என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -1
ஜூன் மாத மழையை அனுபவித்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரம். மதிய உணவுக்குப் பிறகு ஐந்து மணி வரை ஃபெர்பக்ட் குடும்பத் தலைவியாக டிவியில் தனது முழுக் கவனத்தையும் வைத்திருந்த சுந்தரி, “இந்த ஊர்ல ஜூன் ஆரம்பிச்சா போதும், மழை தாரை தாரையா ஊத்திட்டே இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி வீட்டுக்கு வரும் போதே நாலு வயசு வாண்டுல இருந்து எல்லாருக்கும் சூடா எதையாவது நொறுக்கினா நல்லா இருக்கும் போல இருக்கு. அதுவும் தினம் ஒரு வித்தியாசமா வேணும். இதுக்கு மட்டும் இவங்க நாக்கெல்லாம் நாங்களும் மதுரைக் காரங்க தான்டான்னு கூவிடும். தினம் எண்ணைலயே வெந்து போறாளே ஒரு மனுஷின்னு யாருக்கும் துளிக்கூட அக்கறையே வராது” வாய் தான் சலித்துக் கொண்டதே தவிர மனது சமையலறை சாமான்களின் இருப்பை யோசித்து என்னென்ன ஐட்டங்களை செய்யலாம் என்று கணக்கு போட்டது.
“பஜ்ஜி, போண்டா, பகோடா, விதம் விதமான வடைன்னு நானும் எத்தனை வெரைட்டியைத் தான் கண்டு பிடிக்கறது. இப்பவே இந்த அப்பார்ட்மெண்ட் எல்லாம் என் புகழ் பரவி இருக்கு, இன்னும் கொஞ்ச நாளிலே நான் செஃப் சுந்தரின்னு மும்பை பூராவும் ஃபேமஸ் ஆகிடுவேன். நீங்கெல்லாம் என் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காமல் காத்திருக்கப்போறீங்க” என்று தனது அருமை பெருமைகளை அளந்து விட்டுக் கொண்டே எழுந்தார்.
போகிற போக்கில் மடியில் படுத்துக் கொண்டு மொபைலை மேய்ந்து கொண்டிருந்த தனது அருமை மகளை உருட்டி விட்டுப் போனார். “மா! இதெல்லாம் நியாயமே இல்லை. நான் எவ்வளவு முக்கியமான விஷயத்தை பாத்துட்டு இருந்தேன் தெரியுமா? இப்போ என் மூடே போச்சு. இனிமேல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து தான் மீதி வேலையைப் பார்க்கணும். லேப்டாப்பைத் ஆன் பண்ணாம வேலையை முடிச்சிடலாம்னு பார்த்தேன். விட மாட்டீங்களே. அந்த பெட்ல உங்க மடில படுக்கிற மாதிரி குஷன் எஃபெக்ட் வேற மிஸ் ஆகும். தூக்கம் வேற அவ்வளவு சீக்கிரத்தில வராதே” என்றபடி படுக்கை அறையை நோக்கித் திரும்பினாள்.
“ஆமா! நீ பல் முளைக்காத குட்டிப்பாப்பா…. அம்மா மடில சுகம்மா படுத்திருக்க… நான் கால் கடுக்க வேற வேலை வெட்டி எதையும் பார்க்காமல் உட்கார்ந்து இருக்கேன்” என்று பல்லைக் கடித்த சுந்தரியின் கண்கள் தானாக கடிகாரத்தின் மேல் விழுந்தது.
“மலர்! விளக்கு வைக்கிற நேரம் தூங்காதன்னு எத்தனை தடவை சொல்றது. நீ என்னடான்னா அப்போ தான் தூங்க ஆரம்பிக்கிற. உன்னோட தினந்தினம் இதே தொல்லையா போயிடுச்சு. பொழுது சாயற வரைக்கும் மொபைலுக்குள்ள தலைய விட்டு உட்கார்ந்துட்டு எனக்கு தூக்கம் வரலே, பகல்ல தூங்கறது கெட்ட பழக்கம், தூங்கினா ஆஃபீஸ் போகும் போது கஷ்டம் ஆகிடும்ன்னு லென்ந்தியா டயலாக் எல்லாம் பேச வேண்டியது. அஞ்சு மணிக்கு அப்புறம் சாமியாடறது. போற இடத்தில எனக்கு ரொம்ப நல்ல பேரு வாங்கித் தரப் போற.”
எப்போதும் இதே வார்த்தைகளைச் சற்று பொறுமையுடன் பேசும் சுந்தரியின் குரலில் இன்று காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. அவரும் தான் என்ன செய்வார், கல்லூரி படிப்பு முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக மலர்விழியின் தினசரி வழக்கமே இதுவாகத்தான் இருக்கிறது. காலை பத்து மணிக்கு மேல் தான் அவளுக்கு விடியும், பின்னர் பல கலியுக கர்ணன்களைப் போல மொபைல் சகிதமாகவே இருப்பாள். தேவைப்பட்டால் லேப்டாப்பில் தலையை நுழைத்துக் கொள்வாள்.
வேளை தவறாமல் ஹோட்டலில் மெனு கொடுப்பது போல் தாயிடம் ஆர்டர்களை அள்ளி வீசுவாள், உபயம் அவள் பார்வையில் படும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ். தந்தையின் முழு ஆதரவு இருப்பதுடன் தாயும் பிறந்த வீட்டில் இருக்கும் வரை தானே இந்த சுகம் எல்லாம் என்று பல நேரங்களில் மகளைச் சீராட்டவே செய்வார், சில நேரங்களில் மட்டுமே அவரது பொறுமை பொங்கி எழும்.
இன்று அப்படிப்பட்ட ஒரு நாளாகிப்போனது. காரணம், மத்திம வயதில் பாடாய் படுத்தும் சுந்தரியின் உடல்நிலை. பூமாதேவியாகவே இருந்தாலும் ஹார்மோன்களின் ஆட்டத்தில் பொறுமை ஆட்டம் கண்டுவிடும், சுந்தரி சாதாரண மனுஷி தானே.
“ஏழு கழுதை வயசாச்சு, எனக்குத்தான் கிச்சன்ல வந்து எந்த ஹெல்ப்பும் பண்றதில்ல. அட்லீஸ்ட், உன் வரைக்கும் ஆர்கனைஸ்டா இருக்கலாம்ல. இதுல வேலைக்குப் போகணும்னு பிடிவாதம் வேற. ஊர்ல இருக்கிற படிப்பையெல்லாம் படிச்சு வச்சுட்டு எந்த வேலை பார்க்கணும்னு தெரியாமல் முழிச்சிட்டு இருக்க. இப்போ என்ன வேலைக்கு இன்டெர்வியூ வந்திருக்கு, கணக்குப்பிள்ளையா, செக்யூரிட்டியா” என்ற தாயை முடிந்த வரை முறைத்து வைத்தாள் அருமைப் புத்திரி.
“உனக்கெல்லாம் என் அருமை எங்கே தெரியப்போகுது? இதோ, இவ்ளோ பெரிய கம்பெனில இருந்து என் திறமை புரிஞ்சு கூப்பிட்டிருக்கான் தெரியுமா? சீக்கிரமே இதே கம்பெனில சிஇஓ ஆகல என் பேரு மலர்விழி இல்லை” என்று சூளுரைத்தவளுக்குத் தெரியாது அந்தக் கம்பெனியில் அவளுக்கு நிகழப் போவது என்னவென்று?
“ஆமா… இந்த கத்துக்குட்டியத் தான் கம்பெனில காலெடுத்து வச்ச உடனே சிஇஓ ஆக்கறேன்னு ஆரத்தி தட்டோட காத்துட்டு இருக்காங்க” என்று செல்லமாக அலுத்துக் கொண்ட தாய்க்கும் தெரியாது மகளது நிலை இன்னும் சில மாதங்களில் தலைகீழாக மாறப்போகிறதென்று.
“பார்க்கத் தானே போறீங்க, நீங்க போய் சூடா பக்கோடா ரெடி பண்ணுங்க, அதுக்குள்ள நானு இந்த கம்பெனி விஷயத்தை என்னன்னு பாத்துட்டு வந்துடறேன்” என்று தாயின் கையில் சிக்காமல் படுக்கை அறைக்குள் ஓடிப் போனாள். சுந்தரியும் தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்து கொண்டார்.
என்ன தான் பெண்ணியம் பேசினாலும், பெத்த பொண்ணோ மருமகளோ சமையல் செய்யலன்னு பல அம்மாக்கள் கம்ளைன்ட் பண்ண மாட்டாங்க, குறிப்பா நம்ம சுந்தரி பண்ணவே மாட்டாங்க. எனக்கு ஹெல்ப் பண்ணலேன்னு தான் அவங்க புகாரெல்லாம் இருக்கும். மத்தபடி மெயின்குக் என்ற பொஸிஷன் அவங்களுக்குத் தான்.
கிச்சன்ல ஒரு சின்ன ஸ்பூன இடம் மாத்தி வச்சாலும் ருத்ர தாண்டவம் ஆடிருவாங்க.
மணி ஆறை நெருங்கிய வேளையில், அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதும் முந்திரி பக்கோடா மணம் வீசியது. சரியாக அதே நேரத்தில் காலிங் பெல் அடிக்க, சுந்தரி தான் வந்து கதவைத் திறந்தார். “வாவ்! மாமி! பக்கோடா பண்றீங்களா? உங்க கை மணமே தனி தான்” என்றபடி உள்ளே வந்தவள் சுந்தரியின் மருமகள் ஜனனி, ஒரு பள்ளியில் பிள்ளைகளை மேய்க்கும் வேலை.
அவள் பின்னோடு, “பாட்டி! நான் கேட்ட கேஷு தானே! எனக்கு தான் முதல்ல தரணும். அத்தை இன்னும் சாப்பிடலை இல்லை??” என்று அவசரமாகக் கேள்வி கேட்டுத் தனது ஷூவைக் கழட்டி, உடை மாற்றி ஓடி வந்தவன், சுந்தரியின் பேரன், அதாவது ஜனனியின் சீமந்த புத்திரன் அர்ஜூன்.
அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே சென்றிருந்த அந்த வீட்டின் மற்ற உறுப்பினர் இருவரும் வந்து சேர அந்த வீட்டில் ஸ்நாக்ஸ் டைம் இனிதே ஆரம்பித்தது. ஆனால், மலர்விழி இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
“என்னாச்சு சுந்தரி? மலர் இந்த நேரத்தில் கதவைச் சாத்திட்டு என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று மனைவியிடம் நிஜமான கவலையுடன் விசாரித்தார் ராஜ்மோகன்.
“அதானே, நமக்கெல்லாம் காதுல ரத்தம் வர்ற வரைக்கும் ஓய மாட்டாளே? எப்படி இவ்வளவு கேப் விட்டிருக்கா?” என்று சத்தமில்லாமல் கேட்டவன் மலர்விழியின் உடன்பிறப்பு, கார்த்திக்.
அந்த சத்தத்தை உள்வாங்கிய அர்ஜுன், “அத்தை! என்ன தான் பண்ற உள்ள? பக்கோடா சீக்கிரம் வா!” என்று அலறினான். அதற்கெல்லாம் அசறவில்லை அவனது அத்தை. “பக்கோடா சூப்பரா இருக்கும்மா. அந்த லாஸ்ட் பீஸ் எனக்குத் தான்” என்று வழக்கமாக உடன்பிறப்புகள் செய்யும் வேலையைச் செவ்வனே கார்த்திக் செய்ய, மலர்விழி அறைக் கதவைப் படாரென்று திறந்தாள்.
“ஓ.. வாவ்.. கிரேட் மேன்.. நீ சாதிச்சுட்ட மலர்.. சாதிச்சிட்ட… விக்ரம்… விக்ரம்… நான் வெற்றி பெற்றவள்.. இமயம் தொட்டு விட்டவள்
என் வீரமே வாகையே சூடும்.. விக்ரம்…”
தனக்கேற்றபடி பாட்டை மாற்றிப் பாடிக் கொண்டே தனது அறையை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் நிலவிய அமைதியைக் கண்டு திகைத்தாள். அங்கிருந்த அனைவரது பார்வையிலும் நெருப்பு பறந்தது.
“இவ்வளவு நேரம் உள்ள என்ன தான் பண்ண எருமை?” என்றான் அண்ணன்.
“ஏன் என்ன ஆச்சு? நான் என்ன பண்ணேன்னு அம்மாவுக்கு தெரியுமே?” என்று கேசுவலாகக் கூறியபடி பக்கோடாவில் கை வைத்தாள் தங்கை.
“ஹேய்! நில்லு! ஸ்டாப்!” என்று கிட்டத்தட்ட அலறிய கார்த்திக், “நாங்க எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு பக்கோடாவ வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருந்தா, நீ சாவகாசமா உன் இஷ்டப்படி வந்து எங்களை கன்சிடர் கூட பண்ணாம சாப்பிடுவியா? திஸ் இஸ் த்ரீ மச் யூ நோ. உனக்கு இன்னைக்கு பக்கோடா கிடையாது, அதான் இன்னைக்கு நீ பண்ணதுக்கு பனிஷ்மன்ட்” என்று தீர்ப்பும் வழங்கி முடித்து தான் ஒரு வக்கீல் என்று நிரூபிக்க முயன்றான்.
ஆனால், “நோ.. நோ.. டாடி.. அத்தைக்கு பனிஷ்மன்ட் எல்லாம் தரக்கூடாது. நிறைய டைம்ஸ் நீங்க தான் வெயிட் பண்ண வைப்பீங்க. அப்போ உங்களுக்கு டெய்லி ஸ்நாக்ஸ் தரக்கூடாது” என்றது கார்த்திக் பெற்ற சில்வண்டு.
இப்படிப்பட்ட கலகலப்பான ஸ்நாக்ஸ் நேரத்தின் முடிவில் மலர்விழி தனது நேர்முகத்தேர்வின் விவரங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாள்.
விஷயத்தைக் கேட்ட கார்த்திக் அருகில் இருந்த மனைவியை அழுந்த கிள்ளி வைத்தான். “ஸ்ஸ்ஸ்…. ஆஆஆ.. வாட் இஸ் திஸ் கார்த்திக்? வை திஸ் கொலவெறி?” என்று அவள் அலற அவனோ கேள்விப்பட்ட விஷயம் உண்மை தான் என்று அறிந்து கிள்ளியதை மறந்து மனைவியின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான்.
ஜனனி அவசரமாக மாமியார் மாமனார் முகம் பார்க்க அவர்கள் சிரித்து கொண்டே வேறு திசையில் வேடிக்கை பார்த்தனர்.
“டேய் அண்ணா! என்னடா இதெல்லாம்? சின்னப் பிள்ளைங்க, பெரியவங்க யாரையும் கண்டுக்காம… ம்ம்.. நீ.. நடத்து.. “ என்று நக்கல் அடித்துச் சிரித்தாள் மலர்.
அர்ஜுனோ, “டாடி! இதெல்லாம் தப்பு, யூ நோ. மம்மிய பேட் டச் பண்ணக் கூடாது” என்று பாடம் எடுக்க ஆரம்பித்தான். வரப் போகும் நாட்களின் விபரீதம் உணராமல் சந்தோஷத்தில் மிதந்தது அக்குடும்பம்.
“உன் மண்டைக்குள்ள நிஜமாவே களிமண் நிறையவே இருக்கு போலவே. நான் அங்கே கார்ப்பரேட் ட்ரைனிங் பண்ணனும்னு ட்ரை பண்ணினேன். கிடைக்கவே இல்லை. கொஞ்சம் வருஷத்தில நிறையவே வளர்ந்திருக்காங்க. ஷார்ட் கட் எதுவும் இருக்காதுன்னு நம்புவோம்.”
கம்பெனியைப் பற்றிய தனது அபிப்பிராயத்தைப் பகிர்ந்து கொண்ட கார்த்திக், “உன் ப்ரோஃபைல்ல இருக்கிற add-on எல்லாம் தான் அவங்களை அட்ராக்ட் பண்ணி இருக்கும். பொண்ணு நல்ல ஷார்ப், விடக்கூடாதுன்னு கூப்பிட்டு இருப்பாங்க. ஆல் தி பெஸ்ட் ஃப்ளவர்!” என்று தலையில் கையை வைத்து லேசாக அணைத்து தங்கையை வாழ்த்தினான்.
“நீ ஏன் செக்யூரிட்டி செக்ஷன்ல அப்ளை பண்ணாம அக்கவுண்ட்ஸ் பேஸ் வச்சு பண்ணி இருக்க? அதுன்னா இன்னும் எக்ஸ்போஷர் ஜாஸ்தி கிடைக்குமே, அதுல ஓபனிங் எதுவும் இல்லையா?” இன்னும் கேள்விகளை அடுக்கினான் தமையன்.
“ஹேய்! அதெல்லாம் நான் சும்மா டைம் பாஸுக்காகப் படிச்சது. எனக்கொன்னும் அடுத்தவன் என்ன பண்றான்னு அவன் டெஸ்க்க எட்டிப் பார்க்கற ஆர்வம் இல்லை. அதைப் போய் வேலையா பார்க்கிறதா.. நோ சான்ஸ்!” என்றாள் தங்கை. அதில் தான் வேலை தருவோம் என்றால் என்ன செய்வாளோ?
“நான் கூட ஸ்டார்ட்டிங்ல அந்த கம்பெனி டெல்லில இருந்த போது டெக்னிக்கல் டீம்ல ட்ரை பண்ணி இருக்கேன். கால் பண்ணாங்க. பட், செக்யூர்ட் கேபின்ல மூணு பேர் மட்டுமே வொர்க் பண்ற மாதிரி இருந்தது. இப்போன்னா சரின்னு சொல்லி இருப்பேன். அப்போ எனக்கே ஒரு மாதிரி தான் இருந்தது, வீட்டுல ஸ்ட்ரிக்டா நோ சொல்லிட்டாங்க. செக்யூரிட்டி செக்ஷனா இருந்தால் கண்டிப்பா தனி கேபினா தான் இருக்கும்” என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டாள்.
அவளது வார்த்தைகளில் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்க முடியாத கவலை மட்டும் தான் தெரிந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் சுந்தரியின் வயிற்றில் ஒரு மூட்டை புளியைக் கரைத்து விட்டது.
“ஏய்! நீ என்ன எல்லாரையும் பயமுறுத்தி விடற?” என்ற கார்த்திக் ஜனனியிடம் தாயைப் பார்க்கும்படி செய்கை செய்தான்.
“நீங்களும் தான் எதையோ இடையே சொறுகி விட்டீங்க, மாமா முகத்தைப் பாருங்க” என்று காதுக்குள் சொன்ன மனைவியுடன் சேர்ந்து பெற்றோரைக் கவலையுடன் பார்த்தான் கார்த்திக்.
ராஜ்மோகன், மஹாராஷ்டிரா அரசின் இலாகா ஒன்றில் மிகப் பெரிய பதவியில் இருப்பவர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அவரது பதவிக்காலம் முடிய இருந்தது. அரசு மாறும் போது இலாகா மாற்றம் நிகழும், மற்றபடி அவரது வேலை முழுமையாக மும்பையில் மட்டுமே. அவரது பதவி காரணமாக குடும்ப பொறுப்பு முழுவதையும் சுந்தரி ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் படித்திருந்தாலும் வெளியே வேலைக்கென்று செல்லும் சூழ்நிலை சுந்தரிக்கு இல்லை.
விளைவு, ராஜ்மோகனால் பிள்ளைகளைப் பற்றிய கவலையின்றி வேலையில் முழுக் கவனத்தையும் வைக்க முடிந்தது. இதுவரை அவரது பதவியைப் பயன்படுத்தி அவரது குடும்பத்திற்கென எந்த ஆதாயமும் தேடியதில்லை. மலர்விழி, கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள், அவளது திறமைக்கு மட்டுமே வேலை கிடைக்க வேண்டும் என்று.
இப்போது திறமைக்கான அழைப்பு தான் வந்திருக்கிறது, இன்னும் வேலை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னால் எத்தனை விதமான யோசனைகள், பயங்கள்.
தந்தையின் முகத்தில் யோசனையைக் கண்ட கார்த்திக் நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டான்.
“அப்பா! என்ன யோசனை? நானும், ஜானுவும் பேசின விஷயம் தான் பிரச்சினையா? ஜானு சொன்னது பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்தது, அதெல்லாம் இப்போ சாதாரணம். நான் சொன்னது…. கார்ப்பரேட்னு வந்தாலே நிறைய நடக்குது தானே.. அந்த மாதிரி ஒரு அபிப்பிராயம் தான். எப்படியும் நாம ஒரு செக் பண்ணலாம். முதல்ல அவ இன்டர்வியூ போகட்டும், அதுல செலக்ட் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம். அது வரைக்கும் நாம கவலைப் படத் தேவையில்லை. அவளுக்கு தெரிஞ்சா சாமியாடிடுவா. எது வந்தாலும் அவ சமாளிப்பா, நாம சப்போர்ட் பண்ணினா போதும்.”
அவர்கள் கவலைப்படத் தேவையில்லையா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும் என்பதெல்லாம் பழைய ஸ்டைல். மலர்விழி விஷயத்தில் அவள் இன்டெர்வியூ செல்லப் போகும் xyz corp pvt Ltdல் உள்ள “அவன்” தான் இவர்களது கவலையைத் தீர்மானிக்கப் போகிறான்.
விதி “அவன்” வடிவில் அங்கே அவளுக்குக் காத்திருப்பதை அறியாதவளாக சந்தோஷக் கனவுகளோடு வலது காலை எடுத்து வைத்து சிரித்த முகத்துடன் கம்பெனியை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நுழைந்தாள் மலர்விழி.
படபடக்கும் பட்டாசாக வீட்டை விட்டுக் கிளம்பியவள் புஸ்வாணமாக வீட்டுக்குத் திரும்பி வந்தாள்.