அத்தியாயம்- 1
"வசு! திங்க்ஸ் எல்லாத்தையும் வண்டியில ஏத்தியாச்சு. எதுவும் விட்டுப் போயிருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிட்டா நாமளும் கிளம்பிடலாம்". சமையலறை மேடையைத் தடவிக் கொண்டு இருந்த வசுதாவின் காதுகளில் கணவனின் அழைப்பு சென்று சேர்ந்தாலும், அதற்கு எதிர்வினை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அவள் மனம் சந்தோஷம் பாதி துக்கம் மீதி என்று தத்தளித்துக் கொண்டு இருந்தது.
மனைவியிடம் இருந்து பதில் இல்லாமல் போகவே, நின்ற இடத்தில் இருந்தே கண்களால் வீடு முழுவதும் அவளைத் தேடிய விஷ்ணு, "ஹேய்! வசு என்ன தான் பண்ணிட்டு இருக்க. நமக்கு டிராவல் டைம் ஒன் அவர்க்கு மேல ஆகிடும். நல்ல நேரம் முடியறதுக்குள்ள அங்கே ரீச் ஆகணும். சீக்கிரம் கிளம்பு" என்றான் சத்தமாக. அவனது வார்த்தைகள் காலியாக இருந்த வீட்டின் சுவர்களில் பட்டு எதிரொலித்ததில் மனைவியின் கலவையான உணர்வுகள் இப்போது கணவனையும் தொற்றிக் கொண்டது.
அவன் போட்ட சத்தத்தில் வசுதாவும் சமையலறையை விட்டு ஹாலுக்குள் வந்தாள். கண் மூடி சிலையாக நின்ற கணவனையும் காலியாக இருந்த வீட்டையும் பார்த்தவள் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள். ஒரு மணி நேரம் முன்பு கால் வைக்க இடமில்லாமல், எங்கெங்கு காணினும் அட்டைப் பெட்டிகளால் நிறைந்திருந்த வீடு இப்போது வெறுமையாகக் காட்சி அளித்தது.
இதோ அவர்கள் நிற்கும் இடம், அவர்களது முதல் சம்பாத்தியம். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவர்களின் கஷ்ட நஷ்டங்களை, இன்ப துன்பங்களைத் தாங்கிய சுவர்கள். எத்தனையோ மனக்கஷ்டங்களிலும் நமக்கே நமக்கு என்று ஒரு கூரை இருக்கிறதே என்று சந்தோஷப் பட வைத்த வீடு. அடுக்கு மாடி குடியிருப்பாக இருந்தாலும் சமையலறை, பூஜை அலமாரி, தரையில் மற்றும் சுவற்றில் பதித்த டைல்ஸ், பெயிண்ட் கலர் என்று பல பல விஷயங்களிலும் அவர்களின் விருப்பப்படி அமைக்கப்பட்டது.
இந்த வீட்டை வாங்கிய கதையை இப்போது நினைத்தாலும் அவளுக்கு சம்சாரம் அது மின்சாரம் படம் தான் ஞாபகம் வரும். விஷ்ணுவிற்கு தாய் தந்தை என்றால் அலாதிப் பிரியம். அதோடு தனது பெற்றோர் சராசரி மாமனார் மாமியாராக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று ஓர் ஆழ்ந்த நம்பிக்கையும் கூட. திருமணத்திற்கு முன் அவன் வசுதாவிடம் பேசிய பேச்சுக்கள் பெரும்பாலும் அவர்களை மையமாகக் கொண்டே இருந்தது.
"வசு! புதுசா ஒரு வீட்டுக்கு வரோமே, எப்படி நடந்துப்பாங்களோன்னு பயப்படாதே. என் பேரன்ட்ஸ் உனக்கு மாமியார் மாமனாரா நடந்துக்க மாட்டாங்க. உன்னை அவங்க பொண்ணு மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க. உங்க வீட்டுல இருக்கிற மாதிரியே இங்கேயும் இருக்கலாம். பி கூல்" என்று அவன் வருங்கால மனைவிக்கு கொடுத்த நம்பிக்கைகள் எல்லாம் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே ஆட்டம் காணத் தொடங்கின.
பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வசுதா தன்னை நோக்கி வந்த சொல்லம்புகளை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறுகாது வழியே வெளியேற்றி விடுவாள். அதற்கும் மாமியார் மற்றும் நாத்தனாரிடமிருந்து "கல்லுளி மங்கி" என்ற பட்டம் கிடைத்தது தனிக்கதை. கூட்டுக் குடும்பத்தையே எப்போதும் விரும்பிய வசுதா, இவை எதுவுமே விஷ்ணுவின் கவனத்திற்கு போகாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டதில், அவன் 'சொர்க்கமே என்றாலும் அது என் வீட்டைப் போலாகுமா?' என்று பாடும் நிலையில் இருந்தான்.
தப்பித் தவறி அவனது அன்னை சிறு சிறு புகாரோடு நின்றாலும், சேதாரம் இல்லாமல் தப்பிக்கும் மார்க்கம் அறிந்தவன். அவனுக்கென்ன பைத்தியமா, மாமியார் மருமகள் சண்டையில் மூக்கை நுழைக்க? "மா! நீங்களாச்சு அவளாச்சு. எதுவானாலும் டைரக்டா பேசிக்கோங்க. நான் என்ன நாட்டாமையா? வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் பையன் அலுத்துப் போய் வந்திருக்கானே, ஒரு காபி கொடுப்போம்னு இல்லாமல் வழக்கு வைக்க வந்துட்டீங்க. போய் ஸ்ட்ராங்கா ஒரு காபியும், கூடவே கொறிக்கிறதுக்கு ஏதாவது ஸ்நாக்ஸும் கொண்டு வாங்க பார்ப்போம். உங்க மருமக வந்து சமையல் செய்யறதுக்குள்ள சிறுகுடல் பெருங்குடலைத் தின்னுடும். சீக்கிரம் போங்க" என்று பேச்சைத் திசை திருப்புவது அவனுக்குக் கை வந்த கலை.
"அச்சோ! இதோ வரேன் டா கண்ணா! நான் ஒரு மடச்சி. ஆஃபீஸ்ல இருந்து வந்த பிள்ளைய பிடிச்சு வச்சு பேசிட்டு இருக்கேன்"
அடுத்த பத்தாவது நிமிடத்தில் காபியுடன் வருபவர், "உனக்கு பிடிக்குமேன்னு கட்லெட் செஞ்சிருக்கேன். சூடா சாப்பிடு"
"என்ன இருந்தாலும் உங்க கை மணமே தனிமா! யாராலையும் அசைச்சுக்க முடியாது" ஃப்ரெஷ்ஷாக செய்து எடுத்து வருபவரை ஐஸ் வைப்பவனிடம்
"அதுக்காக நானே எப்போ பார்த்தாலும் சமைக்க முடியுமா? எனக்கென்ன வயசு திரும்புதா? இதையெல்லாம் உன் பொண்டாட்டி பார்த்து செய்யணும். எங்க... அவ வேலைக்கு போயிட்டு வந்து சமைக்கறதுக்கே அலுத்துக்கிறா. இதுல அவ என்னைக்குப் பலகாரம் செய்ய கத்துக்கிறது, எனக்கு எப்போ ரெஸ்ட் கிடைக்கிறது. நானும் தான் வேலைக்கு போனேன். வீட்டுலயும் எல்லாம் செய்யல? எல்லாம் என் தலையெழுத்து" புலம்பல் என்ற பெயரில் புகார் பட்டியல்கொடுக்கும் தாயிடம் பதில் பேசுவது வீண் என்பது அவனுக்குத் தெரியும்.
ஆனால், தாய் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வான். பெரிய குடும்பத்தில் செல்லமாக வளர்ந்த வசுதாவிற்கு படிப்பு வந்த அளவு வீட்டு வேலைகள் வரவில்லை. இது உன் வேலை என்று கொடுத்து விட்டால் அதை நல்லபடியாக முடித்து விடுவாளே தவிரத் தானாக முன்வந்து எதையும் "செய்யட்டுமா?" என்று கேட்பது கிடையாது. அவளது மாமியாருக்கு அது ஒரு பெரிய குறையாகப் பட்டது.
வேலைக்கு செல்லும் பெண் தான் வேண்டும் என்று கண்டிஷன் போட்டுக் கல்யாணம் செய்து கொண்டவனால் அவளை வற்புறுத்தவும் முடியவில்லை. தாயின் கைப்பக்குவத்துக்கு அவன் நாக்கு அடிமை என்றாலும் கூட, சில நேரங்களில் தாய் அளவுக்கு மீறிய வேலைகளைச் செய்வதாகத் தோன்றும். அக்கறையுடன் சொல்பவனுக்கு ஆரம்பத்தில் "இதெல்லாம் ஒரு வேலையாடா?" என்று இருந்த பதில் இப்போது, "உன் பொண்டாட்டி வேலை பார்க்க மாட்டான்னு தெளிவா சொல்லு. அதை விட்டு அம்மா மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம்" என்று மாற ஆரம்பித்தது.
அன்பாய் மகனைக் கவனிப்பவர், கல்லூரியில் கரடியாய் கத்திக் கத்தி ஓய்ந்து போய் வரும் மருமகளுக்கு எதுவும் செய்ய மாட்டார். அப்படியும் சொல்லி விட முடியாது. ஆரம்பத்தில், அவளையும் மகளைப் போலத் தாங்கியவர் தான்.
காலப் போக்கில் நான் ஏன் அவளுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் திணிக்கப்பட்டதில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருந்தார். சின்னச் சின்ன புகார்களாக ஆரம்பித்த விஷயம் தொட்டதற்கெல்லாம் குறை சொல்லும் நிலைமையில் வந்து நின்றது.
முதலில் வேலையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்த பிரச்சினை அடுத்து செலவைப் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்தது. திருமணத்திற்கு முன் மகனது செலவைப் பற்றிக் கவலைப் படாத பெற்றோர். மருமகள் வந்து விட்ட பிறகு கேட்கவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்க, மகனே முன் வந்து செலவுகளைப் பகிர்ந்து கொண்ட போது எரிச்சல் அடைந்தனர். பணமுடை என்று வரும் போது உதவியிருக்கிறான் என்றாலும், பத்து வருடங்களுக்கு மேலாகச் சம்பாதிக்கும் மகன் ஒரு நாளும் இல்லாத் திருநாளாக மாதச் செலவிற்கென்று பணம் கொடுத்தால், அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?
மருமகளைப் பாராட்ட மனமில்லாமல் "இதைக் கூட சொல்ல மாட்டாளா, என்ன? அதுக்கு தானே கல்யாணம் பண்ணி இருக்கு. இரண்டு பேரும் வேலைக்கு போறாங்களே. இன்னும் நாங்களே செலவழிக்கணுமா? பெத்தவங்களுக்குச் செலவழிக்கிறது பிள்ளைங்க கடமை தானே. சொல்லப் போனால் சம்பளம் மொத்தமும் எங்க கிட்ட தான் கொடுக்கணும்" என்ற மாமியாரின் வார்த்தைகள் காதில் விழுந்ததில் கசப்பாகச் சிரித்தாள் வசுதா.
எந்த பட்ஜெட் தான் துண்டு விழாமல் இருந்திருக்கிறது? இவர்கள் வீட்டிலும் விழுந்தது. வசுதா பிரசவத்துக்குச் சென்றிருந்த போது விழுந்த அந்தத் துண்டு, அவள் மகனோடு திரும்பி வந்த போது வேஷ்டி, புடவை என்று வளர்ந்த வேகத்தில் விஷ்ணு அரண்டு போனான். அதற்காக அவன் ஒன்றும் ரகுவரனைப் போல கணக்கு பார்க்கவில்லை. ஆனாலும் செலவு மிரட்டியது. இத்தனைக்கும் குழந்தைக்கான செலவுகள், இவர்களின் சோப்பு பவுடர் வகையறாக்கள், மருத்துவச் செலவுகள் அனைத்தும் இவர்களே பார்க்கும் போது பொதுச் செலவு எப்படிப் பல மடங்கு ஏறியது என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆனாலும் யாரையும் தவறாக எண்ணவில்லை, 'வீட்டுல எவ்வளவோ செலவு இருக்கும் போல, நமக்கென்ன தெரியுது' என்று தான் நினைத்தான்.
அப்படிப் பட்ட அவனையும் வீறு கொண்டு எழச்செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதன் விளைவு தான் இந்த தனிக்குடித்தனம். குழந்தைக்கு ஆறு மாதம் முடிவடையும் நிலையில் அந்த மாதக் கடைசியில் 'தடுப்பூசிகள் போட வேண்டும், பணத்திற்கு என்ன செய்வது' என்று யோசனையில் இருந்தவனை தாயின் குரல் கலைத்தது.
"இந்த மாசம் செலவு கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு. ஒரு இரண்டாயிரம் தேவைப் படும். நாளைக்கு எடுத்துக் கொடுத்திரு" பணம் இருக்கிறதா என்ற கேள்வியே இல்லை, இவ்வளவு பணம் தேவை, அதுவும் நாளைக்கே தேவை, அவ்வளவு தான். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பது கூடவா தெரியாமல் போகும். ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று,
அடுத்த நாள் காலையிலேயே ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்தான்.
"அப்பா! எங்க இரண்டு பேர் வருமானமும் சேர்ந்தே **** தான். அதிலயும் பாதிய வீட்டுக்கு கொடுத்திடறோம். அதுல குழந்தைக்கான சோப்பு கூட வரதில்லை. அப்புறமும் எப்படி ஜாஸ்தி செலவு ஆகுது, எனக்குப் புரியவே இல்லை. அதுவும் வசு ஊருக்குப் போன நாளா இந்தப் பிரச்சினை. என்ன செலவு பா. உங்க யாருக்காவது உடம்பு சரியில்லையா? என் கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா?" அந்த நிலையிலும் அவனால் பெற்றோரைத் தவறாக நினைக்க முடியவில்லை.
"ஏன் நாங்க படுத்திட்டா தான் உனக்கு நிம்மதியா?"
"அம்மா நான் என்ன கேட்கிறேன், நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க? புரியாமல் பேசாதீங்க. உங்க உடம்புக்கு என்னெவோன்னு பதறிப் போய் ஒரு கேள்வி கேட்டா, நீங்க குதர்க்கமா ஒரு அர்த்தம் கண்டு பிடிக்கிறீங்க"
"ஏன் புரியாம, எங்க பிள்ளை எங்களுக்கு இல்லாமல் போயாச்சுன்னு நல்லாவே புரியுது. நீயா பேசலை, மத்தவங்க சொல்லி கொடுத்து பேசற" மாமியாரின் கண்கள் மருமகளைப் பஸ்மமாக்கி விடுவது போல எரித்தது.
"மத்தவங்களா? அவ என் பொண்டாட்டி மா, ஏதோ தெருவில போறவ மாதிரி சொல்றீங்க?" என்று கத்தியவன்,
"ஆமாம் மா அப்படியே வச்சுக்கோங்க. அவ சொல்லித் தான் பணம் கொடுக்க ஆரம்பிச்சேன். அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க. என்ன செலவுன்னு கேட்டா, பதில் சொல்ல வேண்டியது தானே. அதை விட்டு ஏதோ சொத்துக் கணக்கு கேட்டது மாதிரி குதிக்கிறீங்க"
"ஓ அது வேற நினைப்பு இருக்கோ?" என்று ஆரம்பித்த மனைவியை தடுத்த தந்தை ஒரு டைரியை தந்து "இந்தா பா. ஒண்ணு விடாமல் இதுல எழுதி இருக்கேன், என்ன பார்க்கணுமோ பாத்துக்கோ"
"அப்பா! நான் சந்தேகப் பட்டா கேட்கிறேன். வீட்டுக்கு என்ன செலவாகுதுன்னு தெரிஞ்சிக்கக் கூடாதா?"
பதில் ஏதும் இல்லாமல் போனதால், செலவு எழுதும் டைரியைப் புரட்டிப் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொரு மாதமும் முதல் செலவாக ஒரு ஐந்தாயிரம் ரூபாய் எழுதப் பட்டிருந்தது. எதற்காக அந்தச் செலவு என்பது எங்கேயும் இல்லை. அது தவிர அவனது தங்கைக்கான செலவுகள், அதாவது அவளது உள்ளாடை முதற்கொண்டு ஆன செலவுகள், அவளது குழந்தைக்கான செலவுகள் என்று பெரிய லிஸ்ட்டைப் பார்த்தவன் நொந்து போனான். நிறைய யோசித்தவனுக்குப் பெற்றோர் காட்டும் பாரபட்சம் புரிந்தது.
அதிலும் வசுதாவின் சீமந்தச் செலவுகள், குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு சென்றது, குழந்தையை அழைத்து வந்தது என்று அவன் மட்டுமே செய்திருந்த பெரிய செலவுகள் எல்லாம் பொதுக் கணக்கில் எழுதப் பட்டிருந்ததைப் பார்த்து டைரியை மூடி விட்டான். வந்த மொய்ப் பணத்தை கூட அவன் வாங்கிக் கொள்ளவில்லை. 'தனது பெற்றோரா இப்படி?' என்று மனம் நைந்து போனது.
இத்தனையிலும் அவனது உடன் பிறப்புக்குப் பெரும் பங்கு இருந்தது என்று அறிந்து கொண்டவன் எதுவும் பேசவில்லை. தூர தேசத்தில் இருந்த வரை தொலைபேசியில் தனது மகத்தான சேவையைத் தொடங்கிய அவள், சொந்த ஊரில் தான் பிழைக்க வேண்டும் என்று திரும்பி வந்த பிறகு, தனது சேவையை வாரந்தோறும் நேரில் வந்திருந்து சிறப்பாகச் செய்ததில், தாம் பெற்ற மகனை மருமகளின் கணவனாகப் பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள் அவர்களின் பெற்றோர்.
"தனியா செலவு செஞ்சு பார்த்தால் தானே தெரியும். பெரியவங்க செலவு செஞ்சா கேள்வி கேட்கத் தான் தோணும்" மாமியார் வீட்டுக்கு அருகே தனியாகக் குடியிருக்கும் மகள் தூபம் போட்டதில், பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே இருந்த உறவெனும் கண்ணாடியில் விரிசல் விழ ஆரம்பித்தது.
அந்த விரிசல் பெரிதாக ஆரம்பித்த போது, தள்ளி இருந்தாலாவது மொத்தமாக உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டான் விஷ்ணு. காலப் போக்கில், அந்தப் பெரியவர்களும் தங்களது செயல்களால் வருந்திய நிலையும் வந்தது. அதற்கும் இந்த வீடே சாட்சியாக நின்றது.
நடுக் கூடத்தில் நின்று பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவர்களை மீட்க, லாரி டிரைவரிடம் இருந்து அழைப்பு வந்தது. "டைம் ஆகுது வசு. ஏதாவது விட்டுப் போயிருந்தால் அப்புறம் பார்த்துக்கலாம், சீக்கிரம் கிளம்பு" என்றான் விஷ்ணு.
மனமே இல்லாமல் கிளம்பியவளை, "வசு! இது சென்ட்டிமென்ட் பாக்கிற நேரம் இல்லை. இதெல்லாம், ஆஃப்டர் ஆல் செங்கல்லும் சிமெண்ட்டும். இதுல மனசை வைக்காதே. நாம் போகப் போறதும் நம்ம ஆசையா கட்டின வீடு தான். இன்ட்டீரியர் எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சியே, இப்போ என்ன ஆச்சு?
'கரெக்ட் தான். பெற்ற தாய் முதல் நெருங்கிய உறவுகள் பலரையும் இழந்தாயிற்று' என்று நினைத்த போதே மீண்டும் இந்த வீட்டோடு தனது தாயின் தொடர்பை நினைக்கத் தொடங்கி இருந்தாள் வசுதா.
"இது சரிவராது. இப்போ கிளம்பப்போறியா இல்லையா" என்ற அவனது அதட்டலுக்கு பலன் இருந்தது. வேகமாக வீட்டைப் பூட்டி விட்டு அவனுடன் நடந்தாள்.
கிளம்பத் தயாராக இருந்த லாரி நிறைய மாத கர்ப்பிணி போலக் காட்சி அளித்தது. இத்தனைக்கும் ஏசி, வாஷிங் மெஷின் கட்டில் போன்ற பெரிய பொருட்கள் அலுங்காமல் குலுங்காமல் இரண்டு நாட்களுக்கு முன்பே புது வீட்டுக்கு அனுப்பப் பட்டு விட்டன. இந்த லாரியில் இருப்பவை யாவும் சமையலறை மற்றும் பரண்களில் இருந்தவை மட்டுமே.
ஆரம்பத்தில் பூத் பங்களா போல வெறுமையாகத் தோற்றம் அளித்த வீட்டில் நாளாக நாளாக உட்காரவே இடம் தேடும் படியான நெருக்கடி வந்து விட்டது. கணவனும் மனைவியும் போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை வாங்கிக் குவித்ததால் வந்த விளைவு.
இனி உபயோகப் படாது என்ற பொருட்களைக் கழித்தாயிற்று. அதன் பின்னும் தேவையில்லை, என்று தோன்றிய பொருட்களை, அறிந்தவர் தெரிந்தவர் என்று யார் யாருக்கோ தூக்கிக் கொடுத்தாயிற்று. ஆனாலும் ஒரு பெரிய லாரி நிறைய ஏற்றப்பட்ட பொருட்கள், பார்ப்போரை 'இவ்வளவு பொருட்களும் இந்த வீட்டில் தான் இருந்ததா!' என்று வாயைப் பிளக்க வைத்தன. துணிமணிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் நாலு முறை காரில் மூட்டை கட்டிக் கொண்டு போனது தனிக் கதை.
இப்போதுமே, அவர்களது கார் நிறைந்து வழிந்தது. நல்லவேளையாக டிரைவர் சீட் காலியாக இருந்ததில் மிகவும் மகிழ்ந்து போனான் விஷ்ணு. வசுதா அமரும் இடத்திலும் கூட நகைப் பெட்டி அவளது மடிக்காகக் காத்திருந்தது. இந்த காரில் செல்லும் பொருட்கள் யாவும், பரணில் வருடக்கணக்கில் குடியிருந்தவை. போகும் இடத்திலும் அவை சமர்த்தாகப் பரணில் தான் அமர்ந்து கொள்ளப் போகின்றன. அப்படி என்ன தான் இருக்கிறது அவற்றில்?
பொக்கிஷம் போன்ற துணிமணிகள்(!) தாயின் ஞாபகார்த்தமாக அவர் உபயோகப் படுத்திய டம்ளரில் இருந்து அவரது பர்ஸ் (அஃப்கோர்ஸ் அவர் சேர்த்து வைத்த பணத்தோடு தான். அதெல்லாம் டிமானிட்டைசேஷனில் செல்லாக் காசானது வேறு கதை!),பெட்ஷீட், மஃப்ளரில் இருந்து கிழிந்து போன புடவை வரை.
அவள் முதன் முதலில் கட்டிய புடவையில் இருந்து சில பல ஞாபகங்களைத் தாங்கிய உடைகள், அவளது இரண்டு மகன்களின் சிறு வயது உடைகள் இவற்றைத் தனக்குள் அடக்கிய பிரம்மாண்டமான ஒரு சூட்கேஸ். புத்தம் புதிய புடவைகளைக் கூட அடுத்தவரிடம் தாராளமாகக் கொடுத்து விடும் வசுதா, இந்த பொக்கிஷங்களை யாரையும் தொடவிட்டதில்லை.
சில வருடங்களுக்கு முன் வரை இந்தப் புடவைகளும் அவளது அலமாரியில் தான் இருந்தன. காணாமல் போயிருந்த அவளது கல்லூரி நண்பிகள் எல்லாரும் வாட்ஸ்அப் தயவில் கண்டுபிடிக்கப்பட்ட போது, லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர வேண்டும் என்று ஆளாளுக்கு கோரிக்கை விடுத்தனர். முதல் முதலில் புடவை கட்டிய என்று, அதை உடுத்திக் கொண்டு செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டாள். கல்லூரி காலத்தில் நாற்பது கிலோ எடையுடன் காற்றடித்தால் பறந்து விடுவது போல இருந்த போது ஐந்து ப்ளீட் வைக்க முடிந்த புடவை இப்போது அறுபத்தைந்து கிலோ உடம்பில் லுங்கி போலக் காட்சி அளித்ததைப் பார்த்து ஜெர்க்கானாள். அன்றைய தினத்தின் முடிவில், அந்தப் புடவைகளுக்கு பரண் மேலிருந்த பொக்கிஷ பிரிவில் நிரந்தர இடம் கிடைத்தது.
அடுத்து, அவள் சிறு வயதில் அணிந்திருந்த நதியா கம்மல் வளையல் என்று ஆரம்பித்து, எஸ்எஸ்எல்சி எழுதப் பயன்படுத்திய பேனா, முதன் முதலில் வாங்கிய பரிசுப்பொருள், வருடந்தோறும் நண்பர்களிடம் வாங்கிய ஆட்டோகிராப் நோட்டுகள், கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் என்று ஒரு மூட்டை. விதம் விதமான டெடி பியர்களால் நிறைந்த ஒரு பெட்டி, இன்னும் பல பொக்கிஷங்கள். எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தால், 'ஒரு நாள் போதுமா?" என்று பாட வேண்டியது இருக்கும். இந்த பொக்கிஷங்களை எல்லாம் பொருட்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை போலப் பார்க்கலாமே தவிர, யாராக இருந்தாலும் அடுத்தவருக்கு அதைத் தொடக் கூட அனுமதி இல்லை.
"இடியாடிக் சென்ட்டிமென்ட்ஸ்" என்று கணவனும் "மா! தயவு செஞ்சு இதையெல்லாம் வெளியே காட்டிராதே. எங்க மானமே போயிடும்" என்று மகன்களும் சொன்னாலும் அவள் அதையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. தோன்றும் போதெல்லாம் எடுத்துப் பார்ப்பாள். யாரும் கேட்காவிட்டாலும் விளக்கம் கொடுப்பாள்.
தனது பொக்கிஷங்களைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டே காரில் ஏறி நகைப் பெட்டியை மடியில் வைத்துக் கொண்டவளது உதடுகள் சிரிப்பில் விரிந்தன. பக்கத்தில் இருந்தவன் நெற்றிக் கண்ணைத் திறக்கத் தயாராக இருந்ததை அவள் ஒதுக்கித் தள்ளிவிட்டாள்.
நேற்று இரவு நடந்தது அது. கணவனையும் பிள்ளைகளையும் அழைத்தவள், வீட்டைப் பூட்டி கொண்டு அமர்ந்தாள். நகைகள், முக்கியமான பத்திரங்கள், அடையாள அட்டைகள் அடங்கிய பெட்டிகள் அவளைச் சுற்றி அணிவகுத்து இருந்தன.
"இங்கே பாருங்க. உங்க மூணு பேருக்கும் ஒன்னு சொல்றேன். இதெல்லாம் என்னென்ன இருக்குன்னு பார்த்து வச்சுக்கோங்க. இது வரைக்கும் நானே பாத்துட்டேன். இனிமேலும் அப்படியே இருக்க முடியாது. உங்களுக்கும் எல்லாம் தெரியணும்"
"இப்போ இதுக்கெல்லாம் என்ன அவசியம் மா?" என்று பிள்ளைகளும், "இது வரைக்கும் பாத்த மாதிரி இனிமேலும் நீயே பாத்திடு மா. எனக்கு எதுவும் தெரியாது" என்று கணவனும் கிளம்ப,
"அப்படியே எப்போதும் தப்பிச்சிக்கோங்க. நாளைக்கே எனக்கு ஏதாவது ஆனா என்ன செய்வீங்க? என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கிட்டா குறைஞ்சா போயிடுவீங்க?" அவள் உணர்ச்சி வசப்பட்டு கத்தியதில் மற்ற மூவரும் சத்தம் இல்லாமல் "பார்க்கலாம். எல்லாத்தையும் காட்டு" என்று சைகை செய்தனர்.
"இது ஆரம். எனக்கு முதல் முதலில் வாங்கிய நகை. எக்ஸ்சாட்டா அறுபது கிராம். இதை வாங்கும் போது வெறும் பதினெட்டு ஆயிரம் தான் தெரியுமா? இப்போ தங்கம் விக்கிற விலைக்கு... ம்ம். இது எங்க தாத்தா நான் பிறந்த போது போட்ட செயின். இது.…" நகைகளை விளக்குகிறேன் என்று இவள் கொடுத்த பில்ட் அப்பை கண்ணிமைக்காமல் பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க, இவள் புரியாமல் திருதிருத்தாள்.
"கண்ணுல டார்ச் அடிக்காதது மட்டும் தான் பாக்கி மா. மத்தபடி சந்திரமுகி எஃபெக்ட் பக்காவா இருந்தது. இது ஆரம்..., இது நெத்திச்சுட்டி.., இது காசுமாலை... வாவ் ஜோதிகாவையே மிஞ்சிட்டீங்கன்னா பாத்துக்கோங்களேன்" பிள்ளைகள் விம் போட்டு விளக்கிய விதத்தில் இவள் "போங்கடா!" என்ற ஒற்றைச் சொல்லுடன் எழுந்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டாள்.
'இவ போங்கடான்னு பிள்ளைங்கள மட்டும் சொன்னாளா? என்னையும் சேர்த்து தான் சொன்னாளா?' அதி முக்கியமான சந்தேகத்துடன் அங்கேயே அமர்ந்து விட்டான் விஷ்ணு.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் -1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.