• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

முட்டி அடித்த லூட்டி -சுதா கணபதி

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
47
5
8
chennai

முட்டி அடித்த லூட்டி

ஹலோ வாசகர்களே ! ஒரு குட்டி சுய அறிமுகத்திற்குப் பிறகு நான் அடித்த லூட்டியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன் . மனித உடம்பில் பல உறுப்புக்கள் ராப்பகலாக ஓய்ச்சல் ஒழிவின்றி உழைப்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பொதுவாக முட்டி, முழங்கால், கால்முட்டி, முட்டிக்கால் என்ற பல பெயர்களால் நான் குறிப்பிடபட்டாலும் , இருதயம் , மூளை , வயிறு , கண் போன்ற மற்ற உடல் உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்குக் கொடுக்கப் படுவதில்லை என்பதே என் கருத்து . மொத்தத்தில் இதிகாசங்கள், புராணங்கள், கதைகள் சினிமாக்கள் முதலியவற்றில் அதிகம் கவனிக்கப்படாமல் ஓரம் கட்டப்ப் பட்டு ரசிகர்கள் மற்றும் வாசகர்களின் கவனிப்பிற்காக ஏங்கும் துணைக் கதா பாத்திரங்கள் மாதிரிதான் என் நிலைமையும் .

சரி , இப்போ நான் எப்படி திடீரென்று ஒரு ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலம் ஆனேன் என்று பார்க்கலாம் . அறுபது வயதான தேவி பிறந்தது முதல் இன்று வரை அவள் உடலின் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன். சொல்லப்போனால் தாயின் கருப்பையில் உருவாகி, வளர்ந்த காலத்திலிருந்து அவளோடு இருக்கிறேன். குழந்தை பருவத்தில் நீந்தி, முட்டி போட்டு, தவழ்ந்து , நடக்க ஆரம்பித்த நாட்களில் எல்லாம் இடது முட்டியான நானும் என் இரட்டை சகோதரியான வலது முட்டியம் ரொம்ப பிசியாக இருந்தோம் . பள்ளி நாட்களில் தேவி பல விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் , பாராட்டுக்கள் வாங்கியதில் எங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. தேவி படிப்பிலும் படு சுட்டி. அதோடு துறு துறுவென்று ஏதாவது குறும்புகள் செய்வது தேவியின் வாடிக்கை . அதனால் அடிக்கடி “முட்டி போடும் ” தண்டனைக்குள்ளானாள் . இதில் ரொம்ப பாதிக்கப் பட்டவர்கள் நானும் எனது இரட்டை சகோதரியும் தான் . தேவிக்காக வலியையும் வேதனையையும் பொறுத்துக் கொண்டு சமாளித்தோம் .

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தேவியும் திருமணம்,முடிந்ததும் பெரும்பாலானபெண்களைப்போல குடும்பம் , குழந்தைப் பராமரிப்பு, அலுவலக வேலை என்று பம்பரமாக சுழன்றாள் . ஆபீஸ் வேலை நிமித்தம் அடிக்கடி டூர் செல்ல வேண்டி இருந்ததால் ஜீப் , கார் ரயில், விமானப் பயணங்களில் அவளோடு முழு மனதோடு ஒத்து உழைத்தோம் . ஐஸ்வர்யா ரேஞ்சில் பிப்டி கேஜி தாஜ்மஹாலாக கொடியிடையோடு இருந்த தேவி நடுத்தர வயதில் கொஞ்சம் வெயிட் போட்டபோதும் சலித்துக் கொள்ளாமல் அவளது எக்ஸ்ட்ரா எடையை லாவகமாக நானும் என் சகோதரியும் கையாண்டோம் . பேரக் குழந்தைகள் பிறந்த போது அவர்களை குளிக்க வைக்க "பேபிபேதர்கள், பாத் டப்கள்” போன்ற நவீன சாதனங்களை உபயோகிக்காமல் எங்களைத்தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சாய்வு நாற்காலியாக பயன்படுத்தினாள். கடவுள் பக்தி மிகுந்த தேவி வீட்டில் நடக்கும் பூஜைகளிலும் கோவில்களிலும் விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணுவாள் . அப்போதெல்லாம் அலுக்காமல் சலிக்காமல் , சுருதி பிசகாத இரட்டை நாயனம் போல செயல் பட்டு சகோதரிகள் இருவரும் அவளுக்கு புண்ணியம் தேடிக் கொடுத்திருக்கிறோம்.

அமைதியாக என் பணிகளைச் செய்து கொண்டிருந்த எனக்கு சிறிது நாட்களாக மனதில் ஏக்கமும் அதிருப்தியும் குடிகொண்டன . தேவியின் மீது கோபமும் ஆற்றாமையும் ஏற்பட்டன .அவளது கவனிப்பிற்காக ஏங்க ஆரம்பித்தேன் . நவீன டிசைன்களில் கம்மல், நெக்லஸ் மோதிரம், வளையல்,கொலுசு என்று வாங்கிப் போட்டு தன்னுடைய கழுத்து, காது, கை கால் மற்றும் விரல்களை அழகு படுத்துகிறாளே . இது நாள் வரை எனக்கென்று ஒரு நகை நட்டு வாங்கவில்லையே . இதுமட்டுமில்லாமல் நாக்குக்கு ருசியாக விதம் விதமான உணவு ,கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக டிவி,சினிமா, பாட்டுக் கச்சேரிகள்; முகப் பொலிவிற்கு அவ்வப்பொழுது பேஷியல் ,மேக்கப், கை கால்களுக்கு மேனிக்யூர் பெடிக்யூர் போன்ற அழகு சிகிச்சைகள், தலை முடிக்கு மெஹந்தி, , எண்ணெய் மசாஜ் போன்ற பலமான உபசரிப்புகள் . இளிச்சவாயனான எனக்கு மட்டும் எந்த ஸ்பெஷல் கவனிப்பும் இல்லை . போனால் போகிறது என்று தினம் குளிக்கும் பொழுது சோப்பை தேய்த்து ஒரு அலம்பல் . அவளது அலட்சியமும், உதாசீனமும் என்னை ரொம்பவே பாதித்ததன .அவள் கவனிப்புக்காக நான் ஏங்கஆரம்பித்தேன். நான் இருப்பதை அவளுக்கு நினவு படுத்தி அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப போராட்டம் தான் சரியான வழி என்று முடிவு செய்தேன். என்னுடைய சகோதரியான வலது முட்டியிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி “ நீயும் போராட்டத்தில் சேர்ந்து கொள் “ என்றேன் . எவ்வளவோ மன்றாடியும் அவள் “ இப்ப இருக்கற கவனிப்பே எனக்கு போதும் ” என்ற சொல்லி மறுத்து விட்டாள் . “சரி எப்படியோ போ” என்று தனியாகவே வன்முறையில் போராட முடிவு செய்தேன் . பொறுமை இழந்து பொங்கி எழ தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் .

வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவிலில் அர்ச்சனை , தரிசனம் முடிந்து வீடு திரும்ப காரில் தேவி ஏறப்போனாள் . கடவுளின் ஆசீர்வாதத்தோடு எனது ஒத்துழையாமை இயக்கத்தை கோவில் வாசலில் தொடங்க முடிவு செய்தேன். தனது வலது காலை காரின் உள்ளே தேவி வைத்தாள் . நான் மட்டும் அவளது கட்டளைக்கு பணியாமல் நகர மறுத்தேன். பள்ளிக்கு போக அடம் பிடிக்கும் குழந்தையை ஸ்கூல் வேனுக்குள் ஏற்றுவது போல் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து உள்ளே திணித்துவிட்டு கார் கதவை மூடினாள். "இரு, இரு என்னிடமே அடக்குமுறையைக் காண்பிக்கிறயா ? சீக்கிரம் என் பலத்தை காண்பிக்கிறேன்” என்று கறுவினேன். வீட்டின் உள்ளே சென்ற தேவியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதபடி ஸ்ட்ரைக் செய்தேன் . காலை நகர்த்த முயன்ற தேவி வலி பொறுக்கமுடியாமல் தவித்தாள் . தைலத்தை தடவியும், வெந்நீர் ஒத்தடம் கொடுத்தும் என்னை தாஜா செய்தாள் . இதற்கெல்லாம் ஏமாறாத நான் இரவு முழுவதும் தேவியை வலியால் துடித்துக் கதற விட்டேன் . என்னுடைய ஒத்துழையாமையை கண்டு அரண்டு போய் மறுநாள் காலை முதல் வேலையாக பிரபல எலும்பு மருத்துவமனைக்கு போன் செய்தாள். மிகவும் பணிவோடு கொஞ்சும் குரலில் பேசிய ரிசப்ஷனிட்டின் நுனி நாக்கு ஆங்கிலத்தை ரசிக்கும் மன நிலையில் தேவி இல்ல. நல்ல வேளையாக டாக்டர் ஊரில் இருந்தார்.அப்பாயின்ட்மென்ட் நேரத்தை உறுதிப் படுத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாள்; சாரி , காரில் விரைந்தாள்

ஆஸ்பத்திரியில் எனக்கு ராஜ மரியாதை . வாசல் கேட்டிலிருந்தே தேவியை வீல்சேரில் உட்காரவைத்து அலுங்காமல் நலுங்காமல் அழைத்து சென்றனர் . நான் படுத்தும் பாட்டை பற்றி பத்து நிமிடங்கள் டாக்டரிடம் புலம்பினாள் . அவரும் கண்ணாடி பொம்மையை கையாளுவது போல் படு ஜாக்கிரதையாக என்னை முன்னும்பின்னும் ,பக்கவாட்டிலும் திருப்பி பரிசோதித்தார் .என் அழகை நேரில் பார்த்தது போதாது என்று என்னுடைய எக்ஸ்ரே,

எம் ஆர் ஐ. படங்களையும் பார்க்க விரும்பினார். செலவைப் பாராமல் தேவியும் அதற்கான ஏற்பாடை செய்தாள் . கேஷ் கவுண்டரில் பணம் கட்டியவுடன் என் “போட்டோ ஷூட் “ ஆரம்பித்தது . பல கோணங்களில் வித விதமான போஸ்களில் என் படங்களைப் பார்த்ததும் எனக்கு ஒரே குஷி; பெருமை தாங்கவில்லை .ஆனாலும் ஒரு சின்னக் குறை. எல்லாமே பிளாக் அண்ட் ஒயிட் படங்கள்; கலரில் எடுத்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருப்பேன். விளக்கு வெளிச்சத்தில் என் படங்களை ஆராய்ந்த டாக்டர் ஓயாத உழைப்பினால் நான் மிகவும் தேய்ந்து போய் விட்டதாகவும் எனக்கு ஒரு மாதம் கட்டாய ஒய்வு தேவை என்று கூறிவிட்டு என்னை வலுப்படுத்த மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். கூடவே பிசியோதெரபி சிகிச்சை அளிக்க ஒருவரை ஏற்பாடு செய்தார் . மிகவும் அவசியத் தேவைகளுக்கு மட்டும் நடக்கும்படி சொன்னார் .இரண்டு வாரத்தில் வலி குறையவில்லை என்றால் மீண்டும் வரச் சொன்னார் .

ஓய்வோடு ஸ்பெஷல் கவனிப்பு வேறு என்று எனக்கு ஒரே ஜாலி . உடல் நலம் விசாரிக்க வந்தவர்களிடம் எல்லாம் என் லீலைகளைப் பற்றி தேவி அலுக்காமல் சலிக்காமல் கூறினாள் . மொத்தத்தில் தேவியை பொறுத்த வரையில் நான் ஒரு வி.ஐ .பி ஆகிவிட்டேன்.

பிசியோதெரபிஸ்ட் இளம் சூடான் மெழுகு ஒத்தடம். அல்ட்ரா சவுண்ட் அலைகளால் மசாஜ் , மென்மையான அசைவுகள் மூலம் உடற்பயிற்சி என்று உபசரிப்பில் என்னை திக்கு முக்காட வைத்தார் . தேவியின் டிரெஸ்ஸிங் டேபிளில் அமேசானில் ஆர்டர் செயப்பட்ட பல விதமான தைலங்கள், வலி நிவாரண களிம்புகள் , ஒத்தடம் கொடுக்கும் சாதனங்கள் இடம்பிடித்தன . கிரீம்கள் , சென்ட் , உதட்டுச் சாயம் போன்ற மேக்கப் சாதனங்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டதைப் பார்த்து எனக்கு ஒரு குரூர திருப்தி ! தினமும் பிரண்டை துவையல் , முடக்கத்தான் கீரை தோசை , போன்ற ஸ்பெஷல் ஐட்டங்கள் என் நலனுக்காக சமைக்கப்பட்டன . இதல்லாம் போதாது என்று என்னை இறுக்கமாக பாசத்தோடு கட்டிப்பிடிக்க்கும் " நீ கேப் " என்னும் எலாஸ்டிக் முட்டி உறை வாங்கினாள் . இந்த உபசரிப்பை எல்லாம் தொடர்ந்து அனுபவிக்க ஆசைப்பட்டு என் போராட்டத்தைத் தொடர்ந்தேன் .உடற்பயிற்சி செய்யும் போது ஒத்துழைக்காமல் முரண்டினேன். தேவியும் தினமும் நான் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று கண்ணீரோடு கடவுளை வேண்டினாள் .

பத்து நாட்கள் ஆகியும் என் கொட்டம் அடங்கவில்லை . என் இரட்டை சகோதரியான வலது முட்டி தேவியை மேலும் கஷ்டப் படுத்தாமல் என் போராட்டத்தை வாபஸ் வாங்கும்படி அட்வைஸ் செய்தாள் .

"போடி முட்டாள் நீ பிழைக்க தெரியாத அசடு. என்னைப்பார் எவ்வளவு கவனிப்பு , உபசாரம் “என்று பெருமை அடித்துக் கொண்டேன் .

வாராக் கடைசியில் தேவியின் அலுவலக தோழிகளான ரேணுவும் மதுவும் வந்தனர். சம்பிரதாயமான விசாரிப்புகளுக்கு பிறகு மது, அட்வைஸ் என்ற பெயரில் ஒரு பெரிய வெடி குண்டைத் தூக்கி போட்டாள் . "தேவி நீ சூப்பர் ஆர்த்தோ ஆஸ்பிடல் போய் டாக்டர் பிரபுவைப் பார். முட்டி மாற்று அறுவைச் சிகிச்சையில் அவர் தான் இந்தியாவில் நம்பர் ஒன். என் அண்ணி கூட அவரிடம் தான் போன வருடம் ஆபரேஷன் செய்து கொண்டாள் . இப்பொழுது மாடிப்படிகள் ஏறுவது. ஜாகிங் . ஸ்விம்மிங் எனப் படு ஆக்டிவ் என்று கூற ரேணுவும் " ஆமாம் ஆமாம் என் நாத்தனார் கூட மும்பையில் முட்டி மாற்று ஆபரேஷனுக்கு பிறகு சூப்பரா இருக்கா .போன மாசம் யூரோப் டூர் கூட போனாள் " என்று ஒத்து ஊதினாள் அவர்கள்[Ma1] கிளம்பியவுடன் முதல் வேலையாக சூப்பர் ஆர்த்தோ ஆஸ்பிடலுக்கு தேவி போன் பண்ணினாள் . ரிசப்ஷனிஸ்ட் டாக்டர் பிரபு மருத்துவ மாநாட்டுக்காக பிரான்ஸ் சென்று இருப்பதால் பத்து நாட்களுக்கு பிறகுதான் அவரைப் பார்க்க முடியும் என்று குயில் குரலில் கூவ, கிடைத்த முதல் அப்பாயிண்ட்மெண்டை தேவி புக் செய்தாள் . இதை எல்லாம் பார்த்த எனக்கு ஒரே டென்ஷன் ஆகி விட்டது . "இதென்னடா புது குழப்பம் ? பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுமோ என்ற பயம் பிடித்துக் கொண்டது . எங்கே தேவி என்னைப் பிடுங்கி வீசி எறிந்து விட்டு புது முட்டி பொருத்திக் கொண்டுவிடுவளோ என்று அரண்டு நடுங்கி விட்டேன் . சமயம் பார்த்து வலது முட்டியும்," பார்த்தாயா நான் சொன்ன பேச்சை நீ கேட்கவில்லை. இப்போ நீயே உனக்கு யமனாகி விடுவாய் போல இருக்கு " என்று என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாள் . நீண்ட யோசனைக்குப் பிறகு என் போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள அதிரடியாக முடிவு செய்தேன். மறுநாளிலிருந்து பிசியோதெரபிஸ்ட் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை தேவி செய்த போது ஒத்துழைத்தேன் . ஒரு வாரத்தில் படிப் படியாக வலி நீங்கி பழையபடி நடக்க ஆரம்பித்த தேவி சூப்பர் ஆர்த்தோ ஆஸ்பிட்டல் அப்பாயிண்ட்மெண்டை கேன்சல் செய்தாள். இதைக் கேட்டு நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன் . தேவியும் கடவுளுக்கு நன்றி சொன்னதோடு என்னை தினம் பாசத்தோடு தடவிக் கொடுத்து கொஞ்சுகிறாள். மேலும் என்னை அதிகம் கஷ்டப் படுத்தாமல் மிகவும் மென்மையாக கையாளுகிறாள். படிகள் ஏறும்போது மெதுவாக ஏறுகிறாள் . இதுவே எனக்கு போதும் என்று நானும் சந்தோஷமா இருக்கேன் .வலது முட்டியோடு பழையபடி சினேகம் ஆகி விட்டேன் .

“தேவி நீ என்னை சரியாக கவனிக்காமல் விட்டால் என் அடுத்த “ஒத்துழையாமை இயக்கம்” எந்த நேரத்திலும் ஆரம்பமாகலாம்! “ என்ற ஒரு சிறிய எச்சரிக்கையோடு என் லூட்டிப் புராணத்தை மங்களம் பாடி முடிக்கிறேன் .
 

Author: siteadmin
Article Title: முட்டி அடித்த லூட்டி -சுதா கணபதி
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.