• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 8

Puvana

Active member
Jun 19, 2024
182
3
43

நவராத்திரி 8





ஸ்ரீலலிதை பண்டன் மீது படையெடுத்து வந்ததை அடுத்து சூன்யக நகரத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. இதைக் கண்ட பண்டன், மந்திராலோசனை நடத்தி குடிலாக்ஷனை யுத்தத்திற்கு ஆயத்தமாக ஆணையிட்டான்.



துர்மதன் என்னும் அசுரவீரனை அக்ஷௌஹிணி சேனையுடன் தேவியுடன் போர் புரிய முதலில் அனுப்பினான். வீராவேசமாக முதலில் களம் புகுந்த ராக்ஷஸப் படைகள், சம்பத்கரீயின் யானைப் படையைச் சமாளிக்க முடியாமல், போன வேகத்திலேயே பொறிகலங்கிப் பதறி ஓடி வரலாயினர்.



அசுரர்களின் அட்டகாசம் கண்டு அடங்காச் சினங்கொண்ட சம்பத்கரீ தேவி, சக்திகள் சூழ வந்து அவர்களை தாக்கினாள். எங்கும் ரத்த ஆறு ஓடியது.



ரத்தத்தினால் சிவந்ததும், கீழே தள்ளப்பட்ட வெண்குடைகளால் நிறைந்ததுமான யுத்தகளம், பிரளயகால சந்தியாக்காலம் போல விளங்கிற்று.



இங்ஙனம் முறியடிக்கப்பட்ட அசுர சேனை ஆக்ரோஷமாக மீண்டும் தாக்க, சக்திகளும் பயங்கர ஆயுதங்களால் தைத்யர்களின் சிரங்களை அறுத்துக் குவித்தனர்.



தேவியர்களின் உக்ர பராக்கிரமத்தைத் தாங்க மாட்டாமல் அசுரர்கள், கூக்குரலிட்டு ஓட ஆரம்பித்தனர்.



இதைக் கண்ட துர்மதன், ஒட்டகம் மீதேறி வந்து சம்பத்கரீ தேவியின் சேனையை முறியடித்தான்.



இதனைக் கண்டு வெகுண்ட சம்பத்கரீ தேவி, ரணகோலாஹலம் என்னும் குஞ்சரத்தின் மீதேறி வந்து, பாணங்களை மழையாகப் பொழிந்தாள்.



அவள் அம்பை எடுப்பதிலும், தொடுப்பதிலும் இருந்த வேகம், பிறர் அறியாவண்ணம் இருந்தது. மிகவும் உக்கிரமாக யுத்தம் செய்தனள். இருவருடைய பாணங்களும் ரீங்காரத்துடன் எழும்பி, சூரியனை மறைத்தது.



ரணகோலாஹலம் என்னும் கரீந்திரன், தனது துதிக்கையாலும், வாலாலும், பிளிறும் சப்தத்தினாலும் பல அசுரர்களை சாமர்த்தியமாகக் கொன்றது.



துர்மதன் மிகுந்த ஆத்திரத்துடன் ஒரு பாணத்தால் சம்பத்கரீ தேவியின் மகுடத்திலிருந்து ஒரு மணியைத் தரணியில் தள்ளினான்.



கோபத்தினால் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, தேவி பல பாணங்களை அவன் மார்பில் பாய்ச்சி அவன் உயிரை பறித்தாள்.



சக்தி சைன்யங்கள் அசுர சேனையின் இதர பிரமுகர்களைக் கொன்று வீழ்த்தினர்.

அடிபட்டுத் தப்பிப் பிழைத்த சிலர், சூன்யக நகரத்திற்கு ஓடிச் சென்று பண்டனிடம் முறையிட்டனர



சம்பத்கரீ தேவியால் துர்மதன் அழிந்ததைக் கேட்ட பண்டன், கோபத்தினால் கத்தியை உதறி, குடிலாக்ஷனைப் பார்த்து,



“தேவராலும், அசுரராலும் வெல்ல முடியாத நமது துர்மதன் கேவலம் அபலையான அந்தத் துஷ்டையால் எப்படிக் கொல்லப்பட்டான்?”



“இது நிச்சயம் தெய்வச் செயலே ! சரி, அவளை ஜெயித்து இங்கே இழுத்து வருவதற்கு, மாயம் மற்றும் கபட யுத்தத்திலும் சிறந்து விளங்கும் துர்மதனின் சகோதரனாகிய குருண்டனை அனுப்பு” என்றான்.



துர்மதனின் சகோதரனான குருண்டன் மிகவும் சோகமாகவும், கோபமாகவும் ரணகளம் சென்று, எண்ணிறந்த பாணங்களை சக்திகளின் மீது வர்ஷித்தான்.



அன்றியும் சம்பத்கரீ தேவியை நோக்கி, “ஏய் பாபியே ! என் தம்பியைக் கொன்றதாக வீணாகக் கர்வம் கொள்ளாதே, இந்தக் கணமே, உன்னை யமலோகம் அனுப்புகிறேன்.”



“அதி மிருதுவான உனது உடலிலிருந்து பெருகுகின்ற மற்றும் ரணகளத்தில் மிக அபூர்வமானதுமான ஸ்த்ரீயின் உதிரத்தை ரணபூதனைகள் பருகட்டும். இதோ எனது பாஹூபலத்தைப் பார் !!” எனத் தனது சேனைகளை உற்சாகப்படுத்தினான்.

அவனது பரிவாரத்தை அழிக்க சக்திகள் கிளம்பிய போது, அஸ்வாரூடா தேவி அங்கு வந்து, “சகி சம்பத்கரீ ! இவனோடு நான் யுத்தம் செய்ய எனக்கு அனுமதி கொடு. ஒரு க்ஷணத்தில் இவனைக் கொல்கிறேன். தோழியான என் வேண்டுகோளை மறுக்காதே” என்றாள்.



இதைக் கேட்ட சம்பத்கரீதேவி, புன்னகையுடன் தனது சேனைகளைத் திருப்பி விட்டாள்.

கடலின் அலை போல அதிவேகமான குதிரைகளின் மீதேறிய சக்திகள் பலர் சூழ, அஸ்வாரூடா தேவி அசுரனுடன் சமர் செய்யக் கிளம்பினாள்.



குருண்டனின் தூண்டுதலால், அசுரர்கள் பூரண பலத்துடன் சக்திகளைத் தாக்க, அவர்களும் அசுரர்களைத் தாக்க மிக பயங்கர யுத்தம் தோன்றியது.



அஸ்வாரூடா தேவி, தனது அபராஜிதம் என்னும் அஸ்வரத்னத்தின் மீதமர்ந்து, அவளது பின்னல் அசைய, சந்திர லை ஜ்வலிக்க, மணிவில்லை கையிலெடுத்து பொற்பிடிகளுள்ள சரங்களை வர்ஷித்தாள்.



கோபம் கொண்ட குருண்டன், தேவி மீது பல பாணங்களை வர்ஷித்தான்,தேவியின் குதிரை தனது கூரிய குளம்புகளால் பல அசுரர்களைக் கொன்றது. தனது கர்ஜனையால் பலரை மூர்ச்சை அடையும்படி செய்தது.



தேவி தனது திவ்யமான பாச ஆயுதத்தை பிரயோகிக்க, அதிலிருந்து பாம்பு போலப் பல்லாயிரம் பாசங்கள் தோன்றிப் பகைவர்களைக் கட்டி மூர்ச்சை அடையச் செய்தது.



தனது சேனை கட்டுண்டதைக் கண்ட குருண்டன் சினத்துடன் தேவியின் மணிமய வில்லின் நாணை அறுத்தான்.



சினங்கொண்ட தேவி, வில்லை எறிந்துவிட்டு அங்குசத்தினால் அவன் மார்பைப் பிளந்தாள். இடி விழுந்த மரம் போல் குருண்டன் பூமியில் வீழ்ந்து இறந்தான்.



அந்த அங்குசத்திலிருந்து தோன்றிய சில பூதனைகள் பாசத்தால் கட்டுண்ட பகைவரைப் புசித்தனர்.



இதில் தப்பிப் பிழைத்த சிலர் 20 அக்ஷௌஹிணி சேனைகளுடன் குருண்டன் கொல்லப்பட்டதை பண்டனிடம் கூறினர்.



இதைக் கேட்ட பண்டாசுரன் சர்ப்பம் போலப் பெருமூச்சு விட்டான்.



அசுர சேனை அழிக்கப்பட்டதை அறிந்த பண்டாசுரன், குடிலாக்ஷனைப் பார்த்து, “கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று இது. மஹா பலசாலிகளான இரு சகோதரர்களும் ஒரு பெண்ணால் கொல்லப்பட்டனரா ?”



“நிச்சயம் இது அந்த மாயாவினியின் மகிமையே ! நூறு அக்ஷௌஹிணி சேனையுடன் யுத்தத்தில் மிகவும் கொழுத்தவர்களான கரங்கன் முதலிய ஐந்து சேனாதிபதிகளை அனுப்பு. அவர்கள் நிச்சயம் அவளை வெல்வார்கள்” என்றான்.



அதன் படியே குடிலாக்ஷன், கரங்கன் முதலிய 5 சேனாதிபதிகளைப் போரிட அனுப்பினான்.



கஜங்களின் கர்ஜனையும், குதிரைகளின் கோஷத்தாலும், ரத சக்கரங்களின் சப்தமும், வீரர்களின் அட்டகாசமும் வானளாவியது.



இதைக் கண்ட தேவர்கள், சக்தி சேனைக்கு பங்கம் உண்டாகுமோ என அஞ்சினர்.

கரங்காதிகள் ஸர்ப்பிணி என்னும் மாயையைப் படைத்தனர். கறுத்த உருவமும், தொங்கிய உதடுகளும் கொண்ட அது, பல்லாயிரக்கணக்கான பாம்புகளை அணிந்து சக்திகள் முன் தோன்றி, அவர்கள் மனம் நடுங்கும்படி செய்தது.



இரு சேனைகளுக்கும் இடையில் மிகவும் கடுமையான பயங்கர யுத்தம் தோன்றியது. பிணங்கள் மலை போலக் குவிந்ததால் ரதங்கள் விரைந்து செல்ல முடியாமல் அசைவற்று நின்றன.



எங்கும் ரத்த ஆறு ஓடியது. ஆயுதங்கள் உராய்ந்தலால் அக்னி தோன்றி, பளீர் பளீர் என்று மின்னியது.



ஸர்ப்பிணியால் படைக்கப்பட்ட தக்ஷ, கார்கோடக துல்யர்களான சர்ப்பங்கள் தாரதம், வத்ஸநாபம், காலகூடம், சௌராஷ்டிரம், பிரம்மபுத்ரம், பிரதீபநம், சௌக்லிகேயம் போன்ற கொடிய விஷங்களைக் கக்கின.



பல்வேறு நிறங்களையும், பல்வேறு தலைகளையும் கொண்ட சர்ப்பங்கள் அவளது உடலின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் கோடிக்கணக்கில் படைக்கப்பட்டன.



அவை அனைத்தும் விஷ ஜ்வாலைகளை கக்கிக் கொண்டு சக்திகளின் கை, கால்களைக் கட்டி இம்சித்தன. அவற்றை அடிக்கும் போது, ஒன்று நூறானது.



என்ன செய்வதென்று சக்திகள் திகைத்து நிற்க, நூறு கழுதைகள் பூட்டிய ரதத்திலிருந்து கரங்கன், பிரளய கால மேகம் போல சரங்களை வர்ஷித்தான்.



காகவாசிதன் என்னும் சேனாதிபதி கஜத்தின் மீதிருந்து சக்ரத்தால் தாக்கினான். வஜ்ரதந்தன் என்பவன் ஒட்டகத்தின் மீதிருந்து வஜ்ரத்தினால் தாக்கினான். வஜ்ரமுகன் கழுதை மீதிருந்தும், வஜ்ரலோமன் கழுகு மீதிருந்தும் சரங்களை வர்ஷித்தான்.



ஒரு புறம் ஐந்து சேனாதிபதிகளும், இன்னொரு புறம் நூறு அக்ஷௌஹிணி சேனையும், மற்றொரு புறம் க்ஷணத்திற்கு க்ஷணம் கோடிக்கணக்கான விஷ சர்ப்பங்களைப் படைக்கும் ஸர்ப்பிணியுமாக சக்திகளைத் தாக்க,



ஸ்ரீலலிதையின் தாடையிலிருந்து தோன்றிய நகுலேஸ்வரி என்னும் சக்தி, கருடன் மீதேறி வந்து ஸர்ப்பிணியின் முன் நின்றாள்.



சுமேரு மலை நடந்து வந்ததை போல் கருடன் ரணகளத்தில் பிரவேசித்தார். கோபத்தினால் சிவந்த கண்கள் கொண்ட நகுலா தேவி, தன் வாயை திறக்க, அவளுடைய 32 பற்களிலிருந்தும் 32 கோடி ஸ்வர்ண மயமான நகுலங்கள்(கீரி) தோன்றின.



அவை வாலை உதறிக் கொண்டு, கூரிய நகங்களாலும், கூரிய பற்களாலும் ஒரு சர்ப்பத்திற்கு ஒரு கீரி வீதம் அனைத்தையும் கடித்துத் துண்டாக்கின. ஒன்று கூட மீதமில்லாமல் அனைத்தும் அழிந்தன.



கோபத்துடன் முன்னேறி வந்த ஸர்ப்பிணியின் மீது நகுலா தேவி, குரூரமான கருடாஸ்திரத்தைப் பிரயோகிக்க, அது ஸர்ப்பிணியின் மாயையை நீக்கி லயமாக்கியது.



இதைக் கண்டு அடங்காச் சினங்கொண்ட அசுரர்கள் ஐவரும் ஒன்று சேர்ந்து நகுலேஸ்வரியின் மீது சரங்களை வர்ஷித்தனர்.



அவள் ஒருத்தியாகவே கருடாரூடையாக நின்று ஐவரையும் எதிர்த்தாள். பற்பல ஆயுதங்களால் அசுரர்கள், நகுலங்களை அடிக்க, அவை தமது கூரிய பற்களால் அவர்களது மர்ம ஸ்தானங்களில் கடித்தன.



இதை பொறுக்க மாட்டாத அசுரர்கள் பலர் ஆகாயத்தில் மறைந்தனர். அங்கும் அவர்களை விடாது அவை சரமாரியாக தாக்கின.

அவர்கள் தலை மீது திடீர் திடீரென்று குதித்தன. சிறிய வடிவெடுத்து, காதுகள், மூக்குகளில் புகுந்து கடித்தன. இதைக் கண்டு சினங்கொண்ட கரங்கன், சரங்களால் அவற்றின் பற்களை உடைத்தான். வாலை அறுத்து உடலைப் பிளந்தான்.



இதனால் பயங்கொண்ட நகுலங்கள் நகுலேஸ்வரியைச் சரணடைந்தன. உடனே நகுலா தேவி, அக்ஷுண நகுலம் என்னும் அஸ்திரத்தை விடுத்தாள்.



அதிலிருந்து வஜ்ரம் போன்று பலம் கொண்ட நகுலங்கள் தோன்றி நூறு அக்ஷௌஹிணி சேனைகளைத் தாக்கின. வெகு சிலரே தப்பிப் பிழைத்து ஓடினர். மேலும், அவள் கருடன் மீதேறி வந்து, கரங்கனின் சிரத்தை அறுத்தாள். அதே போலத் தாவி, தாவி மீதி நால்வர் சிரங்களையும் அறுத்துத் தள்ளினாள்.



இத்தகைய பராக்கிரமம் கண்டு களித்த சியாமளா தேவி, நகுலேஸ்வரியை தனது அங்கத்தில் ஒரு தேவதையாக இருக்கும் பாக்கியத்தை அளித்தாள்.



தப்பி ஓடிய சிலர், நடந்ததை பண்டனிடம் கூற அவன் அடங்காத ஆத்திரம் கொண்டான்.



கரங்காதிகள் ஐவரும் நகுலி தேவியால் அழிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற பண்டன், குடிலாக்ஷனிடம் கீகஸையின் கர்ப்பத்தில் உதித்த வலாஹகன் முதலிய ஏழு சேனாதிபதிகளை அனுப்ப உத்தரவிட்டான்.



அதன் படியே வலாஹகன், ஸூசீமுகன், வணிகடாநளன், கராளாக்ஷன், கரடகன், பாலமுகன், விகர்ணன் ஆகிய 7 சகோதரர்களும் 300 அக்ஷௌஹிணி சேனையுடன் யுத்தகளம் புகுந்தனர்.



“ஹே பாபிகளே !! அதமப் பெண்களே !! மாயையால் ஏமாற்றும் உங்களை இப்போதே அழிக்கிறோம்” என்று கூறிச் சரங்களை வர்ஷித்தனர்.



இருவருக்குமிடையே பயங்கர யுத்தம் தோன்றியது. வலாஹகன் ஸம்ஹாரகுப்தன் என்னும் பெரிய கழுகு மீதிருந்தும், ஸூசீமுகன் பெரிய காக்கை மீதிருந்தும், பாலமுகன் மலை போன்ற கழுகு மீதிருந்தும்,விகர்ணன் பேரண்ட பக்ஷி மீதிருந்தும், விகடாநனன் கோழி மீதிருந்தும், கராளாக்ஷன் அதோமுகமான பிரேத வாகனத்தின் மீதிருந்தும், கரடகன் வேதாள வாகனம் மீதிருந்தும் போரிட்டனர்.

அவர்களது வாகனங்கள் சக்திகளை இம்சித்தன. சக்திகளும் சளைக்காமல் சேனைகளைக் கொன்று குவித்தனர்.



இவ்வேழு வீரர்களும் தேவி சேனையைக் கலக்கினார்கள். இவர்கள் முற்காலத்தில் சூரியனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, யுத்த களத்தில் அவர் அவர்களுடைய கண்களில் தோன்றி, எதிரிகளை தேஜஸால் கொளுத்தி, அசைவற்றவர்களாக ஆக்கவும், அவர்களின் ஆயுதங்களையும் அசைவற்று இருக்கவும் வரம் பெற்றிருந்தனர். அதனை இப்போது பிரயோகித்தனர்.



சூரிய தேஜஸ்ஸினால் சக்திகள் அசைவற்று நிற்க, அசுரர்கள் அவர்களை மிகவும் தாக்க, அனைவரும் அன்னை ஸ்ரீலலிதையைச் சரணடைந்தனர்.



தொடர்வோம்.



புவனா சந்திரசேகரன்
 

Author: Puvana
Article Title: அத்தியாயம் - 8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.