• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 3

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
14
0
1
chennai
நவராத்திரிப் பண்டிகையில் தேவியரை வழிபடுகிறோம். தேவியர் அரக்கர்களை அழித்து மூன்று உலகங்களிலும் அமைதியை நிலை நாட்டினார்கள்.



அரக்கர்கள் என்பவர்கள் யார்? மற்றொரு விதமாகப் பார்த்தால் நம்மிடம் குடியுள்ள தீய குணங்களை உருவகப்படுத்தி அரக்கர்களாகப் பார்க்கிறோம். பொறாமை, பேராசை, வெறுப்பு, ஆணவம் போன்ற எண்ணங்கள் நம்முடைய மனங்களில் தலைதூக்கும்போது நாமும் அரக்கர்களாகி விடுகிறோம். அவற்றை அழிக்க என்ன செய்ய வேண்டும்? நல்ல குணங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்த வேண்டும். கருணை, அன்பு, நட்பு, பொறுமை, மனிதநேயம் ஆகியவை மனதில் குடியேறும்போது அரக்க குணங்கள் தாமாகவே அழிந்து போகின்றன. ஆன்மிகத்தில் மனதைச் செலுத்தும்போது பக்தி தானாகவே மனதில் ஊறுகிறது. அந்த பக்தியே நற்குணங்களை நமக்குள் வளர்த்துக் கொள்ள வழியமைத்துத் தருகிறது. பக்திநெறியைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை செம்மையுறும்.



கொடுமைகளைத் தேடி அழிப்போம்!

குதூகலம் மனதில் சேர்ப்போம்!



தீயவற்றை எரித்திடுவோம்!

தூய நேச தீபமேற்றி இன்புறுவோம்!



வன்முறை ஒழித்து நிற்போம்!

அன்பு மலர்களால் அர்ச்சிப்போம்!



தீயோரை அன்பால் திருத்திடுவோம்!

தீயவழி மாற்றித் தூயவழி காட்டிடுவோம்!



அகந்தையும் வெறுப்பும் சினமும்

பகைமையும் பழிவாங்கும் சிந்தனையும்



மனதில் அகற்றித் தூய்மை சேர்த்து

மாநிலத்தில் இனிமை சேர்ப்போமே!



ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி தேவியை நவராத்திரி காலங்களில் வழிபடுவது உண்டு. இந்த தேவியை வழிபட்டால் என்ன வரம் வேண்டினாலும் தரக் கூடியவள். நம்பிக்கையுடன் வழிபடுபவர்களின் வீட்டில் ஒருத்தியாக, குழந்தையாக, தாயாக வந்து அருள் செய்யக் கூடியவள். நேரடியாக வந்து காட்சி தரக் கூடிய அற்புதமான தெய்வம்.



எத்தனையோ பெண் தெய்வங்கள் இருந்தாலும் அவர்களில் மிகவும் சக்தி வாய்ந்த, கருணா ரூபிணியாக விளங்கக் கூடியவள் பாலா திரிபுர சுந்தரி. குமாரிகா, பாலா என பல பெயர்களிலும் அழைக்கப்படும் பெண் தெய்வ வழிபாடு இந்தியாவில் பிரபலமானதாகும். இவளை சிவ பெருமானின் மகள் எனவும் சிலர் கூறுகின்றனர். அன்னை லலிதாம்பிகையின் குழந்தை ரூபமாகவே பெரும்பாலான இடங்களில் கூறப்படுகிறது.



பிரம்மாண்ட புராணத்தில் உள்ள லலிதா மகாத்மியத்தில் பாலா திரிபுரசுந்தரி பற்றி குறிப்பிட்டுள்ளது. இவள் பண்டாசுரனை வதம் செய்து தேவர்களை காத்ததாக புராணங்கள் சொல்கின்றன. இவளே சித்தர்களின் தெய்வமாக சொல்லப்படுகிறாள்.



அகத்தியர் உட்பட பல சித்தர்களும் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி அம்மன் வழிபாடு மிகவும் சக்திவாய்ந்ததாகும். பத்து வயதான சிறு பெண் தோற்றம் கொண்டு பட்டுப்பாவாடை, சட்டை, மூக்குத்தி, ரத்ன அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பாலா என்பது சமஸ்கிருத சொல்லாகும். இவளுக்கு வாலை அம்மன் என்ற பெயரும் உண்டு. பாலா திரிபுரசுந்தரியை வழிபட்டால் வீட்டில் சகல விதமான ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பாலா திரிபுரசுந்தரி பற்றி அனைத்து சித்தர்களும் போற்றி பாடி உள்ளார்.





திவ்ய சக்தியின் மகா தேவியான ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் குழந்தை வடிவமாக ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி வடிவமைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, த்ரிபுரா என்று குறிப்பிடப்படும் மூன்று நகரங்களின் இறைவியாக விளங்கும் தேவி லலிதா அம்மனின் சிறிய மற்றும் காமிய வடிவமாகக் கருதப்படுகிறார். அவள் அனைத்து மூன்று லோகங்களையும் ஆளும் சக்தியின் குழந்தை வடிவமாக, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதி, மற்றும் மகாகாளியின் அம்சங்களையும் சேர்த்து ஒரு முழுமையான தெய்வமாக பார்க்கப்படுகின்றாள்.



அவளுடைய உருவவழிபாட்டில் பொதுவாக ஒரு புன்னகையுடன் அமர்ந்திருக்கும் சிறுமியாகக் காணப்படுகிறாள். அவளுடைய கரங்களில் அக்ஷமாலை (மணிவாசகம்), புத்தகம், கமண்டலம் மற்றும் பாத்ரம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது வழிபாடுகளின் முக்கிய அங்கமாகும். அவளின் அழகிய உருவம் மற்றும் பராக்கிரமம் அவளை “பாலா” என்றும் அழகிய தெய்வமாக விளங்க வைத்துள்ளது.



பாலா திரிபுர சுந்தரி சித்தர்களின் மிகவும் ரகசியமான தெய்வங்களில் ஒருத்தி ஆவாள். வாலையம்மன் எனவும், வாலைத் தாய், வாலை பரமேஸ்வரி, மனோன்மணி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். பாலா திரிபுர சுந்தரி என்றால் மூன்று உலகங்களின் மிக அழகான குழந்தை என்பதாகும்.



எதிர்மறையை அழிக்கவே பாலா உருவாக்கப்பட்டாள். அரசனாலோ, கடவுளாலோ கொல்ல முடியாத வரம் பெற்ற அரக்கன் ஒருவன் இருந்தான். மன்மதனின் சாம்பலில் இருந்து உருவான அரக்கன் இவன். அவன் பெயர் பண்டாசுரன். மேலும் தன்னைக் கொல்ல முடியாதவர்களின் பட்டியலில் எந்த இளம் பெண்ணும் இல்லை. ஏனென்றால், தான் ஒரு இளம் பெண்ணால் கொல்லப்பட முடியாது என்று நினைத்தான். அதனால் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி தேவி, ஓர் இளம் பெண்ணாக மாறினாள். அவளே பாலா. பாலாவாக மாறி அவனைக் கொன்றாள். அரக்கனை அழித்ததன் மூலமாக மனிதர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அருளினாள்.



அவர் 9 வயது அல்லது சில சமயங்களில் 16 வயது கன்னிப் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார், மேலும் அவர் தனது தாயான ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் சுவாசமாக லலிதாவால் குறிப்பிடப்படுகிறார். அதாவது தேவியின் பிராணன் அல்லது உயிர் சக்தி ஆற்றலிலிருந்து அவளுடைய (பாலா) சக்தி உருவாகிறது. எனவே அவள் ஸ்ரீ சக்ரா மற்றும் ஸ்ரீ வித்யா வழிபாட்டின் முதன்மையான உயர்ந்த தெய்வமாக கருதப்படுகிறாள். அனைத்து தேவிகளின் சக்தியையும் கொண்டுள்ள ஸ்ரீ சக்கரத்தை

அவள் ஆட்சி செய்கிறாள் என்று நம்பப்படுகிறது.



தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்துடன் மனிதர்களையும், தேவர்களையும் பண்டாசுரன் துன்புறுத்திவந்தான். அந்த அசுரனை அழிக்க அன்னையால் தெய்வாம்சத்துடன் படைக்கப்பட்டவள் பாலாம்பிகை.



பண்டாசுரன் தனது சக்தியை எல்லாம் திரட்டித் தனது முப்பது மைந்தர்களைப் படைத்து பாலாவை எதிர்க்க அனுப்பினாள். கவசங்களைத் தரித்துப் போர்க்கோலம் பூண்டு அந்தச் சிறுகுழந்தை ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி வெள்ளை அன்னங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் ஏறி யுத்தம் செய்ய வந்தாள்.



பண்டாசுரனின் முப்பது மைந்தர்களைப் போரில் எதிர்கொண்டு அழித்துப் பின்னர் பண்டாசுரனையும் வதம் செய்து வெற்றியுடன் திரும்பிய பாலிகையை அன்புடன் தழுவிய அன்னை பராசக்தி அவளைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டாள்.



தேடுகின்ற நெஞ்சினிற்குள்

ஓடிவந்து நிற்பவள்

நாடி வந்த அன்பருக்கு

நன்மை யாவும் செய்பவள்

ஓடிவந்து உட்கலந்து

ஜோதியாகி நின்றவள்

ஆதி அந்தம் ஆகி நின்ற

பாலை தானவள்

ஈசன் முதல் தேவன் போற்றும்

கன்னி தெய்வமானவள்

உயிருமாகி உடலுமாகி

உணர்வுமாகி இருப்பவள்

ஊக்கம் தந்து சோர்வு நீங்கி

வேகம் தனைத் தருபவள்

ஆதி அந்தம் ஆகி நின்ற

அன்னை பாலை தானவள்!



அரக்கனை அழித்தவள் பாலாம்பிகை தேவி! மனதில் பொங்கும் அரக்க குணங்களை வதம் செய்ய பக்தியுடன் பாலா திரிபுரசுந்தரியை வழிபடுவோம். நமக்கு வழிகாட்டி நமது வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றும் வல்லமை படைத்தவள் பாலா திரிபுரசுந்தரி தேவி!



ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் மகிமையைப் போற்றும் விதத்திலேயே நவராத்திரிப் பண்டிகையில் சிறுமிகளைக் கொண்டாடுகிறோம். நம் இல்லங்களில் நம்முடன் இருக்கும் பெண் குழந்தைகள் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியின் அம்சமாகக் கருதிக் கொண்டாட வேண்டியது நமது கடமை.



சர்வ காரிய சித்தி மந்திரம் :



"மந்திர ரூபிண்யை நமஹ

மந்திராத்மிகாயை நமஹ

பாலா திரிபுர சுந்தரியை நமஹ"





புவனா சந்திரசேகரன்