டாக்டர் ஞான சூன்யம்..
'சங்கீதா மருத்துவமனை (வெளியே மக்களிடத்தில் அதன் புகழ் 'சங்கூதற' மருத்துவமனை என்று பரவிக் கிடக்கிறது...)மருத்துவ மனையின் டாக்டர் ஞான சூன்யம்(!) ஹாஸ்பிடலில் தனியாக உட்கார்ந்து ஈ ஒட்டிக்கொண்டிருந்தார்.பேஷண்ட் யாராவது மாட்டினால் அவர்களின் உயிரை ஓட்டுவார்...பாவம்.ஊரில் எல்லாரும் விவரமாகி விட்டதால் யாரும் மாட்டவில்லை.இடை தேர்தல் நடந்தும் ஓட்டுக்கு பணம் கிடைக்காத அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தவருக்கு போரடித்தது.அவரின் 'கை' ராசி ' தெரிந்ததால் எந்த ஈயும் வரவில்லை.சும்மா இருந்தவருக்கு போரடித்தது.
காலிங் பெல்லை அழுத்தினார்.
வெளியே வெட்டியாக இருந்த காம்பவுண்டரும்,நர்ஸும் ஜோடியாக உள்ளே வந்தார்கள்.காம்பவுண்டரை எதிர் பார்க்காதவர் பேரணிக்கு கூட்டம் வராத அரசியல்வாதி மாதிரி போல கடுப்பானார்.
''உன்னை யாருய்யா உள்ளே வர சொன்னது?..'' எரிந்து விழுந்தார்.
சுவாரசியமாக காதை குடைந்து கொண்டே,யாரையோ சொல்லுவதை போல இருந்தார் அவர்.
''யோவ்..உன்னைத்தான்...நர்ஸை மட்டும்தானே கூப்பிட்டேன்?..''
''போரடிக்குது சார்...'' அசுவாரிஸ்யமாக சொன்னார் அவர்...''எலெக்ஷ்ன்ல தோத்த வேட்பாளர் மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு இருக்கற இந்த நர்ஸ் மூஞ்சிய எவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்கறது?..'' சொன்னவரை நிஷ்டூரமாக முறைத்தாள் நர்ஸ்.
''சும்மா இல்லாம கடன் வாங்கி இந்த ஹாஸ்பிடலை வேற பெரிசா கட்டிட்டேன்..வட்டி கூட கட்ட முடியலையேயா.ஒரு பேஷண்ட் வர மாட்டேங்கறானே...'' புலம்பினார்...''நாளைக்கு கடன்காரன் நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்து நிப்பானே..''
'பேஷண்ட்தான் யாரும் வர்றதில்லலை. 'அவனாவது நம்ம ஹாஸ்பிடலுக்கு வரானேன்னு சந்தோஷப்படுங்க டாக்டர்...'' சொன்ன நர்ஸை முறைத்தார் ஞான சூன்யம்...''இந்த மாச சம்பளத்தப்போ பார்த்துக்கறேன்...''
''விடுங்க டாக்டர்.எப்படி பேஷண்டுங்க நம்ம ஹாஸ்பிடலுக்கு வருவாங்க?..'' சமாதானமாக சொன்னார் காம்பவுண்டர்.''அன்னைக்கு ஒருத்தர் பொண்டாட்டியால பேச முடியலைன்னு சொல்லி அப்பாவி ஒருத்தர் கூட்டிட்டு வந்தார்...நீங்க என்ன பண்ணி இருக்கணும்?...''
''என்ன பண்ணி இருக்கணும்?...'' கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார் டாக்டர்...
"நல்லவரா இருந்தா ''நீ அதிர்ஷ்டசாலிடா..கடவுள் உனக்கு தந்த வரம்..கூட்டிட்டு போய் குடும்பம் நடந்து'னு அறிவுரை சொல்லி அனுப்பி இருக்கலாமில்லே?...பெரிய நல்ல டாக்டர் மாதிரி ட்ரீட்மெண்ட் பண்ணீங்க...கடைசியில அவளுக்கு குணமாயிடுச்சு...''
''என் மேல குற்றம் சொல்லாதைய்யா...அவளுக்கு குணமாகும்னு நான் என்ன கண்டேன்?..வழக்கம் போல தேறாம போகும்னு நினைச்சேன்...என் கெட்ட நேரம் அவளுக்கு குணமாயிடுச்சு....''
''பாவம் அவன் இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறான்.இனிமே அவன் நம்ம ஹாஸ்பிடல் பக்கம் தலை வச்சு படுப்பானா?...''
''செத்தாலும் வரமாட்டான்.''
"புரியாம பேசாத.செத்தா இங்க ஏன் வரப் போறான்?..சுடுகாட்டுக்கில்ல போவான்?.இல்ல டாக்டர்?." என்று கம்பவுண்டர் அடித்த ஜோக்குக்கு சிரிக்கிற மூடில் இல்லை டாக்டர்.
'சிரிச்சாதானடா அடுத்த ஜோக் அடிப்ப?.' என்ற மூடில் இருந்தார்.
''அன்னைக்கு அப்படிதான் ஒரு பொம்பிளை தன்னோட மாமியாரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தா.ஆபரேஷன் கேஸ்.எப்படியும் சாகடிச்சுடுவீங்கன்னு பாவம் உங்களை நம்பி எவ்வளவு ஆசை ஆசையா கூட்டிட்டு வந்தா?..நீங்க என்னடான்னா அவளை பொழைக்க வச்சு அவ ஆசையில் மண்ணை போட்டீங்க..எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?..பாவம் அந்த மருமக எப்படி கேவலமா திட்டிட்டு போனா தெரியுமா?..''
''அதானே?.இப்படி கை ராசியே இல்லாம இருந்தா யாரு நம்ம ஹாஸ்பிடலுக்கு வருவாங்க?."
டாக்டர் தவிப்பாக பார்த்ததை பார்த்த நர்ஸுக்கு பாவமாக போய்விட்டது .
''ஏன் டாக்டர் .இப்படி பண்ணா என்ன?..'' நர்ஸ் சொன்னதை கேட்டு ஆர்வமாக கேட்டார்.
''என்ன?...''
''ஆட்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தா என்ன?..''
வேலைக்காரியை எதிர்பார்த்த இடத்தில் பொண்டாட்டி வந்த மாதிரி ஏமாற்றமாக போய் விட்டது டாக்டருக்கு.
''விளையாடறியா?...'' கடுப்பாக கேட்டார்.''ஏற்கனவே நாலு நர்ஸுங்க.உங்களுக்கே பாவம் வேலை இல்லை பாவம் செல்லுல கேம் விளையாடிட்டு பொழுதை போக்கறீங்க.இதுல இன்னொரு ஆளா?...''
''அய்யோ டாக்டர் .'' சலித்துக் கொண்டாள் நர்ஸ்.''பேஷண்ட் தேவைன்னு விளம்பரம் கொடுக்கலாம்னு சொன்னேன்.''
''ஹுக்கும்...அவ்வளவு ஏமாளிங்க நம்ம ஊர்ல யார் இருக்காங்க?.தெரியாம பேசி டாக்டருக்கு ஆசை வார்த்தை காட்டி ஏமாத்தாதே..''காம்பவுண்டர் விவரமாக பேசினார்.
அந்த நேரம் பார்த்து''டாக்டர்..டாக்டர்..'' என்ற குரல் கேட்டது..
''யாருப்பா அது?.வாழ்க்கையை வெறுத்த ஆளு?.சாக துணிஞ்சு நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்திருக்காரு?..பாவம் அப்படி என்ன கஷ்டமோ?..'' மெதுவாக சொன்ன காம்பவுண்டர் வெளியே போய் கல்யாணத்துக்கு வருபவர்களை வரவேற்கும் கல்யாண வீட்டுக்காரரை போல மரியாதையுடன் அழைத்து வந்தார்...
'பேஷண்டை பார்த்ததும் டாக்டருக்கு இடை தேர்தல் வேட்பாளரைப் பார்த்த வாக்காளர் மாதிரி சந்தோஷம் ஏற்பட்டது.
''வாங்க..வாங்க..என்ன பிரச்சினை?..''
சந்தோஷமாக கேட்டார்..
''எதை சொல்றது எதை விடறது டாக்டர்?..மொபைலுக்கு சிக்னல் சரியா கிடைக்க மாட்டேங்ககுது..நெட்டுக்கு சிக்னல் கிடைக்க மாட்டேங்குது.இந்த ஜி எஸ் டி பிரச்சினை வேற.பணம் வர்ற எடத்துல ஒழுங்கா யாரும் தர மாட்டேங்கறாங்க...''
''ஐயோ..ஐயோ..ஐயோ..உங்க உடம்புல இருக்கற பிரச்சினையை கேட்டேன்."
''ஓ..அதுவா?.வயிறு ஏறியது டாக்டர்...''
''பொறாமை பட கூடாது.அதிர்ஷ்டம் இருந்தா உங்க தொகுதியிலும் இடை தேர்தல் வரும் ..பணம் கிடைக்கும் .''
''ஐயோ அது அந்த வயித்தெரிச்சல் இல்லை டாக்டர்..நிஜமான வயித்தெரிச்சல்..கூடவே பல் வலி வேற...''
அப்போதுதான் வந்தவரை நன்றாக கவனித்தார் டாக்டர்.
டாக்டரின் முகம் பெருமிதத்தால் மின்னியது.உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது.காரணம் அவர் அடிக்கடி வரும் ரெகுலர் பேஷண்ட்.
''ஆமா.நீங்க அடிக்கடி என்னோட ஹாஸ்பிடலுக்கு வர்றீங்களே .என்ன காரணம்?.. என்னோட திறமைதான் காரணமா?...''
''நான் ஏற்கனவே பல்லு வலியில வாய திறக்க முடியாம அவதிப்பட்டுட்டு இருக்கேன்.நீங்க வேற ஜோக்கடிச்சு என்னை சிரிக்கவச்சு கஷ்டப்படுத்தாதீங்க டாக்டர்..''
''ஓ.சாரி..ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.கஷ்டப்படாதீங்க.என் மருத்துவ அறிவால...’’
''டாக்டர்.என்னை சிரிக்க வைக்காதீங்கன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்.வேற டாக்டர் இல்லாததால வேற வழியே இல்லாம வந்து தொலைக்கறோம்கறதை சொல்ல வேணாம்னு பார்த்தா....'' பல்பு வாங்கின நெட்டிசன் மாதிரி முகம் மாறிய டாக்டர்,
‘’ஓ.கே...ஓ.கே...இந்த ரகசியம் நம்மளோடயே இருக்கட்டும்.அதுக்குதான் வீட்ல பொன்டாட்டி முன்னாடி வாயை திறக்க கூடாதுங்கறது.இப்போ வலியால அவதிப்படறது நாமதானே?...பூரிக்கட்டை மாதிரி தெரியுது...ஏம் ஐ கரெக்ட்?'' பெருமையாக கேட்டார்.
''அய்யோ அதை ஏன் கேக்கறீங்க?..நான் என்ன அவ்வளவு விவரம் இல்லாதவனா டாக்டர்?.அடிக்கடி பூரிக்கட்டை,மத்து,கரண்டி னு செலவு வேற புதுசா வாங்கறதால நம்ம தலையில விடியுதே...அதனால வாயே திறக்கறதில்லை.அதுக்குன்னு கொட்டாவி வந்தா கூட வாய திறக்க கூடாதுனு சொன்னா எப்படி?.கொட்டாவி விடத்தான் வாய திறந்தேன்.'அதுக்கே ,'என் முன்னால வாய திறக்கிற அளவு அவ்வளவு தைரியம் வந்துடுச்சான்னு வீட்ல இருந்த பூரிக்கட்டை ஒண்ணு உடைஞ்சுடுச்சி...''
''அதுக்குதான் நானெல்லாம் வாயையே திறக்கறது இல்லை.சாப்பிடறது கூட ஸ்டிராவச்சு திரவ உணவுதான்..நம்ம உடம்பை நாமதான் காப்பாத்திக்கணும்...''
''சார்." என்றாள் நர்ஸ் எரிச்சலாக...
''இரும்மா.ஒரு குடும்பஸ்தன் கஷ்டம் இன்னொரு குடும்பஸ்தனுக்குதான் தெரியும்.உனக்கென்ன ?.டிஸ்டர்ப் பண்ணாத..நீங்க சொல்லுங்க சார்..''
''வயித்து வலி வேற சார்..''
''சாப்பிட்டது ஏதாவது ஃ புட் பாய்சன் ஆகி இருக்கும்...''
''அட நீங்க வேற டாக்டர்.என் பொண்டாட்டி பத்தி உங்களுக்கு தெரியாது...அவ செய்யற ஃ புட்டே பாய்சன் மாதிரிதான் இருக்கும்.''
வந்த பேஷண்ட் சொன்னதைக் கேட்டு விதிர்விதிர்த்துப் போனார் டாக்டர்.
''என்ன சொல்றீங்க?.உங்க வீட்ல சமைக்கறது உங்க மனைவிதானா?.அட பாவமே.அப்படி என்னங்க உங்க மேல இப்படி பழிவாங்கற அளவுக்கு கோபம்?.ஒரு ஆம்பிளைய இப்படியா கொடுமைப் படுத்துவங்க?..ஆனாலும் ரொம்ப பாவம்ங்க நீங்க..''
என் சோக கதையை கேளு டாக்டர் குலமே ' என்பதாய் பாவமாக உட்கார்ந்திருந்தார் பேஷன்ட்.
''சரி விதி வலியது.உங்களை நினைச்சு நான் பரிதாபப் படதான் முடியும்..'' என்ற டாக்டர்,''சரி..ட்ரீட்மெண்ட ஆரம்பிச்சுடலாம்..'' என்று சொன்னவர்,
பேஷண்டை அருகில் கூப்பிட்டார்.தானும் அருகில் வந்தவர், இருவரையும் சேர்த்து ஒரு செல் ஃ பி எடுத்தார்.புரியாமல் பார்த்த பேஷண்டிடம்,
''ஹி..ஹி..எங்கிட்ட பேஷண்ட் யாரும் வர்றதில்லைனு என்னோட ஃ பிரென்ட் டாக்டர்ஸ் எல்லாம் புறம் பேசறாங்க.அவங்களுக்கு,'எனக்கும் பேஷண்ட் வராங்கனு நிரூபிக்கணுமில்லே?..அதுக்குதான்.ஒரு நிமிஷம்...'' என்றவர் ஃ பேஸ்புக்கில் அப்டேட்டி ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு வந்தார்... வந்தவர் ,
''நர்ஸ்.இவரை செக் பண்ணுங்க..'' என்றார்.
அவர் சொன்னதும் பக்கம் வந்த நர்ஸ்,பேஷன்டின் பாக்கெட்டில் கையை விட்டு பர்ஸை எடுத்தாள்.அதிர்ந்து போன பேஷண்ட்,
''டாக்டர்...என்ன இது?..''
''தப்பா நினைக்காதீங்க...நாலைஞ்சு பேஷண்ட்டு கிட்டே ஏமாந்துட்டேன்...அதுல இருந்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை .அவ்வளவுதான்.''
''பர்ஸ்ல ஃ புல்லா பணம் இருக்கு டாக்டர்...'' என்று நர்ஸ் அவர் காதில் ஸ்மைலியை பாய்ச்சினாள்.
''அப்போ பிரச்சினை இல்லை.தைரியமா ட்ரீட்மண்ட ஆரம்பிக்கலாம்.'' என்று எழுந்தார் டாக்டர்.
சரியாக பார்த்து அப்போதுதான் பக்கத்தில் இருந்த கம்பெனியில் இருந்து சங்கு ஊத ஆரம்பித்தது.
''என்ன டாக்டர் இது?..'' பேஷன்டின் முகத்தில் திகிலும்,கலவரமும் பரவுவதைப் பார்த்து டாக்டருக்கு பகீரென்றது.'இவன் ஒருத்தனை வச்சு நான் என்னென்னமோ பிளான் பண்ணி இருக்கேன்.இந்த சங்கு எல்லாத்தையும் கெடுத்துடும் போல இருக்கே.நாசமா போறவன்..'' பக்கத்து கம்பெனி காரனுக்கு சாபம் கொடுத்தவர்,''அதெல்லாம் பார்த்து பயப்படாதீங்க..ஒண்ணுமில்ல..'' என்று தைரியம் சொல்லிவிட்டு பேஷண்ட் அருகில் வந்தார்.
''டாக்டர்..ஒரு சந்தேகம்...'' பேஷண்ட் கேட்டதும் டாக்டருக்கு அடிவயிறு
கலங்கியது.''ஏதாவது தெரியாததை கேட்டு தொலைக்கப் போறான்..' என்று' வீட்டுக்கு ரெய்டு வந்த அரசியல்வாதி 'நெஞ்சினராக ஆனவர் ''கேளுங்க என்றார்..
''ஒண்ணுமில்லை டாக்டர்.உங்களை எல்லாரும் வெளியே அஞ்சு ரூபா டாக்டர்னு சொல்றாங்களே?..என்ன விஷயம்?..5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பீங்களா?..'' என்று கேட்டு டாக்டரின் வயிற்றில் ஈமோஜியை வார்த்தார்.
''ஓ..இதானா?..நான் பயந்தே போயிட்டேன்.உங்ககிட்டே சொல்றதுக்கென்ன?..வர்ற பேஷண்ட்கிட்ட டீ செலவுக்கு கடன் பண்ணுவேன்.அதை சொல்வாங்க போல..''
சொல்லிவிட்டு செக்கப்பை முடித்து விட்டு பரீட்சையில் நன்றாக படித்த பையன் எழுதுகிற மாதிரி விறு விறுவென்று எழுத ஆரம்பித்தார்.
''என்ன டாக்டர் இது?..'' பயந்து போய் கேட்டார் பேஷண்ட்.
''உங்களுக்கு செய்ய வேண்டிய டெஸ்ட்..''
''அடிஷனல் ஷீட் வேணும்னாலும் எடுத்துக்கோங்க பேப்பர் பத்தலைனா...''
''ஹி..ஹி..இதெல்லாம் நீங்க பண்ணியே ஆகணும்...''
''உடனே பண்ணனும்..ரொம்ப அவசரம்..''
''ரெண்டு நாள் தள்ளி பண்ணிக்கலாம் டாக்டர்..''
''ஐயோ ..அவசரம் தெரியாம பேசறானே.நாளைக்கு வர்ற கடன்காரனை இவனை வச்சுதானே ஒப்பேத்தணும்'என்று பதறியவர்,''அதெல்லாம் இல்லை..உடனே பண்ணனும் .இல்லைனா மானம் போயிடும்...''
''என்ன டாக்டர் சொல்றீங்க?..மானம் போயிடுமா?..''
''அப்படியா சொன்னேன்?..ஆமா..ஆமா..வியாதி முத்தி அதிகமாகி காப்பாத்த முடியலைன்னா என் நல்ல பேர்தானே கெடும்?.அதை சொன்னேன்..'' சொன்னவர் சீட்டை கொடுத்தார்.
அதை பார்த்த பேஷண்ட்,''நான் வரேன் டாக்டர்...'' என்றபடி கிளம்பினார்.
''ஏங்க?.என்னாச்சு?..'' அவர் சொன்னதும் கஷ்டப்பட்டு போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக் கிடைக்காத ஃ பேஸ்புக்வாசி போல அதிர்ச்சியான டாக்டர் கேட்டார்.
''இல்லே டாக்டர்.நான் கேவலம் பத்தாயிரம் ரூபாதான் எடுத்துட்டு வந்து இருக்கேன்.ஒரு ஃ பிளாட் ஒண்ணு வச்சிருக்கேன்.அதை வித்து பணம் எடுத்துட்டு வர்றேன்.அப்பதான் சரியா இருக்கும் போல.''
அவர் சொன்னதை கேட்டு பதறிய டாக்டர்,'கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ?..'' என்று வடிவேல் கணக்கில் யோசித்தவர்,
''ஐயோ ..அப்படிலாம் முடிவு பண்ணிடக் கூடாது...'' என்று சொன்னவர்,அந்த சீட்டை வாங்கி 'வேணும்னா உங்களுக்காக கொஞ்சம் டிஸ்கவுண்ட் பண்ணி தரேன்.'' என்று சொன்னபடி பாதியை அடித்து விட்டு கொடுத்தார்.
''இப்போ ஓகே வா?..''
‘’ஓ.கே.டாக்டர்...'' அவர் சொன்னதும் நர்ஸை உள்ளே கூப்பிட்ட டாக்டர்,''இவரை ஸ்கேன் எடுக்கிற ரூமுக்கு கூட்டிட்டு போ..'' என்றார்.
''டாக்டர்.ட்ரீட்மெண்ட் பண்ணா ஒண்ணுமில்லாம ஆகிடுமில்லே?...''
''கண்டிப்பா.'' 'சந்தேகமா இருந்தா வெளிய விசாரிச்சு பாருங்க.இங்க வந்த வங்க எத்தனை பேர் வீடு வாசலை எல்லாம் இழந்து ஒண்ணுமில்லாம போயிருக்காங்கனு..' மனதில் நினைத்துக் கொண்டாள் நர்ஸ்.
அவர் போனதும், ''நெக்ஸ்ட்'' என்றார் டாக்டர் பந்தாவாக..
வெளியே ஃபேஸ்புக்கில் களமாடிக்கொண்டிருந்த கம்பவுண்டர்,''எரிச்சலை கிளப்பாதீங்க டாக்டர்.அடுத்தது எப்பவோ..''என்றார்.
ஸ்கேனிங் ரூம்..உள்ளே வந்த பேஷண்டை பார்த்து முகத்தை சுழித்தால் அங்கிருந்த விமலா.
''இப்போதான் வழி தெரிஞ்சதாக்கும்..ரெண்டு நாலா ஏன் வரலை?..'' அவள் சொன்னதை கேட்டு ஃ பேக் ஐ.டி.யில் அக்கவுண்ட் ஆரம்பித்து கண்ணா,பின்னா என ஸ்டேட்டஸ் போட்டு மாட்டிக்கொண்டு,விழி பிதுங்கிய ஆள் போல அதிர்ந்த பேஷண்ட்,''இதென்ன மாமியார் வீடா?..ஹாஸ்பிடல்மா..ஹாஸ்பிடல்...'' சொல்லிக் கொண்டே அவளை அணைக்கப் போனார்...
''நம்ம கள்ள காதல் என்னைக்கு வெளியே தெரிஞ்சிடுமோனு பயமா இருக்கு.நானே அப்பப்போ பயந்துட்டு உன்னைப் பார்க்க பேஷண்ட்டுங்கற வேஷத்துல வந்துட்டு இருக்கேன்.இல்லாத நோயை எல்லாம் சொல்லிட்டு இங்கே வர்றது உன்னை பார்க்காதான்னு தெரிஞ்சா அவ்வளவுதான்.நான் என்னைக்கு மாட்டப் போறேன்னு தெரியலை.நான் போலி பேஷண்ட்டுங்கறது தெரிஞ்சா அவ்வளவுதான்...''
அவர் சொல்ல சிரித்தாள் நர்ஸ்..
''என்ன சிரிக்கிறே?.'' ஃபைல்ஸ் நோயாளி பாத்ரூம் போவது போல அவஸ்தையாயாக கேட்டார் பேஷண்ட்.
''கவலைப்படாதீங்க..மாட்டினாலும் ஒண்ணும் பண்ண மாட்டாங்க.'' அலட்சி
யமாக சொன்னாள்.
''ஏன்?..''
''டாக்டரும் போலி டாக்டர்தான்..'' என்றாள்.
Author: SudhaSri
Article Title: 29. டாக்டர் ஞான சூன்யம்... - கே. ஆனந்தன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 29. டாக்டர் ஞான சூன்யம்... - கே. ஆனந்தன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.