சத்தியமாய் சத்யா..!
“என்னங்க..”
அழைத்தது சத்தியம்.
சத்தியம் என்றால் இது நீங்கள் நினைக்கும் சத்தியமில்லை. இந்த சத்யம், ஐம்பது ஆண்டுகாலமாய் என்னுடன் வாழ்ந்து, என் துக்கங்களை அதிகப்படுத்தி, என் சந்தோஷங்களுக்கு காரணமாய் இருந்த என் அருமை மனைவி சத்தியவாணி.
சத்யா, வாணி, செல்லம், தங்கம் என்று செல்லப் பெயர் வைத்து அழைக்க நூறு வாய்புகள் இருந்த போதும் நான் அவளை அழைப்பது என்னவோ சத்தியம் என்று தான். நல்லவர்கள் சத்தியத்தை மீறுவதில்லை. நான் என் மனைவியை மீறுவதில்லை!
“இந்தாங்க..”
சத்தியம் மீண்டும் அழைத்தது. இந்த முறை அழைப்பில் காரம் சற்று கூடி இருந்தது.
எப்பொழுது, ‘என்னங்க’, ‘இந்தாங்க; ஆகிறதோ அப்போது சத்தியத்தின் கோபம் எல்லையை தொட்டு விடும் தொலைவில் இருக்கிறது என்று அர்த்தம்.
அந்த கோபத்தை எல்லையிலேயே நிறுத்துவதில் தான் என் ஐம்பது ஆண்டுகால திருமண வாழ்வின் வெற்றி ஒழிந்து கொண்டிருக்கிறது.
அந்த சத்தியத்தின் கோபம் எல்லையை கடந்தால், உலகம் தாங்காது. இந்த சத்தியத்தின் கோபம் எல்லையை கடந்தால் என் வீடு தாங்காது. அதனால் உடனேயே,
“சொல்லுமா” என்றேன்.
“என்ன தேடறீங்க?”
“கண்ணாடி மா. எங்க வச்சேன்ன்னு தெரியல, அதை தான் தேடறேன். நைட் கூட புத்தகம் படிச்சிட்டு, இந்த மேசைல தான் வச்சேன். இப்போ காணோம். அது கிடக்குது விடும்மா. என் கண்ணாடி இல்லைன்னு பெரிசா என்ன மாறிடும்? விஜய் திரிஷாவை விட்டுட போறாரா என்ன? நீ எதுக்கு கூப்ட அதை சொல்லுமா. மறந்துட போற?”
“ஓ..நான் மறந்துடுவேன்...” அவள் என்னை நக்கலாக பார்த்தாள்.
சத்தியத்தின் பார்வையில் என் கால் நுனியின் ஒரு ஓரம் கோபத்தில் துடித்தது. ஏன் கால் நுனி என்று கேட்கிறீர்களா? ஐம்பது ஆண்டுகால திருமண வாழ்வு என்று சொல்லவில்லை? மூக்கின் நுனி துடிப்பது எல்லாம் முதல் ஐந்து வருட திருமண வாழ்விலேயே காலாவதி ஆகிவிடும்.
“நான் எதையும் மறக்கல. மறந்துட கூடாதுன்னு தான் மேசையில வச்சேன். நீ சுத்தம் செய்யறபோது இடம் மாத்தி...”
நான் சொல்ல வந்ததை, சத்தியத்தின் “என்ன..” என்ற ஒரு அதட்டல் விழுங்கியது.
“வீடு சுத்தமா இருக்குன்னு சொன்னேன் மா”
“சொன்னது ஞாபகம் இருக்கில்லை?”
“இருக்கு மா”
“இங்க மண்டையை மண்டையை ஆட்டிட்டு, அடுத்த வாரம் எங்க வீட்ல கெட்டூகெதர் வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டு வந்தீங்க.. நடக்கறதே வேற. வெளியே சாப்பாடு சொல்லிடலாம், பபே வச்சிடலாம். உனக்கு வேலை இருக்காதுன்னு நீங்க என்ன சொன்னாலும், உங்க பிரண்ட்ஸ் முன்னாடி, என்னால ஈன்னு இளிச்சிட்டு நிக்க முடியாது. புரிஞ்சுதா?”
“புரிஞ்சுது மா”
“எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டீங்களா?”
“கிப்ட், ஸ்பேர் சாவி, சுகர் மாத்திரை, பிபி மாத்திரை, லோடர் டோஸ் கூட எடுத்து வச்சிக்கிட்டேன். போன் புல் சார்ஜ் போட்டு எடுத்துக்கிட்டேன். ஆட்டோ புக் பண்ணிட்டா கிளம்பிடலாம்.” என் பரபரப்பு சத்தியத்திற்கு புரிந்து இருக்க வேண்டும்.
“கிளம்ப அவ்ளோ அவசரம்” என்றவள் என்னை ஒரு தினுசாக பார்த்து, “கண்ணாடி கிடைச்சிடுச்சா?” எனக் கேட்டாள்.
“கிடைக்கல மா. ஆனால், எனக்கு இப்போ கண்ணாடி இல்லாமையே கண்ணு நல்லா தெரியுது. நீ தினமும் எனக்காக பார்த்து பார்த்து செய்யற மருத்துவ சமையல்ல, கண் பார்வை குறைபாடு சரி ஆகிடுச்சுன்னு நினைக்கறேன்”.
“இருக்கும்...இருக்கும்” என்றவளை பார்க்க, எனக்கு உள்ளுக்குள் ஒரே சிரிப்பு. பின்னே சத்தியத்தின் முன்னே, நேருக்கு நேராக நின்று, ‘உன் சமையல் மருந்து போல இருக்கிறது’ என்று சொல்லி விட்டேன் இல்லையா?
பல அறிவுரைகள், சில நினைவூட்டல்களுக்கு பிறகு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.
ஒ.டி.பி. சம்பிரதயாங்கள் முடிந்து, என் நுரையீரல் முழுக்க, சுதந்திர காற்றை நிரப்பி, அதை அனுபவிப்பதற்குள்,
“சார், டிராப் லொகேஷன்ல பள்ளம் தோண்டி இருக்காங்க. ஒரு தெரு முன்னாடி இறக்கி விட்டுடறேன். ஓகே தானே?” எனக் கேட்டான் ஓட்டுநர்.
“பரவாயில்லை பா. நான் பார்த்துக்கறேன்.” என்றேன்.
இப்படி எனக்கிருந்த ஒரே ஒரு பெரிய தடையை தாண்டி நான் செல்லவிருப்பது, என் நண்பன் வெங்கடகிருஷ்ணணின், ஐம்பத்து இரண்டாவது திருமண நாள் விழாக் கொண்டாட்டத்தை சிறப்பிக்க. சம்சார சாகரத்தில் அவன் என்னை விட இரண்டு வருடம் சீனியர்.
பொதுவாக ஐம்பதாவது வருட திருமண நாளை தான் பெரிதாக கொண்டாடுவர். ஆனால், வெங்கடகிருஷ்ணன் ஐந்து வருடமாக மகனுடன் அமெரிக்கவாசியாகி போனதால், ஐம்பத்தி இரண்டாவது வருடத்தை சிறப்பாக கொண்டாட வேண்டிய கட்டாயம்.
“சார், அடுத்த தெரு தான் லொகேஷன்.” என்றபடி, ஓட்டுநர், அந்த மூன்று சக்கர வாகனத்தில் முக்கால் வட்டம் வரைந்து, நிறுத்த,
ஜிபேவில் சில நூறுகளை ஓட்டுநர்க்கு அனுப்பி, டிஜிட்டல் இந்தியாவின் கௌரவமிக்க குடிமகனானேன்.
சில நிமிட தேடல்களிலேயே நண்பனின் வீட்டை கண்டுபிடித்து விட்டேன்.
வாசலிலேயே நின்ற நண்பனின் மனைவி,
“வாங்க..வாங்க. எப்படி இருக்கீங்க? வீட்ல மேடமையும் அழைச்சிட்டு வந்து இருக்கலாம்ல? அவர் உள்ளே தான் இருக்கார். உள்ளே போங்க” என்று இன்முகமாக வரவேற்றாள்.
அவளுக்கு உரிய பதில் சொல்வதற்குள், வேறு யாரோ ஒருவர் வர, அவரிடமும்,
“வாங்க..வாங்க. எப்படி இருக்கீங்க? வீட்ல சாரையும் அழைச்சிட்டு வந்து இருக்கலாம்ல? அவர் உள்ளே தான் இருக்கார். உள்ளே போங்க” என்று அதே இன்முகமாக அவர் வரவேற்பது முதுகுக்கு பின் கேட்டது.
‘ஓ..இது மனித இனத்தை சேர்ந்த சாட்ஜிபிடி போல் இருக்கு’ என்று நினைத்துக் கொண்ட, என் மனம், சத்தியம் சொன்ன, ‘ஈன்னு இளிக்க முடியாதுவை’ நினைத்துக் கொண்டது.
“டேய்...வெங்கட்டு” என்று நண்பனை அணைத்துக் கொள்ள
“நீங்க..நீ..” என்று வெங்கட்டு குழம்பினான்.
“டேய்..கோபாலகிருஷ்ணன் டா” என்னை நானே அறிமுகப் படுத்திக் கொள்ள, சில நொடி தடுமாறி பின் புன்னகைத்தான்.
“ஆளே மாறிட்ட கோபால்”
“நான் கண்ணாடி மட்டும் தான் போடல. அதுக்குன்னு ஆளையே மறந்துடுவியா?” செல்லமாக கோபித்துக் கொண்டேன்.
“வயசாகுது டா மறதி” என்று சமாளித்தவனை மன்னித்தேன்.
“அதை விடு. நீ என்ன டா. 5 வருஷத்தில சதை வச்சு, முடிக்கு சாயம் பூசின்னு முழு அமெரிக்காகாரனாகிட்ட?”
இப்படி ஆளுக்கு ஒன்றாய் பேச, நேரம் போனதே தெரியவில்லை.
கேக் வெட்டல்; ஊட்டல். கணவனின் கையால் மனைவிக்கு பூச்சூடல் என திருமண நாளின் சம்பிரதாயங்களுக்கு பிறகு வெங்கட்டுவின் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.
ஆம்! வெங்கட்டுவின் நண்பர்கள் தான். அது என்னவோ அன்று வந்திருந்தவர்கள் அனைவருமே அவனின் பள்ளிகால நண்பர்கள். கல்லூரிகால நண்பர்களில் என்னைத் தவிர்த்து, யாருமே சொல்லி வைத்தது போல் வரவேயில்லை.
“இப்படித் தான் பாருங்க. எங்க பிரண்ட் ஒருத்தன் சுபாஷ்ன்னு பேரு. ஏழு வருஷமா ஒரு பெண்ணை காதலிச்சு, வீட்ல தெரிஞ்சு பிரச்சனையாகி, நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கல்யாணம் பண்ணிடலாம்ன்னு ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம். இவனை மாலை வாங்கிட்டு வர சொல்லி இருந்தோம், இவன் என்னடான்னா மலர் வளையம் வாங்கிட்டு வந்துட்டான்” என்று சொல்ல, வெங்கட்டுவின் நண்பர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“அப்பறம் என்னாச்சு?”
“அப்பறம் என்ன, ஏழு வருஷ காதல், இந்த ஏழரை பார்த்த வேலையில் புட்டுகிச்சு. அதுல பாருங்க..அப்போவே கல்யாணத்துக்கு பிறகு என்ன நடக்கும்ன்னு அவனுக்கு தெரிஞ்சு இருக்கு”
“டேய்..டேய் மானத்தை வாங்காத டா. அப்பறம் நீ பண்ணது எல்லாம் நான் சொல்ல வேண்டி வரும்” வெங்கட்டு மிரட்டினான்.
“வேணாம்..வேணாம்..” என்று நான் கெஞ்ச கெஞ்ச, அவன் சொல்லத் தொடங்கினான்.
“இவன் காலேஜ்ல அனிதான்னு ஒரு பொண்ணை லவ் பண்ணான். அந்தப் பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி, அதை ஏதோ ஞாபகத்துல கவிதாங்கற பொண்ணுகிட்ட கொடுத்துட்டான்.”
“அப்பறம்..”
“அப்பறம் என்ன, அந்தப் பொண்ணு, இப்போவே அனிதாக்கு எழுதின லெட்டரை என்கிட்டே தந்து இருக்க, உன்னை நம்பி நான் எப்படி லவ் பண்றதுன்னு அசிங்க அசிங்கமா கேட்க; இவன், நான் உன்னைத் தான் லவ் பண்றேன். நீ என்னை கண்டுக்க மாட்டன்னு தான் அனிதாக்கு லெட்டர் எழுதினேன்ன்னு சொல்ல, கவிதா இவனை அடிக்கறதுக்கு முன்ன, இதை எல்லாம் ஓரமா நின்னு பார்த்திட்டு இருந்த அனிதா இவனை அடிச்சிடுச்சு” என்று சொல்ல, சிரிப்பலை ஓய வெகு நேரமானது.
ஒவ்வொருவராக விடைபெற்று கொள்ள, வெங்குட்டுவின் மனைவி,
“வந்ததில் ரொம்ப சந்தோசம்.. அடுத்த முறை மேடமை/ சாரை அழைச்சிட்டு வாங்க” என்று சாட்ஜிபிடியின் விதிமுறைகள் படி வழி அனுப்பி வைத்தார்.
“அப்பறம் வெங்கட்டு, அனிதா இல்லைன்னா கவிதா நம்பர் வச்சு இருக்க?” என்று நான் அவனை இரகசியமாக கேட்க, அவன் அட்டகாசமாக சிரித்து,
“உனக்கு இன்னமும் விளையாட்டு டா” என்று வழி அனுப்பி வைத்தான்.
அது என்னவோ எவ்வளவு யோசித்தும், எனக்கு வெங்கட்டு சொன்ன, அந்த சம்பவம் நினைவுக்கு வரவேயில்லை. வீட்டுக்கு சென்று, என் டைரியில் தேட வேண்டும் என்று குறித்துக் கொண்டேன்.
-*-*-
“பங்க்ஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” சத்தியம் கேட்க,
“முடிஞ்சுது மா. வெங்கட்டோட வைப் உன்னை ரொம்ப விசாரிச்சதா சொன்னங்க. அடுத்த முறை கட்டாயம் உன்னையும் அழைச்சிட்டு வர சொன்னங்க”
“பசங்க எல்லாம் வந்து இருந்தாங்களா?”
“என்னம்மா? அவுங்க எப்படி வருவாங்க? அமரிக்கால இருந்து இதுக்காக வருவாங்களா என்ன?”
“மச்..பொண்ணு தான் அமெரிகாவுல இருக்கு. பசங்க இங்க தான இருக்காங்க?”.
“என்ன மா மறந்துட்டியா? அவருக்கு பொண்ணே கிடையாதே?”
சத்தியம் என்னை முறைத்தபடி, அவள் கைபேசியில் ஒரு புகைப்படத்தை தேடி எடுத்து,
“இது தான் வெங்கட் அண்ணா பொண்ணு. இது அவுங்க பிள்ளைக. இது மருமக பொண்ணுங்க...” என்று சொல்ல,
நடுவில் இருந்த நபரை எங்கோ பார்த்தது போல் இருக்கவும்,
“இது யாரு மா?” என்றேன்.
“ஏங்க..இது வெங்கட் அண்ணாங்க” என்று சத்தியம் அதிர்ச்சியானது.
“வர வர உன் ஞாபக மறதிக்கு அளவே இல்லை சத்தியம். இது வெங்கட்டு இல்லை. இவன் தான் வெங்கட்டு” என்று நான் என் கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை காண்பிக்க,
சத்தியம் நெஞ்சில் கை வைத்துக் கொண்டது.
“யோவ் எங்கயா போயிட்டு வந்த?” என்று சத்தியம் பதற, எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மரியாதை காற்றில் பறந்ததை கூட, ஐம்பது வருட திருமண வாழ்வின் உரிமைச் சலுகை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வெங்கட்டு? அவன் சொன்ன அனிதாவும் கவிதாவும்? அது எப்படி பொய்யாகும்?
“சரி நீ சொல்றது போல இவன் வெங்கட்டு இல்லைன்னு வச்சுகிட்டாலும், என்னை அந்த வீட்டில் எப்படி எலாருக்கும் தெரிஞ்சு இருந்தது?” என்றேன் சவாலாக.
“அந்த ஒரு ஈர வெங்காயம் தான் எனக்கும் புரியல”
“மறந்துட்ட சத்தியம். வயாசுகுதுல்ல? அதனால குழப்பிக்கற மா. இது வெங்கட்டு இல்லை. இதான் வெங்கட்டு” என்று நான் மீண்டும் அழுத்திச் சொல்ல, சத்தியம் என் சட்டையை பிடித்துக் கொண்டது.
“யோவ்...நீ யார் வீட்டுக்கோ போனதை கூட மன்னிச்சுடுவேன் யா. ஆனால் எனக்கு மறதி, உனக்கு ஞாபக சக்தி அதிகம்ன்னு சொல்ற பார்த்தியா? அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் யா”
“சத்தியம்.. என்னம்மா?”
“சரி, காலையில கண்ணாடி தேடினியே கிடைச்சுதா?”
“கிடைக்கலையே..”
“எப்படி கிடைக்கும்? எப்படி கிடைக்கும்ங்கறேன்?”
நான் திறுதிறுக்க,
“நீ இதுவரைக்கும் கண்ணாடியே போட்டதில்லையே யா? அப்பறம் எப்படி கிடைக்கும்?” என்றாள்.
சத்தியம் சொன்னதும் நெஞ்சு பகுதியில் லேசாக ஒரு வலி மேலெழும்பியது.
“என்ன இப்போவாவது பலப் எரியுதா?”
“கண்ணாடி விஷயம் வேணா, நான் மறந்து இருக்கலாம். ஆனால், வெங்கட்டு, மேட்டர்ல நான் சொன்னது தான் சத்தியம்” என்றேன் சத்தியத்தில் சற்று அழுத்தம் கொடுத்து.
சத்தியத்தின் முகத்தில் தீவர யோசனை. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நான்,
“நான் வேணா மறந்து இருக்கலாம் மா. அது எப்படி அந்த வீட்டில் இருந்த ஒவ்வொருத்தரும் மறந்து இருப்பாங்க?”
“யாருக்கு தெரியும்? உன்னை மாதிரி ஒரு கோபாலு, அங்கேயும் இருக்கானோ என்னவோ? அவனை ரொம்ப நாள் கழிச்சு பார்த்து, நீ தான் அதுன்னு நினைச்சு இருக்கலாம். இல்லை.. அங்க இருந்த வெங்கட்டும் உன்னை மாதிரி ஒரு ஞாபக மறதி கேசா இருந்து இருக்கனும்”
“ச்ச இருக்காது மா, நானே மறந்த என் காலேஜ் விஷயம் எல்லாம் அவன் சொல்லிட்டு இருந்தான். தெரியுமா?” என் மனம் அனிதாவையும் கவிதாவையும் நினைத்துக் கொண்டது.
“வெங்கட்டு அண்ணா, உன் கூட பேங்க்ல ஒண்ணா வேலை பார்த்தவர். அவர் எப்போ உன் கூட காலேஜ்ல படிச்சார்?”
இப்படியாக நீண்ட நேர வாக்குவதங்களுக்கு பிறகு, ஏகமனதாக, என் மற்றொரு நண்பன், சோமசேகரை அழைப்பது என்று முடிவானது.
“சேகரா எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் டா. ஆமாம். நீ ஏன் வெங்கட்டு வீட்டுக்கு வரல?”
“அது..அது வேற ஒரு அவசர வேலை அதான்” என்று நான் தடுமாற, திரும்பாமலே, சத்தியத்தின் காளி ஸ்வரூபம் எனக்கு தெரிந்தது.
“டேய் சேகரா, நல்லா யோசிச்சு சொல்லு. நான் வெங்கட்டு வீட்டுக்கு வரல?” என்று நான் மீண்டும் கிசுகிசுப்பாக கேட்க, சத்தியம் எதையோ எடுத்து தரையில் நங்கென்று போட்டது.
“டேய் நீ வரல டா. சும்மா உளறாம போய் படு. காலையில் பேசுவோம்” சேகர் துண்டித்துவிட, எனக்குத் தான் கைப்பேசியை காதில் இருந்து எடுக்க மனதே இல்லை.
“தெரியாதாவுங்க வீட்ல போய் நாலு மணி நேரம் இருந்துட்டு மூக்கை பிடிக்க தின்னுட்டு வந்து இருக்கியே, உன்னை என்ன பண்ணலாம்?” சத்தியம் கடிக்க, அமைதியாக நின்று கொண்டேன்.
“இந்த மூஞ்சியை பாவமா வச்சுக்கிட்டு, ஏமாத்தறதை முதல்ல நிறுத்து. அது எப்படி, நீ கண்ணாடி போடவே மாட்டங்கறது உனக்கு ஞாபகம் இருக்காது.. ஆனால், நைட் கண்ணாடியை மேஜையில தான் வச்சங்க்றதும், விஜய், திரிஷா கூட தான் கல்யாணத்துக்கு போனாருங்கறதும் மட்டும் உனக்கு ஞாபகம் இருக்கும்?”
சத்தியம் லட்சார்ச்சனையில் தொடங்கி, கோடி நாமவெளி வரை அனைத்தையும் முடித்து, இறுதியாக,
“போ, போய் முதல்ல வெங்கட்டு அண்ணன்க்கு போனை போட்டு, இது மாதிரி ஆகி போச்சு. அதான் வர முடியலைன்னு சொல்லு” என்றதும் தான் நான் இடத்தை விட்டு நகர்ந்தேன்.
வெங்கடகிருஷ்ணனுக்கு அழைத்தேன்.
“டேய் வெங்கட்டு..” என்று நான் தொடங்க, அவன் கோபித்துக் கொள்ள, நான் அவனை சமாதானப்படுத்த என்று அரை மணி நேரம் நட்பை வளர்த்து, பிறகு தான் தொடர்பை துண்டித்தேன்.
“என்ன சொல்றாரு வெங்கட் அண்ணா?”
“ம்ச்..ரொம்ப கோவிச்சுக்கிட்டான். சத்தம் போட்டான்”
“பின்னே, நீங்க போகலைன்னா கோபம் வராதா?”
“அவன் கோவிச்சுகிட்டது, நான் அவன் பேக் பண்ணி வச்ச ஆவக்காய் ஊறுகாய் எடுக்காம வந்ததுக்கும், போட்டோ எல்லாம் சரியா எடுக்கலைங்கறதுக்கும்”
“என்ன? அப்போ நீங்க காமிச்சது தான் வெங்கட் அண்ணாவா? அப்போ சேகர் அண்ணா சொன்னது?”
“அது..இந்த வெங்கட்டுக்கும் ஞாபக மறதி போல் இருக்கு. நான் வந்தேன்னு நினைச்சு பேசிட்டு இருந்தான். அதை ஏன் மாத்தி சொல்லணும்ன்னு அப்படியே விட்டுட்டேன்” என்றேன்.
“நல்லா வந்து சேர்ந்தீங்க பாருங்க” என்று சத்தியம் தலையில் அடித்துக் கொண்டது.
சத்தியம் கிடக்கட்டும், இப்போது நான் எப்படி அந்த வெங்கட்டுவிடம் இருந்து அனிதா மற்றும் கவிதாவின் தொடர்பை பெறுவது?
***முற்றும்***

Author: siteadmin
Article Title: சத்தியமாய் சத்யா..! - Writer X
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.