19.
தன் பாட்டியைப் பற்றி தன் தந்தை சொன்னதைக் கேட்ட ஹரி அதிர்ச்சியில் உறைந்திருந்தான்!
இரவு முழுதும் அமர்ந்து ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்!
காலை எழுந்த பின்னரும் கூட அவனுடைய எண்ணங்கள் அவனுடைய பாட்டி மற்றும் அவனுடைய அம்மா நந்தினியைச் சுற்றியே இருந்தன!
பாட்டிக்கு இவ்ளோ பிரச்சனை இருந்துச்சா? அப்பா வேலையில்லாம கஷ்டப்பட்டாரா? அம்மா பாட்டிய குழந்தை மாதிரி கவனிச்சுகிட்டிருக்காங்க.... எனக்கு இதப்பத்தி எதுவுமே தெரியல....
சே! அம்மாவ நா ரொம்ப தப்பா நெனச்சுட்டேனே....
எவ்ளோ கஷ்டத்த அம்மா தாங்கிகிட்டு இருந்திருக்காங்க....
என்னாலதான் அம்மாவுக்கு இதயத்தில அடைப்பே வந்திருக்கு... இது கூட எனக்கு புரியல....
என்று தனக்குள் மூழ்கியிருந்தவனின் கவனம் தன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்தபடியே பேசிக் கொண்டிருந்த முத்துவின் பேச்சில் திரும்பியது!
முத்து வேலை செய்யும் போது பக்கத்து வீட்டு வேலையாள் எதோ விசாரிக்க அதற்கு பதிலளித்தபடி முத்து வேலை செய்து கொண்டிருந்தான்!
"என்ன முத்து! வாத்யாரம்மா எப்டி இருக்காங்க?"
"நல்லா இருக்காங்கபா! ஆப்ரேசன் நல்லபடியா முடிஞ்சிருச்சு... அநேகமா இன்னும் பத்து நாள்ல வூட்டுக்கு வந்திருவாங்க...."
"அப்றம்... உங்க சின்னம்மா.... அதான்.... வாத்தியாரம்மா மருமக... அது டாக்டராமே... மெய்யாலுமா?"
"அக்காங்.... மெய்யாலுமே டாக்டரம்மா தான்.."
"வாத்யாரம்மா வூட்டுக்காரர் கூட திரும்பி வண்ட்டார் போல..."
"அக்காங்... திரும்பி வண்ட்டார்பா..."
"எங்க போயிருந்தாராம்..."
"நமக்கென்னபா தெரியும்.... ஏதோ ஒடம்பு செரியில்லனாங்க..."
"இன்னாவாம் ஒடம்புக்கு...."
"அத்தெல்லாம் நமக்கு தெரியாதுபா...."
"ஆமா.... உம் பொண்டாட்டிய உன்னும் இங்க வேலைக்கி சேத்துக்கலியா...."
"இன்னாபா பண்றது.... வாத்யாரம்மா வந்தாதான் எதாச்சும் கேக்க முடியும்...."
"ஏன்யா.... நா தெரியாமதான் கேக்கறேன்... உம் பொண்டாட்டி வாத்யாரம்மா கிட்ட இவ்ளோ பொய் பித்தலாட்டம் பண்ணிருக்கா.... அவ மேல உனுக்கு கோவம் வரல.... நானா இருந்தா அவள வெட்டி பொலி போட்ருப்பேன்...."
"யோவ்... வாய மூடுய்யா.... அவ இன்னா பொய் பித்தலாட்டம் பண்ணி எனுக்கு துரோகமா பண்ணினா.... குடும்ப செலவுக்கு என் சம்பளம் பத்தலன்னு வேலைக்கு வந்தா... என் குடும்பத்துக்காக.... எம் பொண்ணு பள்ளிகூடம் பீஸ் கட்றதுக்காகதானே பொய் சொன்னா... ஏன் ஆம்பளைங்க நம்மல்லாம் வேல செய்ற இடத்தில பொய் சொல்லி வீட்டுக்காக சம்பாதிக்கறதில்ல.... அது மாதிரிதானே அவ செஞ்சா....
என்னப் பொறுத்த வரைக்கும் எம் பொண்டாட்டி தெய்வம்... என் குடும்பத்த காப்பாத்தற தெய்வம்... எம் பொண்ண நல்லபடியா படிக்க வெக்கற தெய்வம்... எங்கம்மாவ கண்ணு மாதிரி பாத்துக்கற தெய்வம்.....
என்ன... அவளுக்கு கொஞ்சம் வாய் நீளம்..... அதுக்காக.... அவ மோசம்னு ஒண்யும் கெடையாது....
உன் வேலையாப் பாத்துகிட்டு போய்யா.... வண்ட்டான் பெரிசா நாயம் பேச.....
எவனாச்சும் எம் பொண்டாட்டியப் பத்தி பேசிகிட்டு இந்தப் பக்கம் வந்தீங்க.... மூஞ்சு மொகரைல்லாம் பேத்திருவேன்.... ஜாக்கிரதை...."
முத்துவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஹரி ஒரு நிமிடம் ஆடித்தான் போனான்!
படிக்காத முத்துவுக்கு இருக்கும் தெளிவு தன்னிடம் உள்ளதா என்று தன்னையே அவன் கேட்டுக் கொண்டான்!
அன்று அவனுடைய மனைவி தன்னிடம் அபியைப் பற்றிக் கோள் மூட்டிப் பேசியபோது, அவளைத் தன் கண் முன்னாலேயே அடித்து இழுத்துச் சென்றான்!
அவன் சென்றதைப் பார்த்ததும் அவன் அன்றோடு அவளைத் தலை முழுகப் போகிறான் என்றல்லவா நினைத்தேன்! ஆனால் அவனோ, இது தன் குடும்பத்தின் நலனுக்காகத்தானே செய்திருக்கிறாள் என்று அவளுக்காக நியாயம் பேசுகிறானே என்று வியப்படைந்தான்!
அவளுக்காக நியாயம் பேச வேண்டுமென்றால் அவள் மேல் இவனுக்கு மாறாத காதல் இருக்க வேண்டும்! அப்படி மாறாத காதல் இருந்தால்தான் அவள் ஏன் இப்படி தவறு செய்தாள் என்று அவள் பக்கமாக யோசனை செய்ய முடியும் என்று புரிந்து கொண்டான்!
ஏன் எனக்கு என் மனைவி மேல் காதல் இல்லையா என்ன? முத்துவுக்கு அவன் மனைவி மேல் இருக்கும் காதலைப் போல எனக்கு என் மனைவி மேல் காதல் கிடையாதா என்ன? என்று எண்ணினான்!
காதல் இருக்குன்னா அவ ஏன் உன் கிட்ட படிக்காதவ மாதிரி நடந்துகிட்டான்னு யோசிடா! என்று அவன் மனம் அவனிடம் இடித்துரைத்தது!
தன் மனைவியைப் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே அவன் மனதில் கோபம் வந்து அமரவும் செய்தது!
என்ன இருந்தாலும் அவ செஞ்சது தப்பு! என்று திரும்பவும் அவன் மனம் குரங்காய் மாறிப் போக,
இன்னமும் இந்த அப்பா மேல மதிப்பும் மரியாதையும் நீ வெச்சிருக்கேனன்னா..... அபிய வெறுத்து ஒதுக்காம ஒழுங்கா அவளோட குடும்பம் நடந்தற வழியப் பாரு....! - அவனுடைய அப்பாவின் வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தது!
தன் திருமணம் நடந்ததிலிருந்து தன் மனைவி அபி தன்னிடம் நடந்து கொண்டதை அவன் நினைத்துப் பார்க்கலானான்!
எதுவும் தெரியாத கிராமத்து அப்பாவிப் பெண்ணாய் தன்னிடம் அவள் நடந்து கொண்டதை நினைத்து, இப்போது அவனுக்கு கோபத்தை விட சிரிப்பே வந்தது!
அதுவும் கணக்கு தெரியாமல் அவள் நடித்ததை நினைத்துப் பார்த்தான்!
எங்கியாவது கவனக் குறைவா இருந்து எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சுன்னா... எங்க நா வெறுத்திடுவேனோங்கற நெனப்பிலயே இருந்திருக்கா....
பொன்னாம்மா பொய் சொல்லி வீட்டு செலவுக்கு குடுக்கற பணத்த திருடினப்ப கூட... அவ தன்னைத்தான் தாழ்த்திகிட்டாளே தவிர பொன்னம்மாவ அவ திட்டவோ அவ மேல கோவத்தக் காட்டவோ இல்ல.....
நல்லா படிச்ச ஒருத்தி இப்டி தப்பு தப்பா கணக்கு தெரியாத மாதிரி நடிக்கணும்னா எவ்ளோ அலர்ட்டா இருக்கணும்....
அம்மாவுக்கு திடீர்ன்னு இப்டி ஆனதினாலதான் அவ தன்னைப் பத்தி வெளிப்படுத்திகிட்டா....
ப்பா.... நெஜமாவே அபி என் மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்கா.... என்று நினைத்துக் கொண்டான்! (ஹப்பாடி... இப்பவாவது ஒழுங்கா நேர் புத்தியோட யோசிச்சியே!)
அவளுடைய அழகு முகம் அவன் கண் முன்னே சிரித்தது! அவளுடன் தான் களித்திருந்த மகிழ்ச்சியான தருணங்கள் அவன் கண் முன்னே நிழலாடின!
தேன் நிலவில் அவளுடன் திகட்டத் திகட்டக் கூடிக் களித்ததும், கூடிக் களித்த அலுப்பில் உறங்கிக் கொண்டிருந்தவனின் நெஞ்சில் தலை வைத்து அவளும் உறங்கியதும், பாதி உறக்கத்தில் தன்னை அவள் கொஞ்சி எழுப்பியதும், எழுப்பியவளைத் தானும் கொஞ்சி மகிழ்ந்ததும் அவன் நினைவுக்கு வர, அதையெல்லாம் நினைத்தபடியே தன் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான்!
மருத்துவமனையிலிருந்து வீடு வந்த அபி குளிப்பதற்காக தன் அறைக்குள் நுழைய, தன் அன்புக்கணவன் குழந்தை போல கட்டிலில் கவிழ்ந்து படுத்திருப்பதைப் பார்த்ததும் அவளுக்கும் பழைய நினைவுகள் வந்தது!
ஓடிப்போய் அவன் முதுகில் சாய்ந்து செல்லம் கொஞ்ச அவள் உடம்பில் உள்ள அணுக்கள் எல்லாம் தவிக்க, எதுவும் செய்ய முடியாத ஏக்கத்துடன் அவனைப் பார்த்தபடியே குளியலறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்!
எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்! அவரிடம் என் காதலைச் சொல்லி திருமணம் செய்து கொள்ளக் கேட்பதை விடுத்து பெரிய இவள் போல..... பொய் சொல்லி.... தான் படித்த படிப்பை மறைத்து..... இதெல்லாம் நல்ல பெண் செய்யக் கூடிய செயலா.... சே! என்ன பெண் நான்? என்று அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்!
இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவரிடம் நான் மன்னிப்பு கேட்பேன்! அதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது? என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்!
கடவுளே! நா செஞ்சது மிகப் பெரிய தப்பு! அதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடு! நா அத மனப்பூர்வமா ஏத்துக்கறேன்! ஆனா அவர என் கிட்டேந்து பிரிச்சிடாத.... அத மட்டும் என்னால தாங்க முடியாது! ப்ளீஸ்.... கடவுளே.... எங்கள பிரிச்சிடாத...... கடவுளே..... என்று கடவுளிடம் முறையிட்டபடி குளித்து வெளியே வந்தாள்!
இவள் வந்ததையோ குளிக்கப் போனதையோ கவனிக்காத ஹரி, இவள் குளித்து வெளியே வந்த சத்தம் கேட்டு சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்!
பனியில் நனைந்த புதுமலர் போல வெளியே வந்த அபியைப் பார்த்தவனுக்கு மனமெல்லாம் புத்துணர்வு பொங்கியது! காதல் கணவனாய் அவளைக் கட்டியணைக்கத் துடித்தான்!
அவளோ அதற்கும் மேலே! எங்கே தான் போய் அவனிடம் மயங்கி நின்றால் ஏற்கனவே தன் மேல் கோபமாயிருப்பவன் எங்கே தன்னை வெறுத்தே விடுவானோ என்று நினைத்து அவனைப் பார்க்காமல் கீழே இறங்கிப் போய் விட்டாள்!
சிவசங்கரன் தன் மகனிடம் கையாட்டி விடை பெற்றுக் கொண்டு மருமகளுடன் மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டார்!
எவ்ளோ திமிரு பாத்தியா அவளுக்கு? என்னடா புருஷங்காரன்னு ஒருத்தன் இங்க உக்காந்திருக்கானே... அவன் பக்கத்தில வந்து ரெண்டு வார்த்தை பேசணும்னு தோணிச்சா அவளுக்கு..... இந்தாள் என்னடான்னா.... புள்ளைய கவனிக்காம மருமகளோட கௌம்பிட்டாரு.... இருக்கட்டும்டீ..... வெச்சிக்கறேன் உன்ன..... எங்க போகப் போற..... ஹாஸ்ப்பிடல்தானே.... இதோ வரேண்டீ.... உன்னல்லாம்.... வெக்கற இடத்தில வெக்கணும்.... என்று அவளைத் திட்டிக் கொண்டே ஹரி மருத்துவமனைக்குக் கிளம்பினான், தன் மனைவியைப் பார்க்க!?!?
ஹரி மருத்துவமனைக்குச் சென்று தன் அன்னை அனுமதிக்கப்பட்டிருக்கும் தளத்துக்குச் செல்ல மின் தூக்கிக்காக காத்திருக்கும் போது, அருகிலிருந்த காபி கபேயில் சிலர் பேசுவது கேட்டது! அவர்களின் பேச்சில் அபி என்று தன் மனைவியின் பெயர் அடிபட, அவன் அங்கு சென்று அவர்கள் பேசுவதைக் கேட்டான்!
"மாப்ள மனசு மாறி அபிய ஏத்துக்க இன்னும் எவ்ளோ நாளாகுமோ தெரியல..." அபியின் அம்மா இந்து சொன்னாள்.
"அதெல்லாம் ஒரு கவலையும் படாதீங்க! அத்தான் ஒண்ணும் கொழந்தையில்ல! படிச்சவரு! அவரோட பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் காலேஜ் ப்ரொஃபெசர்ஸ்! அத்தானுக்கு நல்லது சொல்லிக் குடுத்துதான் வளர்த்திருப்பாங்க!
அதுக்கும் மேல அத்தானுக்கு அக்கா மேல அதிகமான அளவு லவ் இருக்கு!
ஏதோ காரணத்தினால அத்தான் படிக்காத பொண்ணு வேணும்னு நெனச்சிருப்பாரு.... அத்தானோட எண்ணம் தவறானதுன்னு அவருக்கு புரிய வெச்சிடலாம்னு அக்கா நெனச்சாங்க.... அது நடக்கறதுக்கு முன்னாடி ஆன்டிக்கு இப்டி ஆகிடுச்சு...." என்று ஒரு இளைஞன் பேசுவது கேட்டு ஹரி நின்று எட்டிப் பார்த்தான்!
அங்கே அபியின் தாய், தந்தை, சித்தி சித்தப்பா நால்வருடன் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்!
அவனை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது ஹரிக்கு!
"சரிடா! ஆனா மாப்ள இன்னும் கோவமா இருக்காரே! நா பேச ட்ரை பண்ணினப்ப கூட என் கிட்ட அவரு முகம் கொடுத்து பேசலையே!" அபியின் அப்பா பாண்டியன் சொன்னார்!
"பெரிப்பா! அத்தானோட கோவம் நியாயமானது! தன்னைத் தன் அம்மா உட்பட எல்லாரும் ஏமாத்திட்டாங்களேன்னு அவர் மனசு வருத்தப்படுது! பாவம் பெரிப்பா அவரு!" இளைஞன் கூறினான்!
"என்னடா நீ.... மாப்ள அபிய ஏத்துப்பாருன்னு சொல்ற... ஆனா அவரோட கோவம் நியாயமானதுன்னு சொல்ற... எனக்கு ஒண்ணுமே புரியல போ!" பாண்டியன் அலுத்துக் கொண்டார்.
"பெரிப்பா! நீங்கதான் புரிஞ்சுக்கணும்! அத்தான் இப்ப பெரிய மனக் குழப்பத்தில இருக்கார்! அவரப் பொறுத்த வரைக்கும் நாமெல்லாம் அவர ஏமாத்தினதா அவர் நெனக்கறார்!
நாம அவரோட நல்லதுக்குதான் இத செய்திருக்கோம்! ஆனா அது அவருக்கு புரியறதுக்கு கொஞ்சம் டைம் குடுங்க!
இப்ப அவருக்குத் தேவையெல்லாம் கொஞ்சம் கேப் (gap)! இடைவெளி! அவர் யோசிக்கறதுக்கு கொஞ்சம் டைம்!" இளைஞன் கூறினான்.
"எவ்ளோ நாள்டா டைம் குடுக்கறது! அபி அவரோட அம்மாவ எவ்ளோ நல்லா பாத்துக்கறா! இதெல்லாம் பாத்தப்றம் கூட மனுஷன் புரிஞ்சுக்க மாட்றாரே!" அபியின் சித்தி சாருமதி சொன்னாள்.
"மொதல்ல நாம அவர புரிஞ்சுகிட்டோமா? அவரு ஏன் ஒரு படிக்காத பொண்ண கட்டணும்னு நெனச்சாருன்னு நீங்க அவர் கிட்ட விளக்கம் கேட்டீங்களா?"
"அது.... வந்து....." பாண்டியன் இழுத்தார். சாருமதியும் இந்துமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அந்த இளைஞன் சொன்னான்.
"நாமெல்லாம் ஒரே குடும்பம்னு வெறும் வாயால சொன்னா பத்தாது! குடும்பத்தில ஒருத்தருக்கு பிரச்சனைன்னா நாம அவங்களுக்கு ஆதரவா இருக்கணும்!
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பலகீனம்! அந்த பலகீனத்த மத்தவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க! குடும்பத்தில இருக்கறவங்கதான் புரிஞ்சுக்கணும்!
அவரு நம்மள புரிஞ்சுக்கணும்னா, நாமளும் அவர புரிஞ்சுக்கணும்! அத்தான் ஒண்ணும் மக்கு இல்ல.... பெரிய கம்பெனி நடத்தி பல குடும்பங்கள வாழ வெக்கறாரு!
கம்பெனில நடக்கற எல்லா விஷயத்தையும் தன் நேரடி கண்காணிப்புல வெச்சிருக்காரு! எல்லா விஷயத்தையும் ஒரு முறைக்குப பல முறை பல கோணத்தில அலசி ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கறாரு....
நா அத்தானோட கம்பெனியில ஒரு மாசம் என் ப்ராஜெக்ட்டுக்காக போயிருந்தேனே! அத்தான் தன் கீழ வேல செய்றவங்கள என்ன மாதிரி நடத்தறார் தெரியுமா!? தான் ஒரு முதலாளின்னு ஒரு பந்தா கிடையாதே!"
"இஸ் இட்? நெஜமாவா அபிஷேக்?" என்று கேட்டார் அபியின் சித்தப்பா கோபாலன்!
"ஆமாம்ப்பா! சான்சே இல்ல! ஹீ இஸ் எ ரியல் ஹீரோ!" என்றான் அந்த இளைஞன்!
ஹரி அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டான்! அந்த இளைஞனைப் பற்றி இப்போது நினைவுக்கு வந்தது!
அபிஷேக் என்ற பெயருடைய அந்த இளைஞன் ஹரியின் கம்பெனியில் தன் கல்லூரியின் இறுதியாண்டு செய்முறை பயிற்சிக்காக வந்திருந்தான்!
இவர்கள் பேசியதிலிருந்து, அவன் அபியின் சித்தியான சாருமதி - கோபாலன் தம்பதியின் மகன் என்பது ஹரிக்கு புரிந்தது! அவன் ஹரி - அபியின் திருமணத்தின் போது செமஸ்ட்டர் தேர்வு என்பதால் திருமணத்திற்கு வரவில்லை என்று ஹரிக்கு நினைவு வந்தது!
ஆனால் பயிற்சிக்காக வந்திருந்த போது கூட அந்த இளைஞன் தன் உறவு முறையை ஹரியிடம் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தது ஏன் என்று ஹரிக்கு புரியவில்லை! ஆனால் அதற்கும் விடையை அந்த இளைஞனே கொடுத்தான்!
"ஏன் அபிஷேக்! நீ ஏன் மாப்ள கிட்ட நீதான் அபியோட தம்பின்னு உன்ன நீயே இன்ட்ரோ பண்ணிக்கல..."
"இப்பல்லாம் போகக் கூடாது! கம்பெனில அவர் முதலாளி! நா வெறும் ப்ரொஜெக்ட் முடிக்க போயிருக்கற ஸ்டூடென்ட்! அவ்ளோதான்! அப்றமா எல்லா பிரச்சனையும் முடிஞ்சி அக்காவும் அத்தானும் ஒத்துமையா வாழ ஆரம்பிச்சப்றம் நா அத்தான் வீட்டுக்குப் போய் என்ன நானே இன்ட்ரோ பண்ணிகிட்டு உரிமையோட அத்தானோட பக்கத்தில உக்காந்து சாப்பிடுவேன்! சண்டை போடுவேன்! அவரு சட்டைய வாங்கி போட்டுக்குவேன்!"
அபிஷேக் மேலும் கூறினான்!
"கம்பெனி விஷயத்திலயே இவ்ளோ யோசனை பண்ணி..... ஆராய்ச்சி பண்ணி..... முடிவெடுக்கறவரு... தன் வாழ்க்கை விஷயத்தில யோசிக்க மாட்டாரா?
அவருக்கும் கொஞ்சம் அவகாசம் குடுங்க! அத்தான் நல்ல முடிவாதான் எடுப்பாரு!"
"நல்ல முடிவு எடுத்தா சரி!"
"இதென்ன டீவி சீரியலா? வாழ்க்கை பெரிப்பா! நம்ம அக்காவோட வாழ்க்கை! ஆண்டவனை நம்புங்க பெரிப்பா! நல்லதையே நினைங்க! நல்லதே நடக்கும்! நம்ம அபி அக்கா நல்லா இருப்பாங்க! அத்தான் நல்ல முடிவுதான் எடுப்பாரு!"
ஹரிக்கு அந்த அபிஷேக் பேசியதைக் கேட்டதும் கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது!
அந்த இளைஞன் இப்போதுதான் தன் கல்லூரிப் படிப்பை முடிக்கப் போகிறான்! ஆனால் எவ்வளவு தெளிவாகச் சிந்திக்கிறான்!
என்னை இவன் சரியாகப் பார்த்தது கூடக் கிடையாது! ஆனால் எனக்காகத் தன் குடும்பத்தினரிடம் வக்காலத்து வாங்கிப் பேசுகிறான்! என்னுடைய கோணத்திலிருந்தும் யோசிக்கிறான்! அவர்களுடைய கோணத்தையும் புரிந்து கொள்கிறான்!
இந்தத் தெளிவு தன்னிடம் உள்ளதா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் ஹரி!
இதை சிந்தித்தபடியே மருத்துவமனை காரிடாரில் நடந்து கொண்டிருந்தான்!
“இர்ரெஸ்பான்ஸிபிள் இட்யட்ஸ்! (Irresponsible Idiots!)" அபியின் கோபமான குரல் கேட்டு ஹரி அப்படியே நின்றான்.
"நீங்கல்லாம் ஏன் நர்ஸ் வேலைக்கு வரீங்க!"
ஓ! நர்ஸத் திட்றாளா? என்று எண்ணிக் கொண்டான்.
"நோயாளிகளோட இன்டராக்ட் (interact) பண்றது பிடிக்கலன்னா நர்ஸ் ஆகணும்னு ஏன் படிச்சீங்க? முதல்ல கிளம்புங்க! எல்லாரும் வேலைய விட்டுப் போங்க! ஒரு மனுஷ உயிரோட வேல்யூ தெரிஞ்சும் அது கூட விளையாடறீங்களே! இதுவே உங்க வீட்டு மனுஷங்களுக்கு ஒண்ணுன்னா நீங்க இப்டிதான் பொறுப்பில்லாம இருப்பீங்களா?”
அபி உச்ச குரலில் கத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு ஆயா ஓடி வந்தாள்.
“மேடம்! அவங்க கண்ண முழுச்சுட்டாங்க!”
“எல்லாரும் போங்க!” என்று கத்திவிட்டு ஓடி வந்த ஆயாவின் பின்னால் ஓடினாள்.
“என்னாச்சு!?” என்று அருகில் நின்றிருந்த வார்டு பாயைக் கேட்டான்.
இத்தனை நாட்களாக ஹரி வந்து போய்க் கொண்டிருப்பதால் டாக்டரின் கணவன் என்ற மரியாதை அங்கே அவனுக்கும் கிடைத்தது. அந்த வார்ட் பாய் ஹரிக்கு விரைப்பாய் ஒரு சல்யூட்டை அடித்துவிட்டு சொன்னான்.
“ஒண்ணுல்ல ஸார்! நம்ம ஹாஸ்பிடல்ல வேல பண்ற ஹௌஸ் கீப்பிங் ஸ்டாஃப் ஒருத்தங்க நெஞ்சு வலியில மயங்கி விழுந்திட்டாங்க. அவங்க ஒரு திருநங்கை. அவங்களுக்கு ட்ரிப்ஸ ஒழுங்கா போடாம ஆக்ஸிஜன் வெக்காம விட்டுட்டாங்க. அவங்களுக்கு மூச்சுத் தெணறல் வந்துடுச்சு. பக்கத்தில எந்த நர்ஸும் இல்ல. எதேச்சையா நம்ம அபி மேடம் இந்தப் பக்கமா வந்தாங்க. அவங்களோட மூச்சுத் தெணறல் சத்தம் கேட்டு மேடம் உள்ள போய் பாக்கறதுக்குள்ள அவங்க மயக்கமாய்ட்டாங்க. மேடம் ரொம்பக் கஷ்டப்பட்டு அவங்க உயிரக் காப்பாத்தினாங்க. அதான் ஸார்! அந்த நர்ஸுங்களை வெச்சு வாங்கினாங்க.” என்று கூறிவிட்டுச் சென்றான் அந்த வார்ட் பாய்.
அபியின் மேல் கோபமாக வந்த ஹரிக்கு மனம் சமாதானமடைந்தது. இன்னும் சொல்லப் போனால், அபியை நினைத்து பெருமையாகக் கூட இருந்தது. மெதுவாக அந்த திருநங்கை இருக்கும் அறைக்கு அருகில் சென்றான். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான். அபி அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“ஏன் டாக்டர் என்ன காப்பாத்தினீங்க?” கிட்டத் தட்ட அழுதாள் அவள்.
“என்ன பேசறீங்க? நான் ஒரு டாக்டர்! உயிரக் காப்பாத்தறது என் கடமை.”
“பெத்தவங்களே என்ன வேணாம்னு ஒதுக்கிட்டாங்க! மத்தவங்க எப்டி என் மேல கரிசனப்படுவாங்க! அந்த நர்ஸ் செஞ்சது சரிதான். நான் இந்த உலகத்தில எதுக்கு இன்னும் உயிரோட இருக்கணும். என்னால யாருக்கும் எந்த லாபமும் இல்ல. அதனாலதான் என் உயிர் போகட்டும்னு பேசாம இருந்தேன். நீங்க வந்து எதுக்கு என்ன காப்பாத்தினீங்க?”
“இங்க பாருங்க! நம்ம இந்த உலகத்தில இருக்கணுமா வேணாமான்னு டிசைட் பண்ண வேண்டியது அந்த கடவுள்தான். நீங்க நெனச்சா நெனச்ச நேரத்ல உயிர் போகாது. நெனச்சா நெனச்ச நேரத்ல உயிர் உருவாகவும் உருவாகாது.”
“ஆனா என்னால இந்த உலகத்ல யாருக்கும் ஒரு யூஸும் இல்லையே! நான் ஏன் வாழணும்?”
“நமக்குன்னு ஒரு கடமைய ஆண்டவன் கண்டிப்பா வெச்சிருப்பான். அது என்னன்னு புரிஞ்சுகிட்டு நம்ம அத முடிக்கற வரைக்கும் இந்த உயிர் நம்மள விட்டு போகவே போகாது.”
“ஆனா டாக்டர்! எனக்கு என்ன கடமை இருக்கும். நான் ஒரு ஆம்பளையும் இல்ல! பொம்பளையும் இல்ல! என்னால இந்த உலகத்ல யாருக்கு என்ன உபயோகம்?”
“நீங்க அர்த்தநாரீஸ்வரர்ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? சிவபெருமான் தன்னோட உடம்பில பாதிய உமாதேவிக்கு குடுத்துட்டாரு. பாதி ஆண் பாதி பெண் உருவமா இருக்கற உருவம்தான் அர்த்தநாரி! சம்ஸ்கிருதத்தில அர்த்த அப்டீன்னா பாதின்னு அர்த்தம். நாரி அப்டீன்னா பெண் அப்டீன்னு அர்த்தம். அர்த்தநாரீஸ்வரர் பாதி பெண்ணாக இருக்கும் ஈஸ்வரன்னு அர்த்தம். அந்த அர்த்தநாரீஸ்வரரை வணங்கினா சிவனையும் சக்தியையும் சேத்து வணங்கின பலன குடுக்குமாம். சிவசக்தி ஐக்கிய சொரூபம்னு அதுக்கு தனி மகத்துவமே இருக்கு. அந்த சிவபெருமானே உங்கள மாதிரி இருக்கறவங்களுக்கு மத்தவங்க மதிப்பு குடுக்கணும்னு அந்த அவதாரத்த எடுத்ததா எங்க பாட்டி எப்பவும் சொல்வாங்க! நீங்க ஆண் பாதி பெண் பாதி! அப்டீன்னா, ஆணுக்கு இருக்கற பலம் பெண்ணுக்கு இருக்கற பலம் ரெண்டும் சேத்து உங்ககிட்ட இருக்கு. ரெண்டு ஆள் பலம்! நீங்க ஏங்க வருத்தப்படறீங்க. எங்கள மாதிரி இருக்கறவங்களால ஒரு வேல செய்யற பலம் இருக்குன்னா உங்களுக்கு ரெண்டு வேல செய்யற பலம் இருக்குன்னு அர்த்தம்.”
“ஆனா டாக்டர்! நான் பத்தாவது தான் படிச்சிருக்கேன். மேல படிக்கணும்னு ரொம்ப ஆசப்பட்டேன்! கைல காசில்ல! இப்ப கூட நான் மயங்கி விழுந்ததப் பாத்து யாரோ ஒரு புண்ணியவான் என்ன இங்க கொண்டு வந்து சேத்துட்டுப் போய்ட்டான். ஆஸ்பத்திரி பில் கூட என்னால கட்ட முடியாது. அடுத்த வேள சோத்துக்கே வழியில்லாம இருக்கேன் டாக்டர்.”
“கவலப்படாதீங்க. உங்க பில்ல நான் செட்டில் பண்றேன். உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நான் செய்யறேன். என்ன உங்க கூடப் பொறந்த சகோதரியா நெனச்சுக்கோங்க."
“எங்கப்பா நான் இப்டி இருக்கேன்னு தெரிஞ்சு வீட்ட விட்டு வெரட்டிட்டாரு. எங்கெல்லாமோ என்னென்வோ வேல செய்து வயித்த கழுவிகிட்டேன்! கடைசியா ஒரு பார்ல வேல கிடச்சது. அங்க பாத்திரம் தேய்கற வேல. அங்க சம்பளமும் கம்மி. வேலையும் ஜாஸ்த்தி! அதவிட ரொம்ப கேவலமா நடத்தினாங்க. குடிக்க வர பசங்க அசிங்கமா நடந்துக்கிட்டாங்க. மேல கை வெச்சாங்க! வெளிய சொல்ல அசிங்கமா இருந்துச்சு! நான் எந்த கெட்ட வழிலயும் போகக்கூடாதுன்னு அந்த வேலய விட்டுட்டு இந்த ஹௌஸ் கீப்பிங் வேலைக்கு வந்திட்டேன் டாக்டர்! மானத்தோட இருக்கணும்னு நெனக்கறேன். எதாவது வீட்ல பத்து பாத்திரம் தேய்க்கக் கூட தயார்தான். ஆனா பொம்பளைங்களும் என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க! ஆம்பளைங்களும் என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!”
“கவலப்படாதீங்க! இந்தாங்க! இந்த பணத்த வெச்சுக்கோங்க! நான் உங்களுக்கு கட்டாயம் ஹெல்ப் பண்றேன். என்னால என்ன பண்ண முடியுமோ அத பண்றேன். நல்ல வழில வாழணும்னு நெனக்கிறீங்க! அதுக்கே உங்கள பாராட்டணும். நீங்க இப்ப எங்க தங்கியிருக்கீங்க?”
“அந்த பார்ல வேல பண்ணின இன்னொரு ஆயா கூடதான். ஆனா அவங்களும் என்ன அசிங்கத்துக்குதான் துணை போக சொல்றாங்க. இவ்ளோ நாளா ரொம்ப கஷ்டப்பட்டு தப்பிச்சுகிட்டேன்!” இதை சொல்லும்போதே அவள் கண்களிலிருந்து அருவி போல கண்ணீர் கொட்டியது.
“அழாதீங்க! உங்கள காப்பாத்த வேண்டியது என் பொறுப்பு!”
“ரொம்ப தேங்கஸ் டாக்டர்! உங்கள நான் என் வாழ்நாள் இருக்கற வரைக்கும் மறக்கவே மாட்டேன்!” என்றாள் அவள்.
“சரி! இனிமே அழவே கூடாது! நான் வரேன்.” என்றவள், எழுந்து வெளியே செல்லும் முன், “உங்க பேர் என்ன?”
“அப்பா அம்மா வெச்ச பேர் லக்ஷ்மணன். இப்ப லக்ஷ்மி ஆயிட்டேன்.”
“சரி லக்ஷ்மி! நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க. என் பேர் அபிநயா! நான் அப்பப்ப வந்து பாக்கறேன். இது என் நம்பர். எதுனாலும் என்ன கான்டாக்ட் பண்ணுங்க! நான் வரேன்!” என்று தன் விசிட்டிங் கார்டை அவளிடம் தந்தாள் அபிநயா.
அவள் தந்த அட்டையை வாங்கி கவனமாகப் பார்த்தாள் லக்ஷ்மி! அதிலிருந்த அபிநயாவின் மின்னஞ்சல் முகவரியைப் பார்த்ததும் லக்ஷ்மியின் முகத்தில் புன்னகை பூத்தது!
அபி அந்த அறை வாசலுக்குச் செல்லும் போது அந்த லக்ஷ்மி அபியைப் பார்த்து,
"அபிநயா.... நீ இன்னும் மாறவேயில்ல.... அபிநயா ஆயா!" என்று கூற, சட்டென்று திரும்பிப் பார்த்தாள் அபி!
"என்ன கூப்ட்டீங்க? இப்ப என்னன்னு கூப்டீங்க?" என்று அவசரமாகக் கேட்டாள்!
"அபிநயா.... ஆயா..... என்னத் தெரியலயா ஆயா?" என்றாள் லக்ஷ்மி!
அபி அவளைக் கூர்ந்து பார்த்துவிட்டு,
"லக்ஷ்மண்! நீயா? நீயா லக்ஷ்மண்! உனக்கா இந்த நிலை! கடவுளே!" என்று லக்ஷ்மியாக மாறிவிட்டிருந்த தன் பால்ய வயதுத் தோழன் லக்ஷ்மணனின் கையைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினாள்!
"உனக்கு கூட என்ன அடையாளம் தெரியலதானே! நா எப்டி ஆய்ட்டேன் பாத்தியா?" என்று அவள் அழுதாள்!
"வேணாண்டா! நீ லக்ஷ்மணா இருந்தாலும் லக்ஷ்மியா இருந்தாலும் எப்பவும் என் ஃப்ரண்ட் தான்! எப்டிடா என்ன கண்டுபுடிச்ச?"
"உன் ஈமெயில் ஐடிதான் இப்பவும் உன்ன எனக்கு காட்டி குடுத்துச்சு!" என்று சொல்லி சிரித்தாள் லக்ஷ்மி!
"ஹா... ஹா.... ஹா.... ஆமாடா.... மொத மொதல்ல ஈமெயில் ஐடி க்ரியேட் பண்றச்சே என் பேரை நானே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட டைப் பண்ணினத நீ தானே கண்டு பிடிச்சு எனக்கு சொன்ன? அப்பலேர்ந்து நீ மட்டும் என்ன ஆயான்னு கூப்பிடுவ.... ஹா.... ஹா.... ஹா!" வாய் விட்டுச் சிரித்தாள் அபி!
"நீ ஏன் இன்னும் அந்த ஐடிய மாத்தல....."
"அது மத்தவங்க ஐடிலேர்ந்து கொஞ்சம் மாறுதலா இருக்கு! அப்டியே இருக்கட்டும்னு வுட்டுட்டேன்!"
"ம்... அதுதான் என் ஃப்ரண்ட எனக்கு இன்னிக்கு அடையாளம் காட்டியிருக்கு.... ஹா.... ஹா...." என்று சிரித்தாள் லக்ஷ்மி!
"நீ டென்த் முடிச்சி வேற ஊருக்கு போய்ட்டேன்னுதான் நா நெனச்சேன்.... ஆனா... உனக்கு இப்டி ஆய்டுச்சுன்னு நெஜமாவே எனக்கு தெரியாது!" என்றாள் அபி!
"டென்த் முடிச்சு சென்னை வந்து ஸ்கூல்ல ப்ளஸ் ஒன் ஜாயின் பண்ணினப்றம்தான் எனக்கே என் மாற்றம் தெரிஞ்சது!
அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சதும், தங்கச்சியோட எதிர்காலம் பாதிக்கப்படும் அப்டீன்னு சொல்லி அப்பா என்ன வீட்ட விட்டு விரட்டிட்டாரு....
எங்கெல்லாமோ வேல தேடி அலஞ்சேன்.... ம்ச்.... கடைசியில இந்த ஹாஸ்பிடல்ல ஹௌஸ் கீப்பிங் வேல கெடச்சப்றம்தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு... ஆனா... எப்பவும் அழுக்குலயே இருக்கறதுனால நுரையீரல்ல பாதிப்பு ஏற்பட்டுடுச்சு....
இப்ப கூட நா உன்கிட்ட என்ன வெளிப்படுத்திக்க நெனக்கல.... ஆனா.... என் தோழி.... அன்னிக்கு இருந்த மாதிரியே இன்னிக்கு வரைக்கும் அப்டியே அதே அன்போட எல்லாருக்கும் உதவி செய்யற நல்ல மனசோட இருக்கறத பாத்ததும் என் மனசுக்கு ஒரு ஆறுதல்! நீ என்ன வெறுக்க மாட்டன்னு நா நெனச்சேன்.... நா நெனச்ச மாதிரியே நீ இப்பவும் என்ன ஃப்ரண்டாதான் நெனக்கிற... ரொம்ப தேங்க்ஸ் அபிநயா!" என்றாள் லக்ஷ்மி!
"கவலப்படாதடா!"
"உனக்கு கல்யாணம் ஆய்டுச்சா அபி! உன் ஹஸ்பண்ட் என்ன பண்றார்?"
"ஆய்டுச்சுடா! அவர் ஒரு கம்ப்யூடர் ஸ்பேர்ஸ் தயார் பண்ற கம்பெனி வெச்சிருக்கார்!"
"எத்தன பசங்க?"
"ஹே... கல்யாணமாகி ஒரு மாசம்தாண்டா ஆகுது!"
"ஓ.... அப்ப நீ புதுப் பொண்ணுன்னு சொல்லு..."
"ஹா.... ஹா....."
"உன் சிரிப்ப பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அபி! நீயும் உன் ஹஸ்பண்டும் நூறு வருஷம் நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்தறேன்!"
அபி இதற்கும் புன்னகைத்தாள்.
"ஹே... நெஜமாதான் சொல்றேன்! என்ன மாதிரி இருக்கறவங்க வாழ்த்தினா அது அப்டியே பலிக்குமாம்!" என்றாள் லக்ஷ்மி!
"ரொம்ப தேங்க்ஸ்! சரி! நீ எதாவது சாப்ட்டியா? இரு! நா உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்!" என்று சொல்லிவிட்டு அபி அந்த அறையைவிட்டு வெளியேறினாள்!
வெளியே அமர்ந்திருந்த ஹரியை அவள் கவனிக்கவேயில்லை.
இது அனைத்தையும் கேட்ட ஹரிக்கு அபியின் மேல் இருந்த கோபம் அனைத்தும் மாயமாய் மறைந்தே விட்டது! மனதுக்குள் மனைவியை நினைத்து பெருமைப் பட்டபடியே நந்தினி இருக்கும் அறைக்கு சென்றான்.
தொடரும்....
Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - 19
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: எனது சொந்தம் நீ - 19
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.