மாங்குடி மைனரும் மறக்காத நினைவுகளும்
நான்கு நண்பர்களான நான், சங்கர், விச்சு என்ற விஸ்வநாதன், மொட்டை என்று நாங்கள் செல்லமாக கூப்பிடும் ராஜேந்திரன் ஆகியோர் பள்ளி பருவத்திலிருந்து இன்று வரை இணை பிரியா நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் அப்பொழுது +1 பரீட்சை எழுதி இருந்தோம். எல்லோருக்கும் நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்கும் கல்லிடைக்குறிச்சி ஊர் தான் என்றாலும் வேறு வேறு தெருக்கள். கோடை காலத்தில் எங்களுக்கு அரட்டை முழுவதும் விச்சு வீட்டு திண்ணையில் தான். அம்பாசமுத்திரம் ரோட்டுக்கு அருகிலே வீடு இருப்பதால் ரஹ்மான் பாய் பரோட்டா சால்னா கடையின் கொத்து பரோட்டா கரண்டி சத்தம் மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரை கேட்டு கொண்டே இருக்கும்.
கல்லிடைக்குறிச்சி 1980, 1990 ஆண்டுகளில் பொது ஜனங்களின் கலைப்பசிக்குத் தீனி போட இரண்டு திரையரங்குகள் இருந்தன. இன்றோ அது நான்காக உயர்ந்து விட்டதாம். மக்களின் கலைப்பசி அதிகரித்துவிட்டது போல! திரையரங்கு என்றால் சென்னையின் 'தேவி', 'சத்யம்' ரேஞ்சுக்குக் கற்பனை செய்து விடாதீர்கள். அவை கிராமத்துக்கே உரிய அனைத்து லட்சணங்களும் கொண்ட சாதாரணக் கொட்டகைகள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக, பனங்காட்டுக்கு நடுவே அவை அமைந்திருந்தன. பனை மரங்களின் தலையைச் சீவி தூண்களாக்கி, மேலே ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேய்ந்தால் தியேட்டர் தயார். இதில் விந்தையான 'கட்டுமானக் கோளாறு' என்னவென்றால், தியேட்டருக்கு நடுவிலேயே தூண்கள் இருக்கும். பக்கவாட்டில் சுவர்கள் கிடையாது. படம் போர் அடித்தால் தூணில் சாய்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்க்கலாம். இல்லையென்றால் ஒரு குட்டித் தூக்கம் போடலாம். ஒருவேளை தூணுக்குப் பின்னால் இடம் கிடைத்தால், எட்டி எட்டிப் படம் பார்ப்பதே ஒரு தனி விளையாட்டு தான்.
சினிமாஸ்கோப் படம் என்றால் இன்னும் தொல்லை. படம் திரையில் தெரிந்தது போக, கொஞ்சம் வலது மற்றும் இடது பக்கத் தூண்களிலும் தெரியும். நாம் தான் சொந்த முயற்சியில் இரண்டையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். காந்தி தண்டி யாத்திரை போகும் போது, அவர் பாதித் தூணிலிருந்து 'நரசிம்ம அவதாரமாய்' வெளிப்படுவது எங்கள் ஊர் ஸ்பெஷாலிட்டி.
சேர் டிக்கெட் வாங்க வசதி இருந்தும், நாங்கள் பெரும்பாலும் தரை டிக்கெட்டையே விரும்புவோம். சீக்கிரம் போய் இடம் பிடிக்காவிட்டால், நெட்டை கொக்கு போல யாராவது உயரமாக முன்னால் அமர்ந்து மறைப்பார்கள். "அண்ணே... அண்ணே..." என்று முதுகில் கீறி நகரச் சொல்ல வேண்டும். அவர் நகராவிட்டால், எங்களுக்கே உரிய பாரம்பரிய 'டெக்னிக்' ஒன்று இருக்கிறது. மணலைக் குவித்து அதன் மேல் உயரமாக உட்கார்ந்து படம் பார்ப்போம்.
திரையரங்கு நினைவுகள்:
தினமும் மாலை ஒரு காட்சி, பின்னர் 'இரண்டாமாட்டம்' எனப்படும் இரவுக்காட்சி என இரண்டு காட்சிகள் மட்டுமே நடக்கும். மேட்னி மற்றும் காலைக் காட்சிகள் பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே திரையிடப்படும். மற்ற ஊர்களிலெல்லாம் ஓடித் தேய்ந்த பழைய படங்கள் தான் இங்கே ரிலீஸ் ஆகும். ஆனாலும், போஸ்டர்களில் "புத்தம் புதிய காப்பி!" என்று அடித்து விடுவார்கள். குலேபகாவலி, 'என் அண்ணன்', சிவாஜியின் 'பா' வரிசைப் படங்கள் எனப் பழைய படங்கள் ஒரு புறம், நடு நடுவே கமல், ரஜினி, பாக்யராஜ், விஜயகாந்த் படங்களும் திரையிடப்படும்.
இந்தத் இரண்டு தியேட்டர்களுக்கும் தனித்துவமான 'சிக்னேச்சர் சாங்ஸ்' உண்டு. ஒரு தியேட்டரில் சீர்காழி கோவிந்தராஜன் தனது வெண்கலக் குரலில் "விநாயகனே வினை தீர்ப்பவனே..." என்று கணபதியைத் துதிப்பார். மற்றொன்றில் "மீன் கொடி ஏந்தும் தேவர்..." என்று ஒரு பாடல் ஒலிக்கும். "மீன் கொடி", "தேவர்" என்ற வார்த்தைகளை வைத்து அது ஏதோ முக்குலத்தோர் சமூகத்தைப் பற்றிய பாட்டு என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், மீன் கொடிக்கும் அடுத்த வரியில் வரும் 'முஸ்தபா'வுக்கும் என்ன சம்பந்தம் என்று அடிக்கடி யோசிப்பேன். காலப்போக்கில்தான் அது "தீன் கொடி ஏந்தும் தேவர்" என்றும், அது ஒரு இஸ்லாமியப் பாடல் என்றும் எனக்குத் தெரிய வந்தது.
தியேட்டரில் இந்தப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டால், இன்னும் அரை மணி நேரத்தில் படம் ஆரம்பமாகி விடும் என்று அர்த்தம். ஊர் மக்களுக்கு அது ஒரு அலாரம் மணி போல! எங்கள் ஊர் தியேட்டரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த அறிமுகமே போதுமானது.
போஸ்டர் புராணம்:
இப்படித்தான் ஒரு நாள், வாய்க்காலில் துணிக்குச் சோப்புப் போட்டுக் கொண்டிருந்த என்னிடம், “டேய்! ரஜினி படம் போட்டிருக்கான், போலாமா?” என்றான் மொட்டை. மொட்டை தான் எங்களுக்கெல்லாம் 'சினிமா நியூஸ் ரீடர்'. அவனுக்குக் காலையில் எழுந்தவுடன் முதல் வேலை தெருமுனைக்குப் போய் போஸ்டர் படிப்பது தான்; பல்லுத் துலக்குவதெல்லாம் அதற்குப் பிறகு தான். தெருக்கோடி வீட்டுத் திண்ணையில் 'தினமலர்' பத்திரிகையோடு அமர்ந்திருக்கும் சிதம்பரம் மாமாவிடம், "போஸ்டர்க்காரன் வந்துட்டானா?" என்று ஒரு 'கன்ஃபர்மேஷன்' வேறு செய்து கொள்வான்.
சில சமயம் மொட்டை, போஸ்டர்க்காரனுக்கும் முன்னதாகவே போய் விடுவார். போஸ்டர் ஒட்டும் ஆளின் சைக்கிள் வரும் வரை, மாமாவிடம் பேப்பர் வாங்கிப் வாசித்துக்கொண்டிருப்பான். அந்தச் சைக்கிளின் ஓவர் சைஸ் கேரியரில் உளுந்தமாவுப் பசை வாளி, ஹேண்டில் பாரின் இரு பக்கமும் தொங்கும் பைகளில் நீலம், பச்சை என வண்ண மயமான போஸ்டர்கள். இவையே அந்தப் போஸ்டர்க்காரனின் கவச குண்டலங்கள்.
பெரிய சைஸ் போஸ்டர்கள் மெயின் ரோட்டுக்கு மட்டும் தான். மொட்டை அவர் ஒட்டும் வரை பொறுமை இருக்காது. போஸ்டர்க்காரன் பின்னாலேயே போய், “என்ன படம்ணே?” என்று அவர் முதுகைக் கீறிப் படுத்தி எடுத்து விடுவான். அவர் பதில் சொன்னால் போதும், “யாரு படம்? கதை என்ன?” என்று அடுத்தடுத்த கேள்விகளால் துளைத்தெடுப்பான். ஒருமுறை அவர் கடுப்பாகி, “ஒட்ற வரைக்கும் பொறுக்க மாட்டியளோ?” என்று முறைத்ததிலிருந்து, சட்டை பிடித்து இழுக்கும் பழக்கத்தை அவன் விட்டுவிட்டதாகக் கேள்வி.
அன்று சாயங்காலம் 'மாங்குடி மைனர்' தியேட்டருக்குப் போவதென முடிவானது. தியேட்டரில் நல்ல கூட்டம். வழக்கம் போல விச்சு, பெண்கள் பகுதிக்கு அருகிலுள்ள தட்டியோரம் இடம் பிடித்தான். நானும் மொட்டையும் ஒரு தூணோரம் அமர்ந்தோம் “சங்கர் எங்கடா? அவனைக் காணோம்?” என்று கேட்டேன்.
தியேட்டர் கலாட்டா
மொட்டை நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். விசில் சத்தம் காதை அடைக்க, எங்கள் கவனம் திரையில் பதிந்தது. சங்கர் எப்பொழுது வந்தானோ தெரிய வில்லை. படம் சுமார் ரகம் தான்; ஆனாலும் கொஞ்சம் கிண்டல், கொஞ்சம் வம்பு, வீட்டிலிருந்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வந்த 'சீடை' என இடைவேளை வரை நேரம் போனதே தெரியவில்லை. இடைவேளையின் போதும் சங்கர் தனது 'மாயாவி' வேலையைக் காட்டி விட்டு, லேட்டாகத்தான் வந்து சேர்ந்தான்.
படம் மீண்டும் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே, “ஐயோ... அம்மா!” என்ற அலறல் சத்தம் கேட்டது. "முளைச்சு மூணு இலை விடலை... அதுக்குள்ள..." என்று 'ஏ'யில் தொடங்கி 'ஏ'யில் முடியும் வசவு மழை பொழிந்தது. கூடவே சரமாரியான குட்டும் அடியும் விழும் சத்தம்!
ஈனஸ்வரத்தில், “தெரியாம பட்டுடுச்சுண்ணே... விட்டுடுங்கண்ணே!” என்று வந்த அந்தக் குரல் மிகவும் பழகியதாகத் தோன்றியது.
“விடுங்கப்பா, சின்னப் பையன் தெரியாமப் பண்ணிட்டான்” என்ற சமாதானக் குரல்களில், அடி வாங்கியவன் மீதான அக்கறையை விட, சினிமா தடைபடுகிறதே என்ற கவலை தான் அதிகமாகத் தெரிந்தது. அடித்தவனின் ஆக்ரோஷமும், அடி வாங்கியவனின் முனகலும் மெல்ல மெல்ல அடங்கின.
பட்டப்பெயர் புராணம்
“யாருடா அடி வாங்கினது?” என்று மெதுவாகக் கேட்டேன் விச்சுவிடம்.
“சங்கரடா!” என்றான் அவன், திரையை விட்டுத் தன் கண்ணை எடுக்காமல்.
“நம்ம சங்கரா? என்னடா இவ்வளவு சாதாரணமாச் சொல்ற?”
“பின்னே... எரியுற பீடியை அதோ இருக்கானே அந்தத் தடியன், அவன் கையில அணைச்சுப் பாரு; மடியில் வைத்து அப்புறம் கொஞ்சுவான்!” - விச்சுவின் குரலில் அப்பட்டமான கிண்டல் தெரிந்தது.
“வெளியில போய்ப் பேசுங்கலே!” என்று மண்டையில் விழுந்த தட்டு, எங்கள் உரையாடலை அத்தோடு முடித்து வைத்தது.
மறுநாள் வாய்க்கால் படித்துறையில் சங்கரின் 'லீலை' தான் தலைப்புச் செய்தி. அந்தப் பீடி அணைப்பு வைபவத்திற்குப் பிறகு, சாதாரண சங்கராக இருந்தவன் 'மாங்குடி மைனர் சங்கர்' ஆனான். காலப்போக்கில் பெயரின் நீளம் கருதி, பின்னால் இருந்ததெல்லாம் வெட்டப்பட்டு வெறும் 'மாங்குடி' மட்டும் மிஞ்சியது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவனைச் சங்கர் என்று எவரும் கூப்பிட்டதாக எனக்குத் தெரியவில்லை.
“ஏண்டா உன்னை எல்லாரும் மாங்குடின்னு கூப்பிடுறாங்க?” என்று அவன் அம்மா கூடக் கேட்டாராம். அதற்கு அவன் என்ன சொல்லிச் சமாளித்தானோ தெரியவில்லை!
மாந்தோப்புப் படையெடுப்பும், காக்கா முட்டை விவகாரமும்:
எங்கள் ஊரில் மாந்தோப்புக்கு அன்று மதியம், ஊரே 'கொளுத்தும் வெயிலில்' குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருக்க, எங்கள் 'ஸ்பெஷல் டீம்' கிளிமூக்கு மாங்காய்கள் நிறைந்த மாந்தோப்புக்குள் நுழைந்தது.
வழக்கம் போல மொட்டை தான் 'வாட்ச்மேன்' வேலைக்கு. "ஏலேய், யாராவது வந்தா சிக்னல் குடுப்பேன், ஓடிப் போயிடணும்" என்று கண்டிஷன் போட்டு விட்டுப் புதர் மறைவில் பதுங்கினான். நான் மரத்தில் ஏற, மாங்குடி சங்கர் கீழே நின்று மாங்காய்களைக் கேட்ச் பிடித்துக் கொண்டிருந்தான். "டேய் மாங்குடி, பீடியைத் தூணில் அணைச்ச மாதிரி மாங்காயைத் தரையில அடிச்சுடாதடா!" என்று நான் கிண்டல் செய்ய, அவன் நமுட்டுச் சிரிப்போடு மாங்காய்களைச் சேகரித்தான்.
மாமரத்திலிருந்து இறங்கும் போது பக்கத்துக்கு வேப்பமரத்தில் காக்கா கூடு தென்பட்டது. "ஏலேய், அதுல முட்டை இருக்குடா! எடுத்தா நம்ம வீட்ல இருக்கிற கோழி முட்டை மாதிரி வெள்ளை கலர்ல இருக்குமா?" என்று ஆர்வத்துடன் கேட்டான் மாங்குடி. அவனது ஆர்வத்தைப் பார்த்து, "எடுத்துத்தான் பார்ப்போமே" என்று நான் கூட்டிற்குள் கைவிட்டேன்.
சிறு கரும்புள்ளியோடு இருந்த பழுப்பு நிற இரண்டு காக்கா முட்டைகளை வாய்களில் உடை படாமல் எடுத்து மாங்குடியிடம் கொடுத்தேன். அவன் அதை ஏதோ 'கோகினூர் வைரத்தை'ப் போலப் பொத்திப் பிடித்துக் கொண்டு, "இதைக் கொண்டு போய் நம்மூர் தியேட்டர்ல எவனாவது முன்னாடி மறைச்சு உட்கார்ந்தா, அவன் மண்டையில உடைக்கலாம்" என்று ஐடியா கொடுத்தான்.
ஆனால், விதி வசத்தால் ஒரு காக்கா எங்களைக் கவனித்து விட்டது. "கா... கா..." என்று அது கத்த, அடுத்த சில நிமிடங்களில் அந்தத் தோப்பே காக்காக்களின் போர்க்களமாக மாறியது. நூற்றுக்கணக்கான காக்காக்கள் எங்களைச் சூழ்ந்து 'டைவ்' அடித்துத் தலையில் தாக்க ஆரம்பித்தன.
"ஓடுங்கடா!" என்று கத்திக் கொண்டே நாங்கள் தப்பித்தோம். மாங்குடி ஓடும் வேகத்தில், கையில் இருந்த மாங்காய்களைக் கோட்டை விட்டாலும், அந்த இரண்டு காக்கா முட்டைகளை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். ஊர் எல்லைக்கு வந்ததும் மூச்சிரைக்க நின்றோம்.
"காக்கா முட்டையைக் காட்டுடா" என்றேன். மாங்குடி கையைத் திறந்தான். அங்கே முட்டை இல்லை. பயத்தில் அவன் கையைத் தட்டியதில் முட்டை உடைந்து அவன் சட்டையெல்லாம் மஞ்சள் நிறத்தில் 'ஆம்லெட்' போட்டது போலத் தெரிந்தது. மாங்குடி தன் சட்டையைத் துடைத்துக்கொண்டே, "தியேட்டர்ல அடி வாங்கினதுக்கும், காக்கா கொத்துறதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையே" என்று புலம்பினான்.
தாமிரபரணி ஆற்றில் மாங்குடியின் 'மிதக்கும்' மானம்!
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்கள் அம்பாசமுத்திரம் காசிபநாதசுவாமி படித்துறையில் குளித்தோம். அங்கே டைவ் அடிக்கலாம். நன்றாக நீந்தலாம். அங்கே இருந்து குளித்து கொண்டே ரயிலையையும் கல்லிடைக்குறிச்சி ஆற்றுப்பாலத்தையும் பார்க்கலாம். தாமிரபரணி ஆறு மதிய கோடை வெயிலில் பளபளவென ஜொலித்துக் கொண்டிருந்தது. நண்பர்கள் பட்டாளம் பட்டாளம் ஆற்றுப்படித்துறையில் ஆஜரானோம்.
மாங்குடி தன் விலை உயர்ந்த பிராண்டட் ஷார்ட்ஸைக் கழற்றி, கரையில் இருக்கும் ஒரு மொழு மொழு கல்லின் மேல் வைத்து, அதன் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைப்பான். "மவனே, கரையேறினதும் டக்குனு இதப் போட்டுக்கிட்டு விஜய் மாதிரி ஸ்டைலா கிளம்பனும்”
அன்று ஆற்றில் நீரோட்டம் கொஞ்சம் 'ஓவர் டைம்' பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் ஆழத்தில் நீந்தி அடித்துக்கொண்டிருந்த போது, ஒரு முரட்டு அலை வந்து படித்துறையை தாண்டி சென்றது. விளையாட்டு மும்முரத்தில், எவன் இதைக் கவனிப்பான்?
சிறிது நேரம் கழித்து, "சரி வாங்கடா, வயிறு பசிக்குது" என்று மாங்குடி கரையேற வந்தான். தன் 'பாதுகாப்பு பெட்டகமான' கல்லைத் தூக்கிப் பார்த்தவன், அடுத்த நிமிடமே "அய்யோ... என் ஷார்ட்ஸ் எங்கேடா?" என்று அலறினான். அவன் கல்லை அமுக்கி வைத்திருந்த இடத்தில் வெறும் பாசி தான் அவனுக்குப் 'பல்லைக் காட்டியது'. அந்த அலை வேகத்தில் அவன் ஷார்ட்ஸ் 'டாட்டா' காட்டி விட்டுத் தண்ணீரோடு தேனிலவு போயிருந்தது.
"ஏலேய் மாங்குடி... அதோ போகுது பாரு உன் மானம்... கப்பல் மாதிரி மிதக்குது!" என்று மொட்டை கை காட்ட, தூரத்தில் அந்த நீல நிற ஷார்ட்ஸ், ஒரு குட்டி கட்டுமரம் போலத் தண்ணீரில் ஜாலியாக போய்க்கொண்டிருந்தது.
"டேய் பிடிங்கடா... பிடிங்கடா..." என்று கத்திக்கொண்டே மாங்குடி தண்ணீருக்குள்ளேயே ஓடினான்.
"ஏலேய் மாங்குடி, கவலைப்படாத... இப்படியே நீந்திப் போனா ஸ்ரீவைகுண்டம் அணையில போய் எடுத்துக்கலாம்!" என்று நான் சீண்ட, மாங்குடிக்கு அழுகையே வந்து விட்டது.
"டேய், எவனாவது துண்டை வீசுங்கடா”... என்று கெஞ்சினான்.
மொட்டை கருணை காட்டி தன் நனைந்த துண்டை அவனிடம் வீசினான். தண்ணீருக்குள்ளேயே கஷ்டப்பட்டு அந்தத் துண்டைச் சுற்றிக்கொண்டு, மாங்குடி மெல்லக் கரையேறினான்.
ஈரத்துண்டு காலில் சுற்றிக்கொள்ள, அவன் ஒரு பக்கமாகச் சாய்ந்து 'நண்டு' மாதிரி நடந்து வந்த அழகைப் பார்த்து, படித்துறையில் இருந்தவர்கள் சிரிப்பில் தாமிரபரணியே ஒரு நிமிடம் குலுங்கியது!
பள்ளிக்கூடத்து சேட்டைகள்:
கல்லிடை பள்ளிக்கூடம் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மொட்டை, யாருடைய பென்சில் கூராக இருக்கிறது என்று வேவு பார்க்கத் தொடங்கி விடுவான்.
ஒருநாள், கணக்கு வாத்தியார் கரும்பலகையில் ஏதோ ‘சூத்திரத்தைப்’ போட்டு மண்டையைப் பிச்சிக்கொண்டிருக்க, மாங்குடி மெதுவாகத் தன் பையிலிருந்து ஒரு பெரிய காட்டு நெல்லிக்காயை எடுத்து மெல்லத் தொடங்கினான்.
அப்போது தான் அறிவியல் வாத்தியார் வகுப்பிற்குள் நுழைந்து, "யாரெல்லாம் வீட்டு பாடம் எழுதலையோ அவங்க மட்டும் நில்லுங்க" என்றார். மொட்டையும், விச்சுவும், நானும் கடமை தவறாமல் எழுந்தோம். ஆனால் மாங்குடி மட்டும், "சார்.. சார்..." என்று பதற்றத்தில் தன் வாயில் இருந்த காட்டு நெல்லிக்காயை அப்படியே முழுங்கி விட்டான்.
அது அவன் தொண்டையில் சிக்கிக்கொள்ள, அவனால் பேசவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் முகம் அப்படியே 'தக்காளிப் பழம்' போலச் சிவந்து விட்டது. "என்னடா மாங்குடி, பதில் சொல்லாம ஏன் முகம் சிவக்குது?" என்று வாத்தியார் கேட்க, மொட்டை இடையில் புகுந்து, "சார், அவன் நேத்து தியேட்டர்ல பீடி அணைச்ச தடியனை நினைச்சு கோபப்படுறான் சார்" என்று கொளுத்திப் போட்டான்.
வகுப்பே சிரிக்க, வாத்தியார் மாங்குடியின் முதுகில் ஒரு பலமான குத்து விட்டார். நெல்லிக்காய் ‘டபக்’ என்று வெளியே வந்து வாத்தியார் மேஜை மீதே விழுந்தது.
"மாங்குடி. நீ மாங்குடி மைனர் இல்லடா, ‘நெல்லிக்காய் மைனர்’" என்று வாத்தியார் திட்ட, அவன் அந்த நிலையிலும் தன் நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டுத் தஞ்சம் புகுந்தான். மதியம் சாப்பாட்டு நேரத்தில், நாங்கள் அனைவரும் காக்கா முட்டை எடுத்த கதையையும், ஆற்றில் கால் சட்டை போன கதையையும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, மாங்குடி மட்டும் தன் தொண்டையைத் தடவிக்கொண்டே, "நெல்லிக்காயை விட பீடி அணைச்ச தடியன் கை தான் சாஃப்ட்டா இருந்துச்சுடா" என்று பீல் பண்ணினான்.
Author: SudhaSri
Article Title: 33. மாங்குடி மைனரும் மறக்காத நினைவுகளும் - த. ராம் மோகன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 33. மாங்குடி மைனரும் மறக்காத நினைவுகளும் - த. ராம் மோகன்
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.