அத்தியாயம் -4
சேதுபதி சீமையின் அரசியலில் தலையிட்டு வலுவிழக்கச் செய்திட வேண்டும் என்று திருமலை நாயக்கர் முயன்ற அதே வேளையில் அவருக்கு எதிராக மற்றும் ஓர் இடத்தில் திட்டங்கள் தீட்டப் பட்டுக்கொண்டிருந்தன.
நாயக்க மன்னரது எழுபத்து இரண்டு பாளையக்காரர்களில் ஒருவரான எட்டையபுரத்துப் பாளையக்காரர் மதுரை மன்னருக்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் சில பாளையக்காரர்களைத் திரட்டி திருமலை நாயக்கருக்கு எதிராகக் கலகக்கொடி உயர்த்தினார். மதுரை நாயக்க அரசினால் பாளையக்காரர் பதவியைப் பெற்ற எட்டயபுரம் பாளையக்காரர் உள்ளிட்ட தெற்கத்திய பாளையக்காரர்கள் இத்தகைய இக்கட்டான நிலையை உருவாக்கக் கூடும் என்பதைச் சிறிதும் எதிர்பாராத திருமலை நாயக்க மன்னர் செய்வது அறியாது திகைத்தார். முடிவில் ஒருவாறாகத் தேறுதல் பெற்றுச் சேதுபதி மன்னரை உதவி செய்யுமாறு அணுகினார்.
*******
பொழுது புலரும் வேளை அது. முன்பனி பெய்யும் தை மாதத்துச் சூரியன் முன்னே வரலாமா வேண்டாமா எனக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தான். இராமநாதபுரம் கோட்டைக்குள் இருந்த நீராவி மண்டபத்தில் (வீர விளையாட்டுகள் நடைபெறும் இடம்) சிலம்பாட்டமும் மல்யுத்தமும் இன்று நடக்க இருப்பதாகக் கூடியிருந்த போட்டியாளர்களின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பார்வையாளர்களின் கூட்டம் நேரம் ஆக ஆகக் கூடிக் கொண்டே சென்றது. அனைவரும் மன்னரின் வருகைக்காகக் காத்திருந்தனர். அனைவரது கண்களும் அரண்மனையின் ஆசாரவாசலை (பிரதான வாயில்) உற்று நோக்கிக் கொண்டு இருந்தன.
சற்று நேரத்தில் கட்டியக்காரரின் குரல் ஓங்கி ஒலித்தது. சபையினர் அனைவரும் மன்னரின் வருகையை உணர்ந்து எழுந்து நின்றனர். மன்னர் வந்து தமது இருக்கையில் அமர்ந்து அனைவரையும் அமரும் படி சைகை செய்தார். பிறகு போட்டி தொடங்கட்டும் என்று உத்தரவிட்டார்.
முதலில் மல்யுத்தம் தொடங்கியது. பல சுற்றுகள் கடந்த பிறகும் வெற்றியாளர் யார் என்று தீர்மானம் செய்ய இயலாத வகையில் இரு பயில்வான்களும் சமபலத்துடன் மோதினார்கள்.
வேறு வழியில்லாமல் சேதுபதி மன்னர் இருவரையும் வெற்றியாளர்களாக அறிவித்துப் பொற்காசுகளை வழங்கினார். மக்களின் மிகுந்த ஆரவாரத்துடன் அந்த நிகழ்ச்சி முடிவுற்றது.
அடுத்ததாக சிலம்பப் போட்டி. இது மாலை நேரத்தில் நடைபெற்றது. பத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் இடுப்பில் கச்சை அணிந்து கையில் நீண்ட மூங்கில் கழிகளுடன் அரசரின் முன் அணிவகுத்து நின்றனர். இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்கள் மோதினர். போட்டியின் விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டது.
திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் தமது பிரதானிகளுடன் வந்து இருக்கையில் அமர்ந்தவுடன் மன்னரை வணங்கி போட்டிகள் ஆரம்பமாகியது.
ஒவ்வொருவரும் சிலம்பக் கலையைத் தாம் கற்றறிந்த விதத்தைச் சிறப்பாகத் தங்கள் ஆட்டத்தின் மூலம் காண்பித்தனர். முதலில் தனித்தனியாக ஒவ்வொரு ஆட்டக்காரரும் தான் கற்ற வித்தையைக் காட்டினார். பின்னர் குழுவாக இணைந்து போட்டிகள் ஆரம்பமானது.
வேகமாகக் கைகளைச் சுழற்றும் போது அவர்களின் கைகளில் கழி இருப்பதாகவே தெரியவில்லை. அதிலிருந்து விர்ரென்று கிளம்பும் ஓசை தான் கழி கையில் தான் இருக்கிறது என்று உறுதி செய்தது. மக்கள் ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
பல சுற்றுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்றவருக்கு பரிசுகளை வழங்கினார். மக்கள் கூட்டம் சிலம்பாட்டத்தைச் சிலாகித்தபடியே கலைந்து சென்றது.
அந்தி நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மன்னர் தமது மாளிகையின் முகப்பில் இருந்த இருக்கையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அருகில் முக்கிய பிரதானி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஏவலாள் ஒருவர் வந்து சூடான பானம் நிறைந்த குவளையை மன்னர் அருகில் இருந்த சிறிய நாற்காலியில் மரியாதையுடன் வைத்து விட்டுச் சென்றார்.
பானத்தைப் பருகியவாறே மன்னர் பிரதானி யின் முகம் பார்த்தார். அதில் சிறிது கலக்கம் தென்பட்டதாக மன்னருக்குத் தோன்றியது. உடனே கையில் இருந்த குறையைக் கீழே வைத்தவர், “பிரதானியாரே! செய்தி ஏதேனும் உண்டா? தங்கள் முகம் யோசனையில் இருப்பதாகத் தெரிகிறதே?” என்று வினவினார்.
“ஆம் மகாராஜா.. தாங்கள் போட்டிகளை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்ததால் முன்பே தெரிவிக்க இயலவில்லை. தங்களைக் காண்பதற்காக இருவர் காத்திருக்கிறார்கள் மகாராஜா!”
“யார் அவர்கள்?”
“ஒருவர் மதுரையில் இருந்து மன்னர் திருமலை நாயக்கர் அனுப்பிய தூதுவர். இன்னொருவர் அமிர்தகவிராயர். இருவரையும் கோட்டையில் உள்ள அலுவலகத்தில் காத்திருக்கச் செய்திருக்கிறேன்.”
“இந்த நேரத்தில் கவிராயரை அரசவைக்கு அழைக்க இயலாது. அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். நாளை காலையில் அவரைச் சந்திக்கிறேன் என்றும் கூறிவிடுங்கள்.”
“அப்படியே ஆகட்டும் மகாராஜா!” என்ற பிரதானி வெளியே சென்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு மீண்டும் உள்ளே வந்தார்.
‘மதுரையில் இருந்து நாயக்கரின் செய்தி என்னவாக இருக்கும். நேற்று மதுரையில் இருந்து வந்த நமது ஒற்றர் புதிதாக எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லையே’ என்று மன்னர் தமக்குள் யோசனையில் இருக்கும் பொது கோட்டைத் தளபதி திருமலை நாயக்கரின் ஓலையுடன் அங்கே வந்து சேர்ந்தார்.
மன்னர் பிரதானிக்குக் கண்காட்ட, அவர் ஓலையை வாங்கிப் படித்தார். பின்னர் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றார். அதைக் கண்ட மன்னரின் புருவங்கள் முடிச்சிட்டன. தாமே அந்த ஓலையை வாங்கிப் படித்தார்.
“இது பற்றி யோசித்துப் பதில் அனுப்பலாம். தூதுவர் காத்திருக்கட்டும்” என்று கோட்டைத் தளபதியிடம் சொல்லிவிட்டார்.
அவர் சென்றதும் தானும் இருக்கையில் இருந்து எழுந்து அரண்மனை நோக்கி நடந்தார். அரண்மனை வாசல் வரை அவருடன் இணைந்து நடந்த பிரதானி தனது இல்லம் திரும்பினார்.
உறக்கம் வராமல் மாளிகை முற்றத்தில் உலவிக் சொண்டிருந்தார் திருமலை ரகுநாத மன்னர். அமாவாசை இரவு நிலவில்லாத வானத்தில் இருந்த நட்சத்திரங்கள் மின்மினி போல மின்னிக் கொண்டிருந்தன. சற்று நேரம் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்த மன்னரின் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி எங்கோ ஓர் வெளிச்சம் கிடைப்பது போலிருந்தது. முற்றத்தில் உலவியது போதும் என்று மாளிகைக்குள் சென்றுவிட்டார்.
*******
மறுநாளைய பொழுது நன்றாகவே புலர்ந்தது. சேதுபதி மன்னரின் மாளிகை, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நிலைகளைக் கடந்து சென்றால் மாளிகையின் விசாலமான வரவேற்பு அறை. அறையெங்கும் ரம்யமான அகிலின் மணம் பரவிக்கிடந்தது. ஆங்காங்கே இருந்த சாளரங்கள், சுவரில் வரையப்பட்ட கலைநயம் மிக்க ஓவியங்கள் ஆகியவை ரகுநாத சேதுபதியின் கலை ஆர்வத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தன.
உள்ளே சென்றால் கருங்காலியால் செய்யப்பட்ட மேசையும் அதனைச் சுற்றி எதிரும் புதிருமாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளும் கூட அழகே வடிவாக இருந்தது.
மன்னரின் வருகைக்காகக் காத்திருந்த பிரதானி மன்னரைச் சிலாகித்தபடியே அறையைச் சுற்றித் தன் பார்வையை ஓட்டினார்.
“வாருங்கள் பிரதானியாரே! திருமலை நாயக்கரின் ஓலைக்கான பதில் அந்த சாளரத்தின் திரைச்சீலையில் இருக்கின்றதோ?” என்று வினவியவாறு சேதுபதி மன்னர் அங்கே வந்தார்.
மன்னரைக் கண்டதும் எழுந்து நின்ற பிரதானி அவரது ஹாஸ்யப் பேச்சை ரசித்துச் சிரித்தார்.
“தங்கள் கூற்றை என்று மறுக்க இயலாது மகாராஜா! தங்களது ஆற்றல் இங்கே அனைத்திலும் பரவிக் கிடக்கிறது” என்று புகழாரம் சூட்டினார்.
“அது சரி.. இப்போது தெளிவாகச் சொல்லுங்கள். நாயக்கரின் ஓலைக்கு என்ன பதில் அனுப்பலாம்?” என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் அமர்ந்தார். பிரதானியையும் அமருமாறு சைகை செய்தார்
நாற்காலியின் மேல் ஓர் ஓலைச் சுவடியை எடுத்து வைத்து விட்டு பிரதானியின் பதிலுக்காகக் காத்திருந்தார். தனக்கு ஏற்பட்ட குழப்பங்கள் பிரதானிக்கும் இருக்கும் என்று மன்னர் அறிவார். அதை அவரது வாய்மொழியாக அறியக் காத்திருந்தார்.
“மகாராஜா! மதுரைப் பேரரசுக்கு ஆபத்து என்பது பாண்டிய மண்டலம் முழுமைக்குமே ஏற்படும் அபாயம் தான். மறவர் சீமையின் பெருமையை மதுரையில் நிலைநாட்ட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மதுரை மன்னரின் இக்கட்டான சூழ்நிலையில் ஒத்துழைப்பு வழங்குவது தான் மறவர்க்கு அழகு. அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
ஆனால் அதே சமயத்தில் திருமலை நாயக்கர் தொடர்பான பழைய நிகழ்வுகளை நாம் மறந்து விட முடியாதே. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே திருமலை நாயக்கர் சுயநலவாதிகள் இருவரின் (இராமப்பய்யன் மற்றும் தம்பித் தேவன்) கூற்றுப்படி சேது நாட்டின் மீது படையெடுத்து தங்கள் அம்மான் தளவாய் சேதுபதி மன்னரைச் சிறையெடுத்துச் சென்றது நினைவுக்கு வருகிறதே. மறவர் சீமையில் அந்நாட்களில் ஏற்பட்ட உயிர் சேதமும் பொருட்சேதமும் கணக்கில் அடங்கா. மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்புவதற்குள் சில ஆண்டுகள் கடந்து போனதே. இவையெல்லாம் எமது சிந்தனையைக் குழப்புகிறது மகாராஜா!”
“தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதே நேரத்தில் இன்னா செய்தாருக்கும் இனியவை செய்தலே மனிதப் பண்பு. பழமையை நினைத்துக் கொண்டே இருந்தால் நிகழ்காலமும் எதிர்காலமும் வீணாகி விடும். ஆதலால் மதுரை மன்னருக்கு உதவலாம் என்றே நினைக்கிறேன். உண்மை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்கேற்ப வீரர்களைத் திரட்டலாம்.”
“தெற்கே எட்டையபுரம் பாளையக்காரருக்கு ஆதரவாக மேலும் சிலர் அணிதிரண்டு இருப்பதாகக் கேள்வி மகாராஜா. நாம் எட்டாயிரம் படைவீரர்களுடன் சென்றால் அவர்களது முயற்சியை முறியடித்து விடலாம்.”
அந்தத் தகவலை ஓலையில் எழுதிய மன்னர் “திருமலை ரகுநாத சேதுபதி” என்று ஒப்பமிட்டு பிரதானியிடம் அளித்தார். “நமது படை சீக்கிரமே கிளம்ப ஏற்பாடு செய்யுங்கள். இந்த ஓலையை திருமலை நாயக்கரிடம் சேர்க்க ஏற்பாடு செய்துவிடுங்கள். விரைவில் எட்டையபுரம் பாளையக்காரருக்கு தக்க பதிலை அவரது மண்ணிலேயே அளிப்போம்” என்றார்.
“அப்படியே ஆகட்டும் மகாராஜா!” என்ற பிரதானி சற்றே தயங்கி நின்றார்.
எதற்காகவோ என்று சிந்தித்த போது மன்னருக்கு முதல் நாள் வந்த கவிராயரின் நினைவு வந்தது.
“கவிராயரை அழைத்து வாருங்கள்!” என்று உடனே உத்தரவிட்டார்.
சற்று நேரத்தில் கவிராயரை அழைத்துக் கொண்டு பிரதானி வந்து சேர்ந்தார்.
அவரைப் பார்த்த சேதுபதி இருக்கையில் இருந்து எழுந்து நின்று வணங்கினார். “வாருங்கள் கவிராயரே! இப்படி அமருங்கள்” என்று இருக்கையைக் காண்பித்தார்.
இருவரும் சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். பின்னர் மன்னர் தமது எட்டையபுர படையெடுப்பு பற்றி கவிராயரிடம் கூற மன்னரது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அவர் விடைபெற்று சென்றார்.
“இரண்டொரு மாதங்கள் கழித்து வாருங்கள் கவிராயரே. தங்கள் பாடல்களைக் கேட்க மிகவும் ஆவல் கொண்டிருக்கிறேன்” என்று அவருக்குத் தக்க சன்மானங்கள் கொடுத்து விடை கொடுத்தார் சேதுபதி.
அவர் சென்ற பின்பும் நேரம் போவதே அறியாமல் மன்னர் பிரதானியுடன் போர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மகாராணி வருகிறார் என்று அந்தப்புரத்தில் இருந்து செய்தி வந்து அவர்களது பேச்சைத் தடை செய்தது.
அதற்குள் மகாராணி மன்னரது அறைக்குள் வந்து விட்டார்.
“உச்சிப் பொழுதாகிவிட்டதே. இன்னும் சாப்பிடவில்லையே?” மகாராணியின் குரல் கவலையுடன் ஒலித்தது.
“அத்துணை நேரமாகிவிட்டதா? இதோ வருகிறேன் மகாராணி, பிரதானியாரே தாங்களும் மதிய உணவை முடித்துக் கொண்டே செல்லலாம்” என்று பிரதானி மையும் அழைத்துக் கொண்டு உணவு அறைக்கு சென்றார்.
******
எட்டையபுரம் பாளையக்காரருக்கு திருமலை நாயக்கர் சேதுபதி மன்னருக்கு உதவி கேட்டு ஓலை அனுப்பி இருக்கிறார் என்ற செய்தி சென்று சேரும் முன்பே இராமநாதபுரத்திலிருந்து மறவர் படை திருநெல்வேலி சீமையை நோக்கிப் புறப்பட்டுவிட்டது.
சேதுபதியின் படை எட்டையபுரத்தை நெருங்கிய வேளையில் தான் பாளையக்காரர் விவரம் அறிந்தார். போர் மரபின் படி ஓலை அனுப்பிய பின்னர் தான் போர் என்பதைக் கடைபிடிக்க சமயம் இதுவல்ல என்று சேதுபதி மன்னர் அறிவார். நாடு முழுவதும் கலகம் உண்டாக்குபவர்களை திடீரெனத் தாக்குவது தான் சிறந்த பாடமாக இருக்கும்.
வேறு வழியில்லாமல் தமக்கு ஆதரவு அளித்த பாளையக்காரர்களுக்கு செய்தி அனுப்பி விட்டு சேதுபதியைச் சந்திக்கத் தயாரானார் எட்டையபுரம் பாளையக்காரர். எட்டையபுரம் சீமையின் எல்லையில் இரு படைகளும் மோதிக் கொண்டன.
வலுவான மறவர் படையின் முன்பு பாளையக்காரரால் தாக்குப் பிடிக்க இயலாமல் போய்விட்டது. விரைவிலேயே அவர்கள் எட்டையபுரம் கோட்டையைக் கைப்பற்றி விட்டார்கள். அதன் பின்னர் வந்து சேர்ந்த மற்ற பாளையத்துக்காரர்கள் நிலைமையை உணர்ந்து பின்வாங்கி விட்டார்கள்.
எட்டையபுரம் பாளையக்காரரை சிறைப்படுத்தி மதுரைக்கு அழைத்துச் சென்றார் சேதுபதி. அங்கே திருமலை நாயக்கரிடம் எட்டையபுரம் பாளையக்காரரை மன்னிக்கும்படி சிபாரிசு செய்து அவருடைய பாளையத்தை அவருக்கே திரும்பக் கொடுக்கச் செய்தார்.
இன்னா செய்த தமக்கும் இனிதே செய்த சேதுபதியை பிரதானிகளின் மூலம் வரவேற்றார் திருமலை நாயக்கர். சேது நாட்டின் வளர்ச்சியை அவரால் இன்னும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
தன் முன்னே இருந்த திருமலை ரகுநாத சேதுபதியின் கம்பீரமான தோற்றமும் முகத்தில் காணப்பட்ட வெற்றிக்கான களிப்பும் திருமலை நாயக்கருக்கு ஒரு செய்தியைத் தெளிவாக எடுத்துரைத்தது. இனிமேல் மறவர் சீமையின் வளர்ச்சியை தன்னால் எதுவும் செய்துவிட முடியாது என்பது தான் அந்தச் செய்தி.
மதுரைப் பேரரசுக்குச் செய்த உதவிக்குப் பிரதி உபகாரமாக இனிமேல் சேது நாடு நாயக்கர் பேரரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்க வேண்டியதில்லை என்றும் சேது நாட்டைத் தன்னிச்சையாக ஆட்சி செய்து கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்தார்.
போரில் கிடைத்த வெற்றியாலும் தமது நாட்டிற்குக் கிடைத்த சுய அதிகாரத்தாலும் மகிழ்ந்தவராக நாடு திரும்பினார் திருமலை ரகுநாத சேதுபதி.
ஆனால் இந்தப் போர் மூலமாக கண்ணுக்குத் தெரியாத இரண்டு எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
பகைவர்க்கும் இரங்கிய பண்பாளரான சேதுபதி மன்னர் உள்நாட்டிலேயே தமக்கு எதிராகப் பகை ஒன்று வளர்ந்து வருவதை அறியாமலே போனார். அந்தப் பகை மன்னரின் உயிர் வாங்கும் முயற்சியில் இறங்கிய போது நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் -4
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.