அத்தியாயம் – 4
காதில் விழுந்த குரலில் துள்ளி விழாத குறையாக நிமிர்ந்த எழில்மலர், கண்களை எதிர் அறையில் ஓட்டினாள். குரல் மட்டும் கேட்டது. ஆளைப் பார்க்க முடியவில்லை.‘அவனா? அவன் எங்கே இங்கே வந்தான்?’ என நினைத்தவளுக்கு, எதிர் அறையில் இருப்பவன் கதிர் தானா என்று தெரிந்து கொள்ள மனம் பரபரத்தது.
“எங்க கிளாஸ்ல ஒருத்தன் எப்பப் பாரு எல்லாரையும் ‘டென்ஷன்’ படுத்திட்டே இருப்பான். ஒருதரம் ‘மேத் ப்ரொபசர்’கிட்டே, ‘சார் என் தலைல எறும்பு ஏறுது பாருங்க’ன்னு சொன்னான்.. அவரும் பதறி, ‘அதை எடுத்துப் போடுப்பா. கடிச்சிடப் போகுது’ எனச் சொன்னா, அதற்கு இவன் என்ன சொன்னான் தெரியுமா?
‘நீங்க தானே சார் என் தலைல எதுவும் ஏறலைன்னு சொன்னீங்க.. இப்போப் பாருங்க எறும்பு ஏறுது. நாளைக்குப் பல்லிக் கொண்டு வரேன். நீங்க சொன்னது தப்பு தானே?’ என்றான்” எனச் சொல்லவும், அது கதிரே தான் என்ற முடிவுக்கு வந்தாள் எழில்மலர்.
“ஹ.. ஹ. ஹா.. போதும்பா வயிறு வலிக்குது.” என அந்த அறையிலிருந்த மூத்த வக்கீலின் பதிலில் எழில்மலருக்கு மயக்கமே வந்துவிட்டது.
அவருக்குக் கீழே தான் ‘ஜூனியராக’ எழில்மலர் வேலை செய்கிறாள். அத்தனை இலகுவாக அந்த மூத்த வக்கீலிடம் பேசிச் சிரித்து விட முடியாது. அத்தனைக் கண்டிப்பும், கறாருமாக இருப்பவர். அவரிடம் எழில்மலரே தன் வாலைச் சுருட்டி வைத்திருப்பாள்.
அவரையே சிரிக்க வைத்தப் புண்ணியம் கதிரைத் தான் சேரும் என நினைத்த எழில்மலருக்கு உடனே சென்று கதிரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் ‘கிளையன்டுடன்’ பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அப்படி அநாகரிமாக மற்றவரின் அறையை எட்டிப் பார்ப்பதும் சரியல்ல எனத் தன் வேலையில் கவனமானாள். அல்ல, கவனமாக இருப்பதைப் போல் பாசாங்கு செய்தாள். பார்வை அவ்வப்பொழுது எதிர்ப்புற அறையை அலசிக் கொண்டிருந்தது.
“இந்தக் காலத்துப் பசங்கக்கிட்டே பேசவே முடியலைப்பா.. எங்க வீட்லேயும் இப்படித் தான் என் மகன் பேசிட்டுத் திரியறான். ‘டேய். நாம் மத்தவங்களுக்கு உதவத் தான் பிறந்திருக்கிறோம்’ எனச் சொன்னா.. ‘அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்திருக்காங்க?’ எனக் கேட்கிறான்” என அந்த மூத்த வக்கீல் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘இதெல்லாம் டூ மச். நம்மகிட்ட பேசவே காசு கேட்கிறவர், இவன்கிட்டே மட்டும் சொற்பொழிவு நடத்தறார்’ என பொருமிக் கொண்டாள் எழில்மலர்.
“இப்பத் தான் சார் அப்படிப் பேச முடியும். அப்புறம் வேலை, பொறுப்புன்னு கிளம்பிடுவாங்க. அனுபவிக்கட்டும் சார். அப்போ நான் கிளம்பறேன். ரொம்ப தேங்க்ஸ் சார்” என அவன் கிளம்பும் அரவம் கேட்டது.
அவன் தன்னைப் பார்ப்பானா? பார்த்ததும் பேசுவானா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், பறந்து கொண்டிருந்த முடியை அவசரமாகச் சரி செய்து கொண்டு கண்களைக் கோப்புகளில் வைத்து அமர்ந்திருந்தாள் எழில்மலர்.
பெங்களூரில் வைத்திருந்த அதே கைப்பையுடன் வெளியில் வந்த கதிரோ தன் கையிலிருந்த காகிதத்தில் பார்வையைப் பதித்தவாறே அவளைப் பார்க்காமலேயே வெளியேறினான்.
‘கூப்பிடலாமா?’ என ஒரு நொடி யோசிக்க, ‘தெரியலைன்னு சொல்லிட்டா அப்புறம் ‘பல்ப்’ வாங்க வேண்டியிருக்கும் எழில். ஜாக்கிரதை’ என மனம் அவசரக் கால எச்சரிக்கையை மூளைக்கு அனுப்பியது.
கதிர் அப்படிப் பார்க்காமல் சென்றதும் எழில்மலருக்குச் சப்பென்று ஆகிவிட்டது. எப்படியும் கதிர் தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துத் தான் அவன் கண்களில் படுமாறு அமர்ந்திருந்தாள். பார்க்காவிட்டால் போகிறான்.. தான் ஏன் இப்படியெல்லாம் மெனக்கெடுகிறோம் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
இப்போது அவன் வந்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் மூளை வெடித்துவிடும் என அந்த மூத்த வக்கீலிடம் சென்ற எழில்மலர், “சார்” என அவள் தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கில் சந்தேகம் என்று எதையோ கேட்டாள்.
பின்னர், “சார், இப்போ போனது யாரு? தெரிஞ்சவர் மாதிரி இருந்தார்” எனக் கேட்டாள்.
“கதிர்ன்னு. ஆர்கிடக்ட். ஒரு லேன்ட் டாகுமென்ட்ஸ் பத்தி விசாரிக்க வந்தார். என் ஃபிரெண்ட் இப்போ ஊர்ல இல்லைன்னு என்கிட்டே அனுப்பி வைச்சிருக்கான்” என நீண்ட விளக்கத்தைத் தந்தார் அவர்.
‘இதற்கு மேலே தூண்டித் துருவினால் சந்தேகம் வரக்கூடும். கதிரின் விவரங்கள் தெரிந்துவிட்டதே. இனி வராமலா போய்விடுவான்.’ என அவள் எண்ணிக் கொண்டிருக்க,
“இன்னையோட வேலை முடிஞ்சது.. உனக்குத் தெரிஞ்சவரா?” எனக் கேட்டார்.
“ஓ. இல்லை சார். இவர் வேறு யாரோ” எனச் சொல்லி மீண்டும் தன் அறைக்குச் சென்ற எழில்மலர், ‘எப்படியும் கனவில் வந்த இராஜகுமாரன் வழி தவறிப் போகவில்லை. கண்ணுல பட்டுட்டான். பார்த்துக்கலாம்டா.’ எனப் புன்னகைத்துக் கொண்டாள்.
****
“ஏம்ப்பா, கவனமா கல்லை இறக்குங்க. இங்க என்ன சிரிச்சுப் பேசிட்டு இருக்கீங்க? ஜல்லி லோடு வந்துடுச்சான்னு போய்ப் பாருங்க” எனக் கட்டடப் பணி நடந்து கொண்டிருந்த இடத்தில் அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தான் சக்தி.
‘இவருக்கு வேற வேலையே இல்லை. எந்நேரமும் உர்ருன்னு. எப்போ வேலை முடியும்ன்னு இருக்கு’ எனத் தொழிலாளர்கள் சக்திக்குக் கேட்கா வண்ணம் சலித்துக் கொண்டனர்.
கட்டுமானத் தொழிலில் கால் பதித்து ஏழு வருடங்கள் ஓடிவிட்டன சக்திக்கு. இதுவரையில் கோடிகள் சம்பாதிக்கவில்லை என்றாலும் இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டு தான் இருந்தான் சக்தி.
ஆனால் இப்போது? தன் கனவெல்லாம் அவன் எதிரியால் தவிடுபொடியாகிவிட்டதே. எங்கே போனாலும், “இல்லைங்க சார். நாங்க வேற இடம் பார்த்துக்கிட்டோம்” என்று ஒரே பதிலைச் சொல்கின்றனர்.
அந்த வேறிடம் யாரென்று அவனுக்குத் தெரியாதா என்ன? அவன் பேசியே ஆளை மயக்கிவிடுவானே. அந்தத் திமிரில் தான் என்னை எப்போதும் மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறான்.
குரைக்கிற நாய் கடிக்காது என்பதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். உழைக்க வேண்டும். சும்மாப் பேசி எல்லாம் காரியத்தைச் சாதிக்க முடியாது என அவன் உணர வேண்டும் . பார்க்கலாம் தனித்து அவன் எந்த ஆணியைப் பிடுங்குகிறான் என்று தான் ஆரம்பத்தில் சக்தியும் நினைத்தான்.
ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவனின் அசுர வளர்ச்சி, சக்தியை ஆட்டம் காணச் செய்தது என்றால் மிகையல்ல. இப்போது பார்த்தால் தன்னால் தான் எந்த ஆணியையும் பிடுங்க முடியாமல் போனது எனப் புரிந்து கொண்டான் சக்தி.
ஆனாலும் அந்தப் பொடியனிடம் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மனநிலை அவனுக்கு வரவில்லை. சக்திக்குப் பணத்தைப் பெருக்க வேண்டும்.. புகழைப் பெற வேண்டும். அந்தப் பொடியனை விட தான் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
இவை மட்டுமே எந்நேரமும் அவன் சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் உறவுகளுடன் பிணைந்திருக்கும் நுண்ணுணர்வுகளை மறந்தே போய்விட்டிருந்தான் எனலாம்.
மறந்துவிட்டானா, இல்லை, தனக்குள் அமுக்கிக்கொண்டானா என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். ஏனெனில் அவன் மனதைத் திறந்து யாரிடமும் இதுவரையில் பேசியதில்லை.
கண்டிப்பாக முன்னேறியே தீருவேன். என்ன ஆனாலும் சரி, அவனிடம் விட்ட சவாலில் வென்றே தீருவேன் எனத் தினமும் எழுகையில் இது தான் சக்தியின் தாரகமந்திரமாக இருக்கும். ஆனால் அது என்ன மந்திரமா உடனே மாறிவிட?
சவாலில் வெல்வதற்கு ஒரே வழி, அதிதீவிரத்துடன் வேலை செய்வது. ஆகையினால் வேலையிடத்தில் அனைவரையும் அதட்டி, உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான் சக்தி.
வேலை செய்பவர்களை அதட்டிக் கொண்டிருந்த சக்தியின் கைப்பேசி அலற, அதில் வந்த எண்ணைப் பார்த்ததும் அவனுக்கு எரிச்சல் வந்தது. அழைப்பை எடுக்காமல் விட்டுவிடலாம். ஆனால் தொடர்ந்து தொல்லைப்படுத்துவதோடு எதிரிலும் வந்து ‘ஈஈ.’யென்று நிற்பான்.
கைப்பேசியை அணைத்தும் வைக்க முடியாது. அவனது வேலைகள் அந்தக் கைப்பேசி வழியாக அல்லவா தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அழைப்பை எடுத்துவிடுவதே உசிதம் என நினைத்து, “சொல்லு” என்றான்.
இறுகி ஒலித்த சக்தியின் குரலில், “எவ்வளவு நாள் கழிச்சுப் பேசறேன்.. குரலில் ஒரு ஃபீல் வேண்டாம்? டூ பேட். டூ பேட்” என எதிர்முனையில் இருந்த கதிர் உச்சுக் கொட்ட,
“எல்லாம் வேணுங்கற அளவுக்கு ஃபீல் பண்ணியாச்சு. என்ன விஷயம்?” என்றான் சக்தி.
“யூ சீ. என் அக்கௌன்ட் பத்தின டவுட் ஒண்ணைக் கேட்க பேங்க்குக்கு ஃபோன் பண்ணினேன். அங்க வேலை செய்யற பொண்ணு என் அக்கௌன்ட்டை உறுதிப்படுத்த என் பிறந்தநாள் எப்போன்னு கேட்டாங்க. நானும் ஆகஸ்ட் இருபதுன்னு சொன்னேன். அதற்கு அந்தப் பொண்ணு எந்த வருஷம் எனக் கேட்டாங்க.
ஒவ்வொரு வருஷமும் தான்னு சொன்னா, ‘எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு தலைவலி’ன்னு திட்டிட்டுப் ஃபோனை வச்சிட்டாங்க. நான் ஏதாவது தப்பாச் சொல்லிட்டேனா?” எனச் சக்தியிடம் கேட்க,
“நீ திருந்தவே மாட்டியா? உனக்குப் புத்தி வரலைன்னா நான் ஒண்ணும் செய்ய முடியாது. உனக்கு வேலைவெட்டி இல்லன்னா எல்லோரும் அப்படியே இருப்பாங்க என்கிற நினைப்பா?” எனக் கோபத்தில் குதித்தான் சக்தி.
“அடக் கண்டுப்பிடிச்சுட்டீங்களே. சரி பிறந்தநாள் அன்னைக்காவது ரெஸ்ட் எடுக்கலாம்னு மதியத்துக்கு மேலே நான் லீவு.. இதுவரைக்கும் நீங்க கூப்பிடலை. அதான் நானே கூப்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கிறேன்” என்றான் கதிர்.
அவன் பிறந்த நாள் என்று அழைத்திருக்கிறான். அதைக் கூட மறந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு தோன்றினாலும், ‘இவனுக்கெல்லாம் கொஞ்சமும் இடம் தரக்கூடாது. தந்தால் காற்றைப் போல் நுழைந்து சூறாவளியாகச் சுழற்றிடுவான்’ என அமைதி காத்தான் சக்தி.
“தேங்க்ஸ். உங்க மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கலைன்னாலும், உங்க மௌனம் ஆயிரம் அர்த்தங்கள் உடையதுன்னு எனக்குத் தெரியும்” எனக் கதிர் சொல்ல,
“ஆஹ். ஐயோ.. தூக்குங்க. இதை வச்சுக் கட்டுங்க.” என பலவிதமான அலறல்கள் சக்தியின் காதுகளில் ஒலித்தன. அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்ணொருத்தி தவறி மேலிருந்து கீழே விழுந்துவிட்டாள்.
சற்றும் தாமதிக்காமல், கதிரை மறந்துவிட்டு, “இதுக்குத் தான் வேலை பார்க்கிற இடத்தில் கவனக்குறைவாக இருக்கக் கூடாதுன்னு படிச்சு, படிச்சுச் சொன்னேன். கேட்கறீங்களா? எந்நேரமும் சிரிப்பும் கும்மாளமும் தான்” என மற்றவர்களிடம் கடிந்து கொண்டாலும்,
சற்றும் யோசிக்காமல் வலியில் முணங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தன் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கிப் பறந்தான் சக்தி.
அவனின் வேகத்தை விட, அவனின் கோபத்தை விட, அவனின் உதவும் மனப்பான்மையைப் பார்த்து அனைவரும் வாய் பிளந்து நின்றனர். இதுவரையில் அவர்கள் பார்த்த சக்திக்கு மிரட்ட மட்டுமே தெரியும். ஆனால் இன்று பதறிய சக்தி அவர்களுக்குப் புதிது.
இவன் கொஞ்சம் நல்லவன் தானோ? என்ற எண்ணம் அந்த நேரத்திலும் அங்கு வேலை செய்தவர்களுக்கு எழாமலில்லை.
தன் மேல் கொண்ட கோபத்தால் தான் சக்தி அழைப்பை வைத்துவிட்டான் என எண்ணிய கதிர், ‘போடா போ. எங்க போயிடப் போற. அந்த அத்திப்பூவைப் பார்க்கிறேனோ இல்லையோ உன் முகத்தில் புன்னகைப் பூவை மலர வைக்காமல் விடமாட்டேன்’ எனக் கைப்பேசியைப் பார்த்துச் சபதமெடுத்துக் கொண்டிருந்தான்.
Author: siteadmin
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.