14.
அபி வந்ததும் இந்துவும் பாண்டியனும் கிளம்பினார்கள். அபி ஹரியை வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கும்படி கூறினாள். ஆனால் அவன் செல்ல மாட்டேன் என்று ஒரே பிடிவாதமாய் இருந்துவிட்டான்.
அபி நந்தினியின் அருகிலேயே இருந்தாள். அவளுடைய ட்ரிப்ஸை கவனித்து அதை மாற்றுவது, அவளுக்கு உணவு தருவது, அவளுக்கு பெட் பேன் வைப்பது என்று எல்லாம் அவளே செய்தாள். வேண்டாம் என்று தடுத்த நந்தினியை சமாதானமாகப் பேசி அமைதிப்படுத்தினாள். இரவெல்லாம் விழித்திருந்து நந்தினியை கவனித்துக் கொண்டாள். இவள் செய்வதையெல்லாம் ஹரி கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவன் அவளிடம் எதுவும் பேசவேயில்லை!
வீடு வந்த இந்து பாண்டியனிடம் நந்தினி கூறி அழுததை சொல்லி வருத்தப்பட்டாள்.
“இப்டி கூட ஒரு மனுஷன் இருப்பாரா? என்ன வாழ்க்கைங்க இது? தனக்காக துடிச்சுகிட்டு ஒரு ஜீவன் இங்க இருக்குங்கற எண்ணம் ஒரு மனுஷனுக்கு வராதா? தான் ஆடாட்டாலும் தன் தசையாடும்னு சொல்வாங்க. உயிரா நெனச்ச ஒருத்தி உயிருக்கு போராடிகிட்டு இருக்கறது ஒரு மனுஷனுக்கு தெரியாம போய்டுமா?”
“.........”
“நீங்களும் இப்டி ஆய்டுவீங்களாப்பா? உங்களுக்கு கூட என் மேல கரிசனம் இல்லாம போய்டுமா?”
“என்ன பேசற இந்தும்மா? நானும் அந்த ஆளும் ஒண்ணா?”
“இல்லைதான். ஆனா எனக்கு பயமா இருக்குப்பா! நந்தினியாவது பதினஞ்சு வருஷம் தாக்கு பிடிச்சா. நான் ஒரே நொடில உயிர விட்டுடுவேன். நீங்க என்னப் பிரிஞ்ச அடுத்த நொடி நான் காலி.”
“இந்தூ! இப்டியெல்லாம் பேசவே கூடாது. நான் ஏன் உன்ன விடணும். நீ என் உயிர்டா. உன்னப் பிரிஞ்சு என்னால மட்டும் உயிரோட இருக்க முடியுமா என்ன? நீ இல்லன்னா இந்த உலகத்ல எனக்கென்ன வேல. நானும் உன் பின்னாலயே வர வேண்டியதுதான்.”
இருவரும் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து கொண்டனர்.
“எல்லாம் சீக்ரம் சரியாய்டும்.” என்று பாண்டியன் மனைவியை சமாதானம் செய்தார்.
“ஆனா இந்தும்மா! எனக்கென்னமோ அவரு வேணும்னே வராம இருக்கற மாதிரி தெரியல!”
“என்னங்க இப்டி சொல்றீங்க?”
“ஆமா! ஜென்ட்ஸ் ஸைக்காலஜி சொல்றேன் கேளு! நம்மள நம்பி மனைவி குழந்தை இருக்கறது புரிஞ்சிகிட்ட எந்த ஒரு பொறுப்பான ஆணும் தன் மனைவி குழந்தைய விட்டுட்டுப் போக மாட்டான். அப்டியே வீம்பு பிடிச்சு போனாலும் ரெண்டு நாள் கூட தாக்கு பிடிக்க மாட்டான். நந்தினி சொல்றத வெச்சுப் பாத்தா அவரும் அவங்களும் ரொம்ப அன்யோன்யமா குடும்பம் நடத்தியிருக்காங்க. அந்தம்மாவ அவருதான் படிக்கவே வெச்சிருக்கார். அப்டீன்னா அவங்க மேல அவருக்கு அதீதமான காதல் இருக்குன்னு அர்த்தம். பையனையும் பெரிய பையன்னு நெனக்காம குழந்தையாவே நெனச்சு பாசத்த கொட்டியிருக்கார். அப்டி பாசத்த கொட்ற மனுஷனுக்கு நிச்சயமா வேற சகவாசம் இருக்காது. இந்த அளவுக்கு மனைவி மேலயும் மகன் மேலயும் அன்பு வெச்சிருக்கற மனுஷர் சும்மா ஒரு கோவத்தில நீ இல்லாம வாழ்ந்து காட்றேன்டீன்னு கத்தியிருப்பார். கோவிச்சிகிட்டு கத்திட்டு எங்கியாவது போய் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு திரும்ப வர நெனச்சிருப்பார். ஆனா வரல. அப்ப அவர் திரும்ப வராததுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.”
“என்ன காரணம்ங்க?”
"அவருக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து... அவர் இப்ப இந்த உலகத்லயே.....”
“வேண்டாம்ப்பா! சொல்லாதீங்க! நெனச்சே பாக்க முடியாது! நந்துவோட நம்பிக்கை பொய்யா போய்டக் கூடாது. அதுக்காகவாவது அவர் நல்லபடியா இருக்கணும்.”
இருவரும் சிவசங்கரனுக்காகவும் நந்தினிக்காகவும் இறைவனிடம் மனமாற வேண்டிக்கொண்டனர்.
பொன்னம்மாள் ஹரியின் வரவுக்காக வாசலிலேயே காத்திருக்க, மறுநாள் காலை ஹரி வீட்டுக்கு வந்தான்!
அவன் குளித்து தயாராகி வந்ததும், அவனுக்கு சிற்றுண்டி கொடுப்பது போல அவனருகில் வந்து மெதுவாக ஆரம்பித்தாள்!
"ஹ்ம்ம்.... பாவம்... நம்ம அம்மா.... எவ்ளோ நம்பினாங்க..... அத்த எப்டித்தான் ஏமாத்த மன்சு வன்ச்சோ...... நீங்கலும் எவ்ளோ நம்புனீங்க..... இத்து..... பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சி போட்டு...... கட்சீல..... ஹ்ம்ம்.... பாவம் தம்பி நீங்க..... இப்டி ஏமாந்துடீங்களே..... டாக்டருக்கு.... படிச்சவங்கல்லாமே.... பொய்த்தான் சொல்ராங்க..... நம்மதான் உசாரா இருக்கணும்....." என்று பெரிதாய் கூறி அவன் முகத்தை மெதுவாகப் பார்த்தாள்!
ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கும் ஹரி, தன் மொத்த கோபத்தையும் பொன்னம்மாளின் மீது காட்டினான்!
"ஸ்டாப் இட்! யூ இடியாடிக் லேடி..... கெட் அவுட்.... வெளிய போ.... இனிமே ஒரு நிமிஷம் இங்க நிக்க கூடாது... அவுட்.... கெட் அவுட்...." என்று கத்த,
அவனுடைய கத்தலைக் கேட்டு ஓடி வந்த பொன்னம்மாளின் கணவன் முத்து,
"ஐயா.... இத உட்ருங்க.... நா பாத்துக்கறேன்... நீங்க கோபப்படாதீங்க.... அம்மாவ கவனிச்சிக்க உங்களுக்கு தெம்பு வேணும்யா..... இவெல்லாம் ஒரு பொம்பளன்னு... இதுகிட்ட பேசுறீங்க..." என்று ஹரியிடம் கூறியவன், தன் மனைவியை அவன் முன்னிலையிலேயே, அறைந்து இழுத்துச் சென்றான்!
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நந்தினிக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. நெஞ்சில் லேசான வலியும் இருந்தது. ஆனால் பெரிதாக பிரச்சனை எதுவும் இருக்கவில்லை. ஆனால் திங்கட்கிழமை காலை முதல் நெஞ்சு வலி கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதனால் செவ்வாய்க்கிழமையே ஆபரேஷனை செய்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஹரி மனதில் அம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்தான். அதனால் அம்மாவின் மேல் இருந்த கோபத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கினான்.
அவன் கோவிலுக்குக் கிளம்பியதைப் பார்த்து அபியும் அவனுடன் கிளம்ப, என்ன தோன்றியதோ ஒன்றும் சொல்லாமல் அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்!
இருவரும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே மண்டபத்தில் சில நிமிடங்கள் அமர்ந்தனர். அப்போது ஹரியின் செல்லுக்கு ஆஃபீஸிலிருந்து போன் வந்தது. அவன் அதை எடுத்துப் பேசிவிட்டு அபியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
“முக்யமான கால்! அவசரமா ஆஃபீஸ் போகணும். நான் போய்ட்டு வரேன். நீ ஆட்டோல போய்க்கோ!”
“சரிங்க!”
முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வெறுமனே தந்தி பாஷை போல் அவன் பேசினான். அதே பாஷையில் அபியும் பதில் சொன்னாள். அவன் கிளம்பிவிட்டான்.
அபியும் அவன் சொன்னபடியே ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை வந்து சேர்ந்தாள்.
அங்கே நந்தினிக்கு நெஞ்சு வலி அதிகமாக இருந்தது.
அவரப் பாக்கணும்! அவர ஒரே ஒரு வாட்டியாவது பாத்துடணும்! அப்பா! மருந்தீஸ்வரா! காப்பாத்து! என் கண்ணு முன்னால அவரக் கொண்டு வந்து நிறுத்து. என்று மனமுருகி வேண்டியபடி இருந்தாள்.
அபியைப் பார்த்ததும், அவள் கையைப் பிடித்துக் கொண்டு அரற்றத் தொடங்கினாள்.
“அபிம்மா! ஸாரிம்மா! உன் ப்ரச்சனைக்கு நான் தீர்வு காணல. என் ப்ரச்சனைக்கும் எனக்கு தீர்வு கெடைக்கல. என்னால தாங்க முடியலையேம்மா! என்ன மன்னிச்சுடும்மா.”
“அத்த! என்ன அத்த? என் கிட்ட இப்ப மன்னிப்பு கேக்கற அளவுக்கு என்ன ஆய்டுச்சு? எனக்கு எந்தப் ப்ரச்சனையும் இல்ல. என்னிக்காவது ஒருநாள் அவருக்கு தெரியத் தானே போகுது. நீங்க இத நெனச்செல்லாம் கவலப்படாதீங்க அத்த. அவர் கோவப்பட்டு எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் சந்தோஷமா ஏத்துக்குவேன். அவர் யார் எனக்கு? புருஷன்தானே! அடிப்பாரா? அடிக்கட்டும். கோவச்சுகிட்டு பேசாம இருப்பாரா? நான் என்னவாவது சொல்லி சமாதானப் படுத்தறேன். என்ன கொடும படுத்துவாரா? நான் பொறுத்துக்கறேன். இதெல்லாம் எனக்கு ஒண்ணுமில்ல அத்த. நீங்க ரெஸ்ட் எடுங்க அத்த! நாளைக்கு ஆபரேஷன் அப்பதான் நல்லபடியா முடியும் அத்த. ப்ளீஸ்!”
“இல்ல அபி! நான் இந்த ஆபரேஷனுக்கு ஒத்துக்க மாட்டேன். ஒரு வேள இந்த ஆபரேஷன்ல நான் போய்ட்டா, அப்றம் எப்டி அவர பாப்பேன்? அவர பாக்காம போய்ட்டா இந்த கட்ட வேகாது அபி!”
“அத்த ப்ளீஸ்! இந்த ஆபரேஷன்ல உங்களுக்கு ஒண்ணும் ஆகாது அத்த! நான் க்யாரண்டி தரேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லியா?”
“உன்னதான் நான் முழுசா நம்பறேன்! ஆனா எனக்கு அவர ஒரு வாட்டியாவது பாத்துடனும்மா! அதுக்கப்புறம் எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல! அதான் சொல்றேன். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு பண்லாம். ப்ளீஸ்! அவர எப்டியாவது கண்டு பிடிச்சிடலாம்! ப்ளீஸ் அபிம்மா!”
கடவுளே! இது என்ன சோதனை! இத்தனை ஆண்டுகளாகத் தேடியும் கண்டு பிடிக்க முடியாத ஒருவரை இன்னும் இரண்டு நாட்களுக்குள் தேடி கண்டுபிடிக்க முடியுமா? அபி மனதுக்குள் மருகினாள்.
“சரி அத்த! அவர கண்டுபிடிச்சிடலாம். நீங்க தூங்குங்க!” என்று சமாதானமாய்ப் பேசி தன் மாமியாருக்கு ஊசியை போட்டு தூங்க வைத்தாள். போர்வையை சரியாக இழுத்துவிட்டுவிட்டு வெளியே வந்தாள்.
ஹரிக்கு போன் செய்து நந்தினியின் அழுகையைப் பற்றிச் சொல்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருமாறு கூறினாள். அவன் முரண்டு செய்யாமல் சீக்கிரம் வருவதாகக் கூறிவிட்டு போனைக் கட் செய்தான்.
வெளியே நர்ஸ் ஒருத்தி ஓடி வந்தாள்.
“மேம்! ஒரு எமர்ஜென்ஸி! சீஃப் இப்பதான் லஞ்சுக்குப் போனார். பேஷன்ட் வயசானவர். நெஞ்சு வலின்னு வந்திருக்கார்! உங்களால அட்டெண்ட் பண்ண முடியுமா? ஏன்னா அவர் வேற ஹாஸ்பிடல் போறதுக்குள்ள எதுனா ஆச்சுன்னா? ப்ளீஸ் மேம்!”
“சரி வரேன்!” என்று வந்தவளிடம் கூறிவிட்டு உள்ளே அமர்ந்திருந்த மற்றொரு நர்ஸிடம் நந்தினியை கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டு எமர்ஜென்ஸியை கவனிக்க விரைந்தாள்.
அபி அவருக்கு கவனமாக மருத்துவம் பார்த்தாள்.
“என்ன ஆச்சு இவருக்கு?” என்றாள் அபி!
“நல்லாதான் டாக்டர் இருந்தார். திடீர்னு நெஞ்சப் பிடிச்சுகிட்டு விழுந்துட்டார்.” என்றார் உடன் வந்த ஒருவர்.
“இவர் உங்களுக்கு என்ன வேணும்?”
“என்னோட ப்ரதர்!”
“இவருக்கு மனைவி மக்கள்.......?”
“எங்க அண்ணியும் அவங்க ஒரே பையனும் ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க! அத கண்ணால பாத்ததுலேர்ந்து இவருக்கு எதுலயும் பிடிப்பில்லாம போச்சு. திக்ப்ரமை பிடிச்சது போலவே இருப்பார். எங்க அண்ணி செஞ்சதுன்னு சொல்லி சாப்பாடு குடுப்போம்! சாப்பிடுவார். அவர் பையன் செய்யச் சொன்னான்னு சொல்லி என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்! இப்டிதான் பல வருஷமா இருக்கார். இன்னிக்கும் அண்ணிய பாக்கலாம்னு சொல்லிதான் கோவிலுக்கு கூட்டிகிட்டு வந்தேன். உள்ள வந்து சுவாமி தரிசனம் செய்யும்போதே மயங்கி சரிஞ்சிட்டார்.”
“ஹ்ம்ம்... பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. அட்மிட் பண்ணி ஒரு ட்ரிப்ஸ் போட்டு ரெண்டு இஞ்செக்ஷன் போட்டா சரியாய்டும். சாயங்காலம் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம். பேஷன்ட் பேர் என்ன?”
“சிவலிங்கம்!”
“ஓகே ஸார். நீங்க இவர அட்மிட் பண்ணிடுங்க.” என்று காரை ஓட்டியவரிடம் கூறிவிட்டு, நர்ஸிடம், “ஐசியூல பெட் இருக்குல்ல! அங்க இவர கூட்டிட்டு போய் படுக்க வைங்க!” என்றாள். அடுத்துச் செய்ய வேண்டியதையும் கூறினாள்.
அந்த நர்ஸும் தலையை ஆட்டிவிட்டு அந்த சிவலிங்கம் என்பவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிக்கொண்டு சென்றாள்.
“மேம்!” அழைத்தார்.
“எஸ்!”
“ஆக்சுவலா, எங்களுக்கு மும்பை! நான் ஒரு முக்கியமான மீட்டிங் அட்டென்ட் செய்யதான் வந்தேன். இப்ப மூணு மணிக்கு மீட்டிங். இஃப் யூ டோன் மைன்ட், நான் போய் மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு வரவா? ஏன்னா, எப்டியும் ஐசியூல என்னால வர முடியாது. நர்செல்லாம் கவனிச்சுப்பாங்கல்ல! நான் போய்ட்டு ஈவ்னிங் வந்துடறேன் மேம்!”
“அது .....”
“பணம் எல்லாம் கட்டிட்டு போறேன் மேம்! ரொம்ப முக்யமான மீட்டிங்! பல குடும்பங்கள் இதனால பிழைக்கும். பல தொழிலாளர்களோட வாழ்க்கை!”
“இல்ல! பணம் ஒண்ணும் ப்ரச்சனையில்ல! சரி! நீங்க போய்ட்டு வாங்க! நான் பாத்துக்கறேன்!” என்றாள்.
“தேங்க்யூ மேம்!”
“உங்க நேம் அன் செல் நம்பர் தந்துட்டு போங்க! எதுனா ப்ரச்சனைன்னா நான் கால் பண்றேன்.”
“ஐம் சந்தர்!” என்று கூறி தன் மொபைல் எண்ணை தந்துவிட்டு மறக்காமல் பணத்தை கட்டிவிட்டுச் சென்றார்.
சிவலிங்கத்தை ஐசியூவில் நந்தினியின் பெட்டுக்கு நேர் எதிரே இருந்த காலி பெட்டில் படுக்க வைத்தனர். அவருக்கு ட்ரிப்ஸ் போட்டு அதிலேயே இஞ்செக்ஷனையும் போட்டாள் அபி! அவருக்கு நெஞ்சுவலி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. கண்ணை மூடித் தூங்கத் தொடங்கினார்.
இரண்டு மணிநேரம் கழித்து, நந்தினி கண் திறந்து பார்த்தாள். அபி எதிரில் இருந்த நோயாளிக்கு ட்ரிப்ஸ் மாற்றிக் கொண்டிருந்தாள். அருகில் சந்தர் அமர்ந்திருந்தார்.
“அபிம்மா!”
“இதோ வரேன் அத்த! ஒரு நிமிஷம்!” என்றவள், ட்ரிப்ஸை சரியான அளவில் சொட்ட வைத்துவிட்டு மாமியாரிடம் சென்றாள்.
“சொல்லுங்க அத்த! சூடா எதாவது குடிக்கறதுக்கு தரவா?”
“அவர் இன்னும் வரலியேம்மா!”
“வந்துடுவார் அத்த!”
“ஹரி எங்கமா?”
“அவர் ஆஃபீஸ் போய்ருக்கார் அத்த. இப்ப வர நேரம்தான். இருங்க உங்களுக்கு காபி கொண்டு வரேன்!”
“எனக்கு எதுவும் வேண்டாம்! நீ ஹரிக்கு போன் பண்ணு. அவன் அவர கண்டுபிடிச்சானா இல்லையா?”
கடவுளே! ப்ளீஸ்! இவங்களோட தேடலுக்கு ஒரு நல்ல முடிவக்காட்டு! என்று மனதுக்குள் இறைவனை வேண்டியபடி அடுத்த வேளை இஞ்செக்ஷனை எடுத்தாள்.
“இல்ல! எனக்கு இஞ்செக்ஷன் வேண்டாம். காலைல அதப் போட்டு என்ன தூங்க வெச்சுட்ட! நான் இப்ப அத போட்டுக்க மாட்டேன்!”
“அத்த ப்ளீஸ்!”
“இல்ல அபி! எனக்கு எதுவுமே வேண்டாம்! ஹரி எங்க?”
நந்தினியின் பிடிவாத பேச்சுக்களால் தூக்கம் கலைந்து விழித்தார் எதிர் பெட்காரர் சிவலிங்கம். நந்தினியின் குரல் கேட்டு நந்து! நந்து! என்று அரற்றத் தொடங்கினார். அருகில் இருந்த சந்தர்,
“லிங்கம்! இருங்க! உங்க நந்து இப்ப வந்துடுவாங்க!” என்று ஆறுதல் வார்த்தைகளை கூறி அவரை சமாதானம் செய்ய முயன்றார்.
ஆனால், லிங்கம்,
"நந்து! நந்து!" என்று அழைத்தபடி கையில் போட்டிருந்த ட்ரிப்ஸை பிடுங்கி எரிந்துவிட்டு தன் பெட்டிலிருந்து கீழே இறங்கி தட்டுத் தடுமாறி நந்தினியின் பெட்டருகே வந்தார்.
“நந்தூ! உனக்கென்னாச்சு! உனக்கென்னாச்சும்மா?” என்று கேட்டு நந்தினியின் தோளைப் பற்றினார். அபி அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.
“வந்துட்டீங்களா? என் மேல இருந்த கோவம் போய்டுச்சா?” என்று கேட்டபடி எழுந்து அமர்ந்தாள் நந்தினி!
அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தார் சிவலிங்கம் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட சிவசங்கரன்.
தொடரும்....