• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 27

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
388
0
43
india
பகலிரவு பல கனவு – 27

நேற்று வரை வெறும் படுக்கை அறையாக இருந்த அந்த விசாலமான மாடி அறை இன்று முழுமையான வீடாக மாறி இருந்தது.
வெளியே வானம் கருமை பூசிக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறி மாறி வந்தது. எங்கோ மழை நின்றுவிட்டது என்பதன் அறிகுறியாக ஈரமான மண் வாசனை காற்றில் மிதந்தது. கீழே பெரிய வீட்டில் வழக்கமாகக் கேட்கும் பாத்திரச் சத்தமும், காமாட்சியின் நடைச் சத்தமும், அப்பத்தாவின் கணீர் குரலும் இங்கே இல்லை. அந்த மௌனம் தான் புதிதாக இருந்தது.

சம்யுக்தா சமையலறையில் நின்று கொண்டிருந்தாள். அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கணம் கவனச் சிதறலில் பால் பொங்கி வெளியே வர, அவள் அவசரமாக அடுப்பை அணைத்தாள்.

பிரபாகரனும் சம்யுக்தாவும் பாலைக் காய்ச்சி வெற்றிகரமாக தங்கள் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்து வைத்தார்கள். கையில் காபி டம்ளரோடு பிரபாகரன் மொட்டை மாடியில் சென்று நின்றான்.

சம்யுக்தாவும் அவனருகில் வந்து நின்றாள். இருவரும் சற்றுநேரம் பேசவில்லை. அந்த அமைதியில் அவர்களின் மூச்சுச் சத்தம் கூட பெரிதாகக் கேட்டது.
பிரபாகரன் இருண்ட வானத்தை வெறித்தபடி நின்றான். கையில் இருந்த கோப்பை குளிர்ந்து போயிருந்தது. அவன் கவனம் காபியிலும் இல்லை, சம்யுக்தாவிலும் இல்லை.

ஒரு காலத்தில், இரவு முழுக்க பேசினாலும் தீராத உரையாடல்கள், இப்போது, அருகருகே இருந்தும், வார்த்தைகள் கதவைத் தட்டத் தயங்கின.
சம்யுக்தா மெதுவாக திரும்பினாள்.

“பிரபா…” அந்த ஒரே சொல்லில், பல கேள்விகள், பல பயங்கள்.

“சொல்லு.”

“பிரபா! நாம.. செஞ்சது சரிதானா? திடீர்னு தனியா வந்துட்டோமே. அத்தைக்கு ஏதோ இன்செக்யூரிட்டி இருக்குன்னு நினைக்கிறேன். நாம..”

“இன்செக்யூரிட்டியா?? அப்போ அவங்க பெத்த புள்ளையப் பத்தி சரியா புரிஞ்சிக்கலைன்னு அர்த்தம்.”

“அப்படி கிடையாது பிரபா. நம்ம கல்யாணத்துல நடந்ததுக்கு யாரா இருந்தாலும்..” தனது பெற்றோரின் நடவடிக்கைகள் பற்றிப் பேசுவதற்கு அவளுக்குக் கூச்சமாக இருந்தது. தலைகுனிந்து நின்றாள்.

“இப்போ எதுக்கு அந்தப் பேச்சு? கல்யாணத்துல ஏதாவது கலாட்டா நடக்கும்னு எதிர்பார்த்தது தான். அதைப் பத்தி நிறையவே நாங்க பேசி இருக்கோம். அப்பல்லாம், சம்பந்தி வீட்டு ஆளுங்க எப்படி நடந்தாலும் கண்டுக்க மாட்டேன், எனக்கு எம்மகன் கல்யாணம் தான் முக்கியம்னு எங்க அப்பா கிட்ட வீரவசனம் பேசினவங்க தான் எங்கம்மா. இப்போ, யாரோ மந்திரிச்சு விட்டதுக்கு ஏத்த மாதிரி ஆடிட்டு இருக்காங்க.”

“அதைத் தான் நானும் சொல்றேன் பிரபா. அத்தை எப்படிப்பட்டவங்கன்னு தான் நமக்கு நல்லாத் தெரியுமே. அதனால, நாம இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோன்னு தோணுது.”

“பொறுமையா இருந்தா என்ன நடக்கும்னு நினைக்கிற? இத்தனை நாளும் நான் வாயை மூடிட்டு தானே இருந்தேன். என்ன செஞ்சாங்கன்னு பாத்தேல்ல. இதுவே தொடர்ந்தா, தினமும் புதுசு புதுசா குறை கண்டுபிடிச்சு ஏசுவாங்க. அவங்களுக்கும் அது நல்லதில்லை. கொஞ்சம் தள்ளியே இருப்போம்.”

“டெய்லி நம்மள பாத்துட்டு பேசாமல் இருக்கிறது அவங்களுக்கு இன்னும் டார்ச்சரா இருக்கும். தனியா போறதுன்னா இன்னும் தள்ளிப் போயிருக்கலாம்.” பிரபாகரன் அவளைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் பேசினாள் அவள்.

“என்ன? உங்க வீட்டு மனுஷங்க ஒதுக்கி வச்சிட்டாங்கன்றதுக்காக நானும் எங்க வீட்டுல இருந்து தள்ளிப் போகணுமா??” என்று எகிறப் போகிறான் என்று அவள் தயங்கித் தயங்கிப் பேச அவனோ அலட்சியமாக வேறு பதில் சொன்னான்.

“அதுக்காகத்தான் இங்கேயே இருக்கேன். என் மனசப் பத்தி நினைக்காமல் பேசினாங்கள்ள, அனுபவிக்கட்டும்.” அவனது குரலில் அத்தனை ஆக்ரோஷம். அதிர்ந்து போனாள் சம்யுக்தா. கண்களில் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“ரொம்ப பயந்த மாதிரி ஆக்ஷன் கொடுக்காத. குடும்பம்னு இருந்தால் இதெல்லாம் சகஜம். நானும் எங்க அப்பாவும் எப்படி இருக்கோம்னு பார்த்தேல்ல. அவர் கிட்ட நான் நேரடியா‌ பேசி பல வருஷம் ஆச்சு. எல்லாமே அம்மா வழி டீலிங் தான். ஆனால் அம்மாவால என் கிட்ட பேசாமல் இருக்கவே முடியாது. ஆனால் இப்போ வீம்புக்கு பேசாமல் இருக்காங்க. மூணு பேரும் வயசானவங்க. மலரும் இல்ல. ஏதாவது எமர்ஜென்சின்னா என்ன செய்யுறது. அதையெல்லாம் யோசிச்சு தான் இங்கேயே இருக்கலாம்னு முடிவெடுத்தேன். அம்மாக்கு ரொம்ப நாள் என் கூட பேசாமல் இருக்க முடியாது.” சொல்லும் போதே அவனுக்கும் அப்படித்தான் என்பது தெரிந்தது.

“அட.. அப்போ இது அட்டக்கத்தி சண்டையா? நான் கூட நிஜ சண்டைன்னு நினைச்சு மறந்துட்டேன்.”

“அடிப்பாவி! தொண்டை கிழிய எங்க அம்மா கிட்ட சண்டை போட்டு வந்திருக்கேன். போற போக்கில அட்டக்கத்தி சண்டைன்னு சொல்லுவியா நீ?” என்று அருகில் நின்றவளின் காதைத் திருகினான் பிரபாகரன்.

“நான் கூட.. மருமக வந்து ஒரு மாசத்துக்குள்ள குடும்பத்தைப் பிரிச்சிட்டான்னு... “ இன்னும் தனது காது அவனது கையில் இருப்பதை மறந்து அவள் பேச ஆரம்பிக்க, அவனது கோபத்தின் அளவை முழுவதுமாக தனது வலியில் உணர்ந்தாள்.

“ஷட்டப் சம்யூ… லூசா நீ? படிச்சவ தானே நீ? இதையெல்லாமா யோசிப்ப? ஊர் வம்புக்கு அலையறவங்க பேசத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டா நாம் வாழ முடியாது.”

“ம். புரியுது.. ஆனா..”

“இந்த ஆனா ஆவன்னா எல்லாம் ஓரமா வை. நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. இந்தத் தனிக்குடித்தனம் நாளைக்கே முடிஞ்சு போகலாம். இல்லன்னா இதுவே நிரந்தரமா மாறலாம். எதுவானாலும் இரண்டு பேரும் சேர்ந்து நின்னு சமாளிக்கணும், புரியுதா?”

“ம்..”

“நமக்கு பணப் பிரச்சினை ஏதும் இல்லை. புதுசா ஒரு தொழில் வேற ஆரம்பிச்சிருக்கு. ஏற்கனவே நேரம் பத்தாது. இப்போ க்ளியரா டைம் டேபிள் போட்டுத்தான் சமாளிக்கணும். எத்தனையோ சமாளிச்சாச்சு. இதையும் சமாளிப்போம்.”

“சமாளிப்போம்..” என்று சொன்னாலும் சம்யுக்தாவின் முகத்தில் குழப்பம் நிலவியது. மலர் ஊருக்குச் செல்லும் போது பேசியவை ஞாபகம் வந்தது.
“நான் கிளம்பறேன் அண்ணி. இனிமேல் நீங்க தனியா தான் உங்க மாமியாரை சமாளிக்கணும். என் ஹெல்ப் இனிமேல் எப்போ கிடைக்கும்னு சொல்லவே முடியாது.”

“அச்சோ! அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நீங்களும் இல்லேன்னா எனக்கு போரடிக்கும். வீக் என்ட்ல எல்லாம் வரமுடியாதா?”
“வரலாமே! நீங்க சென்னைக்கும் தேனிக்கும் ஒரு ஃப்ளைட் சர்வீஸ் மட்டும் ஏற்பாடு பண்ணுங்க. வாராவாரம் அட்டென்டன்ஸ் போட்டுடறேன்.”

“ஹா.. “

“டோன்ட் வொர்ரி அண்ணி. நாலு நாள் சேர்ந்தாப்போல லீவு கிடைச்சா வந்துடுவேன். அப்புறம், எங்க அம்மா டெரர் கிடையாது அண்ணி. இப்படி நடந்துக்கிறது அவங்க நேச்சரே இல்லை. அண்ணா மேல ரொம்ப அட்டாச்டா இருப்பாங்க. உங்களுக்கே தெரியும், உங்க கிட்ட கூட அப்படித்தான் இருந்தாங்க. இதே அம்மா மருமகள் கிட்ட எப்படி நடந்துக்குவேன்னு எத்தனையோ சொல்லி இருக்காங்க. ஏதோ நம்ம நேரம், இப்படி ஆட்டி வைக்குது. சீக்கிரமே எல்லாம் மாறும். அப்போ அவங்களை நாம வச்சு செய்வோம். டேக் கேர். எதுவானாலும் கால் பண்ணுங்க.”

“ம்ம்.. “

இப்போது அந்த உரையாடலை நினைத்துக் குழம்பினாள்.

“இப்போ என்ன??” பிரபாகரனின் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“இல்ல.. மலர் அண்ணிக்கு நாம தனியா வந்த விஷயம் தெரியுமான்னு தெரில. அவங்க வந்து என்ன சொல்லுவாங்களோ?”

“அம்மா! தாயே! சம்யுக்தா!! அண்ணி என்ன சொல்லும், ஆட்டுக்குட்டி என்ன சொல்லும்னு யோசிச்சு இருக்கிற குட்டி மூளைய குழப்பி விடாத. கண்டிப்பா மலருக்கு இங்க நடக்கிறது எதுவும் தெரிஞ்சிருக்காது. அப்பத்தா கூட சொல்லியிருக்காது. நேர்ல வந்து தெரிஞ்சுக்கட்டும். நாமளா சொல்ல வேண்டாம். நீ இப்போதைக்கு டாக்டராவது எப்படின்னு மட்டும் யோசி. வேற எந்தக் குழப்பமும் வேண்டாம். புரியுதா?” என்று பேசிக்கொண்டே அவள் கையைப் பிடித்தான். அந்தப் பிடியில் காதல் மட்டும் இல்லை. நான் உன்னை விடமாட்டேன் என்று ஒரு வாக்குறுதியும் இருந்தது. அந்த ஸ்பரிசத்தில் சிலிர்த்த சம்யுக்தா கண்களை இறுக மூடினாள்.

அவர்களின் மோன நிலையை இயற்கை ஆதரிக்கவில்லை போலும். இருண்டிருந்த வானம் வேகமாகப் பொழியத் தொடங்கியது. இருவரும் வேகமாக அறைக்குள் ஓடினார்கள். புதிதாக செஃப் அவதாரம் எடுத்த பிரபாகரன், கடையில் இருந்து வாங்கி வந்த மாவை தோசையாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்றான். சம்யுக்தா யூடியூப் உதவியுடன் தக்காளி சட்னி செய்ய இருவரும் தங்கள் நளபாகத்தை வியந்தபடி உணவை முடித்தனர்.

மீண்டும் அவர்களுக்குள் ஓர் அமைதி. அது, வார்த்தைகள் ஓய்ந்து, மனம் பேசத் தொடங்கும் அமைதி. திருமணம் முடிந்து மாதம் கடந்திருந்தாலும் இருவரும் இன்னும் தாம்பத்தியத்தால் இணையவில்லை. பொதுவான உலக வழக்கமாக, அவளது படிப்பு முடியும் வரை தள்ளியே இருப்பது என்று திருமணத்திற்கு முன்பே பேசியது தான். அதன் பிறகு நடந்த கலாட்டாக்களும் அதற்கு வசதியாகவே அமைந்து விட்டது. கிடைக்கும் தனிமை எல்லாம் நாளை என்ன நடக்குமோ என்ற கவலையும் அதற்கான சமாதானங்களுமாகவே கடந்தது. இன்று அந்தக் கவலைக்குத் தற்காலிகமாக ஒரு தீர்வு கிடைத்திருக்க, இப்போதைய தனிமை வேறு பரிமாணத்தை உணர்த்தியது.

பிரபாகரன், மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டு அவளிடம் நெருங்கி அமர்ந்தான். அந்த நெருக்கம் அவளுக்கு வரப் போவதை உணர்ந்த,
சம்யுக்தா கையை மெதுவாக இழுத்துக் கொள்ள முயன்றாள். பிரபாகரன் விடவில்லை. அவன் பிடிப்பில் இறுக்கம் இல்லை. ஆனால் தளரவும் இல்லை.

“பிரபா…”. இந்த முறை அவளது அழைப்பில் பயம் இல்லை. ஒரு தயக்கம் மட்டுமே.

“இப்போ.. இது.. வேண்டாமே.. “

“எனக்கு வேணும்னு தோணுதே.”

“நாளைக்கு காலேஜ் போகணும். லீவ் போட முடியாது.”

“நான் காலேஜ்ல கொண்டு போய் விடறேன். இப்போ கொஞ்சம் அமைதியா இரு.” அவன் குரலில் இன்று இது நடந்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை இருக்க, சம்யுக்தா அமைதியானாள். அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு கணவன் முன்னேற, அவனது மொபைல் அலறியது, மலர்விழியின் அழைப்பு.

“ஹும்.. “ என்று பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றான் பிரபாகரன்.

“சொல்லு, மலர். எப்படி இருக்க? வேலை எப்படி போகுது? சாப்பிட்டியா?”

“ஹலோஓஓஓ.. ப்ரதர்!! எனக்கு மூச்சு வாங்குது. கொஞ்சம் கேப் விட்டு கேள்வி கேளுங்க. நான் நல்லா இருக்கேன். அங்கே எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“ம்… நீ நேத்து பேசும் போது எப்படி இருந்தோமோ அப்படியே தான் இருக்கோம். தினமும் ஃபோனைப் போட்டு ஒரு மணி நேரம் ரம்பம் போட்டு, கேட்கிறா பாரு கேள்வி!!”

“அண்ணே! கோபமா இருக்கியா? எதுக்கு மொளகாய கடிச்சது மாதிரி பேசுற?”

“கோபமா? எனக்கென்ன கோபம்? அதெல்லாம் ஒன்னும் இல்ல. புது வேலைல கொஞ்சம் டென்ஷன். அதான் அப்படி பேசிட்டேன். நீ தப்பா நினைக்காத.”

“ஆரம்பிச்ச முதல் நாளே டென்ஷனா? இது நல்லதில்லையே?”

“ஹேய் லூசு! வைனரி ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகுது. உனக்கென்ன அம்னீஷியாவா?”

“ஓ.. வைனரி பத்தி சொல்றியா? நான் கூட நீ இன்னைக்கு தனியா குடித்தனம் போனதுல நிறைய டென்ஷன்னு நினைச்சேன்.”

“மலரு!!!”

“என்னடா? நாம எதுவும் சொல்றதே இல்லையே, இவளுக்கு எப்படித் தெரியும்னு தான யோசிக்கிற? நம்ம அருமை அப்பா, ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னைக்கு எனக்கு ஃபோன் போட்டாரு. நான் கூட சென்னைல ஜுலை மாசம் புயல் வந்துடப் போகுதேன்னு பயந்துட்டேன். இத்தனை நாளா வீட்டில நடந்த அத்தனையும் மனுஷன் விளக்கமா சொல்லிட்டாரு. இல்லேன்னா தினமும் நீங்க ஜாலியா பேசறது உண்மைன்னு இன்னும் எத்தனை நாளைக்கு நம்பி இருக்குமோ?”

“அப்படி இல்ல.. மலரு. நீ ஐநூறு மைல் தள்ளி இருக்க. எதுக்கு கவலைப் பட வைக்கணும்னு தான் சொல்லல.”

“நான் தூரமா இருந்தா, எனக்கு எதையும் சொல்லக் கூடாதுன்னு அர்த்தமா? இப்பவே எதுவும் சொல்வதில்லை, கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போயிட்டா சுத்தமா என்னை மறந்துடுவீங்க போலிருக்கு.”

“அண்ணி! டென்ஷன் ஆகாதீங்க. உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமல் தான் சொல்லல. மத்தபடி மறைக்கணும்னு நினைக்கல.”

ஸ்பீக்கரில் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சம்யுக்தா இடைபுகுந்தாள்.


“உங்ககிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன் அண்ணி. எது நடந்தாலும் என்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னேன் தானே. தினமும் ஒரு பிரச்சனையா இருந்திருக்கு. ஆனால் என்கிட்ட எதையும் சொல்லல. நீங்களும் என்னை வேற ஆளா தான் நினைச்சுட்டீங்க இல்ல. பரவால்ல. சந்தோஷமா இருங்க” என்று அழைப்பை துண்டித்து விட்டாள் மலர்விழி.

சற்று முன் இருந்த உல்லாசம் எல்லாம் வடிய தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் பிரபாகரன்.

“இந்த அப்பாவ..” என்று பல்லைக் கடித்தான்.

“பிரபா! டென்ஷன் ஆகாதீங்க. தெரிஞ்சோ தெரியாமலோ மாமா, நல்லது தான் செஞ்சிருக்காங்க.

“என்ன மாமனாருக்கு வக்காலத்தா??”

“ம்ச். அதெல்லாம் ஒன்னும் இல்ல. நாமளும் எத்தனை நாளைக்கு அண்ணி கிட்ட சொல்லாம இருக்க முடியும்? இன்னைக்கு திடீர்னு விஷயம் தெரிஞ்சதால அப்படிப் பேசிட்டாங்க.
அவங்க கிட்ட நாளைக்கு நிதானமா பேசுவோம். நிச்சயம் புரிஞ்சிப்பாங்க.”

“நீ கொஞ்சம் வாயை மூடுறியா? எல்லாம் இந்த அவசரக் கல்யாணத்தால வந்தது. நடக்கிறது எல்லாம் தப்பாவே நடக்குது” என்றவன் எழுந்து வெளியே சென்று விட்டான்.

சம்யுக்தா விக்கித்து நின்று விட்டாள்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 27
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.