• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 4

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
18
0
1
chennai
பராசக்தியின் கன்னி வடிவமான சப்த கன்னியர் வழிபாடு என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. பல இடங்களில் ஏழு செங்கற்களை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டுப் படையல் வைப்பதையும் பார்த்து இருக்கிறோம். அவை யாவுமே 'சப்த மாதாக்கள்' எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான்.



பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனப் பெயர்களைக் கொண்ட சப்த மாதாக்கள் நம்முடைய எல்லா வேண்டுதல்களையும் விருப்பங்களையும் இன்றும் நிறைவேற்றி வருகிறார்கள். சக்தியின் அம்சமாக இவர்கள் தோன்றியதன் காரணம் என்ன, இவர்களின் சிறப்புகள் என்னென்ன என்பதைக் காண்போம்.



பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் வேண்டி வாங்கினார்கள் சண்ட, முண்டர் எனும் இரு அரக்கர்கள். அவர்கள் பூவுலக, தேவலோக மாந்தர் எல்லோரையும் கொடுமை செய்தார்கள். அன்னை ஆதிசக்தியின் அருளைப் பெற்ற காத்தியாயன முனிவரையே கொடுமை செய்யத் துணிந்த நிலையில், பராசக்தி கொதித்தெழுந்து அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள். அப்போது அசுரக் கூட்டத்தை ஒழிக்க தன்னிலிருந்து ஏழு கன்னியர்களை உருவாக்கினாள். சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாகிய ஏழு கன்னியர்கள் அசுரக்கூட்டத்தை அழித்து, அன்னை பராசக்தியின் ஆசியைப் பெற்றனர்.



பூவுலகில் இந்த சப்த மாதாக்களும் மக்களைக் காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர். சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும் விதமாக இருந்து வருகின்றன.



ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோத்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளன.



நாம் பேச்சு வழக்கில் சொல்லும்பொழுது சப்த மாதர்கள், சப்த கன்னியர்கள் இரண்டையும் ஒன்றாகத்தான் நினைத்துக் கூறுகிறோம். புராணங்கள் போற்றும் சப்த மாதர்களும் சரி, கிராமிய தெய்வங்களான கன்னிமார்களும் சரி ஏழு பேர் கொண்ட தொகுதிதான் அவர்கள். இது அவர்களுடைய ஒற்றுமை. ஆனால், அனேக வேற்றுமைகளும் இவர்களுக்குள் இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.



சப்த கன்னியர் அல்லது சப்த மாதர் என்று அழைக்கப்படுபவர்கள் பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆவர்.



பிராம்ஹி, பிரம்மாவின் அம்சம். சப்த கன்னிகளில் முதலில் வீற்றிருப்பவள் பிராமி தேவி. இவர் பிரம்மனின் வடிவத்தில் நான்கு தலைகளைக் கொண்டு இருப்பவள். மேலும் பிரம்மனுக்கு இணையான சக்தியை தன்னகத்தே கொண்டவள். இவள் மேற்கு திசைக்கு அதிபதியாக விளங்க கூடியவள்.



மகேஸ்வரி, சிவனின் அம்சம். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள். அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள்.



கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.



வைஷ்ணவி என்பவர் விஷ்ணுவின் அம்சமாவார். இவருக்கு நாராயணி என்ற மறுபெயருண்டு. இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக் காணப்படுகிறாள் .



வாராஹி , வராஹ மூர்த்தியின் அம்சம். வராக முகம் கொண்டவள். பெரிய சக்கரத்தைக் கரங்களில் கொண்டவள். எட்டுக் கரங்களை உடையவள். கோபத்தின் எல்லையைக் கடந்தவள். ஆனால், அன்பிலோ அனைவருக்கும் ஆதாரமானவள். அம்பிகையின் படைக்குத் தளபதியாக இருக்கக் கூடியவள். மங்கல மய நாராயணி என்றும் அழைக்கப்படுபவள்.



இந்திராணி, இந்திரன் அம்சம் உடையவள். இரண்டு கண்கள் உடையவள். அழகிய ஆடை பூண்டவள். வரதம், அபயம் உடையவள்.இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் சக்தியையும் , இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள். யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள்.

.

சாமுண்டி, சிவன் அம்சம் உடையவள். மூன்று கண்களும் சூலம், கட்கம், அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட எட்டுக் கைகளும் உடையவள். ஜடாமகுடம் உடையவள். மகிடவாகனம் உடையவள்.



பூவுலகில் இந்த சப்த மாதாக்களும் மக்களைக் காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர். சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும் விதமாக இருந்து வருகின்றன.



சப்த மாதர், கன்னியர்களை வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்பல.

கலை, கல்வி, சாந்தம் பெருக, குழந்தைப் பேற்றுக்கு, எதிரிகளை வெல்லுவதற்கு, எல்லாவிதமான தடைகளைப் போக்குவதற்கு, செல்வம் தழைக்க, திருமணம் இனிதே நடைபெற என்று பல்வேறு பலன்களை வேண்டி இத்தெய்வங்களை வணங்குகிறார்கள். காளிதாசனின் குமார சம்பவத்தில் சப்த கன்னியர் சிவனின் பணிப் பெண்டிர் என்ற குறிப்பு உள்ளது.



சப்த மாதர்கள், சப்த கன்னியர்கள் நடுவில் சில வேறுபாடுகள் இருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.



சப்த கன்னிமார்கள் இரண்டு கரங்களுடன் இருப்பவர்கள். ஒரு கையில் மலர் ஏந்தி, மறு கையைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் பொதுவாக கிழக்கு நோக்கியும் அபூர்வமாகத் தெற்கு நோக்கியும் கோயில் கொண்டிருப்பர். கன்னிமார்கள் எப்போதும் தனியாக ஒரே வரிசையில் இருப்பார்கள்.



சப்த மாதர்கள் தெய்வ நிலையில் தோன்றியவர்கள். நான்கு கரங்களுடன் இருப்பவர்கள். அந்த கைகளில் போர்க் கருவிகளை ஏந்தியவர்கள். இவர்கள் வடக்கு நோக்கிக் கோயில் கொண்டிருப்பவர்கள். இவர்கள் சன்னிதியின் முன்னே சிங்கம் அல்லது வேதாளம் இருக்கும். சப்த மாதர்கள் தனியாக இருக்க மாட்டார்கள். இவர்களின் வரிசையில் ஒரு புறம் விநாயகர் மேற்கு நோக்கியும், வீரபத்திரர், சாஸ்தா, யோகசிவன் ஆகிய மூவரில் ஒருவர் கிழக்கு நோக்கியும் அமர்ந்து இருப்பர்.



எப்படிப்பட்ட தோற்றம் கொண்டவர்கள், இவர்களுக்குள் என்ன ஒற்றுமை, என்ன வேறுபாடு என்று ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவையில்லை. அரக்கர்களை அழித்த தளபதிகள் மற்றும் உலக மாந்தரைக் காப்பதற்காக சிவனால் பூவுலகிற்கு அனுப்பப் பட்டவர்கள் என்கிற நம்பிக்கையே போதுமானது.



சப்த கன்னியரை வழிபட்டு வாழ்வில் நலம் பெறுவோம். நவராத்திரிப் பண்டிகையில் அவர்களுடைய அருளை வேண்டிப் பெறுவோம்.



இந்த ஏழு தேவியரும் தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் வந்தவர்கள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள். இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்



அதேபோல், சப்தகன்னியரை வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.



புவனா சந்திரசேகரன்.