• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 18

Annapurani

Member
Mar 27, 2025
35
0
8
18.



சிவசங்கரன், தன் மகனின் கோபத்தை குறைய வைத்து தன் மருமகள் அபிநயாவுடன் அவனை சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கினார்!

அதன் முதற் கட்டமாக, நந்தினியிடம் கேட்டு, பழைய புகைப்படங்களைத் தேடி எடுத்தார்!

தன்னுடைய திருமண ஆல்பம், ஹரி பிறந்த போது எடுத்தவை, அவனுடைய பள்ளி நாட்கள், அவர்கள் சுற்றுலா சென்றவை என எல்லா ஆல்பங்களையும் முத்துவின் உதவியுடன் பரண் மேலிருந்து தூசி தட்டி எடுத்தார்!

சரியாக ஹரி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் நேரமாகப் பார்த்து அதையெல்லாம் வீட்டின் நடுக் கூடத்தில் பிரித்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்!

ஹரி இவருடைய செய்கையை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான்!

"என்னப்பா பண்றீங்க? இன்னிக்கு நீங்க ஹாஸ்பிடல்லேந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு அம்மா சொன்னாங்க?!?" கேட்டான் மகன்!

"ஆமாம்ப்பா.... என்னன்னு தெரில.... கொஞ்சம் தலவலியா இருந்துச்சு! அதான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க மாமான்னு அபி சொன்னா! நந்துவும் அதையே சொன்னாளா.... சரின்னு வீட்டுக்கு வந்துட்டேன்.... வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, ஒரு தூக்கம் போட்டு எழுந்தக்கப்றம்தான் தலவலி சரியாச்சு.... சரி! இப்ப ஹாஸ்பிடல் போலாம்னு பாத்தா... ஈவ்னிங் ஆயிடுச்சு.... இதுக்கு மேல நம்மள உள்ள உடமாட்டாங்க... அதான்!"

"சரி! இந்த ஆல்பம்லாம் எடுத்து வச்சிகிட்டு என்ன பண்றீங்க...."

"ம்ச்... என்னமோ.... பாக்கணும்னு தோணிச்சு..."

"ஹூம்.... பாருங்க.... பாருங்க..." என்று விட்டு அவன் தன்னுடைய அறைக்குப் போனான்!

போனவன், குளித்து புத்துணர்வுடன் திரும்பும் போதும் சிவசங்கரன் ஆல்பத்தை பார்த்தபடி இருக்க, இவனும் அவரருகே சென்று அமர்ந்தான்!

பழைய புகைப் படங்களைப் பார்த்து தன் மனைவி மக்களுடன் தான் கழித்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் கொண்டு வந்தார் சிவசங்கரன்! அதைத் தன் மகனிடமும் சொல்லி மகிழ, அவனுக்கும் பழைய நினைவுகள் மேலெழும்பியது!

தந்தையுடன் சேர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கித் திளைத்தான்!

"ஞாபகம் இருக்கா... கொடைக்கானல் ட்ரக்கிங்க போனப்ப உன் கால் சுளுக்கிட்டு நீ நடக்க முடியாம எவ்ளோ கஷடப்பட்ட...."

"மறக்க முடியுமா? பதிமூணு வயசுப் பையன்னு கூட பாக்காம நீங்க என்ன தூக்கிட்டு நடந்தீங்களே...."

"அப்டியா? எனக்கு சுத்தமா ஞாபகம் இல்லடா! உன் கால் சுளுக்கினது மட்டும்தான் ஞாபகம் இருக்கு!"

"அதுக்கு அடுத்த வருஷம் ஷிம்லா போனோம்.... அங்க பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும் போது அம்மா கண்ல ஐஸ்கட்டி விழுந்துடுச்சு.... அம்மா அரை நாளுக்கு கண்ணு தெறக்க முடியாம கஷ்டப்பட்டாங்க.... பக்கத்தில இருந்த க்ளீனிக்ல அம்மாவுக்கு டெம்பரரியா மருந்து போட்டு விட்டாங்க..... அப்ப, நீங்க அம்மாவ சின்ன குழந்தைய கை பிடிச்சி கூட்டிட்டு வர மாதிரி பத்திரமா கூட்டிட்டு வந்தீங்க.... சென்னை வந்தப்றம்... ஒன் வீக்... அம்மாவ அவ்ளோ பத்திரமா பாத்துகிட்டீங்க.... அப்ப நா நைன்த் படிச்சிகிட்டிருந்தேன்.... ஸ்கூல் தெறந்திருந்த சமயம்! வீட்ல எல்லா வேலையும் நீங்களே செஞ்சுகிட்டு என்னையும் ஸ்கூல்ல கொண்டு விட்டு ஸ்கூல்லேந்து கூட்டிட்டு வந்து அம்மாவையும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வந்து..... வீட்ல பாட்டியையும் பாத்துகிட்டு... எவ்ளோ அன்பா இருந்தீங்க! பாட்டி கூட அம்மாவ இப்டி ஊருக்குப் போன இடத்தில பொறுப்பில்லாம அடி பட்டுகிட்டு வந்திருக்கியேன்னு திட்டினாங்க! ஆனா நீங்க, அம்மாவ ஒரு வார்த்தை கூட திட்டல! கோவப்படல! சான்சே இல்ல.... நீங்க க்ரேட்ப்பா!" என்ற ஹரி,

"ம்ச்.... ஆனா... இவ்ளோ அன்பா இருந்த உங்கள அம்மா சரியாவே புரிஞ்சுக்கல.... நீங்களும் அம்மாவும் அவ்ளோ சண்டை போட்டுகிட்டு பிரிய காரணமே அம்மாவோட படிப்புதான்.... பாட்டிக்கு உடம்பு சரியில்லாம கஷ்டப்பட்டப்பல்லாம் அம்மா வேலைய விட்டுட்டு வீட்ல இருந்து பாட்டிய கவனிச்சுகிட்டடு இருந்திருந்தாங்கன்னா... பாட்டி அவ்ளோ சீக்கிரம் செத்து போயிருக்க மாட்டாங்க! நீங்களும் எங்கள பிரிஞ்சி போயிருக்க மாட்டீங்க....

ஆனா... இவ்ளோ ஆனப்றம் கூட அம்மா வேலைய விடல.... இப்ப வரைக்கும் அம்மா வேலைக்கு போயிட்டுதான் இருக்காங்க.....

முன்னயாவது பரவால்ல... குடும்பம் நடத்தணும்... வீட்டு செலவு செய்யணும்.... எனக்கு காலேஜுக்கு ஃபீஸ் கட்டணும்னு ஏகப்பட்ட செலவு இருந்துச்சு.... இப்பதான் அந்த மாதிரி எந்த தேவையும் இல்லல்ல.... நாந்தான் கம்பெனி நடத்தி நல்லா சம்பாதிக்கறேன்ல.... அப்றம் எதுக்கு இவங்க வேலைக்கு போகணும்... அப்ப அது திமிருதானே....

இவங்களுக்கு என்ன.... நல்லா அழகழகா பொடவ கட்டணும்.... ம்.. ம்...ன்னு எல்லாரையும் அதிகாரம் பண்ணனும்.... அதுக்குதான வேலைக்கு போறாங்க....

பொம்பளைங்க படிச்சா அந்த குடும்பமே படிச்ச மாதிரின்னு சொல்றதெல்லாம் சும்மாப்பா.... பொம்பளைங்க அதிகம் படிச்சா...அவங்களுக்கு தலைக்கனம் ஏறும்! அதுதான் உண்மை!"

தங்களுடைய கடந்த கால வாழ்வைப் பற்றிப் பேச ஆரம்பித்து பெண்களைப் பற்றி அவன் மனதில் நினைத்திருந்ததை அப்படியே சொன்னான்!

"இவங்களோட பிடிவாதத்தால நீங்க எங்கள பிரிஞ்சீங்க.... அதனால அம்மா கஷ்டப்பட்டாங்கன்னு சொல்றதெல்லாம் சும்மா பேச்சு.... ஆனா... நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணினேன்! ஐ மிஸ்ட் யூ சோ மச் அப்பா..." என்றான் கண்கள் கசிய!

அடக்கடவுளே! இவன் என்ன பெண்களைப்பற்றி இந்த அளவுக்கு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறான்! இதற்கு ஒரு வகையில் நானும் என் அம்மாவும்தான் காரணம்!

இந்த நினைப்பு தவறானது என்பது இவனுக்குப் புரிந்தால்தான் இவனும் அபியும் ஒன்று சேர முடியும் என்று சிவசங்கரனுக்கு நன்றாகப் புரிந்தது!

இவன் தவறை எடுத்துச் சொல்வது போல பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்!

"ஏன் ஹரி! நா உங்கள பிரிஞ்சி இருந்தப்ப எனக்காக அவ்ளோ தேடினேன்னு சொன்னியே.... நா உங்கம்மா கிட்ட சண்டை போட்டுட்டு கோவிச்சிகிட்டு நானேதானே வீட்ட விட்டு போனேன்.... அப்ப நீ என் மேலதானே கோவப்படணும்... என்னதானே வெறுக்கணும்....

உன்ன காப்பாத்தறதுக்காக அவ வேலைக்குப் போய் சம்பாதிச்சு.... உன்ன நல்லா படிக்க வெச்சு.... எல்லா வகையிலயும் உனக்கு சப்போர்டிவ்வா நந்தினிதான் இருந்தா.... இன்னமும் இருக்கா....

ஆனா நீ உங்கம்மாவ வெறுக்கற.... அவளாலதான் பிரச்சனைன்னு நீ ஏன் சொல்ற?" என்று நேரடியாகக் கேட்டார் சிவசங்கரன்!

"ஆமா! அம்மா அதிகமா படிச்சதுனாலதானே வேலைக்கு போனாங்க.... வேலைக்கு போனதினாலதானே உங்களுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்திச்சு...."

"ம்.... சோ பொம்பளைங்க வேலைக்கு வராங்கன்னா அவங்க அதிகம் படிச்சவங்கன்னு அர்த்தம்.... அப்டிதானே?"

"இல்லன்னா அவங்க ஏன் வேலைக்கு போகப் போறாங்க?"

"இவ்ளோ நாளா நம்ம வீட்ல வேலை பண்ணினாளே.... முத்துவோட மனைவி.... அவ பேரென்ன.... அன்னம்மாவா... பொன்னம்மாவா..... அவ எவ்ளோ படிச்சிருக்காப்பா.....

நம்ம வீட்டுக்கு..... முந்தியெல்லாம் யாரோ ஒரு கிழவி பூ விக்க வருவாளாமே... அவ என்ன ஐ ஏ எஸ் பாஸ் பண்ணிட்டுதான் பூ விக்க வந்தாளா?" என்று நக்கலாகக் கேட்டார் சிவசங்கரன்.

"அது.... அவங்க குடும்ப கஷ்டம்! முத்து வாங்கற சம்பளம் அவங்க குடும்பம் நடத்த போறல.... அவங்க பொண்ண ஸ்கூல்ல சேக்கணும்னு வேலைக்கு வந்தாங்க.... அதே மாதிரிதான் அந்த பூக்காரம்மாவும்.... அவங்க பையன் குடிச்சிட்டு வீட்ட கவனிக்காம இருந்தான்.... அதனால இந்தம்மா பூ விக்க வந்திச்சி...."

"ம்.... படிக்காத பொம்பளைங்களே தன் குடும்ப கஷ்டம் தீர வேலைக்கு போகலாம்னா அப்ப படிச்ச பொம்பளைங்க வேலைக்கு போறது எப்டி தப்பாகும்?" கேட்டார் சிவசங்கரன்.

"இல்லையே.... முத்து நம்ம வீட்ல வாங்கற சம்பளம் பத்தலன்னு தானே பொன்னம்மா வேலைக்கு வந்தாங்க..... இங்க நம்ம வீட்ல அப்டியில்லையே.... நீங்கதான் நல்லா சம்பாதிச்சீங்கல்ல... அப்றம் அம்மா வேலைக்கு போகறதுக்கு என்ன அவசியம் வந்திச்சு?"

"சரியா கேட்ட! அவசியம்தான்! அவசியம்தான் வந்திச்சுடா! எங்கம்மாவுக்கு அதாவது உங்க பாட்டிக்கு என்ன வியாதின்னு உனக்கு தெரியுமா?"

"ம்.... வயசானா எல்லாருக்கும் வர பிரச்சனைகள்தானே.... மூட்டு வலி.... நடக்க முடியாது.... மாடிப்படி ஏறினா கொஞ்சம் மூச்சு விடறதில சிரமம்! இதானே?" என்று கூறி தன் தோள்களைக் குலுக்கினான் ஹரி! இதென்ன புதுசா கேக்கறீங்க? என்பது போல இருந்தது அவனுடைய செய்கை!

"அவ்ளோதான் உனக்கு தெரிஞ்சது! உங்க பாட்டிக்கு மூளையில கட்டி வந்திச்சு!"

"என்ன சொல்றீங்க?" என்று அதிர்ச்சியாகக் கேட்டான் ஹரி!

பரணிலிருந்த ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தன்னுடைய அம்மாவின் பழைய மருத்துவ அறிக்கைகளை தூசிதட்டி மகனிடம் காண்பித்தார் அவர்! அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு குழம்பிப் போனான் ஹரி! சிவசங்கரன் மேலும் தொடர்ந்தார்!

"பாட்டியோட மூளையில வந்த கட்டிய ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ண எங்களுக்கு பணம் வேண்டியிருந்தது.... அந்த ஆபரேஷன் பண்ணினாலும் பாட்டி பொழைக்கறதுக்கு அம்பது சதவிகிதம்தான் வாய்ப்பு இருந்தது.... அதுக்காக ஆபரேஷன் பண்ணாம விட முடியுமா? பண்ணிதானே ஆகணும்!

பாட்டி ஆபரேஷனுக்காக நானும் நந்தினியும் சேர்ந்து லோன் வாங்கினோம்! பாதி லோன் கட்டி முடிக்கறதுக்குள்ள எனக்கு வேலை போய்டுச்சி.... அவளும் வேலைய விட்டிருந்தாள்ன்னா.... நாம எல்லாரும் நடுத் தெருவிலதான் நின்னிருக்கணும்!

இந்த விஷயம் புரியாம எங்கம்மா நந்தினிய கரிச்சி கொட்டினாங்க... அது மட்டுமில்லாம.... அவங்க மூளையோட ஒரு பகுதி கொஞ்சம் கொஞ்சமா செயலிழக்க ஆரம்பிச்சிருச்சு... கொஞ்ச கொஞ்சமா அவங்க எல்லாத்தையும் மறக்க ஆரம்பிச்சுட்டாங்க....

அதனால நந்தினிய பாடா பாடு படுத்துவாங்க.... சாப்பாடு குடுத்தா தூக்கி வீசுவாங்க.... பால், காபி குடுத்தா ஆத்தறேன்னு சொல்லிகிட்டு சுட சுட செடியில கொட்டுவாங்க.... எரிஞ்சிகிட்டிருக்கற கேஸ் அடுப்ப வாயால ஊதி அணைச்சிட்டு சைலன்டா உள்ள போய் உக்காந்துப்பாங்க.... இப்டிலாம் சின்ன குழந்தை மாதிரி சேட்டை பண்ணுவாங்க...

அவ வேலைக்கு போறப்ப நா பாத்துப்பேன்.... அவங்களோட தொல்லை தாங்காம நானே அவங்கள நிறைய கோவப்பட்டிருக்கேன்.... திட்டியிருக்கேன்.....

ஆனா, நந்தினி ஒரு வார்த்தை கூட குறை சொல்லாம, கோவப்படாம, குழந்தைய பாத்துக்கற மாதிரி பாத்துப்பா....

உங்க பாட்டிக்கு கடைசி வரைக்கும் ஞாபகம் இருந்த ஒரே விஷயம் நீ மட்டும்தான்! என் பேரன் ஹரி! என் பேரன் ஹரி! ஹரி ஸ்கூலுக்கு போய்ட்டானா? ஹரி ஸ்கூல்லேந்து வந்துட்டானா? ஹரி சாப்ட்டானா? ஹரி தூங்கிட்டானா? ஹரிக்கு இத செஞ்சு குடு! ஹரிக்கு இத வாங்கி குடு! ஹரிய இங்க கூட்டிட்டு போ! ஹரிய இவ்ளோ பெரிய படிப்பு படிக்க வெய்.... இப்டி ஹரி... ஹரீன்னு உன்ன மட்டும்தான் ஞாபகம் வெச்சிருந்தாங்க....

அதனாலதான் உன்கிட்ட அவங்க சாதாரணமா பேசியிருக்காங்க...." என்று கண் கலங்கினார் சிவ சங்கரன்!

ஹரிக்கு இதைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது!

"இது.... எனக்கு இப்டின்னெல்லாம் தெரியவே தெரியாதேப்பா!" என்றான் ஹரி!

"ஆமா... இதுக்கும் நந்தினிதான் காரணம்! உனக்கு இந்த விஷயம் தெரிஞ்சா, பாட்டிகிட்டேந்து நீ ஒரு வேள விலகிடுவியோ... அதனால பாட்டிக்கு ஆபத்து வந்துடுமோன்னு சொல்லி இந்த விஷயம் உனக்கு தெரியாம பாத்துகிட்டா நந்தினி!

அப்பதான் பாட்டி கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஃபீல் பண்ணுவாங்ன்னு அவ இத செய்தா!

பாட்டியும் கொஞ்சம் கொஞ்சமா உடல் மோசமாகி கடைசியில போய்ச் சேர்ந்தாங்க.... ஆனா வாங்கின கடன் இன்னும் முடியல... எனக்கும் வேலை கிடைச்ச பாடில்ல....

பாட்டி போன வேதனைல என்ன பண்றோம்னு புரியாம நானும் அவ கிட்ட சண்டை போட ஆரம்பிச்சேன்!

அதையும் அவ சரியான கோணத்திலதான் புரிஞ்சிகிட்டா! அவளை திட்டிகிட்டு இருக்கற என்னை சமாதானம் செய்துட்டு ஆஃபீஸ் போவா!? அவ போனப்றம் புரியும்! அவ ஆஃபீஸ்லேந்து வந்ததும் திரும்பவும் என் மனசு குரங்கா மாறி அவகிட்ட சண்டை போடும்!

இப்டியே இது தொடர் கதையா ஆயிட்டு இருந்துச்சு! இதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வெக்கணும்னு முடிவு செஞ்சேன்! எனக்கு வேலை கிடைச்சிருச்சு! அதனால நீ வேலைய விட்டுடுன்னு நந்தினிட்ட பொய் சொன்னேன்! அவளும் ஒரு செகன்ட் கூட தயங்காம ராஜினாமா லெட்டர எழுதிட்டு வந்தா.... எனக்கு ரொம்ப கில்ட்டியா போய்டுச்சு.... அவ கிட்ட உண்மைய சொன்னேன்!

அப்பவும் அவ என் மேல கோவப்படாம என்னை சரியா புரிஞ்சிகிட்டா!

ஆனா.. நாந்தான்.. ஆம்பளைங்கற ஈகோல... சொல்லக் கூடாத வார்த்தைல்லாம் அவளப் பாத்து சொல்லிட்டு.... போடீன்னு வீட்ட விட்டு போய்ட்டேன்...." என்று கண்கள் கசிய கூறி முடித்தார் சிவசங்கரன்!

ஹரிக்கு மிகுந்த வேதனையாக இருந்தது!

"ஆனா... அம்மா ஏன் இத என் கிட்ட சொல்லல.... இத்தனை வருஷத்தில ஒரு நாள் கூட பாட்டிக்கு இருந்த வியாதி பத்தியோ.... இல்ல உங்களுக்கு வேலையில்லன்னோ.... அம்மா சொன்னதேயில்லையே?!" என்றான்!

"நீ கேட்டதேயில்லையேப்பா! நீ கேட்டிருக்கியா?" என்று கேட்டார் சிவசங்கரன்!

"நா.... அப்பா ஏன் நம்மள விட்டு போனார்ன்னு கேப்பேன்.... எப்டி என்ன விட்டுப் போக மனசு வந்திச்சுன்னு கேட்டு அழுவேன்...." என்றான் ஹரி சற்று கோபமாக!

"ம்.... நீ உன்னப்பத்தி மட்டும் கேட்டுட்டு ஒரு மூச்சு அழுதுட்டு.... உன் மன பாரம் இறங்கினதும் நீ போய்டுவ.... ஆனா நந்தினி.... யார்கிட்ட என்ன சொல்லி அழ முடிஞ்சது அவளால.... எல்லாத்தையும் மனசுக்குள்ளயே போட்டு போட்டு.... அடைச்சி வெச்சி..... இன்னிக்கு அதுவே அவ இதயத்தில அடைப்பா மாறிடுச்சு...." என்றார் வேதனையான குரலில்!

"அப்பா.... எனக்கு தெரீலப்பா.... என்னால அம்மாவ புரிஞ்சுக்க முடியல.... புரிஞ்சுக்க முடியலன்னு சொல்றத விட, புரிஞ்சுக்க முயற்சி பண்ணலன்னு சொல்றதுதான் சரி.... நா அம்மாவ புரிஞ்சுக்க முயற்சி பண்ணவே இல்லைன்னு இப்பதான் எனக்கு புரியுது...." என்றான் ஹரி! அவன் குரலில் தன் தவறுக்கான வருத்தம் அதிகமாகத் தெரிந்தது!

“நந்தினி என் உயிர்டா! என் உயிர்ல கலந்தவ அவ! அவள முதல் முதல்ல பாத்தப்ப என்ன ஃபீல் பண்ணினேனோ அதே ஃபீல்தான் இப்பவும் எனக்கு! அதுல ஒரு பர்சென்ட் கூட குறையவேயில்ல!

என்னையும் எங்கம்மாவையும் வாழ வெச்ச தெய்வம்டா அவ! ம்ச்! அன்னிக்கு மட்டும் நான் கோவப்படாம இருந்திருந்தேன்னா நம்ம இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கவே மாட்டோம்! எல்லாம் விதி!”

“..........”

“நீ பிறந்தப்ப எவ்ளோ சந்தோஷப்பட்டோம் தெரியுமா? எங்களோட தூய்மையான காதலுக்கு கெடச்ச மிகப் பெரிய பரிசு நீதான்! நீயும் நந்தினியும் என் ரெண்டு கண்கள். உங்கள நான் கண்ணுக்குள்ள வெச்சு பத்திரமா பாத்துகிட்டு இருந்திருக்கணும். விட்டுட்டேன்!” கண் கலங்கினார்.

இதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தான் ஹரி!

சில நிமிடங்களில் தன்னைத் தானே தேற்றிக் கொண்ட சிவசங்கரன், ஹரியைப் பார்த்துக் கூறினார்!

"நீ நெனக்கிற மாதிரி பொம்பளைங்கன்னா திமிர் பிடிச்சவங்க கிடையாது! தன் குடும்பம் தன் குழந்தைன்னு ஒரு சின்ன சுயநலம் அவங்களுக்கு எப்பவுமே இருக்கும்தான்! ஆனா அதுவே யாராவது கஷ்டப்படறத பார்த்தா முதல்ல இறங்கி உதவி செய்யறதும் பெண்கள்தான்! எங்கியாவது தவறு நடக்கறதப் பார்த்தா முதல்ல தட்டிக் கேக்கறதும் பெண்கள்தான்!

நந்தினி, அபிநயா பற்றிய உண்மைய உன் கிட்ட மறைச்சிருக்கலாம்! ஆனா அவ உனக்கு கெடுதல் எதுவும் பண்ணிடலையே!

அந்த பொண்ணு அபி, அவ உன்ன விரும்பின ஒரே காரணத்துக்காக தன்னோட படிப்பை மறைச்சி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டா...

சாதாரணமா ஒரு பொண்ணு டிகிரீ படிச்சு முடிச்சுட்டாலே கொஞ்சம் தலையில கிரீடம் வெச்ச மாதிரிதான் நடந்துப்பாங்க... ஆனா அபி ஒரு டாக்டர்! அதுவும் கார்டியாலஜிஸ்ட்! அப்டியிருந்தும் அவ தலகனத்தில ஆடலையே!

வீட்ல தான் வெச்சதுதான் சட்டம்னு நடந்துக்கலையே... இதிலேர்ந்தே அவ நல்ல பொண்ணுன்னு உனக்கு புரிய வேணாம்?

நா உங்கம்மாகிட்ட சண்டை போட்டு பிரிஞ்சதுக்கு காரணம் என்னோட முட்டாள்தனம்! இதக் காரணமா காட்டி நீ உன் மனைவிய தள்ளி வெக்காத....

அப்பன மாதிரியே புள்ளையும் எவனுக்கும் அடங்காதவன்னு கெட்ட பேரெடுக்காத....

எல்லாத்துக்கும் மேல.... நா என் வறட்டு பிடிவாதத்தாலயும் ஆணவத்தினாலயும் என் வாழ்க்கைய இழந்த மாதிரி நீயும் உன் வறட்டு பிடிவாதத்தால உன் வாழ்க்கைய இழந்துடாத ஹரி!

அபி உன் மேல வெச்சிருக்கற தூய்மையான அன்பை புரிஞ்சுக்கோ! அவ்ளோதான் நா சொல்வேன்!

இன்னமும் இந்த அப்பா மேல மதிப்பும் மரியாதையும் நீ வெச்சிருக்கேன்னா..... அபிய வெறுத்து ஒதுக்காம ஒழுங்கா அவளோட குடும்பம் நடந்தற வழியப் பாரு....!" என்று கூறி ஹரியின் தோளைத் தட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் சிவசங்கரன்!





தொடரும்....