• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 6

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
45
4
8
chennai
அத்தியாயம் - 6



கண்ணைக் கவரும் பிரம்மாண்டமாக இருந்த அந்தப் புத்தக அலமாரி, விதம் விதமான புத்தகங்களைச் சுமந்து கொண்டு இருந்தது. அவளது பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் அவளுக்குப் பிடித்த சில இன்னமும் அங்கே இடம் பெற்று இருந்தன. அர்த்தமுள்ள இந்துமதம் என்று ஆரம்பித்து தெய்வத்தின் குரல், குறையொன்றுமில்லை என்று ஆன்மீகப் புத்தகங்கள், செல்ஃப் ஹெல்ப் மற்றும் மேனேஜ்மென்ட் புத்தகங்கள், கதைப் புத்தகங்களின் வரிசையில் அனைவரது விருப்பங்களும் அங்கே இருந்தது. தமிழ் மட்டும் அல்லாது ஆங்கில மொழியிலும் அனைத்து வகையான புத்தகங்களும் அடக்கம். அர்ஜூனின் டிராயிங் நோட்டுகளுக்கும், அவளது ப்ளஸ் டூ ரெகார்ட் நோட்டுகளுக்கும் கூட அங்கே இடம் இருந்தது.



வருடக்கணக்கில் சேர்த்து வைத்த புத்தகங்கள். ஆனால் அந்தப் பெரிய அலமாரியில் கால் வாசி மட்டுமே நிறைந்து இருக்கிறது என்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அவள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று நினைக்கும் புத்தகங்கள் பல இன்னும் நினைவில் மட்டுமே இருக்கின்றன. 'தீயா வேலை செய்யணும் போல இருக்கே. எங்க! இனிமேல் அவ்வளவு செலவழிக்க முடியுமா தெரியலையே! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி! உன்னால முடியும் வசு! மனசைத் தளர விடாதே' என்று தனக்குத் தானே ஊக்கம் கொடுத்துக் கொண்டே அந்தப் புத்தகங்களின் மேல் பார்வையை ஓட்டினாள்.



பார்வை பொன்னியின் செல்வனில் நிலைக்க, கையும் அதை நோக்கி நீண்டது. "நோ ... டயர்டா இருக்கு கொஞ்சம் நேரமாவது தூங்கணும்" என்று சத்தமாகச் சொல்லிக் கொண்டு வலுக்கட்டாயமாக அடுத்த வரிசையில் பார்வையைத் திருப்பினாள். இப்போது கண்ணில் பட்டது ஆங்கிலப் புத்தகங்களின் வரிசையில், கே.எம்.முன்ஷி எழுதிய "கிருஷ்ணாவதாரா". எட்டு பாகங்கள் கொண்டது. கிருஷ்ணனைக் கடவுளாக வர்ணிக்காமல், சாதாரண மனிதனாகக் கொண்டு அவன் எதிர் கொண்ட பிரச்சினைகளை எப்படிச் சரி செய்தான் என்று எழுதப்பட்ட காவியம். ஒவ்வொரு பாகமும் பீமன், சத்யபாமா, யுதிஷ்டிரர் என்று ஒவ்வொருவரை மையமாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கியது. பெரிதாக ஆங்கில அறிவு தேவைப்படாத வகை. ஆனால் படிப்பவரை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு போய் கிருஷ்ணனின் காலத்தில் விட்டு விடும்.



அடுத்து அவளது கண்கள் போன திசையில் இருந்தவை புகைப்பட ஆல்பங்களும் பழைய பாடல் கேசட்டுகளும். வசுதாவிற்குப் பிடித்தமான விஷயங்களைப் பட்டியல் இட்டால் புத்தகங்கள், பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் மூன்றும் ஒன்றாகவே முதல் இடத்தில் இருக்கும், இது தான் முதல் என்று பிரித்துப் பார்க்க முடிந்ததே இல்லை. இவை மூன்றுமே பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று மாறிய போதும் வசுதாவின் விருப்பங்கள் மாறவே இல்லை. காலத்தின் மாற்றத்தோடு, அவற்றுடன் சேர்ந்து தானும் மாறிக் கொண்டே இருந்தாள்.



கண் போன திசையில் அவளது கைகளும் போன போது, சரியாக அடுக்கப்படாமல் நீட்டிக் கொண்டிருந்த புகைப்பட ஆல்பங்கள் எல்லாம் இவள் கை பட்டுக் கீழே விழுந்தன. எல்லாவற்றையும் எடுத்து அடுக்கிய போது திறந்து கிடந்த ஒரு ஆல்பத்தின் மீது பார்வை நிலைத்தது. அதனை எடுத்துக்கொண்டு மறுபடியும் ஊஞ்சலில் அமர்ந்தவளை மொபைல் போன் கவனத்தை திருப்பியது, அவளது அலுவலக தோழிக்கு பிறந்தநாள் என்பது திரையில் ஒளிர, அவளை அழைத்தவாறே மொபைலைக் காதுக்குக் கொடுத்தாள்.



"ஹாய் சித்ரா! ஹேப்பி பர்த்டே!"



"தாங்க் யூ வசுதா!"



"என்ன பண்ணிட்டு இருக்கீங்க? புது ஆஃபீஸ்ல ஸ்பெஷல் டேக்கு லீவு உண்டா?"



"ஹூக்கும்… அப்படி எல்லாம் ஏதும் இல்லை. நம்மளோட சிஎல் எடுத்தாலே ஒரு மாதிரி பாக்குறாங்க, இதுல ஸ்பெஷல் டேக்கு எங்க போக? அதெல்லாம் நம்ம ஆஃபீஸோட போச்சு. சொல்லப் போனால், இன்னைக்கு நிறைய வொர்க் இருக்குன்னு சீக்கிரமே வந்தாச்சு"



"வொர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?"



"ஓகே வசு! நாட் பேட். வாரத்தில அஞ்சு நாள் மட்டுமே வொர்க் பண்ணிட்டு இப்போ ஆறு நாள் ஆஃபீஸ் போகணுமேன்னு கடுப்பா வருது. மத்தபடி ஸ்மூத்தா போயிட்டு இருக்கு. உங்க ஹெல்த் எப்படி இருக்கு? வீடு செட் ஆகிடுச்சா"



"ஹெல்த்துக்கு என்ன, எப்பவும் போல இருக்கு. வீடு செட் ஆகிட்டே இருக்கு. நீங்க தான் இன்னும் வரலை"



"கண்டிப்பா வரேன் பா. சன்டே ஒரு நாள் தான் லீவுன்றதால அடுத்த வாரத்துக்கு தேவையான தோசை மாவுல இருந்து எல்லாம் ரெடி பண்ண வேண்டியது இருக்கு. நெக்ஸ்ட் வீக் ட்ரை பண்றேன். வரதுக்கு முன்னாடி ஃபோன் பண்றேன்"



"ஓகே … டேக் கேர். பை"



"பை பை"



'நல்ல வேளை, நான் திரும்பவும் வேலைக்கு போகலை' என்று பெருமைப் பட்டவளை, 'ம்…. வேலைன்னு ஒண்ணு உனக்குக் கிடைக்கலை. இதுல நீ போகலைன்னு பெருமைப் பட்டுக்க வேண்டாம்' என்று மனச்சாட்சி குமட்டில் குத்தியது.



மனதை மனச்சாட்சியிடம் இருந்து திருப்பி கையில் இருந்த ஆல்பத்தில் செலுத்தியவளை மறுபடியும் மொபைல் ஃபோன் அழைத்தது. இப்போது அவளது தோழி அழைத்துக் கொண்டு இருந்தாள். கல்லூரியில் முதல் நாள் அறிமுகம் ஆனவள், அன்று முதல் இன்று வரை தொடர்பு விட்டுப் போகாமல் இருப்பவள்.



உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் பொங்க, "ஹேய் ப்ரியா! ரொம்ப நாளாச்சு உன் குரல் கேட்டு, எப்படி இருக்க? உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்கார்? பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க? ஊருக்குப் போனியா, அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க? உன் வேலை எப்படி போயிட்டு இருக்கு?" மனப்பாடம் செய்து வைத்தது போல மடை திறந்த வெள்ளமாய் கேள்விகளை அடுக்கினாள்.



"அம்மா தாயே! கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. நான் நல்லா இருக்கேன், என்னைச் சுத்தி இருக்கிற எல்லாருமே நல்லா இருக்காங்க. நீ எப்படி இருக்கே, புது வீடு எப்படி இருக்கு? நிறைய வேலைய இழுத்து போட்டு செஞ்சிருக்க, உன் ஹெல்த் எப்படி இருக்கு, முக்கியமா உன் முதுகு வலி எப்படி இருக்கு?"



"முதுகு வலி அமோகமா இருக்கு ப்ரியா. எவ்வளவு ரெஸ்ட் எடுத்தாலும் உடம்பு வலி போற வழியே காணோம். அதோட சேர்த்து இந்த வயசுல வர்ற பிரச்சினைகள் வேற. போன வாரம் தானே பீரியட்ஸ் வந்ததுன்னு நினைக்கிற அளவுக்கு உயிர வாங்குது, ஒரு இடத்தில உட்காரக் கூட பயமா இருக்கு. உனக்கெல்லாம் எப்படி இருக்கு? எப்படி சமாளிக்கிற?"



"எனக்குமே ரொம்ப கஷ்டமா தான் இருக்கு பா. தைராய்டு ப்ராப்ளம் வேற இருக்கிறதால சமாளிக்கவே முடியலை. ஒரு மாசமா பெட் ரெஸ்ட்ல இருக்கேன், அம்மா வந்திருக்காங்க. இந்த வயசுலயும் அவங்க தான் என்னையும் கவனிச்சு வீட்டையும் கவனிக்கிறாங்க. உடம்ப கவனி வசுதா. நல்லா சத்தான ஆகாரமா சாப்பிடு"



"ம்ம். எல்லாம் சாப்பிடத் தான் செய்யறேன். உடம்புல ஒட்டுதான்னு தான் தெரியலை"



"உனக்கு தான் உங்க அத்தை எல்லாம் இருக்காங்களே, யாரையாவது கூப்பிட்டுக்க வேண்டியது தானே. கூப்பிட்டா வருவாங்கள்ள?"



"அதெல்லாம் கட்டாயம் வருவாங்க. நான் தான் எதுக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ணனும்னு கூப்பிடறதில்லை. அதுக்கு அவங்க கிட்ட எல்லாம் நல்லா டோஸ் கூட வாங்கி இருக்கேன், ஆனாலும் மாத்திக்க முடியலை"



"ம்ச். ஏன் பா இப்படி இருக்க! அவசரத்துக்கு கூட யாரையும் கூப்பிடாம இருந்தா உன் உடம்பு தானே கெட்டுப் போகுது. இனிமேலும் இப்படியே இருக்காத"



"ஓகே மேடம். நீங்க சொல்லிட்டா அப்பீலே இல்ல. அம்மாவ விசாரிச்சேன்னு சொல்லு, பக்கத்தில இருக்காங்களா?"



"இப்போ தான் பசங்க கூட கோவிலுக்கு போனாங்க. இன்னொரு நாள் பேசச் சொல்றேன். வச்சிடட்டுமா?"



"ஓகே ப்ரியா, பை"



கையில் இருந்த ஆல்பத்தை வெறித்துப் பார்த்தபடி ப்ரியாவின் வார்த்தைகளை அசை போட்டாள் வசுதா. ப்ரியா சொல்வது போல் அவளுக்கு பாசமான சொந்தங்கள் பலபேர் இருக்கத் தான் செய்கிறார்கள். எத்தனை பேர் இருந்தாலும் அம்மா என்ற உறவு தனி தானே.



"ஏன் குரலே ஒரு மாதிரி இருக்கு? உடம்புக்கு முடியலையா நான் கிளம்பி வரேன்" தொலைபேசியில் சிறிய குரல் வேறுபாட்டிலேயே கண்டுபிடிக்கத் தாயைத் தவிர யாரால் முடியும்??



அதே தொலைபேசியில் தினமும் பேசி இருந்தாலும், "உனக்கு முடியலேன்னா சொல்லி இருக்கலாமே நான் வந்து இருப்பேனே. நீ தான் எதையும் சொல்லவே மாட்டேங்கிற.‌ எத்தனை நாள் தான் தனியாவே சமாளிப்ப?" இதுவும் அக்கறை தான் என்றாலும் முன்னது போல உரிமையை இதில் பார்க்க முடியவில்லையே?? இத்தனை நேரம் தூரப் போயிருந்த வெறுமை நெருங்கி வந்தது.



பெருமூச்சுடன் ஆல்பத்தில் கவனம் செலுத்தினாள். இந்த ஆல்பம், மறக்க முடியாத சில நினைவுகளைச் சுமந்து கொண்டு இருப்பது. எல்லாமே டிஜிட்டல் மயமாகிப் போன நிலையில், ப்ளாக் அண்ட் வைட் காலத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களை ஸ்கேன் செய்து காலத்திற்கு ஏற்ப மாற்றி விட வேண்டும் என்று தனியே ஆல்பம் போட்டு வைத்தது. அதன் பிறகு வந்த எத்தனையோ வேலைகளில், இது பின் தள்ளப்பட்டு விட்டது.



மனதுக்குள் திடீரெனத் தோன்றிய உற்சாகத்துடன் இப்போது ஸ்கேன் செய்து விடலாம் என்று ஆல்பத்தைப் புரட்டினாள். முதல் பக்கம் மொத்தமாக அவளது பெற்றோரின் திருமண ஆல்பத்தில் இருந்து கிழிந்த ஒரு முழுப் பக்கம். ஒரே பக்கத்தில் கிட்டத்தட்ட ஆறு புகைப்படங்கள், இன்றைய பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவை விடச் சற்றே பெரிதாக.



அம்மா அப்பாவின் திருமண ஆல்பத்தின் எல்லா புகைப்படங்களும் அவளுக்கு எப்போதுமே பிடித்தமானவை.

முதல் இரண்டு புகைப்படங்கள் இருவரது தாய் தந்தை மற்றும் உடன் பிறந்தோருடன். நகரத்தில் வளர்ந்து நாகரீகத்தின் பிம்பங்களாகக் காட்சியளித்த தாயுடன் பிறந்தோர். நாகரீகத்தைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தந்தையுடன் பிறந்தோர். பொருளாதார ரீதியாகவும் இருந்த ஏற்றத் தாழ்வு அவர்களைப் பார்த்தாலே அப்பட்டமாகத் தெரியும்.



ஆறு பெண் பிள்ளைகளைப் பெற்ற மணமகளின் அன்னை, மூத்த பெண்ணின் திருமணத்தில் அணிந்திருந்த தங்க ஒட்டியாணமும், வைரத்தில் இழைத்த காதணிகளும், மூக்குத்தியும், ஏழு பெண்களைப் பெற்ற மணமகனின் தாய் மஞ்சள் கயிறோடு நின்றதும் கருப்பு வெள்ளை புகைப்படத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. இப்படிப்பட்ட பின்னணியுடன், ஆளுக்கு அரை டஜனுக்கு மேல் உடன் பிறந்தாருடன் பிறந்த மணமக்களின் முகத்தில் வாடாத புன்னகை. அது தான் எப்படி என்று இன்று வரை புரியவில்லை.



அம்மா அப்பாவின் முகங்களைப் பெருமிதத்துடன் பார்த்தவள், "ப்ளாக் அண்ட் வைட்" என்று முணுமுணுத்தாள். எப்போதும் போல 'இந்த அம்மா மட்டும் இவ்வளவு வெள்ளையா இருந்துட்டு என்னை இப்படி மிக்ஸ் பண்ணியிருக்கக் கூடாது' வழக்கம் போலத் தாயின் நிறத்தில் பொறாமை.



வசுதாவின் பிம்பம் தாய் பாதி தந்தை மீதி என்று சரிவிகிதத்தில் செய்த "பெர்ஃபெக்ட் ப்ராடக்ட்". நெற்றி, கண், கன்னம் எல்லாம் தாயைப் போல இருந்தால், மூக்கும் வாயும் தந்தையைப் போலவே இருக்கும். அதிலெல்லாம் அவளுக்கு ஏகப் பெருமை தான், இருபக்க சொந்தங்களும் இன்னாரது பெண் என்று பார்த்தவுடன் சொல்லி விடுவார்கள். அதே நேரத்தில், அவளது நிறம் தாய் தந்தையின் சரிபாதி கலவையாக இருந்ததைத் தான், பல நேரங்களில் அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. கூடவே தாயின் பட்டுப் போன்ற மென்மையான சருமம் எப்போதும் அவளுக்குள் பொறாமையைத் தான் தூண்டி விட்டிருக்கிறது.



"போம்மா! உன் கை பாரு எவ்வளவு சாஃப்ட்ஆ இருக்கு. ஆனா என்னைப் பாரு, எனக்குப் பிடிக்கவே இல்லை. அவன் மட்டும் அப்படியே உன் கலர்ல இருக்கான், அப்போ என்னைப் பிடிக்காமல் தான் பெத்து இருக்க" என்று தாயின் நிறத்தில் இருக்கும் தம்பியையும் சேர்த்து வறுப்பாள்.



தாய் வழிச் சொந்தங்கள் பலரும் தங்கள் பங்குக்கு அவளது பொறாமைத் தீயில் சில சமயங்களில் நெய்யும், ஏன் பல சமயங்களில் பெட்ரோலும் கூட ஊற்றினார்கள்.



தாயை எதிரியைப் போலவே பார்த்திருந்த காலங்கள் அவை. 'எப்போதிருந்து?' என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் கைகள் தானாக ஆல்பத்தில் அடுத்த பக்கத்தைத் திருப்ப, அதிலிருந்த புகைப்படங்கள் அதற்கான விடையாக இருந்தன.



முதல் புகைப்படத்தில் தாயின் மடியில் ஏழெட்டு மாதக் குழந்தையாக, வசுதா. அதற்கடுத்த புகைப்படத்தில் தாயின் கைகளில் குழந்தையாக அவளது தம்பி இருக்க, வசுதா தாயின் அருகே நின்று கொண்டிருந்தாள். அவளது தந்தை எடுத்த புகைப்படமாக இருக்க வேண்டும். குலதெய்வம் கோவிலில் இருவருக்கும் மொட்டை போட்ட பிறகு எடுத்த புகைப்படம்.

அப்போது அவளுக்கு நான்கு வயது தான் இருக்கும் என்றாலும், சில விஷயங்கள் பசுமரத்தாணி போலப் பதிந்து இன்றும் ஞாபக அடுக்குகளில் வலம் வரத்தான் செய்கின்றன.



காலம் காலமாக உள்ள வழக்கமாக, இரண்டாவது குழந்தையின் மேல் முதல் குழந்தைக்கு வரும் உணர்வு.

அதைப் பொறாமை என்பதா, பெற்றோரின் மேல் இருக்கும் உரிமை உணர்வு என்பதா, இது என் இடம், உனக்கு முன்பே இங்கே இருப்பவள்/இருப்பவன் நான் என்று காட்டிக் கொள்ளும் முயற்சியா? அதுவரையில் தனியே குளித்து, தனியே சாப்பிட்டு, தனியே உறங்கி மிகுந்த முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளும் குழந்தைகள் கூட தம்பியோ தங்கையோ வரும் போது பச்சிளம் குழந்தைகளாக மாறி விடுவதுண்டு. பெற்றோரின் முயற்சி இல்லாமல் புரிய வைக்கவே முடியாது.



வசுதாவிற்கும் அப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் நினைவில் நிற்கிறது. தந்தையின் பணியிட மாறுதலை ஒட்டி புதியதாக ஒரு ஊருக்குக் குடித்தனம் வந்திருந்தது, வசுதாவின் குடும்பம். அதாவது கூட்டுக் குடும்பத்தில் இருந்து இவர்கள் நால்வர் மட்டுமே இடம்பெயர்ந்து இருந்தார்கள்.



கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்த வசுதா அத்தனை பெரிய வீட்டில் உல்லாசமாக சுற்றித் திரிந்தாள். சின்ன வயதுக்கே உண்டான துறுதுறுப்பு அக்கம்பக்கம் எல்லாம் ஆராயச்சொன்னது. அப்படி அவளுக்குக் கிடைத்த, மிகவும் பிடித்த விஷயம் வீட்டுக்கு எதிரே இருந்த பெட்டிக்கடை. அங்கே இருந்த மிட்டாய்கள்.



தாயுடன் சில நேரங்களில் காய்கறிகள் தேங்காய்ச் சில் என்று வாங்கச் செல்லும் போது அவளுக்கும் மிட்டாய்கள் கிடைக்கும், ஆனால் சாலைக்கு எதிர்ப்புறம் இருந்த கடைக்குத் தனியாகச் செல்ல அவளுக்கு அனுமதி இல்லை. தாய், தம்பியிடம் கவனத்தை வைத்திருந்த ஒரு நாள் இவள் கிடைத்தது வாய்ப்பு என்று கடைக்கு ஓட, மிட்டாயைக் கையில் வாங்கும் வரை எல்லாமே நன்றாகவே நடந்தது.



அன்று மாலை வீட்டுக்கு வந்த தந்தை அவளைப் பரணில் தூக்கி உட்கார்த்தி விட்டார். உர்ரென்ற முகத்துடன் வலியை சகித்துக் கொண்டு இருந்தாளே ஒழிய தந்தையின் பேச்சுக்குக் கட்டுப் படவே இல்லை.



"தனியா கடைக்கு போகக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா? இப்போ பாரு அடிபட்டு வந்து நிக்கிற, சைக்கிளா இருந்ததால சின்ன அடியோட போச்சு. இல்லேன்னா என்ன ஆகியிருக்கும்? இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்னு சொன்னா தான் இறக்கி விடுவேன், அதுவரைக்கும் அங்கேயே இருக்க வேண்டியது தான்"



'நான் ஒண்ணும் தப்பா செய்யலை. சாரி எல்லாம் கேட்க முடியாது' மனதுக்குள் சொல்லிக் கொண்டாளே தவிர வாய் திறந்தாள் இல்லை. கண்களோ, தாய் தந்தை இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்தது. இவளை இங்கே உட்கார வைத்து விட்டு தம்பியைக் கொஞ்சினால் முறைக்காமல் என்ன செய்வாள். அந்த நேரத்தில் தாய் ஏதாவது நமக்காக பேசுவாரா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது அந்தப் பிஞ்சு உள்ளம். அப்படி ஒன்று நடந்ததாக வசுதாவிற்கு இப்போதும் கூட நினைவே இல்லை, ஒரு வேளை தந்தை கண்டிக்கும் போது இடையிட வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.



ஆனால், ஆறுதலுக்காகத் தாயின் முகத்தைப் பார்த்து ஏமாந்தது மனதில் நன்றாகவே பதிந்து போனது. அன்றுதான் முதன்முதலில் தாயை விட்டு விலக ஆரம்பித்தாள். தந்தையின் கண்டிப்பையும் அவள் கண்டுகொள்ளவே இல்லை. "பரண் மேல உட்கார வச்சிருக்கேன். கொஞ்சமாவது பயப்படறாளா பாரு. இந்த வயசிலயே அவளுக்கு இருக்கிற பிடிவாதம் இருக்கே…" என்று பரணில் எட்டிப் பார்த்தவருக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் போனது, அவரது அருமை மகள் நன்றாகப் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.



"இவளை என்ன தான் செய்ய?" செல்லமாக அலுத்துக் கொண்ட தந்தை அவளைப் படுக்கை அறைக்குள் தூக்கிச் சென்றார். (அப்பா அப்பா தான்!)



தூக்கம் கலைந்து கண்விழித்த வசுதா சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது கண்டு பயந்து தான் போனாள். பக்கத்தில் தாய் தந்தை தம்பி என்று யாரையும் காணவில்லை. எழந்து உட்கார முயற்சி செய்தவளால் முடியாமலே போனது. தலையில் ஏதோ இடிக்க, பயத்தில் சத்தமாக அழலானாள். சற்று நேரத்தில் தந்தை, கட்டிலின் அடியில் இருந்து அவளைத் தூக்கியது மட்டுமே அவளது நினைவுகளில் நின்றது.



அன்றைய இரவு தாயுடன் தம்பி கட்டிலில் படுத்திருக்க, தரையில் பாயை விரித்து வசுதாவுடன் அவளது தந்தை படுத்துக் கொண்ட போது தூங்காமல் அடம் பிடித்தாள். எப்படியோ தூங்கிப் போனவளுக்கு முந்தைய நாளின் பயத்தாலோ வேறு ஏதோ உள்ளுணர்வாலோ தூக்கம் கலைந்த போது, இவள் மட்டுமே பாயில் இருக்க எழுந்து பார்த்தவள் கண்ட காட்சியில் தந்தையையும் அவளது எதிரி பட்டியலில் உடனடியாகச் சேர்த்து விட்டாள்.



பிற்காலத்தில், தனக்கு சீதனமாக அந்தக் கட்டில் வந்த போது தாய் தந்தையின் செயல்களில் ஓரளவு நியாயம் இருந்ததாகப் புரிந்தது. அவர்கள் செய்த தவற்றை இவள் தனது பிள்ளைகளுக்கு செய்யவில்லை‌, இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை விஷ்ணு அர்ஜூனை நன்றாகவே கவனித்துக் கொண்டான், கூடவே அவனது பெற்றோரும். இத்தனைக்கும் வசுதாவின் நினைவில் மட்டுமே இருந்த கேள்விகளை அர்ஜூன் நேரடியாகவே கேட்டு விட்டான்.



"ஹைய்யா! எனக்கு தம்பி பாப்பா பிறந்தாச்சு. அம்மா! நான் தான் ஃபர்ஸ்ட் பாத்தேன் தெரியுமா? ரொம்பக் குட்டியா இருக்கானே, எப்போ பெரிசாவான். நாம செலக்ட் பண்ணின பேர் தானே வைக்கப் போறோம்?" மருத்துவமனையில் சந்தோஷமாகத் தம்பி வந்ததைக் கொண்டாடிக் கொண்டு இருந்தவன், வீடு வந்ததும் முற்றிலும் வேறாக மாறிப்போனான். ஆதித்யா தூளியில் உறங்கி இருக்க, ஒருவர் மட்டுமே படுக்கலாம் போல இருந்த கட்டிலில் வசுதாவின் மேலேறிப் படுத்துக் கொண்டான்.



நேற்று தான் பிள்ளை பெற்ற உடம்பு என்று அனைவரும் பதறிப் போக, வசுதா வலிகளைப் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.



"அம்மா! இனிமேல் நான் உங்கூட படுக்கக் கூடாதா? தம்பிய மட்டும் தான் பாத்துப்பியா? அவனை மட்டும் தூக்குற, என்னையும் தூக்கு. அர்ஜூன் உனக்கு வேண்டாமா? … … " இப்படிப் பல கேள்விகளுடன் விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.



"அஜ்ஜூ! குட் பாய் தானே, அடம் பிடிக்கக் கூடாது. தாத்தா உனக்கு டெய்ரி மில்க் வச்சிருக்கேன் பாரு" கண்களில் ஆர்வம் மின்ன தாத்தாவின் கைகளில் இருந்த சாக்லேட்டைப் பிடுங்கிக் கொண்டானே தவிர தாயிடம் இருந்த பிடியை தளர்த்தி விடவில்லை.



"அஜ்ஜூ! மாமா கிட்ட வா, உனக்கு நான் தாமஸ் அன் ஃப்ரண்ட்ஸ் வாங்கி வச்சிருக்கேன் பாரு. பேட்டரியே தரல டா அந்தக் கடைல, நாம போய் வாங்கிட்டு வரலாம் வா. அப்புறம் நீ ரொம்ப நாளா கேட்டியே, பார்னி பொம்மை அது கூட எங்க இருக்குன்னு மாமா கண்டு பிடிச்சிட்டேன். நீ குட் பாயா மாமா கிட்ட தூங்கு வா. இப்படி அழற பையனுக்கு ஒண்ணும் கிடையாது"



"மாமாஆஆஆ! அஜ்ஜூ குட் பாய் தான். அதான் சமர்த்தா அம்மா கிட்ட படுத்து இருக்கேன். நீ தான் என்னை தூங்க விடமாட்டேங்கிற. பொம்மையெல்லாம் நாளைக்கு பாத்துக்கிறேன். நீ போய் தூங்கு" என்று மாமனுக்கு பெரிய பல்ப் கொடுத்தான்.



"ஹேய் அஜ்ஜூ! நீ இப்போ பிக் பிரதர் தானே! நாளைக்கு நாம போய் குட்டித் தம்பிக்கு தொட்டில், பொம்மை எல்லாம் வாங்கணுமே, சீக்கிரம் மாமாவோட போய் தூங்கு" வசுதா உள்ளூரில் இருந்த தந்தை வீட்டுக்கு வந்திருக்க, வேலை நாள் என்பதால் விஷ்ணு வரவில்லை. பிள்ளையை அலைபேசியில் சமாதானப் படுத்த முயன்றான்.



"நான் தூங்கத் தானே போறேன். எல்லாரும் ஏன் தான் இப்படி பண்றீங்களோ?"



எந்த வித சமாதானங்களும் அவனிடம் எடுபடாமல் போக, வசுதா, தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி விட்டாள். அழும் பிள்ளையைத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தவள், அவன் நன்றாக உறங்கிய பின்பே தம்பியை அழைத்தாள். அப்போதும் தனக்கு ஏன் இப்படி நடக்கவில்லை என்று தோன்றாமல் இல்லை.

------

ஒரே புகைப்படத்தில் நீண்ட நேரம் பார்வையைப் பதித்து இருந்தவள், அடுத்த பக்கத்தைத் திருப்பினாள். இதில் வசுதா மற்றும் அவளது தம்பியின் பள்ளிக் கால படங்கள். தம்பியின் படங்கள் யாவும் ஒவ்வொரு வருடமும் அவன் சென்ற சுற்றுலாக்களை விவரிக்க, இவளது படங்கள் இவளது நாட்டிய நிகழ்ச்சி, பள்ளியில் பரிசு பெற்ற நிகழ்வுகள் என்று இருந்தது. இவள் படித்தது தமிழ் வழிக் கல்வியில், தம்பியோ மேட்ரிகுலேஷன் பள்ளியில். எல்லா வீடுகளிலும் நடைபெறும் சாதாரண விஷயமாகத்தான் இருந்திருக்க வேண்டும், இவளுக்குமே அது ஒரு பெரிய விஷயமாக என்றுமே இருந்ததில்லை. சொல்லப் போனால் தம்பியை வேறு பள்ளியில் சேர்த்த போது 'நல்லவேளை அவன் இங்கேயும் வரலை' என்று நிம்மதி அடைந்தாள். படிப்பு மட்டும் அல்லாமல் விளையாட்டு, கலைகள் என்று எல்லா விஷயங்களிலும் இவள் கலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் தம்பி ரொம்பவே பின் தங்கி இருந்தான் என்பது அவளுக்கு எவரெஸ்ட் ஏறியது போல இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கொள்வாள்.



தாயின் மீதிருந்த கோபம் மட்டும் குறைந்த பாடில்லை. விவசாயம் பொய்த்துப் போக, இவளது குடும்பம் மறுபடியும் கூட்டுக் குடும்பமானது அவளுக்கு வசதியாகப் போயிற்று. அத்தைகளின் திருமணம், அவர்களது பிள்ளைகளின் வருகை என்று அவளது பெற்றோர் பிஸியாக, இவள் கவனம் தன்னைக் கொண்டாடும் மனிதர்களிடம் திரும்பியது. பாட்டிமார் இருவரும் முதலில் பேரன் பிறப்பான் என்று எதிர்பார்த்திருப்பார்கள் போலும், முடிந்த வரை இவளை கண்டு கொள்ளாமல் இருந்துவிடுவார்கள். கொஞ்சியதும் இல்லை பழித்ததும் இல்லை. ஆனால் இருவழி தாத்தாக்களும் அப்படி இல்லை இவளைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.



கூடவே இருந்து இவளை வழிநடத்திய தந்தையின் தகப்பனும், விடுமுறை நாட்களில் எல்லாம் தவறாது அழைத்துச்சென்று தங்கத்தட்டில் தாங்காத குறையாக இவளை சீராட்டும் தாயின் தகப்பனும் இவளை எல்லா வழிகளிலும் மெருகு ஏற்றினர்.



"வெரி குட் டா! இதே மாதிரி எப்பவும் நல்லா படிச்சு கலெக்டர் ஆகிடணும்" கிராமத்துத் தாத்தாவின் குரல் இப்போது கூட அவளது காதுகளில் எதிரொலித்தது. நகரத்தில் இருந்த தாத்தாவோ, அவளுக்கு வாசிப்பை அறிமுகப் படுத்தினார், புத்தகங்களின் வாசனையை அறிமுகப் படுத்தினார். அதோடு கூட ஆங்கிலத்தையும் அறிமுகப் படுத்தினார். இவள் தேடித் தேடிப் படித்தாள் என்றால், அந்தப் பெருமையின் பெரும் பங்கு இவர்கள் இருவரையே சாரும்.



தாத்தாக்களின் நினைவுகளில் திளைத்தவள், அந்தக் குறிப்பிட்ட புகைப்படத்தைப் பார்த்தபோது கண்கள் தானாகப் புத்தக அலமாரியின் மறுபுறம் சென்றன. அங்கே இருந்த சிறிய குருவாயூரப்பனது போட்டோ ஃபிரேம் அவளது தம்பி குருவாயூர் சென்றபோது இவளுக்கென வாங்கி வந்தது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தச் சிறிய போட்டோ பிரேமைக் கண் போலப் பாதுகாத்து வருகிறாள். 'ஆனாலும் என்னை எங்கேயும் அனுப்பலை' என்று இப்போது கூட அதைப் பார்க்கும் போதெல்லாம், மனம் சிணுங்கத் தான் செய்கிறது.



ஒரு தடவை சாப்பிடாமல் சத்யா கிரகம் கூட செய்து இருக்கிறாள், குளிர் காலத்தில் வெறும் தரையில் படுத்து காய்ச்சல் வரவைத்து எல்லாரையும் பீதியடைய வைத்திருக்கிறாள். அப்போதும் கூட பள்ளிக் காலத்தில் அவளுக்கு எந்தச் சுற்றுலாவும் செல்ல அனுமதி கிடைத்ததில்லை. "வசு! நீ இப்போ பெரிய பொண்ணாகிட்ட, அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுவாங்க. சொன்னா புரிஞ்சிக்கணும்" என்ற தந்தையின் சமாதானங்களைக் காற்றோடு பறக்க விட்டாள்.



அவள் தான் சற்று நேரம் முன்பு நடந்த சம்பாஷணையைக் கேட்டிருந்தாளே!

"ஏம்மா! அவளுக்குத் தான் பதினாலு வயசு ஆகிடுச்சே. இப்போ அவளுக்குக் கொஞ்சம் விஷயம் புரியும். மாத்திரைகளை மறக்காம சாப்பிடணும்னு சொல்லி அனுப்புவோம். ஒரேயடியா வேண்டாம்னு சொன்னா எப்படி?"



"இவளுக்கு மட்டும் இல்லாம, கூடப் போற டீச்சர்ஸ் கிட்டயும் சொல்லணும். அவங்க சரியா புரிஞ்சிக்கணும் அப்புறம் இவ டூர் போற ஜோர்ல மாத்திரை சாப்பிட மறந்திட்டா எல்லாருக்கும் பிரச்சினை. கூடவே டாக்டரையுமா கூட்டிட்டு போவாங்க?"



"நீ சொல்றதும் கரெக்ட் தான். எதுக்கு இவளோட ஹெல்த் பத்தி எல்லாரும் தெரிஞ்சிக்கணும்?"



இதைக் கேட்டவளுக்குப் புரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான். அவளுக்கு ஏதோ பெரிய வியாதி இருக்கிறது, ஒருநாள் மாத்திரை சாப்பிடாவிட்டாலும் நிலைமை மோசமாகி விடும். அவள் தான் கிட்டத்தட்ட நினைவு தெரிந்த காலத்திலிருந்தே அந்த மாத்திரைகளை விழுங்கி வருகிறாளே, அதனால் பயந்து போய்த் தனக்குள் ஒடுங்கி விட்டாள்.



பஞ்சாயத்து டிவியில் பார்த்த "நினைவே ஒரு சங்கீதம்" அவளது பயத்தை பன்மடங்கு அதிகரித்தது. அவளுக்குத் தான் அதில் வரும் ஹீரோயினைப் போல அடிக்கடி தலைவலி வருகிறதே! ஒரு வேளை இவளுக்கும் ஏதாவது நடந்து விடுமோ என்று படமாக இருந்தது. வழக்கம் போல மனதுக்குள் மட்டுமே மருகினாள்.



யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைத்த விஷயங்கள் எல்லோருக்கும் தெரியும் காலமும் வந்தது.
 

Author: siteadmin
Article Title: அத்தியாயம் - 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.