• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 5

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
392
0
43
india
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 5

யாரோ, யாரையோ பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றாமல் இந்தப் பேச்சை விகாஸோடு ஒப்பிட்டு அவளது மனம் கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டது.

அந்தப் பேச்சு எந்த அறையில் இருந்து வந்தது, அது அவர்களின் கம்பெனிக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததா என்பது கூட அவளுக்கு இருந்த பதட்டத்தில் யோசிக்கத் தோன்றவில்லை.

இரவு எட்டை நெருங்கிய நிலையில் பார்ட்டியில் டின்னர் தொடங்கி இருந்தது. பசி என்ற ஒன்றையும் எங்கே இருக்கிறோம் என்றும் கூட உணராதவளாக இருந்தவள் அங்கே எழுந்த கூச்சலில் தான் சற்றே தன்னிலை அடைந்தாள்.

அவளுடன் இத்தனை நாள் பழகியவர்களின் வேறோர் முகத்தைக் கண்டாள்.

ஆண் பெண் வித்தியாசம் இன்றி தனக்கு பிடித்தமானவர்களோடு ஜோடி சேர்ந்து ஆடுவது என்பது இன்றைய காலகட்டத்தில் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் என்ற பேதம் எல்லாம் இங்கே கிடையாது. இதற்கு மறுப்பவர்களைத் தான் உலகம் வேறு விதமாக பார்க்கும் நிலை இன்று.

ஆனால் இங்கே டான்ஸ் மட்டும் இல்லாமல் மட்டும் அல்லாமல் இயல்பாக ஜோடிகள் மாறி அவர்களுடன் அறைக்குள் சென்ற காட்சி கண்டு மலர்விழியின் கைகள் கார்த்திக்கை அழைத்தன. அவன் அழைப்பை ஏற்கவில்லை. குறிப்பாக அவள் மிகவும் மரியாதை வைத்திருந்த ஒரு பெண் அதிகாரி, தன் கணவனை அணைத்து விடை கொடுத்து அடுத்தவரோடு சென்றதையும் அவரது கணவர் சிரித்துக் கொண்டே விடை கொடுத்ததையும் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இது போல் ஒன்றல்ல வந்திருந்த விருந்தினர் பலரும் (!?) கலர் கலராக நாடு விட்டு நாடு தாண்டி பல ஜோடி மாற்றம் அங்கே நடந்தேறியது. நினைக்கவே குமட்டியது அவளுக்கு. பாவம் இது பற்றி நிறைய கேள்விப் படாத அப்பாவியாக இருந்திருக்கிறாள். கையில் ஒரு கிளாஸோடு ஒரு மூலையில் இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள்.

ஒரு வேளை விகாஸையும் இந்த விஷயத்தில் தான் வற்புறுத்தினார்களோ?? குறி வைக்கப்பட்டது அவனது மனைவிக்கா? மகளுக்கா?? இப்படி வற்புறுத்தி இல்லை அச்சுறுத்தி என்ன சாதிக்கப் போகிறார்கள்? இதையெல்லாம் செய்வது யார்? கம்பெனி உள்ளே இருக்கும் ப்ளாக் ஷீப்பா அல்லது போட்டியாளர்களா?

மனம் ஒன்றும் ஒன்றும் ஒன்பது என்று ஏகப்பட்ட கணக்குகளைப் போட்டுக்கொண்டு இருக்க சோக போஸில் அமர்ந்திருந்தவளில் முன் வந்து அமர்ந்தான் ரஞ்சன்.

“ஹாய்! என்ன தனியா இருக்க? மூஞ்சி ஏன் டல்லடிக்குது? ஃப்ரெண்ட்ஸ் யாரும் கூட வரலையா? விகாஸோட ஃபேமிலி இருந்தாங்களே. அவங்க கூட ஜாயின் பண்ணி இருக்கலாமே?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

‘இவனுக்கு வேற வேலையே இல்லையா? எத்தனை கெஸ்ட் வந்திருக்காங்க. எப்படி, எங்கே இருந்து என்னைக் கவனிச்சு வந்தான்’ அவளது மனதின் எரிச்சல் முகத்தில் தெரிந்தது போலும்.

“ஹலோ.. மேடம் .. இங்கே எல்லா எம்ப்ளாயீஸூம் என் பொறுப்பு தான். வந்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா? சேஃபா இருக்காங்களான்னு ஹெட் பார்த்தா தான் அடுத்தடுத்த லெவல்ல எல்லாரும் அலர்ட்டா இருப்பாங்க. அந்த வகையில் நான் வந்தது தப்புன்னு சொல்லுவீங்களா??” என்று புருவம் உயர்த்தியவனை பாவமாகப் பார்த்தாள்.

“ஹான்..‌ நோ.. ரஞ்சன்.. நான் தனியா தான் வந்தேன். எனக்கு இந்த ஹாட் ட்ரிங்க்ஸ் பழக்கம் இல்லை. எல்லாமே புதுசா இருக்கா… அதான் ஓரமா செட்டில் ஆகி இருக்கேன்.”

“நான் கூட அப்படித்தான். எனக்கு தோணினா தான் எடுத்துப்பேன். இல்லேன்னா, ஸ்ட்ரிக்டா நோ தான்” என்ற குரல் சற்று முன் ரூமுக்குள் கேட்டது போலவே இருக்க பயத்தைக் கண்களில் தேக்கி அவனைப் பார்த்தாள் மலர்விழி.

அவனோ அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. என்ன பயம் என்றும் கேட்கவில்லை. பேச்சை மேலும் வளர்த்தான். நேரம் தான் சென்றதே தவிர பார்ட்டி முடியும் வழியாகத் தெரியவில்லை. ரஞ்சன் மலர்விழியின் பயத்தை போக்குகிறேன் பேர்வழி என்று பேசிக்கொண்டே இருக்க மலர்விழியின் கண்களோ வேறு யாராவது தெரிந்தவர்கள் வந்து விட்டால் பரவாயில்லை என்று தேடியது.

“உன் பேருக்கு ஏத்தது மாதிரியே இருக்கு உன்னோட ஐஸ்” என்று ஐஸ் வைத்தான்.

“வாட்!!! இந்த ஐஸ் தானே வேணாம்கிறது.. ஃப்ளவரா.. எந்த ஃப்ளவர்?? எந்த ஃப்ளவர் மாதிரி கண்ணு இருந்தாலும் சகிக்காது?” என்று நினைத்து நினைத்துச் சிரித்தாள்.

“ஹப்பாடா.. ஒரு வழியா சிரிச்சுட்டியா… குட்.. அப்படியே கொஞ்சம் சாப்பிட்டு போய் படு. எவ்வளவு செலவு பண்ணி வெரைட்டியா ஃபுட் ஆர்டர் பண்ணி வச்சிருக்கோம். சாப்பிடாமல் இருக்கலாமா?” என்று கண்ணடித்தான். அவன் செலவு என்ற வார்த்தைக்கு கொடுத்த அழுத்தத்தை மலர்விழியும் கவனிக்கவே செய்தாள்.

விகாஸாக இருந்தால் அவளும் இலகுவாக பதில் பேசி இருப்பாள். இரண்டு மூன்று முறை மட்டுமே பார்த்த அதுவும் பாஸுக்கே பாஸாக இருந்தவனிடம் எப்படி கேலியாக பேசுவது என்ற தயக்கம் அவளது வாயைப் பூட்டி வைத்தது. ரஞ்சனுக்கு அப்படி எதுவும் இல்லை. வெகுநாள் பழகியவன் போல இயல்பாகப் பேசினான்.

“தாங்க்ஸ் ரஞ்சன். இப்போ கொஞ்சம் ஃப்ரீயா ஃபீல் பண்றேன். இல்லேன்னா, லேட் ஆனாலும் பரவாயில்லைன்னு வீட்டுக்கு போகலாமான்னு யோசிச்சிருப்பேன். தாங்க்ஸ் ஒன்ஸ் அகைன்” என்று புன்னகைத்தவளின் பார்வையில் விகாஸ் பட்டான்.

அவனைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தவள் அருகில் இருந்த ரஞ்சனை மறந்து போனாள். அவர்களது அருகில் நெருங்க நெருங்க விகாஸின் முகத்தில் ஒரு தெளிவை, ஒரு நிம்மதியை அவளால் உணர முடிந்தது. ரஞ்சனோ ஹோட்டலின் வெளியே இருந்து வந்த விகாஸை ஆச்சரியமாக பார்த்தான்.

“ஹேய் விகாஸ்! உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன். எங்கே, உங்க வைஃப், பொண்ணெல்லாம் காணோம்?” என்று மலரே கேட்டு வைத்தாள். அவளுக்குத் தான் பதில் தெரியுமே. ரஞ்சன் கேட்டால் விகாஸ் தடுமாறிவிடுவானோ என்று அவனுக்கு உதவும் நோக்கில் அவளே கேட்டு வைத்தாள்.

“அதானே! தாங்க் யூ மலர்! நானும் அதைத் தான் கேட்கணும்னு நினைச்சேன். எங்கே உன் ஃபேமிலி? நீ ஏன் வெளியே இருந்து வந்த? உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு”

“அது.. ரஞ்சன்..” என்று ஆரம்பித்த போதே அவனுக்கு ஒரு ஃபோன் வர பேசி முடித்தவன் ஒரு சிரிப்புடன், “இரண்டு பேரும் என்ன கேட்டீங்க? என் ஃபேமிலி எங்கேன்னு தானே. அது ஒரு பெரிய கதை. தீடீர்னு என் மதர்இன்லாக்கு ஒரு எமர்ஜென்சின்னு எனக்கு ஒரு கால். மகளுக்கு ஃபோன் பண்ணினா பயந்துடுவான்னு அவங்க அப்பா எனக்கு பண்ணிட்டாங்க.

அதான் அவசரமா அவங்க இரண்டு பேரையும் ஒரு கேப் புக் பண்ணி அனுப்பி வச்சிட்டு வரேன். இப்போ தான் ஹாஸ்பிடல் ரீச் ஆகிட்டு ஃபோன் பண்றாங்க. வழக்கமா போற செக்கப் தானாம். அதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம், மனுஷனை டென்ஷனாகிட்டாங்க. இவங்க போய் நின்னதும் தான் அவங்க அம்மாவுக்கு அப்பா பண்ண கலாட்டா தெரிஞ்சிருக்கு. அதனால அவங்க பிபி ஏகத்துக்கும் ஏறிப்போய் இப்போ அப்சர்வேஷன்ல இருக்காங்க.”

“நீங்க போகணுமா விகாஸ்? உங்க வைஃப் அவங்களுக்கு ஒரே பொண்ணு தானே? வேற யாரும் ஹெல்ப்புக்கு இருக்காங்களா?” என்று கேட்ட ரஞ்சனை வித்தியாசமாகப் பார்த்து வைத்தாள் மலர்விழி.

‘என்ன இவன் இந்த டீடெயில்ஸ் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்’ என்றது அவள் பார்வை. ‘உன்னைப்பற்றியும் ஆல் டீடெயில்ஸ் ஐ நோ’ என்று அவன் ஒரு நாள் தெளிவாக விம் போட்டு விளக்கம் கொடுக்கும் போது என்ன செய்யப் போகிறாளோ.

“தேவையில்லை ரஞ்சன், இன்னைக்கு நைட்டு மட்டும் தான். காலைல வீட்டுக்கு போயிடுவாங்க.” என்ற விகாஸின் முகத்தில் இருந்து மலர்விழியால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ஓகே, நீ சாப்பிட்டு ரூமுக்கு போ மலர். காலைல பார்க்கலாம். நீ வா ரஞ்சன். நாம பார்ட்டிய என்ஜாய் பண்ணலாம்” என்று அவனையும் அழைத்துச் சென்று விட்டான்.

மறுநாள் விடுமுறை, வாரயிறுதி நாட்கள் என்று வரிசையாக வர, கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து மும்பை லீலாவதி மருத்துவமனையின் ஐசியுவில் உடல் முழுவதும் ஏதேதோ ட்யூப் மற்றும் வயர்களால் சூழப்பட்டவனாக விகாஸைக் கண்ட மலர்விழிக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.

அவனிடம் பேசுவதற்கும் கேட்பதற்கும் விஷயங்கள் இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.
அதிர்ச்சியில் இருக்கும் விகாஸின் மனைவியிடம் எதுவும் கேட்கத் தோன்றாமல் திரும்பி வந்துவிட்டாள்.

பார்ட்டி நடந்த அன்றே விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது அவளது அதிர்ச்சியை மேலும் கூட்டியது. ஒரு வேளை அவனை மிரட்டிக் கொண்டிருந்தவர்கள் திட்டமிட்டபடி விபத்தை ஏற்படுத்தி விட்டனரோ என்று தோன்றியது. யாரிடமும் சொல்லாமல் தன்னிலையில் இல்லாமல் உலவிக் கொண்டிருந்தவளை கார்த்திக் சந்தேகமாகப் பார்த்து வைத்தான்.

“அம்மா! நம்ம வீட்டு மான்ஸ்டர் இரண்டு நாளா முகத்தை தொங்கப் போட்டு திரியுதே. அவ கேட்டு எதையும் செஞ்சு தர மாட்டேன்னு சொல்லிட்டீங்களா?” அடுத்த நாள் சாயங்காலம் வழக்கமான ஸ்நாக்ஸ் நேரத்தில் வம்பை ஆரம்பித்து வைத்தான். அதற்கும் மலர்விழியிடம் எந்த எதிர்வினையும் இல்லை. தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அப்படியா.. அவ மூஞ்சிய என்னைக்கு தான் நல்லா வச்சிருந்தா.. நான் எது செஞ்சாலும் குறை சொல்றதுக்குன்னே பிறந்துருக்கா. எங்க மாமியார் கூட எனக்கு அம்மா மாதிரி தான் இருந்தாங்க. நாத்தனார்னு யாரும் எனக்கு இல்லை. அந்த குறையெல்லாம் தீர்க்க வந்த மகராசி இந்த மகராசி தான். எல்லாம் உங்க அப்பாவோட செல்லம். அதான் இப்படி எல்லா விஷயத்துக்கும் ஒரு பிடிவாதம் வந்து சேர்ந்திருக்கு”

நொடித்துக் கொண்ட சுந்தரி மகளின் தோளில் கை வைத்து தன் புறம் திருப்பினார். அவள் விழிகளில் இதுவரை அவர்கள் காணாத கலக்கம். “ஏய்! மலர்! என்ன தான் ஆச்சு உனக்கு? எதுக்கு இப்படி கண்ணு கலங்குது? யார் கிட்டயாவது சொன்னால் தானே தெரியும். ஆஃபீஸ்ல பிரச்சினைன்னா சமாளிக்க கத்துக்கணும். முடியலேன்னா, யார் கிட்டயாவது ஐடியா கேட்கணும். இப்படி மூஞ்சிய உம்முனு வச்சிட்டு திரிஞ்சா நல்லாவே இல்லை” போகிற போக்கில் அவள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி விட்டுச் சென்ற சுந்தரியை வீடே ஆச்சரியமாக பார்த்தது.

அவர் எப்படியும் டென்ஷனாகி நீ வேலை பார்த்துக் கிழித்தது போதும் என்று சொல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, நான் வேற மாதிரி என்று பார்த்து விட்டுப் போனார் அவர்.

இது போதுமே கார்த்திக்கிற்கு, தங்கையைத் தனியே பிடித்துக் கொண்டான் “என்னாச்சு மலர்? அன்னைக்கு பார்ட்டிக்கு போயிட்டு வந்தபோது கூட இவ்வளவு டல்லா இல்லையே. இப்போ ஏதோ ரொம்ப கவலையா இருக்கிற மாதிரி தெரியுது, என்ன விஷயம்? நீயா எதுலயும் தனியா இறங்கிடாதே. எதுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணு நான் டீல் பண்ணிக்கிறேன் அபிசியலா இருந்தா உன்னால ஹேண்டில் பண்ண முடியலேன்னு தோணினா பேப்பர் போட்டுடு. ஊருக்குள்ள இது ஒன்னு தான் வேலையா? இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சுகிட்டு அலையறது நல்லாவே இல்ல. கமான் மலர் வாயைத் திறந்து ஏதாவது பேசு. நீ இப்படி இருந்தா எரிச்சலா வருது” என்றான் நிஜமாகவே முகத்திலும் வார்த்தைகளிலும் எரிச்சலை காட்டியபடி.

கார்த்திக் இவ்வளவு சொன்ன பிறகு மலருக்கும் வேறு வழி இருக்கவில்லை. தான் பார்த்தவற்றையும் தனது சந்தேகங்களையும் இப்போது விகாஸின் நிலைமையையும் அவனிடம் விரிவாகவே சொல்லிவிட்டாள். இவ்வளவு பேசியவள் ரஞ்சனைப் பற்றிப் பேச மறந்து விட்டாள்.

கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக், ‘இதென்னடா புதுசா ஒரு பூதம் கிளம்புதே ஏற்கனவே இருக்கிற பிரச்சினையே எதனாலேன்னு தெரியல. இப்போ இன்னொன்னா’ என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.

“மலர்! நான் ஒன்னு சொல்லுவேன், கோபப்படாம கேளு. விகாஸுக்கு நடந்தது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் ஆக கூட இருக்கலாம். ஈஸ்வர் கிட்ட சொன்னா கிளியரா விஷயம் தெரிஞ்சுடும். மத்தபடி உங்க கம்பெனி விஷயம்… அது.. கார்ப்பரேட் கம்பெனிஸ்ல இதெல்லாம் சகஜம். நம்ம கிட்ட விஷயம் வராத வரைக்கும் நாம எதுவும் பண்ண முடியாது. நாம எப்படின்னு தெரிஞ்சவங்க கண்டிப்பா நம்மள அப்ரோச் பண்ண மாட்டாங்க. சோ நீ கவலைப்படாமல் வேலையை பாரு.”

தங்கையை சமாதானப் படுத்துவதற்காக கூறிவிட்டானே தவிர கார்த்திக்கும் உள்ளூர நடுங்கிக் கொண்டு தான் இருந்தான். பணம் நிறைய விளையாடி இருக்கும் என்று தெரியும். பெண்கள் புழக்கமும் இருக்கும் என்பது தெரியும், ஆனால் அது உள்ளுக்குள்ளேயே நடக்கும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை.உடனே ஈஸ்வரைப் பார்த்துப் பேசவேண்டும் போலிருந்தது. அதற்கு முட்டுக்கட்டையாக அவன் ஊரில் இல்லை.

கமல் சக்சேனா விஷயமாக ABC கம்பெனியில் ஏதேனும் விவரங்கள் கிடைக்குமா என்பதை அறிவதற்கு டெல்லி சென்றிருந்தான். இவன் கமலின் டேபிள் சாவியுடன் வருவதைப் பற்றி முன்னரே தகவல் சொல்லி இருக்க, அலுவலகத்தில் இவனை வரவேற்று தேவையான உதவிகளைச் செய்தனர். அவரது டேபிளுக்கு சீல் வைக்கப்பட்டிருந்ததால், அவர் உபயோகித்து வந்த அறையை அடுத்து வந்த அதிகாரிக்குக் கொடுத்து விட்டாலும் கமலின் டேபிள் அங்கேயே ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஒரு முறை போலீஸ் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒன்றும் கிடைக்கவில்லை என்று கைவிரித்த பொருட்கள் தான். இவர்களுக்கு மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது என்று பார்ப்போம்.

************

அடுத்த நாள் அலுவலகம் சென்ற போது ரஞ்சனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. “குட் மார்னிங் ரஞ்சன்!”

“குட் மார்னிங் மலர்! என்ன வழக்கமான ப்ரைட்நெஸ மூஞ்சில காணோம். என்ன விஷயம்?” என்றான் எதுவும் தெரியாதவன் போல.

“நத்திங் ரஞ்சன். நாட் ஃபீலிங் வெல். அதான். வேற எதுவும் இல்லை. நீங்க சொல்லுங்க”

“விகாஸோட ஹெல்த் கண்டிஷன்ல எந்த முன்னேற்றமும் இல்லை. கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ் தான். ரெகவர் ஆக எவ்வளவு டைம் எடுக்கும்னு தெரியாது. அதுவரைக்கும் அந்த போஸ்ட் காலியா வைக்க முடியாது” என்று நிறுத்தியவனை திடுக்கிடும் பார்வை பார்த்தாள்.

“இப்போ, நம்ம கிட்ட இரண்டு ஆப்ஷன் இருக்கு. ஒன்னு புதுசா யாரையாவது அந்த போஸ்ட்ல அப்பாயின்ட் பண்ணனும். இது கொஞ்சம் பெரிய போஸ்ட், ஸோ, டெம்பொரரியா யாரையும் கொண்டு வர முடியாது. அந்த சிச்சுவேஷன்ல விகாஸ் திரும்பி வரும் போது அவருக்கு வேற ப்ரோஃபைல் தேடணும். அது மும்பை இல்லாமல் வேறு ஊர் இல்லை கன்ட்ரியா கூட இருக்கலாம்.”

மேலும் தொடருவான் என்று மலர் எதிர்பார்க்க, அவன் பேனாவை ஆட்டிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள், “விகாஸ் சீக்கிரம் வந்துடுவார் சார். புதுசா யாரும் தேவைப்படமாட்டாங்க. அந்த இன்னொரு ஆப்ஷன் என்னன்னு சொல்றீங்களா?” என்று படபடத்தாள்.

“ம்ம். நீங்க ஓகே சொன்னால் டெம்பொரரியா நீங்களே விகாஸோட ப்ளேஸ்ல வொர்க் பண்ணலாம். உங்க டீம் ஹெல்ப் பண்ணுவாங்க. அன்ட், ஐ வில் கைட் யூ” என்று வெகு சாதாரணமாக சொல்லி முடித்தான்.

தான் காதில் கேட்டது உண்மை தானா என்று ஆராய்ந்தாள் மலர். ஆனால் , “என்னால முடியுமான்னு தெரியலையே? என்ற கேள்வி உடனே வந்து விட்டது. அதுவே அவளுக்கு ஓகே தான் என்றது.

“பட் இதுலயும் ஒரு பிரச்சினை இருக்கு…”

“......”

“விகாஸ் சீக்கிரம் வந்திடுவார் அப்படின்னு நாம நம்பலாம். பட் அந்த நம்பிக்கையை வச்சு எத்தனை நாளைக்கு.. இல்லை.. மாசத்துக்கு இப்படி டெம்பரரி போஸ்ட் க்ரியேட் பண்ண முடியும்? அதுவும் கம்பெனியோட ஒரு முக்கியமான பொஸிஷனுக்கு?”

அவன் கேட்பதும் சரி தானே, இதற்கு அவளிடம் என்ன பதில் இருக்கிறது? “இதுக்கு நீங்க தான் பதில் சொல்லணும் ரஞ்சன். ஹௌ டூ ஐ நோ?” என்று பதில் சொன்னவள் சற்றே தெளிந்திருந்தாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிந்த விகாஸுக்காக தான் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்று அவளது சின்ன மூளையில் ஒரு ஓரத்தில் தெளிவு வந்து விட்டது.

“தட்ஸ் குட். ஒரு மாசம் வரைக்கும் நாம மேனேஜ் பண்ணிக்கலாம். அதுக்குள்ள ரெகவர் ஆகிட்டா, வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் கூட கொடுத்திடலாம். இல்லேன்னா வேற ஆள் தான் தேடணும்.”

எந்த நேரத்தில் அப்படிச் சொன்னானோ, ஒரு மாதத்திற்கு மேலாகியும் விகாஸின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவனது இடத்தில் மலர்விழி திறம்பட வேலை செய்தாலும், மற்ற அனுபவம் வாய்ந்த அலுவலர்களின் ஒத்துழையாமையைச் சந்திக்க வேண்டி வந்தது.

அதனால் விரைவில் விகாஸின் இடம் மற்றொரு தகுதி வாய்ந்த நபரால் நிரப்பப்பட்டது. அந்த இடத்திற்கு வந்தவன் விகாஸை விடவும் மலர்விழியை ஈர்த்தான். சென்னையில் இருந்து வந்திருந்தான்.

“ஹாய் மிஸ்.மலர்விழி! நான் முரளிதரன்” என்று கை நீட்டியவனைப் பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள். “ஹலோ சார்! நான் மலர்விழி” என்று பதிலுக்குக் கை நீட்டியவளுக்கு ஒரே ஒரு குறை தான்.

‘என்னடா இது… இவ்வளவு ஹேன்ட்சமா இருக்காரு.. ஆனா.. இவரும் மிடில் ஏஜ்ல இருக்காரே.. கண்டிப்பா டீன் ஏஜ்ல பசங்க இருப்பாங்க.. டூ பேட்.. டூ பேட்.. நமக்கு டிபார்ட்மெண்ட்குள்ள சைட் அடிக்கிற யோகம் இல்லவே இல்லை’ என்று அவளது மனது புலம்பியது.

இரவெல்லாம் அதை நினைத்தபடி இருந்தாளோ என்னவோ? கனவில் வந்து, “கரெக்ட்.. நீ உன் டிபார்ட்மெண்ட்குள்ள யாரையும் சைட் அடிக்க வேண்டாம்.. அதுக்கு தான் நான் இருக்கேனே!” என்றது ஒரு குரல்.

அந்தக் குரலை அடையாளம் கண்டு கொண்டவள் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். அவசரமாக தண்ணீர் பாட்டிலைத் தேடிக் குடித்தவள் மொபை
லை எடுத்து மணியைப் பார்க்க, அதிகாலை நான்கு என்றது. அவ்வளவு தான் மீதி நேரம் முழுவதும் அவளுக்கு சிவராத்திரியாகிப் போனது.