• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

25. நாவாயில் பதுங்கிய நாற்பத்தாறாம் நகுபோலியன் - கி. சரஸ்வதி,

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
72
15
8
chennai
நாவாயில் பதுங்கிய நாற்பத்தாறாம்
நகுபோலியன்
…….............................................................

என்னடா இது சிறுகதையின் தொடக்கத்திலேயே சிறுகதையைக் காணோமே,
வழக்கத்தில் இல்லாத வழக்கமாக என்னுரை முன்னுரை என்றெல்லாம்
கட்டுரை போன்று இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா?
என்னுடைய சிறுகதைகளை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பினாலும் அவர்கள்
பொறுப்பாகத் திருப்பியனுப்பி விடுவதால் (ஈ மெயிலையே திருப்பி
விட்டுட்றாய்ங்க) சில பல சிந்தனைகளுக்குப் பிறகு சரித்திரக் கதை
எழுதிவிடுவது மிக நன்று என்று தோன்றியது. அதுதான் எளிதும் கூட. எந்தக்
காலம் என்ன நேரம் என்று பார்க்காமல் அடித்துவிடலாம். பெயர்களை
மட்டும் சரித்திர வாடை வருமாறு வைத்துவிட்டால் வெற்றி தான். எனவே
நான் நாற்பத்தாறாம் நகுபோலினையனைப் பற்றிக் கதை எழுதப் புகுந்தேன்.
நகுபோலியன் என்றதும் ஏதோ நெப்போலியனுக்குச் சித்தப்பா முறை என்று
எண்ணிவிட வேண்டாம். மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் முன்னூறு காத
தொலைவில் அமைந்துள்ள மைக்ரோ மினி தேசமான வம்பக நாட்டின்
தலைவன். அவன் சிரிப்பு எப்போதும் நல்ல சிரிப்பாக இல்லாமல் கள்ளச்
சிரிப்பாக இருப்பதால் அவனுக்கு ஒரு நன்னாளில் நகு போலியன் என்ற
பட்டப்பெயரே இயற்பெயராகச் சூட்டப்பட்டது.
அவன் தான் இப்போது தனது ராச்சியத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகக் காற்றை
விட வேகமாகக் கறுப்பு நிறப் புரவியில் கடுகிக் கொண்டிருந்தான்.
அவனுக்குச் சாரதியாக இருக்கும் புரவியனுடன் நகுபோலியன் இறுக்கமாகப்
பல சுற்றுகள் சுற்றப்பட்டுக் கட்டப்பட்டுப் படுபாடு பட்டுக் கொண்டிருந்தான்.
புரவிக்குச் சாரதியா என்று வாயைப் பிளக்கக் கூடாது. குதிரை ஓட்டத்
தெரியவில்லையெனில் சாரதி வைத்துக் கொள்ளலாம் என்பது அரண்மனை
உத்தரவு. அந்தப் புரவி மேடு, பள்ளம், குளம், குட்டை என்று பாராமல் இந்தப்
படுபாவியை தள்ளியே தீருவேன் என்று ஓடிக்கொண்டிருந்தது. குட்டியாக
இருக்கும்போது போலியன் அதன் வாலில் ஓலை வெடியைக் கட்ட

முயற்சித்து, அது விட்ட உதையில் தான் போலியன் என்ற பட்டப்பெயர்
கிடைத்ததாக ஊருக்குள் பேச்சு.
இந்த தண்டக் கருமாந்திரத்தின் குதிரைச் சவாரிக்காக எங்கு போனாலும்
ஓட்டுநர் வேலை பார்ப்பதில் புரவியனுக்குச் சற்றுக் கடுப்பு. கூடவே இந்த
ஒட்டுவாரொட்டியைச் சவாரியின்போது தன்னோடு பிணைத்துக் கட்டித்
தொலைவதில் ஏகப்பட்ட எரிச்சல். அரண்மனையில் தின்று கொழுத்துக்
காட்டுப் பன்றி போல இருக்கும் இவனைத் தன் முதுகில் கட்டிக் குதிரையில்
கூட்டிச் செல்ல வேண்டியிருப்பதால் ஏற்கனவே ஒரு திட்டம் வகுத்திருந்தான்
புரவியன். தன்னைப் பாதிக்காதவாறு நன்றாக முழுக்க மூடிய உடையணிந்து
கொண்டு, முதுகில் செந்தட்டி, மரநெட்டை ஆகிய தாவரங்களின்
இலைகளைப் பொடியாக்கி வைத்திருந்தான். அவற்றின் பொடி மேலே
பட்டால் எடுக்கும் அரிப்புக்குச் சொறிப் பாறையில் உரசித் தோலை உரித்துக்
கொள்வதுதான் ஒரே தீர்வு. அந்தப் பொடியைத் தான் அணிந்திருந்த கனமான
தோல் சட்டையின் மீது நன்றாகத் தடவிக் கொண்டுதான் அரண்மனைக்கு
வந்தான். இவன் குதிரையில் ஏறியதும் அந்த நாற மன்னனை நாலைந்து
குண்டர்கள் தூக்கிக் குதிரையில் அமர வைத்து இவனுடன் கட்டினர். இதில்
ஒரு அழகு என்னவெனில் குதிரைச் சவாரியின் போது கெட்ட கேட்டுக்கு
அவனது உடல் வனப்பை ஊரார் காண்பதற்காகச் சட்டை போடாமல்
நகைகளை மட்டும் அணிந்து வருவது போலிப் பயல் வழக்கம். வசமாகச்
சிக்கிய மன்னனை அரிப்புப் பொடியும் கறுப்புக் குதிரையுமாக ஒரு வழி
செய்து கொண்டிருந்தன. இவன் அலற அலற, ‘கோபம் வேண்டாம் அரசே,
இதோ இன்னும் வேகமாக ஓட்டுகிறேன்’ என்று கூறிக் கொண்டே குதிரையை
அடித்து ஓட்டி இம்சையைக் கூட்டிக் கொண்டிருந்தான் சாரதி.
முடிவற்ற நரகப்பாதையில் பயணித்த போலியனுக்கு நினைவு வந்தபோது
ஒரு கருநாவல் மரத்தடியில் பப்பரப்பே என்று படுத்துக் கிடந்தான். கையில்
ஒரு பனை ஓலைக் கொட்டானில் மருந்தைப் பிடித்தபடி ஒரு பெண்
நின்றிருந்தாள். விழிப்பு வந்து, அந்தப் பெண்ணைப் பார்த்த நொடியில் பட்ட
துன்பமெல்லாம் படீரெனத் தெளிய, ‘ பென்னே, னீ யாற்? னீ தாண்
மேர்வசியோ?’ என்று பல்லைக் காட்டினான் நகு. (மேற்கண்ட ஆக்ட்டிவ்
வாய்ஸ் சென்ட்டன்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல. அந்த காட்டுப் பன்றி

மன்னன் அப்படித்தான் உச்சரிப்பான். இனி அவன் பேசும் இடங்களில் நானே
சரியாக எழுதினாலும் நீங்கள் மிஸ்டேக் போட்டுப் படிக்க வேண்டுகிறேன்)
உடனே அந்தப் பெண், ‘ நான் பைங்கிளி. அப்புறம் அது மேர்வசி அல்ல.
ஊர்வசி ‘ என்றாள்.
ஆயிரம் ஆராய்ச்சி மணிகள் டாண் டாண் என்று ஒலித்தது போல அவள்
குரல். இருப்பினும் அந்த இடையழகுக்காகப் பொறுத்துக் கொள்ளலாம்.
அப்போதுதான் தன்னைப் பார்த்துக் கொண்டான் நகு. உடம்பு முழுக்க உரிந்து
போன தோலை மருந்தால் மூடி வைத்திருந்தாள் அந்தப் பெண் பைங்கிளி. ‘
நீங்கள் யாரோ எவரோ தெரியாது. அதோ அந்த வாய்க்கால் ஓரமாக விழுந்து
கிடந்தீர்கள். பக்கத்தில் இந்தக் கயிறு கிடந்தது. தோல் உரிந்து கிடந்த
உங்களை அதே கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு வந்து இங்கு போட்டு
மருந்திட்டேன்’, என்றாள். மீண்டும் ஆ.மணி ஒலித்து இம்சையைக் கூட்டியது.
காதைச் சற்றுப் பலமாக ஆட்டிவிட்ட படியே ‘நன்றி பைங்கிளி’, என்ற
நகுவின் அணு சைஸ் அறிவுக்கு ஒன்று ஆச்சரியமாகப் புரிந்தது. அரிப்பும்
வேகமும் சேர்ந்ததில் மயங்கிய தன்னைப் புரவியன் வேண்டுமென்றே
தள்ளிவிட்டுப் போயிருக்கிறான். கேட்டால் ஆயிரம் கட்டுக்கதை சொல்வான்.
இருக்கட்டும் குதிரைச் சாணியில் முக்கி அவனை அடிப்போம் என்று
எண்ணியவாறு பைங்கிளியைக் காதலுடன் நோக்கினான்.
அவளும் அரைக் கண்ணால் போலியனைப் பார்த்தாள். வெட்டி மன்னனும்
நோக்க வெண்கலக் குரலாளும் நோக்க அங்கே அரங்கேறிய காதல்
காவியத்தைப் பார்த்த காகம் ஒன்று காறித்துப்பிக் கரைந்து விட்டுப் பறந்தது.
அன்றிலிருந்து தினமும் நம்ம நகு
கால்நடையாகவே பயணித்துப் பைங்கிளியுடன் காதல் வளர்க்கத்
தொடங்கினான்.
வம்பக நாட்டில் ஏற்கனவே சீர்குலைந்து கிடந்த நிர்வாகம் மேலும் தட்டுக்
கெட்டுத் தறிகெட்டுப் போனது. தம்மாத்தூண்டு நாடு என்ற அலட்சியத்தாலும்
அத்தனை குட்டியூண்டு நாட்டின் மேல் படையெடுத்தால் அவமானம் என்றும்
பக்கத்து நாடுகள் வம்பகத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் அந்தக் குட்டி
நாட்டிற்கு ஈடான குட்டிக்குட்டி நாடுகளுக்கு நகுபோலியனின்
போர்த்தந்திரங்கள் மீது பெரிய வியப்பும் அவற்றைத் தெரிந்து கொள்ள

வேண்டும் என்ற ஆவலும் வந்தது நியாயம் தான். ஏனென்றால் எப்படிப்பட்ட
உள்நாட்டுக் கலகமானாலும் சரி, அக்கம் பக்கத்துச் சின்ன நாடுகளுடனான
சண்டையானாலும் சரி, நம்ம போலி தப்பித்துக் கொள்வானே ஒழிய
போர்க்களத்தில் சிக்கிச் சிறை சென்றதில்லை. ஒவ்வொரு முறையும்
இவனைக் காணாமல் போர் அறத்தைக் கடைப்பிடித்துப் பகையாளர்கள்
திரும்பிச் சென்றுவிடுவர். அந்தச் சுற்றுவட்டார நாடுகளில் மன்னன்
போர்க்களத்திற்கு வரவில்லை அல்லது அரண்மனையில், நாட்டில் எங்கு
தேடியும் கிடைக்கவில்லை என்றால் போரைத் தொடர இயலாது என்பதே
போர்க் கொள்கை. பல காலமாகத் தொடரும் போலியின் போர்த் தந்திரத்தைத்
தெரிந்து கொள்ளப் பல பாடாவதி உபயங்களைக் கையாண்டும் பலனின்றித்
தவித்தன அண்டை நாடுகள்.
அப்படிப்பட்ட பெருவீரன் தான் இன்று பைங்கிளியின் மடியில் மயங்கிக்
கிடந்தான். அவனை அணைத்தபடியே பேசிக் கொண்டிருந்த பைங்கிளி,
‘மன்னா, ஒவ்வொரு முறையும் போர் என்று வரும்போது காணாமல்
போய்விடும் மாவீரர் தாங்கள். அப்படி எங்கு சென்று மறைகிறீர்கள் என
இந்தப் பேதை அறியலாமா?’ என்று கேட்டாள். தனது சிற்றறிவை
எப்போதுமே பயன்படுத்தி அறியாத நகு, சட்டென்று காதல் வேகத்தில்
அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். திடீரென வலது
இடது எனத் திரும்பித் திரும்பி ஓடுவதும் தாண்டுவதுமாக நேரம் ஓடிய
பிறகு, போர்க்களத்தின் நடுவில் ஓரிடத்திற்கு வந்து நின்றான். குனிந்து
அமர்ந்து சில சங்கேதத் தட்டுகள் தட்டியதும் அங்கு தோன்றியது ஒரு
பேராச்சரியம். நிலத்தின் ஒரு பகுதி விரிவடைந்து அங்கு கீழே செல்ல
படிக்கட்டுகள் தோன்றின. தன் காதல் கிழத்தியுடன் இறங்கிச் சென்ற போலி,
அங்கு அழகாக அமைக்கப்பட்டிருந்த சகல வசதிகளுடன் கூடிய அறையைக்
காட்டினான். பணிப் பெண், காவலாளி என எல்லோரும் அங்கு இருந்தனர்.
‘மன்னா, தங்கள் வீரத்தை மெச்சினேன். யாரும் யோசிக்கவே வாய்ப்பற்றுப்
போர்க்களத்தின் நடுவிலேயே பதுங்கு குழி அமைத்து ஒளிந்து கொள்ளும்
தங்கள் திறமையே திறமை. போர் தொடங்கும் முன்பே இங்கு ஒளிந்து
கொள்வதால் போர் தொடங்கும் முன்பே முடிந்தும் விடுகிறது. என்னே

தங்கள் அறிவாற்றல்?’ என்று கூறியபடி அவன் தோள்களைக்
கட்டிக்கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்களில் அண்டையில் இருந்த சிறு, சின்னஞ்சிறு,
சின்னஞ்சிறு சிறு நாட்டு மன்னர்கள் வம்பகத்தை அறிவிப்பின்றி ஆட்கொண்ட
பிறகே தெரிந்தது பைங்கிளி பக்கத்து நாட்டு ஒற்றி (ஒற்றனின் பெண்பால்)
என்று.
காதலுக்கு முன்புவரை கம்மென்று ஓசியில் குதிரைச் சவாரியும் மேல் வயிறு
முட்டத் தீனியுமாகத் திரிந்த மன்னன், வெட்டிப் பய புள்ளையின் மீது வந்த
காதலால் இன்று பதுங்கு குழியிலிருந்து பற்றிக் கொண்டு வரப்பட்டான்.
வைகையாற்றின் ஓரமாக இழுத்து வரப்பட்ட போலியைத் திடீரென ஒரு கரம்
நீருக்குள் இழுத்துச் சென்றது. கண்ணிமைக்கும் நொடியில் காணாமல்
மாயமானவனைத் தேடத் தொடங்கினர் வீரர்கள். நிஜத்தில் அவர்களுக்குப்
போலியின் பதுங்கு குழியிலிருந்து ஆட்டையைப் போட்டப் பொற்காசுகளை
லஞ்சமாகக் கொடுத்துத் தேடுவது போல நடிக்கச் சொன்னது…சற்றுப்
பொறுங்கள். அடுத்த பாராவைப் படியுங்கள்.
மறுபடியும் மன்னனுக்கு நினைவு வந்தபோது, ஒரு கப்பலில் கிடந்தான்
போலி. அருகில் வேறு ஒரு மருந்துக்குப்பியுடன் பைங்கிளி. சிரித்தபடியே
‘கண்ணா, என்ன தான் இருந்தாலும் நீங்கள் என் காதலர் அல்லவா? நான்
ஒற்றி என்றாலும் நம் காதல் உண்மை.
அதனால் தப்புவித்தேன்’, என்றாள். (இதைப் படித்தவுடன் பார்த்த ஞாபகம்
இல்லையோ பாட்டு உங்கள் நினைவுக்கு வந்து சரோஜாதேவி கோப்ப்ப்பால்
என்று கூவுவதும் மனதில் தோன்றினால் , அதற்கு நானோ, நகுவோ,
பைங்கிளியோ பொறுப்பு அல்ல)
அவள் காதலோடு கூறிக்கொண்டிருந்த
அந்தச் சமயத்தில் அருகில் ஒரு வணிகக் கப்பல் ஒலியெழுப்பியபடிச் செல்ல,
இதுவரை கப்பல் பயணம் செய்திராத போலி, சகலமும் வியர்க்கச் சட்டென்று

தாவி கப்பலின் அடித்தளத்தில் தஞ்சம் புகுந்தான். பின்னாலேயே ஓடினாள்
பைங்கிளி.
இப்படியாக நம் பதுங்கு குழி நகுபோலியன் பரிணாம வளர்ச்சி பெற்று
நாவாயில் பதுங்கிய நாற்பத்தாறாம் நகுபோலியன் ஆனான்.
பின்குறிப்பு:
பைங்கிளிக்கும் அவனுக்கும் கைலாசாத் தீவில் திருமணம் முடிந்து ஜூனியர்
நகுபோலியனும் பிறந்து வளர்ந்து வருகிறான். பரம்பரையின் வீரத்தையும்
திறமையையும் காக்க அங்கும் கட்டப்படுகிறது ஹைடெக் பதுங்கு குழி.
 

Author: siteadmin
Article Title: 25. நாவாயில் பதுங்கிய நாற்பத்தாறாம் நகுபோலியன் - கி. சரஸ்வதி,
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.