• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 5

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
27
0
1
chennai
ஐந்தாவது நாளான இன்று ஸ்ரீ லலிதா தேவியின் மகாத்மியத்தைப் பற்றிப் பார்க்கலாம். அன்னையின் லீலைகள் நம்மை பிரமிக்க வைக்கும் அளவு அற்புதமானவை. அவற்றில் சிலவற்றைப் பற்றியாவது தெரிந்துகொள்ளலாம்.



லலிதாவின் 1000 நாமங்களைக் கொண்ட லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், அனைத்து மரபுகளைப் பின்பற்றுபவர்களாலும் போற்றப்படும் சிறந்த ஒன்றாகும். பிரம்மாண்ட புராணத்தில் காணப்படும் இந்த பாடலில் எந்த ஒரு சடங்கையும் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.



பக்தியற்ற மன நிலையை மாற்றி மக்களை பக்தர்களாக மாற்றி தேவியின் லீலையில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் அனுபவிக்க உதவுகிறது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தெய்வீகத் தாயை "சிவ சக்தி ஐக்ய ரூபிணி" என்று விளக்குகிறது. உலகின் யதார்த்தம் குறித்த எதிர்மறைக் கருத்துக்கள் ஸ்ரீ லலிதா வழிபாட்டில் பொருத்தமான பதிலைப் பெற்றுத் தோல்வியடைகின்றன.



லலிதா என்ற சொல்லுக்கு விளையாட்டு என்று ஒரு பொருளும் வருகிறது. தாய் எல்லாவற்றிலும் வியாபித்திருப்பதால், உலகை ஒரு போர்க்களமாக அல்ல, மாறாக தேவியின் விளையாட்டு மைதானமாகவே நாம் கருதலாம். லலிதா கோட்பாடு என்பது ஸ்ரீலலிதா தேவியை சித்ஸ்வரூபினி மற்றும் ஆனந்தரூபினி (தூய மற்றும் பேரின்ப உணர்வு) என்று விளக்குகிறது. பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்துச் செயல்களும் அவளுடைய விளையாட்டே (லீலை) தவிர வேறு ஒன்றுமில்லை. மனிதர்கள் உலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவியின் அருள் துணை நிற்கிறது. அவளுடைய குழந்தைகள் தங்கள் தாயின் பக்கத்தில் விளையாடுவது போல, உலகத்தில் வசிக்கின்றார்கள். அனைவருக்கும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்தபின்னர் இறுதியாக தெய்வீகத் தாயின் மடியில் நித்திய ஓய்வைக் காண்கிறார்கள்.



பண்டைய காலத்தில் தாரகன் என்ற ஒரு சக்திவாய்ந்த அசுரன் இருந்தான். அவன் தன் ஒப்பற்ற சக்தியாலும் வலிமையாலும் பிரபஞ்சத்தை ஆண்டான். ஸ்கந்தனால் மட்டுமே தாரகனை அழிக்க முடியும் என்று தேவர்களின் கூட்டம் தீர்மானித்தது. ஆனால் சிவபெருமானின் மோனத்தால் ஸ்கந்தனின் பிறப்பு தாமதமானது. அன்பின் கடவுளான மன்மதன், சிவனைத் தனது ஆழ்ந்த தியானத்திலிருந்து எழுப்ப நியமிக்கப்பட்டான். மூன்று கண்களைக் கொண்ட இறைவனின் மீது காமத்தின் மலர்த் தண்டுகளை அம்புகளாக்கி எய்தான் மன்மதன். சிவன் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் எழுந்தார், தனது மூன்றாவது கண்ணின் சுடரைத் திறந்து மன்மதனை எரித்தார். சிவனின் மற்றொரு சுடர் ஸ்கந்தனைப் பெற்றெடுத்தது. பின்னர் தாரகாசுரனை அழித்தார்கள்.



மன்மதன் இல்லாததால் படைப்பு நிறுத்தப்பட்டது. சிவபெருமான் மன்மதனின் மறுபிறவிக்காக ஆசீர்வதித்தார்,



பரமனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்னிப் பிழம்பினால் மன்மதன் சாம்பலாகக் கிடந்தான். இந்த நேரத்தில் சிவகணங்களில் ஒருவரான சித்ரகர்மன் என்பவர் விளையாட்டாக, அங்கு குவிந்து கிடந்த மன்மதனின் சாம்பலை ஒன்று திரட்டி அதில் ஒரு மனித உருவம் செய்து ஈசனிடம் காட்டினார். பரமனின் லீலா வினோதம் அலாதியானது. மூன்றாவது கண் எதை எரித்ததோ, அதை மற்ற இரு கண்களும் பார்த்தபோது அந்த சாம்பல் உருவம் உயிர் பெற்றது. பிறக்கும்போதே " பண்ட் பண்ட்" என்று சிரித்துக்கொண்டே பிறந்தது அந்த உருவம். அதனாலேயே பண்டாசுரன் என்று பெயர் பெற்றது.



அவனைத் தன் மகனாக ஏற்ற சித்ரகர்மன் , ஈசனை வணங்கச் செய்து, அவனுக்கு மிக அரியதான சத ருத்ரீய மந்திரத்தை உபதேசம் செய்து ருத்ரனை நோக்கி, தவம் செய்ய அறிவுறுத்தினார்.



பண்டாசுரனின் தவத்தில் மகிழ்ந்த சர்வேஸ்வரன் அவன் முன் தோன்றி, வேண்டும் வரம் கேட்குமாறு கூறினார். உடனே பண்டாசுரனும் ,”என்னை எதிர்க்கும் எதிரியின் பலம் பாதியாக குறைந்து, அது என்னை அடைய வேண்டும், அவனுடைய எந்த ஆயுதத்தாலும் எனக்குத் தீங்கு நேரக்கூடாது” என்ற வரம் கோரினான். கருணாமூர்த்தியான இறைவன் அவனுக்கு வரத்தையும் தந்து, அதற்கு அதிகமாகவே "அறுபதாயிரம் ஆண்டுகள் உன் ராஜ்யத்தை ஆட்சி செய்வாய்” என்றும் ஆசி வழங்கி விட்டார்.



வரம் பெற்று விட்ட பண்டாசுரன், மிகவும் மகிழ்ந்து அட்டகாசம் புரியலானான். ருத்ரனின் கோபாக்னியில் உதித்தாலும்,. காமதேவனின் சாம்பலில் தோன்றியவன். ஆதலால் அவன் குரூர குணத்துடன் அசுரனாகவும் இருந்தான். பண்டாசுரன் தனது அதீதமான சக்தியால், தன் இடது தோளிலிருந்து விசுக்ரன் என்னும் மஹா அசுரனையும், வலது தோளிலிருந்து விஷங்கன் எனும் அரக்கனையும் தன் சகோதரர்களாக தோற்றுவித்தான் . இது அல்லாமல் தூமினி என்ற சகோதரியும் தோன்றினாள்.



அசுரர்களுக்கெல்லாம் மகா அசுரனாக ஒருவன் தோன்றி விட்டான் என்று மகிழ்ந்துபோன அசுரகுருவான சுக்கிராச்சாரியார், பண்டாசுரனை ஆசீர்வதித்து அவனுக்கென்று ஒரு ராஜ்ஜியம் அமைக்கப் பணித்தார். பண்டனும் அசுர சிற்பியான மயனை வரவழைத்து, அமர லோகத்துக்கு இணையான ஒரு நகரத்தை உருவாக்கும்படி உத்தரவிட்டான். மயனும் முன்பு அசுரலோகம் எங்கே இருந்ததோ , அதே இடத்தில் "சோணித புரம்" என்னும் ராஜ்யத்தை கணப்பொழுதில் உருவாக்கினான். பண்டாசுரனின் தலைநகரம் "சூன்யக பட்டினம் " என்று அழைக்கப்பட்டது. செல்வச் செழிப்பும், சௌந்தர்யமுமாக பண்டாசுரனின் நகரம் அமராவதிக்குச் சமமாக விளங்கியது.



சுக்கிராச்சாரியார் அவனுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் தரக்கூடிய ஒளிமிக்க சாமரங்களையும், எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத வலிமையைத் தரும் வெண்கொற்றக் குடையையும், பேரொளி மிக்க ஸ்வர்ண சிம்மாசனத்தையும் அளித்து, அழிவே இல்லாத பிரகலாதனின் பெருமை மிக்க கிரீடத்தையும் சூட்டி மகிழ்ந்தார். பண்டாசுரனை அசுர லோகத்தின் தலைவனாக முடிசூட்டி வாழ்த்தினார்.



முடிசூட்டப் பெற்றதும் முதல் வேலையாக அமர லோகத்தை கைப்பற்றினான் பண்டாசுரன். .

இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பண்டனைப் பணிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து அடிபணிந்து குற்றேவல் புரியலாயினர். அசுரரின் ராஜ்ஜியமே அனைத்து உலகங்களையும் ஆளத் துவங்கியது. விசுக்ரனும், விஷங்கனும் ,யுவராஜாக்களாக அறிவிக்கப்பட்டனர். ஸம்மோஹினி, குமுதினி, சித்ராங்கி ,ஸுந்தரி என்னும் நால்வரை மணந்து, பண்டன் பேரரசனானான்



பண்டாசுரன் மூன்று உலகங்களிலும் உள்ள தேவர்கள், மனிதர்கள் மற்றும் சகல ஜீவராசிகளின் ஜீவசக்தியை அழித்து, உலகத்தை ஸ்தம்பிக்கச் செய்தான். இதற்கு மேலும் துன்பங்களை பொறுக்க முடியாமல், தேவர்கள் பிரம்மனின் தலைமையில் மாதவனை நாடிச் சென்றனர். மாதவன் நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டார். அவர் தேவர்களைப் பார்த்து, “நானும்,

பிரம்மனும், ருத்ரனும் உலகத்தின் காரண புருஷர்கள். ஆனால் எங்களையே

பண்டாசுரனின் தொல்லைகள் செய்துவருகிறான் என்பதால், இனி எங்களால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் வல்ல பரம்பொருளான அம்பிகையே, இனி நம் அனைவருக்கும் துணை. அவளை நாம் சரண் அடைவோம். அதுவரை சிறிது காலம் பண்டாசுரனைத் திசை திருப்ப முயற்சிக்கிறேன்” என்று சொல்லி, தனது மாயையால் பேரழகியான ஒரு மாய மோஹினியைப் படைத்தார்.



அவளையும் அவளுக்குத் துணையாக பல அப்ஸரஸ் கன்னிகைகளையும் பண்டனை மயக்கும்படி அனுப்பி வைத்தார் . மாயவனின் திட்டம் சரியாகவே பலித்தது. அழகிகளைக் கண்டதும் அசுரர்கள் தடுமாறினார்கள். மாயா மோஹினியைக் கண்டு பண்டாசுரன் அதி மோஹம் கொண்டான். அவனுடைய சிவபக்தி சின்னாபின்னமானது. குல குருவான சுக்கிராச்சாரியாரையே அவமதிக்கும் அளவுக்கு அசுரர்கள் மனம் மோஹத்தால் மயங்கி கிடந்தது.



ஒரு வழியாக பண்டனைத் திசை திருப்பிய பிறகு நாராயணன், தேவர்களிடம், “ நமக்கு இந்த நிலையில் பிரம்மாண்டங்களையும் கடந்து விளங்கும் பரம் பொருளான மகா சம்புவே அனைவரையும் காப்பாற்ற வல்லவர். அவரே ஆதி பராசக்தியின் அருகில் உறைபவர். சர்வ வல்லமை பொருந்தியவர். அவர் நமக்கு வழி காட்டுவார்” என்று கூறி அனைவரையும் அழைத்துச் சென்றார். பிரம்மாண்டத்தின் எல்லையை அடைந்த தேவர்கள், திக் கஜங்களின் துணை கொண்டு ஒரு பிளவை ஏற்படுத்திக் கடந்து சென்றார்கள். பஞ்சபூதங்களின் தொடர்பற்ற அண்ட வெளியைக் கண்டார்கள்.



அங்கே சூலமும் கபாலமும் ஏந்திய மகா சம்பு காட்சி அளித்தார். அக்ஷ மாலையும் புத்தகமும் கையில் ஏந்தியபடி ஆனந்த பைரவியுடன் கூடிய ஆனந்த பைரவரும் இவரே என்று அவரைத் துதித்தார்கள் அனைவரும்.



அவர் தேவர்களைப் பார்த்து, “ பிரளயத்துக்கு ஒப்பான துன்பம் தோன்றியுள்ள நிலையில், இதிலிருந்து நம்மை மீட்க லலிதா பரமேஸ்வரியால் மட்டுமே முடியும். தாயுள்ளம் கொண்ட ஸ்ரீலலிதா பரமேஸ்வரி தன் குழந்தைகள் துன்பப்படுவதைச் சிறிதும் பொறுக்க மாட்டாள். கணப்பொழுதில் துயரைப் போக்கி ஆனந்த வாழ்வை அருளும் வல்லமை அவளுக்கு மட்டுமே உண்டு. தூய உள்ளத்துடன் அவளை நோக்கிக் கடுந்தவம் செய்து மன்றாடுவோம் வாருங்கள்”

என்று கூறினார்.



அவரே யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். அம்பிகையை மனதில் தியானித்து ஒரு மகா யாகம் புரியத் தொடங்கினார்கள் அனைவரும். கடல்கள் எழும் ஜனசமுத்திரம் வற்றிப்போய் அந்தக் குழியே யாககுண்டம் ஆனது. மற்ற ஆறு கடல்கள், யாகத்தின் நெய் ஆயின. மகா சம்புவின் ஞானாக்னி, சிதாக்னியாக மாறி அவருடைய நெற்றிக்கண் மூலமாக ஜொலித்தது. ஆறுவகை சிருஷ்டிகளும் யாகத்துக்குப் பலியாயின. வானத்துத் தாரகைகள் பூக்களைப் போல் அலங்கரிக்கப்பட்டன. யாகத்தில் பயன்படுத்தப்படும் யாகக் கரண்டியாக, ப்ரளய காலத்து மேகங்கள் ஒவ்வொன்றும் மாறின. யாகம் மகத்தான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.





ஸ்ரீ லலிதாவின் கதை நாளையும் தொடரும்.



புவனா சந்திரசேகரன்.