• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

நிழலாக துணையாக... 6

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
64
230
53
Chennai
நிழலாக துணையாக... 6

டர்த்தியான வலி நிவாரணி மருந்துகளின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தேவசேனாதிபதி, மூடி இருந்த கதவையும் மீறி மாடிவரை கேட்ட குரல்களில் சிரமத்துடன் இமைகளைப் பிரித்தான்.

வார்த்தைகள் தெளிவாகப் புரியா விட்டாலும், நாலைந்து பேர் ஒரே நேரத்தில் கயமுயவெனக் கத்துவது கேட்டது.

‘இங்கு வந்து யார் யாரிடம் சண்டை போடுகிறார்கள்?’

‘எங்க, நம்ம வீட்ல யாரோட சத்தத்தையும் காணும், உத்ரா எங்க, ஐயோ உத்ராவை கீழ வெச்சுக்கிட்டு இதென்ன, குழந்தை பயந்துக்க போறா’

உத்ராவின் நினைவில் விருட்டென அவன் வழக்கம்போல் வேகமாக எழ முயன்றதில் கை வலிக்க ‘ஆ..’ என்று மெலிதாகக் கத்தி விட்டான். கண்ணாடியில் பார்க்க, கழுத்து, கன்னம் எல்லாம் இன்னமும் வீங்கி, வலது கண் இடுங்கி அதைத்துக் கிடந்தது.

பைசன் மேலிருந்து கீழாக ஒரே பக்கமாக அடித்ததில், உடலின் வலது பக்கம் அவனுடையதே இல்லை என்பது போல் வலித்தது.

‘சரியான காட்டெருமை’ எனத் திட்டியவனுக்கு சிரித்தாலும் வலித்தது. எழுந்து ஓய்வறைக்குச் சென்று வந்து, உள் படிகள் வழியே மெதுவே கீழிறங்கி, முன் அறையை நோக்கி நிதானமாக நடந்து சென்றான்.

டைனிங் ஹாலில் இருந்தே ஹாலில் இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. அருகே நெருங்க நெருங்க சத்தம் வலுத்தது.

‘இந்தப் பாட்டி எங்கே இங்கே, இவர்கள் ஏன் இப்படிக் கூட்டமாக வந்திருக்கின்றனர்? திடீரென ஒரே நாளில் என் மீது என்ன கருணை?’

உள் அங்கணத்தில் நேஹாவும் தேவகியும் செய்வதறியாது நிற்க, தந்தையைக் கண்ட உத்ரா, எங்கிருந்தோ ஒரே பாய்ச்சலாக ஓடி வந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

“என்னடா பம்கின்?”

“ஒரே ஷோரா (சத்தம்) இருக்கு டாடீ, பயமா இருக்கு”

உத்ரா சொன்ன விதத்தில் தேவாவிற்குள் அப்படி ஒரு சினம் மூண்டது. இடது கையால் மகளை அள்ளிக்கொண்டவன், இரண்டே எட்டில் ஹாலை அடைந்தான்.

கோவையில் இருந்து அந்த அத்தைப்பாட்டி தன் மகன் மற்றும் பேத்தியுடன்(!) வந்திருக்க, இன்னொருபுறம் வள்ளியம்மை ஆச்சி, மணிராஜ் அபிராமி, குமரன், செல்வராஜ் எனக் கூட்டமாக வந்திருந்தனர்.

நல்லவேளையாக அவனைக் கண்டதும் சத்தத்தை நிறுத்தினர். மாப்பிள்ளை அல்லவா, மணிராஜும் அபிராமியும் எழுந்து நின்றனர்

பொதுவில் தலையசைத்தவன், பார்வையால் அலர்மேல்வள்ளியைத் தேட, ஒரு ஓரத்தில் அழுகையின் அச்சாரங்களுடன் கலவரமாக நின்றிருந்தாள். அருகே வரச்சொல்லித் தலையசைத்தான்.

சோஃபாக்கள், ஊஞ்சல், திவான் என எல்லாவற்றிலும் நீக்கமற ஆள்கள் நிறைந்திருக்க, உள் அங்கணத்திலிருந்து சற்றே அகலமான ஒற்றை சோஃபாவைத் தள்ளிக்கொண்டு வந்த நிர்மலைக் கண்டு
‘இந் நேரத்துல நீ எங்கடா இங்க?’ என்பதைப் போல் தேவா புருவம் உயர்த்தினான்.

நாற்காலியில் அமர்ந்து உத்ராவை அலேக்காகத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டவன் “பம்கின், டாடி கொஞ்சம் பேசிட்டு வரேன். நீ போய் நேஹா தீதியோட போய் பேர்ட்ஸ் கூட விளையாடு”

“ஜகடாவா(சண்டை) டாடீ?”

“அதெல்லாம் இல்லடா, நீ போ” என்றதில் உத்ரா உள்ளே ஓடினாள்.

அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்து வள்ளியம்மை ஆச்சியின் பார்வை தன்னை விட்டு அகலவில்லை என்பதை தேவா உணர்ந்தே இருந்தான்.

காஃபி எஸ்டேட்டிற்குள் தனக்கு அடிபட்ட தகவல் இந்நேரம் ஏற்காடு முழுவதும் பரவி இருக்கும் என்பதால், அலர் வீட்டினரின் வருகை அவனுக்கு வியப்பளிக்கவில்லை. வள்ளியம்மை ஆச்சி வந்ததுதான் ஆச்சரியம்!

கோவை அ. பாட்டி தன் பஞ்சாயத்தைத் தொடங்கினார்.

“எம் பேத்தியக் கட்டிக்க சொல்லி உங்கிட்ட எத்தனை முறை கேட்டிருப்பேன். உன் மாமன் பொண்ணைத்தான் கட்டிப்பேன்னு மொதவே சொல்லி இருந்தா, என் பேத்தியை இப்படி காக்க வெச்சிருப்பேனா? உன்னையே நெனச்சுக்கிட்டிருக்கற பொண்ணை ஆசை காட்டி மோசம் பண்ணிட்டியே”

“...”

“எம் பேத்தி உனக்கு ஒரு மக இருக்கறதைக் கூட ஏத்துக்கிட்டு உன்னைக் கட்டிக்கத் தயாரா இருந்தாளே, அவளைப் போய் ஏமாத்திட்டியே”

“...”

“இத்தினி வருஷமா எங்க இருக்க, என்ன செய்யுறன்னு கூடக் கவலைப்படாதவங்க, நீ வசதியா திரும்பி வந்ததும், சின்னப் பொண்ணை வெச்சு…”

“பாட்டி, போதும். அநாவசியப் பேச்சு வேணாம். நான் எப்ப உங்க பேத்தியைக் கல்யாணம் செஞ்சுக்கறதா சொன்னேன்? ஏய், வள்ளி, நீ ஏன்டீ அழற, இங்க வா”

“...”

தனக்கு வலப்புறம் நின்ற அலர்மேல்வள்ளியைத் தன்னிடம் இழுக்கக் கையைத் தூக்கியவன் வலியில் முகம் சுளிக்க, அவள் தானே அருகில் வந்தாள்.

அந்த ஒற்றை சோஃபாவில் தேவா “உக்காரு “ என நகர்ந்து இடம் கொடுக்கவும் அலர் முறைத்துச் சிரித்தாள்.

இதில் மேலும் கடுத்த கோ. பாட்டி “என்ன, நீ கல்யாணம் கட்டிக்கிட்ட பவுசை வேடிக்கை காட்டறியோ, அதான் அவ வந்த நேரம் பல்லிளிச்சுப் போய், நீ இப்படி அடிபட்டுக் கிடக்கியே?”

செல்வராஜ், குமரன், இருவரும் எழுந்து “பாட்டி, பார்த்துப் பேசுங்க” என்று சீறினர்.

அவர்களை சற்றும் பொருட்படுத்தாதவர், ஏதோ கொடுத்த கடனை வசூலிக்க வந்தவர் போல் “ரெண்டு வருஷமா வேற இடம் பாக்காம உன்னையே நம்பி இருக்கற எம் பேத்திக்கு என்ன பதில்?” என்றார்.

தேவசேனாதிபதி “பாட்டி நிறைய சீரியல் பார்ப்பீங்களோ, செம டயலாக் டெவிவரி போங்க”

அசராத அந்தப் பாட்டி “பெத்தவங்க, பிறந்தவங்கன்னு யாருமில்லாம நிக்கிறியே, போனா போவுதுன்னு பொண்ணைக் குடுக்க நினைச்சா, மரியாதை இல்லாம என்ன வேணா பேசுவியா, இதுல எங்கேயோ போய் பெத்துக்கிட்ட பொண்ணு வேற”

“போதும், இதுக்கு மேல நான் பேசினா நல்லா இருக்காது. என் மகளை ஆசிரமத்துல விட்டா, உங்க பேத்தியை எனக்குக் கட்டித் தர்றதா நீங்க எழுதின லெட்டர் எங்கிட்ட பத்திரமாதான் இருக்கு, காட்டவா?”

“...”

நிமிர்ந்து அந்தப் பேத்தியை நேருக்கு நேர் பார்த்தவன் “ஏம்மா, நீ என்னை எங்கயாவது, எப்பயாவது நேர்ல பார்த்திருக்கீங்களா?”

“இல்லங்க”

“அட்லீஸ்ட் ஃபோன்ல பேசி இருக்கீங்களா?”

“...”

“நான் யாரு, என் பேர் என்னன்னாவது உங்களுக்குத் தெரியுமா?”

“...”

“படிச்சவங்கதானே நீங்க, பெரியவங்க பேச்சைக் கேட்கறது தப்பில்லை. அது நமக்கும் அடுத்தவங்களுக்கும் தொந்திரவா இல்லாம இருக்க வேணாமா? உங்க வயசுக்கு அவங்க சொன்னாங்கன்னு கூடவே கிளம்பி வந்திருக்கீங்க, இது என்ன மாதிரியான ட்ராமா?”

“...”

அவள் தந்தையிடம் திரும்பியவன் “ஸார், நான் உங்களை எல்லாம் சின்ன வயசுல பாத்தது. மத்தவங்க ஆசைக்கு நான் வளைய முடியாது. எனக்கு அம்மா, அப்பா இல்லைன்னா, யார் என்ன சொன்னாலும் செய்வேன்னோ, செய்யணும்னோ அவசியம் கிடையாது. எந்த நம்பிக்கைல நீங்க வந்தீங்கன்னு தெரியலை. பாட்டி முதல் முறை என்கிட்ட பேசினபோதே, எனக்கு துளியும் விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன்”

“...”

“உங்க மகளை கூட்டிட்டுப் போங்க ஸார். இப்படி எல்லார் முன்னாலயும் அவங்களை நிறுத்தறது நல்லாவா இருக்கு? அவங்களுக்கு நல்ல பையனா பாத்து கல்யாணம் செஞ்சு கொடுங்க. இப்ப கிளம்புங்க” என்று கும்பிடு போட, அவர்கள் மூவரும் வேறு வழியின்றி வெளியேறினர்.

யாரும் இடத்தை விட்டு அசையாது இருக்க, தேவசேனாதிபதி “வள்ளி, போய் நல்ல காஃபியா போட்டு எல்லாருக்கும் கொண்டு வா” எனவும் அனைவருமே நிமிர்ந்து பார்க்க, வள்ளியம்மை ஆச்சி, தன் புன்னகையை ஒளிக்கப் பிரயத்தனப்பட்டார்.

சும்மாவா, தேவசேனாதிபதி அவரது முதல் பேரன் அல்லவா? என்னதான் மகன் வழி மக்கள்தான் வம்ச வாரிசு என சமூகம் சொன்னாலும், சொந்த மகள் வலித்துப் பெற்ற முதல் குழந்தை உசத்திதானே?

‘வள்ளி’ என்று அவரது கணவர் கூட அவரை அழைத்ததில்லை. அப்போது பெரும்பாலும் மனைவியைப் பேர் சொல்லி அழைக்கும் வழக்கம் இல்லை.

பேத்திக்கு அவரது பெயரை அப்படியே வைத்தால், அழைக்க முடியாது என்பதாலேயே வள்ளியை அலர்மேல் இருத்தினர்.

இவன் என்னடாவென்றால், வேண்டுமென்றே, அவர் முன்பே ‘வள்ளி’ என்கிறான்.

அபிராமி “தம்பி, கல்யாணம் முடிஞ்சும் முறை எதுவும் செய்யல. ரெண்டு பக்க குல தெய்வத்துக்கு செய்ய வேண்டியதை செய்யல. மூணாவது மாசம் நடக்குது. தாலி பிரிச்சுக் கோர்க்கலை. அது உங்க கல்யாணத்தை உறுதி செய்யற மாதிரி. முன்ன ஏதானும் குத்தங்குறை இருந்தாலும் புதுத் தாலி போட்டா சரியாகிடும்னு நம்பிக்கை. இதெல்லாம் ஒரு பரிகாரம் தம்பி. அவசரத்துல நடந்தாலும் கண்ணு படத்தான செய்யும். இப்படி அடிபட்டதே திருஷ்டிதான். கொஞ்சம் யோசிங்க தம்பி” என நீளமாகப் பேசி நிறுத்தினார்.

தேவசேனாதிபதி அமைதியாக இருக்க, சிவராஜும் ராதாவும் உள்ளே வந்தனர். வரவேற்றான். அலர்மேல்வள்ளியும் தேவகியும் எல்லோருக்கும் காஃபியும் சுண்டலும் கொண்டு தந்தனர்.

தேவா “கண்டிப்பா செஞ்சுடலாம். வள்ளிக்கு எது செய்யறதா இருந்தாலும் இந்த வீட்டுலதான் நடக்கும், நடக்கணும். நாங்க எங்க குலசாமி மாளிகைப்பாறை புது கருப்பசாமி கோவிலுக்கு போய் பூஜை போட்டு வந்துட்டோம். கோட்டை மாரியம்மனையும் பார்த்தாச்சு. உங்க சாமி திருச்செந்தூருக்கும் போகணும். நேரம் அமையலை”

“....”

மணிராஜ் “ரெண்டு நாள்ள வளைகாப்பு. நானே வந்து கூட்டிட்டுப் போறேன். மறுக்காம வரணும்”

“வள்ளி வருவா”

அபிராமி “கல்யாணம் முடிஞ்சு முதல் முறை அவ தனியா வந்தா நல்லாவா தம்பி இருக்கும், அதுவும் அத்தனை சொந்தமும் கூடி இருப்பாங்க”

“...”

சிவராஜ் “ஏன், உன் மகளைப் பத்தி யாராவது கேட்டுருவாங்கன்னு பயமா?”

“என் பொண்ணு இல்லாம ஒரு சொந்தம் எனக்குத் தேவையே இல்ல”

“ அது உங்க மகள்னு சொல்றீங்க, அவ அம்மா எங்க, இருக்காங்களா, செத்தாங்களான்னு தெரிஞ்சுக்கக் கூடப் பொண்ணைக் கட்டிக் குடுத்த எங்களுக்கு உரிமை இல்லையா?”

தேவசேனாதிபதி கடகடவென வறட்சியாகச் சிரித்தான்.

“என்னமோ, நான் தேடிவந்து பொண்ணு கேட்டு நீங்க கட்டிக்குடுத்த மாதிரி பேசறீங்க?”

“...”

“சரி, இதே வீட்டுக்கு முப்பத்திநாலு வருஷத்துக்கு முன்ன சாந்திமணின்னு ஒரு பொண்ணைக் கட்டிக் குடுத்தீங்களே, நினைவிருக்கா, அவங்களோட மகன்தான் நான், அதுவாச்சும் நினைவிருக்கா?”

சிவராஜ் “தேவா…”

“பரவாயில்லையே, உங்களுக்கு என் பேர் கூடத் தெரிஞ்சிருக்கே”

“...”

தேவசேனாதிபதியின் மொபைலில் ஏதோ அழைப்பு வர, அலர்மேல்வள்ளி போய் எடுத்து வந்தாள்.

“ஹான், பெட்டர் ஸார், பரவாயில்ல. சரியாக ஒரு நாலஞ்சு நாளாவது ஆகும். என்ன, க்ளீனிக் போக முடியாது. வேக்ஸினேஷன்னா என் அஸிஸ்டன்ட் போட்ருவான். மத்த அப்பாயின்ட்மென்ட்லாம் ரீஷெட்யூல் பண்ண சொல்லிட்டேன்”. தேங்க் யூ ஸார். ஷ்யூர் ஸார்”

அவனது பேச்சும் தொனியும், ஆங்கிலமும் அத்தனை மேன்மையாக, பக்கா ஃப்ரொஃபஷனலாக இருந்தது.

இத்தனை நேரம் தங்களோடு பேசிய தேவாவும் இந்த தேவாவும் முற்றிலும் வேறாக இருந்தனர்.

சிவராஜ் எழுந்துவிட்டார். தான் பார்த்துப் பிறந்த தங்கை மகன். தன்னிடமே அத்தனை அலட்சியமும் பிடிவாதமும் காட்டுவதை அவரால் ஏற்கவே இயலவில்லை.

“உட்காருங்க, இப்ப என்ன, உத்ரா யாருன்னு உங்களுக்குத் தெரியணும், அவ்வளவுதானே?”

அலர்மேல்வள்ளி “வேணாம் மாமா, உங்களையே உரிச்சு வெச்சா மாதிய இருக்கற உத்ரா உங்க பொண்ணு இல்லாம வேற யாரு? நீங்க அவளோட டாடீ, நான் அவ மம்மி. இது இப்படியே இருக்கட்டும் மாமா. அநாவசியமா எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சு இப்ப என்ன ஆகப்போவுது. ஆளுக்கு ஒரு அபிப்ராயத்தை தூக்கிட்டு வருவாங்க. வீண் குழப்பம்தான் மிஞ்சும். இந்தப் பேச்சு இதோட போதும்” என்றவளின் குரலில் அத்தனை உறுதி.

எல்லோரும் புறப்பட வள்ளியம்மை ஆச்சியும் எழுந்தார்.

தேவசேனாதிபதி “திரும்பவும் என்னைத் தனியா விட்டு நீ எங்க ஆச்சி போற?”

எழுந்த வள்ளியம்மை கதறியபடி தளர்ந்து அமர்ந்து விட்டார்.

“ஐயா, என்ற ராசா, தப்பு செஞ்சிட்டேன்னு புரிஞ்சு ரொம்ப நாளாச்சுய்யா. உங்கிட்ட மன்னிப்பு கேக்கற அருகதை கூட எங்க யாருக்கும் இல்லைய்யா”

“...”

“எம் பொண்ணு உசிரு, அவ வாழ்க்கை, அவளை நடத்தினது, அவ செஞ்சது, உங்கப்பன் செஞ்சதுன்னு யோசிச்ச நாங்க, உன்னை யோசிக்காம விட்டது தப்புதான்யா, தப்புதான்” என முகத்தில் அறைந்து கொண்டு அழுதார்.

தேவசேனாதிபதி அவனது அன்புக்குரிய ஆச்சி அழுவதைத் துளி சலனமின்றி வேடிக்கை பார்த்தான். அவன் பார்வை இங்கிருக்க, நினைவு பதிமூன்று வருடங்களுக்கு முன் போய் நின்றது.
 
Jun 19, 2024
32
44
18
Trivandrum
😍😍😍

வள்ளியம்மை & தேவா..❤️❤️❤️

தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை

கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

 
  • Love
Reactions: VedhaVishal

VedhaVishal

Administrator
Staff member
Jun 17, 2024
64
230
53
Chennai
😍😍😍

வள்ளியம்மை & தேவா..❤️❤️❤️

தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை

கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

😍😍🫂