• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

ஆடுமடி தொட்டில் இனி - 12

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
536
44
43
india
ஆடுமடி தொட்டில் இனி - 12





தாமோதரனின் இல்லம். நடந்து முடிந்த நிகழ்வுகளால் யாரும் யாருடனும் பட்டுக் கொள்ளாமல் தனித் தனித் தீவாக வாழ ஆரம்பித்தனர். அரவிந்தன் புதியதாக ஒரு வேலைக்கு மாறி இருந்தான். புதிய தொழிற்சாலை சென்னைக்கு மிக அருகில்

செங்கல்பட்டு செல்லும் வழியில் இருக்க, ஒரு நாளின் பாதி அவனுக்குப் பயணத்திலேயே கழிந்தது. சொல்லப் போனால் தூங்குவதற்கு மட்டுமே வீடு வந்து சென்றான். சனி, ஞாயிறு கூட வேலை இருக்கிறது என்று ஓடி விடுகிறான். தாமோதரன், தானுண்டு தன் அலுவலகம் உண்டு என்று செட்டில் ஆகி இருந்தார். ஸ்ரேயா, மேற்படிப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தாள்.



தமயந்தி தான் செய்வதற்கு எதுவும் இல்லாமல் தனித்து விடப்பட்டார். கணவனும் மகனும் அவரிடம் பேசுவதே கிடையாது. அப்படியும் சொல்லி விட முடியாது, தேவைக்குப் பேசினார்கள் தான்.. அதாவது தேவைக்கு மட்டுமே பேசினார்கள். ஸ்வேதா மருத்துவமனையில் இருந்து அவளது வீட்டுக்குச் சென்று விட்ட பிறகு தாய் வீட்டை மறந்தே போய் விட்டாள். தாயிடம் ஃபோனில் எப்போதாவது மட்டும் படாமல் பேசுவதோடு சரி. சுய அலசலில் ஈடுபட்டு இருந்தார் தமயந்தி. முடிவு, எப்படி இருக்கும் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.



அன்று ஒரு விடுமுறை நாள். அரவிந்தன் அதிசயமாக வீட்டில் இருந்தான். பகல் உணவுக்குப்பின் தனது அறையின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவனை, அறைக்குள் இருந்த மொபைல் அழைத்தது. விக்ரமனின் அழைப்பு. எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே பச்சை பட்டனை அழுத்தினான்.



"ஹாய் அரவிந்த்! நான் விக்ரமன் பேசறேன். ஃப்ரீயா நீங்க? பேசலாமா இப்போ?"



"ஹான்.. ஹாய் விக்ரம். ஃப்ரீ தான். பேசலாம்."



"எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?"



"எல்லாரும் நல்லா இருக்கோம்னு சொல்ல முடியாமல் எப்படியோ இருக்கோம். கொட்டின வார்த்தைகளைத் திரும்ப எடுத்துக்க முடியாமல், அதோட விளைவுகளைப் பார்த்துத் திணறிப் போய் இருக்கோம்."



"நீங்க ஃபீல் பண்றது மாதவன் குழந்தை விஷயமா இருந்தால், அதுக்கு இவ்வளவு ஃபீலிங் தேவையில்லை."



"விக்ரம்.."



"வெயிட்.. வெயிட்.. நான் பேசி முடிச்சிடறேன். சென்டிமென்ட் எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அஸ் எ டாக்டர் நான் சொல்லப் போறதை நல்லா கேளுங்க. இது அண்ணியோட ஹெல்த்ல ஆல்ரெடி இருந்த பிபி பிரச்சினையால வந்தது. இப்போ உங்க வீட்டுல நடக்கலேன்னா, வேறொரு சமயத்தில் அவங்க வீட்டில இருக்கும் போது நடந்திருக்கலாம். இன்னும் ஒரு குழந்தை வரும் போது கூட அவங்க கேர்ஃபுல்லா இல்லேன்னா பிரச்சினை தான். ஸோ, அதைப் பத்தி நீங்க ஃபீல் பண்றதுல அர்த்தம் இல்லை."



"புரியுது. ஆனாலும் அடுத்தது என்னன்னு தெரியாமல் முழிக்கும் போது அதெல்லாம் வரிசையா ஞாபகம் வருதே.."



"வராமல் இருக்கத் தான் நான் ஒரு ஐடியா கொடுக்கலாம்னு இருக்கேன். மாதவன், அண்ணியை நல்லாவே பார்த்துப்பான். நீங்க உங்க லைஃப பாருங்க. வைஜுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? கல்யாணத்தை பத்தி என்ன முடிவு செய்து இருக்கீங்க?"



"தெரியலை விக்ரம்." அவன் வார்த்தைகளில் வந்த தொனி நிஜமாகவே தெரியவில்லை என்றது.



"இப்படி சொன்னா எப்படி? இரண்டு பேரும் பேச்சு வார்த்தை நடத்தி.. உனக்கு நான் எனக்கு நீன்னு முடிவு பண்ணிட்டு இப்போ தெரியலேன்னா.. நாங்க என்ன பண்றது?"



"நான் தான் ஆரம்பிச்சு வச்சேன். இப்போ எந்த டைரக்ஷன்ல போறதுன்னு தான் தெரியலை."



"எல்லாம் நல்ல டைரக்ஷன்ல போகும். நீங்க முதல்ல தெளிவா இருங்க"



"ம்ம்.. உங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாமா விக்ரம்?"



"இதென்ன திடீர்னு மரியாதையா சொல்றீங்க.. நான் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசறேன். மேடி கிட்ட அது கூட பண்ண மாட்டேன். நாங்க வயசு வித்தியாசம் எல்லாம் தாண்டி கொஞ்சம் க்ளோஸ். உங்களையும் கூடிய சீக்கிரம் அப்படி ஆக்கிடுவேன். அதனால சும்மா நீ வான்னு பேசுங்க. அப்புறம் என்ன கேட்டீங்க? எனக்கு எதுவும் தெரிய வேண்டாமாவா.. எதைப் பத்தி?"



"என்னோட பாஸ்ட்.."



"என்ன பாஸ்ட்? எதுவும் அஃபேர் இருந்து பிரேக் அப் ஆகிடுச்சா?"



"சே.. சே.. அஃபேர் எல்லாம் இல்லை."



"அப்புறம்.. வேறென்ன?"



"எங்கேஜ்மென்ட் தான் பிரேக் அப் ஆச்சு"



"அந்த டீடெயில்ஸ் நீங்க வைஜு கிட்ட பேசிட்டீங்கன்னு நினைக்கிறேன். ஷி இஸ் மெச்சூர்ட் இனஃப் டு ஹேண்டில் தாட். எங்களுக்கு தெரியணும்னு அவ நினைச்சா, சொல்லுவா. கேட்டுக்கிறோம் கண்டிப்பா. எனக்குத் தெரிஞ்சு உங்க அப்பா எங்க அப்பா கிட்ட பேசிட்டாங்க. நீங்க வைஜு கிட்ட பேசிட்டீங்க. இதுக்கு மேல ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை."



"தாங்க்ஸ் விக்ரம்"



"நீங்க உங்க அம்மா அப்பா கிட்ட சாதாரணமா உட்கார்ந்து பேசுங்க. நானும் என் பேரண்ட்ஸ் கிட்ட பேசறேன். சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போட்டுடலாம். எனக்கு இன்னும் டூ மன்ந்த்க்கு அப்புறம் ஒரு டென் டேஸ் லீவ் போட முடியும். அப்போ பிளான் பண்ணிக்கலாம். மேடிய கேளுங்க. ஐடியா கொட்டும்."



"அவங்க இந்தப் பக்கம் வந்து ரொம்பவே நாளாச்சு. நான் பேசறேன். தேங்க்ஸ் விக்ரம், தேங்க்ஸ் ஸோ மச்"



"எனக்கெதுக்கு தேங்க்ஸ் எல்லாம். அதுக்கு பதிலா நான் அடுத்து சொல்லப் போறதை செஞ்சிடுங்க. என் தங்கச்சி கொஞ்சமே கொஞ்சம் பாவம். ரொம்ப கலகலப்பான பொண்ணு, ஆனால் இப்போ ரொம்பவே அப்சட் ஆகி இருக்கா. ஃபோன்ல பேசற என்னாலயே அதைத் தாங்க முடியலை. நேர்ல பார்க்கிறவங்களுக்கு ரொம்ப கஷ்டம். அவளைக் கூப்பிட்டு பேசுங்க ப்ளீஸ்."



"ஓ.. ஐ யாம் வெரி ஸாரி விக்ரம்.. உண்மையைச் சொன்னா.. நான் அவளைப் பத்தி.. ஐ மீன் அவளோட தாட்ஸ் பத்தி நினைச்சுப் பார்க்கவே இல்லை. இப்போவே கூப்பிடுறேன்.."



"ஹலோ..‌ஹலோ.. நான் அங்கே கொஞ்சம் பேசணும்.. ஒரு இரண்டு மணி நேரத்துக்கு அப்புறம் கூப்பிடுங்க. பை.."



அழைப்பைத் துண்டித்த விக்ரமன் அடுத்ததாகத் தனது வீட்டிற்கு அழைத்தான். அது ஒரு ஸ்கைப் கால். டைனிங் டேபிள் மீது லேப் டாப்பை வைத்து அதன் முன்னே அருந்ததியும் தேவராஜனும் அமர்ந்து இருக்க, வைஜயந்தி தேவராஜனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.



"குட் ஈவினிங் எவ்ரிபடி.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? வைஜு உன் இன்டர்ஷிப் எப்படி போயிட்டு இருக்கு? அடுத்து என்ன பண்ணப் போற? வேலையா? ஹையர் ஸ்டடீஸா இல்லை கல்யாணமா?"



ஒவ்வொருவரையும் விசாரித்தவன் அவர்களது பதிலுக்காக காத்திருக்க,

அருந்ததி, "சரியா சாப்பிடறதில்லையா விக்ரம். ரொம்ப வெயிட் லாஸ் ஆனது மாதிரி தெரியுதே!" என்றார்.



"மாம்… எ மாம் இஸ் ஆல்வேஸ் எ மாம்" என்று சிரித்தான் அவன். "நான் நல்லா தான் இருக்கேன். வெயிட் எல்லாம் குறையலை. இத்தனை நாளும் இல்லாமல் இன்னைக்கு என்ன டவுட்டு உங்களுக்கு?"



"இத்தனை நாளும் பூச்சாண்டி மாதிரி ஸ்வெட்டர், கோட்டுன்னு ஏகப்பட்ட லேயர் இருந்ததா, இன்னைக்கு அதெல்லாம் இல்லாமல் இருக்கியே.. அதனால தான் அம்மா அப்படிக் கேட்கிறாங்க." அண்ணனுடன் பேசும் போது தனது இயல்பான தொனியில் பேசினாலும் தங்கையிடம் ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது விக்ரமனுக்கு.



"மாம்.. வைஜு கல்யாண விஷயத்தில என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?"



"நீ வராமல் என் கல்யாணம் நடக்காது ப்ரதர்.‌அது எத்தனை வருஷம் ஆனாலும் சரி."



"வைஜு! நான் வரமாட்டேன்னு சொல்லவே இல்லையே. அதுக்காக நீ எதுக்கு வருடக்கணக்கில காத்திருக்கணும். உன்னை அனுப்பி விட்டால் தான் நான் சேஃப். அதனால நான் கண்டிப்பா வருவேன்."



"பாருங்க டாடி.. எப்படிப் பேசறான்னு. ஆமா.. நீ என்ன அங்கேயே யாரையாவது பார்த்து வச்சிருக்கியா? இவ்வளவு ஆர்வமா என்னைத் துரத்தப் பார்க்கிற?"



"பாருங்க மா.. உங்க முன்னாடி என்ன பேச்சு பேசறான்னு.. என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறா"



"அதானே! யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிற வைஜு? நாங்க எல்லாம் இங்கேயே ஆளைப் பார்த்து வச்சிட்டுத் தான் ஊருக்குப் போயிருக்கோம்.. நீ என்ன வைஜு அங்கே போய் பார்த்தானான்னு கேட்கிற?"



"மாம்! என்னை டேமேஜ் பண்ண நீங்க ஒருத்தரே போதும்."



"உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும் தம்பி.. நழுவக் கூடாது.."



தேவராஜன் இவர்கள் மூவரது கலாட்டா பேச்சுகளில் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.



"டாட்! நான் அரவிந்த் கிட்ட பேசினேன். சீம்ஸ் டு பி இன் லிட்டில் கன்ஃப்யூஷன். நீங்க பெரியவங்க பார்த்து மூவ் பண்ணுங்க."



"சரிப்பா. உனக்கு எப்போ லீவ் கிடைக்கும்னு சொல்லு. அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணிக்கலாம். டேக் கேர் ஆஃப் யூ. கொஞ்சம் மெலிஞ்சது மாதிரி தான் இருக்க. மத்தவங்க ஹெல்த்ல இருக்கிற அக்கறை உன் ஹெல்த் மேலயும் இருக்கட்டும். கொஞ்சம் தூக்கம் கம்மின்னு தெரியுது. உனக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியது இல்லை." தேவராஜன் சரியான பாயிண்ட்டைப் பிடித்து மகனிடம் பேசினார்.



போதும் போதும் என்ற அளவிற்குப் பேசி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து நால்வரும் அழைப்பைத் துண்டித்து அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.



சொல்லி வைத்தது போல அரவிந்தன் வைஜயந்தியை அழைத்து விட்டான். இருவரும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவார்கள் என்று நம்புவோம்.



********



"அல்லி தண்டு காலெடுத்து

அடிமேல் அடி எடுத்து...

சின்னக் கண்ணன் நடக்கையிலே...

சித்திரங்கள் என்ன செய்யும்?"



பாட்டுக் கேட்டபடியே படுத்திருந்தாள் ஸ்வேதா. மாதவனைத் தெரிந்ததில் இருந்து இப்படிப் பழைய பாடல்களின் ரசிகையாகிப் போயிருந்தாள் அவள். அதற்கு முன்பும் பழைய பாடல்களைக் கேட்பவள் தான். ஆனால் அது இளையராஜா காலத்தோடு நின்று விடும். இப்போது பாடிக் கொண்டு இருக்கும் பாடலில் மெய்மறந்து கண்களை மூடி இருந்தாலும் அவள் கண்களில் நீர் வழிந்து கன்னங்களை நனைத்துக்கொண்டு இருந்தது.



அப்போது தான் உள்ளே நுழைந்த மாதவன், மனைவியைப் பார்த்து விட்டு அமைதியாக அருகில் படுத்து அவளை அணைத்துக் கொண்டான். அவனும் தத்து எடுக்கலாம் என்ற விஷயத்தை மனைவியிடம் சொல்லப் பல நாட்களாக ஒத்திகை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனாலும் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருந்தது.



கணவனின் ஸ்பரிசத்தில் திரும்பிய ஸ்வேதா அவனது அணைப்பைக் கண்டு, "என்னது இது?" என்றாள்.



"ஏன் டா? என் பொண்டாட்டியை நான் கட்டிப் பிடிச்சு படுக்கக் கூட எனக்கு ரைட்ஸ் இல்லையா? இதென்ன வம்பா இருக்கு?"



"ஓ.. உங்க பொண்டாட்டியை கட்டிப் பிடிச்சிட்டு இருக்கீங்களா? ஏதோ எனக்கு மேல ஒரு ப்ரிட்ஜ் கட்டுனது மாதிரி கையை வச்சிட்டு இதுக்குப் பேர் தான் கட்டிப் பிடிக்கிறதா?" நக்கலடித்த மனைவியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தான். ஏனென்றால், அவன் மனைவி சொல்வது போலத் தான் கையை வைத்திருந்தான். அவளது பிரசவம், அவனை மனைவியை நெருங்க விடாமல் செய்தது. மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.



அவள் தான் அவ்வப்போது கேலி செய்து கொண்டு இருந்தாள்.



"மாது! மாதூஊஊஊ! டேய் மாதவா! இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரு!



"கட்டிப் பிடிச்சு கிஸ் அடிக்கிறதுக்கெல்லாம் பேபி ஃபார்ம் ஆகாது மை டியர் மாது. நீ அப்படி நினைச்சிட்டியா? ஹையோ.. ஹையோ" என்று அவனை ஓட்டிக் கொண்டு இருந்தாள். அவனோ எதற்கும் அசைவேனா என்று இருந்தான். இன்று எப்படியும் அவளிடம் தத்து எடுப்பது பற்றிப் பேசி விட வேண்டும் என்ற உறுதியோடு இருந்தான்.



"நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே…."



பாடிக் கொண்டு இருந்த பாடல் மாறி அடுத்த பாடல் வந்தது தான் மிச்சம். அவனால் வாயைத் திறந்து எதுவும் சொல்ல முடியவில்லை.



அதையும் அவன் மனைவி கண்டு கொண்டாள். "என்ன விஷயம் மாது? ஏதோ பலமான ஒத்திகை எல்லாம் பார்க்கிற மாதிரி இருக்கு? அண்ணா கல்யாண விஷயமா?"



'உங்க அண்ணன் கல்யாண விஷயத்துக்கு நான் ஏன் ஒத்திகை பார்க்கிறேன். அதுவும் பெட்ரூம்ல..' மனதோடு அலுத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் ஸ்வேதாவும் எழுந்து அமர்ந்தாள்.



"இது அரவிந்தன் விஷயம் இல்லை. நம்ம விஷயம் தான். நாம ஏன் ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கக் கூடாது. பையன் ஒன்னு பொண்ணு ஒன்னுன்னு இரண்டா கூட எடுத்துக்கலாம். என்ன சொல்ற?" ஒரு வழியாக சொல்ல வந்ததைச் சொல்லி முடிப்பதற்குள் வியர்த்து விட்டது அவனுக்கு.



அவனுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஸ்வேதா. "ஸ்வீட்டி! உனக்குத் தைரியம் இருக்கு, உன்னால குழந்தை பெத்துக்க முடியும் அப்படிங்கிறதை எல்லாம் தாண்டி எனக்கு இன்னொரு தடவை உன்னை அப்படிப் பார்க்கத் தைரியம் இல்லைன்றது தான் உண்மை."



"......"



"ப்ளீஸ் டா! எனக்காகக் கொஞ்சம் யோசி. பெரியவங்க கிட்ட எல்லாம் நானே‌ பேசிக்கிறேன். கண்டிப்பா சம்மதிப்பாங்க. சம்மதிக்க வைப்பேன்."



"இதுக்கு இப்பவே பதில் சொல்லணுமா? இதை யோசிச்சு தான் நீங்க என் பக்கத்தில கூட வரதில்லையா? தத்து எடுக்கலாம் பா. ஒரு குழந்தையைக் கண்டிப்பா தத்து எடுக்கலாம். ஆனால் நமக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு"



"அந்த ரிஸ்கே வேண்டாம்னு தானே நான் இந்த ஐடியாவைச் சொல்றேன். எனக்குப் பயம்மா இருக்கு டா. ப்ளீஸ்! கொஞ்சம் யோசி."



"உங்களைப் பத்தி யோசிக்க சொல்றீங்க.. ஓகே.. அதே மாதிரி நீங்களும் என்னைப் பத்தி யோசிங்க. என் முடிவு இது தான்.." என்றவள் பேச்சு முடிந்து விட்டது என்று அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.



'இவளைப் பத்தியும் யோசிச்சதால தானே இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.. ஆனால் இவ என்னவோ சொல்லி என்னைக் குழப்பறா' என்று நினைத்தவாறு அவனும் படுத்தான். இருவருக்கும் தூக்கம் தான் வருவேனா என்றது. இருவரும் அடுத்தவருக்காக யோசித்தார்களா..



*******

அடுத்த வாரத்தில் ஒரு நாள் அருந்ததி ஸ்வேதாவைப் பார்க்க வந்தார்.



"என்ன டா மாதுப் பையா? எதுக்கு இப்படி உர்ருன்னு உன் மூதாதையர்களை ஞாபகப் படுத்தற மாதிரியே இருக்க? என்ன விஷயம்?"



"ம்ச்.. அதெல்லாம் ஒரு விஷயமும் இல்லை. நீங்க வந்த வேலையைப் பாருங்க."



"அதைத் தான் பார்க்கிறேன். அவ ஹெல்த் கம்ப்ளீட்லி ஆல்ரைட். அடுத்த பாப்பாக்கு நீங்க ரெடி ஆகலாம். இந்த தடவை எல்லாம் நல்ல படியா நடக்கும். உன் பொண்ணு படுத்தாமல் பிறந்து வருவா. பி சியர்ஃபுல்." அதற்கும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அமர்ந்திருந்த மாதவனைப் பார்த்த அருந்ததி, கேள்வியாக ஸ்வேதாவைப் பார்த்தார்.

அவள் மாதவனின் பயம், தத்தெடுக்க வேண்டும் என்று அவன் சொல்வது, தனது எண்ணம் என்று எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.



"இது தானா விஷயம்? மாதவா! நீ ஸ்வேதாவைக் கூட்டிட்டு எங்கேயாவது ஒரு வாரம் போயிட்டு வா. வீட்டுக்குள்ளேயே இருக்கிறதால தான் இப்படி அதிபுத்திசாலித்தனமான யோசனை எல்லாம் வருது. கொஞ்சம் வெளியே போய் மத்தவங்களைப் பார்த்தால் எல்லாம் சரியாகிடும். ஸ்வேதா உனக்கு இப்போ காலேஜ் லீவு தானே. பெரிசா ப்ளான் பண்ணி இவன் பர்ஸுக்கு நல்லா வேட்டு வை.. அப்புறம் தானா வழிக்கு வருவான்.."



"ஆன்ட்டி! நீங்க டாக்டரா பேசறீங்க.. என் ஃபீலிங்ஸ புரிஞ்சுக்கோங்க"



"நான் உனக்கு ஆன்ட்டியா தான் பேசறேன் மாதவா. நீ பதட்டத்துல இருக்க. அதனால தான் அந்த விஷயத்தை தாண்டி வெளியே யோசிக்க மாட்டேங்கிற. ஆண்களுக்கு இயல்பாகவே உள்ள பயம். பெண்களும் இப்படியே நினைச்சா யாரும் குழந்தை பெத்துக்கவே மாட்டாங்க. அந்த மாதிரி நடக்க இந்த உலகத்தில எந்த மூலைலயும் வாய்ப்பு இல்லை. அதனால தான் சொல்றேன். நீ நார்மலா இரு, இப்பவே எதையும் முடிவு பண்ணாதே. மன ஆரோக்கியம் தேக ஆரோக்கியத்தை விட எல்லா இடத்திலும் முக்கியமானது."



"ம்ம்.. யோசிக்கிறேன் ஆன்ட்டி.. "



"யோசனையே தேவை இல்லை. ஒரு வாரம் யார் கண்ணுலயும் படக் கூடாது நீங்க. அப்புறம் வந்து பேசு."



"நீங்க பேசறதைப் பார்த்தால் இடத்தையும் முடிவு செஞ்சிட்டு வந்து சொல்ற மாதிரியே இருக்கே. என்ன.. உங்க ஃப்ரண்டு என்னைப் பத்தி போட்டுக் கொடுத்தாங்களா?"



"அப்படியும் சொல்லலாம். பையன் மேல இருக்கிற அக்கறைல சொன்னான்னும் எடுத்துக்கலாம்.."



"சரி.. சரி.. கொடுங்க.."



"என்னத்த கொடுக்கணும்? எனக்கு ஒன்னும் புரியலையே?"



"மாம்.. வெளியே உட்கார்ந்து ஒட்டுக் கேட்டது போதும். உள்ள வாங்க.. உங்க ப்ளான் என்னன்னு தெளிவா சொல்லுங்க.." என்று வெளியே குரல் கொடுத்தான். உள்ளே வந்த ஹேமா அவனிடம் ஒரு பேப்பரை நீட்டினார்.



அது கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆலப்புழா படகு வீடுகளில் தங்குவதற்கான கடிதம். இரண்டு நாள் படகு வீட்டிலும் மேலும் இரண்டு நாள் அதன் வழியில் இருந்த ரிசார்ட் ஒன்றில் தங்குவதற்குமான ஏற்பாடுகள் மாதவன் மற்றும் ஸ்வேதாவின் பெயரில் செய்யப்பட்டு இருந்தது.



சென்னையில் இருந்து ஆலப்புழா செல்வதற்கான டிரைன் டிக்கெட்டுகளும் இணைக்கப்பட்டு இருந்தது. இன்னும் நான்கு நாட்களில் புறப்பட வேண்டும்.



"ஏதோ பெரியவங்க எல்லாம் சொல்றீங்க.. கேட்டுத் தான் பார்ப்போம்.." என்று ஸ்வேதாவைப் பார்த்துக் கண்ணடித்தான் மாதவன். பழைய மாதவனைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை அவனைச் சுற்றி நின்ற மூவருக்கும் ஏற்பட்டது.



அதன் படியே கிளம்பி இதோ ஆலப்புழா வந்து சேர்ந்து இருந்தார்கள். காலை உணவுக்குப் பிறகு ஆட்டோ பிடித்து படக்குத்துறையை அடைந்தார்கள்.



படகில் சென்றவுடன் குளித்துவிட்டு, அவர்கள் தரும் சூடான பஜ்ஜி மற்றும் தேநீரை சாப்பிட்டுவிட்டு, சுற்றுலாவைத் தொடங்கினார்கள். ஆலப்புழா பேக் வாட்டரில் படகு செல்லும் போது, கடவுள் தேசத்தின் அழகு நம்முடன் தவழ்ந்து மிதந்து வரும். அந்த சூழ்நிலையில் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் அருகில் இருந்தால், நேரம் போவதே தெரியாது.



மாதவனும் ஸ்வேதாவும் கைகோர்த்து நின்று ஏரியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தார்கள். மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் மெல்லப் பனிபோல மறைவது போல் இருந்தது.



படகு செல்லும் வழியில் மீன் கடைகள் வரும். அதில் நமக்கு பிடித்த மீன் வகைகளை வாங்கிக் கொடுத்தால், படகில் இருப்பவர்கள் சமைத்து கொடுப்பார்கள். தவிர, ஒவ்வொரு படகு இல்லங்களிலும் உணவுப் பட்டியல் உண்டு. அதற்கு ஏற்றவாறு உணவை ஆர்டர் செய்தும் சாப்பிடலாம்.



ஒவ்வொரு படகு வீட்டிலும் மூன்று பேர் வேலை செய்ய இருப்பார்கள். ஒருவர் சமையல் தேவைக்காகவும், இருவர் மாறி மாறி படகை இயக்குவதற்கான பணிகளுக்காகவும் இருப்பார்கள். படகு செல்லும் வழியின் இரண்டு பக்கங்களிலும் கரை மட்டுமே இருக்கும்.





குளிர் சாதன வசதிகொண்ட ஆறு படுக்கை அறைகள் கொண்ட படகு வீடு அவர்களுக்காக முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. அவற்றுடன் சமையலறை, முற்றம் மற்றும் கழிவறை வசதி இருக்கும். தனியாக உணவு அரங்கம் மற்றும் படகின் முன் பக்கம், முதல் தளதிலும் நின்று பார்க்கும் வசதியும் இருந்தது. மற்ற ஐந்து அறைகளிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். நான்கு வயதுச் சிறுமியில் இருந்து அறுபது வயதான பெரியவர் வரை அந்தக் குடும்பத்தின் கலகலப்பு மாதவனை அவர்களோடு ஐக்கியமாக வைத்தது.



"ஹனிமூன் வந்திருக்கீங்களா பாஸ்?"



"ஹா.. ஹா.. ஹா.. ஆமா.. செகண்ட் ஹனிமூன்.. எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகப் போகுது."



"ஓ.. வருஷா வருஷம் ஹனிமூன் போகணும்னு கண்டிஷன் போட்டுக் கல்யாணம் பண்ணீங்களா சிஸ்?"



"அப்படித் தான்.. இவ மட்டும் சொல்லி இருந்தால் பரவாயில்லையே.. குடும்பமே சேர்ந்து துரத்தி விட்டுருக்கு.." மாதவனின் மனம் குடும்பத்தாரை எண்ணி நெகிழ்ந்து இருந்தது.



பேச்சு வாக்கில் அவர்களின் கஷ்டமா சூழ்நிலையும் இங்கே வந்ததன் காரணமும் தெரிந்து விட அனைவரும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள்.



"எல்லாம் நல்ல படியா நடக்கும் பா. எதையும் ஈஸியா எடுத்துட்டு அடுத்து என்னன்னு பார்க்கணும். மனம் தளர்ந்து போயிட்டா கஷ்டம் நமக்குத் தான்."



அங்கேயும் ஒரு டாக்டர் இருக்க, அந்தப் பெண் மருத்துவர் மாதவனுக்குக் கூறிய அறிவுரையில் அவன் காதில் ரத்தம் வராதது தான் குறை. ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம் அவனை யோசிக்க வைத்தது.



இதோ அவர்களின் முன்பு ஓடியாடிக் கொண்டிருந்த சிறுமி பிறந்ததும் கிட்டத்தட்ட ஒரு மறுஜென்மம் போன்ற பிரசவத்தில் தான். ஆனால் இன்று அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.



பகல் பன்னிரண்டு மணிக்குப் படகு கிளம்பியது. ஒரு மணிக்கு தரமான மதிய உணவு வழங்கப்பட்டது. படகு தொடந்து சென்று கொண்டு இருந்தது. இரு புறமும் அழகான இயற்கை காட்சிகள். மாலை ஐந்து மணிக்கு ஒரு கிராமத்தில் படகை நிறுத்தினார்கள். இதற்கு முன் அனைவருக்கும் தேனீர், பஜ்ஜி வழங்கினார்கள். அங்கிருந்து சிறு கட்டுமரம் போன்ற படகில் ஒரு மணி நேர சுற்றுலா சென்றார்கள்.



அந்த பகுதிக்கு செல்ல ஒரே போக்குவரத்து வசதி இந்த படகுகள் மட்டும் தானாம். அங்கே பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் ஒரு சிறு படகு இருந்தது. நகரங்களில் வீட்டுக்கு வீடு பைக், கார்கள் இருப்பது போல, ஆலப்புழாவில் வசிக்கும் மக்களிடம் படகு இருக்கும். படகில் செல்லும் போது, தங்களுடைய அன்றாட தேவைக்காக மக்கள் படகில் கிளம்பிச் செல்வதை பார்ப்பது புதுமையாக இருக்கும்.



அந்த படகு குட்ட நாட்டின் உட்புற கிராமங்களுக்குள் செல்லும் சிறு கால்வாய்கள் வழியே சென்றது. இரு புறமும் வயல் வெளிகள், மரங்கள், சிறு சிறு வீடுகள், கிராம கோவில்களைக் கண்டார்கள். அங்குள்ள ஒரு கிராம கோவிலில் திருவிழா நடந்து கொண்டு இருந்துது. செண்டை மேளம், புலி ஆட்டம் பார்த்து ரசித்துவிட்டுக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் பெரிய படகுக்கு வந்து சேர்ந்தார்கள்.



கிளம்பிய சிறிது நேரத்தில் படகை ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்குள்ள சிறு கடையில் மீன், நண்டு கிடைக்கும் என்றும், வாங்கி கொடுத்தால் தனியாக சமைத்து தரப்படும் என்று படகின் சமையல் காரர் கூறினார். இறங்கி சென்று பார்த்தபோது மீன் இருந்தது.



திடீர் வெஜிடேரியனாக மாறி இருந்த மாதவனுக்கு மீன் சாப்பிடும் ஆசை இல்லை. இந்த மாதிரி ருசியான மீனை அவன் முன்னே பின்னே சாப்பிட்டிருக்க முடியாது என்று சொல்லி அவனுடன் பயணித்த குடும்பத்தினர் அவனுக்கும் சேர்த்து வாங்கி சமைக்க அனுப்பினார்கள்.



"ரியலி டெலீஷியஸ்!" என்று சப்புக் கொட்டிச் சாப்பிட்டவனை எதை வைத்து உதைக்கலாம் என்று ஸ்வேதா யோசித்துக் கொண்டு இருந்தாள்.



"ஹேய் ஸ்வீட்டி! உனக்கு வேணும்னா ஆன்ட்டி கிட்ட கேளு. இப்படி என்னையே முறைச்சுப் பார்த்தால் அப்புறம் எனக்கு வயித்த வலிக்கும்" என்று அதற்கும் அவளைத் தான் கேலி செய்தான்.



படகு மீண்டும் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு ஒரு இடத்தில் கரையோரம் நிறுத்தினார்கள். அங்கிருந்து மின்சார இணைப்பு பெற்று AC இயங்க துவங்கியது. பகலில் Electric Generator மூலம் விளக்குகள் மற்றும் மினி விசிறி மட்டுமே இயங்கும். இரவு 9 மணிக்கு தரமான இரவு உணவு வழங்க பட்டது. எல்லா உணவுகளிலும் சைவம் மற்றும் அசைவம் இரண்டும் உண்டு. இரவு உணவு நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு பாடகர் karaoke இசை மூலம் பாடல்களை பாடினார். வந்திருந்த குடும்பத்தினரும் பழைய பாடல்களைப் பிரியமாகக் கேட்க மாதவனின் காட்டில் அன்று ஒரே மழை தான்..



இரவு பத்து மணி வாக்கில் இருவரும் அறைக்குள் வந்தார்கள். அறையின் சாளரம் வழியே இரவு காட்சிகளை ரசித்தபடி தோள் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். மூன்று புறமும் தண்ணீர், ஒரு புறம் கரை நிசப்தமான இரவு. இரவு பூச்சிகளின் சப்தம் மட்டுமே. அந்த இரவு வேளையில் பல பேர் சிறிய பரிசலில் வந்து மீன் பிடிக்க வலை விரித்துகொண்டு இருந்தார்கள். அந்தச் சத்தங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க இருவரும் ஒருவர் மடியில் ஒருவர் படுத்து உறங்கிப் போனார்கள்.



காலையில் எழுந்து படகை விட்டு வெளியே வந்தார்கள். அது ஒரு பெரிய Resortன் பின் பகுதி. அந்த ரிசார்டில் இரண்டு நாட்கள் தங்க முன் பதிவு செய்திருந்த மாதவனும் ஸ்வேதாவும் இறங்கிக் கரையோரம் நடந்த போது இரவில் வலை விரித்தவர்கள் வலையை மடக்கி மீனை வெளியில் எடுத்து கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் வந்த குடும்பமும் ரிசார்டிற்கு வந்தார்கள்.



இரண்டு நாட்கள் நல்ல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பொழுது போனது. மூன்றாவது நாள் காலை ஏழு மணிக்கு மீண்டும் படகு சவாரி. இப்போது முதலில் சென்ற திசையில் அல்ல எதிர் திசையில் சென்றது.



இப்பொழுது ஆலப்புழா நகரத்தின் கரையோர பகுதியில் உள்ள கட்டடங்களைக் காண முடிந்தது. தொலை தூரத்தில் கடல் தெரிந்தது. எட்டு மணிக்குக் காலை உணவு தேநீருடன் வழங்கினார்கள். அன்று அவர்களுடன் வந்த முதிய தம்பதியருக்கு ஐம்பதாவது திருமண நாள். அவர்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து அவர்களின் திருமண நாளை கொண்டாடினர். இளையவர்கள் அனைவரும் அவர்களின் ஆசியைப் பெற்றனர்.



படகு மீண்டும் கிளம்பிய இடத்துக்கே வந்து சேர மாதவனும் ஸ்வேதாவும் அனைவரிடமும் ப்ரியா விடை பெற்று கிளம்பினார்கள். வரும் போது இருந்ததை விட கொஞ்சம் தெளிவான மனநிலையில் இருந்தான் மாதவன்.



ஊரில் இருந்து திரும்பிய உடன்

ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு அவளது பிறந்த வீட்டிற்குச் சென்றான் மாதவன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்தவளை வரவேற்கக் கூட இயலாமல் பார்த்துக் கொண்டு நின்றனர் அவளது பிறந்த வீட்டினர்.



*******

ஒரு வழியாகத் தனது லட்சியமான எம்எஸ் படிப்பில் சேர்ந்திருந்தாள் நியதி. தினம் தினம் பார்க்கும் வித்தியாசமான பெண்களின் பிரச்சினைகள் அவளை சங்கடத்தில் ஆழ்த்தினாலும் படிப்பில் ஆர்வமாகவே இருந்தாள். விக்ரமின் நண்பன் ஒருவன் அங்கேயே வேலையில் இருப்பதால் நண்பனுக்கு மறக்காமல் செய்தியை அனுப்பி வைத்தான்.



அருந்ததியும் அவ்வப்போது கேள்வியின் நாயகி என்று அவளைப் பற்றிய அருமை பெருமைகளை கூறியதில் அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. தங்கையின் திருமணத்திற்கு வரும் போது எப்படியும் ஒரு முறை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான். அதற்காகவே தங்கையின் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான்.
 

Author: SudhaSri
Article Title: ஆடுமடி தொட்டில் இனி - 12
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.