6.
அபியின் புகைப்படத்தை டீப்பாயின் மேல் வைத்துவிட்டு தன்னுடைய அறைக்குப் போனாள் நந்தினி. இந்த போட்டோ ஹரி கண்ல படணுமே! அவனுக்கு இந்தப் பொண்ணப் பிடிக்கணுமே! அவன் பொண்ணு பாக்க வரணுமே கடவுளே! என்று வேண்டியபடி குளித்து உடை மாற்றி வந்தாள்.
வேலை முடிந்து வீடு வந்த ஹரி வீட்டில் அம்மா ஓய்வாக அமர்ந்திருப்பதை ஆச்சர்யமாய்ப் பார்த்தபடி உள்ளே வந்தான். எப்பவும் அவங்க இந்த நேரத்ல லைப்ரரிலதானே உக்காந்திருப்பாங்க. ஆச்சர்யமா இருக்கு! என்று நினைத்துக் கொண்டே மாடிக்குச் சென்றான். அங்குதான் அவனுடைய அறை உள்ளது. மாடிக்குச் சென்று குளித்து உடைமாற்றி வந்தான். அவன் வரும்போது அவன் உணவு தயாராக அவனுடைய அறைக்கே வந்துவிடும். ஆனால் இன்று வரவில்லை.
“முத்து! சாப்பாடு ரெடியா?” தன் வீட்டு வேலைக்காரனை அழைத்தான்.
“அவரு மார்கெட் போய்ருக்காரு தம்பி! நான் எடுத்தாரவா?” என்றாள் பொன்னம்மா! முத்துவின் மனைவி. அவன் வீட்டு சமையல்காரி.
“இல்ல வேணாம் முத்து. நானே வரேன்.” கடுகடுவென்று கூறினான். இவன் இப்படித்தான் கூறுவான் என்று பொன்னம்மாவுக்குத் தெரியும். அவன் இந்த வீட்டில் முத்துவைத் தவிர வேறு யாரிடமும் பேசவே மாட்டான். தன் அம்மாவிடமே இரண்டு வார்த்தைதான் பேசுவான். தன்னிடமா பதில் சொல்லப் போகிறான் என்று நினைத்துக் கொள்வாள் பொன்னம்மா.
அவன் கீழே வந்தான். டீப்பாயின் மேல் தன்னுடைய உணவு தயாராக இருப்பதைப் பார்த்து அதைக் கையில் எடுத்தான். அதன் அருகில் பளபளவென்று ஏதோ பெண்ணின் புகைப்படம் இருப்பதைப் பார்த்தான். அவனுக்கு அது தலைகீழாய் தெரிந்தது. ஏதாவது நடிகையின் படம் என்று நினைத்தவன், பின்னாலேயே நம்ம வீட்ல நடிகையின் படம் எப்டி வரும்? என்று குழம்பி படத்தை கையில் எடுத்து ஒழுங்காய் பார்த்தான். இவ! இவ! என் தேவதையில்ல! இவ படம் எப்டி இங்க? ஒரு வேள இவ நடிகையோ? அதானா அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல பாத்தேன். ஆனா எந்த படத்தில வந்திருக்கா? நம்ம எங்க படமெல்லாம் பாக்கறோம்? அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும். என்று நினைத்தபடி நகரப் போனான். அவனுடைய அம்மா அவனருகில் வந்தாள்.
“இந்த படத்த பாத்தியா? இவள உனக்காக பெண் பாக்காலாமான்னு கேக்கதான் நான் இங்க வெய்ட் பண்ணினேன்!” நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
அப்ப இவ நடிகையில்ல! ஹப்பாடா! மனதில் ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தான்.
“மாடிக்கு வாங்கமா! நான் கொஞ்சம் பேசணும்!” என்று அம்மாவிடம் சொன்னவன், “நீங்க சாப்ட்டீங்களாமா?” என்றான். நந்தினிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தன்னிடமா சாப்ட்டியான்னு கேட்கிறான் என்று நினைத்து வியந்தபடி பதிலளித்தாள்.
“இல்ல ஹரி!”
“முத்து! அம்மாவுக்கும் டிபன் எடுத்துகிட்டு மாடிக்கு வாங்க!” என்று சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தான். உடனேயே முத்து இங்கேயில்லை என்பது நினைவுக்கு வர, “நீங்க இத எடுத்துகிட்டு மாடிக்கு போங்கமா! நான் உங்களுக்கு கொண்டு வரேன்!” என்று அம்மாவிடம் கூறிவிட்டு தானே சமையலறைக்குச் சென்று தன் அன்னைக்கும் டிபனை பரிமாறிக்கொண்டு தண்ணீர் பாட்டிலை கையில் இடுக்கிக் கொண்டு மாடியேறினான்.
அவனுடைய அறையில் இருந்த சோபாவில் அம்மாவை அமரச் சொன்னான். டீப்பாயை அருகில் இழுத்து வைத்து உணவுத் தட்டை அவள் முன்னால் வைத்தான்.
“சாப்பிடுங்கமா!” என்றான்.
அவன் தன் தட்டில் இட்லிகளுடன் தொட்டுக் கொள்ள மீன் குழம்பு ஊற்றி மிளகாய்ப்பொடியையும் போட்டு எண்ணைவிட்டு குழைத்து எடுத்து வந்திருப்பது கண்டு அவளுக்கு கண்கள் பனித்தது. எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அவன் மறக்கவில்லை, என்று நினைத்துக் கொண்டாள். மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.
தன்னுடைய தட்டில் இருந்த முருங்கைக்காய் சாம்பாரைத் தொட்டு இட்லியை விண்டு வாயில் போட்டுக் கொண்டே பேசத் தொடங்கினான்.
“அம்மா! போன வாரமோ இல்ல அதுக்கு முந்தின வாரமோ சரியா ஞாபகம் இல்ல! வடபழனில இருக்கற ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஒரு பிஸினஸ் மீட் ஒண்ணு. அங்க லஞ்ச் முடிச்சுட்டு கிளம்பறப்ப இந்தப் பொண்ண பாத்தேம்மா. ரொம்ப அழகா இருக்காளேன்னு நெனச்சுகிட்டேன்.”
“அப்டியா?” அப்ப இவனுக்கும் அபியப் பிடிச்சிப்போச்சு. அப்டி வாடா வழிக்கு! மனதுக்குள் சந்தோஷப்பட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
“ம்! ஆமாம்மா! தேவதை மாதிரி இருக்கான்னு கூட நெனச்சேன்மா!”
“ஹரீ!” ஆச்சர்யம் காட்டினாள்.
“நானும் மனுஷன்தானேம்மா!”
“ஹூம்! அது சரி! சொல்லு.” சிரித்தாள்.
“ஆனா படிச்சவளாதான் இருப்பான்னு நெனச்சேன்! நீங்க என்னடான்னா இவள எனக்கு பெண் பாக்கலாமான்னு கேக்கறீங்க! ஆச்சர்யமா இருக்கு. அப்ப இவ படிக்காதவளா?”
கரெக்ட்டா கேக்கறானே! என்று மனதில் கடுத்தபடியே,
“இல்லடா. ப்ளஸ்டூ ஃபெயில்!!”
“ஓ! ஆனா பாத்தா படிச்சவ மாதிரி இருக்கா!?”
“பாத்தா படிச்சவ மாதிரி இருக்காளேன்னு நா கூட நெனச்சேன். ஆனா இவ படிக்காதவதான்... கொஞ்சம் மேக்கப் பண்றதுல ஆச போல.... அதான் படிப்பில கோட்டை விட்டுட்டா!”
“ஓ! ஓகேம்மா! எனக்கு ஓகே! எனக்கு இவளப் பிடிச்சிருக்கு. நீங்க ப்ரொசீட் பண்ணலாம்மா!” உடனடியாக ஒப்புதல் தந்துவிட்டான்.
“டேய்! அவ பேர் என்ன? வீடு எங்க? கூடப் பொறந்தவங்க எத்தனை பேர்? பேரன்ட்ஸ் என்ன பண்றாங்க? எதுவும் கேக்க மாட்டியா ஹரி?”
“ஓ! அதெல்லாம் தோணவேயில்லமா! சரி சொல்லுங்கமா!”
“அவ பேர் அபிநயா! ஒரே பொண்ணுதான். அவங்கம்மா பேர் இந்துமதி. ஹௌஸ் வைஃப்! அவங்கப்பா பேர் பாண்டியன். வக்கீல். சென்னை ஹைக் கோர்ட்ல ப்ராக்டீஸ் பண்றார்.”
“அபிநயா! பேர் ரொம்ப அழகா இருக்கு.” வாய்விட்டு அவள் பெயரை இரண்டு மூன்று முறை கூறிக்கொண்டான். இதைப் பார்த்த நந்தினி தன் சிரிப்பை மிகவும் சிரமப்பட்டு மறைத்துக் கொண்டாள்.
“வர வெள்ளிக்கிழமை பெண் பாக்கறோம். அப்டியே நிச்சயம் பண்ணிக்கலாம். ஓகேவா!”
“ஓகேம்மா!”
“அப்றம் மேரேஜ் ரொம்ப சிம்பிளா போதும்னு சொல்லிட்டேன். ரிஜிஸ்டர் மேரேஜ் போதும்ல?”
“போதும்! ஆனா பொண்ணுக்கு என்ன பிடிக்க வேண்டாமா? நீங்க பாட்டுக்கு கல்யாண ஏற்பாடு பண்ண கிளம்பிட்டீங்க?”
“பொண்ணுக்கும் உன்ன பிடிச்சுப் போச்சு. அவ போட்டோவ உனக்கு காட்டின மாதிரி உன் போட்டோவ அவளுக்கு அவங்கப்பா காட்டினாராம். அவளும் உன்ன மாதிரியே ஹோட்டல்ல பாத்தேனே! அப்டீன்னு சொன்னாளாம். இவர எனக்குப் பிடிச்சிருக்குப்பா! அப்டீன்னு சொன்னாளாம். எங்க தான் ஒரு படிக்காதண்ணுன்னு தெரிஞ்சா நீ ஒத்துக்க மாட்டியோன்னு கேட்டாங்க. உன் கண்டிஷன சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ஹரி!” என்று வாய்நிறைய புளுகினாள். மகன் கண்கள் கனவுலகுக்கு பறப்பதை கண்டதும் சிரித்தபடி, “அப்ப உனக்கு ஓகேதானே? வெள்ளிக்கிழமை பெண் பாக்க போலாம்தானே?” என்றாள்.
“போலாம்மா!” புன்முறுவலுடன் சொன்னான்.
“ரிஜிஸ்டர் மேரேஜும் ஓகேதானே?”
“ஓகேம்மா!”
“என் ஃப்ரண்ட் ஆனந்தி ஆன்ட்டியையும், நம்ம பொன்னம்மா, முத்து ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு நம்ம சார்பா கூப்பிடுவேன். உன் ஃப்ரண்ட்ஸ் எத்தனை பேர் வருவாங்க ஹரி?”
“உங்களுக்கு தெரியாதாம்மா? டேவிட்டும் ரகுவும் மட்டும்தான். டேவிட் கல்யாணம் ஆகி மும்பைல செட்டிலாய்ட்டான். ரகு ட்ரெய்னிங்க்காக யூஎஸ் போய்ருக்கான். ரெண்டு பேரும் வர மாட்டாங்கமா. இப்போதைக்கு என் ஃப்ரண்ட் நீங்கதான்.” என்று சொல்லி சிரித்தான்.
நந்தினிக்கு தொண்டையை அடைத்தது. எவ்வளவு வருடங்கள் கழித்து இவன் வாயிலிருந்து இந்த வார்த்தை வருகிறது? அவர் இருக்கும்போது நீங்களும் அப்பாவும்தான் என்னோட ஃப்ரண்ட்ஸ் என்று அடிக்கடி கூறுவான். அவர் தங்களை விட்டுப் பிரிந்து சென்ற பின் பேசுவதையே நிறுத்திக் கொண்டவன் இப்போதுதான் மீண்டும் தன்னை ஃப்ரண்ட் என்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
“ஆனாலும் நீ அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுவல்ல?”
“பின்ன? பண்ணலன்னா கிளம்பி வந்து அடிச்சுட்டுப் போவானுங்க! அவங்க ரெண்டு பேராவது பரவால்ல! டேவிட்டோட வைஃப் ரூபி, புருஷனோட ஃப்ரண்டுன்னு கூட பாக்க மாட்டா! அவன அடிக்கற மாதிரி என்னையும் பூரிக்கட்டையாலயே அடிப்பா!” என்று சொல்லி அதற்கும் சிரித்தான்.
இப்போது நந்தினியும் சேர்ந்து சிரித்தாள். எவ்வளவு வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டபடியே பேசி சிரிக்கிறோம் என்று இருவருமே நினைத்துக் கொண்டனர்.
“சரிடா! அபியோட அப்பா நாளைக்கு ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல சொல்லி நோட்டீஸ் போர்ட்ல போட ஏற்பாடு பண்ணிடுவார். ஒரு மாசத்துக்குள்ள உன் கல்யாணம் நடந்துடும். சிம்பிளா அவங்க ரிலேஷன்ஸ்காக ஒரு ரிசப்ஷன். அவ்ளோதான்!”
“யா! ஓகேம்மா! தேங்க்யூ!” என்றான்.
இருவரும் உண்டு முடித்தனர். நந்தினி மனநிறைவுடன் தன்னுடைய அறைக்குப் போனாள். நந்தினியின் காலி தட்டையும் தன்னுடைய தட்டுடன் சேர்த்து எடுத்துப்போய் சமையலறையில் தேய்க்கப் போட்டவனை வியப்பாய் பார்த்தாள் பொன்னம்மா!
முத்து வந்து எடுக்கற வரை அவரு ரூம்புலயே காஞ்சுகினு கிடக்கும்! இவுரா தான் சாப்ட்ட தட்டையும் அம்மா தட்டையும் எடுத்தாந்து தேக்கப் போடறாரு? என்று உள்ளூற நினைத்தபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அம்மாவுக்கு குட்நைட் சொல்லிவிட்டு வந்தவன், “அம்மா! இத நான் வெச்சுக்கவா?” என்று அபியின் போட்டோவைக் காட்டிக் கேட்டான்.
நந்தினி ஒரு புன்முறுவலுடன் மகன் கன்னத்தில் தட்டினாள்.
“கொஞ்ச நாள் வெய்ட் பண்ணு! கட்டியே வெக்கறேன்!” என்றாள்.
மகன் சிரித்தான்.
“போட்டோவதானேம்மா கேட்டேன்? அவளக் கேக்கலியே!” என்றான் நக்கலாக.
“கேட்டா நானே ஒதப்பேன்.”
“அது சரி!”
“நீயே வெச்சுக்கோ!” என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள்.
தன்னுடைய அறைக்கு வந்தவன் அபியின் படத்தைப் பார்த்து,
“என் தேவதையே! நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன். எனக்கும் அம்மாவுக்கும் சந்தோஷமா இருக்கும்னு நெனச்சேன். நெனச்ச மாதிரியே எங்க ரெண்டு பேரையும் நீ சந்தோஷப்படுத்திட்டியே! ரொம்ப நாள் கழிச்சு நானும் அம்மாவும் ஒண்ணா உக்காந்து சாப்டோம். ஒண்ணா சிரிச்சோம்! ரொம்ப தேங்க்ஸ் அபி! உன்ன ஒரு நாளும் பிரியவே மாட்டேன். நீ என்ன பிரியணும்னு நெனக்கவும் விடவே மாட்டேன்! புரியுதா!” என்று மானசீகமாக பேசிக் கொண்டான்.
அபியுடன் கனவுலகில் சஞ்சரித்தபடியே உறங்கிப் போனான்.
தொடரும்.....
Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: எனது சொந்தம் நீ - 6
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.