• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

30. ஒரு இரு ரூபாய் நோட்டும் ,நூடுல்ஸ் பாக்கெட்டும்.. கே.ஆனந்தன்

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
468
34
43
india
ஒரு இரு ரூபாய் நோட்டும் ,நூடுல்ஸ் பாக்கெட்டும்..

கணேஷாகிய நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தி விட்டு காத்திருக்கும் கலவரம் தெரியாமல்,சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்..
என் இல்லாள் (இல்லாள் என்றாள் மனைவி என்று நீங்கள் நினைத்திருக்கலாம்..ஆனால் அதன் உண்மை பொருள் வேறு..
பயம் இல்லாள்..மரியாதை இல்லாள்..என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை..) விமலா காபி(?) யோடு காத்திருந்தாள்..
எப்போதும் என் வருகை அவளிடத்தில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது என் இத்தனை வருட திருமண வரலாற்றில் நான் அறிந்திருந்த உண்மை..இன்று இந்த சிறப்பான வரவேற்புக்கு என்ன காரணம் என்று நான் கொரோனா பேஷண்டுடன் பழகியவனைப் போல கலங்கி நடுங்க ஆரம்பித்தேன்..
போட்ட ஸ்டேட்டசுக்கு மோசமான கமென்ஸ் வாங்கியவளை போலவும்,மீம்ஸ் வாங்கி கலாய்ப்பு வாங்கிய அரசியல்வாதி போலவும் இருந்த விமலாவின் முகம் பார்க்ப சகிக்க வில்லை..சாதாரணமாகவே சகிக்காது என்ற பேருண்மை என்னுள்ளேயே அடங்கி போக வேண்டிய சோகம்..
''ஏங்க..இன்னைக்கு ஒரு தப்பு நடந்துடுச்சுங்க..''
"என்ன தப்பு விமலா?..நான் கூட தைரியமா உன் முன்னால காலைல இருந்து வாய திறக்கலையே?.." அவள் முன் வாயை திறந்து பேசி விட்ட சந்தோஷத்தில் ஆனந்த கூத்தாடியது மனது..
"சேச்சே..உங்கள பத்தி எனக்கு தெரியாதா?..இது நான் பண்ண தப்பு.." அவள் சொன்னதும்தான் உயிர் வந்தது எனக்கு..'அப்பாடா..தப்பிச்சேன்..'
"என்ன பண்ணே?..'' சற்றே உரக்க கேட்டுவிட்டேன் போல..முறைத்தவள் சொன்னாள்..
"டெசிபல் கூடுது?.."
திடுக்கிட்டவன் சைலன்ட் மோடுக்கு போனேன்..இல்லை என்றால் என் உடல் வயலன்ட் மோடுக்கு தயாராக வேண்டும் என்பது நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடம்..
"ஒண்ணுமில்லைங்க..இன்னைக்க பழம் வாங்க கடைக்கு போனேனா?..ஆப்பிள்,ஆரஞ்சு, திராட்சை-உங்களுக்கு புடிச்ச கொட்டை இல்லாத திராட்சைதாங்க..எல்லாம் வாங்கிட்டு ஐநூறு ரூபாவ கொடுத்தேங்க..இருநூறு ரூபா போக மீதி சில்லறை முன்னூறு ரூபா கொடுத்தான் கடைக்காரன்..நானும் வாங்கிட்டு வந்துட்டேன்..வீட்ல வந்து பார்த்தாதாங்க தெரியுது..அவன் கொடுத்த பணத்துல ஒரு இருநூறு ரூபா நோட்டு செல்லாத நோட்டு..கிழிஞ்சதை டேப் போட்டு ஒட்டி இருக்காங்க..நானும் கவனிக்காதயே வாங்கிட்டு வந்துட்டேங்க.."
"சரி..அந்த கடைக்காரன்கிட்ட போய் கேக்க வேண்டியதுதானே?.."
"கேட்டனே..அதை நான் தரலைனு சத்தியம் பண்றான் அவன்..எவ்வளவோ பேசியும் ஒத்துக்க மாட்டேங்கறான்.."
'உன் வாயெல்லாம் எங்கிட்டதான்..' தோன்றியதை சொல்லாமல் வழக்கம் போல மனதில் வைத்துக் கொண்டேன்..
"சரி..இப்ப நான் என்ன பண்ணணும்கறே?.."
"இந்த செல்லாத இருநூறு ரூபாய எப்படியாச்சும் உங்க சாமர்த்தியத்தால மாத்திட்டு வாங்க பார்ப்போம்.."
அவள் சொன்னதும் நான் சிலிர்த்தெழுந்தேன்..ஏனெனில் கடந்த இருபதாண்டு காலமாகவே (இது எனக்கு திருமணமாகி ஆன காலம் என பொருள் கொள்க..) என் சாமர்த்தியம்,திறமை,அறிவு இவை மீதெல்லாம் விமலாவுக்கு அபாரமான அவநம்பிக்கை உண்டு..ஏன்..என் பரம்பரையின் சாமர்த்தியம் மீதே அவளுக்கு சந்தேகம் நிறைய..அவற்றை துடைத்தெரிய கடவுளாய் கொடுத்த வாய்ப்பு..என் பரம்பரையின் சாமர்த்தியத்தை நிரூபிக்க வேண்டிய கடைமை எனக்கு இருக்கிறது..
அந்த செல்லாத இருநூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்..
யாரிடம் இந்த நோட்டை மாற்றுவது?..யோசித்த எனக்கு நினைவுக்கு வந்தான் தெருக்கோடியில் டீ கடை வைத்திருக்கும் மகாலிங்கம்..அவன் என் நண்பன்தான்..நான் அவன் கடையின் ரெகுலர் கஸ்டமர்..
அவனுக்கு நான் தர வேண்டிய பாக்கி நூற்றி ஐம்பது ரூபாய் சொச்சம் இருக்கிறது..இந்த பணத்தை கொண்டு அவன் கடனை அடைத்து விட வேண்டியதுதான்..முடிவு செய்தவன் அவன் கடைக்கு போனேன்..
"மகாலிங்கம்..குடிக்கற மாதிரி ஒரு டீ போடு.." கெத்தாக குரல் கொடுத்தேன்..
அவனுக்கு அது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும்..ஏனெனில் நான் என் அடக்க,ஒடுக்கம் அவனுக்கும் தெரியும்..நூத்தி அம்பது ரூபாய் பாக்கி இருக்கிறதே..
"என்னப்பா..சவுண்டு பலமா இருக்கு..கைல காசு இருக்கும் போல.." கண்டுபிடித்து விட்டான்..புத்திசாலிதான்..
எதுவும் பேசாமல்,அமர்த்தலாக சென்று இரண்டு வடைகளை கடித்தேன்..
"என்னப்பா..வடை டேஸ்ட்டே இல்லையே?.." மண்ணு மாதிரி இருந்தாலும் கடனுக்கு சாப்பிடும் போது மவுனமாக
சாப்பிடும் நான் இப்படி குரல் கொடுத்தது இன்னும் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்க வேண்டும்..
'இன்றைக்கு பணம் வந்துடும்..' சந்தோஷத்தில் புது தூள் எல்லாம் போட்டு வழக்கத்துக்கு மாறாக நல்ல டீ போட்டு கொடுத்தான்.
சாப்பிட்டுவிட்டு எழுந்தேன்..அவனிடம் அந்த இருநூறு ரூபாய் நோட்டை கெத்தாக நீட்டினேன்..மனதில் இருந்த பயம் எனக்கு மட்டும்தானே தெரியும்?..மாஸ்க் போடாமல் போய் போலீசிடம் மாட்டிக் கொள்வோமோ என்று பயப்பட்டுக் கொண்டிருப்பவனின் மன நிலையில் இருந்தேன்..
"பழைய கடனை எடுத்துக்கோ..இந்த காசையும் எடுத்துக்கோ..மீதி சில்லறை குடு.."
பணத்தை வாங்கினவன் திருப்பி பார்த்தான்..
"ஏம்பா..என்னை என்ன கேனையன்னு நினைச்சியா?."
அவன் குரலில் இருந்த கோபம் அவன் நோட்டை செல்லாத நோட்டு என்று கண்டுபிடித்து விட்டான் என்று உணர்த்தியது..
"செல்லாத கிழிஞ்சு ஒட்ட வச்ச பணத்தை கொண்டு வந்து தர்றே?..வேற நோட்டு குடு.."
நான் அதை அப்போதுதான் பார்ப்பதைப் போல பார்த்து விட்டு,"அடடா..கடைல குடுத்தான்..அப்படியே வாங்கிட்டு வந்துட்டம்பா..சரி..குடுத்துட்டு இதையும் கணக்குல சேர்த்துக்க.." அவன் தர,வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினேன்.'வட போச்சே..' என்பது போலிருந்தது அவன் பார்வை..
முதல் முயற்சியே படு தோல்வியில் முடிய,அடுத்ததாக என்ன பண்ணலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்..
நான் திரும்பி நடக்கும் போது எதிர்பட்டது விமலா பழம் வாங்கிய கடை..அவனிடமே சென்று பழம் வாங்கி மாற்றலாமா என்ற யோசனையை அழித்தேன்..வான்ட்டடாக போய் வம்பில் ஏன் மாட்ட வேண்டும்?..
அப்படியே நோட்டம் விட்டதில் நான்கைந்து கடைகள் தள்ளி தேமே என்று உட்கார்ந்திருந்த ஒருவரின் பழ கடை தெரிந்தது..அங்கு சென்று முயற்சிக்கலாமே..நடந்தேன்..
"ஆப்பிள் என்ன விலை சார்?.."
ஃபேஸ்புக்கில் ஒரு படத்துக்கு லைக் போட்டு சமூக கடைமை ஆற்றிக்கொண்டு இருந்தவன்,நான் கேட்டதும் நிமிர்ந்தான்..
"கிலோ 140 ரூபா சார்.."
"டேஸ்ட் நல்லாருக்கும்தானே?.."
"எல்லாம் சிம்லா,காஷ்மீர் ஆப்பிள் சார்..மாவு மாதிரி இருக்கும்.."
"என்ன மாவு..கடலை மாவா?..கோதுமை மாவா?.." சொல்லிவிட்டு சிரித்த என்னை அது மகா மொக்க ஜோக் என்று உணர வைத்தது அவன் பார்த்த பார்வை..
சே..செல்லாத நோட்டை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பொல்லாத வாய் தேவையா?..அந்த நோட்டை மாற்றி என் மற்றும் என் பரம்பரையின் சாமர்த்தியத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மறந்து தொலைக்கிறேன்..
"இந்த ஆப்பிளே குடு.."சொன்னவன் அந்த இருநூறு ரூபாய் நோட்டை எடுத்தேன்..
வாங்கியவன் திரும்ப,திரும்ப பார்க்க சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய விஞ்ஞானி கணக்காக தவித்தேன்..
முடிவில் ஒட்டி இருப்பதை கண்டுபிடித்து விட்டவன்,"இது செல்லாது சார்..வேற குடுங்க.." என்றான் என்னை அற்ப ஜந்துவாக பார்த்து..
திடுக்கிடுவதை போல நடித்து (முகத்தை சட்டென்று மாற்ற எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது..) டீ கடையில் சொன்ன அதே பொய்யை சொல்லிவிட்டு திரும்ப வாங்கிக் கொண்டு நடந்தேன்..
ஆக இரண்டாம் முயற்சியும் தோல்வி..
அடுத்த என் படையெடுப்பு நாகநாதன் மளிகை கடை..மளிகை கடை என்றதும் பெரிதாகவெல்லாம் கற்பனை வானில் சிறகடிக்க வேண்டாம்..வகையில் நான்கு வைத்துக்கொண்டு மளிகை கடை நடத்துவதாக தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆத்மா அவன்..
ஊரில் தானும் தொழில் செய்வதாக நம்ப வைக்க வேண்டுமல்லவா?..ஆனால் அவன் கடையை ஊர் மக்கள் ஒரு பொருளாக -ஸாரி- பொருட்டாக மதிப்பதில்லை என்பது அவன் வாழ்வின் பெரும் சோகம்..
நாகநாதனுக்கு என் வருகை பெரும் உவகையை தந்திருக்க வேண்டும்..பின்னே..அவன் எவ்வளவு நேரம்தான் ஈக்களிடம் மட்டும் பேசிக் கொண்டிருக்க முடியும்?..
"வாப்பா?..என்ன வேணும்?.." வெள்ளந்தியாக கேட்டான் என் கள்ளம் தெரியாமல்..
"உளுந்தம் பருப்பு இருக்கா?.." இல்லாமல்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் கேட்டேன்..
"கடலை பருப்பு இருக்கு.." என்றான்..
"இட்லி, தோசைக்கு கடலை பருப்பு போடற அளவுக்கு டெக்னாலஜி முன்னேறட்டும் நாகா..(நாகநாதனின் ஷார்ட் வர்ஷன்..)..அப்புறம் வாங்கிக்கறேன்..சரி..கடலை?.."
"அடடா..காலைலதான தீர்ந்துச்சு..சாயங்காலம்தான் சரக்கு போட போகணும்.." என்றான் சீரியஸாக..
வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளவெல்லாம் தனி திறமை வேண்டும்..
"வேற என்னதான் இருக்கு?.."
"நீதான கடைக்கு வந்த?..இவ்வளவு பெரிய கடையில என்ன வேணும்னு நீதான் சொல்லணும்.."
' அடேய்..நீ என்னை கலாய்க்கறியா இல்ல உன்னையே கலாய்ச்சுக்கறியாடா?..'நினைத்தபடி
அமைதியாக நின்றேன்..' சிரிச்சாதானடா அடுத்த ஜோக் அடிப்ப?..'
"சீக்கிரம் சொல்லுப்பா..கஸ்டமர் வர்ற நேரம்..டிஸ்டர்ப் பண்ணாதே.."
கடையை நோட்டம் விட்டேன்..ஊஹூம்..எதுவும் தேறாது..
'அதிர்ஷ்டசாலிடா நீ நாகா..தப்பிச்சிட்ட..' நினைத்தபடி கடையிலிருந்து புறமுதுகிட்டவன்,
வேறு கடைகளில் சில்லறை கேட்டு, பொருள் கேட்டு,ஓட்டலில் டிபன் கேட்டு முயற்சித்தும் அதை மாற்ற முடியாததால் கடன் பட்ட நெஞ்சினனாக கலங்கி நின்றேன்..வித்தியாசம் என்னவென்றால் அவன் இலங்கை வேந்தன்..நான் வெறும் மாந்தன்..
என் சாமர்த்தியத்தை நிரூபிக்கவே முடியாதா?..செல்லாத காசு கொண்டு என் மாசு துடைக்க முடியாதா?..
அந்த நேரத்தில் எனக்கு ஆபத்பாந்தவனாக நினைவுக்கு வந்தவர் பரசுராமன் அண்ணாச்சி..
அண்ணாச்சி என்று அழைக்கப்படும் அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்..ஆரம்ப காலத்தில் இருந்து மளிகை கடைதான் அவரின் தொழில்..ஓஹோ வென்று சென்று கொண்டிருந்த அவரின் கடை சூப்பர் மார்க்கெட்டுகளில் வருகைக்கு பிறகு நசுங்க தொடங்கியது
அவருக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது..கண்ணாடி போட்டால்தான் அரைகுறையாக தெரியும்..இது இரவு வேளை..
அது மட்டுமல்லாமல் நானே அவரை நான்கைந்து முறை செல்லாத நோட்டுகள் கொடுத்து ஏமாற்றிய வரலாற்று பின்னணியும் உண்டு என்பதால் ,அவர்தான் சரியான ஆள் என்று தேர்ந்தெடுத்தேன்..இவ்வளவு நேரம் எப்படி அவரை மறந்தேன்..நொந்து கொண்டவனாக அவர் கடைக்கு நடந்தேன்..
நான் போனபோது அண்ணாச்சி தோலில் துண்டுடன் எதையோ தேடிக்கொண்டிருந்தார்..
''என்ன அண்ணாச்சி தேடறீங்க?..'' கேட்டேன்..
''என் கண்ணாடியை காணோம்பா..வீட்டுல மறந்து வச்சுட்டேன் போல..''
''அடடா..எனக்கு இப்ப பொருள் வேணுமே?..'' 'நமக்கு அமையறதெல்லாம் சாதகமாதான் அமையுது' வடிவேலு கணக்காக நினைத்து அக மகிழ்ந்து கேட்டேன்..
''என்ன வேணும்?..''அவர் கேட்க அங்கிருந்த பொருள்களை பார்த்து ''நூடுல்ஸ் ஒரு கிலோ குடுங்க..''
அவர் எழுந்தார்..நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அடுக்கி வைத்திருந்த ரேக்குகளில் தேடினார்..சில பல பாக்கெட்டுகளை தள்ளிவிட்டு அடியில் இருந்த பாக்கெட் ஒன்றை எடுத்தார்..
எடுத்தவர் திருப்பி,திருப்பி வெளிச்சத்தில் நான்கு முறை உற்று பார்த்தவர், அவருக்கு திருப்தியான பின் என்னிடம் கொடுத்தார்..
வாங்கின நான் என்னிடம் இருந்த நோட்டை நீட்டினேன்..வாங்கியவர் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டார்..உஷாராக இருக்கிறாராம்..
''நல்ல நோட்டுதானேப்பா?..என்னை நிறைய பேர் ஏமாத்திடறாங்க..அதான் செக் பண்ணேன்..உஷாரா இருக்கறது நல்லதுதானே?..''
''புது நோட்டு அண்ணாச்சி..''
கல்லாவில் போட்ட அண்ணாச்சி மீதி சில்லறை குடுத்தார்..
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவன் கூட அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டான்..அவ்வளவு சந்தோஷம் எனக்கு..
வீட்டுக்கு வந்த நான் விமலாவிடம் பெருமையாக காட்டினேன்.."அட..உங்க சாமர்த்தியத்தை ஒத்துக்கறேன்..யாரை ஏமாத்தினீங்க?..யார் உங்ககிட்ட ஏமாந்தது?..யார் அவ்வளவு விவரமில்லாத ஆள்?.."
"நம்ம மளிகை கடை அண்ணாச்சிதான்..அவர்கிட்டதான் மாத்துனேன்..இப்பவாவது தெரியுதா என்னோட சாமர்த்தியம்?.."
"அது சரி..அடுத்தவங்களை ஏமாத்த உங்க பரம்பரைக்கு சொல்லி தரணுமா என்ன?.."
அடச்சே..இந்த பொம்பளைங்க புருஷனை பாராட்டவே மாட்டாங்களா பாஸ்?..
அன்று மாலை எங்கள் வீட்டில் நூடுல்ஸ்தான் டின்னர்..சும்மா சொல்ல கூடாது..செமையாக இருந்தது..அதற்காக விமலா சமையல் நிபுணி என்றெல்லாம் வீண் கற்பனைக்கு இடமளித்து என்னைப் பார்த்து பொறாமைப் படாதீர்கள்..அகஸ்மாத்தாக அமைந்நது அது..(விமலா சமையலை சாப்பிட்ட என் உயிர் நண்பர்கள் அப்புறம் ஜென்ம பகைவர்களாக ஆன விஷயம் தனி கதையாக எழுத வேண்டிய மேட்டர்..)
இரவு பன்னிரென்டரை..திடீரென்று விழிப்பு வத்தது..வயிறு கலங்க,வயிற்றில் சுண்டி இழுப்பது போல வலி..
பாத்ரூமுக்கு போய்விட்டு வந்தேன்..
அடுத்த ஒரு மணி நேரத்தில் நான்கு முறை போய்விட்டு வந்தேன்..வயிறு வலி வேறு பின்னி எடுத்தது..
விமலாவை எழுப்பலாமா என்று பார்த்தேன்..ஊஹூம்..அது வயிற்று வலி போய் தலைவலி வந்த கதையாகிவிடும்..அவளுக்கு 'துக்கம் ஆனாலும் தூக்கம்..ஊண் இல்லாவிட்டாலும் உறக்கம்' முக்கியம்..
விடிய,விடிய எத்தனை முறை பாத்ரூம் போயிருப்பேன் என தெரியவில்லை..துவண்டு போயிருந்தேன்..
விடிந்ததும் விமலாவிடம் சொல்லி ஃபேமிலி டாக்டர் பிரபாகரை வர சொன்னேன்..
"அவர் ஃப்ரீயா இருப்பாரோ என்னமோ?.."
"அவன் எப்பவும் ஃப்ரீயாதான் இருப்பான்.." என்றேன்..
அரை மணி நேரத்தில் வந்த டாக்டர்,செக் செய்து விட்டு,
ஊசியைப் போட்டவர்,மருந்து எழுத ஆரம்பித்தார்..பகீரென இருந்தது எனக்கு.விட்டால் அடிஷனல் பேப்பர் கேட்பார் போல..
இரண்டு மாத்திரைகளை கொடுத்தவர்,"ஃபீஸ் மாத்திரை, எல்லாம் சேர்த்து 800 ரூபா ஆகுது..மாத்திரை பையன்கிட்ட குடுத்தனுப்பறேன்..இப்ப இந்த மாத்திரையை சாப்புடுங்க..ஆமா..
என்ன சாப்பிட்டீங்க?..ஃபுட் பாய்சன் ஆகி இருக்கு.."என்றார்..
"என் மனைவி சமையல்தான் டாக்டர்.."
"இவ்வளவு தைரியமா பேசறீங்களே..துணிச்சல் அதிகம்தான் உங்களுக்கு.."
அவரும் என்னை மாதிரிதான் போல..
எங்களை நிஷ்டூரமாக முறைத்தவள்,உள்ளே போய் மீதி இருந்த நூடுல்ஸ் பாக்கெட்டை கொண்டு வந்து கொடுத்தவள்,"பாருங்க சார்..இவர் வாங்கிட்டு வந்த பாக்கெட்..இதைத்தான் சமைச்சேன்.." என்றாள்..
அதைப் பார்த்த டாக்டர்,"எங்க இதை வாங்கினீங்க?..இது காலாவதி ஆகி ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது..கடைக்காரன் விவரமானவன் போல..உங்களை நல்லா ஏமாத்திட்டிருக்கான்..இப்படி விவரம் இல்லாம ஏமாந்திருக்கீங்களே..பார்த்து வாங்க மாட்டிங்களா?..இப்படியா ஏமாறுவீங்க?..இத சாப்பிட்டதாலதான் வயிறு கெட்டுப் போயிருக்கு.." சொன்னவர் ஃபீசை வாங்கிக் கொண்டு கிளம்பினார்..
இருநூறு ரூபாய் ஏமாற்றியதற்கு 800 ரூபாய் தண்டம்..
மீண்டும் வயிறு கலக்க துவண்டு போய் எழுந்தவனை பார்த்து சிரித்தது என் முன்னால் இருந்த மாத்திரைகளும்,காலி நூடுல்ஸ் பாக்கெட்டும்..

 

Author: SudhaSri
Article Title: 30. ஒரு இரு ரூபாய் நோட்டும் ,நூடுல்ஸ் பாக்கெட்டும்.. கே.ஆனந்தன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Haha
Reactions: Mrs Beenaloganathan

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
322
34
43
46
Bangalore
இருநூறு ரூபாய்...
இரு ரூபாய் என்று
இருக்கு பார்த்துக்கோங்கோ.....
 

Mrs Beenaloganathan

Active member
Mar 21, 2025
322
34
43
46
Bangalore
நாம் ஒருவரை ஏமாற்றினால்
நாம் ஒருவரிடம் ஏமாறுவோம்.... 😂😂😂