• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 10

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
405
0
43
india

என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -10



மலர்விழி அமைதியாக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று கடுமையான வேலைப் பளு எதுவும் இல்லை என்றாலும் கூட வரப்போகும் ஒரு புது தேர்வுக்கான விதிமுறைகளை நிர்ணயம் செய்யும் வேலையில் இறங்கி இருந்தாள் அவள்.



முதல் கட்ட ஆலோசனை இவளிடம் இருந்து சென்ற பிறகு அமெரிக்காவில் இருக்கும் க்வாலிக்டி டீம் அதனை மறுபரிசீலனை செய்து மாற்றங்கள் தேவையென்றால் டிஸ்கஸ் செய்து அதன் பிறகே இறுதி செய்யப்பட்டு பதிப்புக்கு வரும். மிகவும் கவனமாக தேர்வையும் அதன் தேவைகளையும் உள்வாங்கிக் கொண்டு செய்யவேண்டிய வேலை இது. அதனால் அவளது கவனம் முழுவதும் கணினியில் இருந்தது. அதனால் அவளருகில் வந்து அமர்ந்தவனை அவள் உணரவே இல்லை.



அவளது தனி கேபின் அது, அவளுக்கு மட்டுமே அதனைத் திறக்க அக்சஸ் இருந்தது. ஒரு வேளை அப்படி அவள் தான் நினைத்துக் கொண்டிருந்தாள் போலும். இதோ இப்போது இவன் வந்து நிற்கிறானே, இதிலிருந்தே எந்த விதிக்கும் விதிவிலக்கு என்று ஒன்று உண்டு என்பது தெரிகிறதே.



“ஹாய் மலர்! நான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன சின்சியரா பண்ணிட்டு இருக்க?” காதோரம் கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள். வெகு அருகில் ரஞ்சனின் முகம். அவள் பார்த்து ரசிக்கும் முகம் தான், ஆனால் அலுவலகத்தில் முக்கியமான வேலையில் இருக்கும் போது என்ன இது என்று அவளுக்கு எரிச்சலாக வந்தது.



அந்த எரிச்சலை அப்படியே கண்களில் தேக்கி அவனைப் பார்த்தாள்.



******

வெகு சில நேரம் தவிர தனது அறையை விட்டு எங்கேயும் செல்லாத ரஞ்சன் இப்போதெல்லாம் அடிக்கடி மலர்விழியை அவளது அறையிலோ அல்லது கேண்டீனிலோ சந்தித்தான். இவள் என்னவள் என்று அடுத்தவருக்கு உணர்த்தும் பார்வையாக அவனது பார்வை இருப்பதை மலர்விழி அவ்வப்போது உணர்ந்து கொண்டாள்.



நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றாலும் இவனது செய்கையை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறினாள். அதே நேரத்தில் மற்றொரு மனதில் ஏதோ மூலையில் ஒரு இனம் புரியாத ஒரு சஞ்சலம் இருந்தது. இவன் யாருக்கோ இந்த செய்தியை உணர்த்த முயல்கிறான் என்று தோன்றியது.



வீட்டில் பெண்கள் யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் ஈஸ்வரிடம் ஃபோன் செய்து நிறையவே புலம்பினாள். “என் நிலைமையை பாரு ஈஸ்வர்! லவ் பண்ணி, அதை வீட்டில உடனே அக்சப்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி வைக்க நாள் குறிச்சதுக்கு அப்புறம் லவ்வரோட ஆக்டிவிட்டீஸ் சரியான்னு யோசிச்சு பார்த்துட்டே இருக்கேன். இவன் என் பக்கத்தில் வந்துட்டு சுத்தி இருக்கிற எல்லாரையும் ஒரு லுக்கு விடறான் பாரு, இவ எனக்குத்தான் யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்ற மாதிரியே எனக்கு ஒரு ஃபீலிங்கு” என்றாள் வடிவேலு பாணியில்.



ஈஸ்வருக்கும் அவளது நிலை கண்டு சிரிப்பு வந்தது. மர்மமாகப் புன்னகைத்தானே தவிர வேறெந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. மேலும் இந்த விஷயத்தில் கார்த்திக் உள்ளே வராமல் கவனமாக பார்த்துக் கொண்டான். தங்கையின் புலம்பல் கேட்டால் கார்த்திக் ஒரேயொரு காரியம் மட்டும் தான் செய்வான். அவளது வேலை மற்றும் கல்யாணம் இரண்டையும் சேர்த்து நிறுத்தி விட்டுத் தான் வேறு வேலை பார்ப்பான்.



மிகவும் சவாலான வேலை என்பதால் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த மலர்விழி பலத்த ஏமாற்றம் அடைவாள். ரஞ்சன் விஷயமும் அப்படித்தான், அவளுக்கே ஒரு தெளிவில்லாமல் தவிக்கும் போது நாம் அதைப் பயன்படுத்த கூடாது என்பதில் ஈஸ்வர் தெளிவாக இருந்தான்.



மறுபுறம் அவனது தொழில் திறமை மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை, பலகட்ட சோதனைகளுக்கு பிறகு தான் ரஞ்சனுக்கு நல்ல பையன் என்று முத்திரை குத்தி இருந்தான். ஆனால் யானைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழியை அவன் அறிந்து கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை.

*******

“என்ன ஃப்ளவர்? எதுக்கு இந்த டெர்ரர் லுக்கு? நான் உன் வேலையை டிஸ்டர்ப் பண்ண வரலை. ஜஸ்ட் இரண்டு வார்த்தை பேசிட்டு போகலாம்னு தான் வந்தேன். இப்போல்லாம் உன் கூட பேசாமல் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியலை யூ நோ, அதுவும் உன்னை இவ்வளவு பக்கத்தில் வச்சுட்டு.”



அவன் பேசிய டயலாக் எதுவும் மலர்விழிக்குப் பிடித்தமாக இல்லை. அவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள்.



“இன்னும் என்னம்மா?”



“இந்த கேபினோட செக்யூரிட்டி லாக் சரியில்லைன்னு நான் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும். யாருக்கு மெயில் அனுப்பணும்னு சொல்லுங்க” என்றாள் கறாராக.



அவள் சொல்ல வந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவன் ஒரு விஷமப் புன்னகையுடன் அங்கிருந்து எழுந்து கொண்டான். “உன் பாஸ் கிட்ட இருந்து உனக்கு மெயில் வர்றதே இல்லையா?”



“வருதே.. பட் நாட் ஃப்ரம் ஹிஸ் மெயில் ஐடி, க்வாலிக்டி ஹெட்டோட காமன் ஐடில இருந்து தானே வருது. அப்படி கீழே வேலை பார்க்கிறவங்க கூட தெரிஞ்சுக்க கூடாத சீக்ரெட்டா அந்த பொஸிஷன்?”



“அப்படி எல்லாம் எதுவும் இல்லையே, இந்த ஆஃபீஸ்ல எல்லாருக்கும் தெரியும். நீ இப்படி ஒரு தத்தியா இருந்தால் அதுக்கு யார் என்ன செய்ய முடியும்?”



“வாட்!!! என்ன சொன்னீங்க?? நான்.. நான்.. தத்தியா…???”



“பின்னே இல்லையா? இவ்வளவு செக்யூர்ட் கேபினுக்கு இன்னொரு அக்சஸ் இருக்குன்னு சொன்னா அது பாஸ் ரஞ்சனா இருக்கும்னு யோசிக்காமல் மலர்விழியோட ரஞ்சனை யோசிச்சா நீ தத்தி இல்லாமல் வேறென்ன?” என்று சத்தம் இல்லாமல் சிரித்தான்.



இப்போது மலர்விழி முகம் வெளுத்துப் போய் அவனைப் பார்த்தாள். அவனோ புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான்.



“நத்திங்.. என்ன விஷயமா இங்கே வந்தீங்க பாஸ்? அதைச் சொல்லுங்க”



“நெக்ஸ்ட் மன்ந்த் இரண்டு முக்கியமான bids இருக்கு. இந்தியாவில் உள்ள இரண்டு மேஜர் எக்ஸாம்ஸ். அதுக்கு டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணனும். டிஸ்கஷன்ஸூக்காக இரண்டு நாள் கான்பரன்ஸ் ஹால் ப்ளாக் பண்ணி வைக்கணும். யார் யார் இன்வால்வ் ஆகணும்னு மெயில் வரும். அஜென்டா ரெடி பண்ணு.” அவனும் விளையாட்டை விட்டு அலுவலக விஷயத்தில் சீரியஸாக பேசினான்.



“ம்ம்..‌ஓகே.. “ என்றவள், அப்போதே தனது டைரியில் அனைத்தையும் குறித்துக் கொண்டாள்.



“Then இன்னைக்கு என்ன விசேஷம் ஃப்ளவர், ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியா வந்திருக்க?” சட்டென்று பாஸ் மோடில் இருந்து ரெமோ மோடிற்கு மாறிவிட்டான் ரஞ்சன். அவனது கண்கள் புடவையில் தேவதையாகத் தெரிந்த மலர்விழியை பார்வையால் விழுங்கின. அவன் பார்வை சென்ற திசையில் அவனது கையும் செல்ல பட்டென்று இடத்தை விட்டு எழுந்து நின்றாள் மலர்விழி.



“ஹலோ பாஸ், எக்ஸாம் விஷயம் பேசத்தானே வந்தீங்க. பேசி முடிச்சாச்சு இல்ல.. கிளம்புங்க.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. இருக்கிறது பத்தாதுன்னு எங்க பாஸ் புதுசா இரண்டு வேலை கொடுத்து இருக்கார். டிஸ்டர்ப் பண்ணாம கிளம்புங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்” கையெடுத்து கும்பிடாத குறையாக கெஞ்சினாள்.



ஏற்கனவே ரஞ்சன் மலர்விழியின் உறவு தெரிந்த பிறகு ஜிக்யாஸாவின் பார்வை இவளை இகழ்ச்சியாகவே பார்ப்பது போல இருந்தது. இன்னும் யார் யார் என்னென்ன பேசிக் கொள்கிறார்களோ? நாம் எதற்காக அப்படி ஒரு வாய்ப்பைத் தரவேண்டும் என்பது அவளது எண்ணம். தேவையில்லாமல் யார் வாய்க்குள்ளும் அவலாக அரைபட அவள் தயாராக இல்லை.



ஆனால் ரஞ்சனுக்கு இதெல்லாம் விளங்கியதா இல்லையா என்றே தெரியவில்லை. மலர்விழி விஷயத்தில் அவன் என்ன நினைக்கிறானோ அதைத் தான் செயல்படுத்தினான். அவளது சொல்லை அவன் அலட்சியப் படுத்துவதில்லை, அதே நேரத்தில் அவளையும் தன் வழிக்குக் கொண்டு வரும் வித்தை கற்று வைத்திருந்தான்.



இவள் ஏதாவது சொன்னால், “யூ ஸீ ஃப்ளவர்! இந்த மாதிரி கோர்ட்ஷிப் பீரியட் யாருக்கு கிடைக்கும். நமக்கு கிடைச்சிருக்கு, அதான் எல்லாருக்கும் நம்மைப் பார்த்து பொறாமை. நீ அதையெல்லாம் கண்டுக்காத. லெட் அஸ் என்ஜாய் திஸ் பீரியட்” என்று லெக்சர் கொடுத்து அவள் வாயை அடைத்து விடுவான்.



ஒரு நாள் ரொம்ப பேசினாள் என்று வாயை அடைப்பதற்கு வேறு வழியை அவன் பயன்படுத்த அன்று கப்சிப் என்று ஆனவள் தான், அதன் பிறகு வாயைத் திறந்து எதையும் சொல்வதே இல்லை.



எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையே வந்த ஒரு ஃபோன் அழைப்பால் மலர்விழியின் ஆழ்மனதில் ஒரு இனம் புரியாத பயம் ஒன்று குடியேறி ஆட்டிப் படைத்தது.



*********



அன்று காலை விடியும் போதே விகாஸின் மனைவிக்கு மனதே சரியில்லை. ஹாஸ்பிடலில் தனி அறை கூட இல்லாமல் எத்தனை நாள் இப்படி ஐசியூ வாசலில் தவம் கிடப்பது என்று அலுப்பாக இருந்தது. வயதுப் பெண் ஒன்றையும் வயதான பெற்றோரையும் கவனிக்க முடியாமல் இங்கே இருக்கும் நிலையை நினைத்தால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.



பெண்களுக்கே உரிய பிரத்யேக நாட்களில் உடலில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கியது. மற்ற நாட்களை விட அந்த நாட்களில் இருபத்து நான்கு மணி நேரமும் நாற்காலியில் அமர்ந்திருப்பது மிகவும் கடினமான இருந்தது. ஹாஸ்பிடலில் ஆரம்பத்திலேயே சொன்னார்கள் தான்.



“மிஸஸ்.விகாஸ்! அவர் ஐசியூல இருக்கற வரைக்கும் உங்களுக்கு தனி ரூம் எல்லாம் கொடுக்க முடியாது. நீங்க உங்க கான்டாக்ட் கொடுத்துட்டு போங்க. எதுவானாலும் உடனே கூப்பிடுவோம். அட்லீஸ்ட் நைட்ஸ் ஸ்டே பண்ண வீட்டுக்கு போயிட்டு வாங்க. எத்தனை நாள் தான் இப்படி உட்கார்ந்து இருப்பீங்க?” என்று நர்ஸ் கூட அவ்வப்போது கேட்கிறாள்.



இவளும் அப்படி ஒரு நாள் சென்றாள். பாதி வழியிலேயே விகாஸூக்கு நினைவு வருகிறது என்று ஃபோன் வந்ததில் திரும்பி விட்டாள். அன்றிலிருந்து இன்றுவரை வீடென்று ஒன்று இருப்பதையே மறந்தவளாகத் தான் இருக்கிறாள். இன்று ஏனோ மனம் வீட்டுக்கு போ என்றது.



குழப்பத்துடன் காலைக் கடன்களை முடித்தவள் மெல்ல ஐசியூ நோக்கி நடந்தாள். பெரிய மருத்துவமனை என்பதால் ஐசியூ தனித்தனி அறைகளாக இருந்தது. விகாஸின் அறையை நெருங்கும் போதே உள்ளே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.



“பாவம் விகாஸ், உன் வைஃப். அவங்க கிட்ட மட்டுமாவது உண்மையைச் சொல்லிடு. நீ கோமால இருக்கேன்னு அவ்வளவு வேதனைல இருக்காங்க. வீட்டுக்கு கூட போகாமல் இங்கேயே கிட்டத்தட்ட மூணு மாசமா வெயிட் பண்றாங்க.

நாங்க யார் உன்னை வந்து பார்த்தாலும் ஏதாவது நல்லது சொல்லிட மாட்டோமான்னு அவங்க பார்க்கிற பார்வையே என்னைக் கொல்லுது. நீயே விஷயத்தை சொல்றது தான் நல்லது. ஐ ஹோப், அவங்க கண்டிப்பா உன் நிலையை புரிஞ்சுப்பாங்க” என்று பேசிய குரல் ஐசியூ மருத்துவருடையது.



அந்த ஹாஸ்பிடலில் முக்கிய பொறுப்பில் இருப்பவன், கூடுதல் தகவலாக அவன் விகாஸின் நண்பன் என்பது விகாஸின் மனைவிக்கே தெரியாது. உள்ளே நுழையாமல் அதிர்ந்து போய் நின்று விட்டாள்.



“ம்ச், நாட் நவ் ஷாம்.. அவளுக்கு ஓட்டை வாய். கண்டிப்பா யார் கிட்டயாவது சொல்லிடுவா. விஷயம் வெளில பரவிட்டா, என் மொத்த குடும்பமும் மாட்டிக்கும். இத்தனை நாள் நான் பட்ட பாடெல்லாம் வேஸ்ட்டா போயிடும். அதனால இன்னும் கொஞ்ச நாள் அவ அவஸ்தை படட்டும், இது கூட நல்லாத்தான் இருக்கு யூ நோ! இன் எ வே ஐயாம் என்ஜாயிங் ஹெர் லவ்”



அசால்ட்டாக வந்த குரல் நிச்சயமாக விகாஸின் குரல் தான். வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்தவளின் இதயம் வெளியே வந்துவிடும் போலிருந்தது. அவன் ஏதோ ப்ளான் செய்து இங்கே வந்து படுத்திருக்க, இவள், தான் பெரிய சத்தியவானைக் காப்பாற்றும் சாவித்திரி போல இங்கேயே தவம் இருக்கிறாள், எத்தனை பெரிய முட்டாள் நான் என்று தன்னையே நொந்து கொண்டாள்.



அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நிற்க பிடிக்கவில்லை. வேதனையுடன் திரும்பியவளுக்கு உள்ளே என்ன தான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. ‘விகாஸ் தான் டிராமா போடுகிறான் என்றால், அப்படி என்ன பெரிய பிரச்சினை? இத்தனை பெரிய மருத்துவமனையில் அதனை எப்படி கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள்?’ என்பது போன்ற கேள்விகள் படையெடுத்தன. காதுகளைத் தீட்டிக் கொண்டு ஐசியூ உள்ளிருந்து வரும் வார்த்தைகளை உள்வாங்கினாள்.



“ஷாம்! இத்தனை நாள் ஹெல்ப் பண்ணிட்ட. இன்னும் கொஞ்ச நாள், மேக்ஸிமம் ஒரு பதினைஞ்சு நாள் எதையும் கண்டுக்காதே. நான் என் வேலையை முடிச்சிடுவேன். ப்ளீஸ்”



“இந்த ஹாஸ்பிடல் டீனோட பையனா இது ஒன்னும் எனக்குப் பெரிய விஷயம் இல்லை. என்னோட கன்சர்ன் எல்லாம் வாசல்ல தவம் பண்ற உன் வைஃப் பத்தி தான்” என்ற ஷாமின் குரலில் அவன் யார் என்று விளங்கிக் கொண்டவள் அவனுக்கு இருக்கும் அக்கறை கூட கட்டியவனுக்கு இல்லையே என்று வருந்தினாள். ஆனால் அதை புஸ்வாணம் ஆக்குவது போல ஷாம் ஒரு விஷயம் சொன்னான்.



“பட், நீ ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கணும் விகாஸ். எங்கப்பா நீதி நியாயம்னு பேசுறவர், அவர் வோர்ல்ட் டூர் முடிஞ்சு வர்ற வரைக்கும் தான் நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். அவருக்கு மட்டும் நடந்த விஷயம் தெரிஞ்சால், பெத்த பிள்ளைன்னு கூட பார்க்காமல் என்னை சஸ்பென்ட் பண்ண தயங்க மாட்டார். உன்னால இங்கே ஒரு பத்து பேரோட வேலை போகும். தேவையான்னு யோசிச்சுக்கோ” என்று சீரியஸாகப் பேசிய ஷாம் சட்டென்று இலகுவானான்.



“ஆமா… யாரு அந்தப் பொண்ணு.. ஹான்… மலர்.. ஹப்பா.. எத்தனை கேள்வி கேட்குது. உன் வைஃப் கூட இப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கலை.. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் இங்கே என்ன நிலவரம்னு கண்டுபிடிச்சிருப்பா. வெரி ஷார்ப்” என்று மலரை சிலாகித்துப் பாராட்டினான்.



“ஹா.. ஹா… என் டீமுக்கு லேட்டஸ்ட்டா வந்த பொண்ணு அது. வெரி ப்ரில்லியன்ட். ரொம்ப ஈஸியா பழகிடுவா, வெரி இமோஷனல் கூட. நானும் அன்னைக்கு ரொம்ப பயந்து தான் போயிட்டேன். கொஞ்சம் விட்டால் கை காலெல்லாம் கிள்ளிப் பார்த்திருப்பா. என் நல்ல நேரம், நான் தப்பிச்சுட்டேன்.” நிம்மதியாக மூச்சு விட்டான் விகாஸ்.



“அப்படி எல்லாம் நினைச்சுக்காதே. அன்னைக்கே அவ சந்தேகத்தோட தான் போனா. நிஜமாகவே ப்ரில்லியன்ட்டா இருந்தால் இந்த நேரம் உன்னைக் கண்டுபிடிச்சிருப்பா”



“பார்க்கலாம், பார்க்கலாம்.. “



“உனக்கு ஆனாலும் தைரியம் தான் விகாஸ்.. நீ பண்ணதுக்கு எத்தனை வருஷம் உள்ள போடுவாங்களோ தெரியலை. கூட இருந்த பாவத்துக்கு நானும் கம்பி எண்ணனுமோ என்னவோ? சின்ன வயசுல இருந்த உன்னோட கொள்கைகள் எல்லாம் எங்கே போச்சு? இனிமேலாவது நேர்வழில போகப் பாரு. குறுக்கு வழி என்னைக்கும் உதவாது.” நண்பனுக்கு காலம் கடந்து அறிவுரை வழங்கினான் ஷாம்.



“நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது ஷாம். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன். அவ்வளவு ஈஸியா எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அப்புறம் என்ன சொன்ன? கொள்கையாவது, கோட்பாடாவது. எல்லோரும் ஒரு வழியில் போகும் போது நாமளும் போயிடணும், நீதி நேர்மைன்னு பேசினால் பிரச்சினை தான் வரும். அப்படி வந்ததால் தான் என் குறிக்கோள் எல்லாம் பணம் பணம்னு மாறிப் போச்சு.”



“அஃப்கோர்ஸ், எல்லாருக்கும் குறிக்கோள் பணம் தான். ஆனால் அதை சம்பாதிக்க செலக்ட் பண்ற மெத்தட் சரியாக இருக்கணும். இல்லேன்னா…”



“இல்லேன்னா என்ன ஆகிடும், ஒன்னும் ஆகாது. இலட்சம் கோடி கொள்ளையடிக்கிற ஆனால் என் கூட சேர்ந்தவர்களும் எங்களை ஆட்டி வச்சவங்களும் அப்படி இல்லை.

வெளியே பொண்ணு தேடினால் சகிச்சுக்கலாம், வீட்டு பொண்ணுங்க கிட்ட வந்தா என்ன பண்றது? அதைக் கேட்டதுக்கு ஒருத்தனை மேல அனுப்ப விட்டாங்க. இன்னொருத்தன் இப்போ தான் உள்ள வந்திருக்கான். இன்னும் இரண்டு பேர் இருக்காங்க, இவங்களை எல்லாம் தாண்டி மேல இருந்து ஆட்டிப் படைக்கிறவன் யாருன்னு எங்க யாருக்கும் தெரியாது.”



“ஒரு வேளை அந்த ரஞ்சனா இருக்குமோ?”



“சேச்சே… அவனே ஒரு பச்சா… அவனுக்கு இது மாதிரி எல்லாம் சம்பாதிக்கலாம்னு ஐடியா கூட வராது. அத்தனை நல்லவன். எனக்கு அவனை வேற மாதிரி யோசிக்க தோணவே இல்லை..”



“உனக்கு தோணலேன்னா அவன் நல்லவனா இருக்கணும்னு அவசியம் இல்லை. இன்னும் ஒரு விஷயம் உன் கிட்ட சொல்ல மறந்து போயிட்டேன் பாரு. அந்த ரஞ்சனுக்கும் மலருக்கும் நடுவில் ஒரு ரிலேஷன்ஷிப் ஓடுது. எங்கேஜ்மென்ட் கூட முடிஞ்சு போச்சுன்னு கேள்விப்பட்டேன்.”



“ஓ… நல்ல விஷயம் தான்..”



“யூ நோ சம்திங்.. அந்த மலர் லேசுப்பட்ட ஆளில்லை. நம்ம ஸ்டேட் சீஃப் செக்ரட்டரியோட பொண்ணு. பலமான பேக் ரவுண்டு இருக்கு.”



“வாட்!!! மலர் என் கிட்ட சொன்னதே இல்லையே. ரொம்ப கேசுவலா பழகுவா.. ”



“பேக்ரவுண்ட் செக் பண்ணி தானே வேலைக்கு சேர்த்திருப்பீங்க. தெரியாமல் எப்படி இருக்கும்?”



“எச்ஆருக்குத் தெரிஞ்சிருக்கும். ரஞ்சனுக்குக் கூட தெரிஞ்சிருக்க சான்ஸ் இல்லை”



“அப்புறம் அந்தப் பொண்ணு அன்னைக்கு தனியா வரலைன்னு ஞாபகம் வச்சுக்கோ. கமல் சக்சேனா கேஸ் ஹேண்டில் பண்ற டிடெக்டிவ் அன்ட் லாயரோட வந்தா.” ஷாம் சொல்லும் போதே அன்றைய தினம் நினைவுக்கு வந்து விகாஸின் முகம் வெளுத்துப் போனது.



இப்படி மாறி மாறி இருவரும் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டே இருக்க அவையனைத்தும் ரெகார்ட் ஆகிறது என்று அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. ரெகார்ட் ஆன விஷயம் மொபைல் வழியாக ஷேர் செய்யப் பட்டதையும் அவர்கள் அறியவில்லை.