• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

28. தலைப்புச்செய்திகள் - எஸ்.ராமன்

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
72
15
8
chennai

தலைப்பு செய்திகள்!

"இன்னைக்குள்ள, பத்திரிகை போட்டிக்கு கதை அனுப்பியாகணும். அதுவும், நகைச்சுவை கதையா இருக்கணும். தோழிகள், ஏற்கனவே அனுப்பிச்சாட்டாங்க. முதன் முதலா, இந்த மாதிரி போட்டியில் கலந்துக்கற நான், இன்னும் தலைப்பே வைக்கலை. என் படைப்பு பத்திரிகையில் அச்சு ஏறினா, குடும்பத்துக்கு பெருமைதானே..? உங்க ஒண்ணு விட்ட தாத்தா பெரிய எழுத்தாளர்னு என்னிடம் ஒரு தடவை பீத்திக்கிட்டீங்க. அந்த குலத்தில் பிறந்த நீங்க, கதைக்கான தலைப்பை சொல்லி, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமில்ல...” தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து, அதை தலைப்பு செய்தியாக்கி, பொழுதை கழித்து, அதற்காக, என் உயிரை எடுப்பதில் வல்லவளான மனைவி, டென்ஷனோடு கூவி, என் டென்ஷனை கூட்டினாள்.

‘கொஞ்சம் ஹெல்ப்’ என்று அவள் சொல்வதன் உள் அர்த்தம் என்னன்னா, முழுக் கதையையும் நானேதான் எழுதித் தரவேண்டும் என்பதுதான். மனைவி எந்த வேலை சொன்னாலும், அதை செய்யாமல், எப்படி கதை பண்ணுவது என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். ஒண்ணுவிட்ட தாத்தா கதாசிரியர் என்று எப்பொழுதோ குலப் பெருமை பேசியது கூட, அவளுடைய ரெண்டு விட்ட தங்கையை இம்ப்ரஸ் செய்வதற்குத்தான். அந்த விஷயம் அதோடு முடிந்து விட்டதாக நான் மறந்திருந்த நிலையில், குலப் பெருமை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, குரங்காக என்னை துரத்தும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. மற்றபடி, கற்பனைக்கும் எனக்கும் நீண்ட சமூக இடைவெளியைத் தவிர, அத்துடன் வேறு எந்த ஒட்டும் கிடையாது..உறவும் கிடையாது. அதுவும், நகைச்சுவைன்னா, கற்பனை சிரிப்பா சிரிச்சுடும்.

எனக்கு சற்றும் பரிச்சயமே இல்லாத இந்த டாஸ்க்கிலிருந்து தப்பிப்பதற்கான வழியை வகுத்து, எப்படி கதை பண்ணுவது என்று, கூட்டி, கழித்து, வகுத்து, பெருக்கி கணக்கு போட ஆரம்பித்தேன

"நீங்க கணக்கில் ரொம்ப வீக்குன்னு உங்க மூணு விட்ட பெரியம்மா என்னிடம் ரகசிய தகவல் சொல்லியிருக்காங்க. ஆனா, தலைப்பு சொல்றது அவ்வளவு பெரிய ப்ராப்ளம் இல்லையே..?” என்னுடைய பூர்வாசிரம வரலாற்றை மூன்றாம் மனுஷி மூலமாக தெரிந்து கொண்டு, கலாய்த்தாள். அதிலும், ஒரு கணக்கு இருக்கிறது.

என்னுடைய குறைகளை சுட்டி காட்டியே, வேலை வாங்க எத்தனிக்கும் கணக்குதான் அது. ஆனால், அவளை குழப்பி, தப்பிப்பதில் எத்தன் நான். அதே வஜ்ராயுத்தைத்தான் இப்பொழுதும் கையில் எடுத்தேன்.

"சுடிதாரிலிருந்து புடவைக்கு மாறினாத்தான், நீ விரும்பியது கிடைக்கும்.."சீரியஸாக ஒரு விடுகதையை (?) உதிர்த்து அவளுடைய டென்ஷனை பெருக்கி, குழப்ப குழிக்கு, ரிப்பன் வெட்டினேன்.

“என்னுடைய விடுகதைக்கான அர்த்தம் புரியாமல், அவள் பேந்த பேந்த விழித்தது என் வெற்றிக்கான முதல் படியாக தெரிந்தாலும், இந்த முதல் படியையே, ஜவ்வாக இழுத்து, அதன் மூலமாக டாஸ்க்கிலிருந்து எஸ்கேப் ஆவதற்கு பிரம்ம பிரயத்தினப்பட வேண்டும்!

"என்ன சொல்ல வர்றீங்க.." என் புத்திசாலித்தனமான (?) விடுகதையில், அவளுடைய சிந்தனையை சில விநாடிகள் முடக்கியதில் எனக்கு அல்ப சந்தோஷம்.

“இது கூட புரியாம, என்னத்த கதை எழுதப்போற..?” வம்புக்கு பிள்ளையார் சுழி போட்டேன

“என்னுடைய தலை சுழி நல்லா இல்லாததால்தான், உங்களை கட்டிக்கிட்டு, கற்பனை சக்தியை இழந்து, இப்படி அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்..”

“இல்லாத சக்தியை இழந்ததா கற்பனை பண்ணிக்கிட்டா இப்படித்தான் அவஸ்தை படணும்..”

“காலேஜ் படிக்கும்போது, நிறைய கதை எழுதியிருக்கேன். அதில், ‘அவஸ்தை’னு ஒரு கதைக்கு பரிசெல்லாம் வாங்கி இருக்கேங்கறது, உங்களுக்கு எப்படி தெரியப்போவுது.."

“ஆமாமா.பரிசை கடையில வாங்கி இருப்பே. அந்தக் கதையை படிச்சவங்களும் ரொம்ப அவஸ்தை பட்டிருப்பாங்க..சும்மா கதை விடறதுக்கும் ஒரு அளவு வேணும்...”வம்புக்கு கை கால் முளைத்து, நகர ஆரம்பித்தது.

“அளவை பற்றி நீங்க பேசாதீங்க. பத்து கிலோ அரிசியும், அரை கிலோ வற்றல் மிளகாயும் வாங்கிட்டு வரச் சொன்னா, அரை கிலோ அரிசியும், பத்து கிலோ மிளகாயும் வாங்கிட்டு வந்தவர்தானே நீங்க...” அச்சுக்கு..அச்சுக்கு என்ற அலரும் நெடித் தும்மல்களுடன், என் மீதான, காரசாரமான குற்றச்சாட்டு, கிலோ கணக்கில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

விவாதத்தில், படிப்படியாக நெடி ஏறிக் கொண்டிருந்தது. வெயிட்டான குற்றச்சாட்டை எப்படி லாவகமாக (!) சமாளித்து, அதை முன் இழுத்துச் செல்வது என்று யோசித்தேன்.

“போர் காலத்தில், மளிகை பொருள்களுக்கு பற்றாக்குறை வரும்ங்கற முன் யோசனையில் விளைந்த கொள் முதல் அது. தொலை நோக்கு பார்வைக்காக பாராட்டுவதை விட்டுட்டு, என்னம்மோ பேச வந்துட்ட..” பயந்து கொண்டே, செயற்கையான கோபத்தை இறக்குமதி செய்தேன்.

“அது கொள் முதல் இல்ல..கொல் முதல். ஆளையே கொல்ற அளவுக்கு, வீடு முழுவதும் மிளகாய் நெடி பரவி, கொல்லு, கொல்லுனு இரும்பி, இரும்பி உயிரே போயிடுச்சு. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம், அது கொரோனா இரும்பல்னு நினைச்சு, ஜன்னல் கதவுகளை மூடிக்கிட்டாங்க. தற்புகழ்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு...” என்று தன் முகத்தை தோள் பட்டையில் இடித்து, வெல்லத் துண்டு ஒன்றை வாயில் எடுத்துப் போட்டு, வெள்ளைத் துண்டால் வாயை துடைத்துக் கொண்டாள்.

காரசாரமான விவாதத்தின் நடுவில், வெல்லத்தை வாயில் போட்டு மெல்லுவது அவள் வழக்கம் என்பது எனக்கு தெரியும். அதனால், எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது அவள் நம்பிக்கை. வெறும் வாயை மெல்லுவதற்கு பதிலாக, வெல்லத்தை வைத்து மெல்ல, ஒரு வாய்ப்பு கிடைத்ததில், எனக்கு மகிழ்ச்சிதான்.

அவளுடைய கோபம் தணிந்து, அமைதி திரும்பும் நிலைமையை தற்போதைக்கு நான் விரும்பவில்லை. அமைதி திரும்பினால், கதை சம்பந்தப்பட்ட டாஸ்க், என்னிடம் திரும்ப வந்துவிடும் என்பதுதான் அதற்கு காரணம். வல்லவனுக்கு வெல்லமும் ஆயுதம் என்பதால், ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்தேன்.

“இந்த மாதிரி மூட நம்பிக்கைகளுக்கு உங்க குடும்பத்தில் ஒண்ணும் குறைச்சல் இல்ல...”

“என்ன சொன்னீங்க...என் குடும்பத்தை ஏன் அனாவசியமா இப்ப வம்புக்கு இழுக்கறீங்க...அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்...”

“சும்மா இருக்கக் கூடாதுங்கறதுதானே என் திட்டமும்...” என்று மனதிற்குள் கொக்கரித்து, பால்கனி பக்கம் நகர்ந்து, அங்கிருந்த பல்லியை விரட்டுவது போல் ஆக்ட் கொடுத்து, ரகசியமாக கை தட்டினேன். கை தட்டினால், போராட்ட களத்தில், தன்னம்பிக்கை அதிகமாகும் என்பது என் நம்பிக்கை!

“கை தட்டி, என்னை ஜெயிச்சுடலாம்னு பகல் கனவு காணாதீங்க. எங்க குடும்பத்தில் அப்படி என்ன மூட நம்பிக்கையை பார்த்துட்டீங்க...இதற்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்...” என் ரகசிய அசைவுகளை கூட துல்லியமாக கேட்கும் செவித் திறன் படைத்தவள் அவள் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

மூட நம்பிக்கைகளை பட்டியலிட, நினைவலைகளை வேகமாக ரிவைண்ட் செய்யத் துவங்கியதில், வகையாக ஒன்று மாட்டியது.

“உன்னை பெண் பார்க்க வந்த போது, வழக்கமான கேசரிக்கு பதிலா, அல்வாங்கற பெயரில், ஒரு பிசினை கொடுத்து, அதுதான், பெண் பார்க்கும் படலத்தில் பரிமாறப்படும் பரம்பரை பலகாரம்னு அறிவிச்சது, மூட நம்பிக்கை இல்லாம என்னவாம்?’

“உங்க குடும்பத்தின் அதிகார பூர்வமான பேச்சாளர்.. அதான் உங்க அருமை அத்தை, பார்லிமென்டில் பட்ஜெட் சமர்பிப்பது போல், பெண் பார்க்கும் சபையில் சமர்ப்பித்து, அனைவர் முன்னிலையிலும் கமிட் செய்ய வச்சு, ஒப்புதல் வாங்க, பெ..ரி..ய்..ய சீர் வரிசை பட்டியலை ரகசியமா தயாரிச்சு வச்சிருக்கறதா, உங்க வீட்டு ஸ்லீப்பர் செல் மூலமா தகவல் கிடைச்சுது. அவுங்க சீர் வரிசை திரட்டும் சொற்பொழிவிற்கு, செக் வைக்க, நான்தான் பரம்பரை பலகாரத்தில் கொஞ்சம் பிசினை கலந்தேன். அதனால், அது மூட நம்பிக்கை இல்லை..(வாய்) மூடு நம்பிக்கை..!”

எங்கள் குடும்பத்தில், அத்தை என்பவள், ஒரு (அ)சுவாரசியமான கேரக்டர். குடும்பத்தில், அவளுக்கு மட்டும்தான் பேச்சுரிமை இருப்பது போல், திறந்த வாயை மூடாமால் பேசிக் கொண்டே இருப்பாள். அவளை திருப்தி படுத்துவதற்காக, யாராவது ஒரு (ஏமாந்த?) சின்னப் பையனை அந்த மொக்கை சொற்பொழிவுகளை கேட்பதற்காக, அவள் முன், பலி கடாவாக நிறுத்தி வைப்பது, குடும்ப வழக்கம். அந்த அறுவைகளுக்கு அதிகம் பலியானவன் என்ற வன்மத்தில், அவளுக்கு, ‘இதுவும் வேணும்..இன்னும் வேணும்.’...என்று மனதில் நினைத்து குதூகலித்தாலும், வளர்ந்து கொண்டிருக்கும் வம்பின் டென்ஷனை குறைக்க நான் விரும்பவில்லை.

"அடிப்பாவி..மெகா சீரியல் வில்லியைப் போல, இப்படி ஒரு சதியா? ஒட்டி உறவாட வேண்டிய, மாண்பு மிகு என் அத்தையின் வாயை, இப்படி கோந்து போட்டு ஒட்டி, அட்டகாசம் பண்ணியிருக்கியே…”

"முள்ளை முள்ளால்தானே எடுத்தாகணும்...”நேரமாகிக் கொண்டிருப்பதை சுட்டி காட்ட, கடிகார முள்ளை பார்த்தாள்.

"முள்ளுக்கும், ரோஜாவுக்கும் வித்தியாசம் தெரியாதவ நீ...” வம்பில் திடீரென்று கவிதை புகுந்து, முள் நகர்ந்தது.

“பெரிய கவிஞர்னு நினைப்பு. எல்லாம், உங்க சுற்றப்பாவைப் பார்த்து கத்துக்கிட்டீங்க போல...” எகத்தளமாக சொன்னாள்.

“சிற்றப்பாங்கற உறவை ஏன் சுற்றப்பான்னு சிதைக்கிற..?” இப்ப நான் குழம்பிட்டேன்.

“குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் ஏற்கனவே மற்றவர்கள் ஃபார்வேர்ட் செய்த மொக்கை தகவல்களை,, தானே ஃபார்வேர்ட் செய்வது போல் மீண்டும், மீண்டும் ஃபார்வேர்ட் செய்து, தலையை சுற்ற வைப்பவரை வேறு எப்படி கூப்பிடுவதாம்..?”

“ஒரு கவிஞரை, இப்படி கலாய்க்கற..அவருடைய கவிதைகளை படிச்சிருக்கியா..?”

“ஆமா..நீங்கதான் மெச்சிக்கணும். காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு கவிதையை போட்டு தாக்கிட்டு, அதற்கு லைக் போடலைன்னா, 'கவிதை வாசனை இல்லாத கழுதைகள்'னு நம்பளை போட்டு தாக்கறாரே..!”

“காழ்ப்புணர்ச்சியில் பேசற..ஓவ்வொரு கவிதைக்கும், கவிஞர் குகைங்கற அமைப்பிலிருந்து, தினமும் பாராட்டு சான்றிதழ் வாங்கறார் தெரியுமில்ல..? வம்பை வளர்க்க, சும்மா அவளை தூண்டி விட்டேன்.

தேய்த்து தேய்த்து

கை வலிக்குது

கை பேசி


கிழக்கில் உதிப்பு

மேற்கில் மறைவு

சூரியன்


"இதெல்லாம் ஒரு கவிதை..இதுக்கு ஒரு பாராட்டு..அதை போய் மெச்சி பேசறீங்களே…உங்களுக்கு மூளை மழுங்கிடுச்சுன்னு நினைக்கறேன்…” வாட்ஸ் அப்பை பார்த்து, சாம்பிளுக்கு இரண்டு கவிதைகளை (!) தோலுரித்து, இலவச இணைப்பாக என்னையும் தாக்கினாள்.

“கல்யாணம் வரைக்கும் நான் புத்திசாலியாத்தான் இருந்தேன். அதுக்கப்புறம்தான் இப்படி ஆயிட்டேன்.. மூளையைப் பற்றிய கமென்ட்டை கேட்டதும் ,உடம்பின் ஓர் மூலையில் பதுங்கியிருந்த ரோஷம் பீறிட்டு, வம்பு தீய்க்கு நெய் வார்த்தது..

“அப்படின்னு யார் சொன்னது..?” தீ ஜ்வாலை வளர்ந்து, பற்றி எரிய ஆரம்பித்தது.

“உன்னோட அருமை மாமியார்தான்...”எனக்கு நானே கண்ணி வெடியை வைத்துக் கொண்டேன்.

“என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு நினைச்சேன்...அதான், புத்திசாலி குடும்பத்திலிருந்து பிள்ளை எடுக்கணும்னு சொன்னாங்க...”

“யார் சொன்னாங்க..?”

“எல்லாம் உங்க மாமியார்தான்...” ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று சொன்ன நியூட்டன் நினைவுக்கு வந்தார்.

கோபத்தில், விவாதத்தை முன் அறிவிப்பின்றி ஆஃப் செய்து, செல்ஃபோனை ஆன் செய்து, தன் அம்மாவிடம் பேச ஆரம்பித்தாள். பேசினாள்..பேசினாள்..பேசிக் கொண்டே இருந்தாள். விவாதங்களின் போது, கோபம் கொப்பளிக்கும் நிலையில், தன் அம்மாவோடு பேசி, என்னை சமூக விலகல் நிலைக்கு தள்ளுவது அவள் வழக்கம். இரவு சாப்பாட்டுக்கு, நான் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டேன்.

சரியாக ஒன்பது மணிக்கு, கோபம் மலையேறி, அவள் சற்று கூல் ஆகியதற்கான அறிகுறிகள் தெரிந்து, ஃப்ரிஜ் திறக்கப்படும், மென்மையான(!) ஒலி கேட்டது. பழைய சாதமும், ஒரு திரவ ஐட்டமும், டேபிளுக்கு வந்தன.

"ஒன்பது மணிக்கு வந்ததால், இதை நவ ரசம்னு அழைக்கலாம்…”அந்த திரவ விஷ(ய)த்தை பற்றிய என் படு மொக்கையான கருத்தை உதிர்த்து குழப்பினேன்.

"இல்லையே…இது ரசம் இல்லை..சாம்பார்...”.அவள் குழம்பினாள்.

அந்த திரவம், தட்டிலிருந்த சாதத்தில் ஒட்டாமல் வழிந்தோடியது.

நானும் அசடு வழிந்தேன்.

"கூலாக இருந்தாலும், சாம்பார் ரொம்ப ஹாட்டா நல்லா இருக்கு...” பொய்யில் கட்டிய புகழாரத்தில், அவள் கூலாகி விட்டது தெரிந்தது. அத்துடன் தலைப்பு செய்தியையும் மறந்திருப்பாள் என்று சந்தோஷப்பட்டேன். ஆனால், அந்த சந்தோஷம், நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

“சுடிதாரிலிருந்து புடவைக்கு மாறினாத்தான், நான் விரும்பியது கிடைக்கும்னு மதியம் சொன்னீங்களே...அதுக்கு அர்த்தம் புரியலை..உங்க மாமியார்கிட்ட கூட கேட்டேன். எந்த லூஸு சொல்லிச்சோ, அந்த லூஸுக்கிட்டயே அர்த்தம் கேளுன்னு சொல்லிட்டாங்க...இப்ப சொல்லுங்க..அதுக்கு என்ன அர்த்தம்..?”

“புடவையில்தானே, நீ கேட்ட தலைப்பு இருக்கும்..!” இந்த ஜோக்கிற்கான எதிர் வினை எப்படி இருக்கும் என்று தெரியாமல், அங்கிருந்து நகர ஆரம்பித்தேன்.

நற நறவென்று அவள் பல்லை கடிக்கும் சத்தம் கேட்டதும், அது ஒரு கடி ஜோக் என்பது உறுதியாகியது.

"பிழச்சு போங்க..." கதை விஷயத்தை முற்றிலும் மறந்து, கரண்டி என்ற தன் 'கதை'யை கையில் எடுத்து மிரட்டினாள்.

"என்னோடு, அந்த பத்திரிகையும் பிழச்சுது…” அன்றைய தலைப்பு செய்திகள் ஓடிக் கொண்டிருந்த டி.வியை அலற விட்டு, அந்த சத்தத்தில் என் முணு முணுப்பை கரைத்தேன்.

"வாயால் வடை சுடும் கலையில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தாலும், இந்த மனைவியை சமாளிக்கறது இருக்கே..அப்பப்பா..சூப்பர் கஷ்டம்டா சாமியோவ்!"

தலைப்பு செய்தியை தற்காப்பு செய்தியா மாற்றும் வல்லமை படைத்த என்னை நானே பாராட்டிக் கொள்வதற்கு வார்த்தைகளே இல்லை!
 

Author: siteadmin
Article Title: 28. தலைப்புச்செய்திகள் - எஸ்.ராமன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.