அத்தை மகள் ரத்தினமே
"என்னடா இது கேபின் வெளிச்சமே இல்லாம டல்லா இருக்குதேன்னு பார்த்தேன். நம்ம மீரா மேடமோட சோக முகம்தான் அதுக்கான காரணமா?"
டேபிளின் மீது கைவைத்து, தலையை தாங்கியபடி அமர்திருந்த மீரா தனது ஒற்றைபுருவத்தை தூக்கியபடி ஒரு முறைப்போடு,
"மரியாதையா போய்டு இல்லாட்டி கிரீன்வோட்ஸ் யூஸ் பண்ணிடுவேன்."
மீராவிற்கு அருகே அமர்ந்திருந்த நிஷா வாய்ப்பொத்தி சிரிக்க, பெண்களை இம்ப்ரெஸ் செய்வது ஒன்றே தனது தலையாயகடமை என்று சுற்றிக் கொண்டிருக்கும் விமலுக்கு, கோபம் வந்தாலும் சூழ்நிலையை சமாளிக்க எண்ணி,
"என்ன மீரா சோகமா இருக்கீங்களே உங்களை சியர்அப் பண்ணலாம்னு வந்தா இப்படி கோபப்படறீங்களே? உங்க மூட் மாத்தலாம்னு தாங்க நான்..."
"அப்படியாங்க இத்தனை நாள் எனக்கு இது தெரியாம போயிடுச்சே, என் சந்தோஷம் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா?"
அவளது பதிலில் விமல் வாயெல்லாம் பல்லாக ,
"பின்ன இல்லயா மீரா, உன் சந்தோஷத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். சொல்லு மீரா இப்ப நான் என்ன செய்யனும்?"
"இந்த வேலையை விட்டுட்டு போயிடு மகராசா."
விமல் அதிர்ந்து போய் நிற்க, மீரா தனது பேச்சை தொடர்ந்தாள்.
"அப்பவாச்சும் இந்த பில்டிங்ல இருக்கற லேடீஸ் எல்லாம் நிம்மதியா இருக்கட்டும், உன் வேலையை பார்த்துட்டு போடா என்வென்று."
நிஷா சத்தமாக சிரிக்கத் தொடங்கிவிட்டாள். விமல் சிவந்த முகத்தோடு அங்கிருந்து நகர்ந்துவிட, கையில் இருந்த பைலைக்கொண்டு, நிஷாவை அடிக்கத்தொடங்கினாள் மீரா.
"நானே டென்ஷன்ல இருக்கேன் உனக்கு என்னஎருமே இளிப்பு வேண்டிக்கிடக்கு?"
"நம்ம கார்த்திக் சார்கிட்ட போய் லீவு கேட்க உனக்கு எதுக்குடி இவ்வளவு டென்ஷன்? அவர் எவ்வளவு ஸ்வீட் தெரியுமா? அவரோட அந்த ஸ்மைல் இருக்கே... ப்பா, அதை விட அவரு கண்ணு சிரிக்கும் பாரு, சும்மாவா அவரை எல்லாரும் கனவுநாயகன்னு சொல்றோம்."
கண்களில் கனவுகள்மின்ன சொல்லிக்கொண்டிருந்த நிஷாவின் தலையை, மீண்டும் ஒருமுறை தனது பைலினால் தட்டியவள்,
"அது என்னமோ உங்களுக்கெல்லாம் சாக்லேட்பாயா இருக்கிற மனுஷன், என்னை பார்த்தா மட்டும் வாத்தியா மாறி ரவுண்டுகட்ட ஆரம்பிச்சிடறாரு. "
"அதுக்கு மெயின்காரணமே நீதான்."
"வாட்... என்னைப்பார்த்து...என்ன வார்த்தை சொல்லிட்ட? இந்த சூதுவாது தெரியாத பச்சக்குழந்தை மேல, இப்படி ஒரு பழியை தூக்கிப் போடறியே? இதை உலகம்தாங்குமா?"
"ஆஹான் இந்த ஒண்ணும் தெரியாத பச்சைபுள்ள ஒரு டைம் ஆபீஸ்பார்ட்டில, லாவண்யாமேடமுக்கு பண்ணிண சிறப்பானசம்பவம் நியாபகம் இருக்கா?"
" அது அது எதிர்பாராம நடந்தது, அந்த சீன்லாவண்யா தானாபோய் ஏர்கூலர்கிட்ட நின்னு, கவுனை பறக்கவிட்டு வித்தைகாட்டினா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"
"அப்படியா அப்ப கரெக்டா உன் போன்ல இருந்து, அழகியலைலா பாட்டு ப்ளேஆச்சே அதுகூட தற்செயலா? அதோட மேடையை பார்த்து இருந்த கூலர் எப்படி என்ட்ரன்ஸை பார்த்து திரும்புச்சு?"
மீரா திருட்டுமுழி முழிக்க, "அது எதிர்பாராம நடந்தவிஷயம் இல்லைன்னு கார்த்திக்சார் மாதிரியே எனக்கும் தெரியும். "
"எதே? ஓ... அதுதான் அதுக்கு அடுத்து நடந்த கிளைண்ட்பார்ட்டில, அவரே வாண்டட்டா என்கிட்டவந்து போன் சைலண்ட்லதான் இருக்கான்னு கேட்டாறா? நான் கூட எதார்த்தமா, ஏன் சார் எதுவும் ப்ரே பண்ணபோறமான்னு கேட்டு வைக்க, மனுஷன் வழக்கம்போல கத்திட்டு போனாரோ?"
" அடிப்பாவி அவர் உன்னை திட்டறதுக்கு முழுமுதற்காரணமே உன் திருவாய்தான், நீ உன் வாயை வெச்சுகிட்டு சும்மாஇருந்தா பரவால்ல, அவருக்கு டென்ஷன் ஏத்துறமாதிரியே ஏதோ ஒன்னு பேசிடற, உடனே மனுஷன் கத்தஆரம்பிச்சிடறாரு."
"என்கிட்ட உருப்படியா இருக்கிறதே அது ஒன்னுதான் டி, சும்மா நான் போய் பேசினாலே உர்ருனு முறைச்சுப் பார்ப்பாரு, இப்பவேற முக்கியமான ப்ராஜெக்ட்வொர்க் போயிட்டிருக்கு, இந்த டைம்லபோய் நான் லீவுகேட்டா மனுஷன் கடிச்சு கொதறிஎடுத்துருவாரே?
லீவுகேட்டா வாத்திகத்துவாரு, அதுக்கு பயந்து ஊருக்கு போகாட்டி என் அப்பத்தா கத்தும், இதுக்கு இடைல ப்ராஜெக்ட்வொர்க் வேற, அச்சோ...ஆண்டவா...ஒரு குட்டி இதயத்தை நோக்கி அடுத்தடுத்து இத்தனை தாக்குதலா?"
திடீரென ஆபிஸ் பரபரப்பானதிலேயே கார்த்திக் வந்துவிட்டான் என்று தெரிந்துவிட, தலையை குனிந்தபடி கீபோர்ட்டை தட்டத் தொடங்கிவிட்டாள் மீரா. தனது அறையை நோக்கிச் சென்றவனோ கண்களை சுருக்கியபடி அவள் அருகே வந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.
இப்ப எதுக்கு வாத்தி வாண்டட்டா வந்துகிட்ட நிக்குதுன்னு தெரியலையே, தலையை மட்டும் நிமித்திடாதேடி மீரா, கோழிதலையை திருகற மாதிரி திருப்பி போடுவான்.
தன்னை நிமிர்ந்து பார்க்காவே கூடாது என்று அவள் முடிவோடு இருப்பதை புரிந்துகொண்டவன்,
" மீரா... "
தெளிவாக ஒரு அழுத்தத்தோடு ஒலித்தது அவன்குரல்.
"ப்ராஜெக்ட்வொர்க்ல பிஸியா இருக்கேன், யாராயிருந்தாலும் அப்பறம் ப்ரேக்டைம்ல பேசுங்க. வாத்... ச்சீ நம்ம கார்த்திக்சார் வர்றதுக்குள்ள நான் இதை முடிச்சாகனும்."
"கம் டூ மை கேபின்." என்று கூறிவிட்டு கோபமாக அவன் தன் அறைக்குள் நுழைய, அருகில் இருந்த நிஷாவை பார்த்தவளோ,
"இப்ப நான் என்னடி தப்பா சொல்லிட்டேன்னு என்னை ரூமுக்குள்ள கூப்பிட்டுவைச்சு திட்ட அழைக்கிறாரு? நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலையை தானே ஒழுங்கா பார்த்துகிட்டு இருந்தேன், இதுல என்ன குத்தத்தை கண்டாரு இந்த நக்கீரர்?"
"ஸ்கிரீனை கூட ஆன் பண்ணாம கீ போர்டுல ஏபிசிடி தேடிதேடி டைப் பண்ணிட்டு இருந்தீன்னா உன்ன தூக்கி வெச்சா கொஞ்சுவாரு? இதுல கார்த்திக்சார் வர்றதுக்குள்ள வேலையை முடிச்சுக்கொடுக்கணும்னு பிட்டை வேறபோட்டிருக்க, போ போ உன்னை எப்படியும் முடிச்சுவிடற வேலையை பார்ப்பாரு அவரு."
"ஆஹா மண்டைமேல இருந்த கொண்டையை மறந்துட்டேனே, திட்டறதுக்காக என்னை உள்ளே கூப்பிடறவர்கிட்ட, எப்படி டி நான் போய் லீவுகேட்பேன்? மனுஷன் நெற்றிக்கண்ணை திறந்து என்னை பாப்கானா இல்ல பொறிச்சிடுவாரு."
கடவுளை வேண்டியபடியே அறைகதவை தட்டிவிட்டு அவன் அனுமதித்த பிறகு, அறைக்குள் நுழைந்தாள் மீரா.
"அடடே வாங்க வாங்க இந்த கம்பெனியோட சின்சியர் சிகாமணி மீரா அவர்களே, விண்டோஸ்ஸ்கிரீன் ஆப் ஆனது கூட தெரியாம அவ்வளவு சின்சியரா டேட்டாவை டைப்பண்ணிட்டு இருந்திருக்கீங்க இல்லையா?"
"ஆ... ஆமாம்சார், டைப் பண்ற மும்மரத்துல ஸ்கிரீன் போனது கூட தெரியல."
"உங்க கடமை உணர்ச்சியை நினைச்சு எனக்கு அப்படியே புல்லரிச்சுப்போயிடுச்சு, இந்தாங்க இந்த ரெண்டுபைல்ஸ் ஃபுல்லா ப்ராஜெக்ட் சம்பந்தமான டேட்டாஸ் எல்லாம் இருக்கு.
இது உங்க ஆர்வத்துக்கு தீனி போட்ட மாதிரி இருக்கும், எப்படியும் நாளைக்குள்ள இது எல்லாத்தையும் பினிஷ் பண்ணிடுவீங்க இல்லையா?ம்ம்ம்? முடிச்சு இருக்கீங்க...முடிச்சிருக்கணும் புரிஞ்சுதா."
திருதிருவென்று விழித்தபடியே கைகளில் பைல்களை பிடித்துக்கொண்டு நின்றவள், ஏதோ ஒரு யோசனை வந்தவளாக அப்படியே மயங்கி சரிவதுபோல் நடிக்க, பைல்கள் கீழேவிழும் சத்தத்தில் அவளைப் பார்த்தவனோ, நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்துவந்து அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
அவள் இரு கண்ணங்களையும் தட்டி எழுப்பமுயன்றவன் கடைசியாக மேஜையில் உள்ள நீரை முழுவதுமாக அவள் மீது ஊற்ற,
"ஐயோ சார் மயக்கம்போட்டா கையில தண்ணியை அள்ளித்தெளிக்கனும். இப்படி மூச்சுமுட்டி சாகறதுபோல தண்ணியை மொகத்துல ஊத்தக்கூடாது."
கார்த்திக் அவளை முறைத்தபடி, "அப்ப இதுவும் ஆக்டிங்தான் இல்லையா? என்ன பிரச்சனை உனக்கு? நானும் நேத்துல இருந்துபார்க்கறேன், உன் உடம்பு மட்டும்தான் இங்க இருக்கு மைண்ட் எதையோபோட்டு உழட்டிகிட்டேஇருக்கு?"
இவன் தன்னை இவ்வளவு கவனிக்கின்றானா என்று அவள் வாய்பிளந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் மனதைப் படித்ததுபோல,
"ஆமா நான் கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன், மூளையே இல்லாத அந்த மண்டைக்குள்ள எதைவச்சு யோசிக்கறேங்கற ஆச்சரியத்துல தான் உன்னை பாத்துட்டு இருந்தேன். கொஞ்சம் கையில இருந்து எழுந்திருக்கிறியா? வெய்ட் தாங்காம என் கை எலும்பு பிராக்சராயிடும்."
சட்டென்று எழுந்தவள் அவனை விட்டு தள்ளி நிற்க, "இப்ப சொல்லு என்ன பிரச்சனை?"
"ஒரு ரெண்டுநாள்... லீவு...?" இவ்வளவு நேரமும் கனிவாக இருந்த அவனது முகம் சட்டென்று கோபமாக மாறத்தொடங்க,
"சார் சார் ப்ராஜெக்ட்வொர்க் இருக்கிறது எனக்கு நல்லாவேதெரியும், அதோட இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பெனிக்கு எவ்வளவு இம்பார்ட்டெண்ட்னும் எனக்கு நல்லாவே தெரியும். பட் வீட்ல எங்க பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லையாம், படுத்தபடுக்கையா இருந்தபோதும் என் கையால பால் வாங்கிகுடிச்சுட்டுதான் போய்சேருவேன்னு அடம்பிடிக்கிறாங்களாம், நீங்க மட்டும் பர்மிஷன் கொடுத்தா அவங்களை நல்லபடியா அனுப்பிவச்சிட்டு வந்திடுவேன்சார்."
பழையபடி தனது இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டவன், "ஓகே இரண்டுநாள் நீ ஆபீஸ் வரவேண்டாம்."
அவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தபடி, "தேங்க்யூ சார் தேங்க்யூ சோ மச்..." என்று ராகம் இழுக்க,
"பட் வொர்க் பிரம்ஹோம் கண்டிப்பா பண்ணியாகணும். இந்த பைல்ஸில் இருக்கற டேட்டாவொர்க்கை நீ முடிச்சே ஆகணும். மண்டேமார்னிங் என்கிட்ட இதை நீ சப்மிட் பண்ற புரிஞ்சுதா? இந்த டீல்க்கு ஓகேன்னா நீ தாராளமா லீவுஎடுத்துக்கலாம்."
ஏண்டா இதுதான் உங்க ஊர்ல லீவா? என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தவள் இழுத்து பிடித்த புன்னகையை இதழ்களில் படரவிட்டபடியே தலையைதலையை ஆட்டிவிட்டு பைல்களோடு வெளியேவந்தாள்.
கார்த்திக்கிற்கும் வெளியே செல்ல வேண்டிய வேலைஇருந்தது. இது இரண்டுமாதத்திற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டு இருந்ததால், கம்பெனி வேலைகளை மீராவிடம் கொடுத்துவிட்டு செல்லலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தான். இவள் இப்படி திடீரென்று லீவுவேண்டுமென்று வந்துநிற்க, மறுப்பு சொல்லமுடியாமல் கம்பெனி வேலைகளை சீனியர் மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு, இவனும் தனதுகுடும்பத்தோடு வெளியே கிளம்பிஇருந்தான்.
கார்த்திக் அனுமதி கொடுத்த மறுநிமிடமே இரவு ஊருக்கு செல்வதற்கான டிக்கெட்டை புக் செய்துவிட்டாள் மீரா. மூட்டைமுடிச்சுகளோடு மறக்காமல் பைலையும் கைகளில் எடுத்துக்கொண்டவள் அடித்துபிடித்து வீடு போய்சேர, அங்கே வீடு திருவிழா காரணமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
அலுப்பு தீர குளித்து ஓய்வெடுத்தவள் உண்டு முடித்த மறுநிமடமே, கார்த்திக் கொடுத்த பைலோடு வேலை செய்ய அமர்ந்துவிட்டாள். அவளை தேடி வந்த ராக்காயிப்பாட்டி அவள் குமட்டில்குத்தி,
"ஏண்டி ரத்தினமாலா எத்தனைமுறை சொல்லியிருக்கேன், இங்க வரும்போது இந்த பொட்டிய தூக்கிகிட்டு வரவேண்டாமுன்னு, ஊருக்கு வந்தும் மனுஷமக்களை பார்க்காம ரூமுக்குள்ள இதையேன்டி உருட்டிக்கிட்டுகிடக்க?”
"அப்பத்தா... மீராங்கற வார்த்தை... உன்வாயில நுழையாதா? சாயங்காலம்தானே கோவிலுக்குபோகனும், அப்பறம் என்ன? போ போய் வழக்கம்போல வெத்தலையை இடிச்சபடியே டிவி நாடகத்தைப்பார்த்து மாமியார் மருமகளை குறைசொல்லு."
கண்ணத்தை தேய்த்தபடியே விட்டவேலையை அவள்தொடர, பாட்டியிடம் இருந்து மீண்டும் ஒருஇடி பரிசாக கிடைத்தது.
" நீ கண்டபடி பேரைமாத்திகிட்டா அதைதான் நான் சொல்லனுமாக்கும், என்ற வூட்டுக்காரர் வச்சப்பேரை சொல்லித்தான் நான் கூப்பிடுவேன். திருவிழாவுக்காக ஊர்லயிருந்து சொந்தக்காரங்கெல்லாம் வந்திருக்காங்க, அதோட ரொம்பநாளா பேச்சுவார்த்தையே இல்லாத உன் மாமாமுறை சொந்தமெல்லாம் வீட்டுக்கு வந்திருக்கு. வந்து அவுககிட்ட எல்லாம் நல்லவிதமா பேசு, அப்பத்தான் உன்னை இந்தவருசமாச்சும் வீட்டவிட்டுத் தாட்டமுடியும்."
"ஹேய் கிழவி என்ன நினைச்சுகிட்டு இருக்க, என்னப்பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?"
"சும்மா கத்தாதேடி, உன்னைய கட்டிக் கொடுத்தா தான் எம்புள்ள நிம்மதியா இருக்க முடியும். உன் முட்டகண்ண விரிச்சு முறைச்சிக்கிட்டு கிடக்காம, வெளிய வந்து பொண்ணு மாதிரிநில்லு. சமையலறையில உங்காத்தா டீ போட்டுட்டு இருக்கா, வெரசா அதை எடுத்துகிட்டு வா, இல்ல இப்பவே இந்த பொட்டியை முறிச்சு அடுப்புக்குள்ள போட்டிடுவேனாக்கும்."
கிழவி செஞ்சாலும் செஞ்சிடும் என்கின்ற பயத்தில் தனது வேலை சம்பந்தப்பட்ட பொருட்களை பத்திரமாக எடுத்துவைத்தவள், வெளிவரண்டாவை நோக்கிவர அங்கு நடுநாயகமாக அமர்ந்திருந்த கார்த்திக்கை கண்டு சிலையாகிவிட்டாள். அவனும் அவளை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவனது முகபாவனையில் நன்றாகத்தெரிந்தது. அவள் அம்மா கோப்பைகள் அடங்கிய ட்ரேவை அவள் கைகளில் கொடுத்துவிட்டு நகர,
"ரத்தினமாலா ஏம்மா அங்கயே நின்னுட்ட இங்க வா, உன்னைய பொண்ணு பாக்கத்தானே அத்தனை பேரும் வந்திருக்காங்க. எம்பேத்தி அடக்க ஒடுக்கமா வளர்ந்தபுள்ள, அதுதான் புதுசா ஆளுங்களை பார்த்ததும் தயங்கி உள்ளயே நிக்கிது. இவிங்க நம்ம சொந்தம்தான் வா சாமி.”
பாட்டியின் கூற்றில் கார்த்திக் புருவத்தை உயர்த்தியபடி,
" ஆஹான் இந்த காலத்துல இவ்வளவு அடக்க ஒடுக்கமான பிள்ளையா பாட்டி, ஆமா அவங்கபேர் என்ன சொன்னீங்க? ரத்தினமாலாவா? "
" ஆமாப்பு அதோட அவ உன் அத்தை மக தான்."
" ஓ... அத்தை மகள் ரத்தினமா?"
ஏற்கனவே கார்த்திக்கை கண்டு அதிர்ந்துநின்றவள் அவன் தன்னை பெண்பார்க்க வந்திருப்பதாக கூற, அப்படியே சிலையாக உறைந்துவிட்டாள். அவள் நிலையை உணர்ந்தவனோ எழுந்து அவள் அருகே சென்று, ட்ரேவை வாங்கியபடி மெல்லிய குரலில்,
"இவங்கதான் உன் கையால பால் வாங்கிக்குடிக்காம பரலோகம் போகமாட்டேன்னு அடம்புடிச்சுகிட்டு இருந்த அந்த பாட்டியா?"
"அது... அது நான் வந்த சந்தோஷத்துல எழுந்து..."
அவன் பார்த்த கோபப்பார்வையில் கப்பென்று வாயை பூட்டிக் கொண்டாள். கொடுமை கொடுமைன்னு ஊருக்கு வந்தா அதே கொடுமை நடுவீட்டுல, ஹால்ல என்னை நிற்கவச்சு கேள்வி கேட்குதே. முருகா உன் பிள்ளைய இந்த வால்டர்வாத்திகிட்ட இருந்து காப்பாத்துப்பா, என்ற அப்பத்தாக்கு மறக்காம ஒரு மொட்டயை போடறேன் என்று ஒரு வேண்டுதலையும் வைத்தாள் மீரா.
மாடன் உடையில் பார்த்து ரசித்தவளை பாவாடை தாவணியில் ரசனையாக பார்த்தவன், தானே அங்கு இருப்பவர்களுக்கு கைகளில் இருந்த தேநீரை அருந்தக் கொடுத்தான். சிறிது நேரத்தில் அவர்கள் தனியாக பேசிப்பார்க்கட்டும் என்று எண்ணிய பெற்றவர்கள் அவர்களை மொட்டை மாடிக்கு அனுப்பிவைக்க எடுத்த எடுப்பிலேயே மீரா”
"சார் இந்த பொண்ணு எனக்கு செட் ஆகாதுன்னு உண்மையை சொல்லிடுங்க, காரணம் கேட்டா பேசிப்பார்த்தேன் பிடிக்கலை ரொம்ப ஷை டைப்பா இருக்கான்னு சொல்லுங்க. சரி சரி பொய்யிதான் பட் கல்யாணத்தை நிறுத்த இதை சொல்லித்தானே ஆகனும்."
"நான் எதுக்காக அப்படி சொல்லணும்?"
" சொல்லாட்டி என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நிலைமை வருமே?"
" பண்ணிக்கிட்டா போச்சு."
"எதே? உங்க கூட எல்லாம் வாழ்க்கை ஃபுல்லா குப்பைக்கொட்ட என்னால ஆகாது."
அவன் முறைக்க, " அது... என்னை உங்களால சமாளிக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன். ரெண்டு நாளைக்குள்ள பிபி மிஷினே வெடிக்கிற அளவுக்கு உங்களுக்கு பிபி ஏறிடும்."
"அதை எப்படி குறைக்கணும்னு நான் கவலை பட்டுக்கிறேன், நீ கல்யாணத்துக்கு தயாராகு."
"எது தயாராகறதா? அதெல்லாம் முடியாது உங்களுக்கு வேணா என்னை பிடிச்சிருக்கலாம் எனக்கு பிடிக்கல, அதனால கண்டிப்பா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தான் சொல்லப் போறேன்."
" என்னை பிடிக்காமத்தான் வாயில ஈ போற அளவுக்கு ஒவ்வொரு தடவையும் வச்சக் கண்ணு வாங்காம என்னை பார்க்கிறியோ?"
"அது ஜஸ்ட் சைட் வேற டிபார்ட்மென்ட், இது இளைஞர்களோட இன்டர்நேஷனல் மொழி அதெல்லாம் பண்ணகூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாது. ஏதோ பார்க்க அழகா இருக்கீங்க சிரிச்சா அம்சமா இருக்கீங்கன்னு பார்க்கிறதுதான், அதுக்காக? எனக்கு நீர்வீழ்ச்சியை கண்டா கூடத்தான் பிடிக்கும் அதுக்காக குற்றாலம் மலையிலயிருந்து குதிக்கவா முடியும். என்னால் எல்லாம் உங்களை சமாளிக்க முடியாதுப்பா."
"அப்பசரி நீ இங்க வர்றதுக்காக உன் அப்பத்தாவுக்கு பால் ஊத்துனா மேட்டரை இப்பவே கீழே ஓபன் பண்றேன்." என்றபடி அவன் முன்னே நடக்க,
"சார் இதெல்லாம் பிளாக்மெயில், அப்பாவி குழந்தையை இப்படி பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் ரொம்பதப்பு. அப்புறம் சாமி கண்ணை குத்திடுமாக்கும். " என்றபடி அவன் பின்னே செல்ல சட்டென்று திரும்பி அவளை கட்டிக் கொண்டவனோ,
"படுத்தாதேடி சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டு என்கிட்ட வந்து சேரு. எவ்வளவு நாள்தான் தூரத்தில் இருந்தே உன் மேல கோவப்படற மாதிரி நான் நடிக்கறது. லவ் யூ டி பொண்டாட்டி." என்றபடி அவள் கண்ணத்தை தட்டிவிட்டு அவன் கீழே செல்ல, இவளோ பிரம்மை பிடித்ததுபோல் அப்படியே நின்றுவிட்டாள்.
Author: siteadmin
Article Title: அத்தை மகள் ரத்தினமே - சரண்யா சதீஷ் குமார்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தை மகள் ரத்தினமே - சரண்யா சதீஷ் குமார்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.