• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 8

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
433
11
43
india
அத்தியாயம் - 8



அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மா அழுது ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறாள். தாத்தா, அம்மாவின் அப்பா எதிர்பாராத விதமாக இறந்த போது. அதுவுமே அந்த முதல் நாள் மட்டும் தான், அடுத்த நாளே தெளிவாகி காரியங்களை முடுக்கி விட ஆரம்பித்து விட்டார். வசுதாவின் தந்தை கூட மாமனாரின் இழப்பைத் தாங்க முடியாமல் நின்ற போது, அவரது மனைவி அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தாயிற்று. அதன் பிறகு ஐந்தாறு வருடங்களில் அவரது அன்னை இறந்த போது இவ்வளவு வருத்தம் இல்லை. பத்து நாட்களுக்கும் மேலாக நினைவில்லாமல் இருந்தவர், இருப்பதை விட இறப்பதே அவருக்கு நல்லது என்று நினைக்க வைத்திருந்தார்.



உடலில் ஏற்பட்ட வேதனைகளை எல்லாம் தாங்க முடியாமல் போகும் போது, முகம் சுழிப்பது ஒன்று தான் அவரது அதிக பட்ச ரியாக்ஷனாக இருக்கும். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு தாயின் கண்ணில் நீர், அதுவும் தனக்காக, அதிர்ந்து நின்றவள் தாயின் அருகில் சென்றாள்.



"அம்மா!" என்றவளுக்குத் தொண்டையை அடைத்தது. அதற்குள் அவளது தந்தையும் தனது கண்ணீர் கோட்டாவைத் தனியாகச் சென்று தீர்த்து விட்டு வந்திருக்க, "பாத்துக்கோ பா. ரிசப்ஷனுக்கு வருவீங்க தானே. அப்போ பேசலாம். மா உனக்கு இந்த அழுகாச்சி மூஞ்சி நல்லாவே இல்லை, தயவு செஞ்சு சிரிச்சிடு" என்று தனது உணர்வுகளை மறைத்துக் கொண்டு பேசினாள். அந்த சில நொடிகளில் அவளது அன்னை தன் சுயத்தை மீட்டெடுத்து, "போற இடத்தில நல்ல பேர் வாங்கணும். அவங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கோ, எதிர்த்து பேசாதே. அவங்களா எதுவும் வேலை சொல்லுவாங்கன்னு இருக்காம, என்ன செய்யணும்னு நீயா போய்க் கேளு. ரொம்ப நேரம் புக்கு படிக்கிறேன் பாட்டு கேட்கிறேன்னு உட்கார்ந்துடாதே" என்று ஆரம்பித்து சராசரித் தாயாக மாறி நீண்ட அறிவுரை பட்டியலை வாசிக்க, அருகில் நின்ற விஷ்ணு சிரிப்பை விழுங்கியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.



மாமியார் அவனையும் விட்டு விடவில்லை. "என் பொண்ணு ரொம்பச் செல்லமா வளந்துட்டா மாப்பிள்ளை. நிறைய நாள் படிப்பு படிப்புன்னு இருந்துட்டா. கொஞ்சம் பாத்துக்கோங்க. அடிக்கடி ஃபோன் பண்ணுங்க"



அதே போலத் தனது சம்பந்தியையும் விட்டு வைக்கவில்லை. "சமையல் மத்த வேலை எல்லாம் செய்வான்னாலும், உங்க வழக்கத்திற்கு வர கொஞ்சம் டைம் எடுக்கும். சொல்லிக் கொடுத்தா உடனே கத்துப்பா, பாத்துக்கோங்க சம்பந்தி… " மேலும் பேச விடாமல் நல்ல நேரம் போய்க்கொண்டு இருக்கிறது, கிளம்ப வேண்டும் என்று பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.



தாயின் கையை அழுத்தி விட்டு, தந்தையைப் பார்த்தவளின் தலையை வாஞ்சையுடன் வருடினார் அவர். அந்த வருடல் ஆயிரமாயிரம் வார்த்தைகளைச் சொன்னது. அனைவரிடமும் விடைபெற்று கலவையான உணர்வுகளைத் தாங்கியபடி கிளம்பினாள் வசுதா.



இவளது இளைய உறவுப் பட்டாளம், சிறிது காலமே என்றாலும் ஆசிரியர் மாணவர் என்ற உறவையும் தாண்டிய ஒரு பிணைப்புடன் இருந்த மாணவப் பட்டாளம் என்று எங்கெங்கும் கண்ணீரைத் தாங்கிய முகங்கள். பேச வார்த்தைகள் இல்லாத மௌனம், பார்வையில் விடை பெற்றுக் கிளம்பினாள்.



"அம்மாவை மாதிரியே பொண்ணும், பொறந்த வீட்டை விட்டு கிளம்புறோமேன்னு கொஞ்சம் கூடவா அழுகையே வராது? கல்யாணம் ஆகி போனா போதும்னு நினைப்பாங்க போல இருக்கு" யாரோ சொன்னார்கள். அர்த்தம் என்ன என்பதை அவர்களே அறிவார்கள்.



இப்படியாக வசுதா மாமியார் வீட்டில் காலெடுத்து வைத்தாள். புகுந்த வீடு அவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தைக் காட்டியது. அன்பானவர்கள் தான், சில(!) நேரங்களில் வம்பானவர்களாகவும் மாறிப் போனார்கள்.



மாமியாருக்கும் மருமகளுக்கும் சில விஷயங்கள் ஒத்துப் போகாவிட்டாலும் அவர்களது சுவை நரம்புகளில் ஏக ஒற்றுமை. கணவருக்கும் பிள்ளைகளுக்கும் பிடித்தமான உணவுகளையே செய்து தனது விருப்பங்களை மறந்து வாழ்ந்த அவளது மாமியார், துணைக்கு ஆள் கிடைத்ததும் வானத்தில் மிதந்தார்.



சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவளை வார்த்தைகளால் வதைப்பவர், அவளது வயிற்றைப் பொறுத்தவரை அன்னபூரணியே தான். வீட்டில் பிரளயமே நடக்கும் போது கூட, "ஒழுங்கா சாப்பிடு. அப்போ தான் எனக்கு பதில் சொல்லத் தெம்பு இருக்கும்" என்று வயிறு வாடாமல் பார்த்துக் கொள்வார். அர்ஜுன் அவள் வயிற்றில் இருந்த போது அவள் படாத பாடு பட்டு விட்டாள். வழக்கமாகவே சாப்பாட்டில் வஞ்சனையில்லாமல் ஒரு கட்டு கட்டி விடுபவள் வயிற்றில் எதுவும் தங்காமல் போக மிகவும் சிரமப்பட்டாள் உள்ளே செல்லும் வேகத்திலேயே எல்லாமே வெளிவந்துவிடும். அப்பொழுதெல்லாம் அவளது மாமியார் முகம் சுளிக்காமல் அவளை தாங்கி இருக்கிறார். எல்லாமே அவளது நாத்தி சொந்த ஊருக்கு வரும் வரை தான். வந்தவுடனே ஆரம்பித்து வைத்தாள் தன் அரும் பெரும் சேவையை.



"ஏம்மா! என்னையெல்லாம் வீட்டை மட்டும் இல்லாம, இரண்டு மாடி ஏறி இறங்கி படியெல்லாம் பெருக்க வச்சியே, மருமகளுக்கு அந்த வேலையெல்லாம் கிடையாதா? வீட்டைக் கூட வேலைக்காரி பெருக்கிட்டு இருக்கா?"



"இல்லையே அவ தானே சாயங்காலம் பெருக்குறா? எவ்வளவு குனிஞ்சு பெருக்குறா பாரு, உனக்கு உடம்பே வளையாம ஊதிப்போய் இருந்த"



எல்லாம் வசுதாவின் பாட்டி கொடுத்த ட்ரெய்னிங். விளக்குமாறு வாங்கிய புதிதில் கூட நீளமாக இருக்கிறதே நின்றுகொண்டே பெருக்கி விடமுடியாது. "மனசுக்குள்ள சந்திரமதின்னு நினைப்பா? நல்லா குனிஞ்சு பெருக்கு" என்பார். அதனால் நினைவு தெரிந்த நாளாக, விளக்குமாறாக என்னை விட்டு விடு என்று கதறும் வரை வசுதா அதனை விட்டதில்லை (அது யாரு சந்திரமதின்னு யோசிக்கிறவங்களுக்கு, அவங்க தான் நம்ம அரிச்சந்திரன் பொண்டாட்டி. அவன் கஷ்டத்தில் மனைவியை வீட்டு வேலை செய்யறதுக்குன்னு வித்துட்டு போயிடுவான். இவள் பாவம் மகாராணி, விளக்குமாறை முன்னே பின்னே தொட்டாவது பார்த்திருப்பாளா? தரைக்கு வலிக்குமோ இல்லை விளக்குமாறுக்கு வலிக்குமோ என்று பெருக்கி முதலாளிகளிடம் மிகுந்த பாராட்டுகளைப் (?!) பெற்றாள் என்பது வீடுகளில் உலவும் கதை)



அதேபோல் அவளது வீட்டில் எப்போதும் தரையில் அமர்ந்து, படுத்து பழக்கம். இங்கேயும் அதையே தான் கடைப்பிடித்தாள். அதனால் கருவுற்ற போது, அவளது உடல் நிலை நன்றாகவே இருந்தது, சாப்பிட்ட உணவு வயிற்றில் தாக்குவதில்லை என்ற ஒரே ஒரு விஷயத்தை தவிர.



"வாந்தி எடுத்தா அள்ளுறது என்ன? உடனே அடுத்து சாப்பிட வைக்கிறதென்ன? மருமக உண்டாகி இருக்கான்னு தெரிஞ்ச உடனே வேலையை ரிசைன் பண்ணிட்டு விழுந்து விழுந்து கவனிக்கிற, எனக்கு மட்டும் வேலையை விட்டு வரமுடியாதுன்னு சொன்ன? அஞ்சு மாசம் நானே சமைச்சு, நானே சாப்பிட்டு, நானே வாந்தி எடுத்துன்னு எவ்வளவு அவஸ்தை பட்டேன்" அடுத்த பஞ்சாயத்து.



'எங்க அம்மா அரை டசனுக்கும் மேல நாத்தனார்களைச் சமாளிச்சு நல்லாவே இருந்திருக்காங்க. ஆனால் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு நான் படுற பாடு இருக்கே. எங்கம்மாவுக்கெல்லாம் கோயில் கட்டி கும்பிடணும் போல இருக்கே. அன்னை ஓர் ஆலயம்' என்று பாடியது வசுதாவின் மைன்ட் வாய்ஸ். ஆனாலும், அவள் இப்போது பேசிய பேச்சில் தனியாகக் கஷ்டப் பட்டதால் வந்த ஆதங்கமே வெளிப்பட்டது. 'இந்த அத்தையும் தான் போயிருக்கலாமே. அடுப்படியில் வேலை செய்யாம இருக்கும் போதே எவ்வளவு கஷ்டமா இருக்கு. அவளும் பாவம் தான்' என்று நாத்தனாருக்காகவும் பரிதாபப் பட்டாள்.



"ஏண்டி? அவளுக்காகவா வேலையை விட்டேன், எனக்கு முடியலன்னு தானே வேலையை விட்டேன். அதோட இதுவும் சேர்ந்துடுச்சு. அவளுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? நீ பேசறது கொஞ்சம் கூட நல்லா இல்லை" என்று சொல்லி மகளின் வாயை அடைந்தாலும் காலப் போக்கில் மகளது உபதேசங்கள் எல்லாம் அவருக்கு கீதோபதேசமாக மாற ஆரம்பித்தது.



அதன் பிறகு அவரது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் பெரும் மாறுதல் தெரிந்தது. அசதியாக இருக்கும் படுத்துக் கொள் என்ற அக்கறை, "அதென்ன எப்ப பாரு போய் படுத்துகிறது. பிறக்க போகிற என் பேரப்பிள்ளை சோம்பேறியா இருக்க போகுது" என்று மாறியது.



"சாப்பிட்ட உடனே போய் படுக்காதே ஒரு பத்து நிமிஷம் நல்லா நட"



"சூரியன் உதிச்சதுக்கு அப்புறமும் வீட்டுக்கு வந்த மருமக தூங்கினா, வீட்டுக்கு ஸ்ரீதேவி எப்படி வருவா அவங்க அக்கா தான் வருவா"



இப்படி, சுப்ரபாதத்தில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை உத்தரவுகள் வந்த வண்ணம் இருந்தது. இத்தனையும் விஷ்ணுவின் பார்வைக்கு மறைத்தே செய்யப் பட்டது, வசுதாவின் சின்ன அறிவுக்கு இதையெல்லாம் அவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூடத் தோன்றியதில்லை.



எப்போதும் தனது வலிகளையெல்லாம் வெளியே சொல்லிப் பழக்கம் இல்லாதவள் இப்பொழுதும் மௌனமாக தாங்கிக் கொண்டாள். தாய் தொலைபேசியில் அழைக்கும் போது கூட நீ நலமா நான் நலம் என்பது போலவே பேச்சுகள் இருக்கும். அதையும் தாண்டி இவள் ஏதாவது பேச ஆரம்பித்தால், அவளது அன்னை "பெரியவங்க ஏதாவது சொன்னா பேசாம கேட்டுக்கோ ஒண்ணும் தப்பு கிடையாது" என்று அறிவுரை பட்டியலை ஆரம்பிக்க இவள் வாய் மூடிக் கொள்வாள்.



அடுத்து இருந்த அவளது சீமந்த புகைப்படங்கள் அவளுக்கு எப்போதுமே கோபத்தைக் கொடுக்கும். வந்த கோபத்தை விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று அமையும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அவளது சீமந்த புகைப்படங்களை எடுத்துப் பார்ப்பது அவளது வழக்கம்.



வயிற்றில் இருக்கும் கரு நன்றாக இருக்க வேண்டும் என்று செய்யப்படும் சீமந்தம், வசுதாவை வாழ்க்கையில் முதல் முதலாக கண்ணீர் விட வைத்தது. மருமகளை ஓரளவு நன்றாகவே நடத்திய விஷ்ணுவின் பெற்றோர், அவளது பெற்றோரை மனிதர்களாக கூட நினைக்கவில்லை என்று படம் போட்டுக் காட்டிய தினம் அது. அதற்கு முன்பும் அவர்கள் பெரிதாக மரியாதை கொடுத்ததில்லை தான், ஆனால் அவமரியாதை செய்ததில்லை. மகளுக்கான சீருடன் வந்தவர்களை திரும்பிச் சென்று விடலாமா என்று யோசிக்க வைக்க வைத்த தினம் அன்று.



அதுவரை அரசல்புரசலாக பெற்றோரைப் பற்றி அறிந்திருந்த விஷ்ணுவும் இப்படி ஒரு சம்பவத்தை நேரில் பார்க்கவும் கொதித்துப் போனான். அவனது உள்ளத்தில் பெற்றோருக்கென ஏற்படுத்தியிருந்த பிம்பம் சற்றே சரியத் தொடங்கியது. இதன் பின்னணியில் இருந்த சகோதரியையும் வெறுக்க தொடங்கினான்.



வசுதா பிரசவத்துக்கென பிறந்த வீடு வந்து ஒரு மாதம் ஆயிற்று. வந்த நாள் முதல் அன்னையை முறைத்துக் கொண்டே அலைந்தாள். "ம்ச்… போம்மா! என் மேல என்னிக்குமே உனக்குப் பாசமே இல்லம்மா. உன் நாத்தனார்களுக்கு, தங்கைகளுக்கு எல்லாம் பிரசவ நேரத்தில எவ்வளவு சுறுசுறுப்பா வேலை பார்த்த? இப்போ பாரு என் கூட ஹாஸ்பிடல் வரக்கூட முடியாமல் இருக்க? ஒவ்வொரு தடவையும் நானா போய் கேள்வி கேட்க வேண்டியது இருக்கு, எதுவுமே புரியலை. எனக்குத் தெரியாது, ஃபைனல் செக்கப்புக்கு நீ தான் என் கூட வர. இல்லேன்னா நான் போகவே மாட்டேன்" சிறு பிள்ளையாக அடம் பிடித்தாள். தாயின் முகத்தில் தோன்றிய மாறுதல்களை அவள் உணர்ந்தாள் இல்லை.



ஆரம்பம் முதலே பிரசவத்தைப் பற்றிய பயத்துடன் இருந்தவள், சீமந்தத்திற்குப் பிறகு இன்னும் பயந்திருந்தாள். பிள்ளையைச் சுமந்திருந்த அவளைச் சந்தோஷமாக மாற்றியிருக்க வேண்டிய விழா அவளது பயத்தை ஏகத்துக்கும் அதிகப் படுத்தி இருந்தது. நரம்புத் தளர்ச்சி இருப்பவர்களுக்கு பிரசவம் என்பது சற்றே சிரமமாக இருக்கும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. பிரசவம் பார்க்க வேண்டிய டாக்டரிடம் தனது சந்தேகத்தை கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டாள்.



"படிச்சவங்கன்னு காட்டறீங்க. தேவையே இல்லாத குழப்பம். எல்லா விதத்திலும் உங்க ஹெல்த் பெர்ஃபெக்டா இருக்கு. தைரியமா இருக்கணும்" என்ற போதும் அவளது பயம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. ஒரு வேளை தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், குழந்தை என்ன செய்யும் என்ற அளவு யோசிக்க ஆரம்பித்தாள்.



"இப்படி வேலையே செய்யாம இருந்தா எப்படி சுகப்பிரசவமாகும்? என் பொண்ணு எவ்வளவு வேலை பார்த்தா, அப்பக் கூட அவளுக்கு சிசேரியன்தான் பண்ணாங்க. உனக்கெல்லாம் எங்க சுகப்பிரசவம் ஆகப் போகுது?" மாமியாரின் வார்த்தைகள் வேறு அவ்வப்போது காதில் எதிரொலித்தது.



அவளது பயத்திற்கு ஏற்ப, பிரசவம் சிக்கலாக, யார் செய்த புண்ணியமோ, பத்து மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சுகப் பிரசவத்திலேயே இந்த பூமிக்கு வந்தான், அர்ஜூன்.



"பாரு உன் பிள்ளையை. இப்பவே இடுப்பில தூக்கி வச்சிக்கிற மாதிரி இருக்கான். இப்படியா வயித்துக்குள்ளேயே வளர்ப்ப? வெளியே வந்த பின்னாடி சோறு போட மாட்டேன்னு முடிவு பண்ணி இருக்கியா?" என்று டாக்டர் கேலி செய்தார்.



அதனை நினைவு கூர்ந்த வசுதாவின் பார்வையில், தனது தாயின் கைகளில் அர்ஜுன் இருந்த புகைப்படம் கண்ணில் பட்டது. பிறந்த நாற்பதே நாளில் கேமராவை பார்த்து சிரிக்கும் அளவிற்கு இருந்தான் அவன். அந்தப் புகைப்படத்தை பார்க்கும் போதே பாட்டி ஆகி விட்ட பெருமிதம் அவள் தாயின் கண்களில் தெரிந்தது.



'அம்மாவோட முகத்தில தான் எவ்வளவு சந்தோஷம்' என்று நினைத்துக் கொண்டாள். உலகத்தின் பொதுவான நியதியாக, தானும் ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு தனது தாயின் அருமையைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். ஆனால், திருமணமாகிக் கூட்டுக் குடும்பத்தில் கைக்குழந்தையுடன் இருந்தவளால் அவசரத் தேவைக்கு என்று கூட தாய்க்கு உதவ முடியவில்லை.



"எங்க பேரனை நாங்க நல்லாவே பார்த்துப்போம். அதனால மூணாவது மாசம் பிறந்தவுடனேயே கொண்டுவந்து விட்டுருங்க. அவளும்தான் பிரசவத்துக்கு முன்னாடியே நிறைய நாள் இங்க இருந்தாச்சு இதுக்கு மேல என்ன?" பெயர் சூட்டு விழாவுக்கு வந்தபோது மாமியார் ஆர்டர் போட, "உங்க பேரக் குழந்தையை நீங்க பாத்துப்பீங்க, என் குழந்தை யார் பாத்துப்பாங்க? அவ உடம்பை நல்லா தேத்தி அனுப்பணும்" என்று பதிலடி கொடுத்த வசுதாவின் அம்மா, ஐந்தாவது மாதம் தான் அனுப்புவேன் என்றார்.



"சிசேரியன் பண்ணின எங்க பொண்ணையே மூணாவது மாசம் கொண்டு போய் விட்டு விட்டுட்டோம். இவளுக்கு நார்மல் டெலிவரி தானே, அதனால கொண்டு வந்து விடுங்க. என் பையன் எத்தனை நாள் தான் இங்கேயும் அங்கேயும் அலைஞ்சிட்டு இருப்பான்" மகன் மாமியார் வீட்டில் இயல்பாகப் பழகுவதை பிடிக்காத ஒரு தாயின் இயல்பான குணம்.



"டேய் நீ அவங்க வீட்டு மாப்பிள்ளை. கொஞ்சமாவது அதுக்கேத்த மாதிரி இருடா" என்று சொல்லிக்கொண்டே இருப்பார். "அவன் உங்க வீட்டு மாப்பிள்ளை. கொஞ்சமாவது மரியாதை கொடுத்து பேசச் சொல்லு எல்லாரையும்" என்று வசுதாவிடமும் அடிக்கடி சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் விஷ்ணு காற்றோடு விட்டு விட்டு மாமியாரிடம் இயல்பாக வழக்காடிக் கொண்டு இருப்பான். இருவருமே, மாமியார் மருமகன் என்ற நிலையைத் தாண்டி டிவி ரிமோட்டுக்குக் கூட போட்டி போடுவார்கள். இந்த முறை அப்படி சில சம்பவங்களை நேரில் கண்டுவிட்டவர், கொதி நிலைக்கு சென்று விட்டார்.



'இவங்க பொண்ண அஞ்சாவது மாசக் கடைசியில் தானே கொண்டு போய்விட்டதா சொன்னாங்க. இப்ப எப்படி பிளேட்ட அப்படியே திருப்பி போடுறாங்க? இதெல்லாம் பொய்ன்னு யார் எடுத்துச் சொல்றது?' என்றது வசுதாவின் மைன்ட் வாய்ஸ். விஷ்ணுவோ இந்த பேச்சுவார்த்தைகளுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அமர்ந்து இருந்தான். அவனுக்குமே மனைவியும் குழந்தையும் அருகில் இருந்தால் நல்லது என்றே தோன்றியது.



வசுதாவோ இரட்டை மனதுடன் இருந்தாள். அர்ஜூன் பகலெல்லாம் நன்றாக தூங்கி இரவில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு விளையாடினான். பிறந்த வீட்டில் பாட்டி அத்தை சித்தி அப்பா என்று ஆட்கள் நிறைந்திருக்க, எல்லோருமே இவளது தூக்கம் கெடாதவாறு பார்த்துக் கொண்டார்கள். அதே நிலையை மாமியார் வீட்டில் எதிர்பார்க்க முடியுமா என்பது தெரியாவிட்டாலும் விஷ்ணுவை நினைத்தும் மௌனமாக இருந்தாள்.



"அது போக, இப்பவே வந்துட்டா தான், அவ வேலைக்கு போறதுக்குள்ள குழந்தை எங்க கிட்ட பழகுவான். இல்லைனா எனக்கு தானே கஷ்டம்" கடைசியில் மகனைப் பெற்ற சம்பந்தி ஜெயித்துவிட, வசுதா எதிர்பார்த்தது போலவே அவளது தூக்கம் மொத்தமும் தொலைந்து போனது.

"குழந்தையை பகல்ல ரொம்ப நேரம் தூங்க விடக்கூடாது எழுப்பி விடு. ராத்திரி நல்லா பால் குடிச்சா ஏன் தூங்காம இருக்க போகுது? நீ ஒழுங்கா சாப்பிட்டா தானே பால் இருக்கும்" என்பது போன்ற பேச்சுக்கள் சலிப்பாக இருந்தது. "பிறந்த குழந்தை எவ்வளவு நேரம் தூங்கும் என்று இவங்களுக்கு தெரியாதா?" என்று விஷ்ணுவிடம் அந்த சலிப்பை எரிச்சலாகக் காண்பிக்க, அவன் அவளுக்கு கை கொடுத்தான். இரவில் தூங்கும் குழந்தையை கவனித்துக் கொண்டு அவளது தூக்கம் கெடாதவாறு இயன்றவரை பார்த்துக் கொண்டான். கைகள் அதன் போக்கில் ஆல்பத்தைப் புரட்ட மனமோ எங்கெங்கோ சுற்றி வந்தது.



------

யோசித்துக் கொண்டே பார்வையை ஆல்பத்தில் திருப்பினாள். தந்தை ஓய்வு பெற்ற போது எடுத்த புகைப்படங்கள். அவளது வாழ்க்கையில் பெண் என்று ஏன் பிறந்தோம் என்று நினைக்க வைத்த நிகழ்வுகள். அர்ஜுனுக்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிந்தன நிலையில், வசுதாவின் தாயின் உடல் நலனில் மேலும் இறக்கம் ஏற்பட்டது. இரண்டு கால்களிலுமே பெரிய அளவு அறுவை சிகிச்சை செய்தால் நடையில் முன்னேற்றம் இருக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.



முதல் எதிர்ப்பு நோயாளியிடம் இருந்து வந்தது. பெரும் பாடு பட்டு அவரை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தார்கள்.



"என்னங்க அம்மாக்கு அடுத்த வாரம் சர்ஜரி பண்ண போறாங்க. ரெண்டு காலையும் பண்றதால கிட்டத்தட்ட ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல இருக்கணும். வீட்ல அத்தை இருந்து பாட்டியை பாத்துப்பாங்க, அம்மாவுக்கு துணைக்கு ஆள் வேணும். தம்பி இருப்பான் தான் ஒரு லேடி இருந்தா பெட்டர் தானே நான் போயிட்டு வரட்டுமா?"



"குழந்தை வச்சுட்டு நீ அங்க போய் என்ன பண்ணுவே வசு? நீயா எதுவும் கமிட் பண்ணிக்காத. அம்மா அப்பா கிட்ட வேற கேக்கணும். யோசிக்கலாம் வெயிட் பண்ணு" விஷ்ணு அக்மார்க் நல்ல மகனாக மாறி மனைவிக்குப் பாடம் எடுக்க, உள்ளுக்குள் புலம்பினாள் வசுதா.



'ஓ… உங்க அம்மாக்குன்னா நான் செஞ்சே ஆகணும். எங்க அம்மாக்குன்னா கமிட் பண்ணிக்க கூடாது. நல்லா இருக்கே உங்க நியாயம்'



அவள் நினைப்பதைக் கண்கள் வெளிப்படுத்தி விட்டதோ, அதற்கான பதிலையும் கணவன் கொடுத்தான். "நான் அப்படியா சொன்னேன். நீயா ஏதோ நினைச்சுக்காதே"



'பின்ன எப்படி நினைக்கிறது? நம்ம கல்யாணம் ஆகி ஒரு மாசத்துல உங்க அம்மாவுக்கு ஒரு சர்ஜரி நடந்ததே ஞாபகம் இருக்கா. அவங்க வருஷக் கணக்கா முதுகை ஸ்ட்ரையின் பண்ணதுல பிரச்சனை ஆயிடுச்சு. ஏதோ நான் தான் கல்யாணம் ஆகி வந்த உடனே மாமியார் முதுகை உடைச்சிட்டதா, உங்க பிரெண்ட்ஸ் கூட சொன்னாங்க. முழுசா ஒரு வாரம் நாள் பூராவும் அவங்க கூட இருந்திருக்கேன். பீரியட்ஸோட, என் வலியெல்லாம் பொறுத்திட்டு, நைட் எல்லாம் முழிச்சிருந்து நர்ஸ் வேலை பாத்திருக்கேன். தலை தீபாவளி, மறுவீடு, எங்க குலதெய்வம் கோயில் எல்லாத்தையும் நாலே நாளைக்கு ப்ளான் பண்ணி எக்ஸ்பிரஸ் வேகத்தில ரிட்டர்ன் வந்து உங்க அம்மாக்கு நர்ஸ் வேலை பார்த்தேன் நானு. தீபாவளியப்போ ப்ளான் பண்ண ஹனிமூன் அம்போன்னு போச்சு, அதுக்காக எங்க அப்பா சுளையா கொடுத்த பணம் உங்க அம்மா ஆபரேஷனுக்கு போயாச்சு. மெடிகல் இன்ஷூரன்ஸ் இருக்கு, எல்லா பணமும் வந்துடுச்சுன்னு சொன்னாங்க, என் கையில இருந்து வாங்கிய பணம் மட்டும் திரும்பி வரலை. அதை விட எங்க அம்மாக்கு ஒரு தேவைன்னு வரும் போது கூட பெர்மிஷன் கேட்டு நிக்க வேண்டியது இருக்கு'



தனக்குள் நொந்து போனவளின் மனது அவளையே குத்திக் காட்டியது. திருமணத்திற்கு முன்பு தம்பியுடன் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் பலமாகப் பெண்ணியம் பேசுவாள். 'ஆம்பளைப் பையனை வெளக்குமாறைத் தொட விடாதே" என்று அவளது பாட்டி சொல்லும் போதெல்லாம், "அதென்ன அவன் தொட்டா பெருக்க மாட்டேன்னு சொல்லிடுமா. பையன்னா பெரிய கொம்பா முளைச்சிருக்கு, நான் பொண்ணுன்னு மட்டமா போயிட்டேனா" என்றெல்லாம் வாதாடி இருக்கிறாள். ஆனால் இப்போது தாயின் உதவிக்குச் செல்ல அனுமதி வேண்டும் நிலை.



"அதான் அடுத்த மாச கடைசியில் அவங்க அப்பா ரிட்டயர்ட் ஆகுறாருன்னு போறீங்களே, அப்ப கூட ஒரு நாலு நாள் இருந்துட்டு வந்தா போதும். இப்ப எல்லாம் போக வேண்டியது இல்லை" அவளுக்கு அனுமதி மறுக்கப்பட அவளது தம்பியோ பார்த்துக் கொண்டு இருந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு தாயைக் கவனித்துக் கொண்டான். நாற்பத்தெட்டு வயதில் முழுவதுமாக மெனோபாஸ் ஆகிவிடாத சமயம், அந்த நாட்களில் எல்லாம் கூட முகம் சுளிக்காமல் தாயைக் கவனித்தவனை நினைக்கும் போது இன்னமும் கூனிக் குறுகிப் போவாள் வசுதா.



கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தாய் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நாளில் இவர்கள் சென்றனர். தந்தையின் ஓய்வுக்கு பிறகும் அவர்களின் பொறுப்பு முடியவில்லை என்று அங்கேயே தங்கி விட, "சீக்கிரமே சென்னைக்கு வந்துடுங்க மா. நாங்க இரண்டு பேரும் அங்கே தான் இருக்கோம்" என்று சொல்லிக் கிளம்பினார்கள்.



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நகர்ந்ததில், அவள் பிரசவ விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். கல்லூரியில் பேராசிரியராக மட்டும் அல்லாமல் துறையின் தலைவியாகவும் இருந்தவள், வார இறுதி நாட்களில் எதிர்பார்த்த ஓய்வு எட்டாக் கனியானது. இவள் இவ்வாறு இருக்க, தாய் வீடே சொர்க்கம் என்று விஷ்ணுவின் சகோதரியின் வாராந்திர வருகைகள் அவளுக்குக் கிடைக்கும் சொற்ப ஓய்வுக்கு உலை வைக்கும் வேலையை செவ்வனே செய்து சிறப்பித்தது.



அன்று வாரத்தின் இறுதி நாள், யாருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் ஐந்து முறை அடித்து மாலை மணி ஐந்து என்று காட்டிய போது கல்லூரி முடிந்து விட்டதற்கான மணி ஒலித்தது. அதன் ஓசையில் கவனம் சிதற எழுந்தவள் அவளது கைப்பை மற்றும் சாப்பாட்டுப் பைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள். இரண்டையும் பார்த்தால், இவள் படிக்கிறாளா வேலை பார்க்கிறாளா என்று யாருக்குமே சந்தேகம் வரும். இரண்டுமே அந்த அளவுக்கு சிறியது(!?)



கைக்குழந்தையை கவனித்துவிட்டு அரக்கப்பரக்கக் கிளம்பும் நேரத்தில் காலை உணவு என்பது அவளது வாழ்வில் மறக்கப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. திருமணத்திற்கு முன்பு வரையில் காலை டிபன் என்று இட்லி, தோசைக்குப் பழகிய வயிறு, திருமணத்திற்கு பின் சாதம் சாப்பிடப் பழகவே இல்லை.



வீட்டில் அவளுக்காக காத்திருக்கும் வேலைகளை நினைத்தால் தலை சுற்றிய போதும் வழக்கமான கல்லூரிப் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். தாய் வீட்டில் இருந்த வரை வீட்டு வாசலில் பஸ் ஏறிப் பழகியவள், இங்கு பாதி தூரம் மட்டுமே கல்லூரிப் பேருந்தில் சென்று மீதி தூரத்தை அரசுப் பேருந்தில் கடந்தாக வேண்டும்.



அன்று ஏனோ பேருந்துகள் அனைத்தும் நிறைந்து வழிய, என்ன செய்ய என்று திருதிருத்தபடி நின்றிருந்தாள். யாரிடம் கோபத்தை காட்டுவது. பிறந்த வீட்டில் என்றும் அம்மாவுக்கென்று பட்டா போட்டு கொடுத்த விஷயம். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்ட போதும், யாரிடம் எப்படி பேசுவதென்றே தெரியாத போது எங்கிருந்து கோபத்தை காட்டுவது.



நேரம் போனதே தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தவளை அருகில் வந்த பேருந்தின் ஹார்ன் ஓசை தட்டி எழுப்பியது. இந்தப் பேருந்திலும் கூட்டம் இருந்த போதும் அவசரமாக அடித்து பிடித்து ஏறிவிட்டாள். (அடுத்த பேருந்து எப்போது வருமோ எப்படி வருமோன்னு தான்). அவள் வீட்டிற்குள் நுழைந்த நேரம் ஹாலில் இருந்த மாமனாரின் பார்வை கடிகாரத்தை பார்த்தது. வழக்கமான நேரத்தை விட கால் மணி நேரம் தாமதம், இதுவே அரை மணி நேரமானால் தெருவாசலில் வந்து நிற்பார்.



"சீக்கிரம் குழந்தைய கவனிச்சிட்டு வந்து டின்னர் ரெடி பண்ணு. சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வச்சிருக்கேன் பாரு" மாமியாரின் வார்த்தைகளில் சுற்றும் முற்றும் பார்த்தாள். தேடியது கண்ணில் பட்டதும் உடம்பில் இருந்த தெம்பல்லாம் யாரோ உறிஞ்சி எடுத்தது போல இருந்தது.

'அதானே பார்த்தேன். இவங்க சும்மா சப்பாத்தி பண்ற ஆளில்லையே' ஏதோ சில காலம் வட இந்தியாவில் குப்பை கொட்டிய மகள், அங்கேயே பிறந்து வளர்ந்தவள் போல அலட்டிக் கொள்வதும் அதற்கு இந்த மாமியார் ஒத்து ஊதுவதும் வாரம் தவறாமல் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அவளது பயம் எல்லாம், கணக்கே இல்லாமல் சப்பாத்திகளை உள்ளே தள்ளும் விஷ்ணுவும் அவனது தந்தையும் தான். 'இன்னைக்கு எனக்கு சிவராத்திரி தான்' என்று நொந்த படி வேலையைத் தொடர்ந்தவள், படுக்கையில் மணி பதினொன்று. எப்போதடா படுப்போம் என்று இருந்தவள், வழக்கமாக இரவில் பால் குடிக்கும் நாத்தனாரை மறந்து பாலுக்கு உறை ஊற்றி, இமாலயத் தவறு செய்து விட்டாள். வேறு பாக்கெட் பால் எடுக்கிறேன் என்றவளைத் தாராள மனதுடன் பரவாயில்லை என்று தடுத்து விட்டார்கள் அன்பான நாத்தியும் அருமையான மாமியாரும்.

---------



எங்கோ பாத்திரங்கள் உருளும் ஓசையில் 'யார் வீட்டுல இந்த அர்த்த ராத்திரியில் பாத்திரங்களை போட்டு உருட்டுவது' என்று நினைத்தவாறு திரும்பிப் படுத்தவள், அது தன் வீட்டில் தான் என்பதை உணர்ந்தவளாய் கஷ்டப்பட்டுக் கண்களை திறக்க முயற்சி செய்தாள் இமை இரண்டும் ஒட்டிக் கொண்டு, இப்போது திறக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தன.



உடலின் அசதியோடு, இரவு முழுவதும் குழந்தையுடன் போராடியதில் அதிகாலையில்தான் இவளும் இவள் கணவனுமே கண்ணயர்ந்தனர். ஞாயிற்றுக் கிழமை தானே என்று அவன் உறங்கிக் கொண்டிருக்க, பெண்களுக்கு அந்த சலுகை எல்லாம் ஏது? எல்லா நாளும் ஒரே நாள் தானே.



இத்தனைக்கும் இவளும் கணவனுக்கு ஈடாக வேலை பார்ப்பவள். ஆனால், அந்த வேலையைச் செருப்போடு கழட்டி விட்டு வர வேண்டும் என்பது அந்த வீட்டில், பெண்களுக்கான இல்லை இல்லை அவளுக்கு மட்டுமே ஆன ஸ்பெஷல் சட்டம்.



கஷ்டப் பட்டுக் கண் விழித்தவளுக்கு உடம்பெல்லாம் கொதிப்பது போல இருந்தது. மணி ஆறரை என்பதை அறிந்தவள் "அச்சோ! இன்னைக்கு நான் செத்தேன்" என்றபடி அவசரமாக குளியலறைக்கு ஓடினாள் வேக வேகமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு கூடவே ஒரு காக்காய் குளியலையும் போட்டுவிட்டு ஏழு மணிக்குள் வெளியேறினாள். அடுத்த அறையைக் கடக்கும் போதே ஆடை விலகியது கூடத் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த நாத்தனார் கண்ணில் பட்டாள். அவளது மகன் எழுந்திருப்பான் போலும்.



பெருமூச்சுடன் ஹாலை எட்டிய போது, "அங்க என்ன பார்வை வேண்டி கிடக்கு பாவம் என் பொண்ணு இங்கே வந்தால் தான் அசந்து தூங்குறா. அவங்க வீட்டுல ஓயாத வேலை அவளுக்கு, நாள் பூராவும் கைக் குழந்தையோட வேற கஷ்டப் பட வேண்டியது இருக்கு. என் பொண்ணு ஒண்ணும் ஒவ்வொருத்தர் மாதிரி சோம்பேறி இல்லை"



'கரெக்டு தான். மூன்று வயது குழந்தையை வைத்திருப்பவள் கைக்குழந்தைக்காரி, இதோ அடுத்த வாரம் முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தையை வைத்திருப்பவளுக்கு என்ன கணக்கோ?'



அவளது மைன்ட் வாய்ஸை படித்தவர் போல, "அவளுக்கென்ன மாமியார் கூட இருக்காங்களா? காலைல ஆறு மணிக்கே வேலைக்கு போற வீட்டுக்காரருக்கு எல்லாம் செஞ்சு கொடுத்து, குழந்தையும் பாத்து தனியா கஷ்டப்படறா" என்று படபடத்தார்.



'மாமியார் வீட்டுக்கு அடுத்த தெருவில் தனிக் குடித்தனம் நடத்தும் மகளுக்கு ஓயாத வேலைதான். பாவம், வீட்டில் பெருக்கி துடைக்க பாத்திரம் தேய்க்க மட்டும்தானே ஆளிருக்காங்க. அதுலயும் வாரத்தில‌ இரண்டு நாள் இங்க கழியுது'



"அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துட்டியா? இன்னைக்கு என்ன வேலைக்கா போகப் போற? வீடெல்லாம் ஒட்டடை அடிச்சு, ஃபேன், கொசு வலை எல்லாம் கழுவி ஒரு வாரம் ஆச்சு. முதல்ல அதைப் பாத்துட்டு அப்புறம் சமையல் செய்யலாம்" மாமியாரின் முக பாவத்திலும் அழுத்தமான தொனியிலும் ஏதோ பிரளயம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதில் வாய் மூடி வேலையை ஆரம்பித்தாள்.



சற்று நேரத்தில் நாத்தனார் எழுந்து வர, இடையே அவளுக்கு டீ போடும் வேலை. விஷ்ணுவும் அப்போது காபியில் இருந்து டீக்கு மாறி இருக்க, அண்ணன் தங்கை இருவருக்குமாகச் சேர்த்து டீ வைத்தவள் நாத்தனாரின் டீயைக் கொண்டு போய் கையில் கொடுத்தாள். அடுத்த நிமிடம் அந்த டீ வாஷ் பேஸினில் தஞ்சம் அடைந்தது.



காரணம் இதுதான், விஷ்ணுவிற்கு டீ ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், அதாவது டீத்தூளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் பால் கலக்க வேண்டும். அவனது சகோதரிக்கோ பாலில் டீ யை போட்டு கொதிக்க விட வேண்டும். இந்த வித்தியாசத்தை அறியாதவள் இரண்டு பேருக்கு டீ என்று எப்போதும் போல டீத்தூளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஸ்ட்ராங்காக கொண்டுபோய் நாத்தனாரிடம் கொடுத்து விட்டாள்.



"என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? அவளுக்கு எப்படி டீ வேணும்னு தெரியாதா? நேத்து ராத்திரி அவளுக்குப் பாலும் கொடுக்கல, அவளைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?"



"நேத்து அவங்க அம்மா கூப்பிட்டாங்க. ஃபோன் பேசிட்டே, பாலைத் தோய்ச்சுட்டா" எடுத்துக் கொடுத்தாள் மகள்.



"அதென்ன உங்க அம்மா பேசினது இந்த வீட்டு போன்ல, நீ பாட்டுக்கு ஓரமா போய் உட்கார்ந்து பேசற. அப்படி என்ன பெரிய ரகசியம் பேச வேண்டியிருக்கு?" ஒரே வீட்டுக்குள் இருக்கும் மருமகளுக்கு தெரியாமல் இவர்கள் அறையைப் பூட்டிக் கொண்டு ரகசியம் பேசலாம், அவளோ தன் தாயிடம் பேசியதைக் கூட மாமியார் மாமனாரிடம் ஒப்பித்து விடவேண்டும். இத்தனைக்கும் அவளது அம்மா அழைக்கும் போது மாமனார் மாமியார் என்று பல சொர்க்க வாசல்களைத் தாண்டித் தான் அவளது கைக்கு ஃபோன் வந்து சேரும்.



எப்போதும் போல வாய்மூடி இருப்பதே சாலச் சிறந்தது என்று அமைதியாக நின்று கொண்டிருந்தாள் வசுதா. ஆனால், ஹாலில் நடந்த இந்த களேபரத்தில் விஷ்ணுவும் குழந்தையும் எழுந்து வந்தார்கள்.



"என்ன ஆச்சு பா? யார் கிட்ட இவ்வளவு சத்தமா பேசிட்டு இருக்கீங்க?" கேட்டுக் கொண்டே அனைவரது முகத்தையும் பார்த்தவன், ஏதோ விபரீதம் நடக்க போவதை உணர்ந்தான்.



"ஹூம்... எல்லாம் உன் பொண்டாட்டி கிட்டத் தான்"



"என்ன வசு? ராத்திரியில இருந்து உனக்குக் காய்ச்சல் அடிச்சதே, தூங்கிறவளை எழுப்ப வேண்டாம்னு விட்டேன். இப்போ எதுக்கு சீக்கிரம் எழுந்து தூசில வேலை பாத்துட்டு இருக்க? அதுவும் குளிச்சிட்டு ஏன் இப்படி? இன்னைக்கு லீவு தானே உனக்கு, இன்னும் கொஞ்சம் தூங்கி இருக்கலாமே"



மகனது வார்த்தைகளில் பொங்கி விட்டனர் பெற்றோர் இருவரும். "ஆமாண்டா, வீட்டுல பொறந்த பொண்ணு வந்து இருக்கும்போது மருமக தூங்கிட்டு இருப்பா. நல்லா தான்டா இருக்கு நீ சொல்லுறது?"



"ஏம்மா மருமகளுக்கு உடம்பு சரியில்லேன்னா என்ன செய்ய, அதான் உன் பொண்ணு இருக்காளே, அவ செய்ய வேண்டியது தானே"



"அதெப்படி டா, இன்னொரு வீட்டுக்கு போன பொண்ண நாம வேலை வாங்கறதா?"



"அது சரி, அவ என்னைக்கு பார்த்தா இன்னைக்கு பார்க்கிறதுக்கு. மகாராணிக்கு வேலை பார்த்தா உடம்பு தேய்ஞ்சு போயிடும் இல்ல. ஆனால், உடம்பு சரியில்லைன்னா கூட என் பொண்டாட்டி வேலை பார்க்கணுமா? அதுவும் இந்த வெட்டி ஆஃபீசருக்கு?"



"நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அவ மகாராணி தான் டா. நான் இருக்கிற வரைக்கும் இந்த வீட்டுல அவ எந்த வேலையும் பார்க்க மாட்டா"



"ஓ… அப்படியா மா! மருமகள் எனக்கு இன்னொரு பொண்ணு மாதிரி நீ சொல்லுவியே, அது எந்த மாதிரி?"



"வேலை பார்க்க சொன்னா தப்பா டா?"



"தப்பே இல்ல மா. ஆனால், உடம்புக்கு முடியலேன்னு தெரியும் போதும் சொன்னா என்ன பண்ணலாம்?"



இப்படியாக வார்த்தைகள் வளர்ந்தது. "இந்த வீட்டுல இருக்கணும்னா யாரா இருந்தாலும் என் பொண்ணுக்கு வேலை பார்த்துத் தான் ஆகணும். முடியலேன்னா வீட்டை விட்டு வெளியே போங்க டா….." தந்தையின் வார்த்தைகளின் சாராம்சத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்தவனுக்கு, அந்தக் கடைசி வார்த்தை சொல்லொணா துன்பத்தை அளித்தது.



அனைவரையும் வெற்றுப் பார்வை பார்த்தவன், அடுத்த அரைமணி நேரத்தில் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 8
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.