என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -11
இரு காதுகள் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அறியாமல் விகாஸும் ஷாமும் சரளமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“கால் வலி எப்படி இருக்கு விகாஸ்? சர்ஜரி பண்ணி மூணு மாசம் ஆச்சு, நடந்தால் தான் இம்ப்ரூவ்மென்ட் இருக்கான்னு தெரியும். நீ என்னடான்னா ஐசியூ பெட்ல படுத்திட்டு அடம் பிடிக்கிற”
“நான் தான் உள்ளேயே நடக்கறேனே ஷாம். கால் பெர்ஃபக்டா இருக்கு, நோ ப்ராப்ளம் அட் ஆல்.”
“அதானே, கால்ல பட்ட அடிய தலைல பட்ட அடியா போலீஸ் ரெகார்ட்ஸையே மாத்தினவன் ஆச்சே நீ. கண்ணைக் கூட இமைக்காமல் கோமா பேஷண்ட் மாதிரி நடிக்கறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா, அதையே அசால்ட்டா செய்யற. உன் நேரம் டிஜிபி வேற உனக்கு கூட்டாளியா இருக்கார். எதுக்கும் கவனமாக இரு.
சீக்கிரம் உன் மனைவி கிட்ட மட்டுமாவது உண்மையைச் சொல்லிடு” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினான் ஷாம்.
“ம்ம்.. சொல்லுவோம்.. சொல்லுவோம் அவ எந்த நேரத்திலும் உள்ளே வரலாம், வந்தால் அரை மணி நேரமாவது இருப்பா. அதுக்கு முன்னாடி நான் சாப்பிடணும், எனக்கு ரொம்பவே பசிக்குது. இன்னும் சாப்பாடு வரலையே. இன்னைக்கு எனக்கு பிடிச்ச ஐடம்ஸ் வேணும்னு கேட்டிருந்தேன்”
வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த அவன் மனைவி நெஞ்சில் கை வைத்து தன்னை நிலைப் படுத்திக் கொள்ள முயற்சி செய்தாள்.
ஷாமுக்கே நண்பனின் பேச்சில் மிகவும் கோபம் வந்தது. அமைதியாக அமர்ந்து கொண்டான். அவனது இந்தப் பேச்சு, அவனது உயிருக்கே உலை வைக்கப் போவது தெரியாமல் விகாஸ் அவனை சமாதானம் செய்ய முயன்றான்.
“என்னடா நீ இந்த ரூமுக்குள்ள உன்னைத் தவிர வேறெந்த டாக்டரும் வராத வரைக்கும் நாம சேஃப் தான். அப்புறம் என்ன பயம். என் காரியம் முடியற வரைக்கும் வேஷம் போட்டுத்தான் ஆகணும், எனக்கு வேற வழியில்லை. உனக்கும் வேற வழியில்லை. இன்னும் கொஞ்ச நாள் தான் மேன்.. கோ-ஆபரேட் வித் மீ.”
“ம்ச்… போடா.. ஏதோ சின்ன வயசுல பக்கத்து வீட்டில ஒன்னா வளர்ந்த ஃப்ரண்ட்னு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். ரொம்ப வீம்பு பண்ணாத, அப்புறம் நானே எதையாவது செய்து கோமால இருந்து ரெகவர் ஆகவே இல்லை, ப்ரைன் டெட்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்” என்று பல்லைக் கடித்தான். அவன் சொன்ன நேரம், ததாஸ்து என்று தேவதைகள் வாழ்த்து சொல்லிவிட்டார்கள்.
“ஷாம்…” என்ற விகாஸின் வார்த்தைகளில் ஒரு நடுக்கம். இதுவரை இல்லாத அளவுக்கு பயம் வந்தது.
“எனக்கு வசதியா நீ தான் ரெகார்ட்ஸ் எல்லாம் முன்னாடியே பக்காவா ரெடி பண்ணி வச்சிருக்கியே. எல்லாரும் ஈஸியா நம்பிடுவாங்க. உன் குடும்பம்… இத்தனை நாள் உன்னை நம்பினதுக்கு அவங்களுக்கு உன் கிட்ட இருந்து ஃப்ரீடம் கிடைக்கட்டும்…” என்று மிகத் தெளிவாகச் சொல்லி விட்டான்.
விகாஸ் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று கேட்க ஆர்வமாக இருந்த அவனது மனைவி கதவைத் திறக்கும் சப்தம் கேட்டு ஒரு ஓரமாக இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள். கைகளில் தட்டுடன் வந்த நர்ஸ் இவளைக் கண்டதும் பின்வாங்கினாள்.
“மே.. மேடம்.. நீங்க என்ன இங்கே உட்கார்ந்து இருக்கீங்க? எப்போ வந்தீங்க?” என்று கேட்பதற்குள் அவளுக்கு வியர்த்தது.
மற்றவளுக்கு எந்த பயமும் இல்லை.
“நான் அவரைப் பார்க்க வேண்டி உள்ளே வந்தேன், உங்களைக் காணோம். அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். வழக்கமான டைம் தானே” என்றாள் படு கேசுவலாக.
கூடவே, “ஆமா…நீங்க ட்யூட்டில இருக்கும் போது எங்கே போயிட்டு வரீங்க? ஐசியூ உள்ள யாருக்கு சாப்பாடு எடுத்துட்டு போறீங்க?” என்று இரண்டு கேள்விகள் கேட்டு வைத்தாள்.
“ஹான்.. ஆமா மேடம்.. ட்யூட்டி டாக்டர் உள்ளே தான் இருக்கார். அவருக்கு தான் சாப்பாடு. நான் போய் நீங்க வரலாமான்னு கேட்டுட்டு வரேன்” என்று ஒரு வழியாக கோர்வையாக பேசிவிட்டு அவசரமாக உள்ளே சென்றாள் நர்ஸ்.
தானும் அவள் பின்னால் சென்றால் உள்ளே இருப்பவர்களின் முகம் எப்படி மாறும் என்று கற்பனை செய்து பார்த்த விகாஸின் மனைவிக்கு சிரிப்பு வந்தது.
கதவைத் திறந்து உள்ளே சென்ற நர்ஸ் விகாஸின் மனைவி காத்திருப்பதை சொல்ல ஷாம் வெளியே வந்தான். அவசரமாக உணவை முடித்துக் கொண்ட விகாஸை கோமா செட்டப்புக்குத் தயார் செய்ய ஆரம்பித்தாள் சாப்பாடு கொண்டு வந்த நர்ஸ்.
வெளியே வந்த ஷாம் முதலில் தன் முன்னே நிற்பவளின் முகத்தை ஆராய்ந்தான். இவள் எப்போது வந்திருப்பாள்? உள்ளே பேசியதைக் கேட்டிருப்பாளா? விகாஸைப் பற்றிய உண்மை தெரிந்தால் அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு அவள் முகத்தில் பதிலைத் தேடினான். அதுவோ எப்போதும் போல சோகத்தை சுமந்திருந்தது.
“அவர் எப்படி இருக்கார் டாக்டர்? ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” வழக்கமாக கேட்கும் கேள்வியைக் கேட்டு வைத்தாள். ஷாம் தான் பதில் சொல்ல முடியாமல் தடுமாறிப் போனான்.
“ஹான்.. கோமா ஸ்டேஜ் தவிர வேறெந்த பிரச்சனையும் இல்லை. தலைல உள்ள ப்ளாக்ஸ் எல்லாம் மெடிஸின்லயே க்யூர் ஆகிட்டு இருக்கு. ஸ்டிராய்ட் வேற கொடுத்திட்டு இருக்கோம். சீக்கிரமே சரியாகிடுவான்” ஒரு வழியாக கோர்வையாகச் சொல்லி முடித்தவனுக்கு அந்த குளிரிலும் வியர்த்தது.
“நானும் அவர் சீக்கிரம் வந்திடுவார்னு தான் நம்பறேன் டாக்டர். நான் அவரைப் பார்க்கலாம் இல்லையா?” உள்ளே அவன் என்ன செய்வான் என்று தெரிந்தும் கேட்டாள்.
“வெயிட் பண்ணுங்க.. சிஸ்டர் ட்ரிப்ஸ் எல்லாம் மாத்திட்டு வருவாங்க. அப்புறம் நீங்க உள்ளே போகலாம்”
“ஓகே.. டாக்டர்.. “ என்று அமைதியாக நின்றாள்.
“மிஸஸ்.விகாஸ், முதல் நாள் சொன்னதைத் தான் நான் இப்பவும் சொல்லுவேன். நீங்க இங்கேயே வெயிட் பண்றதால அவன் டக்குன்னு எழுந்துடப்போறதில்லை. வீட்டுக்கு போங்க, எதுவானாலும் உடனே கிளம்பி வரலாம். அவன் வீட்டுக்கு வரும் போது நீங்க ஹாஸ்பிடல்ல படுத்திடுவீங்க போல. உங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க.” பொறுமையாகவே விளக்கினான்.
கேட்டிருந்தவளுக்கோ சிரிப்பாக வந்தது. அவளாகவே கிளம்பும் எண்ணத்தில் தான் இருந்தால். விகாஸின் உண்மை நிலை தெரிந்த பிறகு அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றதே தவிர மாறவில்லை.
ஆனால் இவர்களே அனுப்பும் போது எனக்கென்ன தலையெழுத்தா? போலியாக ஏமாற்றும் ஒருவனுக்காக என்னை வருத்திக் கொள்ள வேண்டுமா என்ன? ஆனால் அப்போதும் அவள் உடனே ஒத்துக் கொள்ளவில்லை.
“அது.. வந்து.. டாக்டர்?”
“இது டாக்டரா என்னோட அட்வைஸ். அப்புறம் உங்க இஷ்டம்” என்று முடித்து விட்டான் அவன்.
“யோசிக்கிறேன் டாக்டர். எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. தாங்க் யூ ஸோ மச் ஃபார் யுவர் அட்வைஸ் அன்ட் கன்சர்ன்” என்றாள் புன்னகையுடன்.
பதிலுக்கு புன்னகை செய்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான். போகும் முன்பு ஐசியூ உள்ளே சென்று ஏதோ சொல்லிவிட்டுத்தான் சென்றான்.
அமைதியாக ஐசியூ உள்ளே சென்ற விகாஸின் மனைவி கணவனைக் கவனமாக ஆராய்ந்தாள். அவள் தினமும் செய்யும் வேலை தான் என்றாலும் இன்று அவளது கண்களில் நிஜமாகவே ஆராய்ச்சி இருந்தது.
விகாஸுக்கு கண்டுபிடித்து விடுவாளோ என்று எண்ணும் போதே பயத்தில் விக்கல் வரும் போல இருந்தது. அருகில் நின்ற நர்ஸோ மருந்துகளை ஆராய்வது போலத் திரும்பி நின்று தன் பயத்தை மறைத்தாள்.
வழக்கம் போல கணவனின் தலை கோதியவள், காலடியில் வந்து நின்றாள். போர்வைக்குள் மறைந்திருந்த கால்கள் அசைவதை அவளால் உணர முடிந்தது. சட்டென்று கால்களை அழுந்தி பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். வலியில் துடித்தாலும் விகாஸால் எதையும் வெளிக்காட்ட முடியவில்லையே.
அதை நினைக்கையில் அவளுக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் அவன் கண்களின் வழியாக அவனது வலி கண்ணீராக வெளிவந்தது.
“சிஸ்டர்! இவர் கண்ணுல தண்ணி வருதே.. சீக்கிரம் நினைவு வந்திடுமா?” என்று அப்பாவியாகக் கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அந்த நர்ஸ். சற்று நேரம் அங்கேயே நின்றவள் சட்டென்று வெளியே வந்து விட்டாள்.
பின்னோடு வந்த நர்ஸ், “மேடம்! டாக்டர் சொல்றதைத் தான் நானும் சொல்லுவேன். உங்க நம்பர் என் கிட்ட இருக்கு. எதுவானாலும் கூப்பிடுறேன். நீங்க வீட்டுக்கு போங்க. இங்கே நாங்க உங்க ஹஸ்பன்ட நல்லா பார்த்துக்கறோம்” என்றாள்.
“நீங்க சொல்றதும் சரிதான் சிஸ்டர். நேத்தெல்லாம் பீரியட்ஸ் வந்ததுல ரொம்பவே சிரமப் பட்டேன். நான் வீட்டுக்கு கிளம்பறேன். எனக்கு ஃபோன் எதுவும் செய்ய வேண்டாம். நானே வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டுத் திரும்பி நடந்தவளை அதிர்ந்து போய் பார்த்தாள் அந்த நர்ஸ். எதையோ தெரிந்து கொண்டிருக்கிறாள் என்று அவள் முடிவே செய்து விட்டாள்.
சற்று நேரம் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட விகாஸின் மனைவி அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்தவளுக்கு நேரே வீட்டுக்குச் செல்ல மனமில்லை. அருகில் இருந்த பார்க் ஒன்றில் நுழைந்தாள். சனிக்கிழமை காலை என்பதால் விடுமுறையில் இருந்த குழந்தைகள் காலையிலேயே பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் யாரோ ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கண்டதும் ஞாபகம் வந்தவளாய் தனது மொபைலை எடுத்தாள்.
ஒரு குறிப்பிட்ட மெஸேஜை மலர்விழிக்கு அனுப்பி விட்டு அவளை அழைத்தாள். அவளோ யாரிடமிருந்து அழைப்பு என்று பார்த்தவுடன் விகாஸிற்கு என்ன ஆயிற்றோ என்று பதறி, “மேடம்!! என்ன இந்த நேரத்தில? விகாஸ் நல்லா இருக்கார் தானே?” என்றாள் பதட்டமாக. மற்றவளோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னாள்.
“ஹாய் மலர், குட்மார்னிங்! விகாஸ் ரொம்ப நல்லா இருக்கார். நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உங்க அண்ணாவும் கூட இருந்தால் பெட்டரா இருக்கும். எங்கே வரணும்னு சொன்னால் நான் வந்துடுவேன்.”
“ஓ.. நான் அண்ணா கிட்ட கேட்டு சொல்றேன் மேடம். டூ மினிட்ஸ் கொடுங்க” என்று கார்த்திக்கைத் தேடிப் போனாள். வெகு நாட்கள் கழித்து கிடைத்த விடுமுறையை அவன் தூங்கி அனுபவித்துக் கொண்டிருந்தான். மலரே முடிவெடுத்து, “நீங்க ஈஸ்வரோட டிடெக்டிவ் ஆஃபீஸுக்கு வந்துடுங்க மேடம். நாங்களும் அங்கே வந்துடறோம்” என்றாள்.
“ஓகே மலர், நான் இன்னும் டூ அவர்ஸ்ல அங்கே இருப்பேன்.. ஹான்.. மலர் உங்க கிட்ட சொல்ல மறந்துவிட்டேன் பாருங்க. கால் கட் பண்ணதும் மறக்காமல் வாட்ஸ்அப் பாருங்க. சீக்கிரம் நேர்ல மீட் பண்ணலாம்.”
அவசரமாக தனது வாட்ஸ்அப்பை ஓபன் செய்த மலர்விழி அறிந்து கொண்ட விஷயத்தை நம்ப முடியாமல் திகைத்து நின்றாள். ஷாம் மூளைச்சாவு பற்றிப் பேசுவதைக் கேட்ட போது, “ஐயோ…” என்று அலறி விட்டாள்.
“ஏய் ஃப்ளவர்! எருமை! எதுக்குடி என் ரூமுக்குள்ள வந்து ஐயோ அம்மான்னு கத்திட்டு இருக்க. மனுஷனை ஒரு நாளாவது நிம்மதியா தூங்க விடு” என்று எரிச்சலுடன் கத்திய கார்த்திக் மலர்விழியின் ரியாக்ஷனைக் கண்டு எழுந்து அமர்ந்தான்.
“சீக்கிரம் கிளம்பி வா கார்த்திக், நாம வெளியே போகணும். அப்படியே உன் ஃப்ரண்டுக்கு ஃபோன் பண்ணி உடனே அவன் ஆஃபீஸுக்கு வரச் சொல்லிடு” அண்ணனுக்கு ஆர்டர் போட்டு அவளும் தயாராகச் சென்றாள் மலர்.
என்னவென்று தெரியாத குழப்பத்துடனே ஈஸ்வரும் கார்த்திக்கும் டிடெக்டிவ் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். “என்ன விஷயம் ஃப்ளவர்? எதுக்கு இப்படி காலங்காத்தால எங்களை இப்படி உட்கார வச்சிருக்க?”
“வெயிட் பண்ணுங்க சார்” என்று அங்கே இருந்த ப்ரோஜக்டரில் தனக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த வீடியோவை ப்ளே செய்தாள்.
“ஹேய் என்ன ஏதாவது சினிமாவா?” என்று கத்திய கார்த்திக் திரையில் தோன்றிய நபர்களைப் பார்த்ததும் மலரை விடுத்துத் திரையில் பார்வையைச் செலுத்தினான்.
“ஈஸ்வர்!! என்னடா இது? நாம நினைச்சதை விட இவன் பயங்கர ஃப்ராடா இருக்கான். மலர் உனக்கு இது எப்படி கிடைச்சது? நீ அங்கே போனியா?” என்றான் தங்கையை அறிந்தவனாக. எங்கேயாவது சென்று வம்பை விலைக்கு வாங்கிவிடுவாளோ என்று பயமும் கூட.
“நான் இல்லை. இதை எனக்கு அனுப்பின ஆளு இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்கே வருவாங்க. நீங்க அவங்க கிட்ட தான் பேசணும்” என்று மொட்டையாக சொன்னவள் வாசலுக்கு சென்று திருமதி.விகாஸை அழைத்துக் கொண்டு வந்தாள்.
“மேடம்.. நீங்களா?.. மிஸஸ்.விகாஸ்? ரைட்?” என்று ஈஸ்வர் கார்த்திக் இருவரும் ஒன்றாக அதிர்ச்சி அடைய அவள் நானே என்பதாய் தலையாட்டி ஆமோதித்தாள்.
“ப்ளீஸ் உட்காருங்க!” என்று தண்ணீர் எடுத்துக் கொடுத்த மலர் அவள் அருகில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. “எங்க கிட்ட என்ன பேசணும் மேடம். இந்த வீடியோவை நீங்களே எடுத்தது யாருக்காவது தெரிஞ்சா எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா? உங்க ஹஸ்பன்ட் கிட்ட நீங்க நேரடியாக கேட்டிருக்கலாமே” என்று ஈஸ்வர் பேச்சை ஆரம்பித்து வைத்தான்.
“ஹூம்… மிஸ்டர்.ஈஸ்வர், நீங்க எதை நினைத்து இப்படி கேட்டீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனால் நாற்பது வயசாகுது எனக்கு. மூணு மாசத்துக்கும் மேலா முதுகு வலிக்க சேர்லயே ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் உட்கார்ந்து, என் உடல் வேதனை யெல்லாம் மறந்து அவர் எப்படியும் முழச்சிடுவார்னு காத்திருந்த எனக்கு இது தப்பா தெரியலை. கல்யாணம் ஆகி இருபது வருஷத்துக்கு மேல ஆகுது, லவ் மேரேஜ் வேற. ஆனால் அவருக்குள்ள ஒரு பணப்பிசாசு இருந்ததை தெரிஞ்சுக்காம இருந்திருக்கேனே. இதோ இன்னைக்கு கூட பீரியட்ஸ் வந்து… மெனோபாஸ்ல எப்படி இருக்கும்னு அனுபவிச்சால் தான் தெரியும்… “ சொல்லும் போதே அவள் குரல் உடைந்தது.
பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்து விட்டு தொடர்ந்தாள். “இப்படி ஒரு ஏமாளியாக நான் இருந்ததை அவர் என்ஜாய் பண்ணிட்டு இருக்கார். அன்னைக்கு மலர் கேட்ட மாதிரி கேள்வி கேட்க எனக்குத் தோணலை. நான் என்ன செய்ய? .. ஒரு வேளை உங்களுக்கெல்லாம் சந்தேகம் வந்து தான் அங்கே வந்தீங்களா?” என்று கடைசியில் பாயிண்ட்டைப் பிடித்தாள்.
மற்ற மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். “என்ன மலர்? ஏதாவது பதில் சொல்லணும் தானே”
“எங்களுக்கு விகாஸ் மேல இந்த வீடியோ பார்க்கிற வரைக்கும் சந்தேகம் இல்லை மேடம். நாங்க டீல் பண்ற கேஸ் விகாஸோட கனெக்ட் ஆகுது. அதை விசாரிக்கத் தான் அன்னைக்கு வந்தோம். வேற எதுவும் இல்லை.” ஈஸ்வருக்கு அதற்கு மேல் எதையும் சொல்ல விருப்பமில்லை.
“எனக்கு எதுவும் தெரியவேண்டாம் சார். மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்த நான் இப்போ இல்லை. விகாஸைத் தாண்டி எனக்கு என் மகளும் பேரன்ட்ஸும் இருக்காங்க. நான் தான் அவங்களைப் பார்க்கணும். விகாஸை அவர் தான் பார்த்துக்கணும். என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்க்க நான் தயாராகிட்டேன். நான் வரேன்” என்று கிளம்பி விட்டாள்.
“ஊஃப்… டேய் என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்புதுன்னு சொல்லுவாங்களே. அதுதான் இதுவா?” என்று தலையில் கை வைத்துக் கொண்டான் கார்த்திக்.
“இது வரைக்கும் இது ஒரு நெட்வொர்க்கா இருக்கும்னு நாமளா யூகிச்சு வேலை பார்த்துட்டு இருந்தோம். இப்போ அது கன்ஃபர்ம் ஆகி இருக்கு. மொத்தமா அஞ்சு பேர். ABC and xyz கம்பெனிஸ்ல ஏதோ ஒரு வகையில் கனெக்ட் ஆகி இருக்காங்க. விகாஸே சொல்லி இருக்கிறார் பாருங்க, அதுல அவங்களுக்கு மெயின் குறிக்கோள் பணம் தான். கம்பெனில நிறைய இல்லீகல் வேலை பார்த்து பணம் பண்ணி இருக்காங்க. அந்த கேம்ல சில எக்ஸ்சேஞ்ச் நடந்திருக்கு,
இப்போ அவங்களுக்கு இடையே வேற எவனோ வந்து இவங்களை பாஸ் ஓவர் பண்றான். அதைத் தான் இவங்களால தாங்க முடியலை. அதுல நடந்தது தான் கமல் சக்சேனா டெத். இப்போ நமக்கு தெரிய வேண்டியது எல்லாம் அந்த பாஸ் எந்த கம்பெனில இருக்கான் ABCயா xyzஆ, இரண்டும் இல்லாமல் மூணாவது மனுஷனா? அந்த பாஸோட நெக்ஸ்ட் மூவ் என்னவா இருக்கும்? இதெல்லாம் தான்”
ஈஸ்வர் முடிக்கும் முன்பே மலர்விழி தன் திருவாயைத் திறந்தாள். “என்ன பெரிய நெக்ஸ்ட் மூவ், அதான் அந்த டாக்டரே ஐடியா கொடுத்திருக்கானே ப்ரைன் டெட்னு, அப்படியே பண்ணுவானா இருக்கும்.”
“ஏய்.. நீ பாட்டுக்கு எதையாவது உளறாதே மலர், உன் திருவாயைக் கொஞ்சம் மூடு.”
“நான் ஒன்னும் உளறலை, நீ வேணா பாரு.. சீக்கிரமே நியூஸ் வரும். அங்கே யாரோ விகாஸோட மூவ்மென்ட்ஸ க்ளோஸா வாட்ச் பண்றாங்க. மே பி அந்த பாஸா கூட இருக்கலாம்” அசால்ட்டாக தோளைக் குலுக்கினாள் மலர்விழி.
“எனக்கென்னவோ அந்த பாஸ் நம்ம வீட்டு மாப்பிள்ளை ஆகப் போறவன் தான்னு மூளையின் ஒரு ஓரமா அலாரம் அடிச்சிட்டே இருக்கு” மலர்விழிக்குக் கேட்டுவிடாத வண்ணம் ஈஸ்வரின் காதுக்குள் புலம்பினான் கார்த்திக்.
ஈஸ்வரோ அடுத்தது என்ன என்று தீவிரமாக ஆராயத் தொடங்கினான். விகாஸை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவன் நினைக்க, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போதே மலர்விழி சொன்னது நடந்து விட்டிருந்தது.
விடியும் போதே விகாஸ் மூளைச்சாவு அடைந்து விட்டான் என்று அவனது மனைவியின் மெசேஜ் வந்து சேர்ந்தது.