4.
தன் மொபைலுக்குத் தெரியாத எண்ணிலிருந்து போன் வரவும், நந்தினி குழப்பத்துடனே போனை காதுக்குக் கொடுத்தாள்.
"ஹலோ!"
"மிஸஸ் நந்தினி?"
"ஸ்பீக்கிங்! நீங்க?" குழப்பமாக கேட்டாள்.
"ஐம் பாண்டியன். கல்யாணத் தரகர் உங்க மகனோட டீடெயில்ஸ் எல்லாம் தந்தார். எனக்கு கல்யாண வயசில ஒரு பொண்ணு இருக்கா!"
"ஓ! சரி! நீங்க மத்யானம் ரெண்டு மணிக்கு மேல பண்றீங்களா!? நான் க்ளாஸ்க்கு பாேய்கிட்டு இருக்கேன்!"
"ஓகே மேடம். நான் மத்தியானம் மூணு மணிக்கு பண்றேன். ஸாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்!"
"பரவால்ல ஸார்! உங்க பேர் பாண்டியன்னுதானே சொன்னீங்க!"
"ஆமா மேடம்!"
"ஓகே! ஓகே! நீங்க மத்தியானம் பண்ணுங்க!"
"தேங்க்யூ மேடம்! பை!"
கல்லூரி நேரம் முடிந்ததும் நந்தினியே பாண்டியனுக்கு போன் செய்தாள்.
"மிஸ்டர் பாண்டியன்!"
"மேடம்! நீங்களே பண்ணிட்டீங்களே! நான் உங்கள எப்ப வந்து பாக்கலாம்!"
"சுபஸ்ய சீக்ரம்னு பெரியவங்க சொல்வாங்க. நீங்க பண்ணினா என்ன? நான் பண்ணினா என்ன ஸார்? நம்ம இன்னிக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு மீட் பண்ணலாமா? பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு வரீங்களா?"
"கண்டிப்பா மேடம்! ஈவ்னிங் பாக்கலாம்!"
"தேங்க்யூ!" சொல்லியபடி மாலை நான்கு மணிக்கு கோவிலுக்கு வந்தாள் நந்தினி.
பாண்டியனும் அவர் மனைவி இந்துமதியும் அவளை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து பேசினார்கள். மூவரும் அறிமுக வார்த்தைகள் பேசிவிட்டு சுவாமி தரிசனம் செய்தபின் திருமண விஷயம் பேசலாம் என முடிவெடுத்தனர். அதன்படி மூவரும் தாயாரை வணங்கிவிட்டு வந்து அமர்ந்தனர்.
"சொல்லுங்க ஸார்! என் பையனப்பத்தி நான் சொல்றேன். உங்க பொண்ணப் பத்தி நீங்க சொல்லுங்க! ரெண்டு பேருக்கும் ஒத்து வந்துச்சுன்னா மேற்கொண்டு பேசலாம்." என்றவள் தொடர்ந்தாள்.
"எனக்கு ஒரே பையன். பேரு ஹரிஹரன். பிட்ஸ் பிலானில எம்டெக் முடிச்சான். கோல்ட் மெடலிஸ்ட். மெட்ராஸ் யுனிவர்சிடில எம்பிஏ முடிச்சான். மூழ்கப் போற ஒரு கம்பெனிய விலைக்கு வாங்கி அத தூக்கி நிறுத்தி சக்ஸஸ்ஃபுல்லா நடத்திக்கிட்டு இருக்கான். அவனுக்கு கீழ இப்ப நூறு பேர் வேலை பண்றாங்க. அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அதிக நண்பர்களும் கிடையாது. எங்க வீடு அடையார்ல இருக்கு. அவனுடைய கம்பெனி ஓஎம்ஆர்ல நாவலூர்ல இருக்கு. அது கம்ப்யூடர் ஸ்பேர்ஸ் தயார் பண்ற கம்பெனி.
நானும் என் கணவரும் காலேஜ் ஃப்ரொஃபஸர்ஸ். என் கணவர் மிஸ்டர் சிவசங்கரன் இப்ப எங்க கூட இல்ல. எங்களுக்குள்ள ஏற்பட்ட மனக்கசப்பில ஹரி ப்ளஸ் டூ படிக்கறச்சே எங்கள விட்டுப் பிரிஞ்சுட்டாரு. அவர் எங்கள விட்டுப் போய் பதினஞ்சு வருஷமாச்சு. ஆனா என்னிக்காவது அவர் திரும்பி வருவார்னு நாங்க ரெண்டு பேரும் நம்பிக்கையோட காத்துகிட்டு இருக்கோம்."
"......."
"அவர் எங்களப் பிரிஞ்சதுக்கு என் படிப்புதான் காரணம்னு என் மகன் நெனக்கிறான். அது உண்மையில்ல. அவனுக்குப் புரியல. தனக்கு வரப்போற மனைவி படிச்சவளா இருந்தா தானும் அவளும் பிரிஞ்சுடுவோமோன்னு பயப்படறான். அதனால தனக்கு வரப்போற மனைவி படிக்காதவளா இருக்கணும்னு நெனக்கிறான். டென்த் முடிச்சவ, இல்ல ப்ளஸ்டூ ஃபெயிலானவ போதும்னு நெனக்கிறான். இதுதான் என் மகனைப் பத்தி நான் சொல்ல வந்த விவரங்கள். இப்ப நீங்க சொல்லுங்க."
"மேடம் என் பொண்ணு பேர் அபிநயா. எங்களுக்கு அவ ஒரே பொண்ணு. இவ என் மனைவி இந்துமதி. இவ பிஎஸ்ஸி படிச்சவ. இல்லத்தரசி. நான் எம்ஏ எம்எல் படிச்சவன். மதுரை ஹைக்கோர்ட்ல வக்கீலா ப்ரக்டீஸ் பண்ணிகிட்டு இருக்கேன். நாங்க மதுரைல இருக்கோம்! இப்ப எம்பொண்ணுக்கு சென்னைல வேல கெடச்சிருக்கு! என் மனைவியோட தங்கை வீட்லதான் இனிமே அவ தங்கப்போறா! அதுக்குண்டான ஏற்பாடு பண்ணதான் நாங்க சென்னை வந்தோம்! வந்த இடத்தில என் சகலை, பொண்ணுதான் படிச்சி முடிச்சி வேலைக்கும் வந்தாச்சே! மாப்ள பாக்கலாம்னு ஆரம்பிச்சார்! அதான்! சகலை வீடு திருவான்மியூர்ல இருக்கு. உங்க பிள்ளை போட்டோவக் காட்டி அவரப்பத்தி தரகர் சொன்னதுமே என் பொண்ணுக்கு ரொம்ப பிடிச்சுது. அதனாலதான் பேச வந்தோம். இது அவ போட்டோ!" என்று சொல்லி அபிநயாவின் போட்டோவைக் காட்டினார். நந்தினி அதை வாங்கிப் பார்த்ததுமே அவளுக்கு மிகவும் பிடித்தது.
"பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! படிச்ச களை முகத்தில தெரியுதே! இவளப்பாத்தா ப்ளஸ்டூ ஃபெயில் மாதிரி தெரியலையே?"
இந்துவும் பாண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"இங்கதான் சின்ன சிக்கல் இருக்கு. நீங்க கொஞ்சம் பொறுமையா கேக்கணும்." என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.
"என்ன சிக்கல்?"
பாண்டியன், அபிநயா நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஹரியைப் பார்த்தது முதல் கடற்கரையில் அவர்கள் பேசியதைக் கேட்டதுவரை கூறி பின்னர் தன் வீட்டில் தரகர் கூறிய விவரங்கள் அனைத்தையும் கேட்டதையும் கூறினார்.
"அவ கல்யாணம் பண்ணினா உங்க பையனதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக் கால்ல நிக்கறா மேடம்! அதுனாலதான் நாங்க உங்களப் பாக்க வந்தோம்!"
"இது ரொம்ப நல்ல விஷயம்தானே! உங்க பொண்ணுக்கு என் பையன ரொம்ப பிடிச்சிருக்கு. என் பையனுக்கும் உங்க பொண்ண கண்டிப்பா பிடிக்கும். எவ்ளோ அழகா இருக்கா அபிநயா!"
"அங்கதானே மேடம் சிக்கலே!!"
"என்ன சிக்கல்?"
"அவ படிப்பு!?!?"
"அப்டின்னா உங்க பொண்ணு படிச்சவளா?"
"ஆமாம் மேடம்!"
"ஹப்பாடா! எங்க எனக்கு ஒரு படிக்காத பொண்ணு மருமகளா வந்துடுவாளோன்னு பயந்தேன். நல்லவேளை! எனக்கு வரப்போற மருமக படிச்சவதான்! என்ன? ஒரு பிஏவோ பிஎஸ்ஸியோ பிகாமோ படிச்சிருப்பாளா? விடுங்க! எதுவாயிருந்தாலும் டிஸ்கன்டின்யூ பண்ணிட்டான்னு சொல்லிடலாம்." அவளுடைய முகத்தில் ஒரு வித திருப்தி பரவுவதை கவனித்தார் பாண்டியன்.
"அது வந்து......"
"சொல்லுங்க ஸார்!"
அவர் சொன்னதைக் கேட்ட நந்தினி அதிர்ந்தாள்.
நந்தினிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கடவுளே! இது என்ன சோதனை! கண்மூடி யோசித்தாள்.
அப்போது அவளருகில் வந்து நின்றாள் அபிநயா.
"ஹலோ ஆன்ட்டீ!"
தேன் போன்ற குரல் கேட்டு யோசனை கலைந்தவளாய் கண் திறந்து பார்த்தாள். தன் முன்னே பதுமை போல நிற்கும் அபிநயாவைக் கண்டதும் ஒரு நொடி மலைத்துதான் போனாள். சராசரி உயரத்தை விட கூடுதல் உயரத்துடன் நல்ல சிவந்த நிறத்தில் வட்ட வடிவ முகத்துடன் சற்று அகலமான நெற்றியுடன் நீண்ட கரிய கூந்தலுடன் இருக்கும் அபிநயாவைப் பார்த்ததும் நந்தினிக்கு மிகவும் பிடித்துப் போனது. தேவதை போலிருக்கும் இவள் என் மகனுக்கு மனைவியா?
குழந்தை போலிருக்கும் முகம்! குறும்பு கொப்பளிக்கும் கண்கள்! சளசளவென்று பேசுவாள் போல!
"ஆன்ட்டீ! நா படிச்சவன்னு அவருக்குத் தெரிய வேணாம்! படிக்காதவ மாதிரியே நடந்துக்கறேன்! படிச்சா பிரச்சனை வராது! தீரும்னு அவருக்கு நாம புரிய வெப்போம்!"
புதிதாகப் பார்க்கும் நபரிடம் பேசுகிறோம்; அதுவும் தனக்கு மாமியாராய் வரப்போகிறவரிடம் பேசுகிறோம் என்றெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் படபடவென்று பேசும் அபியை ஒருவித ஆச்சர்யத்தோடு பார்த்தாள் நந்தினி!
இவள நா இன்னும் மருமகளா ஏத்துக்கறேன்னு ஒத்துக்கவே இல்லை! அதுக்குள்ள இவ பாட்டுக்கு ப்ளான் போடறாளே!
ஆனா, இப்படிப்பட்ட ஒருத்தியாலதான் அவன சமாளிக்க முடியும்! என்று நினைத்து தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள்!
இவதான் என் மருமக. இவளத்தவிர வேற யார் எனக்கு மருமகளா வரமுடியும்? என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.
"ஆனா.... இப்டி பொய் சொல்லி.... நாடகம் ஆடித்தான்..... கல்யாணம் செய்யணுமா?" நந்தினி கேட்டாள்!
"ஆன்ட்டீ! பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். திருக்குறளே இருக்கு! இதுவும் நம்ம நன்மைக்காக நம்ம சொல்லப் போற பொய். அதனால தப்பில்ல! ரெண்டாவது நம்ம பொய் சொல்லல... உண்மைய மறைக்கிறோம்! அவ்ளோதான்..." என்றாள் அபி!
"ம்! சரிதான்!" என்று சிரித்தாள் நந்தினி!
"நா கல்யாணம் வரை வேலைக்கு போறேன்! அப்றம் கூட ஒரு மாசம் லீவ் போடுறேன்! போதும்! அதுக்குள்ள அவர்கிட்ட சொல்லி புரிய வெச்சுடலாம்! சரியா!"
"சரி அபி!"
நந்தினியின் மனம் வெகு நாளைக்குப் பிறகு அமைதியடைவது போலிருந்தது!
"இனிமே இவ என் பொண்ணு! நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க சம்மந்தி. நான் யாரைக் காட்டினாலும் அவ கழுத்தில தாலி கட்றேன்னு என் மகன் சொல்லிருக்கான். சிம்பிளா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினா போதும். எனக்கு யாரும் சொந்தமில்ல. நானும் என் மகனும் மட்டும்தான். என் கூட வேலை பாக்ற சில ஃப்ரண்ட்ஸ். என் மகனோட ரெண்டு மூணு ஃப்ரண்ட்ஸ். அவ்ளோதான். கோவில்ல வெச்சு தாலி கட்டிட்டு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிச்சிடலாம். நீங்க உங்க ரிலேஷன்ஸ்காக ரிசெப்ஷன் வெச்சுக்கணும்னா வெச்சுக்கோங்க! ஆனா ரொம்ப பெரிசா பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல. அதுக்கப்றம் உங்க விருப்பம்." என்றாள் நந்தினி.
"சரி சம்மந்தி! நானும் இவளும் டிஸ்கஸ் பண்ணிட்டு நாளைக்கு ஈவ்னிங் கால் பண்றேன்."
நந்தினி மணி பார்த்தாள். மணி ஆறாகியிருந்தது.
"சரி சம்மந்தி! நாங்க வரோம்!" என்று எழுந்தனர்.
"போய்ட்டு வரேன் ஆன்ட்டீ!"
"பத்திரமா போய்ட்டு வா அபிம்மா!!" என்று கூறி கிளம்பினாள்.
நந்தினி மனதுக்குள் நிறைவாய் உணர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தாள். தன் கணவனுடன் சீக்கிரமே தான் சேர்ந்துவிடுவோம் என்ற அசாத்திய நம்பிக்கை என்றுமில்லாத அளவு இன்று அவளுக்கு ஏற்பட்டது.
பாண்டியனும் இந்துவும் அபியும் சந்தோஷமாக கிளம்பினர்.
அனைவரது மனமும் சந்தோஷத்தால் நிறைந்திருந்தது. அபி மனதுக்குள் ஹரியை நினைத்து பல ரகசியக் கனவுகள் கண்டாள். கட்டிலில் படுத்தபடி கற்பனையில் பறக்க ஆரம்பித்தாள்.
தன்னுடைய அறையில் இந்து கணவனிடம் சொன்னாள்.
"எது எப்டியிருந்தாலும் அபியப் பத்தின உண்மை தெரியவரும்போது மாப்ள அபி மேல கோபத்தக் காட்டுவார். நம்மதான் அபிக்கும் அந்தம்மாவுக்கும் முழு சப்போர்ட்டும் தரணும்."
"ஆமா இந்து! நீ சொல்றது சரிதான்."
"அந்தம்மா ரொம்ப நல்ல மாதிரில்ல!அவங்க எதையும் மறைக்க விரும்பல. நம்ம பொண்ணு படிச்சவன்னு தெரிஞ்சதும் எவ்ளோ சந்தோஷப்பட்டாங்க. நம்ம அபியப் பாத்த உடனேயே மனசார மருமகளா ஏத்துகிட்டாங்க! இல்லங்க!"
"ஆமாடீ! ஆனா பொண்ணு பாக்க வரச்சே வரதட்சணை ஏதாச்சும் கேப்பாங்களா?"
"எதும் கேக்க மாட்டாங்கப்பா! அப்டி கேக்கறவங்களா இருந்தா இவ்ளோ ஓப்பனா பேசியிருக்க மாட்டாங்க!"
"எப்டிடீ!? உனக்கு இவ்ளோ புரியுது?" ஆச்சர்யமாய்க் கேட்டார்.
"என்ன என்ன கேணச்சின்னு நெனச்சீங்களா?" நக்கலாகக் கேட்டாள்.
"சே! சே! உன்னப் போய் அப்டியெல்லாம் நெனப்பேனா? நீ என்னோட மதி மந்திரிடீ!" என்று கூறினார்.
“ம்! இப்ப இப்டி சொல்வீங்க! அப்றம் எதாவது ப்ரச்சனை வந்தா, உனக்கு மூளையே இல்லையான்னு என்னத் திட்டுவீங்க. உங்களப்பத்தி எனக்குத் தெரியாதா? இந்த வார்த்தை ஜாலத்தையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க. உங்க க்ளையன்ட்ஸ் கிட்டயும் கோர்ட்லயும் வெச்சுக்கோங்க. ம்க்கும்!” என்று கழுத்தை வெட்டி அவருக்குப் பழிப்புக் காட்டினாள்.
“பாத்துடீ! கழுத்து சுளிக்கிக்கப் போகுது! அப்றம், பொண்ணு கல்யாண போட்டோல சைட் ஃபேஸ்தான் விழும். நீ பண்ணிக்கற மேக்கப்பெல்லாம் வேஸ்ட்டாய்டும்!” சிரித்தபடி அவளை வம்பு செய்தார்.
“ஹ்க்கும்! பத்தீங்களா! நீங்க ரொம்ப மோசம். இனிமே என்கிட்ட பேசாதீங்க!” என்று அவள் செல்லமாக சிணுங்க,
“சரிடீ! சரிடீ! ச்சும்மா விளையாட்டுக்குச் சொன்னா இவ்ளோ சிலுத்துக்கறியே!” என்று கொஞ்சல் வார்த்தைகளைக் கூறி அவளை சமாதானம் செய்தார்.
“சரிப்பா! தூங்குங்க! மணியாய்டுச்சு.” என்று அக்கரையாய் கூறி ஏஸியை ஆன் செய்து விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தாள். இருவரும் மகளின் திருமண வாழ்வு தங்களுடையதைப் போலவே என்றும் பசுமையாய் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டியபடி உறங்கிப் போயினர்.
தொடரும்....