• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக... 5

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
59
222
53
Chennai
நிழலாக துணையாக... 5
காலை பதினோரு மணி. அன்று கடைசி தை வெள்ளி. காலையிலேயே உத்ராவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு விளக்கேற்றி, பழங்களை வைத்து வணங்கினாள். க்ளீனிக் செல்லத் தயாராகி இறங்கி வந்த தேவசேனாதிபதி வேண்டுமென்றே மகளிடம்

“என்னடா பம்கின், ஒரே புகையா இருக்கு?”

“மம்மி னே பூஜா கியா டாடீ”

“என்ன பிரசாதம்?”

“ம்… ரசம் சாதம்”

உத்ரா யோசித்துச் சொன்ன அழகிலும் பதிலிலும் சிரித்தவன், “அதில்லடா, உன் மம்மி சாமிக்கு என்ன சாப்பாடு குடுத்தாங்க?”

“மம்மி…”

அலர்மேல்வள்ளி “எனக்கு அவ்வளவா சமைக்கத் தெரியாது மாமா. அதனால ஃப்ரூட்ஸ்தான்”

“எவ்வளவா சமைக்கத் தெரியும்?”

“இட்லி, தோசை, பிரட்…”

“மேகி?”

“கரெக்ட் மாமா, அதுவும் தெரியும்”

“நம்ம வீட்டு சாமிக்கு இனி எப்பவுமே பழம்தான்னு சொல்லு”

“நல்லா காஃபி போடுவேன் மாமா”

“போடாம, ராஜ் ரோஸ்ட்ர்ஸ் வீட்டுப் பொண்ணுன்னா சும்மாவா?”

பேசிக் கொண்டே இருந்தவன் சட்டென முகம் மாறி, அமைதியாக உண்ணத் தொடங்கினான்.

அன்று மதியம் வீட்டுக்கு வந்தவனின் கையில் சிக்கரி கலக்காத முதல் தரமான, ஃபில்டர் காஃபி பொடி.

“ஸாரி மா, எனக்கு காஃபி டச் விட்டுப் போனதுல நீ மிஸ் பண்ணுவன்றதையே மறந்துட்டேன்”

“இப்ப நான் உங்களுக்கும் காஃபி போடலாம்தானே?”

“வெயிட்டிங்”

அவளது ஒரு பதிலில் காஃபியை மிஸ் செய்கிறாள் என்பதைப் புரிந்து, அவன் வாங்கி வந்ததில் அலருக்கு அத்தனை ஆறுதலாக இருந்தது.

அன்று மாலை சற்றும் எதிர்பாராமல் அலர்மேல்வள்ளியின் பெற்றோர்
குமரன் மனைவியின் வளைகாப்புவிற்கு அழைக்க வந்தனர்.

கணவன், மனைவி இருவருமே வந்தவர்களை உபசரித்துப் பேசினர். அழைப்புக்குத் தலையசைத்தனர்.

உத்ரா அலர்மேல்வள்ளியை ‘மம்மி’ என்றதை அபிராமி ஜீரணிக்கத் திணறினார்.

மணிராஜ் “ஏன் அலர், இளைச்சுப் போயிட்ட, சரியா சாப்புடுறியா இல்லையா?”

“நல்லாதாம்ப்பா சாப்பிடறேன். இங்க வேலையும் அதிகம் கிடையாது. அதே போலதான் இருக்கேன்”

அபிராமி “சமையல் எதுவும் செய்யுறியா, இல்லாட்டினா, அந்த ஹிந்திக்கார பொண்ணுதான் சமைக்குதா?”

“அதான் அவங்க, தேவகி அக்கா ரெண்டு பேர் இருக்காங்களே”

“இருந்தாலும், நம்ம கையால ஆக்கறது போல வருமா. தேவா தம்பி, அலரு மீன் குழம்பு வெச்சா அம்புட்டு ருசியா இருக்கும். முட்டைலயே அத்தினி வெரைட்டி செய்வா. அப்பப்ப சமைக்கச் சொல்லுங்க”

தேவசேனாதிபதி மனைவியைக் கூர்ந்தபடி தலையை பலமாக ஆட்டினான்.

அபிராமி “பாவம், உன் நாயெல்லாம்தான், உன் ரூமையே சுத்திச் சுத்தி வருது”

“உங்களுக்கு பரவாயில்லன்னா, இங்க அனுப்பி விடுங்களேன்”

“செய்யலாமே”

மணிராஜ் “அப்ப நாங்க கிளம்பறோம், வீட்டுக்கு வாங்க தேவா. ஆச்சிக்கு பேத்தியைப் பார்க்காம கண்ணே பூத்துப் போச்சாம்”

தேவா “கொஞ்ச நாள் ஆனா அவளே வருவா”

இரவில் விளக்குகள் எல்லாம் அணைந்தபின், அலர் “தேங்க்ஸ் மாமா”

“இது எதுக்கு?”

“எல்லாத்துக்கும்”

“ஸாரி அலர்”

“ஏன்?”

“நான் அசைவம் சாப்பிட்டு பதினேழு வருஷமாகுது. உத்ராவுக்கு இன்னும் அசைவம்னா என்னன்னே தெரியாது. பழக்கலை. உனக்கு புடிக்கும்னு தோணவே இல்லை, அதுக்குதான் ஸாரி”

“...”

“வெட்ரினரி & அனிமல் ஹஸ்பண்டரி படிக்கும்போதே விட்டுட்டேன் மா. கஷ்டப்பட்டு அதோட உயிரைக் காப்பத்தற நானே அதை சாப்பிடறது எனக்கு சரியாப் படாததால நான் சாப்பிட மாட்டேன்னு எனக்கே பிராமிஸ் பண்ணிக்கிட்டேன்”

“எல்லா வெட்ரினரி டாக்டர்ஸும் இப்படிதான் இருப்பாங்களா மாமா?”

“தெரியாது. எனக்கு அதான் சரின்னு பட்டது. விட்டுட்டேன். அப்புறம்… ம்ப்ச், அதை விடு”

“ ஸாரி கேட்டீங்க, சரி. இப்ப நான் இந்த வீட்ல நான் வெஜ் சமைச்சா உங்களுக்கு ஓகேவா?”

“...”

*********************

கடந்த பத்து நாள்களில் ஒரு முறை சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கும், வாசுதேவனின் தந்தையின் அறுபதாம் கல்யாணத்திற்கும் உத்ராவுடன் குடும்பமாகச் சென்று வந்தனர்.

தேவசேனாதிபதி “ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்” என இரண்டு நாள்களுக்கு முன்பே சொல்லி இருந்தும் அலர்மேவ்வள்ளி வெளியில் செல்லவே முதலில் வெகுவாகத் தயங்கினாள்.

“இது என்ன புடிவாதம் அலர், நான் உன்னை எதுக்காவது ஃபோர்ஸ் பண்றேனா? ஒரே வீட்ல இருக்கோம். எத்தனை நாளைக்கு நீ இப்டி பட்டும் படாம அந்நியமாவே இருப்ப?”

“...”

“நான் என்ன க்ளப்புக்கும், பப்புக்குமா கூப்பிடறேன், கோவிலுக்குதானே போகப் போறோம்”

”...”

“எத்தனை நாளைக்கு நீ இப்படி வெளில வாசல்ல போகாம வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும், சொல்லு?”

“...”

“உன்னை எனக்குப் புடிக்கல, கிழவனா இருக்க, வயசாளி, உன்னோட வெளிய வர விருப்பமில்லை, அருவறுப்பா இருக்குன்னு பளிச்சுனு சொல்லு, நான் பாட்டு வழக்கம் போல என் வேலையைப் பார்ப்பேன்”

“...”

“இந்தக் கல்யாணம் நாம ரெண்டு பேருமே எதிர் பார்க்காததுதான். ஆனா, அதை மதிச்சோ, இல்லை, அதுக்குக் கட்டுப்பட்டோ நீ இன்னும் இங்கதானே இருக்க, இல்ல வேற ஐடியா எதுவும் இருக்கா?”

“மாமா!”

“சிங்கம், புலி உறுமினாலே பயப்படாம எய்ம் பண்ணி ஊசி போடறவன் நான், நீ கத்தினா பயந்துருவேனா?”

“...”

“நான் சொல்றதைக் காது குடுத்து நல்லாக் கேளு. நமக்குக் கல்மாணமாகி ரெண்டு மாசமாகப் போவுது. நான் நம்ம உறவை எல்லா விதத்திலும், ஐ ரிபீட், எல்லா விதத்துலயும் நார்மலைஸ் செய்ய நினைக்கிறேன். அது உனக்குப் புரியுதா இல்லையா?”

“...”

“ப்ளேடோனிக் லவ், காவியக் காதல்னு சொல்லி ஜல்லியடிக்கவோ, இல்ல கல்யாணமே நடக்காத மாதிரி, பார்க்க அழகா, உள்ள தக்கையா இருக்கற நெட்டி பொம்மையாட்டம் ஒரு வாழ்க்கை வாழவோ எனக்கு துளிக்கூட விருப்பமில்லை. அப்புறம் உன் இஷ்டம்”

சத்தம் காட்டாது தயாராகி வந்தவளிடம் நவரத்னத்தில் முகப்பு வைத்த ஒரு செயினைக் கொடுத்தான்.

“போட்டுக்கோ”

குடும்பமாக வெளியில் சென்று வந்தது நன்றாகத்தான் இருந்தது. பின் இருபதுகளில் இருக்கும் அநேக இளைஞர்களை விட, அடர்ந்த மீசையும், மிலிட்டரி ஹேர் கட்டும், இறுகிய உடற் கட்டுமாக தேவசேனாதிபதி அழகனாகவே தெரிந்தான்.

வரும் வழியில் தேவசேனாதிபதி “அலர், இனிமே கம்பேர் செய்ய சேலத்துல பசங்க ஸ்டாக் இல்லையாம். நாம வேணா ஈரோடு போவோமா?” என்றதில், அலர்மேல்வள்ளி சிவந்துவிட்ட தன் முகத்தை வெளியே திருப்பிக் கொள்ள, தேவா சிரித்தது, காரெங்கும் எதிரொலித்தது.

*******************

லீலாவின் வளைகாப்பிற்கு தன் வீட்டிற்குப் போவதா, போனால் எப்படி எதிர்கொள்வர்? இன்னும் எத்தனை காலம் ஒடிப்போனவள் என்ற முத்திரையை சுமக்க வேண்டும்?

அம்மா, அப்பாவைப் பற்றிக் கவலையில்லை. இந்த பெரியப்பா, பெரியம்மா… அன்னிக்கு சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்ல பாத்துட்டு, பாக்காத மாதிரி போயிட்டாங்க. அவங்க பேசலைன்னா அது வேற. ஆனா வீட்டுக்குப் போனா அவங்களும் அங்கதானே இருப்பாங்க”

உள் அங்கணத்தில் இருந்த ஐன்னல் திட்டில் அமர்ந்து தனக்குள் மூழ்கி இருந்த அலர் “ஏ…. டாடீ, என் டாடீ வந்தாச்சு” என்ற உத்ராவின் கூவலில் திடுக்கிட்டு விழித்தபடி எழுந்து நின்றாள்.

‘நேரம் போனதே தெரியாமல் அப்படி என்ன குருட்டுயோசனை?’ எனத் தன்னையே சாடிக்கொண்டாள்.

தன் உதவியாளர் ஒருவருடன் அவசரமாக உள்ளே வந்த தேவசேனாதிபதி “நேஹா, நான் ஃபாரெஸ்ட்டுக்குள்ள காவேரி பீக் வரைக்கும் போகப் போறேன். எமர்ஜென்ஸி. வர நேரமாகும். எங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் சாப்பாடு எடுத்து வைங்க” என்றான்.

சொன்ன நேரத்துக்கு முன்பே வந்ததிலேயே அவனது அவசரம் புரிந்தது. அதிவேகமாக சாப்பிட்டு, உடைமாற்றி, தேவையான மருந்துகள், உபகரணங்களுடன் புறப்பட்டவன், உத்ராவைத் தூக்கி முத்தமிட்டான்.

“டாடி வர டயமாகும். நீ குட் கேர்ளா இருக்கணும். ரொம்ப குளுருது. ஸ்வெட்டரை கழட்டக் கூடாது. நேரத்தோட கொஞ்சம் தூங்கணும்”

“ம் டாடீ”

“ம் இல்ல, யெஸ் டாடி, ஓகே டாடி, சரி டாடின்னு சொல்லணும்”

“ஓகே டாடி”

“என் பம்கின் டா நீ”

நேஹாவிடம் “டேக் கேர், சிக்னல் கிடைச்சா நானே கால் செய்யறேன். உத்ராவை வெளில விளையாட விட வேண்டாம். லேசா சளி இருக்கு” என்றவாறே வாசல்வரை சென்றவன் என்ன தோன்றியதோ, அலர்மேல்வள்ளியை அருகே அழைத்தான்.

“தேவையில்லாம யோசிக்காத. புக்ஸ் வேணும்னா டீவிக்கு கீழ இருக்கற சைட் போர்ட்ல இருக்கு. எதையாவது எடுத்துப் படி. ஃப்ரீயா இரு, என்ன?”

“சரி”

ஒரு தலையசைப்புடன் காத்திருந்த வனத்துறை வாகனத்தில் புறப்பட்டுச் சென்றவன், மறுநாள் காலை ஏழு மணிக்கு மேல் கன்னத்தில் ப்ளாஸ்திரியும் கையில் பெரிய கட்டுமாக வந்தான்.

காவேரி பீக் ஏற்காட்டில் உயரமான, நிறைய காஃபி தோட்டங்கள் இருக்கும் பகுதி. Bean to Cup எனப்படும் ஈர அரவை, உலர் அரவை, காஃபி கொட்டையை வறுத்தல், அரைத்தல் என
காஃபி கொட்டைகளை செடியிலிருந்து பறிப்பது முதல் பருகும் வரை அனைத்து செயல்முறை நிலைகளையும் இங்கு பார்க்கலாம். இதற்கான ஸ்பெஷல் சுற்றுலா கூட உண்டு.

கடல்மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் இருக்கும் இவ்விடத்தில் காபி எஸ்டேட்டைத் தவிரவும் நல்ல இயற்கைக் காட்சிகளும் சிற்றருவிகளும், மூச்சடைக்கச் செய்யும் பள்ளத்தாக்கின் அழகும் உண்டு.

இங்கு காட்டெருமைகள், புளளிமான்கள், யானைகள், பல வகையான பாம்புகள், இன்னும் அடர்ந்த வனப் பகுதிகளில் புலிகள் போன்ற வனவிலங்குகள் கூட இருக்கின்றன.

சேர்வராயன் பள்ளத்தாக்கின் ஒரு மலைச்சரிவில் இரண்டு, மூன்று நாள்களுககு முன் கூட்டமாக அங்கு வந்த
பைசன் (Gaur) எனப்படும் காட்டெருமைகளில் பெரும்பாலும் வனப் பகுதிக்குள் திரும்பி விட, மூன்று மட்டும் பின் தங்கி விட்டன.

அவை ஆக்ரோஷமான மோதலில் ஈடுபட்டதில் டூரிஸ்ட்டுகளும் தோட்டப் பணியாளர்களும் அவஸ்தைக்கு உள்ளானார்கள். குறைந்த எண்ணிக்கையில்தான் எனினும், அங்கேயே வசிப்பவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே நடமாட்டம் தென்பட்டதில் பதட்டம் நிலவியது. இன்று காலையில் நடந்த பலமான மோதலில் ஒரு பைசனுக்கு நல்ல காயம். அதை நேரில் பார்த்தவர்கள் பயந்துபோய் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

அவற்றை மீட்டு காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட வனச்சரக அதிகாரிகள், அடிபட்ட பைசனுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத்தான் தேவசேனாதிபதியை அழைத்திருந்தனர்.

தேவசேனாதிபதிக்கு சிக்கிமிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் ராணுவத்துக்குச் சொந்தமான யாக் (Yak) எனப்படும் திபெத்திய - இமாலய காட்டெருமைகளை நாலரை வருடங்கள் வரை பராமரித்த அனுபவம் உண்டு.

‘யாக்’ குகளை விட கோர் எனப்படும் தெற்காசிய காட்டெருமைகள் பலமும் கனமும் பொருந்தியவை. பொதி சுமக்கும், கம்பளி, பால் தரும் சுலபத்தில் பழக்கக்கூடிய யாக்குகளைப் போல் நம்மூர் பைஸன்களோடு நட்பானவை அல்ல. மூர்க்கம் நிறைந்தவை. ஆக்ரோஷமாக சண்டையிடும் இயல்புடையது.

இதற்கு முன்பும் இங்கு இருக்கும் Gaur எனப்படும் பைஸன்களை வேலியில் இருந்து விடுவிக்கவும், பள்ளத்தில் இருந்து மேலே தூக்கவும் , இதே போல் சண்டையிட்டு அடிபட்டதற்கு சிகிச்சை அளித்ததும் உண்டுதான்.

வனத்துறை அதிகாரிகளும் அலுவலர்களும் மற்ற இரண்டு கோர்களையும் பிடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இதற்கே இரவு முழுதும் கடந்துவிட்டது.

ரத்தம் வழிய அடிபட்டுக் கிடந்த பைஸனுக்கு Dart gun எனப்படும் சிறிய துப்பாக்கி போன்ற கருவியில் ஊசியைப் பொருத்தி, மயக்க மருந்தையும், ஆன்ட்டிபயாடிக் மருந்தையும் சற்று தொலைவிலிருந்து மருந்தைச் செலுத்திய தேவசேனாதிபதி, கையிலிருந்த கருவியைத் தழைத்துப் பின் வாங்கும் முன், அதுவரை படுத்துக் கிடந்த பைஸன், ஊசி பாய்ந்ததும் அநிச்சையான தற்காப்புச் செயலாக, விருட்டென எழுந்து இடப்புறமாகப் பாய்ந்து விட்டது.

அது பாய்ந்த இடத்தில் நின்றிருந்த தேவா, மற்றும் இரண்டு வனத்துறை காவலர்களையும் தாக்கியது. மூவருமே சட்டென நகர்ந்துவிட்டாலும், முதலில் நின்ற தேவாவின் கன்னத்தில் கொம்பால் சற்றே ஆழமாகக் கீறி, கையிலும் அதன் முன்னங்கால் குளம்பால் பலமாக அடித்துவிட்டது. அடித்த வேகத்திலேயே மருந்தின் வீர்யத்தில் மயங்கியும் விட்டது.

மூவருக்கும் உடனடி முதலுதவி அளித்து, காஃபி எஸ்டேட்டின் மருத்துவமனையில் மருந்திட்டுக் கட்டி அழைத்து வந்தனர்.

உத்ரா இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, காலையில் வந்த நேஹாவை அலர் ‘நானே கூப்பிடறேன்’ என்று சொல்லி டீயை மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாள்.

குளித்துவிட்டு வந்து, வேறு வழியின்றி டிகாக்ஷன் போட்டு காஃபி குடித்தாள். நிர்மல் வந்து தோட்டத்து அலுவலகத்தின் சாவியை எடுத்துச் சென்றான்.

அவன் சென்றதும்
அலர்மேல்வள்ளி பூஜை அறையில் விளக்கேற்றுகையில் வண்டிச் சத்தம் கேட்டது.

கதவைத் திறந்தவள் பிளாஸ்திரி, கை கட்டு, ரத்தமும் சகதியும் தெறித்திருந்த அவனது உடைகளைக் கண்டு பயந்து போய் வழியை அடைத்து நிற்க, “ஏய், தள்ளுடீ” என்றபடி இடக்கையால் அலரைப் பிடித்து நகர்த்திவிட்டு உள்ளே வந்து “உத்ரா இன்னும் எழலைன்னா தூங்கட்டும். நிர்மலை வரச்சொல்லு” என்றுவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

அவன் சொன்னதைச் செய்ய விரைந்த அலர்மேல்வள்ளி, சட்டென நின்று யோசித்தவள், மேலே சென்று “நிர்மல் அப்பவே தோட்டத்துக்குப் போய்ட்டாரு”

ஒற்றைக் கையால் தன் ஷர்ட்டைக் கழற்ற முயன்றவன் “கால் பண்ணி வரச்சொல்லு”

“எதுக்கு?”

“கண்ணு தெரியுதில்ல, பாக்கறதானே, எனக்கு ஹெல்ப் செய்யத்தான்”

“...”

“இப்ப என்னத்துக்குடீ முறைக்கிற?”

“இப்ப மட்டும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா?”

“என்ன தப்பா நினைக்க மாட்டாங்களா?”

“உங்களை லவ் பண்ணி, திடீர் கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் குத்துக்கல்லாட்டம் இங்க இருக்கும்போது, அந்த நிர்மலைக் கூப்பிட்டா என்னைப் பத்தி அவன் என்ன நினைப்பான்?”

“என்ன நினைப்பான், என்ன வேணா நினைக்கட்டும். வலிக்குதுடீ, கூப்பிடு அவனை”

“யோவ் மாமா, உனக்குதான் இப்ப எதுவும் புரியல. உனக்கு என்ன ஹெல்ப் வேணுமோ நான் பண்றேன்”

“நீயா?!”

“நானேதான்” என்றபடி அலர் அவன் அருகில் நெருங்க, தேவா “ஆர் யூ ஷ்யூர்?”

சட்டை, பனியனை கழற்றுவது கடினம் என்பதால் கத்தரி கோலை வைத்து வெட்டினாள். காலைக் குளிரில் வெற்றுடம்பில் அலர்மேல்வள்ளியின் கை பட்டதில், தேவாவிற்கு மயிற்கூச்செறிந்தது. அவன் உடல் சிலிர்த்ததை உணர்ந்து நிமிர்ந்தவள் தேவாவின் கண்களை சந்தித்தாள்.

“என்ன்ன…?”

“நீ மரவள்ளிக் கிழங்கா, சக்கரவள்ளிக் கிழங்காடீ?”

“ம்… சேனைக் கிழங்கு”

தேவசேனாதிபதி வலியோடு வாய்விட்டுச் சிரித்ததில் கண்களில் நீர் கோர்த்தது.

கட்டு போட்ட இடத்தை பிளாஸ்டிக் ஷீட்டால் சுற்றி விட்டு வெந்நீரை வாளியில் பிடித்து ஒரு ஸ்டூலில் தூக்கி வைத்தாள்.

“குளிங்க மாமா, ஏதாவது வேணும்னா சொல்லுங்க”

அவனுக்கான இலகு உடைகளை அலர் எடுத்துக் கொடுக்க, இயன்றவரை தேவாவே தன் வேலைகளை செய்துகொண்டான்.

அலர் எப்படி அடிபட்டது என விசாரித்துக்கொண்டே அவனது சட்டை பொத்தான்களைப் போட்டாள். ஒரு ஸ்லீவ்லெஸ் ஸ்வெட்டரை அணிவித்தாள்.

“மாமா, மூணு பைசன்ல ரெண்டு பைசன் சண்டை போடும்போது மூணாவது என்ன செய்யும்?”

“சண்டையே அதுக்காகதான். அது ஒரு லேடி பைசன். அதுகிட்ட தங்களோட பலத்தை காட்டி மயக்கதான் அந்த அடிதடி. ஜெயிச்ச பைசனை, அந்த லேடி பைசனோட காட்டுக்குள்ள அனுப்பியாச்சு”

உரையாடல் சகஜமானதில் அலர்மேல்வள்ளி “நைட் முழுக்க காட்டெருமைக்கு மாமா வேலை பார்த்துட்டு அடி வேற வாங்கிட்டு வந்திருக்கீங்க” என்றவள், நாக்கைக் கடித்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள்.

“அடிப்பாவி, ஒரு கன்னிப்பையன் கிட்ட இப்படியா பேசுவ?”

“கன்னிப் பையன் இல்ல மாமா, கன்னிப் பையர்”

தூங்கி எழுந்த உத்ரா பேச்சுக்குரல் கேட்டுக் கதவைத் திறந்து “உனக்கு என்னாச்சு டாடீ?” என்றபடி உள்ளே வந்தாள்.

“டாடிக்கு அடி பட்ருச்சுடா குட்டி”

“எதுல டாடீ?”

குழந்தையை பயமுறுத்த விரும்பாத தேவசேனாதிபதிக்கு பொய் சொல்லவும் மனமில்லை. எதிர்காலத்தில் மீண்டும் இதுபோல் நடக்கும் வாய்ப்பு உண்டே?

மகளிடம் மெதுவாக நடந்தது சாதாரணம் போல் விளக்கிச் சொன்னான்.

உத்ராவை பைசனை விட
தன் தந்தைக்கு காலை உணவு, டீ, மாத்திரைகள் எனக் கொடுத்து, ரெஸ்ட் எடுக்கச் சொல்லி உதவிய அவளது மம்மிதான் அதிகம் ஈர்த்தாள். அதைத் தன் மழலையில் வெளிப்படுத்தவும் செய்தாள்.

“மம்மி நல்லா ஹெல்ப் பண்றாங்க, இல்ல டாடீ?”

“ஆமான்டா”

“மம்மிதான் நமக்காக எல்லாம் செய்வாங்க, இல்ல டாடீ?”

“நமக்காக மம்மியே எப்போதும் எல்லாம் செய்யணும்னு நினைக்கக் கூடாது” என்ற தேவசேனாதிபதியின் குரல் வெகுவாக இறுகி இருந்தது.
 
Jun 19, 2024
31
43
18
Trivandrum
😍😍😍

சக்கரவள்ளிக் கிழங்கு தான்..🙈🙈

சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவ போல பூத்து உக்காந்தேனே ஓரம்

 

S HEMA

New member
Mar 18, 2026
12
10
3
CHENNAI
Lady bison புண்ணியத்துல lady service கிடைச்சிருக்கு... Naish