• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 5

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
422
5
43
india
அத்தியாயம் - 5



"வாட்?? கம் அகெயின்!"



"ஏன் காது கேட்கலையா? சத்தமாத் தானே சொன்னேன்'



"ஏய்! என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நீ ரொம்ப புத்திசாலி தான், ஒத்துக்கிறேன். அந்த மகாப் புத்திசாலித்தனத்தை எல்லாம் இப்படியா யூஸ் பண்ணுவ? ஏதோ சாக்லேட் வாங்கலாம்ற மாதிரி வீடு வாங்கிடலாம்னு சொல்ற. அதுவும் தனி வீடு, ஜஸ்ட் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்ல. காசுக்கு எங்க போக? ஏதாவது பேங்க்க கொள்ளை அடிச்சா தான் உண்டு. ஒரு வேளை, எனக்குத் தெரியாம எங்கேயாவது பணத்தைப் பதுக்கி வச்சிருக்கியா? இப்போ வீட்டுல ஒரு சம்பளம் தான், ஞாபகம் இருக்கா உனக்கு" என்று படபத்தவன்



'இவள வேற வேலை தேடுன்னு சொல்லி இருக்கணுமோ? வீட்டுல உட்கார்ந்து இஷ்டத்துக்குக் கோணல் மாணலா யோசிக்கிறா' என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.



அவ்வளவு பெரிய லெக்சர் கொடுத்தவனை அவனது வார்த்தைகளாலேயே மடக்கினாள் அவனது மனைவி. அவனது மைன்ட் வாய்ஸையும் கேட்ச் செய்து அவள் பதில் சொன்ன விதத்தில் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டான் விஷ்ணு.



"ஹூம்.. இதோ வந்துடுச்சில்ல, நான் வேலைக்கு போகலேன்ற வார்த்தை. இப்போதைக்கு ஒருத்தர் சம்பளம் தான், அது எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு. அதனால தான் என்னால என்ன பண்ண முடியும்னு யோசிக்கிறேன்"



"என்ன பண்ணிட முடியும்? அவனை ஹாஸ்டல்ல விடலாம். வேற எதுவும் யோசிக்கவே வேண்டாம்"



"அதெப்படி, இது உங்க அப்பா இருக்கும் போதே யோசிச்ச விஷயம் தானே. நாலு வருஷம் முன்னாடியே ஸ்டார்ட் பண்ணின ப்ராஜெக்ட். ஊர் முழுக்க, இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரைக்கும் எத்தனை வீடு பார்த்தோம். அப்பவே, இந்த ரேட் தான் இருந்தது. இப்போ மட்டும் ஏன் விலை ஜாஸ்தின்னு யோசிக்கணும்"



"அப்பா இருந்த போது இடம் பத்தலை. அவருக்கும் பசங்களுக்கும் ப்ரைவசி தேவைன்னு பார்த்தோம். அதான் இருக்கிற சேவிங்ஸ் எல்லாம் உடைச்சு மொத்தமா வேற எது எதுக்கோ செலவழிச்சாச்சே. இப்போ வெறுங்கைய வச்சு முழம் போடச் சொல்றியா?"



அவள் பதில் எதுவும் சொல்லாமல் தீர்க்கமாக பார்க்க, "சரி ... சரி ... ஏற்கனவே ஒரு தடவை செஞ்சது தான். ஆனால் அப்போ வயசு இருந்தது, மனசுலயும் ஒரு வைராக்கியம் இருந்தது. அதெல்லாம் தாண்டி நமக்குன்னு ஒரு இடம் கட்டாயமா வேண்டியது இருந்தது. இப்போ அதெல்லாம் உனக்கு இருக்கோ இல்லையோ எனக்குச் சுத்தமா இல்லை. அதனால இந்தப் பேச்சை இதோட விடு. நமக்கு இந்த வீடு போதும், பசங்க காலத்தில அவங்க வாங்கும் போது பாத்துக்கலாம்"



அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று அமைதியாகி விட்டாள் வசுதா. 'இப்போது மட்டும் என்ன? வேலை இல்லை கிளம்புன்னு சொல்றதுக்கு இவர் என்னை மாதிரி அமெரிக்கா காரன் கிட்டயா வேலை பார்க்கிறார்? கால் காசு சம்பளம்னாலும் கவர்மென்ட் சம்பளம்... அவ்வப்போது உறவினர் பலரின் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்வது போல ஏகப்பட்ட பாராட்டுக்கள். ஓடி ஓடி உழைப்பவருக்கு ஏன் தன்னம்பிக்கை இல்லாமல் போய் விட்டது?'



ஒரு தடவை வீட்டைச் சுற்றி வந்தாள். உட்கார இடம் இல்லாமல் எல்லா நாற்காலிகளிலும் துணிமணிகள், புத்தகங்கள் என்று நிறைந்து வழிந்தது. டைனிங் டேபிள் சாப்பிடுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளுக்கும் உபயோகமாக இருந்தது. முக்கியமாக, அர்ஜூனின் டிராஃப்டிங் டேபிளாகவும் தற்காலிகமாகச் செயல் பட்டு வருகிறது. அதை வாங்கினால் எங்கே வைப்பது, அதான் ஈஸி மெத்தட்(!)



பொதுவாக இவர்கள் வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். வசுதாவின் தண்டுவடம் பாதிக்கப்பட்ட போது தரையில் அமரக் கூடாது என்று மருத்துவர்கள் போட்ட தடா உத்தரவைச் சிரமேற்கொண்டு ஆறு பேர் அமரக்கூடிய வகையில் வாங்கிய டேபிள்.



விஷ்ணுவின் தந்தையும் அவர்களுடன் இருந்த காலம். அலுவலகம் கிளம்பும் போது அவருக்கான உணவை மேசையில் எடுத்து வைத்து விடுவாள். ஆரம்பத்தில், அனைவரும் சேர்ந்து உண்ணும் இரவு நேரங்களில் அனைவருமே டைனிங் டேபிளைப் பயன் படுத்தினர். ஆசை அறுபது நாள் என்பது அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் மாறி, சுமார் இரண்டு வருடங்கள் தொடர்ந்தது. விஷ்ணுவின் தந்தை மறைவுக்குப் பின் அவரவர் இஷ்டம் போல நினைத்த இடத்தில் நினைத்த விதத்தில் சாப்பிட டைனிங் டேபிள் 'மல்டிபர்பஸ் யுடிலிடி" என்றானது.



ஏற்கனவே இருந்த ஊறுகாய் வகைகள் பொடி வகைகளோடு இப்போது அர்ஜூனின் ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களும் அந்த டேபிளில் இடம் பிடித்தது. அவனது இடத் தேவை டைனிங் டேபிளோடு முடிந்து விடவில்லை. கண்ணில் பட்ட காலியான இடங்கள் எல்லாமே அவனது பொருட்கள் தான். கண்ணாடியில் செய்த மாடல்களும் இதில் அடங்கும்.



"மா! அம்மாஆஆஆ! பாத்து வாம்மா. உடைச்சிடாத. இந்த இடம் உன்னோடதுன்னு பட்டா போட்டு கொடுத்திருக்கா? அந்தச் சேர்ல போய் உட்காரு மா!"



"டேய் ஆதி! எருமை! உன்னைத் தான் டா! உன் பேக் வைக்க வேற இடமே கிடைக்கலையா? என் ப்ராஜெக்ட் வொர்க் மட்டும் ஏதாவது ஆகட்டும், அப்புறம் இருக்கு உனக்கு"



தாயையும் தம்பியையும் மிரட்டிக் கொண்டு இருந்தவனது அதிகாரம் தந்தையிடம் பயன் படவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு வந்த விஷ்ணு, கால் வைக்க இடமில்லாமல் எங்கு பார்த்தாலும் தெர்மகோல் அட்டைகள் ஆகவும் சார்ட் பேப்பர்களாகவும் இருந்ததைப் பார்த்து டென்ஷன் ஆனான். "அர்ஜூன்!!!" பல்லைக் கடித்தபடி அவன் கத்தியதில் அரைத் தூக்கத்தில் இருந்த வசுதா எழுந்து ஓடி வர "வந்துட்டார் யா, நாட்டாம" என்று முணுமுணுத்தான் அர்ஜுன்.



"நீ படிக்கிற லட்சணத்துக்கு வீடு பூராவும் குப்பை ஆக்குவியா? இன்னும் இரண்டு நிமிஷத்தில இந்த இடம் எல்லாம் க்ளீன் ஆகி இருக்கணும். மேக் இட் ஃபாஸ்ட்" என்று உறுமி விட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்தான்.



அவனது சீமந்த புத்திரனோ, தகப்பனது உறுமலைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனது வேலையைத் தொடர்ந்தான்.



"அர்ஜூன்! நான் என்ன சொல்லிட்டு போனேன் என்ன பண்ணி வச்சிருக்க? ஏன் டா இப்படி வீட்டை குப்பை ஆக்குறீங்க? இப்போ நான் எங்க உட்கார்ந்து சாப்பிடுறது?" உடை மாற்றி ரெஃபிரஷ் செய்து கொண்டு வந்த விஷ்ணு அர்ஜூனைக் காணாமல் தேட, அவன் அந்தக் குப்பைக் குவியலின் நடுவில் இருந்து எட்டிப் பார்த்தான்.



"பா! எனக்கு இன்டர்னல் எக்ஸாம்ஸ் இருக்கு. நிறைய வொர்க் இருக்கு பா. இவ்வளவு ஸ்பேஸ் வேணும் எனக்கு, அப்பதான் அந்த வொர்க்கெல்லாம் கம்ப்ளீட் பண்ண முடியும். இதுக்குன்னு தனியா இடம் இல்லை, அதான் இருக்கிற இடத்தில வொர்க் பண்றேன். அப்பாஆஆ பார்த்து பார்த்து மேல் படாதீங்க உடைஞ்சு போய்டும்"



"டேய் என்னடா இது அநியாயமா இருக்கு? நான் தூங்குறதுக்குத் தான் வீட்டுக்கு வரேன், அது உனக்கு பொறுக்கலையா?

இப்படி டிவி முன்னாடி உட்கார்ந்து வேலை பார்த்தேன்னா என்ன அர்த்தம்?"



"அப்பா! அதோ இருக்கு பாருங்க உங்களோட ஆஸ்தான சேர், அதோட ஆஸ்தான இடத்தில(!) அங்க போய் செட்டில் ஆகிக்கோங்க. நான் எவ்வளவு பிளான் பண்ணி உங்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து இருக்கேன் என்னைப் போய் இப்படி திட்டறீங்களே?"



"சரி… சரி… பேசாமல் வேலையைப் பாரு. முடிச்சிட்டு சீக்கிரம் தூங்குற வழியைப் பாரு. அப்படியே எட்டி அந்த டிவிய ஆன் பண்ணு" பத்து நிமிடமே என்றாலும் டிவியில் ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்காமல் அவன் தூங்கியதாகச் சரித்திரமே இல்லை. அது போல இன்றும் கேசினோ ராயலில் ஜேம்ஸ் பாண்ட்டை ஆயிரமாவது தடவையாகப் பார்க்க ஆரம்பித்தவனின் கவனம் டிவியில் இருந்திருக்கவில்லை என்பது பின்னர் புரிந்தது.



வழக்கமாக சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது என்று படுக்கையில் அமர்ந்தவாறு மொபைலில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் என்று அலசுபவன், அன்று மொபைலை ஓரமாக வைத்துவிட்டுப் படுத்து விட்டான். கைகளைக் கோர்த்து, தலைக்கடியில் வைத்து விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனை வினோதமாகப் பார்த்தாள் அவனது தர்ம பத்தினி.



'என்ன தெரிகிறது?' என்று தானும் உடன் சேர்ந்து விட்டத்தைப் பார்த்தவளுக்கு வெறும் சுவர் தான் தெரிந்தது, ஒரு வேளை ஏதாவது ஞான திருஷ்டி வேண்டுமோ??



அவள் தன்னைக் கேலி செய்வதை அறிந்து, "ம்ச் … வசு!" என்று எழுந்து அமர்ந்தான் விஷ்ணு.



அப்போதும் எதுவும் கேட்டாள் இல்லை, 'எப்படி இருந்தாலும் பூனைக்குட்டி வெளியே வந்து தானே ஆக வேண்டும்' என்று அவனது திருவாய் மலர்ந்து அருளும் நேரத்திற்காகக் காத்திருக்கலானாள்.



"வசு! அர்ஜூன் இப்போ தான் காலேஜூக்குள்ள அடி எடுத்து வச்சிருக்கான், அதுவும் அஞ்சு வருஷ கோர்ஸ். அவன் யுஜி முடிக்கும் போது தான் சின்னவன் ப்ளஸ் டூ முடிப்பான். நமக்கு அஞ்சு வருஷம் ப்ரீத்திங் பீரியட் கிடைக்கும். பேசாமல் வேற வீடு பாத்துடலாமா?"



அவன் பேச ஆரம்பித்ததும் படுத்தவாக்கிலேயே, கடனே என்று காதை மட்டும் கொடுத்திருந்தவள் அவனது கடைசி வார்த்தைகளில் துள்ளிக் குதித்து எழுந்தாள். அவளது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம். காதுகளை நன்றாகத் தேய்த்துக் கொண்டவளைப் பார்த்தும் அவனது முகம் மாறவே இல்லை.



"என்ன திடீர்னு இப்படி ஒரு ஞானோதயம்?"



"நானும் நீ சொன்ன நாளா யோசிச்சிட்டே தான் இருக்கேன். ஹவுஸிங் லோன் கூட எவ்வளவு கிடைக்கும்னு பாத்துட்டேன். நீ போடற பட்ஜெட்ல பாதி தான் வரும். மீதிக்கு என்ன செய்ய முடியும்னு தான் தெரியலை. வேற எந்த ஆப்ஷனும் கிடைக்கலேன்னா, இந்த வீட்டை விக்கிறதைத் தவிர்க்க முடியாது. அதான் ஒரே கன்ஃப்யூஷன்" அவனது குழப்பத்தை அவளுக்கும் கடத்தி விட்டான்.



"ஓ…. அப்படி ஒண்ணு இருக்கோ? நான் இதை யோசிக்கவே இல்லை. எனக்கு வந்த செட்டில்மென்ட் வச்சு அட்வான்ஸ் கொடுத்திடலாம். வேலையை விட்டு இரண்டு மாசத்துக்கு மேல ஆச்சு. என் பிஎஃப் மொத்தம் எடுத்திடலாம், உங்க பிஎஃப் கூட கொஞ்சம் எடுக்கலாம் இல்ல? நான் இதெல்லாம் தான் கால்குலேட் பண்ணினேன். இருக்கிற ஜூவல்ஸ் எல்லாம் வித்தாக் கூட பெரிசா ஒன்னும் கிடைக்காதே, இந்த வீட்டுக்கே முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் வித்தாச்சு" என்று படபடவென்று பட்டியல் இட்டவள், சற்று இடைவேளைக்குப் பின் "என் அறிவுக்கு எட்டிய வரை, இந்த வீட்டை விக்கிறதைத் தவிர வேற ஆப்ஷன் இருக்கிறதா எனக்குத் தெரியலை. ஆனா பசங்க விட மாட்டாங்களே" என்று உதட்டைப் பிதுக்கினாள்.



சற்று நேர யோசனைக்குப் பின்னர் தயக்கத்துடன், "வேணும்னா இந்த வீட்டை அடகு வச்சு…" என்று ஆரம்பித்தவளை, கணவனின் பதில் என்னவாக இருக்கும் என்று வாயை இறுக மூடிக் கொண்டாள்.



அதற்கும் அவன் பதில் கொடுத்து விட்டுத் தான் திருப்தியானான். "வாழ்க்கை பூராவும் வட்டி கட்டிட்டே இருக்கச் சொல்றியா, சான்ஸே இல்லை. இன்னும் இரண்டு நாள் பார்ப்போம். அப்புறம் பசங்க கிட்ட பேசலாம்"



அவர்கள் நினைத்தபடியே வேறு வழி ஏதும் தோன்றாமல் போக, அவர்களின் பிள்ளைகளோ முதல் பேச்சு வார்த்தையிலேயே "நோ பா! முடியவே முடியாது. இந்த வீட்டுல எங்க சைல்ட் ஹூட் மெமரீஸ் எல்லாம் இருக்கு, இதை விக்காம என்ன பண்ணலாம்னு பாருங்க" என்று அவர்களது எதிர்ப்பை வலுவாகக் காட்டினார்கள்.



'ஹூக்கும்…' என்று தோளில் இடித்துக் கொண்டாள் வசுதா. 'இந்த விஷயத்தில அப்படியே அப்பாவ மாதிரி தான் பிள்ளைகளும், என்ன தான் சொல்ல வராங்கன்னு பொறுமையாத் தான் கேட்போம்னு கிடையாது. எடுத்த உடனேயே நோ தான்'



அவளது முகத்தில் வந்து போகும் மாற்றங்களைப் பார்த்து கொண்டு இருந்த விஷ்ணு, "என் பசங்க என்னை மாதிரி இல்லாம?" என்று ஒரு கேள்வியோடு புருவம் உயர்த்தினான்.



பேச்சு திசை மாறுவதை விரும்பாத வசுதா, பிள்ளைகளிடம் வீட்டை விற்க வேண்டியதன் அவசியத்தை மைக் இல்லாமல் ஒரு மணி நேரம் விளக்கியதில் அவர்கள் ஓரளவு தெளிவாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.



எறும்பு ஊரக் கல்லு தேயும் போது, தன் சொந்தப் பிள்ளைகளின் மனதைக் கரைக்க தாய்க்குத் தெரியாதா என்ன? வசுதாவின் தொடர் உரைகளால் அடுத்த ஒரு வாரத்தில் பிள்ளைகள் இருவரும் பெற்றோரின் "ப்ராஜெக்ட் நியூ ஹவுஸ்" ப்ளானிற்குப் பக்காவாக ஒப்புதல் அளித்தார்கள்.



"அவன் காலேஜைப் பாக்குறீங்க, என் ஸ்கூலு" அப்போதும் அதி முக்கியமான சந்தேகம் ஒன்றை வைத்தான் ஆதித்யா.



"உங்க ஸ்கூலுக்கு தான் தெருவுக்கு தெரு ப்ரான்ச் இருக்கே. அதுல ஏதாவது ஒன்னு கண்டிப்பா நாம பார்க்க போற வீடு கிட்டயும் இருக்கும். அப்படியே இங்கே இருந்து அங்கே மாத்திக்கலாம்"



ஒரு வழியாக வீட்டினர் ஏக மனதாக முடிவு செய்ய, நிம்மதியாக வேலையைப் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று இல்லாமல், அடுத்த கவலை "உள்ளேன் ஐயா" என்று எட்டிப் பார்த்தது. புது வீடு வாங்குவதா? இல்லை பழைய வீட்டை விற்பதா? எதை முதலில் செய்வது என்பதற்கான தீர்வு எதிர்பாராத விதமாகப் பல வாய்தாக்களை வாங்கியது.



வீட்டில் உள்ள நால்வர் மட்டுமே யோசிக்காமல் அடுத்தவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்று புரிய நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்க முடிவு செய்தார்கள்.



"கையில கேஷ் வச்சிட்டு வீடு பாக்கிறது பெட்டர். அதனால முதல்ல வீட்டை வித்துடுங்க"



"இருக்கிற வீட்டை வித்துட்டு எங்க போவீங்க? அதுக்கு முதலில் வீடு வாங்கிட்டா ஈஸியா இருக்கும்"



"ஒரு வேளை உங்களுக்கு பிடிச்ச மாதிரி வீடு அமையறது லேட் ஆகிடுச்சுன்னா ரொம்ப கஷ்டமாயிடும். அதனால இப்போதைக்கு பழைய வீட்டை விற்க வேண்டாம்"



"சார்! நீங்க சொல்றது மாதிரி வீட்டை வித்துடலாம். வாங்குறவங்க வாடகைக்கு விடத் தான் போறாங்கன்னா நாமளே கன்ட்டிநியூ பண்றோம்னு கேட்டுப் பார்க்கலாம். அப்படி இல்லேன்னா எத்தனை தடவை பேக் பண்ணிட்டு இருக்க முடியும். வீட்டைக் காலி பண்றது ஒண்ணும் அவ்வளவு ஈஸியான வேலை இல்லை"



விஷ்ணுவின் நட்பு வட்டத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்யும் சிலரிடம், நடத்திய நான்கு சுற்று வட்ட மேசை மாநாட்டின் முடிவில், வீடு வாங்குவது தான் முதலில் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.



வசுதா ஒரு வித பரவச நிலையில் இருந்தாள். "இங்க பாரு வசு! புது வீடு வாங்கலாம்னு முடிவு பண்ணியாச்சு. அப்ரூவல் கொடுத்ததோட என் வேலை முடிஞ்சு போச்சு. ப்ளான் பண்ண பட்ஜெட்ல வீட்டைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது உன் பொறுப்பு. எனக்கு ஆஃபீஸ் வொர்க் ரொம்ப டைட்டா இருக்கு" என்று ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லி விட்டான் விஷ்ணு.



'இல்லேன்னா மட்டும் அப்படியே வந்திடுவாரு. ஆஃபீஸையே கட்டிட்டு அழற மனுஷங்களுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம் எதுக்கு குடும்பம்?' மனதுக்குள் வெறும் வாணலியில் போட்டு வறுத்தாள்.



"அதே மாதிரி அக்ரீமென்ட், லோனுன்னு என்னை எதுக்கும் கூப்பிடக் கூடாது"



'அப்போ பேசாமல் நம்ம பேர்ல வீடு வாங்கிடலாமோ?'



"எங்க சைன் போடச் சொல்றியோ போடறேன். மத்தபடி என்னை எதுக்கும் எதிர் பார்க்காத"



'அதானே பாத்தேன். ஆஃபீசர் புத்திய வீட்டுலயும் காட்ட வேண்டியது'



"என்ன? நான் பேசறது காதுல விழுந்ததா இல்லையா?"



"நல்லாவே விழுந்தது. நீங்க ஆஃபீஸ் வேலைல ரொம்ப பிஸியா இருக்கீங்க. வீட்டுக்காக ஒரு ஆணியையும் உங்களால பிடுங்க முடியாது. நானே பாத்துட்டு இது தான் வீடுன்னு சொன்னா, நீங்க அடுத்த நாள் அந்த வீட்டுல இருந்து ஆஃபீஸ் போகத் தயாராயிடுவீங்க. இது தானே, என் பெருமூளை சிறு மூளைன்னு மூளையோட எல்லா மூலைலயும் ஏத்திட்டேன், ஓகே! நீங்க கவலைப் படாமல் ஆஃபீஸுக்குப் போங்க. நான் கிரகப் பிரவேச பத்திரிகை ரெடி பண்ணிட்டு சொல்றேன்" தன்னால் முடிந்த வரை வார்த்தைகளில் நக்கலைக் குழைத்துப் பேசியவள், அவன் அடுத்து பேசுவதைக் கேட்க அங்கு இல்லை.



நல்ல நாள் பார்த்து, கோவிலுக்கெல்லாம் போய் வந்து தனது வீடு வேட்டையைத் தொடங்கினாள் வசுதா. ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, யெல்லோ பேஜஸ், மேஜிக் ப்ரிக்ஸ், 99ஏக்கர்ஸ் என்று அலசி ஆராய்ந்து பார்த்தால், தனி வீடுகள் எல்லாம், அவர்கள் எதிர்பார்க்கும் விலையில், சென்னைக்கு மிக அருகில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருந்தன. அதையும் மீறி சென்னையின் புறநகர் பகுதியில் இருக்கும் வீடுகள் எல்லாம் இப்போது தான் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடத்தில் கிடைத்து விடும் என்ற நிலையில் இருந்தன.



'என்னடா இது சென்னைக்கு வந்த சோதனை?' என்று நொந்து கொண்டவள் விக்கிரமாதித்தனைப் போல மனம் தளராமல் முயன்று அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள். அடுத்ததாக, அவள் வடிகட்டி வைத்திருக்கும் வீட்டை எல்லாம் பார்க்கும் படலம். இது சினிமாக்களில் வரும் பெண் பார்க்கும் படலத்தை விட சுவாரசியமாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் வீட்டை அவர்கள் விவரித்த விதம் அப்பப்பா …



கேட்டட் கம்யூனிட்டி என்று சொல்லப் பட்ட வீடுகளில், வீட்டின் விலையை விட அங்கே இருந்த க்ளப் ஹவுஸ், டென்னிஸ் கோர்ட், சிறியவர்களுக்குப் ப்ளே ஏரியா, பெரியவர்களுக்கு வாக் ஏரியா, ஜிம், ஹோம் தியேட்டர் என்று இருந்த வசதிகளுக்கான விலை எவரெஸ்ட்டில் இருந்தது. அவை எல்லாமே மெயின்டெனன்ஸ் என்ற பெயரில், மாதாந்திர செலவுகளை அதிகப் படுத்துவதாக இருந்தது தான் கொடுமையிலும் கொடுமை. மெயின் ரோட்டில் இருந்து வீடு வந்து சேரவே இரண்டு கிலோமீட்டர் ஆகிவிடும். அதில் நடந்தாலே போதும், எதற்குத் தனியாக ஒரு வாக் ஏரியா, அப்புறம் ஒரு ஜிம்?



ஒவ்வொரு நாளும் காலை ஒரு வீடு மாலை ஒரு வீடு என்று அலுவலகம் செல்வது போலச் சுற்றி அலைந்து இரண்டு மாதங்களுக்குள் தங்களுக்கு ஏற்றபடி ஒரு வீட்டை கண்டுபிடித்து விட்டாள் வசுதா. வீடு அனைவருக்கும் பிடித்து விட, "அப்பாடா" என்றானது அவளுக்கு.



அக்ரீமென்ட், லோன் என்று அலைந்து திரிந்து ஜெட் வேகத்தில் நடந்து கொண்டிருந்த ஏற்பாடுகளில் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறை என்ற ஸ்பீடு பிரேக்கரில் சிக்கியது. தேவையென்று யாரைக் கேட்பது என்ற குழப்பத்தில் வந்து நின்றது. வாழ்க்கையில முதல் முறையாக யாரிடம் கையேந்துவது என்று எரிந்து விழுந்தான் விஷ்ணு.



இதன் அர்த்தம், இதுவரை கடனே வாங்காதவர்கள் என்பது அர்த்தம் அல்ல. அந்த வேலையையும் சிறப்பாகச் செய்து, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் பணியையும் தன் தலையிலேயே போட்டுக் கொண்டு இருந்த வசுதா, இப்போது தெளிவாகக் கையை விரித்து விட்டதே விஷ்ணுவின் எரிச்சலுக்கு காரணம். அவனது நல்ல நேரமாக உற்றவர் தோள் கொடுக்க, ஒரு வழியாக அதனையும் சமாளித்து அடுத்த நிலைக்குச் சென்றது அவர்களது புது வீடு ப்ராஜெக்ட்.



இருவரது பெயரிலும் பதிவு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருக்க, பதிவுக்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில், மிதமிஞ்சிய வேலைப் பளுவின் காரணமாக படுக்கையில் விழுந்தாள் வசுதா.



விஷ்ணு வேலை விஷயமாக வெளியூர் சென்று இருக்க, பிள்ளைகள் இருவரும் தாயின் நிலை கண்டு பயந்து போனார்கள்.

உடம்பெல்லாம் அனலாகக் கொதிக்க, அலைச்சல் தான் காரணம், ஒரு பேராசிட்டாமால் போட்டு நல்லாத் தூங்கினால் சரியாகிடும் என்று தத்துவம் சொன்னவள் அடுத்த நான்கு மணி நேரத்தில் ஆகாரம் எதுவும் செல்லாமல் துவண்டு போனாள். பயந்து போன பிள்ளைகள், ஒரே நாளில் கிழிந்த நாராகி விட்ட தாயை வற்புறுத்தி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.



ஏதேதோ டெஸ்ட் செய்து ஹார்ட் பீட் அதிகமாக இருப்பதால் ஈசிஜி எடுத்து, அவசரமாக ஒரு க்ளுகோஸ் பாட்டிலை மாட்டி விட்டார்கள். இதுவரை இப்படி ஒரு வேதனையை அறிந்திராதவள் முகம் சுழித்தாள்.



டெஸ்டுகளின் முடிவு மிகவும் பயமுறுத்துவதாக இருந்தது. எமர்ஜென்சி வார்டின் வாசலில் அமர்ந்து இருந்தவர்களை, "வசுதாவோட அட்டென்டர் யாரு? பெரியவங்க யாரும் இல்லையா?" என்ற செவிலியின் குரல் கலைத்தது.



"நான் இருக்கேன் சிஸ்டர், அவளோட கசின் சிஸ்டர் நானு. என்ன ஆச்சு சொல்லுங்க"



"அவங்களுக்கு மைல்டா ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி தெரியுது. பல்ஸ் கன்னாபின்னான்னு ஜாஸ்தியா இருக்கு. இரண்டு நாளாவது அப்சர்வேஷன்ல வைக்கணும்" என்ற டாக்டரின் குரலில் அவளுக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.



"எங்க அப்பா இப்போ வந்துடுவாங்க டாக்டர். அவர் வந்து டிசைட் பண்ணட்டும்" அர்ஜூன் இடை புகுந்தான்.



அரக்கப்பரக்க வந்த விஷ்ணு, மனைவியின் நிலை கண்டு பதறிப் போனான். டாக்டர் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டும் நிலையில் இருந்தான் அவன்.



"என்ன வசு? உடம்பைக் கவனி, தேவையான ரெஸ்ட் எடுன்னு ஆயிரம் தடவை சொல்லி இருக்கேன் உனக்கு. உன் கேர்லஸ்நெஸ் எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பாரு. இரண்டு நாளில் ரெஜிஸ்ட்ரேஷன், அடுத்த வாரம் கிரகப் பிரவேசம்னு ப்ளான் பண்ணி இப்போ என்ன ஆச்சு பாரு.



மினிமம் இரண்டு நாளாவது அப்சர்வேஷன்ல வைக்கணும்னு சொல்றாங்க. இருந்துட்டு போயிட்டா நல்லது. பேசாமல் இந்த வீடு வாங்கிற விஷயத்தையே கேன்சல் பண்ணிடறேன். எல்லாம் திருஷ்டி தான், இதுக்கு தான் எல்லார் கிட்டயும் ரெஜிஸ்டர் பண்ணிட்டு சொல்லலாம்னு சொன்னேன், நீ தான் அவசரப் படுத்தின. ஒருத்தர் கண்ணு மாதிரி இன்னொருத்தர் கண்ணு இருக்காது. ம்ச்.." புலம்பித் தள்ளி விட்டான் விஷ்ணு.



அந்த நிலையிலும் வசுதாவால் மட்டுமே தெளிவாக சிந்திக்க முடிந்தது. "ஹலோ சார்! கொஞ்சம் நிறுத்துங்க விட்டா நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே போறீங்க நாம இங்கே வந்தது ஹை ஃபீவர்னு செக் பண்றதுக்கு, அதை விட்டுட்டு ஏதேதோ செக்கிங் பண்ணிட்டு இருக்காங்க. நீங்களும் கிடைச்சது சான்ஸூன்னு டென்ஷன் ஆயிட்டு இருக்கீங்க. காய்ச்சலுக்கு பண்ண டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் என்னாச்சுனு முதல்ல கேட்டுட்டு வாங்க, அப்புறம் முடிவு பண்ணுவோம்"



"ஓ காட்! இந்த ஹாஸ்பிடலைக் குறை சொல்றியா? இது மத்த இடம் மாதிரி கிடையாது"



"அதெல்லாம் அப்போ, இப்போ எல்லா ஹாஸ்பிட்டலும் வந்தவங்களைப் பிடிச்சு உள்ள போட்டு பணம் பண்றதுக்குத் தான் ப்ளான் பண்றாங்க. நானும் இந்த நாலு மணி நேரமா பாக்கிறேன், ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டு வந்தவங்களக் கூட ஹார்ட் பேஷன்ட்டா ஆக்கிட்டு இருக்காங்க. எல்லாரையும் அந்த ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்குத் தான் அனுப்பி வைக்கிறாங்க. அவங்களோட என்ன டை- அப்போ, ஆண்டவனுக்கு தான் தெரியும். நீங்க முதல்ல ஃபீவர செக் பண்ண சொல்லுங்க"



"என்னம்மாசொல்ற? இப்படியெல்லாம் செய்வாங்களா என்ன? நம்பவே முடியலை"



"நீங்க தானே, யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவீங்க. உங்களுக்கே தெரியும், எனக்கு எப்போதுமே பல்ஸ் ரேட்டு ஜாஸ்தியாக இருக்கும். இப்போ காய்ச்சல் வந்ததில இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கலாம். அதைப்போய் ஹார்ட் அட்டாக் ரேஞ்சுக்கு பேசிக்கிட்டு இருக்காங்க. எனக்கு அப்படியெல்லாம் எந்த சிம்ப்ட்டமும் இல்லை. இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சதுன்னா கிளம்பலாம் நம்ம. முதல்ல போய் பேசுங்க"

ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தை விஷ்ணுவை பதற வைத்து இருக்க, மனைவியின் சொல்லில் கொஞ்சம் தெளிந்தான்.



இப்படியாக பல தடங்கல்களைத் தாண்டி அவர்கள் குறித்த நேரத்தில் அவர்களின் புத்தம் புதிய கிரகத்தில் பிரவேசம் செய்தார்கள். அடுத்த கட்டமாக வீட்டின் உள் அலங்காரங்கள். இதிலும் வசுதாவின் பங்கு தான் அதிகம். அவள் முடிவு செய்த எல்லாவற்றுக்கும் தலையாட்டிய விஷ்ணுவின் மனம் ஊஞ்சல் என்று வரும் போது, ஊஞ்சலாடியது.



ஊஞ்சலைப் பிடிக்காது என்பதல்ல, அதற்கு அவள் பல காலமாக வெயிட் லிஸ்ட்டில் வைத்திருந்த "தாத்தா வீட்டு சங்கிலி" தான் காரணம். தனக்கு இப்படி ஒரு ஞாபகார்த்தம் இல்லாமல் செய்துவிட்டார்களே என்று பெற்றோரை நினைத்துக் கோபம். இருந்த போதிலும் ஊஞ்சல் மாட்டுவதில் தடையேதும் சொல்லவில்லை.



புது வீட்டில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் நடந்த வேலைகள் நாட்கள் நகர்ந்ததில் ஜெட் வேகத்தில் நடக்க, வசுதா பழைய வீட்டை மூட்டை கட்டுவதில் மூழ்கிப் போனாள். புது வீட்டுக்கு வந்து பழைய மனிதர்களாகி விட்ட போது, கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களாக ஓயாத வேலை பார்த்த வசுதாவின் மனம் மறுபடியும் வெறுமையை உணரத் தொடங்கி இருந்தது.

'அடுத்தது என்ன?' இந்தக் கேள்வி தான் எப்போதும் அவளுக்குள் ஓர் ஒரமாக ஓடிக் கொண்டே இருந்தது.



ஊஞ்சலில் அமர்ந்து, உல்லாசமாக ஆடிக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தவள் கண்களில் சிதறிக் கிடந்த செய்தித் தாள்கள் பட்டது. "அர்ஜூன்" என்று பல்லைக் கடித்தபடி அடுக்கி வைக்கத் தொடங்கினாள். விஷ்ணுவிற்கு ஒரு பழக்கம், அவன் செய்தித்தாள்களை படிக்கும் அழகே தனி. முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை வரிசையாகத் தான் படிப்பான். அவன் படித்து விட்டானா என்பதே தெரியாத வண்ணம், வந்த போது எப்படி இருந்ததோ அதே மாதிரி ஒரு கசங்கல் இல்லாமல் அடுக்கி வைக்கப் படும். அதையே அடுத்தவரிடமும் எதிர் பார்ப்பது தான் மற்றவருக்கு எரிச்சல் கொடுக்கும். இன்றைய சிதறல் ஐபிஎல் அட்டவணையைப் பார்த்த அர்ஜூனின் வேலை.



வீட்டில் செய்தித் தாள்கள் வாங்கினாலும் அவற்றை அடுக்கி வைப்பதற்காக மட்டுமே தொடும் ரகம் அவள். படிக்கப் பிடிக்காது என்பதல்ல. நினைவு தெரிந்த நாளாக புத்தகங்களில் குடியிருப்பவள், சுருக்கமாகச் சொன்னால் அவள் ஒரு புத்தகப் புழு, ஆனாலும் ஏனோ தினசரிகளை மட்டும் படிக்கப் பிடித்ததே இல்லை. சில வருடங்களாக, சுடோகு என்ற ஒரு விஷயம் அவளை மறுபடியும் செய்தித் தாள்களை எடுக்க வைத்திருக்கிறது. இப்போதும் கூட அடுக்கி வைப்பதற்காக எடுத்த செய்தித் தாளில் சுடோகுவை முடித்து விட்டே வைத்தாள். மூளைக்குச் சரியான வேலை கொடுப்பதாகவும் அதே நேரம் அன்றாடப் பணிகளில் சூடேறிப் போன மூளையை குளிர வைப்பதாகவும் இருந்ததால், அலுவலகத்தில் கூட மிகுந்த டென்ஷனான நேரங்களில் கை கொடுத்தது.



மற்றபடி அவள் புத்தகங்களில் செலவிடும் பணத்தை நகை வாங்குவதில் கூட செய்திருக்க மாட்டாள். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும், ஆயிரக் கணக்கில் செலவழித்து அவள் அள்ளிக் கொண்டு வரும் புத்தகங்கள் ஏராளம். ஆரம்பத்தில் ஆர்வமாக பிக்னிக் செல்வது போல வந்த விஷ்ணுவோ பிள்ளைகளோ வருடங்கள் ஓடிய போது, இவள் புக் ஃபேர் என்று சொன்னாலே தலை தெறிக்க ஓடி விடுவார்கள்.



"இந்த வாரம் எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு வசு. அதுக்கு நிறைய டேட்டா கலெக்ட் பண்ணனும். நீ போயிட்டு வா. பார்த்து செலவளி. இப்படியே போயிட்டு இருந்தா நாம புக் வைக்கிறதுக்கே தனியா ஒரு வீடு வாங்க வேண்டியது இருக்கும். யோசிச்சு வாங்கு"



"ஏம்மா, நாங்க லக்கேஜ தூக்க முடியாம சுமந்துட்டு உன் பின்னாடியே வருவோம். நீ ஒவ்வொரு கடையா நின்னு நிதானமா அலசி ஆராய்ச்சி பண்ணிட்டு வருவ, இதுல யாரையாவது ரைட்டர்ஸ பாத்துட்டா இன்னும் குஷியாகி செல்ஃபி மோடுக்குப் போயிடுவ. நாங்க உனக்கு ஃபோட்டோகிராஃபர் வேலையையும் சேர்த்து பார்க்கணும். அதுவும் ஒரு ஃபோட்டோவோட விடுவியா, நல்லா இருக்குன்னு நீ நினைக்கிற வரைக்கும் எடுக்கணும். இந்த வாட்டி நோ சான்ஸ், நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். எனக்கு வேலை இருக்கு, வர முடியாது போம்மா"



"மா! என்னால நிறைய தூக்க முடியாது. வேணும்னா நாம இரண்டு தடவையா போலாம்" தமையன் கையை ஆட்டிப் "போகாதே" என்று சைகையால் சொன்னதைக் கவனிக்காமல் ஆதி ஐடியா கொடுக்க, அவனது சைகை படக்கூடாத‌ கண்ணில் தெளிவாகப் பட்டது.



"ஏன் டா? நீ தான் வர மாட்ட, வரேன்னு சொல்ற அவனையும் ஏன் கெடுக்கிற? எதை வாங்கறேனோ இல்லையோ, உனக்கும் உங்க அப்பாவுக்கும் தேவையான புக்ஸ மறக்காம வாங்கிட்டு வந்துடணும். நீங்க வரமாட்டீங்க, ஆனா உங்க லிஸ்ட் மட்டும் வருமா? இந்த தடவை உங்க யாருக்கும் எதுவும் வாங்கிட்டு வர மாட்டேன், போங்க டா"



வீர சபதம் போட்ட தாயைப் பார்த்துப் பிள்ளைகள் இருவரும் கைகொட்டிச் சிரித்தனர். அவளது வாய்ச் சவடால் எல்லாம் கண்காட்சியில் நுழையும் வரை தான். புத்தகங்களின் உலகத்தில் நுழைந்து விட்டால், வெளியுலகம் மறந்து போகும் அவளுக்கு. தனக்குள் சிரித்துக் கொண்டே ஊஞ்சலில் இருந்து பார்வையை நிமிர்த்தியவளின் கண்கள் அந்த ஹால் முழுவதையும் நிறைத்து பிரம்மாண்டமாக நின்ற புத்தக அலமாரியில் பதிந்தது. இது வரை இருந்த வெறுமை மறைந்து எதையோ சாதித்து விட்ட பூரிப்பில் மகிழ்ச்சியுடன் நின்றாள், வசுதா.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 5
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.