• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 10

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
452
16
43
india
அத்தியாயம் - 10



தாயின் நினைவுகளில் ஆழ்ந்தவள் கண் மூடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். 'அம்மா இல்லாத இத்தனை வருஷத்துல எவ்வளவு விஷயம் நடந்திருக்கு? ஆனால் எதிலேயும் ஒரு கம்ப்ளீட் நெஸ் இல்லவே இல்லை' என்று நினைத்துக் கொண்டாள். தம்பிக்கு திருமணம் ஆனது, இவளுக்கு ஆதித்யா பிறந்தது, விஷ்ணுவின் பெற்றோர் வகையில் உறவு நிலை பட்டும் படாமலே இருந்தது, அவனது சகோதரியின் உறவு முற்றிலும் அறுந்து போனது, விஷ்ணுவின் பெற்றோரது இழப்பு, விஷ்ணு மற்றும் வசுதாவின் உத்தியோக உயர்வுகள், இதோ இந்த வீட்டை வாங்கியது வரை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.



பொருளாதாரச் சறுக்கல்கள், உடல் நிலையில் மாற்றங்கள் என்று எதிர்மறையாக நினைவில் நின்ற விஷயங்கள் பல. எத்தனையோ முறை இந்தியா முழுவதும் சுற்றுலா சென்றாயிற்று, ஆனால் தாய் வீடு செல்லும் குடுப்பினை இல்லையே?



இதோ அவளது நாற்பத்தைந்து வயதில் இருக்கிறாள். இன்னமும், தனக்கென்று ஏதாவது வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது, எதையோ சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது, நான் வசுதா என்ற தனி மனுஷி என்ற எண்ணம் இருக்கிறது. அம்மாவிடம் அப்படி எதுவும் வெளிப்படையாக இருக்கவில்லை என்றாலும், இப்போதும் ஆங்காங்கே கேட்கும் "அண்ணி இருந்தா நல்லா இருக்கும்", "என்ன இருந்தாலும் மாமி இருந்த மாதிரி ஆகுமா?" என்பது போன்ற வாக்கியங்கள் அவளது தனித் தன்மையைத் தானே காட்டுகிறது.



'அப்போ அம்மா தானே பெஸ்ட்!' என்று சர்டிஃபிகேட் கொடுத்துக் கொண்டாள். தாயின் மறைவுக்குப் பிறகு, அவரது தைரியம் இவளுக்கு வந்து சேர்ந்தது. சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டாள். இன்னும் சுவாரசியமாக, அவளது குடும்பத்தில் பலருக்கும் வசுதா அவளது தாயின் பிம்பமாகவே தெரிந்தாள். "அம்மா! நீ பாட்டி ஆகிட்ட…!" பிள்ளைகள் கூட கேலி செய்வார்கள்.



"அம்மாஆஆஆ!" காதருகில் கத்திய அர்ஜூனின் குரலில் திடுக்கிட்டு விழித்தாள் வசுதா.



"ஏண்டா, நீ எப்ப வந்த? எப்படி வந்த? மணி என்னடா ஆச்சு?"



"நீங்க கதவு திறக்கலேன்னா என்னால வர முடியாதா? என் கிட்டயும் ஒரு சாவி இருக்கு. உங்க மொபைல் ரொம்ப நேரமா கத்துது. என்னைக் கேள்வி கேட்கிறத விட்டு அதைப் பாருங்க"



அவளது தந்தை தான் அழைத்துக் கொண்டு இருந்தார். அழைப்பு முடிவதற்குள் அவசரமாக அலைபேசியை காதுக்குக் கொடுத்தாள்.



"ஹலோ சொல்லு பா? எப்படி இருக்க?"



"எடுத்திட்டியா மா? ரொம்ப நேரம் ரிங் போயிட்டு இருந்தது. தூக்கத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டேனோன்னு பார்த்தேன்"



"இன்னைக்குத் தூங்கவே இல்ல பா. நீ எப்படி இருக்க. முட்டி வலி எப்படி இருக்கு?"



"நான் இருக்கேன் மா. ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில வண்டி ஓடிட்டு இருக்கு. இன்னும் ஏன் இருக்கோம்னு சில நேரம் தோணுது"



"என்ன பா, நீயே இப்படி யோசிக்க ஆரம்பிச்சிட்ட. என்ன காரணம்?"



"பின்னே, அப்பான்னு ஒருத்தர் இருக்காரே, ஒரு ஃபோன் பண்ணி எப்படி இருக்கார்னு கேட்போமானு என் பொண்ணுக்கு தோணுதா பாரு. வீட்டில இருக்கிறவங்க பேசறதே இல்லை. நீயும் பேச மாட்டேங்கிற. அம்மா இருந்த வரைக்கும் பல்லு தேய்ச்சதுல இருந்து குழம்புக்கு தாளிக்க மறந்து போனதைக் கூடப் பேசுவீங்க" தந்தையின் மனத்தாங்கல் புரிந்தாலும் அவரது பேச்சு ஆச்சர்யமாக இருந்தது.



எப்போதுமே, தாய் இருந்த போதும் கூட, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாயும் மகளும் பேசிய பிறகு தொலைபேசி தந்தையின் கைகளுக்கு மாறும். "வசுதா! நல்லா இருக்கியா மா? மாப்பிள்ளை நல்லா இருக்காரா? அர்ஜூன் எப்படி இருக்கான்?" என்று சம்பிரதாய கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கிய உடனே, "ஓகே மா. க்ளோஸ் பண்ணிக்கிறேன்" என்று முடித்து விடுவார். "இவரை …. " என்று பல நாட்கள் பல்லைக் கடிக்க வைத்த அப்பா, இப்படிப் பேசுவதென்றால் அது சரியில்லையே.



"என்ன பா இப்படி சொல்லிட்ட, முந்தாநேத்து தானே பேசினோம். நீ தான் என்ன பேசறதுன்னு கேட்டு கட் பண்ணிட்ட. இப்போ இப்படி சொல்ற"



"என்னவோ தெரியல மா. பேசறதுக்கு ஆளே இல்லாத மாதிரி ஒரு ஃபீல். வீடெல்லாம் செட் பண்ணியாச்சா. நீயே எல்லாத்தையும் செய்யாத, பசங்களையும் செய்ய வை"



"ஓரளவு பண்ணி இருக்கோம் பா. இப்போ தான் புக் ஷெல்ஃப ரிசர்ச் பண்ணினேன். பழைய ஃபோட்டோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன். நேரம் போனதே தெரியலை. ஃபேமிலி ட்ரீ ஒண்ணு ரெடி பண்ணலாமான்னு யோசிக்கிறேன். தனித் தனியா ஃபோட்டோ மாட்டறதுக்குப் பதிலாக கொலாஜ் மாதிரி ஒரே ஃபோட்டோவா மாட்டலாம்னு இருக்கேன்"



"நீ இன்னும் இந்த ஃபோட்டோ பைத்தியமா தான் இருக்கியா?"



"வேற எப்படி பொழுதைப் போக்கறது? அதான். இப்போ கூட பழைய ஃபோட்டோ எல்லாம் டிஜிடைஸ் பண்ணலாம்னு உட்கார்ந்தேன்"



"ஸ்கேன் பண்ணிட்டு எனக்கு ஒரு காப்பி அனுப்பி வை. என்ன ஃபோட்டோ எல்லாம் இருக்கு?"



"உன் கல்யாண ஃபோட்டோல ஆரம்பிச்சு எல்லாம் இருக்கு. …. வேற என்ன பா, இன்னைக்கு என்ன செஞ்ச? எதுக்கு திடீர்னு வெக்ஸ் ஆனது மாதிரி பேசற?"



"அது ஏதோ வாக்கு வாதம் மா. மனசுல பட்டதை டக்குன்னு சொல்லிடறேன். எனக்குத் தான் பேசத் தெரியலை போல இருக்கு. இத்தனை வருஷமா பேசக் கூடத் தெரியாமலா இருந்திருக்கேன். சில நேரம், நான் கூட நினைப்பேன், இந்த பசங்க எல்லாம் மாமி, மாமின்னு இன்னும் சொல்றாங்களே யாரும் மாமாவைச் சொல்லலையேன்னு. யார் கிட்டயும் சரியா பேசத் தெரியாதது தான் காரணம் போல இருக்கு"



"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீயா ஏதாவது நினைக்காத பா. அம்மா எல்லாரையும் நல்லா கவனிச்சாங்க. உனக்கு அதுக்கெல்லாம் நேரம் இருந்ததில்லை'



"கரெக்ட் தான் மா. அவ கிட்ட கூட என்ன பேசினேன், என்னத்த வாழ்ந்தேன்னே ஞாபகம் இல்லை. பேசினதெல்லாமே, இந்த கல்யாணத்தை எப்படி பண்றது, அந்த குழந்தைக்கு என்ன சீர் செய்யறது, இதுக்கே இவ்வளவு செலவானால் அடுத்த கல்யாணதுக்கு என்ன செய்வோம் இப்படித் தான் இருந்திருக்கும். அவ இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருக்கலாம். புண்ணியவதி, சீக்கிரம் போயிட்டா. நான் இன்னும் எத்தனை நாள் இந்த பூமியில அவஸ்தைப் படணும்னு இருக்கோ?"



"எதுக்கு பா இப்படி எல்லாம் பேசற?"



"செலவு செய்யறதுக்கு யோசிச்சு யோசிச்சு அவளை விட்டுட்டேன். ரொம்ப முடியலை, ஆனால் ஹாஸ்பிடல் வரலைன்னு சொன்னவளைக் கட்டாயப் படுத்தி அழைச்சிட்டு போகணும்னு சொல்லக் கூட அங்கே ஆளில்லை. நம்ம டாக்டர் சொன்னார் பாரு. அது ரொம்ப ரொம்ப கரெக்ட். நான் இருக்கிற வரைக்கும் இந்த உறுத்தல் இருந்துட்டே தான் இருக்கும்"



"….."



"தாத்தா! உங்களோட அந்த பாட்டியும் இல்லை. வீட்டில வேற யாரும் உங்க கிட்ட பேசறதும் இல்லை. இந்த ரூமுக்குள்ளயே எவ்வளவு நேரம் தான் இருப்பீங்கன்னு இங்க பக்கத்தில இருக்கிற இரண்டு குட்டி பசங்க கேட்கிறாங்க. என் நிலைமை அப்படி இருக்கு"



"…."



"ஏம்மா, நாங்க என்ன பேசினோம்னு உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா?" இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும் அவளால். இருக்கும் காலத்தை எல்லாம் விட்டுவிட்டு, போன பிறகு யோசிப்பதால் என்ன பிரயோசனம். ஒரு விதத்தில் தந்தையும் மகளும் ஒரே மாதிரி தான் இருந்தார்கள்.



"கடைசியா அம்மாவ ஹாஸ்பிடல் சேர்த்த பின்னாடி என்ன பேசினாங்க? நீங்க ஏதாவது கேட்டீங்களா? எங்க கிட்ட ஏதாவது பேசணும்னு சொன்னாங்களா?" அந்த விஷயத்தில் அவளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபம் இன்று வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது. சொந்தம் பந்தம் என்று பலரிடம் தாயின் ஹாஸ்பிடல் விசிட்டைச் சொல்லி இருந்தவர், இவளிடமோ இவளது தம்பியிடமோ சொல்லி இருக்கவில்லை. அன்றைய நாள் தான் அந்த ஆத்மாவின் இறுதி நாளாக இருக்கக் கூடும் என்பது வரை தெரிந்து விட்ட பிறகு, தாயிடம் கடைசியாக ஏதாவது பேசி இருக்கலாமே, குறைந்த பட்சம் கடைசி முறையாக அவரது காது கேட்கும் போதே இவள் அம்மா என்று அழைத்திருக்கலாமே, அவருக்குள் இருந்த எதையாவது தெரிந்திருக்கலாமே, இவளது இரண்டாவது குழந்தையை எதிர் பார்த்து இருந்தவர், அதைப் பற்றி ஏதாவது கேட்டு இருக்கலாமே, …. இப்படி பல "மே"க்கள் இந்த பதினைந்து வருடங்களாக மனச் சுரங்கத்துள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.



தந்தையின் மனநலனைக் கருதி இத்தனை நாளும் மனதுக்குள் இருந்த கேள்வி, எதிர்பாராத நேரத்தில் வெளிவந்து விட்டது.



"அவ கிட்ட எதுவும் கேட்கலையேம்மா, தோணவே இல்லையே. ஹாஸ்பிடல் போனதும் வெண்டிலேட்டர்ல போட்டாங்க. அதுவே பயமா இருந்தது. அப்புறம் எதுவும் தோணவே இல்லையே. நீ கேட்ட பின்னாடி தான், ஏதாவது கேட்டு இருக்கலாம்னு இருக்கு"



"ஹூம்... சரி சரி விடு பா. அதையே மனசுல வச்சுக்காத. இங்க வாயேன், ஒரு பத்து நாள் இருந்துட்டு போலாம்"



"அடுத்த வாரம் வர ட்ரை பண்றேன் மா. இப்போ க்ளோஸ் பண்ணிக்கிறேன்"



'அதானே! அப்பவும் இவர் ட்ரை தான் பண்ணுவார். எப்போ பாரு க்ளோஸ் பண்றதுலயே இருப்பார்' மனதுக்குள் அவரை வறுத்தவள், அழைப்பு நின்றதை உணர்ந்து அலைபேசியை காதில் இருந்து எடுத்தாள்.



"அம்மா யாரைப் போட்டு வறுத்துட்டு இருக்க?" என்றபடி வந்தான் ஆதித்யா.



"கண்டிப்பா உன்னை இல்லடா" என்றவளுக்குத் தந்தையின் நிலை கவலை அளிப்பதாக இருந்தது. எப்போதும் யாரிடமும் மனம் விட்டுப் பேசுபவர் இல்லை. வீட்டின் மூத்தவராகப் பொறுப்புகளைச் சுமந்தவருக்குத் தனது வாழ்வு என்ற பெயரில் ஒன்றைப் பிரித்துப் பார்க்க இயலவில்லை, பிரித்துப் பார்த்தது இல்லை என்பது தான் உண்மை. மனைவியும் அதே போலத் தனது ஆசாபாசங்களை அடக்கி கணவனின் குறிக்கோளுக்குக் கை கொடுக்க, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து விட்டார்கள். மனைவி இல்லாமல் கணவன், அதுவும் வயதான காலத்தில் இருப்பது என்பது பெரும் வேதனைக்குரிய விஷயம். பதினைந்து நீண்ட வருடங்கள் அவளின்றி வாழ்ந்து விட்டவருக்கு இப்போதெல்லாம் அடிக்கடி பழைய ஞாபகங்கள் வருகின்றன. இது எதை நோக்கிப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



"ஹலோ மேடம்! என்ன ஆழ்ந்த தியானத்தில் இருந்த மாதிரி இருக்கு. ஒரு வேளை நல்லாத் தூங்கிட்டியோ? இன்னைக்கு ஸ்விகி தானா?"



"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஏதோ பழைய ஞாபகங்கள். மனசே சரியில்லை. அப்பா வேற ஃபோன் பண்ணி வருத்தப் படறார். என்ன சொல்றதுன்னு தான் தெரியலை"



"எதைப் பத்தி?"



"எல்லாம் எங்க அம்மா பத்தி தான். இருக்கும் போது அருமை தெரியலை. இப்போ புலம்பி என்ன பிரயோசனம். அப்பாவும் என்னை மாதிரியே இருக்கார்"



"அதுவும் கரெக்ட் தான் வசு! எனக்கு கூட அப்பப்போ அம்மாவும் அப்பாவும் கனவுல வந்து ஏதோ சொல்ற மாதிரியே இருக்கு." ஆம், விஷ்ணுவின் தாயும் தந்தையும் கூட இவ்வுலகில் இல்லை.



கொஞ்சம் கொஞ்சமாக மகளையும் மருமகளையும் புரிந்து கொண்டார் விஷ்ணுவின் அம்மா. வயது ஏற ஏற அவருக்கும் தள்ளாமை வந்தது. அப்பொழுதும் தாய் வீட்டின் சொகுசை அனுபவிக்க மட்டுமே வந்தாள் அவரது மகள். துரும்பைக் கூட அசைக்காது இருப்பவளை எதுவும் பேசிவிட முடியாது. "நீ தானே எனக்கு அம்மா. உன் வாய் தானே, நான் உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த வீட்டுல நான் வேலை பார்க்க வேண்டாம்னு சொன்னது, இப்போ என்ன ஆச்சு?"



"ஏண்டி எனக்கு வயசாகலையா, சமையல் செய்யறது மட்டும்னா கூட பரவாயில்லை. உன் பிள்ளைகளையும் நானே தான் பார்க்கணும்னா என்ன அர்த்தம்" செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் எல்லா பெண்களும் இப்படி ஆவதில்லை.



"என்னால வேலை செய்ய முடியாது. அப்படி செஞ்சு தான் ஆகணும்ன்னு சொன்னா நான் இங்கே வருவேன்னு எதிர்பார்க்காதே" இரக்கமே இல்லையா இவளுக்கு. பொதுவாக அம்மாக்கள், மகள் வேலை செய்யவில்லை என்று புலம்புவார்களே தவிர அதே மகள் ஏதாவது செய்கிறேன் என்று வந்தால், "இதெல்லாம் ஒரு வேலையாடா, நீ போய் உட்காரு. இதோ வந்துடறேன்" என்ற பதில் வரும்.



இங்கே அந்த விசாரிப்புக்குக் கூட பஞ்சம். மகளை வரவேண்டாம் என்று எப்படி சொல்லிவிட முடியும், அதனால் கணவன் மனைவி இருவருமே வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்தனர். மகள் அதனை ஆனந்தமாக வேடிக்கை பார்த்தாள்.



"ஏதாவது செய்யட்டுமான்னு கூடக் கேட்க மாட்டேங்கிறா. எனக்கு உடம்புக்கு முடியவே இல்லை வசுதா" மருமகளிடம் புலம்ப ஆரம்பித்தார் அவர். இந்த வகையில் மாமியார் மருமகள் உறவு சற்று சீரான பாதையில் செல்ல ஆரம்பித்தது. அதே புலம்பல் நீடித்து இருந்தால், மறுபடியும் கூட்டுக் குடும்பமாக இருக்கலாம் என்று தீர்ப்பளித்து இருப்பாள் அவரது மருமகள். ஆனால் அவரது நிலைமை கடைசி வரை மதில் மேல் பூனையாகவே இருந்தது.



"பட்டுத் தான் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. நான் செஞ்சது எதையும் மனசுல வச்சுக்காத" வசுதாவிடம் மறைமுகமாக மன்னிப்பு கேட்டது அவர்களது உறவில் ஹைலைட்டான விஷயம். ஆனால் அதன் பிறகு ஒரு வாரத்தில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. மேலிருந்து அழைப்பு வரும் போது என்ன செய்தும் தடுக்க இயலாது போலும். சில வருடங்களுக்குப் பிறகு விஷ்ணுவின் தந்தையைப் போராடி மீட்க நினைத்த போதும் முடியாமல் போனது.



ஆராரோ ஆராரிரோ என்பது போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று யார் அறிவார்? எந்த மொழியிலும் எல்லா நாட்டிலும் தாலாட்டு என்பதற்கு ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது. அது என்னவென்றால் யாருக்காக பாடப்படுகிறதோ, அவர்களுக்கு அதன் அர்த்தமும் பாடுபவர்களின் உணர்ச்சிகளும் புரியவே புரியாது.



வளர வளர இந்தத் தாலாட்டைப் பாடியவர்களும் பாடல் கேட்டவர்களும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் தொடங்குவார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் கருத்துவேறுபாடுகள் கூடிக்கொண்டே செல்லும். குழந்தையாக இருந்த ஆணோ பெண்ணோ தாலாட்டுப் பாடும் வயது வந்து, தன் பிள்ளைக்குத் தாலாட்டு பாடும் போது முதல்முறையாக தனக்கு தாலாட்டு பாடிய அன்னையும் தந்தையும் என நினைத்து பாடினார்கள் என்று யோசிக்கத் தொடங்குவார்கள். சில நேரங்களில் அது மிகவும் காலதாமதமாக யோசனையாக இருக்கும்.



"நான் தான் இரண்டு பேரையும் சரியாவே கவனிக்கலை. எங்க அப்பா மட்டும் இல்லேன்னா பிறந்த உடனே இல்லாமல் போயிருக்க வேண்டியவன் நானு. பிழைக்கவே முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டதுக்கு அப்புறமும் கூட என்னைக் காப்பாற்ற எவ்வளவு போராடி இருக்காரு. பதினெட்டு வயசுல ஸ்டைலா பைக் ஓட்டி காலை உடைச்சிட்டு வந்தப்போ மூணு மாசம் படுக்கையிலே கிடந்தேன். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் எவ்வளவு செஞ்சாரு. என் வேலைக்கு கூட நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கார். என்ன ஒண்ணு, அவருக்குப் பொண்ணு மேல இருந்த கண்மூடித்தனமான பாசம் எனக்குத் தேவையான நேரத்தில அப்பாவோட கைடன்ஸ் கிடைக்காம, என் கிட்ட இருந்து அவரை ரொம்பவே தள்ளி வச்சிடுச்சு. ஐ மிஸ் மை டாடி!"



"அம்மா டின்னர் ரெடியா? பசிக்குது" என்று வந்த ஆதித்யா தந்தையின் உருக்கமான பேச்சைக் கேட்டு ஜெர்க் ஆனான்.



"ஓகே ஓகே… ஓவர் சென்டிமென்ட் சீனா போயிட்டு இருக்கு. உங்களுக்கு இந்த சீன் செட் ஆகலப்பா. சீன மாத்துங்க பார்ப்போம்"



"இப்போ இப்படி தான் டா பேசுவ. இல்லாத போது தான் அருமை புரியும்"



"என்ன டா, என்ன பிரச்சினை இங்கே?"



"வா டா! வா! வா! உன்னைத் தான் எதிர் பார்த்து இருந்தேன். செமஸ்டர் ரிசல்ட் வந்திருக்கே, அதைப் பத்தி பேசணும் இப்படி உட்காரு" நாட்டாமை வேலை பார்க்க வந்த அர்ஜூன் திருதிருவென விழிக்க,



"நல்ல வேளை, மீ எஸ்கேப்பு" என்று ஆதித்யா ஓடினான்.



"புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க டா டேய். இருக்கும் போது நக்கல் நையாண்டி எல்லாம் பண்ணிட்டு, இல்லாதபோது பேச ஆளில்லையேன்னு ஃபீல் பண்ணக் கூடாது. நான் பாரு, யார் யார் கிட்டயோ பேச்சு வாங்கறேன், பேரண்ட்ஸ் கிட்ட ஈகோ பாத்து மோத்தமா வாரிக் கொடுத்தாச்சு" அனுபவம் பேச வைத்தது.



"அப்பா! நாங்க உங்க கிட்ட தான் பா இப்படி ஃப்ரீயா இருக்க முடியும். வேற யார் கிட்டயும் இப்படிப் பேசிட முடியாது. அதுக்காக நாங்க உங்களுக்கு மரியாதை கொடுக்கலை, அவாய்ட் பண்றோம்னு அர்த்தம் கிடையாது. அம்மா அப்பா கிட்ட எங்களுக்கு இருக்கிற ரைட்ஸ் இது. எங்க ஜெனரேஷன் இப்படி தான் பா!"



"அதானே! உங்கள கலாய்க்க, நாங்க தான் காப்பி ரைட்ஸ் வச்சிருக்கோம். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை" என்று அண்ணனுக்குத் தப்பாமல் தாளம் போட்டான் ஆதித்யா.



"நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே"



டிவியில் ஜெயம் ரவி நதியாவைப் பார்த்துப் பாடிக் கொண்டிருக்க, பல வருடங்களுக்குப் பிறகு தனது அபிமான நாயகியைக் கண்டுவிட்ட வசுதா அன்று போல் இன்றும் அவரால் ஈர்க்கப்பட்டு கண்ணிமைக்காமல் பார்த்திருக்க, அர்ஜூனும் ஆதித்யாவும் கோரஸ் பாடினார்கள்.





"April, May வெயிலும் நீயே

June, July தென்றலும் நீயே

I like you

September வான் மழை நீயே

October வாடையும் நீயே

I thank you

உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க

என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க"

---
 
Last edited:

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.