• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 12

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
64
230
53
Chennai
குறுநகை போதுமடி! 12

ஞ்சள், ஆரஞ்சு, நெருப்பு, பிங்க், இடையில் சிறிதே நீலம் என மேல்வானம் முழுதும் சிதறி இருந்த நிறங்களினூடே தெரிந்த அந்தி நேரச் சூரியனின் கைபற்றி மலையின் மறுபக்கம் வரை சென்று அனுப்பி வைத்த, மிக மெல்லிய சல்லாத்துணி போன்ற மார்கழிப் பனிப்புகை மாலையை இரவாக மாற்றும் பணியைச் செய்தது.

அந்தப் பெரிய கால்பந்து மைதானத்தில் சிறுசிறு குழுக்களாகப் பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களின் ஆரவாரத்தை சற்று நேரம் வேடிக்கை பார்த்த பின், தனக்கெனக் கேட்டு வாங்கிய இடத்தை நோக்கி நடந்த கபிலன் தன் ஆட்டத்தைத் தொடங்கினான்.

முதல் இரண்டு முறை பந்தை உதைத்த ‘ரூம்ப்ட்…’ என்ற ஒலியும் அது மேல் எழும்பிய உயரமும் கோல் போஸ்ட்டை நோக்கிச் சீறிப் பாய்ந்த வேகமும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, தன்னை வேடிக்கை பார்ததவர்களைப் பற்றிய பிரக்ஞை சிறிதுமின்றி விளையாடினான்.

நேரம் செல்லச் செல்ல, வெகு சிலரைத் தவிர, மைதானமே காலியான பின்பும் விளையாடினான். இது போல் அவன் விளையாடுவது இன்றோடு மூன்றாவது நாள்.

முன்னாள் கால்பந்தாட்ட வீரர் கபிலன் சாரநாதன் விளையாடுவதை வியந்து ரசிப்பதும், ஆட்டோகிராஃப் பெறுவதும், செல்ஃபி எடுப்பதும் நடுநடுவே நடந்தாலும், அவனது பயிற்சியில் யாரும் குறுக்கிடவில்லை.

அந்த ஃபுட்பால் க்ளப், இரவு நேரப் போட்டிகளுக்கான பயிற்சிக் களமாக இருந்ததால் இருபத்து நாலுமணி நேரமும் திறந்திருந்த மைதானத்தில் கபிலனின் உடல் சலிக்கும்வரை உதைபட்டது அந்தப் பந்து.

நேரம் இரவு பத்தரை மணி. கபிலனையும் இரண்டு செக்யூரிடிகளையும் தவிர, மொத்த மைதானமும் காலியாகி இருக்க, ‘ருட்ச்சக்… ச்ச்சிர்க்…க்கெர்க்க…’ என கோல் போஸ்ட்டில் மோதும் ஒற்றைக் கால்பந்தின் ஓசை மட்டும் தாளக் கட்டைப் போல்
சீரான இடைவெளியில் இசைத்தது.

இன்னார் மீதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, அல்லது சொல்ல விரும்பாத அவனது ஆதங்கம், ஆத்திரம், மனத்தாங்கல், தன் மீதேயான கழிவிரக்கம், சுயபச்சாதாபம் என எல்லாம் ஒன்று சேர்ந்து முன்பை விடப் பலமடங்கு கனத்த அழுத்தங்கள் அனைத்தையும் கபிலன் விட்ட ஒவ்வொரு உதையிலும் உணர்ந்தது அந்தக் கால்பந்து.

‘இதுவும் நானும் ஒன்னுதான்’ என நினைத்தவன் உதைத்த உதைக்கு, அந்தப் பந்திற்கு மட்டும் வாய் இருந்தால், அது அழும் சத்தம் அர்ஜென்ட்டினாவிற்கே கேட்டிருக்கும்.

பந்தோடு சேர்ந்து நினைவுகளும் மேலெழுந்து சுழன்றது என்ற உவமானம் கூட சொல்ல முடியாதபடி, அவைதான் அடங்கவே இல்லையே?

அதுநாள் வரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துவதும், அவ்வப்போது பெண்ணின் குடும்பம், தகுதி பற்றிய விவரங்களைச் சொல்வதுமாக இருந்த அப்பா சாரநாதன், திடீரெனத் தனக்கும் குந்தவைக்கும் பண்ட மாற்று போல் சம்பந்தம் பேசியதும்…

அந்த சம்பந்தத்தில் தந்தை மட்டுமின்றி செண்பகா ஆன்ட்டீ, காவேரி அத்தை என எல்லோரும் ஏதோ, கிடைக்க முடியாத செல்வம் கை கூடியதைப் போன்ற மகிழ்ந்ததும்…

அதையெல்லாம் விட, அந்த மாப்பிள்ளைப் பையனை நேரில் பார்த்ததில் பூரித்து விகசித்த நுங்கம்மாவின் முகமும்…

அவர்களிடம் பொங்கிய அத்தனை சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் உடனடியாக நீரூற்றி அணைக்க விரும்பாததோடு, அதில் ஒட்ட முடியாத விலகல் கபிலனைப் பேச்சற்றவனாக்கியது.

இந்தப் பேச்சே தினமும் சுற்றிச் சுற்றி வர, அதைத் தவிர்த்தால் புரிந்துகொள்வார்கள், குறைந்தபட்சம் தன் அப்பாவாவது புரிந்து கொள்வார் என்ற எண்ணத்தில் வீட்டுப் பக்கம் வருவதையே கபிலன் வெகுவாகக் குறைத்துக் கொண்டான்.

இதில் போ என்றபோது போகாது, இவனிடமும் பேசாது மௌனம் காத்த சியாமளா, ‘போகிறேன்’ என்ற ஒற்றை வார்த்தையுடன் புறப்பட்டுச் சென்றது ஏன் என மறுநாளே புரிந்தது.

அந்தப் பையனின்/ பெண்ணின் தந்தை கோவையில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அவர்கள் ஏற்கனவே குந்தவையைப் பார்த்து விட்டாலும், கபிலனோடு கோவை சென்று, மருதமலைக் கோவிலில் இண்டு ஜோடிகளும் சந்திக்கவும், உறவை உறுதி செய்யவும் தீர்மானித்து இருந்தனர்.

காதில் விழுந்ததும், குந்தவையே நேரடியாகப் பகிர்ந்து கொண்டதும், சியாமளாவை அங்கிருந்து செலுத்தியிருப்பது புரிய ‘அவளும் என்னை நம்பலை’ என உடனடியாகக் கோபப் பட்டவனை அவனாலேயே மன்னிக்க மூடியவில்லை.

‘அவளுக்கு உன்மேல நம்பிக்கை வர மாதிரி ஏதாவது செஞ்சிருக்கியா, பேசி இருக்கியா?’

‘போ போன்ன… போய்ட்டா’

அன்று மதியத்துக்கு மேல் காஸ்மெடிக் ஃபேக்டரிக்குச் சென்ற கபிலன், வழக்கம் போல் மாலை நாலரை மணிக்கே இயந்திரங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டு, வேலை நேரம் முடிந்து பணியாள்கள் அனைவரும் சென்றிருக்க, இருட்டி வெகுநேரம் ஆன பின்பும் சியாமளாவின் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அலைபேசி ஒலிக்க… அப்பா!

“அப்பு, எங்கடா இருக்க?”

“இங்கதாம்ப்பா, காஸ்மெடிக் ஃபேக்டரில”

“சரி, வீட்டுக்கு வா”

“...”

“அப்பு…”

“ஹான்… வரேம்ப்பா”

“இங்கயே சாப்பிடலாம். சட்டுபுட்டுனு வா”

உள்ளே நுழைந்தவனை ஆரத்தி எடுக்காத குறையாக வரவேற்ற காவேரி அத்தை, இதற்குமுன், தன் வரவை இத்தனை ஆவலாக எதிர்பார்த்ததாகக் கபிலனுக்கு நினைவில்லை.

சாரநாதன் “அப்பு, நாம எல்லாரும் வர்ற வியாழக்கிழமை காலைல கிளம்பி கோயமுத்தூர் போயிடலாம். வெள்ளிக்கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு மருதமலை கோவில்ல வெச்சு பொண்ணு பார்த்துட்டு, மேல பேசிக்கலாம். ஹாஸ்பிடல், ஃபேக்டரில எல்லாம் கொஞ்சம் முன்கூட்டியே வெளிய போறேன்னு சொல்லி வை. வியாழன் அன்னிக்கு இலவச மருத்துவம் வேற”

மளமளவெனத் தனக்கும் சேர்த்துத் திட்டமிட்ட தந்தையை, பேத்தி, பேரனின் திருமணம் இப்போதே முடிவானது போல் மகிழ்ந்த அப்பத்தாவை, குந்தவைக்கு திருஷ்டி கழித்த காவேரி அத்தையை, தாயையும் மகளையும் பார்த்துப் பூரித்து நின்ற செண்பாவை, வெட்கப் பூச்சுடன் நின்ற குந்தவையைக் கண்டவனுக்குத் தன் தவறு புரிந்தது.

மௌனம் சர்வார்த்த சாதகம்தான்…. யாருக்கு? அடுத்தவரது மௌனத்தை தனக்குடச் சாதகமாக்கிக் கொள்பவருக்கு. மகன் லேசில் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டான் என்பது புரிந்த சாரநாதன், அவனை மாட்ட வைக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட விரும்பவில்லை.

‘கிட்ட வந்தா பார்த்துக்கலாம்னு நான் அமைதியா இருந்ததை, இவங்க சம்மதம்னு நினைச்சுக்கிட்டு மேல மேல ப்ளான் போட்டுக்கிட்டே போறாங்களே… இந்த நுங்கு வேற ஒரே குஷில இருக்கா’

‘சியாமளா!’

‘அப்ப அவளும் எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்னு நினைச்சுதான் போய்ட்டாளோ?’

‘முட்டாள், மட்டி, மடையா, படிச்சவனாடா நீ? போய் உன் டிகிரியைக் கிழிச்சுப்போட்றா, வாழைமட்ட’

மனதில் உணர்வுகளும் கேள்விகளும் சியாமளாவைப் பின்தள்ளி வரிசை கட்டி வந்தன.

நீலவேணி “என்ன ராசா, யோசிக்கிற, பொண்ணு நல்ல அழகாவே இருக்கு. சாரநாதா, அப்புக்கு அந்தப் பொண்ணோட போட்டாவை காட்டுப்பா”

இதற்கு மேல் அமைதி காப்பது சரி வராது என்பதால், “இருக்கட்டும் அப்பத்தா” என்றவன்,

“அப்பா, நுங்குக்கு மட்டும் சம்பந்தம் பேசுப்பா. எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்” என்ற ஒற்றை வாக்கியத்தில் பன்டோரா’ஸ் பாக்ஸைத் திறந்து, விபரீதத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைத்திருந்தான்.

நினைவுகளின் அழுத்தம் கூடக் கூட பந்தை உதைக்கும் வேகம் அதிகரித்து, ‘ட்ச்சக்.. ச்ர்க்க்.. என்ற ஒலி, குறைந்த கால இடைவெளியில் ஒலித்தது.

இடையில் சின்னச் சின்ன ஓய்வுகளைத் தவிர, மாலை ஆறுமணி முதல் ஏறத்தாழ நான்கரை - ஐந்து மணி நேரமாக விளையாடிய கபிலன், பந்தை உதைத்த அதே வேகத்தில், ஓடிய வாக்கிலேயே குதித்தபடி, ஒரு சுற்று சுற்றித் திரும்ப, மதியம் நீர் வார்த்திருந்ததில் இன்னும் ஈரம் காயாதிருந்த புற்கள் சறுக்கியதில் கால் மடங்கிக் கீழே விழுந்தான்.

காவலர்கள் இருவரும் கையில் தேநீருடன் மொபைலில் எதையோ பார்த்துச் சிரித்திருக்க, சிறிது நேரம் சென்றே அந்த அமைதியை உணர்ந்தனர். எட்டிப் பார்க்க, நல்ல வேளையாக விளக்கு வெளிச்சம் வெள்ளமாக இருந்ததில், கபிலன் எழுவதற்கு சிரமப்படுவது தெரிந்து, ஓடினர்.

இவர்கள் நெருங்கவும், வியர்வை, சோர்வு, வலி, தாகம் எனத் துடித்தவன், மெல்ல மயக்கத்தில் ஆழ, பதட்டத்துடன் அந்த ஃபுட்பால் க்ளப்பின் மேனேஜரை அழைத்தனர்.

“இவிட ஓராள் மயங்கிப்போய் ஸாரே”

*******************

“இன்னொரு அடை போட்டுக்கோடீ ஷாம்ளா, க்ரிஸ்ப்பா இருக்கு” என்று ஆசை காட்டினார் சுனந்தா.

ஏழரை மணிக்கெல்லாம் இரவு உணவு முடிந்து, சமையலறையைத் துடைத்தாகி விடுகிறது. ஒன்பது ஒன்பதரை மணிக்குப் பசும்பால். டிஃபனைப் பொறுத்து பசித்தால், இருக்கவே இருக்கிறது ஏதேனும் பழம்.

“போறும்மா” என்றபடி எழுந்து புழக்கடைக்குச் சென்று சாப்பிட்ட தட்டை அலம்பியவள், அங்கேயே நின்றாள்.

இயற்கை மாறாத, அதிகப் பரபரப்பில்லாத கிராமத்துச் சூழலும், கறந்த பால், தோட்டத்துக் காய்கறி, நேரந் தவறாத இரண்டு வேளை உணவு, முழுமையான உறக்கம் என சியாமளாவின் பெற்றோர் ஆரோக்கியமான வாழ்வு முறைக்குத் திரும்பி இருந்தது அவர்களிடம் பிரதிபலித்தது.

அங்கிருந்து பார்க்க, அப்பா, அம்மா இருவரும் டீவி கூட போடாது ஊஞ்சலில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

‘இன்னிக்கு என்ன பஞ்சாயத்தோ?’

சிறுமலையில் இருந்து வந்த முதல் இரண்டு நாள்களுக்குப் பெற்றோரின் கேள்விகளை ‘சும்மாதான், உங்களைப் பார்க்கணும்னு தோணித்து, வந்துட்டேன். ஏன், நான் வரக்கூடாதா?’ எனத் தடுத்து ஆடினாள்தான். ஆயின், எத்தனை நாள்?

சியாமளாவிற்கு கபிலனின் மீதான நாட்டம் உள்பட, பெற்றோரிடம் எதையும் மறைத்தோ, பொய் பேசியோ பழக்கம் இல்லை. அந்த நம்பிக்கை இருந்ததால்தான், ‘கபிலனிடமே வேலை செய்யப் போகிறேன்’ என்றபோது, வேண்டாமென்ற சுனந்தா ‘தேவையில்லாத ரிஸ்க் என்னத்துக்கு?’ எனத் தடுத்தும் தந்தை நாராயணன் ஆக்ஷேபிக்கவில்லை.

அதேபோல், கபிலன் விஷயம் நீங்கலாக, நாராயணனும் சுனந்தாவும் பிள்ளைகளின் அபிப்பிராயத்தைக் கேட்டனர், மதித்தனர், அவர்களிடம் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கபிலன் வேறு இனம் என்பதைத் தவிர, அம்மா சுனந்தாவிற்கே கபிலனை ரொம்பப் பிடிக்கும் என்பதை சியாமளா அறிவாள்.

‘உன்னை மாதிரி வாயடிக்காம எத்தனை டிஸிப்ளின்டா அமைதியா இருக்கான்னு பாரு. தங்கமான பையன்’ எனப் பலமுறை சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

திரும்பிச் செல்லும் அவசரமோ, சென்ற முறை வந்தது போல் அலுவல் சம்பந்தமான அழைப்புகளோ இன்றி, நிதானமாக, வழக்கத்தை விட மௌனமாக இருந்த சியாமளாவை பெற்றோர் இனங்கண்டு கொண்டனர்.

“கம் ஆன் ஷாம்ளா, வாட் ஈஸ் ஈட்டிங் யூ?” என்ற தந்தையிடம், கபிலனின் பெற்றோர், அவர்களது மறுமணம், அவன் தனியே வசிப்பது தொடங்கி அவர்கள் தனியே தங்கியது, ஏன், கிரிதரன் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதைக் கூடச் சொன்ன சியாமளா அத்தோடு நிறுத்திக்கொண்டாள். பின்னே?

அண்ணனுக்கும் தங்கைக்கும் சம்பந்தம் வந்திருப்பதை சொன்ன மறுநிமிடமே அம்மா சுனந்தா ‘நல்லதா போச்சு. விட்டது தண்டான்னு நாங்க பாக்கற பையனைக் கல்யாணம் பண்ணின்டு உருப்படற வழியைப் பாரு’ என்று ஆரம்பித்து விட மாட்டாளா?

சியாமளா நினைத்தபடியே மகளின் வாயைப் பிடுங்கி ஓய்ந்த சுனந்தா, கபிலனை விடுத்துக் கல்யாணப் பேச்சைத் தொடங்கினார்.

வழக்கமாக விளையாட்டாக, சலிப்பாக மறுப்பவள், இப்போது இறைஞ்சலாக “ப்ளீஸ் மா, விடேன்” என்றது நாராயணனை உறுத்தியது.

மனைவியிடம் “கிவ் ஹர் சம் டைம்” என்றவர், ஒருநாள் இரவு மகளை அருகே அமர்த்திக்கொண்டு இதமாக விசாரித்தார்.

சியாமளாவிற்கு கபிலன் மதுரையில் ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தது தெரியாதாகையால், மதுரைக்கு சென்று வந்த பின் அவன் பேசியதை,
‘நான் உனக்கு வேணாம் போயிடு’ என்றதைச் சொல்கையில் குரல் அழுந்திக் கலங்க, நாராயணன் “இட்ஸ் ஓகே ஷாம்ளா, ரிலாக்ஸ்” என மகளின் தோளில் ஆறுதலாகத் தட்டினார்.

ஆனால், சுனந்தாவிற்கு, மகள் அவனுக்காக அத்தனை இறங்கிப்போயும் அவன் மறுத்தது அலட்சியமாகவும் நிராகரிப்பாகவும் மரியாதைங் குறைவாகவும் பட்டது.

“அம்மைக்கு ரெண்டு கல்யாணம், அச்சனுக்கு ரெண்டு கல்யாணம், அதுல கூடப் பொறந்தவா வேற ரெண்டு. இந்த லட்சணத்துல அவன் வேண்டாம்னுட்டான்னு இவ என்னமோ உருகிக் கரையறா. இதான் சாக்குன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லி, அவ மனசை மாத்தறதை விட்டுட்டு நீங்க என்னடான்னா அவளுக்கு விசிறி விட்டு மருந்து போடறேள். எப்படியோ போங்கோ”

“சுனந்தா… கொஞ்சம் பேசாமதான் இரேன்”

“நான் என்னத்துக்கு பேசாம இருக்கணம். அந்தப் புள்ளையே இது சரிப்பட்டு வராது, பெத்தவா சொல்றதைக் கேளுன்னு சொல்லிட்டான். இவளும் புறப்பட்டு வந்துட்டா. இன்னும் என்ன?”

“சுனந்தா…”

“நாமளும் எத்தனைதான்னா பொறுக்கறது? விளையாட்டுப்போல இவ அந்த ஊருக்குப் போயே வருஷம் ஒண்ணாகப் போறது. இவ அங்க போய் இலவு காத்துண்டு இருக்கா. பொண்ணு எங்க இருக்கான்னு கேக்கறவாளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியாம நாம மழுப்பறோம்”

“...”

“நீங்களே சொல்லுங்கோ, எத்தனை அயனான வரனெல்லாம் வந்தும் கையக் கட்டிண்டு இருக்கோம்?”

“...”

“நாங்களும்தான் இத்தனை வருஷமா கல்யாணம் பண்ணிக்கோன்னு கேக்கறோம், எங்களையும் நீ கொஞ்சம் யோசிக்கலாம் இல்லையாடீ?”

“...”

“இந்தக் காலத்துல கல்யாணம் ஆன பொண்களே அல்ப காரணங்களுக்காக சண்டை போட்டு பிச்சுண்டு போறா. இப்டி அவன் நீ வேண்டாம், போயிடுன்ன அப்புறமும் உனக்குக் கொஞ்சம் கூட ரோஷம் வரலையாடீ ஷாமளி? “

முகம் சிவந்து, இறுகி நின்ற சியாமளாவைப் பார்த்த நாராயணன், மீற முடியாத அழுத்தமான குரலில் “சுனந்தா…” என அதட்டினார்.

“உங்களால என்னைத்தான் சொல்ல முடியும். என் குழந்தை கிட்ட இப்படியெல்லாம் பேசணும்னு எனக்கென்ன ஆசையா இல்ல வேண்டுதலா?” என்ற முனகலுடன் அவருமே கண்களைத் துடைத்துக் கொண்டார்.

சியாமளா “கபிலன் எனக்கு அவர் வேண்டாம்னாரே தவிர, அவருக்கு நான் வேண்டாம்னு சொல்லலைம்மா” என்றதை பெற்றோர் இருவருமே ரசிக்கவில்லை.

நாராயணன் “you are stooping too much ஷாம்ளா”

(நீ மிகவும் இறங்கிப் போகிறாய்)

சுனந்தா “ஆனா ஒன்னு சொல்லணும். டைவோர்ஸ் வாங்கிண்டு இன்னோரு கல்யாணம் பண்ணிண்டு, இவனை ஆளுக்கொரு பக்கம் இழுக்கற அம்மாவையும் அப்பாவையும் திருப்திப் படுத்தணும்னு நினைக்கறான் பாரு, அவன் தங்கமான பையன்கறதுல ரெண்டாவது பேச்சுக்கே இடமில்லை”

சட்டென வெளிச்சம் கிடைத்தது போல் சியாமளா “அதேதாம்மா. எல்லாரையும் சாட்டிஸ்ஃபை பண்ணனும், ரெண்டு பக்கத்தையும் பேலன்ஸ் செய்யணும்னு நினைக்கறார், அதுல அவரே காயப் பட்டுடறாரோன்னு தோண்றது”

“Orthodoxy!” என்றார் நாராயணன்.

“ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலின்னா மடி, ஆச்சாரமா இருக்கறது இல்லையோ?” - சுனந்தா.

“அதுவும்தான். ஆனா, அது மாத்ரம் இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கு, மதத்துக்கு, இனத்துக்கு, ஏன், தனிப்பட்ட குடும்பங்களுக்குமே, அந்தந்த சமூகத்தால கட்டமைக்கப்பட்ட ஒரு மரபுவழி உண்டு. அது கால ஓட்டத்துல நிறைய மாற்றம் அடைஞ்சாலும், சில அடிப்படை விதிகள் மாறாது”

சியாமளா “கபிலனை பழமைவாதின்னு சொல்றேளாப்பா?”

“ஓரளவுக்கு. பழமைவாதியா இருக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கான் டா. அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் தனிக் குடும்பம், அந்தக் குடும்பங்களோட வெவ்வேற பழக்க வழக்கங்கள்னு வளர்ந்திருக்கான். இதுல அவா ரெண்டு பேரும் கபிலனை எவ்வளவு தூரம் தங்களோட சேர்த்துண்டான்னு நமக்குத் தெரியாது”

சுனந்தா எதையோ சொல்ல வர, கையமர்த்திய நாராயணன்,

“முழுசா கேளு. கபிலனுக்கு அந்த சடங்கு, சம்பிரதாயமெல்லாம் தெரியுமோ, தெரியாதோ, ஆனா, அவன் தன்னோட பேரன்ட்ஸ் ரெண்டு பேரையும் காயப்படுத்தாம, தன்னோட நல்லது கெட்டதுல அவா ரெண்டு பேரும் இருக்கணும்னு நினைக்கறான்”

சுனந்தா “அதெப்படி முடியும், பிரிஞ்சதோட நிக்காம, ஆளுக்கொரு குடும்பத்தைன்னா கட்டிண்டு இருக்கா?”

சியாமளா ”நீங்க சொல்றது 100% கரெக்ட் பா. காஸ்மெடிக் ஃபேக்டரி திறக்கும்போது அவரோட தங்கை, செண்பா ஆன்ட்டி ரெண்டு பேரும் விளக்கை ஏத்தினபோது கொஞ்சம் முகம் வாடினாப்போல இருந்தார். இன்னொரு நாள், அவரோட அம்மா வந்து ஃபேக்டரியைப் பார்த்து, அவா கையால ஒரு ப்ராடக்ட்டை வான்ச் பண்ண வெச்சார்”

நாராயணன் “தேர் யூ ஆர். வாழ்க்கைல எல்லா விஷயமும் ஃபேக்டரி ஓபனிங் மாதிரி கிடையாதே. இப்ப அவனுக்கே கல்யாணம்னு வந்தா பெத்தவாளுக்காக அவன் ரெண்டு தரம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா, இல்ல, நீ கல்யாணத்துக்கு வா, நீ ரிஸப்ஷனுக்கு வந்தா போறும்னு சொல்லுவனா?”

“...”

“அப்படிச் சொல்றவனா இருந்தா, இந்நேரம் சொத்தைக் குடுன்னு கேஸ் போட்டு வாங்கிண்டு, எல்லாரையும் தூக்கிப் போட்டுட்டு, எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய் தன் இஷ்டப்படி இருந்திருப்பான். ஏன், படிக்காம, குடி, சிகரெட், போதைன்னு இந்த உலகத்துல வீணாப் போறதுக்கு வழியா இல்லை?”

“...”

“கபிலன் தன் தம்பி, தங்கை, அம்மா, அப்பான்னு குடும்பம் வேணும்னு உறவுகளை மதிக்கறதும் விட்டுக் குடுத்துப் போறதும், டீஸன்ட்டா மரியாதையா பேசறதும் அவா செஞ்ச புண்ணியம். He is Gem of a boy” என்றதை தலையசைத்து ஆமோதித்த சியாமளாவிற்குத் தொண்டை அடைத்தது.

‘இந்த நல்ல குணத்தைதானே ஆளாளுக்கு தன் இஷ்டத்துக்கு வளைச்சு taken for granted டா எடுத்துண்டு என் கபீஷை சிரமப் படுத்தறா!’

‘வேண்டாம் போடீன்னு சொல்லிட்டான், இன்னும் என்ன என் கபீஷ்?’

‘நான் வந்தே ஒரு மாசம் ஆகப்போறது. மார்கழி வந்தாச்சு. இந்நேரம் அந்தப் பொண்ணோட கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்குமோ?’

‘கபீஷ் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பாரோ?’

‘ஏன் சம்மதிக்காம? நுங்கு, நுங்குன்னு அவ்ளோ ஆசையா தங்கையைக் கூப்பிடறவர், அவளுக்காகவாவது சரின்…”

‘இத்தனை வருஷத்துல கபீஷை எந்த விதத்துலயுமா நான் பாதிக்கலை?’

“டீ ஷாம்ளா… ஒரு தட்டை அலம்ப எத்தனை நேரம், பனில நிக்காம உள்ள வா” என்ற அம்மாவின் கத்தலில் சியாமளா தன் வீட்டிற்குள் சென்றாள்.

*******************

அலைபேசியின் அழைப்பில் விழித்த டாக்டர் நாராயணன் , மருத்துவமனையில் இருந்து அழைப்பு என்றதும் நேரத்தைப் பார்க்க, இன்னும் நான்கு கூட ஆகவில்லை.

‘இந்த நேரத்துலயா?’

கோட்டக்கல் கல்லூரி வேலையில் விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு மனைவி சுனந்தாவின் ஊரான கொல்லங்கோடே கிராமத்திற்கு வந்ததுமே, நாராயணன் அங்கிருந்த தரமானதொரு தனியார் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பெரிய கிராமம் அல்லது சிறிய டவுன் என்ற அளவிலான அந்த ஊரில் முப்பத்தி நாலு வருட அனுபவம் மிக்க அறுவை சிகிச்சை நிபுணர், அதிலும் குறிப்பாக ஆர்த்தோ சர்ஜனான நாராயணனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அநேகமாக முன் திட்டத்தோடு கூடிய அறுவை சிகிச்சைகள்தான் என்பதால், இதுபோல் அவசர அழைப்புகளுக்கு அங்கே வாய்ப்பில்லை.

“லெக் இன்ஜுரி ஸாரே. நிங்கள் வேகம் வரணம்”

மனைவியை எழுப்பிச் சொல்லிவிட்டு ஹாஸ்பிடலை நோக்கி விரைந்தவருக்காக, அவசர பிரிவின் டியூட்டி டாக்டரும். இன்னும் இருவரும் காத்து நின்றனர்.

மற்ற இருவரையும் அங்கேயே நிறுத்திவிட்டு, “ஆருக்கென்ன?” என்றபடி நடந்த நாராயணன், உள்ளே ட்ரிப்ஸ் மூலம் வலி நிவாரணியும் உறக்க மருந்தும் கொடுக்கப்பட்டு, காலில் தற்காலிகமாகக் கட்டப்பட்ட க்ரேப் பாண்டேஜுடன், கைகளில் சிராய்ப்புகளுடன், ஆங்காங்கே சேறு அப்பிய உடையுடன் மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கபிலனைக் கண்டு அதிர்ந்து நின்றார்.

‘இவன் எப்டி இங்க?’

மனதில் பலதும் ஓடினாலும், தன் கடமையை கவனிக்கத் தொடங்கினார். கபிலனை நகர்த்தாது ஸ்கேன் செய்து பார்த்தவர், கபிலன் இதற்கு முன்னரே எத்தனை நுட்பமான அறுவை சிகிச்சையைக் கடந்திருக்கிறான் என்பதை அறிந்து திகைத்து நின்றுவிட்டார்.

பழமொழி மெய்தான் என்பது போல் பட்ட காலிலேயே
அடி பட்டிருந்தது. நல்ல வேளையாக முன்பு அடிபட்ட இடத்தில் இல்லாமல், அனால் கெட்ட வேளையாக அதற்கு மிக அருகில் இருந்தது.

நாராயணன் அந்த ட்யூட்டி டாக்டரிடம் “நிச்சயம் ஒரு சர்ஜரி செய்யணும். சின்ன ப்ரொஸீஜர்தான். பட், பெரிய ரிஸ்க்” என முந்தைய அறுவை சிகிச்சையின் அடையாளங்களைக் காட்டி விளக்கினார்.

இப்போதும் tendons எனப்படும் தசைநாரே பாதிக்கப் பட்டிருந்தது.

“ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க. நியூராலஜிஸ்ட், அனஸ்தெடிஸ்ட்டுக்கு சொல்லுங்க”

டியூட்டி டாக்டர் “ஸார், இவரோட வீட்டுக்கு…”

“இவர் கபிலன் சாரநாதன். எனக்கு பர்ஸனலா தெரியும். நான் தகவல் சொல்லிக்கறேன். அவர் மொபைல் எங்க?”

வெளியில் காத்திருந்த ஃபுட்பால் க்ளப்பின் மேனேஜர் “ஃபோன் லாக்ட் ஸாரே. பாஸ்வேர்ட் விளிக்குன்னு” என கபிலனின் மொபைலை நீட்டினார்.

தன் மொபைலை ஆராய்ந்த நாராயணனுக்கு சாரநாதனின் எண் பெயருடன் சேமிக்கப்படவில்லை என்பதால் எது அவனுடையதெனப் புரியாது குழம்பியவர், அடுத்த கணமே சியாமளாவை அழைத்திருந்தார்.

 

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 12
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.