• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

குறுநகை போதுமடி! 9

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
43
153
53
Chennai
குறுநகை போதுமடி! 9


‘நலம்’ ஆயுர்வேதா *அழகின் அறுதி*

கடந்த ஒரு வாரமாகவே தினசரிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் மேற்கண்ட வரியும் , பசுமையானதொரு பூமிப் பந்தில் இருந்து பொழியும் சந்தனம், செம்பருத்தி, குங்குமப்பூ, நெல்லிக்காய், சிகைக்காய், கரிசிலாங்கண்ணி போன்ற மூலிகைகளை, பொடியாக, எண்ணெயாக, அழகான ஒரு ஜோடிக் கைகள் ஏந்துவதைப் போன்ற படமும் விளம்பரமாக வந்த வண்ணம் இருக்க, அழகர் ஹெர்பலின் பிராண்ட் ஆன நலம் காஸ்மெடிக்ஸின் அழகுசாதனப் பொருள்களை அறிமுகம் செய்யும் விழா.

முன்னதாக இயந்திரங்களுக்கு ஐயர் வைத்து பூஜை செய்து, உற்பத்தியைத் தொடங்கி விட்டனர்தான். ஆனால். நகைகளை வைத்து நகைக்கடையைத் திறப்பதுபோல், இது போன்ற நிறுவனங்களுக்கு பொருள்களைத் தயாரித்த பின்தான் தொடக்கவிழா நடத்துவர். அப்போதுதான் விற்பனையாளர்களை அழைத்து சந்தைப்படுத்த முடியும்.

இயந்திரங்களை நிறுவுதல், மின் இணைப்பு, பாதுகாப்பு, இயந்திரங்களின் பராமரிப்பு, இயக்கம், பொருட்கள் சேகரிப்பு, தயாரிப்பு , பேக்கிங், லேபிலிங் போன்ற வேலைகளுக்கான ஆள்சேர்ப்பு, மார்கெட்டிங், முகவர்கள், நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் என வந்து போன வேகம் தெரியாத ஐந்து மாதங்கள்.

இங்கே தொழிற்சாலை உருவாக்கம் பெறும் சமயத்தில்,
பணியாள்கள் நேர்முகம், தேர்ந்தெடுப்பு, பயிற்சி, கச்சாப் பொருள்களின் சேர்ப்பு, தேவையான முறையில் அவற்றைப் பதப்படுத்துதல் முதல் தொடங்கிய உற்பத்தி தடையின்றித் தொடரும் வரை அடிப்படை வேலைகளே அதிகம் இருந்ததால், சியாமளா நேரம் கிடைக்கும்போது நாளில் ஒரு முறை மருத்துவமனையை எட்டிப் பார்ப்பதோடு சரி.

கட்டுமான வேலைகளை சாரநாதனும் செழியனும் மாறி மாறி சென்று பார்த்துக்கொண்டனர்.

சியாமளாவின் பணிச்சுமையை உணர்ந்த கபிலன்
மருத்துவமனை உணவுக்கூடத்தில் திட்டமிட்ட மாற்றங்களை முழுதாகக் கொண்டு வந்தபின், அங்கே கவனித்துப் பரிமாறவென்றே ஹோம்சயின்ஸ் படித்த இருவரை வேலையில் அமர்த்த, சியாமளா அவர்களுக்குப் பயிற்சியளித்தாள்.
வாழை இலைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியதும் இடையில் ஓணம் பண்டிகை வரவே, இப்போது பஞ்சாபில் இருக்கும் நவீன் தன் மனைவி, குழந்தைகளுடன் கேரளா வந்திருக்க, சியாமளா ஐந்தாறு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்ற சமயத்தில் வேலையைப் பகிர்ந்து அளிக்கவும், வழி நடத்தவும், அந்தந்த நேரத்துக்குத் தேவையான முடிவுகளை விரைந்து எடுக்கவும் அவளின்றித் திணறித்தான் போனது தொழிற்சாலை.

“சியாமளா பொண்ணு இருந்தா நான் சும்மா எட்டிதாம்ப்பு பார்ப்பேன். இப்ப இதுக்கென்ன செய்ய, அது கொதிச்சிடுச்சான்னு பாருங்க, இதை வறுத்தது போதுமா, தேங்காய் எண்ணெய் எவ்ளோ, விளக்கெண்ணெய் எம்புட்டு, வெங்காயம் உண்டானு… எத்தனை கேள்வி. அந்தப் புள்ளையா இருக்கப்போயி சமாளிக்குதுடா கபிலா” என்றான் முப்பத்தைந்து வருடங்களாக மூலிகை பதப்படுத்தும் தொழில் செய்யும் சாரநாதன்.

‘கெடுத்து வெச்சிருக்கா எல்லாரையும், ராட்சஸி’

ஹாஸ்பிடலில் தன் காலை நேர பார்வை இடுதலை சற்று முன்னதாகவே முடித்து வீட்டுக்கு வந்த கபிலன் யோசனையின் ஊடே திறப்பு விழாவிற்குத் தயாரானான்.

பிரவுன் நிற கால்சராயும் வெண்ணிற முழுக்கைச் சட்டையும் அணிந்து, சட்டையின் கைகளை மணிக்கட்டுக்கு சற்று மேல் வரை சுருட்டிவிட்டு, பிரவுன் நிற ஷூக்களை அணிந்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு, குந்தவையை அழைத்தான்.

“நுங்கு, ரெடியா, வரவா?”

“ரெடிண்ணா, வா”

சாரநாதன் சியாமளாவிற்கு உதவியாக முன்னதாகவே சென்றிருக்க, கபிலன் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல, பெண்கள் எல்லோரும் வெளியே காத்திருந்தனர்.

“வள்ளி அத்தை எங்க?”

“செழியன் மாமாவோட போய்ட்டாங்க”

சின்னுவின் குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்ததுமே அவள் கணவன் வந்து அவர்கள் வசிக்கும் சேலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

காஸ்மெடிக் தொழிற்சாலையின் முன்புறம் ஷாமியானாவிற்குக் கீழே பிளாஸ்டிக் நாற்காலிகள்
போடப்பட்டிருந்தது. ஊர்மக்களில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

உள்ளே எல்லாம் சரியாக இருக்கிறதா என எல்லோரும் எல்லோரையும் கேட்டபடி கடைசி நேரப் பரபரப்பில் இருந்தனர்.

முன் கூடத்தின் நடுவே அவர்களது கம்பெனி லோகோவை ரங்கோலியாக வரைந்திருக்க, ஒருபுறம் நீண்ட மேஜையில் நலம் காஸ்மெடிக்ஸின் தயாரிப்புகள் அணி வகுத்திருந்தது.

பின்பக்கத் தொழிற்சாலைக்கு செல்லும் வாயிலில் ரிப்பன் கட்டப்பட்டு உள்ளே ஏற்றுவதற்குத் தயாராக பெரிய குத்துவிளக்கு நின்றது.

முன் கூடத்தில் ஆணும் பெண்ணுமாக ஊழியர்கள் ஆங்காங்கே செல்ல, அங்கே கிரிதரன், சுபாஷ், அனுபமா, நந்தினி எல்லோரும் நின்றனர்.

நீலவேணி, காவேரி, செண்பா வள்ளி எல்லோரும் ஒருபக்க உள் திண்ணையில் அமர்ந்து கொள்ள, எதிர்ப்புற சிறிய திண்ணையில் சிறு பலகையில் இரண்டு ட்ரேக்களில் சாக்லேட்டும் ரோஜாப்பூக்களும் சிறு தண்ணீர் பாட்டில்களும் வைக்கப்பட்டருந்தன.

செண்பா நெருங்கக் கட்டிய மல்லியை குந்தவையிடம் கொடுத்து “சியாமளா வரா பாரு, அவ கிட்ட குடு”

கபிலன் திறப்பு விழாவிற்கென முக்கிய விருந்தினர்களாக இந்தியாவின் சங்கிலித்தொடர் அழகு நிலையம் ஒன்றின் உரிமையாளரையும், தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு சித்த மருத்துவரையும் அழைத்திருந்தான்.

மருத்துவமனை பயனாளிகளில் வர விரும்பிய சிலரையும் அழைத்திருக்க, அவர்கள் வரவும் வரவேற்றுப் பேசி, வாயிலில் இருந்த இருக்கையில் அமரச் செய்துவிட்டுத் திரும்புகையில் சியாமளாவிடம் குந்தவை பூவைக் கொடுப்பதைக் கண்டான்.

கேரளத்தின் சிறப்பான கசவு புடவையும் பச்சைப்பட்டில் ரவிக்கையும் அணிந்திருந்த சியாமளா குந்தவையிடம் ஏதோ பேசிச் சிரித்தபடி பூ வைக்கக் கையை உயர்த்தியதில் சற்றே புடவை விலக, மிக லேசாகத் தெரிந்த இடுப்பும் உந்தியும் பளீரிட்டதைக் கண்ணுற்ற கபிலனின் கண்கள் அதிவேகமாக அந்த கூடத்தைச் சுற்றிச் சலிக்க, உடனடி ஆத்திரம் முளைத்ததில் பல்லைக் கடித்தான்.

இரண்டு இளம்பெண்கள் சிரித்துப் பேசுவதை
ஆண், பெண் வித்தியாசமின்றி அங்கிருந்த பலரும் பார்த்தாலும், கபிலனுக்கு எல்லோரும் சியாமளாவைப் பார்ப்பதாகவே தோன்றியது. குறிப்பாக கிரிதரனின் வருடிய பார்வையில் இருந்த ரசனை!

‘இவன… ஒரு டாக்டர் மாதிரியா பாக்கறான்? அவளைப் பார்த்தாலே சிரிக்கறதும், குழையறதும், நல்ல ஐடியா, சூப்பரா இருக்கு, சிறப்பா செஞ்சுட்டீங்கன்னு வழியறதும், பத்தாததுக்கு, வரிக்கு ரெண்டு சியாமளா போடறதும்… சரியான flirt!’

‘இவ வேற புரியாம… இவளை யாரு புடவை கட்டிட்டு வரச்சொன்னாங்க, எப்போதும் போடற அங்கியவே மாட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே’

கபிலன் வந்திருந்ததை அப்போதுதான் பார்த்த சியாமளா, அருகில் வர, அவனது முறைப்பில் விழித்தாள்.

“ஹலோ கபீஷ், என்னாச்சு, எனிதிங் ராங், எதாவது மிஸ் பண்ணிட்டோமா?”

“ம்… ஃபேக்டரில வேலை பாக்கற லேடீஸ் எல்லாருக்கும் சுரிதார் இல்ல பேன்ட், ஷர்ட் யூனிஃபார்ம் கொடுக்கலாம்னு ஐடியா”

“வாட்… ஓஹ்…”

“என்ன?”

“புடைக்க, சலிக்க, காயவைக்க வர்ற பொன்னம்மாக்கா, பூங்கோதையக்கா, பாஞ்சாலிக் கிழவி, செம்பவளப் பாட்டிக்கெல்லாம் பேன்ட், ஷர்ட் யூனிஃபார்மா… வாட் அன் ஐடியா ஸார்ஜி?”

‘இவளைப் பத்தித் தெரிஞ்சும், இப்டி உணர்ச்சிவசப்பட்டு உளறுவியாடா?’

“கெஸ்ட் வர சமயமாச்சு, போய் அப்பாவை வரச்சொல்லு”

“அங்கிள் வாசல்லதான் இருக்காங்க”

பிரதம விருந்தினர்கள் இருவர், செண்பா, வள்ளி, சாரநாதன் ஐவரும் விளக்கேற்ற, குந்தவை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தாள்.

சரியாக அந்த நேரம் ஏனோ சியாமளாவும் கபிலனும் அனிச்சை செயலாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

************************

சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கே ஒன் பாட் மீலாக, கோதுமை ரவாவில் புலாவ் செய்து சாப்பிட்ட சியாமளா, தன் வேலைகளை முடித்து எட்டுக்கெல்லாம் கதவைத் தாழிட்டு, படிக்கும் விளக்கின் ஒளியை சன்னமாக்கி, சம்மணமிட்டு, சுவரில் சாய்ந்தபடி படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

லேப்டாப், பதினாறாவது முறையாகப் பாதி படித்துக்கொண்டிருக்கும் ஜேன் ஆஸ்டினின் சென்ஸ் அண்ட் சென்ஸிபிளிடி (Sense & Sensibility) புத்தகம், அலைபேசி எல்லாம் திறந்திருக்க, சியாமளாவின் கண்கள் மட்டும் மூடி இருந்தன.

திறப்புவிழா முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஓடியிருக்க, சமீபத்தில் நிகழ்ந்தவற்றை அழைக்காமலே அசைபோடத் தொடங்கியத மனம்.

அதில் முதலாவது இம்முறை ஓணத்திற்கு ஊருக்குச் சென்றபோது அம்மா சுனந்தா அப்பா நராயணனின் தாளக் கட்டு சகிதம்
மீண்டும் திருமணப் பாட்டு பாட, நவீன் மட்டுமின்றி அவனது மனைவியும் சேர்ந்திசைத்தாள்.

“நீ கேட்ட டயத்தைக் குடுத்தே நாலரை வருஷம் ஆயாச்சு கேட்டியா? உனக்கு இப்போ இருபத்தாறு நடக்கறது. இன்னும் என்ன சின்னக் கோந்தையா. பொறுப்பு கழிஞ்சாதானே எங்களுக்கு நிம்மதி. கல்யாணத்தோட முடியுமா, பிரசவம், குழந்தைன்னு செய்யறத்துக்கு என் உடம்புலயும் ஜீவன் வேணுமில்லையா?”

“...”

“சரி, தொலைதூரமா ஹைதராபாத்ல வேலை பார்க்கப் போனயே, அதோட அந்த வேண்டாத பழக்கமெல்லாம் போயிடும்னு நினைச்சா, நல்ல அயனான வேலையை விட்டுட்டு வந்து திரும்பவும் எத்தையோ படிக்கறேன்னு ஆறு மாசம் போச்சு”

“...”

“இப்ப என்னடான்னா, அந்தப் புள்ளையைத் தேடிண்டு போய், அவன் கிட்டயே வேலை, அவன் வீட்லயே வாசம்னு தொடங்கி மாசம் ஏழாச்சு. ஷாம்ளி எங்க இருக்கான்னு கேக்கறவாளுக்கு பதில் சொல்லி மாளலை”

“...”

“நான் உசத்தி, தாழ்த்தி எல்லாம் பேசலைடீ ஷாம்ளி. இப்டி அந்தத் கிராமத்துல, அதுவும் அவன் வீட்லயே போய் இருக்கறது நன்னாவா இருக்கு?”

“...”

“இது எங்க போய் முடியும்னு தெரியாம, எந்தப் பக்கமும் போக விடாம இப்படியே எத்தனை நாள்டீ இருக்க முடியும்?”

“...”

“நாங்க திரும்பவும் வரன் பார்க்கத்தான் போறோம். கூடிய சீக்கிரம் அந்த வேலையைத் தலை முழுகிட்டு ஊரைப்பாக்க வந்து சேரு, சொல்லிட்டேன்”

சொன்னதோடு நிற்காமல் தினமும் புகைப்படம் மற்றும் புள்ளிவிவரங்களுடன் சுனந்தா அனுப்பும் வரன்களின் கனம் தாங்காமல் சியாமளாவின் அலைபேசி கல்லுக்குண்டாய் கனத்தது.

‘இது எங்கே போய் முடியும்னு எனக்கே தெரியலையே’

அன்று “மதுரைலதான் எங்கம்மா இருக்காங்க… அவங்க ஹஸ்பண்டை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க” என்றபடி கபிலன் கிளம்பிச் சென்றதும், சியாமளா திண்ணையிலேயே அமர்ந்துவிட, வீட்டிற்குள், கபிலன் எங்கு சென்றான், ஏன் செல்ல வேண்டும் போன்ற விவாதங்களும் விமரிசனங்களும் தொடங்கி இருத்தது.

குந்தவைக்கு விவரம் புரிந்தும் புரியாத வயதில் மற்றவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருந்தாள். ஒருநாள் இரவு சாரநாதனிடம் கதை பேசிக்கொண்டிருந்தவள்,

“அப்பா, நீ எனக்கும் அப்பா, (கபிலன்) அண்ணாக்கும் அப்பாதானேப்பா?”

“ஆமாண்டா நுங்கம்மா”

“அப்புறம் ஏம்ப்பா, அண்ணா நம்ம வீட்லயே இல்ல? இப்ப சின்னுவும் விஜயும் ஒரே வீட்ல இருக்காங்கள்ல?”

“அதுடா… நுங்..”

“ஏன்னு எனக்கே தெரியும்ப்பா”

“...”

“அண்ணாக்கு ரெண்டு அம்மா, ரெண்டு அப்பா. கரெக்ட்டாப்பா?”

மகளின் கேள்வி சுடீரெனப் புறணியில் அடித்த அடியில் விக்கித்துப் போய், கதை பேசிக்கொண்டே தூங்கி விட்டதாக நடித்த சாரநாதன் மட்டுமின்றி செண்பாவுமே இதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

மறுமுறை மாளவிகா, கபிலன் பற்றி காவேரி எதையோ சொல்லத் தொடங்க, செண்பாவும் ஒத்துப் பாடியதில் சாரநாதனின் சினம் எல்லை கடந்தது.

“ஏய் செம்பா, ஒன் ஆத்தாளுக்குதான் அறிவில்லைன்னா, நீ அதுக்கு மேல இருக்க… உம் மவ என்ன கேட்டான்னு நீயும் கேட்டுக்கிட்டுதானே இருந்த, அதை உங்கம்மாகிட்ட சொல்லு”

“மாமா..”

“சின்னப் புள்ளைங்க முன்னால வரம்பு மீறாம, மரியாதையோட இருக்கணும்னு நினைக்கறேன். இனிமேட்டு, போனது, வந்ததைப் பத்திப் பேசவே வேணாம். நல்ல வார்த்தையா பேசிப் பழகுங்க” என்று வெகுவாகத் திட்டி விட்டான்.

அதன்பிறகும் சில நேரம் அனத்தலாய், முணுமுணுப்பாய் பேசத்தான் செய்தனர். ஒரு கட்டத்தில், காவேரி கபிலனின் பேரை எடுத்தாலே “அம்மத்தா, அண்ணாவைப் பத்திப் பேசுற வேலையெல்லாம் வெச்சுக்காத” என குந்தவையே சொல்லத் தொடங்கினாள்.

இன்று புதிய பிரச்சனை. வாசலில் அமர்ந்திருக்கும் சியாமளாவிற்கு என்ன தெரியும், எதுவரை தெரியும் என்பது சாரநாதனுக்குத் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலுமே, அவளது காதுபட தேவையில்லாத இந்தப் பேச்சு எதற்கு?

“சியாமளா, உள்ள வாம்மா” என்றவன், அமைதி காக்கச் சொல்லி மற்றவர்களை உறுத்தான்.

சியாமளாவிற்கு அங்கு நடப்பது எதுவும் பெரிதாக எதுவும் புரியாவிட்டாலும் கபிலன் சொன்னதிலேயே நின்றது மனம்.

இங்கு வந்த மூன்று நாள்களுக்குள் எத்தனை அனுபவம்!

முதல்நாள் வீட்டு வாசலில் தன்னை இறக்கி விட்டுச் சென்ற கபிலனை, சாரநாதன் இரவு உணவுக்கு ஃபோனில் அழைத்ததும், உணவுக்குப் பின் மீண்டும் அவன் வெளியேறியதும்…

தான் வந்து அங்கே தங்கி இருப்பதால், தனக்காக கபிலன் வெளியில், ஒருக்கால் செழியன் அங்கிள் வீட்டிற்கு உறங்கச் சென்று விட்டான் போல என அன்று அவளாகவே நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை ஹாஸ்பிடலுக்கு வழி காட்டிய குந்தவை “அண்ணா அந்த வீட்லதான் இருக்காங்க” என்றதில்தான் அவன் தனித்து வசிப்பதைத் தெரிந்து கொண்டாள். கபிலன் அந்த இரண்டு நாள்களில் அந்த வீட்டில் இருந்தது மிகக் குறைந்த நேரமே.

முன்னை விடக் கம்பீரமும் முதிர்ச்சியும் கூடித் தெரிந்த கபிலனின் இயல்பே பெரும்பாலும் அமைதிதான் என்பதை அறிந்த சியாமளாவிற்கு, கால்பந்து மைதானங்களில், கோட்டக்கல்லில் பார்த்ததை விட அவனது உடல்மொழியில் விலகலும் ஒதுக்கமும் அதிகம் தெரிந்தது.

கபிலனைப் பற்றிய கதைகளை, விமரிசனங்களை, அது யாராக இருப்பினும் கேட்க விரும்பாத சியாமளாவிற்குத் தனிமை தேவைப்பட்டது. காதில் விழுந்தவை வருத்தம் தந்தது.

கற்பனையில் விரிந்த காட்சிகளில், பெற்றோரில் இருவரில் ஒருவருக்கான ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் எந்நேரமும் சுமந்த குட்டி கபிலன் சியாமளாவை கலங்கடிக்க, கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.

‘அவர்கள் வீட்டில் அவர்கள் பேசத் தடை சொல்ல நான் யார்?’

குந்தவையுடன் அறையைப் பகிர்ந்து கொள்வதில் அவளுக்குப் பிரச்சனையில்லை என்றாலுமே, சியாமளா தனித்து சிந்திக்க, அசைபோட விரும்பினாள். உடனடியாக இடம் வேண்டும் என வலியுறுத்திப் பெற்றாள். கபிலன் வரும்வரை மருத்துவமனை வேலைகளில் முழுதாக ஈடுபட்டாள்.

சியாமளாவிற்கு கபிலனின் பெற்றோர் விவாகரத்தாகி மறுமணம் செய்து கொண்டதனால், கபிலன் மேலான தன் விருப்பத்தில் எந்த மாற்றமும் இல்லை எனும்போது கபிலனாக எதுவும் சொல்லும் வரை அல்லது சொல்லாத வரை, அவனைப்பற்றித் தனக்குத் தெரிந்ததே போதும், என்றிருந்தவள் இன்று வரை எதையும் கேட்டாளில்லை.

இவளாகவே கேட்க வேண்டும். அப்படிக் கேட்டு விட்டால் அதையே காரணமாக்கித் தன்னை மொத்தமாக விலக்கிவிடுவான் என்பது சியாமளாவிற்குத் தெளிவு. அதற்கேற்றாற் போல் வந்ததுமே ‘இன்னுமா நீ போகலை?’ என்றிருந்தான்.

அடுத்து வந்த நாட்களை சூடுபிடித்த தொழிற்சாலை வேலை மாதங்களாய் உருட்டி விழுங்கியிருந்தது.

குறுகிய காலத்திலேயே நலம் அழகு சாதனப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு அழகர் ஹெல்பல்ஸின் பிராண்ட்தான் ‘நலம் ஆயுர்வேதா’ என்பது மிக முக்கியமான காரணம். தொடக்கத்திலேயே வெளிநாட்டு ஏற்றுமதி சாத்தியமானதும் சாரநாதனால்தான்.

அவனது மோரிங்கா பௌடர், வில்லைகள், தேன், இன்ன பிற மூலிகைகளோடு நலம் அழகுசாதனப் பொருட்களின் மாதிரிகளை ‘ட்ரை மீ’ என்ற ஹாம்ப்பர்களாக குறைந்த அளவுகளில் முகவர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் அனுப்பி வைக்க, மூன்றே வாரங்களில் நல்ல பலன் தெரிந்தது.

ஹேர் ஆயில், இயற்கையான தலைச்சாயம், குங்குமாதி தைலம், புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சருமத்தின் கருமையை நீக்கி, ஒளிர்வு தரும் ஆலமரம், அரசமரம், அத்தி, இத்தி என நான்கு மரங்களின் பட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நல்பமராதி தைலம், கொண்ட குளியல் சோப், பிசுபிசுப்பில்லாத அதே நேரம் ஈரப்பதம் அதிகம் தரும் மாய்ச்ஸரைஸர் என இங்கு தயாரிக்கப்பட்ட அடிப்படை அழகுசாதனப் பொருள்கள் அனைத்துக்குமே நல்ல பாராட்டும் சந்தையில் தேவையும் இருந்தது.
பெருகிய உற்பத்திக்கு இணையாக அதிகப் பணியாள்களை வேலைக்குச்சேர்த்திருந்தனர்.

இவற்றின் தயாரிப்பு ரகசியம், மூலிகைகளின் கலவை சதவிகிதம், கொதிப்பது, நொதிப்பது கலக்குவதன் ஃபார்முலா அனைத்தும் சியாமளாவும் கபிலனும் மட்டுமே அறிவர்.

தனக்குக் கொடுக்கப்பட்ட முடிவெடுக்கும் சுதந்திரமும், அவள் போட்ட உழைப்பிற்கான பலனும் பாராட்டுகளும் என, உத்தியோகத்தைப் பொறுத்தவரை சியாமளாவிற்கு மிகுந்த மனத்திருப்திதான்.

அதேநேரம் மனதளவில் இது கபிலனின் நிறுவனம் என்ற சிறு நெருக்கம் இருந்தாலும், வேறு யாருடைய கம்பெனியாக இருந்தாலும், சியாமளா இதே அளவு உழைப்பைதான் கொடுத்திருப்பாள் என்பது வேறு விஷயம்.

சியாமளாவின் இன்றைய தீவிர உள்முக சிந்தனைக்குக் காரணம், இன்று நலம் காஸ்மெடிக் ஃபேக்டரிக்கு மாளவிகா, ஜெயச்சந்திரன் மற்றும் ஆதித்தனின் வருகை.

என்னதான் ஈராயிரக் குழவி என்றாலும், எத்தனைதான் டீஸன்ஸி, அவரவரது தனிப்பட்ட வாழ்க்கை, விருப்பு, வெறுப்பு என தனிமனித உரிமைத் தத்துவங்களுக்குக் கொடி பிடித்து, நவீனத்துவ முகமூடி அணிந்து, நாகரிக நாடகம் போட்டாலும், சியாமளாவால், மாளவிகாவை சாரநாதனுடன் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

கபிலனின் இழப்பு என்னவென்று புரிய, கண்களில் படர்ந்த ஈரத்தை உள்வாங்கி, வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பின்னே, எங்கே அனுதாபப்பட்டு விடுவாளோ என்ற பயத்தில் இன்னுமே விலகி நிற்பவன், வெட்டிக்கொண்டு போய்விட்டால்?

‘போனால் போடா!’ என்று தூக்கிப்போட முடியவில்லையே’

இவளை அறிமுகம் செய்து வைத்துவிட்டுத் தொழிற்சாலையை தானே சுற்றிக்காட்டினான் கபிலன்.

நேற்று முதல்முறை உற்பத்தியான, பிறந்த குழந்தைகளுக்குக் கூட உபயோகிக்கும் வகையில், பாரம்பரிய முறைப்படி கண் மை மற்றும் அரிப்பு, அலர்ஜி ஏற்படுத்தாத குழைத்த குங்குமத்தையும் மாளவிகாவை வெளியிடச் செய்த கபிலன், “அம்மா, குங்குமத்தை வெச்சுப் பாரும்மா”

“கண்ணாடி வேணுமேடா கபிலா” என்றவளிடமிருந்து குங்குமத்தை வாங்கிய ஜெயச்சந்திரன் அவள் நெற்றியில் இட்டதை துளிச் சலனமில்லாத ஒரு சிரிப்புடன் பார்த்தபடி நின்ற கபிலனைக் கண்ட சியாமளாவுக்குத்தான் அடிவயிற்றில் ஏதோ செய்தது.

அன்று குந்தவை திறந்து வைக்க, தந்தையுடன் இணைந்து நின்றவனின் பார்வையிலும், இப்போது தாயுடன் பேசியபடி நிற்பவனின் பார்வையிலும் இருந்தது ஒன்றுதான்… எல்லையில்லாத, இனி, இப்பிறவியில் ஈடேற முடியாத ஏக்கம்!

மரியாதை நிமித்தம் புறப்பட்டவர்களை கார் வரை சென்று , கபிலனுடன் நின்று வழியனுப்பி வைத்தவளை மாளவிகாவின் பார்வை எடைபோட்டது. அதை சியாமளாவும் நன்கு அறிந்திருந்தாள்.

*********************

அலைபேசி ஒலிக்க, அம்மா சுனந்தா!

“சொல்லும்மா”

“ஆர் யூ ஆல்ரைட் ஷாம்ளா, குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?”

“நத்திங் மா. நீ கைனிக் கிட்ட போனயா?”

“ம். மெனோபாஸ் தொடங்கி இருக்கு. அம்பத்தி நாலு வயது வரை பீரியட்ஸ் வர்றதே நல்ல விஷயம்னு சொன்னா. கொஞ்சம் யோகா, வாக்கிங் பண்ணனுமாம். சுகர் இல்லை. ஆனா பிரஷர் இருக்கு”

“பார்த்துக்கோம்மா. டாக்டர் சொன்னதை ரெகுலரா செய். தொடர்ந்து ஹெவியா ப்ளீட் ஆச்சுன்னா சொல்லு, நான் வரேன்”

“நீ எப்ப வேணாலும் வா. நீ வந்தாலே என் பிரஷரெல்லாம் ஓடிப்போயிடும் தெரியுமோ?”

“அம்மா…”

”அம்மாதானே, ஒரு வார்த்தை சொல்லப்படாதா, இங்க கொல்லங்கோட்ல ஒன்னும் ப்ராப்ளமில்ல கேட்டியா. ரிடையரான அப்புறம் உங்கப்பா பரவாயில்லை. கேட்டா ஒத்தாசை பண்றார்”

“அப்பா எங்கம்மா?”

“ஹால் சோஃபால அனந்தசயனம். டீவில நியூஸ் ஓடறது. நிறுத்தினா முழிச்சுப்பார். எழுப்பினா கோச்சுப்பார்”

சிரித்த சியாமளா “என்ன ஒரு ரைமிங் மா”

“சரிடீ ஷாம்ளா, ஃபோனை வெக்கறேன். அனுப்பின ஃபோட்டோவை பார்த்துட்டாவது டெலீட் செய்”

“பை மா, குட்நைட்”

மொபைல், லேப்டாப், புத்தகம், விளக்கு எல்லாவற்றையும் மூடி விட்டுப் படுக்க, காற்றில் ஈரப்பதம் மிகுந்து குளிர்ந்தது. மின்விசிறி வேறு பேய் வேகத்தில் சுற்ற,
போர்த்திப் படுக்க சுகமாக இருந்தது. மணி பார்க்க, பத்தரைக்கு மேல் காட்டியது.

‘மூணு மணி நேரமா வெட்டியா இருந்திருக்கேன்’

குளிரும் கதகதப்பும் தந்த இதத்தில் கண்கள் செருக, உறக்கத்தில் ஆழ்ந்த சியாமளாவை எழுப்பியது
வெளியே பலத்த இடி, மின்னலுடன் எடுத்த எடுப்பில் வேகம் காட்டிய மழை.

மொட்டை மாடியிலேயே இருந்த அறை என்பதால், நேரடியாக நனைய மட்டும்தான் இல்லை. திறந்திருந்த ஜன்னல் வழியே சாரல் அடிக்கவும், ஜன்னல் கதவைச் சார்த்த எழுந்து அமர்ந்தவள், காலியாக இருந்த இரவு நேர கிராமத்துத் தெருவை முடிந்தவரை வேடிக்கை பார்க்க, மழையினூடே ஏதோ ஒரு வண்டியின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது.

‘இந்நேரத்துல யாரு?’

இவள் பார்க்கப் பார்க்கவே, வாசலில் வந்து நின்ற ஸ்கார்பியோவிலிருந்து இறங்கிய கபிலன், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது வீட்டை நோக்கி ஓடி வருவது வரை மட்டுமே ஜன்னல் காட்டியது.

‘அப்படி என்ன அவசரம்?’

‘கீழே யாருக்கும் ஏதாவதுமா? இது கூடத் தெரியாம ஒரே வீட்ல இருக்கேன். தப்பா நினைச்சுப்பாளோ?’

‘இந்தக் குந்தவையாவது சொல்லக் கூடாது, ஒரு ஃபோன்?’

ஓரிரு நிமிடங்களிலேயே கீழ் வீட்டில் விளக்குகள் எரிவதும் நடமாட்டமும் பரபரப்புமாக இருப்பதையும் உணர்ந்தாள்.

‘இப்ப கீழ போறதா, இல்ல தூங்கினது தூங்கினதாவே இருக்கட்டுமா?’

‘ஒருவேளை அவங்க முன்னாலயே கூப்பிட்டு, மழைல எனக்குக் காதுல விழலையோ?”

கதவைத் தட்டும் சத்தம் கேட்ட நொடியில் மின்சாரம் உயிரை விட்டது.

இருட்டில் மொபைலைத் தேடி, அதன் வெளிச்சத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டவள், இன்று ராப் அரௌண்ட் ஸ்கர்ட்டும் டீ ஷர்ட்டும் அணிந்திருந்ததில், நிம்மதியாகி, கதவைத் திறக்க, கபிலன் நின்றிருந்தான்.

காவேரியின் மூத்தார் இறந்து விட்டதாகத் தகவல் வர, எல்லோரும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

‘இந்த மழை இருட்டிலா?’

“மூத்தார்னா?”

“நீ முதல்ல கீழ வா”

சியாமளா “ஸாரி அங்கிள், ஸாரி ஆன்ட்டீ” என யாரும் எந்த வருத்தமும் இன்றி இருந்தனர்.

சாரநாதன் “சம்பந்தி, தாலி துக்கம். பாட்டியும் எங்க கூட வராங்க. நீ மேல தனியா இருந்துப்பியாம்மா, துணைக்கு கபிலன் இங்கதான் கீழ இருப்பான். உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”

‘பிரச்சனையா, திருப்பதி பெருமாளே லட்டோட வந்திருக்கார். அப்படியே இருத்தாலும் ஆல் அப்ஜக்ஷன்ஸ் ஓவர் ரூல்ட் அங்கிள்’

மனதில் ஒலித்த ‘தித்திக்குதே…’ பாடலை ம்யூட் செய்து,

“நோ இஷ்யூ அங்கிள். ஸாரி அங்கிள். என்னால உங்களுக்கு…’

செண்பா “எத்தனை நாளுக்குதான் இப்படி அந்நியமா தள்ளி நின்னே பேசுவ சியாமளா?”

திடீரென முளைத்த சந்தேகத்தில், சியாமளா “செழியன் அங்கிளும் வள்ளி ஆன்ட்டியும்…”

“நேத்துதானேம்மா அவங்க விஜய்க்கு வீடு பார்த்து வைக்க, கோயமுத்தூர் போனாங்க”

“ஹான் ஆன்ட்டீ”

மண்டைக்குப் பின் கபிலனின் பார்வைச் சூட்டை உணர்ந்தவள், அவர்கள் ஆயிரம் பத்திரம் சொல்லிக் கிளம்பும் வரை அவன் பக்கமே திரும்பவில்லை.

கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்த கபிலன்,

“உன்னை யாரு என் கூடத் தனியா இருக்க ஒத்துக்கச் சொன்னது?”

“ஏன், உங்களுக்கே உங்க மேல நம்பிக்கை இல்லையா கபீஷ்?”

“அதெல்லாம் நிறைய இருக்கு. ஆனாலும்…”

ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிய சியாமளா, நிதானமாக “ஆனா, எனக்கு எம் மேல நம்பிக்கை இல்லையே பேபி”



 
Last edited:

Author: VedhaVishal
Article Title: குறுநகை போதுமடி! 9
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.