• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 9

Lavans

Member
Sep 3, 2024
62
0
18
California

அத்தியாயம் - 9

எழில்மலர் அங்கே கதிருடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், தோற்றுப் போன எரிச்சலில் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சக்தி, ‘ச்சே. பெண்ணா அவ.. பிசாசு. எப்படி எல்லாம் பேசறா? கொஞ்சமாச்சும் சீரியஸ்னஸ் இருக்கா?’ என மனம் நிறையக் கோபமும், வயிறு நிறைய பசியுடனும் சாப்பிடச் சென்றான்.


தனக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தவனின் காதில், “என்னடா இப்படிச் சொல்லற?” என்ற குரல் சற்று உரத்துக் கேட்டது.



அவனுக்குப் பக்கத்து மேஜையில் இருந்தவர் தான் அப்படிக் கத்தி, அவருடைய மகள் போலிருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘இவங்களுக்கு எல்லாம் வீட்ல இருக்கிறதா நினைப்பு..’ எனச் சக்தி எரிச்சலடைந்தான். (நீ ஏன் ராசா அவங்கப் பேசறதை ஒட்டுக் கேட்கிற?)



மதியம் உணவு நேரம் முடிந்து சற்று மந்தமான வேளையில் தான் சக்தி சாப்பிட வந்திருந்தான். அதனால் எவ்வளவு மெதுவாகப் பேசியிருந்தாலும் அவனுக்குக் கேட்டிருக்கும். ஏனெனில் அவன் ஒட்டுக் கேட்டுக் கொண்டல்லவா இருந்தான்.



“எனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலைப்பா. வேண்டாம். வேற மாப்பிள்ளை பாருங்க” எனக் குணசீலனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த சம்யுக்தா. அவள் முதுகு காட்டி அமர்ந்திருந்ததால் அவனுக்கு அவள் முகம் சரியாகத் தெரியவில்லை.



சம்யுக்தா பேசுவது ஓரளவுக்குச் சக்திக்கு நன்றாகவே கேட்டது. அவள் பேச்சை விட அவளின் குரலிலிருந்த இனிமை அவனைக் கட்டிப்போட நினைத்தது உண்மையே.



“இவன் நல்லவன்மா. நல்ல வேலைல இருக்கான். தெரிஞ்சவங்க வேற. பிரச்சனையேயில்லை” என அவள் தந்தை தொடர,



“நல்லவனா மட்டும் இருந்தாப் போதுமா? வல்லவனாகவும் இருக்கணுமே. இந்த மாப்பிள்ளை தேறாத கேஸு” என்றாள் சம்யுக்தா.



அதைக் கேட்ட சக்திக்கு, ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய். இல்லாத பில்ட்-அப் கொடுக்கிறா.’ என அவளைப் பார்க்காமலேயே அவளைக் கரித்துக் கொட்டினான்.



“போம்மா. இப்போவெல்லாம் அப்பா சொல்லற பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிற. அதற்கும் சேர்த்து அம்மா என்னைத் தான் திட்டறாள்” என குணசீலன் அலுத்துக் கொள்ள,



“அப்பா. ரிடையர்ட் ஆகப் போற காலத்துல ஏன்ப்பா என்னை நினைச்சு கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க. நடக்க வேண்டியது தன்னாலே நடக்கும். இப்படியே கவலைப்பட்டுட்டு இருந்தீங்க அப்புறம் நான் ஹாஸ்டலுக்குப் போயிடுவேன்” என சம்யுக்தா மிரட்டினாள்.



“நீ சந்தோஷமா இருக்கணும். எனக்கு அது தான் வேணும்” என அவர் சொல்ல,



“அப்பா, சாப்பிட கூட்டிட்டு வந்து இத்தனை ஐட்டங்களைக் கண்ணுக்கு முன்னாடி வச்சுட்டு சந்தோஷமா இல்லாம இருப்பேனா. ஆனால் நீங்க தான் ப்ளேடு போட்டு என் சந்தோஷத்தை வெட்டி எடுக்கறீங்க” என்றாள்.



அவள் குரலின் இனிமையை மீறி, அவள் பேச்சில் சக்திக்கு எரிச்சல் வர, ‘ச்சே. இந்தப் பெண்ணின் குரல் மட்டும் இனிமையாக இருந்து என்ன பயன்? பேச்சு அப்படி இல்லையே? ‘என் வாழ்க்கை. நான் பார்த்துக் கொள்வேன்’ என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறாளே.



இவளுக்குப் பதிலாக அந்தப் பெண்ணிற்கு குரல் வளத்தைக் கொடுத்திருக்கலாம்’ என ஏனோ அன்று ஹோட்டலில் அவன் மேல் வந்து இடித்த பெண்ணின் முகம் சக்தியின் கண் முன் தோன்றியது.



ஏற்கனவே எழில்மலர் மேலிருந்த கடுப்பில் சம்யுக்தாவின் பேச்சும் சேர்ந்து கொள்ள, ‘இந்தப் பெண்களே இப்படித் தான் திமிருடன் அலைகிறார்கள்’ என முணுமுணுத்துக் கொண்டான் சக்தி.



பின்னர் அடுத்த நொடியே, “ச்சே, என் மதிக்குட்டி அப்படியில்லையே. இதுங்க ரெண்டையும் பார்த்து, என் மதியை நான் குறை சொல்வதா?” எனச் சற்றுமுன்னர் தோன்றிய எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டான்.



அவளைப் பற்றிய ஞாபகம் வந்ததும், அவள் புதிதாகத் துவங்கிய உணவகத்துக்குச் சென்று நாளாகிவிட்டதே என நினைத்தான். அன்று மாலை வேலை முடிந்ததும் போய்ப் பார்க்கலாம் என முடிவு செய்து கொண்டவன், உணவில் கவனம் செலுத்தினான்.



தன்னை ஒருத்தன் தவறாகக் கணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத சம்யுக்தா, தன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்போது அவள் டேபிளுக்கு வந்த புதியவர், “என்னம்மா மருமகளே, எப்படியிருக்கே?” என்றார்.



‘இவங்கெல்லாம் பிறக்கும்போதே ஸ்பீக்கரை முழுங்கிடுவாங்களோ?’ என வந்தவரை ஏறிட்டான் சக்தி. (நீ மட்டும் எழில்மலரிடம் மோனோஆக்டிங்கா செஞ்சுட்டு வந்த ராசா?)



“வாங்க அங்கிள். உட்காருங்க.” என எழுந்த சம்யுக்தாவின் முகம் இப்போது சக்திக்குத் தெரிய, ‘இவளா?’ என சுறுசுறுவென்று கோபமேறியது.



அன்று சக்தியின் நீல நிறச் சட்டையை வெட்கப்பட வைத்தது சாட்சாத் சம்யுக்தாவே தான். அன்று அவள் செய்த தவறை மறைப்பதற்குத் தான் ஊமையைப் போல் நாடகமாடியிருக்கிறாள் என நினைத்த சக்தியின் மனம் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் எனத் துடித்தது. அதுவும் இவளிடம்.



“என்னம்மா இன்னும் அங்கிள்ன்னு சொல்லிட்டு? மாமான்னு உரிமையாக் கூப்பிடு” என்று வந்தவர் உரிமையாக அதட்டி, அங்கே அமர்ந்தார்.



“அது சரிவராதுங்க அங்கிள். உங்களை இப்படியே கூப்பிடறேன்” என்றாள் சம்யுக்தா.



“என்னடா உன் பொண்ணு இப்படிச் சொல்லறா?” என அவர் கேட்க, குணசீலன் என்ன சொல்வதென்று தடுமாறினார். அதைப் பற்றித் தானே அவரும் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கே என்னவென்று விஷயம் தெரிந்தால் அல்லவா அதை நண்பனிடம் விளக்க முடியும்.



‘பிடிக்கலை. வேண்டாம்’ என மூன்று நாட்களாக மகள் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாள் எனப் புரியாமல், அதை அறிந்து கொள்ளவென அவள் பிறந்தநாளை முன்னிட்டு அன்று மதியம் அவளை உணவகத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் குணசீலன்.



தந்தைத் தடுமாற, அந்தக் கவலையெல்லாம் சம்யுக்தாவுக்குச் சுத்தமாக இல்லை. “எனக்கு உங்க பையனைக் கல்யாணம் செய்துக்கச் சம்மதமில்லை.” எனத் தெளிவாக, நிதானமான குரலில் சம்யுக்தா சொல்லவும், கேசவமூர்த்தியின் தன்மானம் அடி வாங்கியது.



முகத்துக்கு நேராக உங்கள் மகனைப் பிடிக்கவில்லை என்று சொன்னால் யாருக்குப் பிடிக்கும்?



“என்னம்மா இப்படிச் சொல்லற? ஒருவேளை லவ் பண்ணறியா?” என அவரும் விவாதத்தில் இறங்கினார்.



‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ? அதனால் தான் மகள் தயங்குகிறாளா? ஆனால் அதை தன்னிடம் சொல்லலாமே’ என குணசீலனும் மகளைப் பார்க்க,



“பிடிக்கலைன்னா அது மட்டும் தான் காரணமா இருக்க முடியுமா அங்கிள்? எனக்குப் பிடிக்கலை. புரிஞ்சுக்கோங்க” என சம்யுக்தா சொன்னதும், அதுவரையில் கெஞ்சலைக் கையில் எடுத்திருந்த கேசவமூர்த்தி, இப்போது தற்காப்பு நிலைக்குச் சென்றார்.



“என் பையனுக்கு என்னக் குறைச்சல்? அன்பானவன், அமைதியானவன், எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. நல்ல வேலையில் இருக்கிறான். உனக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?” என அவர் அடுக்கிக் கொண்டே போக,



“நான் எதிர்பார்க்கிற அளவுக்கு நீங்க பணக்காரங்க இல்லை அங்கிள்” எனப் பட்டென்று சம்யுக்தா சொல்ல, அங்கே கனத்த அமைதி நிலவியது.



தன்னிடம் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதைப் போல் நண்பன், கேசவமூர்த்தியிடம் பேசமாட்டாள் மகள் என குணசீலன் நினைத்திருக்க, இப்படிப் பட்டென்று உடைத்துப் பேசிவிட்டாளே எனப் பதறினார் குணசீலன்.



அதனால் அவரே அமைதியைக் கலைத்தார். “என்ன பேச்சு இது? நான் உன்னை அப்படி வளர்க்கலை” என மகளைக் கடிந்து கொள்ள,



“அப்பா, உண்மை அது தான். நிதர்சனத்தை எடுத்துச் சொன்னேன்.. இதுவரைக்கு ம் பார்த்துப், பார்த்து செலவு செஞ்சேன். இனிமேலாவது நான் நிறைய அனுபவிக்கணும்” என்றாள் சம்யுக்தா.



பக்கத்துக்கு மேஜையில் உணவருந்திக் கொண்டிருந்த சக்திக்கும் அவள் சொன்னதனைத்தும் காதில் விழுந்தது. ‘ச்சீ. சரியானப் பணப்பேயாக இருக்கிறாளே’ என முகம் சுழித்தான்.



கேட்ட பெரியவர்கள் இருவரும் என்ன சொல்வதென்று சற்றுநேரம் அமைதி காக்க, “புரிஞ்சுக்கோங்க அங்கிள். எனக்கேத்த ஒருத்தன் வருவான். ஆனால் உங்க பையனுக்கு என்னைவிட வேற நல்ல பொண்ணு கிடைக்கும்” என்றாள்.



“அதை நீ சொல்லாத. கூடிய சீக்கிரம் நானே உன்னை விட நல்ல பெண்ணைப் பார்த்து என் பையனுக்குக் கட்டி வைக்கிறேன்” என நாற்காலியை பலமாகத் தள்ளிவிட்டு எழ, அங்கிருந்த சொற்ப மனிதர்களின் கவனம் அங்கே திரும்பியது.



“குரல் மட்டும் இனிமையா இருந்தாப் பத்தாது. குணமும் அப்படி இருக்கணும். இப்படியெல்லாம் பெரியவங்களை எடுத்தெரிஞ்சுப் பேசி மனசை நோக வச்சதுக்கு நல்லா அனுபவிக்கப் போற” எனச் சம்யுக்தாவைத் தூற்றாத குறையாகக் கேசவமூர்த்தி பொறிய,



“கேசவா, எங்க போற? இரு. உன் வாயால என் மகளை அப்படிச் சொல்லாத.” என ஓர் தந்தையாக, குணசீலன் நண்பனின் கையைப் பற்றினார்.



“இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாத. அந்தத் தகுதியை நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இழந்துட்ட. பொண்ணை வளர்த்து வச்சிருக்க பாரு” எனக் கையை உதறிய கேசவமூர்த்தி போயேவிட்டார்.



அங்கிருந்தவர்கள் இவர்களைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ சலசலத்துக் கொள்வதுமாக இருக்க, “என்னம்மா இதெல்லாம்? எல்லோரும் நம்மளையே பார்க்கிறாங்க.” என்றார் குணசீலன்.



“அப்பா, உங்களை யாரு முதல்ல அங்கிளை இங்கே வரச் சொன்னது?” எனத் தந்தையிடம் கேட்டாள் சம்யுக்தா.



“நான் வரச் சொல்லலை. உன்னைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன். அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் இழுத்தடிச்சுட்டு இருக்கவும் அவனே நேரில் வந்துட்டான் போல.. இப்போ அதுவா முக்கியம்? வா இங்கிருந்து முதல்ல கிளம்பலாம்.. எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்க” எனப் பணத்தைச் செலுத்திவிட்டு மகளுடன் குணசீலன் வெளியேறினார்.



அனைவரும் பார்க்கும் பொழுது நண்பன், கேசவமூர்த்தி அப்படி உரக்கப் பேசிச் சென்றது குணசீலனுக்கு அவமானமாக இருந்தது. அதனால் ஒரு கணம் கூட அங்க நின்று கொண்டிருக்க இஷ்டமில்லாததால் அப்படிக் கிளம்பினார்.



“போங்கப்பா.. பைசா மதிப்பில்லாத விஷயத்துக்கு என்னைச் சாப்பிடவிடாம இப்படி வெளில இழுத்துட்டுப் போறீங்க” என முணுமுணுத்தவாறே தந்தையைப் பின்தொடர்ந்தாள் சம்யுக்தா.



நடந்தவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சக்தி, ‘சீ.. சீ. என்ன பெண் இவள்? என் கையில் தனியாகச் சிக்கட்டும் உண்டு இல்லை என்று செய்துவிடுகிறேன்’ எனச் சபதம் செய்து கொண்டு அங்கிருந்து தன் வேலை நடக்கும் இடத்துக்குப் பறந்தான். (நீ வாய்லேயே எல்லா சபதத்தையும் எடுத்துக்கோ ராசா. செயல்ல காட்டிடாத.)



****

‘ஹாப்பி பர்த்டே டூ யூ.’ என்ற ஆரவாரக் குரல் அந்த உணவகத்தினுள் கேட்க, நீட்டிய கத்தியை வாங்கிக் கேக்கை வெட்டினாள் சம்யுக்தா. வெட்டிய கத்தியில் ஒட்டியிருந்த க்ரீம், ‘என்னை ருசித்துப் பார்’ என அவளிடம் சவால் விட, சற்றும் யோசிக்காமல் கத்தியை வாயில் வைத்து ருசித்துப் பார்த்தாள்.



கத்தி என்ன பஞ்சுப் பொதிகையா? அவள் ரோஜாப்பூ இதழ்களை வருடிவிட. தீண்டிய உடனேயே ரோஜா வண்ணத்தைக் குபுக்கென்று வெளியேற்றியது.



அதில் துளிர்ந்த ரத்தத்தைப் பார்த்து துடித்துப் போன சித்தார்த், சற்றும் யோசிக்காமல் அவள் இதழ்களை அங்கு அழகாக மடிக்கப்பட்டிருந்த துணிகொண்டு துடைத்தவாறே, “லூசா நீ? கத்தியைப் போய் வாயில் வைப்பியா?” எனப் பதறினான்.



“விடு. தெரியாமல் பண்ணிட்டேன்” எனச் சிரித்தவாறே சம்யுக்தா சொல்ல, சித்தார்த் அவள் மண்டையில் ஓர் தட்டுத் தட்டி, “உனக்குச் சிரிப்பு வருதா? உன்னைக் கட்டிக்கப் போறவன் பாடு திண்டாட்டம் தான்” என்றான் சித்தார்த்.



இந்தக் காட்சியைத் தான் சக்தி, ‘மூன்லைட் கிச்சன்’ உணவகத்தில் நுழையும் பொழுது பார்த்தான். ‘அதானே பார்த்தேன். இவனை மனசுல வச்சுட்டுத் தான் இல்லாத ‘பில்ட்-அப்’ கொடுத்துட்டு இருந்தாளா? இவனைப் பார்த்தா நல்ல பசையுள்ள பார்ட்டி மாதிரி இருக்கு.



பொய்யும் நல்லா வருது. நடிப்பு அதைவிட நல்லா வருது. ஓசியில் சாப்பாடுன்னா உடனே கிளம்பிடுவா போல’ என்று மானசீகமாக நொடித்துக் கொண்டவாறே உள்ளே அலுவக அறையில் இருந்த வெண்மதியை நோக்கி நடந்தான்.



“நீயும் ஆரம்பிக்காத. ‘பர்த்டே பேபி’யைப் பார்த்தா பாவமாயில்லை.? ப்ளீஸ்டா கேக்கை சாப்பிடவிடு” என சம்யுக்தா சொல்ல, போலியான கோபத்துடன் முகத்தைத் தூக்கி வைத்து அமர்ந்து கொண்டான் சித்தார்த்.



“ஏண்டா சித்து, ரொம்ப நாளா ஒரு டவுட்? சிட்டிபஸ், டவுன்பஸ், ஏ.சி.பஸ், ‘பாயிண்ட் டு பாயிண்ட்’ பஸ் என இப்படிப் பல பஸ் பாத்திருக்கேன். ஆனா கொலம்பஸ்.. கொலம்பஸ்ன்னு சொல்லறாங்களே அது என்ன பஸ்டா.? எங்கே பார்க்கலாம்?” என சம்யுக்தா முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்க,



பக்கென்று சிரித்த சித்தார்த், அவள் தோளில் தட்டி, “நீ இருக்கப் பாரு. பேசியே ஆளைக் கவுத்திடு. ம்ம்ம்ம். அது அமெரிக்காவைக் கண்டுபிடிச்சவருன்னு உனக்குத் தெரியாது பாரு” என்றான்.



“அப்படியா? அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது கொலம்பஸா. அப்போ அமெரிக்காவைத் தொலைச்சது யாரு?” என்றாள் கண்களை உருட்டி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.



“சம்யு. என்னை விட்டுடு. நான் ரொம்பப் பாவம்” எனக் கையெடுத்துக் கும்பிட்ட சித்தார்த், “எனக்கு எந்தக் கோபமும் இல்லை. இப்போ சாப்பிடலாம்.” எனச் சாப்பிட ஆரம்பித்தான்.



சாப்பிடும் நேரம் முழுவதும் ஏதோ யோசனையில் இருந்த சித்தார்த்தைப் பார்த்த சம்யுக்தா, “என்ன கேட்கணுமோ கேட்டுடு” என்றாள்.



தோழி கண்டுபிடித்துவிட்டாளே எனச் சில நொடிகள் தயங்கியவன், “மாப்பிள்ளையை ஏன் பிடிக்கலைன்னு சொன்ன?” எனக் கேட்டான்.



“அவன்கிட்டே நிறையப் பணம் இல்லைடா.. அப்புறம் எப்படி நான் ‘பி.எம்.டபிள்யூ’ கார் வாங்கறதாம்?” என்றாள் கண்ணடித்து.



“ப்ளாக் மணி வார்னிங் (பி.எம்.டபிள்யூ) காரா? சும்மா கதை விடாத. உண்மையைச் சொல்லு” என்றான் சித்தார்த்.



இது தான், பழகியவர்களுக்கும், முதல் முறை பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம். அவள் அப்படிச் சொன்னதும், தன் தோழியின் குணநலனைப் பற்றிப் புரிந்திருந்த சித்தார்த் அதை நம்பவில்லை. ஆனால் அவள் சொன்னதைக் கேட்ட சக்தி, அவளைத் தவறாக எண்ணிக் கொண்டான்.



“பார்க்கச் சுமாராக இருந்தான். அதான்” என்றதும், “என்ன சொல்ற? அன்று உன்னைப் பார்க்க நம்ம ஆபிஸ் வந்தப்போ பார்த்தேனே. ஆளு பார்க்க சூப்பரா இருந்தார். ஐ.டி. பீல்ட் வேற” எனச் சொன்ன சித்தார்த்துக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.



“டேய். ரொம்பவும் சீன் போடாத. ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னை நேர்ல பார்க்க வந்தது என் அழகில மயங்கி என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்ல இல்லை” எனக் கேசவமூர்தியின் மகன், மனோஜ் வந்து அவளைச் சந்தித்ததன் காரணத்தைச் சொன்னாள்.



மனோஜ் தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை மனதார விரும்புவதாகவும் அதனால் சம்யுக்தாவை மணக்க முடியாது என அவன் முடிவைச் சொன்னான். அத்தோடு தான் காதலிக்கும் பெண் தற்காலிகமாக அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதால் அவனால் உடனே அதைப் பற்றி வீட்டில் பேசவும் முடியவில்லை.



கூடுதலாக மனோஜின் காதலைப் பற்றி அவன் வீட்டில் தெரியப்படுத்துவதில் ஓர் சிக்கல் உள்ளது. மனோஜின் பெரியப்பாவின் மகன் சில வருடங்களுக்கு முன்னால் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளவும், அவன் குடும்பம் மொத்தமும் காதலுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள்.



அவர்கள் மனதைக் கரைத்து, சம்மதிக்க வைக்க அவனுக்குச் சற்று கால அவகாசம் வேண்டும். அவனால் எளிதாக சம்யுக்தவைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் அவன் தந்தை அத்தோடு நிற்க மாட்டார். வேறொரு பெண்ணை வரிசையில் கொண்டு வந்து நிறுத்துவார்.



அதனால் சம்யுக்தாவுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னால் தன் பெற்றோர்களுக்குத் தன்மானத்தைச் சீண்டியதைப் போலாகிவிடும். சில காலம் அவன் கல்யாண விஷயத்தை ஆறப்போடவும் வாய்ப்பிருக்கு. அதற்குள் எப்படியோ தன் விஷயத்தை வீட்டில் சொல்லிவிடுவான் என அன்று வந்த மனோஜ் சம்யுக்தாவிடம் சொன்னான்.



நட்புடன் பழகவில்லை என்றாலும் தந்தையின் நண்பனின் மகன் என்று மனோஜை அவ்வப்பொழுது பார்த்திருக்கிறாள். அவளுக்குத் தெரிந்த வரையில் அவனிடம் எவ்விதக் கெட்ட குணங்களும் இல்லை.



அதனால் அவனுக்கு உதவ முன்வந்த சம்யுக்தா அவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சம்மதமில்லை என்றாள். ஆனால் கேசவமூர்த்தி விடாமல் தொடர்ந்து வந்து அவளிடம் நேரடியாகக் கேட்கவும், தன்னிடமே இத்தனைத் தொல்லைச் செய்பவர் தன் மகனுக்கு எவ்வளவு குடைச்சல் கொடுப்பார் என நினைத்தாள்.



அதனால் சமயோசிதமாக யோசித்து, ‘பணம் போதவில்லை.’ எனச் சொல்லிக் அவரைக் காயப்படுத்திவிட்டாள். அந்தக் காயம் ஆறுவதற்குச் சில மாதங்கள் ஆகும். அதற்குள் மனோஜ் தன் வேலையைச் சுலபமாக சாதித்துக்கொள்வான்.



சம்யுக்தா சொன்னதைக் கேட்ட சித்தார்த், “பின்னிட்ட போ. காசு கொடுக்காமலேயே இத்தனை ஆக்டிங்ன்னா, காசு கொடுத்தா எவ்வளவு நடிப்பை எடுத்து விடுவியோ?” எனச் சொல்லிக் கொண்டிருக்க, வேண்டுமென்றே அப்போது சம்யுக்தாவைக் கடந்து சென்ற சக்தியின் காதுகளில் அது விழுந்தது.

சம்யுக்தா தன்னை அடையாளம் கண்டுகொள்கிறாளா, இல்லையா, என நோட்டம் விடுவதற்காகச் சக்தி அப்படி அவளருகில் நடந்துச் சென்றான். ஆனால் சுற்றுப்புறத்தைக் கவனிக்காமல் தன் கேக்கில் கண்களைப் பதித்து, சித்தார்த் சொல்வதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.



“பின்னே. ஆக்டிங்ன்னா சும்மாவா?” என அவளும் அவனை ஒத்தே பேச, சக்தி அவர்களைக் கடந்திருந்தான்.



“இந்த விஷயத்தை உன் அப்பாகிட்டே சொல்லியிருக்கலாம் இல்லை. அவர் என்னைக் கூப்பிட்டுப் புலம்பறார்” எனச் சித்தார்த் சொல்ல,



“யாரு உண்மைவிளிம்பியான அப்பாகிட்டே? வேற வினையே வேண்டாம். நேர்மை, நீதி, நியாயமா இருப்பேன் எனக் காதல் விஷயத்தை லீக் பண்ணிடுவார். நண்பருக்குச் சொல்லிப் புரியவைக்கலாம் எனக் காரியத்தையே கெடுத்திடுவார். மனோஜோட கல்யாணம் முடிஞ்சதும் சொல்லிடறேன்” என்றாள்.



“இப்படி எல்லோருக்கும் உதவியா இருக்க. அதுவும் உன் பெயரை ரிப்பேர் பண்ணிட்டு” என்றதும்,



“அதனால் என்னடா? என்னால் யாருக்காவது நல்லது நடந்தாப் போதும். நல்ல பெயரை வாங்கி வச்சு நான் என்ன செய்ய? அதனால் யாருக்காவது ஏதாவது பயன் இருக்கா?” என்றாள் சம்யுக்தா.



“பார்த்தும்மா. அப்புறம் உனக்கு உதவி தேவைப்படும் பொழுது செய்ய ஆளே இல்லாமல் போயிடுவாங்க.” என்றான் சித்தார்த்.



“ஏன்டா, நீ இருப்பில்ல” என சம்யுக்தா சொன்னதும், “ஹா. ஹார்ட்டை டச் பண்ணிட்ட. சம்யு” என்றான்.



சித்தார்த் மற்றும் சம்யுக்தாவின் நட்பு அவர்களின் அலுவகத்தில் பிரசித்தி பெற்றது. ஆரம்பத்தில் சம்யுக்தாவின் கலகலப் பேச்சில் அவனுக்கு எரிச்சல் மட்டுமே வரும்.



சம்யுக்தா வேலையில் சேர்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே சித்தார்த் வந்து வேலையில் சேர்ந்துவிட்டான். அதுவும் மருத்துவரான அவன் தந்தையிடம் போராடி.



அவருக்கு மகன் டாக்டராக வேண்டும் என்ற ஆசை. ஆனால் சித்தார்த்துக்கு கனவெல்லாம், நல்ல எழுத்தாளன் ஆக வேண்டும் என்பதே. அதனால், ‘அப்பா, எனக்குப் பிடிச்ச பீல்ட்ல நான் சாதிக்கறேன்” என மறுத்தான்.



அவன் தந்தையோ, “அப்போ சாதிச்சுட்டு இந்த வீட்டுக்குள்ள வா” என அவனிடம் சவால் விட, சித்தார்த்தின் அன்னைப் பதறினார்.



“போய்க் கஷ்டப்பட்டாத் தான் அவனுக்குப் புத்தி வரும்” எனச் சித்தார்த்தின் தந்தை சிறிதும் மனம் இளகவில்லை.



“சாதிப்பேன்.. ஆனால் படிக்க உங்க உதவி வேணும். கடனாகப் பணத்தைக் கொடுங்க” என்ற சித்தார்த், தந்தையிடம் சொன்னதைப் போல நன்கு படித்து முடித்தவன், வேலையில் சேர்ந்து கொண்டு, “அப்பா, நான் இனி இந்தத் துறையில் சாதிச்சுட்டுத் தான் இந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைப்பேன்” எனச் சவால் விட்டுவிட்டு வெளியேறினான்.



அதனால் நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்துக் கொண்டிருந்தான். அப்படிப் பிடிவாதமாக இருந்து கஷ்டப்பட்டு வேலைக்கு வந்தால் இவள் என்னவோ இந்த வேலையை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறாளே என்று எரிச்சல் கொண்டான் சித்தார்த்.



சம்யுக்தா இந்த அலுவகத்தில் சேர்ந்தபொழுது இவனுக்குக் கீழே தான் வேலையில் சேர்ந்தாள். இவன் தான் எல்லாவற்றையும் கற்றும் கொடுத்தான். ஆனால் சேர்ந்த ஆறே மாதத்தில் அவள் குருவை மிஞ்சும் சிஷ்யை ஆகிவிட்டாள்



சம்யுக்தா வரும் வரையில், சித்தார்த் அந்த அலுவலகத்தில் முடிசூடா மன்னனாக இல்லா விட்டாலும் ஓரளவுக்கு நன்கு வேலை செய்தான். ஆனால் சம்யுக்தா வந்ததும் வராததுமாய் அவளின் கலகல குணத்தால் அனைவரையும் தன் பக்கம் சாய்த்துவிட்டாள்.



‘சும்மா வாய் தான்.. வேலையில ஒண்ணும் இருக்காது’ என்று தான் ஆரம்பத்தில் நினைத்தான் சித்தார்த். ஆனால் சம்யுக்தாவின் எழுதும் திறமையைப் பார்த்ததும் அசந்துவிட்டான்.



அத்தோடு நிற்கவில்லை அவன் சிந்தனை. ‘அவன் நேசிக்கும் தொழில் இது. அப்படியிருக்கையில் தன்னால் ஏன் இப்படி, யோசிக்க முடியவில்லை. இவளைப் போல் எழுத முடியவில்லை?’ என்ற கேள்விகளும் குடைய ஆரம்பித்தது.



அதே சமயத்தில் தான், ‘சம்யு மாதிரி எழுதுப்பா. அப்போ தான் ரீச் இருக்கும்’ என்ற அறிவுரை வேறு மேலிடத்தில் இருந்து வர, நாளடைவில் சித்தார்த்தின் போட்டிக் குணமே, பொறாமை மனமாகிப் போனது.



ஓர் நாள் மதிய வேளையில் ‘சீப் எடிட்டரை’ சந்திக்க வேண்டும் என்று இருவரும் அவர் அறையில் காத்திருக்க, அவர் வந்து, “சம்யு, வந்த இந்த ஆறு மாசத்தில் உன் எழுத்துத் திறமை எங்களை ஆச்சர்யப்பட வைக்குது. அதனால் உனக்குப் பதவி உயர்வு தருகிறேன்” எனச் சொன்னார்.



அந்தப் பதவியில் இருந்தவர் வேறு பத்திரிக்கைக்குச் சென்றுவிட, அந்த இடம் நிரப்பப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளியில் இருந்து ஆளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக சம்யுக்தாவுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.



அந்தப் பதவி, இப்போது சித்தார்த் இருக்கும் பதவியை விட ஒரு படி மேல். வந்த சில மாதங்களிலேயே பதவி உயர்வை வேறு பெற்றுக் கொண்டு தனக்கு ஈடாக.. ஈடாக எங்கே? தனக்கும் மேலே அமர்ந்துவிட்டாள் என சம்யுக்தாவின் மேல் சித்தார்த்துக்கு எரிச்சல் வந்தது.



அதை முகத்திலும் காட்டிவிட்டானோ? எடிட்டர் சொல்வதை அமைதியாகக் கேட்ட சம்யுக்தா, “உங்க முடிவை மறுக்கறத்துக்கு என்னை மன்னிச்சிடுங்க சார். அது சரி வராது. அப்படி நான் ஒத்துக்கிட்டா இங்கிருக்கிற சக ஊழியர்களுக்கு என்மேல் இருக்கும் நட்புணர்வைக் கொன்னுடும்.



மனதில் குறையுடன் வேலை செய்தால் பிறகு வேலையில் காட்டும் தீவிரம் குறைஞ்சிடும். எல்லரோரையும் போல் மெதுவாகவே முன்னேறிக்கிறேன். ஆனால் நீங்க குறிப்பிட்ட வேலைகளை அனைத்தையும் செய்கிறேன்” எனப் பதவி உயர்வை மறுத்துவிட்டாள்.



‘உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?’ எனச் சித்தார்த் அவளைப் பார்க்க, வந்த வேலையைக் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டாள் சம்யுக்தா.



வேலையை முடித்துக் கொண்டு அவர்கள் இருவரும் வெளியேற, “சம்யு.” என அழைத்த சித்தார்த்தின் குரலில் முதல் முறையாக எரிச்சலில்லாமல் ஒலித்தது.



“சொல்லுங்க சித்து? இன்னும் என் மேலே பொறாமையா இருக்கா?” என சம்யுக்தா கேட்டதும், சித்தார்த் திகைத்துவிட்டான்.



“இல்ல.. சம்யு” எனச் சித்தார்த் தடுமாற, “எனக்குத் தெரியும் சித்து. வாங்க காபி குடிச்சுட்டே பேசலாம்” என சம்யுக்தா முன்னே செல்ல, மறுப்பேதும் சொல்லாமல் அவள் பின்னால் நடந்தான்.



அருகிலிருந்த காபி ஷாப்பில் வேண்டியதைச் சொல்லிவிட்டு சித்தார்த்திடம் திரும்பிய சம்யுக்தா, “நான் வேலையில் சேர்ந்த பொழுது என்னிடம் கலகலப்பாப் பேசினீங்க. ஆனால் எங்கே உங்களைவிட பெட்டரா செஞ்சு நான் பேரும் புகழும் வாங்கிடுவேன்னு பயம். ஆனால் அதை வெளியில் சொல்லாமல் இருக்கீங்க” என்றாள்.



தன் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் பெண்ணை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.



“உங்களுக்கு என்னை விட அதிகத் திறமை இருக்குன்னு ஏன் உங்களுக்கே புரியலை? உங்களுக்கு நான் போட்டியா வந்திடுவேன்னு பதட்டம். அதனாலேயே வேலையை ஒழுங்கா செய்ய மாட்டேங்கிறீங்க”



“அதில்ல சம்யு” என அவன் தடுமாற,



“உங்க அப்பாகிட்டே விட்ட சவால்ல ஜெயிக்கணும் என்கிற வெறி மட்டுமே உங்க அடிமனசில் இருக்கு. அவ்வளவு தான். உங்க திறமையை வெளிப்படுத்தணும் அப்படிங்கிற எண்ணமில்லை.



அதனால் மனஅழுத்தம், மைக்ரேன் (ஒற்றைத் தலைவலி) எனத் திண்டாடிட்டு இருக்கீங்க. வேறெந்த சிந்தனையும் இல்லாமல் திறமையை மட்டும் வெளிக்கொண்டு வந்தா உலகத்தை நீங்க திரும்பிப் பார்க்க வைக்கத் தேவையில்லை. உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். கண்டிப்பாச் சாதிப்பீங்க” என்றாள்.



‘தன்னால் இந்தத் துறையில் சாதிக்க முடியுமா? தன் தந்தையிடம் போய் தலையுயர்த்தி, சாதித்துவிட்டதாகச் சொல்ல முடியுமா?’ என்ற எண்ணம் நெருஞ்சியாய் அவன் மூளையை எந்நேரமும் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.



அதிகம் வலிக்காது என்றாலும், நெருஞ்சியின் குணம் ஒன்றும் பஞ்சு போல் தீண்டுவதும் கிடையாதே. அதனால் சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளே கனன்று கொண்டிருந்தாலும், அதே சிந்தனையில் அவனால் வேலையில் முழுஈடுபாட்டுடனும், முழுமனதுடனும் செயல்பட முடியவில்லை.



சம்யுக்தா சொல்வதும் நிஜம் அல்லவா? இத்தனை நாட்களும் அவன் தன் திறமையைக் காட்ட வேண்டும் என்று நினைக்கவில்லையே. தன் தந்தையிடம் விட்ட சவாலில் வெற்றிப்பெற வேண்டும் என்று மட்டும் அல்லவா நினைத்தான்.



தன் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டியவளை வியந்து பார்த்தவன், “இப்போ சொன்னதையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா எனக்குக் கண்டிப்பா எரிச்சல் வந்திருக்கும்.



ஆனால் கிடைத்த பதவி உயர்வை வேண்டாம் என எப்போச் சொன்னீங்களோ அப்பவே உங்க நல்ல குணம் புரிஞ்சிடுச்சு” என்றான் சித்தார்த்.



அதன்பின்னர் மற்ற கவலைகளையெல்லாம் ஒதுக்கித் தன் திறமையை வெளிக்கொண்டு வர ஆரம்பித்தான் சித்தார்த்.



கூடவே சம்யுக்தாவுடனான நட்பும் மலர்ந்து விரிய, நாளடைவில் சித்தார்த்துக்கும் சம்யுக்தாவின் கலகலப்பான குணம் தொற்றிக் கொண்டது. அதன்பிறகு வந்த ஆறு மாதங்களில் சம்யுக்தா அவனின் இன்றியமையாத தோழியாகிவிட்டாள்.



அவர்களுக்குப் பக்கவாட்டு டேபிளில் அமர்ந்திருந்த ஒருவன், தேன் தடவும் குரலில் சம்யுக்தா சொன்னதைக் கேட்டதும், மெச்சுதலாக அவளைப் பார்த்தான். ஆனால் சம்யுக்தா அதைக் கவனிக்காமல் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
 

Author: Lavans
Article Title: அத்தியாயம் - 9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.