுத்த நொடியே அதிர்ச்சியில் மயங்கிக் கீழே சரிந்தாள். “ஃப்ளவர்!” என்று வேகமாக ஓடிவந்த ரஞ்சன் அவளைப் பிடிப்பதற்கு முன்பே அவள் கீழே விழுந்து விட்டாள். பின் மண்டையில் பலத்த அடி ஏற்பட்டதால் நினைவிழந்து போனாள்.