என் ஆன்மீகத் தேடல்
சுஶ்ரீ
ஆன்மீகம்னா என்னன்னு இன்னும் சரியா புரியலை. ஆனா இந்த தலைப்புல எழுதணும்னு ஆசை, உடனே ‘காளமேகப் புலவர்’மாதிரி எழுத உக்காந்துட்டேன்.
காலைல குளிக்கறது, நெத்தில விபூதி வைக்கறது வீட்டு பூஜை
அலமாரில இருக்கற சின்னதும்,பெரிசுமான ஸ்வாமி படங்கள்,
சின்ன சின்ன மாக்கல்,கல்,செம்பு, வெங்கலம், வெள்ளினு
பல உலோகச் சிலைகளை அவசரமாய் கும்பிடறது.
கும்புடும் போதே காபி நேத்தே ஸ்டிராங்கா இல்லை சூடாவும் இல்லை, இட்லிக்கு தினமும் இதே கார சட்னி
உரைக்க சாம்பார் வச்சா ஆறேழு தள்ளலாம்.
திடீர்னு உரைக்கும் சாமி கும்பிடும் போது இப்படியெல்லாம் மனம் அலை பாய்கிறதே,என்ன பண்றதுனே தெரியலை,
அந்த நேரத்துல மனசை ஒரு நிலைப் படுத்த முயற்சித்தாலும், ஜன்னல் வழியா வர பக்கத்து வீட்டு உப்புமா வாசனைதான்
மனசை இழுக்கறது.
*என் ஆன்மீகத் தேடல் :*
என் அம்மாவுக்கு நான் பக்தி சிரத்தையா இல்லையேனு
கொஞ்சம் வருத்தம். ஸ்கூல்ல படிக்கறப்ப பக்கத்துல இருக்கற
ஹனுமார் கோவில்ல தினம் சாயந்தரம் 7 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் கிளாஸ் மாதிரி நடக்கும்.
30,40 குழந்தைகள் வரும் அதுக்கு. என் அம்மா என்னை முதல் நாள் கூட்டிண்டு போனா. அடுத்த போர்ஷன் கமலாவும் வந்திருந்தா, அம்மா அவளைப் பாத்தவுடனேயே என்னை
வார்ன் பண்ணிட்டா பொம்மனாட்டி குழந்தைகள் பக்கமே போகாதே, நீ சுரேஷ் பக்கத்துல உக்காரணும்னு.
இந்த கிளாஸ் ஒரு மாசம் நடக்கும். அந்த ஒரு மாசத்துல எல்லாருக்கும் சகஸ்ரநாமம் தலைகீழ் பாடம் ஆயிடும்னு
வெங்கட்ராம சாஸ்திரிகளுக்கு நம்பிக்கை.கரெக்டா மறு நாள்ல இருந்து நான் டயத்துக்கு வந்து உக்காந்துடுவேன்,
சுரேஷ் கிட்ட இல்லை, கமலா பக்கத்துல.
சாஸ்திரிகள், ஒரு ராமர் பட்டாபிஷேக படத்தை சுவத்துல சாத்தி
துளசி மாலையெல்லாம் போட்டு நிதானமா, ஸ்பஷ்டமா சகஸ்ரநாமம் சொல்லுவார். அவர் கூட எல்லோரும் பலமா சொல்லணும்.முடிஞ்சவுடனே தீபாராதனை, பிரசாத விநியோகம்
மூல விக்ரகம் அனுமாரை சேவிச்சுட்டு வெளில வரப்ப முகப்புல ஒருத்தர் நின்னுண்டு எல்லாருக்கும் பிரசாதம் கொடுப்பார்.
இது ஒவ்வொரு நாளும் யாராவது ஒத்தர் செலவை
ஏத்துண்டு செய்ற கைங்கரியம்.
அவரவர் சக்திக்கு தகுந்த மாதிரி பிரசாதம் இருக்கும்.
ராஜி மாமி வீட்டு சக்கரைப் பொங்கல் அட்டகாசமா இருக்கும் மிதக்கற முந்திரியோட நெய் ஒழுக தொன்னைல கிடைக்கும். கமலாவோட தொன்னைலயும் பாதி எனக்குத்தான்.
பொதுவா எல்லா பிரசாதமுமே நல்லாதான் இருக்கும், ஆனா ராமு மாமா கொடுக்கற நாட்டுச் சக்கரை தவிர.
இப்படியாக ஒரு மூணு வருஷம் என் ஆன்மீகத் தேடல் தொடர்ந்தது. சகஸ்ரநாமம் என்னவோ வாயில நுழையலை.
நாலாவது வருஷம் கமலா பெரியவளாயிட்டா வரதில்லை,
நானும் போறதை நிறுத்திட்டேன்.
*ஆன்மீகக் கடமைகள்:*
வேலைக்கு போற வரைக்கும், தாட்பூட்னு அதிகாரம் பண்ணிண்டு, குளிச்சவுடனே கொஞ்சம் ஸ்வாமி அலமாரி கிட்ட நின்னு கை குவிச்சிட்டு, ‘’டப்பா கட்டியாச்சா, என்ன இன்னிக்கும்
லெமன் ரைசா தொட்டுக்க என்ன’னு பொட்டை
அதிகாரத்தோட கிளம்புவேன்.
வருஷாந்திர இன்கிரிமென்ட், புரமோஷன் டயத்துல கொஞ்சம் நிதானமா அகர்பத்தி காட்டி நமஸ்காரம், பக்கத்துல உள்ள கோவில்களுக்கெல்லாம் விசிட்.
இந்த வருஷமும் புரமோஷன் இல்லைனு தெரிஞ்சவுடனே, “பிள்ளையாரப்பன் இருக்கார், இந்த தடவை கண்டிப்பா நீங்க சீனியர் மேனேஜர்னு சொன்னயே,பாரு பிச்சாத்து 120 ரூபா இன்கிரிமென்ட் போட்டு கழட்டி விட்டாங்க. விதவிதமா கொழுக்கட்டை
சாப்பிட்டதுதான் மிச்சம்”னு பார்யள் கிட்ட சீறுவேன்.
இப்ப ரிடையர் ஆனவுடனே ( கடைசி வரை அஸிஸ்டன்ட் மேனேஜர்தான்)ஆன்மீகக் கடமைகள் மெதுவாக என் மேல் திணிக்கப் பட்டன. ஏதாவது ஒரு பண்டிகைன்னா என் மனைவி ஹால்ல ஒரு கோவிலே கட்டிடுவா. காத்தாலை அஞ்சு மணில
இருந்து ஒரே அமக்களம்.
நானும் சீக்கிரம் குளிச்சிட்டு ஒத்தாசை பண்ணியாகணும்.
அவளுக்கும் வயசாச்சு, ஸ்தூல சரீரம் வேற, நடக்கறதே தஸ்புஸ்னு,
இதுல மடிசார் கட்டிண்டு உக்காந்தா தூக்கி விட ரெண்டு பேர் வேணும். ஒரு மனைப் பலகால ஸ்வாமி முன்னால உக்காந்தா அதிகாரம் மட்டும் தூள் பறக்கும்.
ஓடி ஓடி எல்லாம் எடுத்து சேவை பண்றது என் ஆன்மீகக் கடமை.
இதுல சொல்லிக் காட்டறது தனி, “ வருஷத்துல ஏழெட்டு தடவை இந்த மாதிரி பூஜை புனஸ்காரம் பண்றோம், ஒவ்வொரு தடவையும், இதை எடுங்கோ அதை எடுங்கோனு நான் சொல்லணும்,
எப்படித்தான் அசிஸ்டன்ட் மேனஜர் வேலை பாத்தேளோ,
இதுல ஜெனரல் மேனஜர் ஆக்கலைனு குறை வேற”
இத்தனைக்கும், தீபாரதனைக்கு சூடத் தட்டு, வெங்கல மணி,
சாம்பிராணி தட்டு, தீப்பெட்டி, பழங்கள் , வெத்தலை பாக்கு தேங்காய் அட்சதை எல்லாம் ஒரு தட்டில் எடுத்து வைக்கணும்.
மொபைல்ல பூஜை மந்திரம் போட்டு பக்கத்துல வைக்கணும்.
புஷ்ப ஆராதனை, மந்திரம் சொல்றப்ப ஜால்ரா தட்டணும்.
இதெல்லாம்
என் ஆன்மீக கடமைகள். எல்லாம் செஞ்சிட்டு ஏதாவது ஒண்ணை மறந்துட்டு திட்டும் வாங்கணும். போறாத்துக்கு பக்கத்துலயே
இருந்து குழந்தைங்க போட்டுக் கொடுக்கும். அப்பா ,வெத்தலைல
மஞ்சப் பிள்ளையார் வைக்க மறந்துட்டார்மானு ( பிராக்ரஸ் ரிபோர்ட்ல கையெழுத்து போட எவ்வளவு டிராமா பண்ணினே)
ஏதோ இப்ப எனக்கு தெரிஞ்ச சனாதனம்……….
அச்சோ அது அரசியல் வார்த்தை நமக்கு வேணாம்பா..
.
Author: SudhaSri
Article Title: 31. என் ஆன்மீகத் தேடல் -சுஸ்ரீ
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 31. என் ஆன்மீகத் தேடல் -சுஸ்ரீ
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.