• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 12

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
457
19
43
india

அத்தியாயம் - 12

அன்று கதிரைச் சந்திக்கப் போகிறோம் என்கிற எண்ணமே எழில்மலருக்கு இனித்தது. எப்பொழுதும் எழுவதை விட நேரத்திலேயே எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தவளைப் பார்த்த சுகந்தன், விரல்கள் கேமராவைப் போல் மடித்து வைத்து,



“உன்னைப் பார்த்தா வேலைக்குப் போகிற மாதிரியே இல்லை? என்னமோ ‘பேஷன் ஷோ’க்கு போற மாதிரியே இருக்கு” என்றான்.



திக்கென்று இருந்தது எழில்மலருக்கு. அப்படியா வெட்ட வெளிச்சமாக அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றினாலும், “முக்கியமான கிளையண்ட்ஸ் வருவாங்க. அவங்க முன்னாடி உன்னை மாதிரி குளிக்காமல் போய் நிற்க முடியுமா?” எனச் சமாளித்தாள்.



“ஆனாலும், இன்னைக்குப் பெயின்ட் கொஞ்சம் ஓவர் தான்” என அப்பொழுதும் விடாமல் சுகந்தன் வம்புக்கு இழுக்க,



“ஒழுங்கா காலேஜ் போய் ஆராய்ச்சி பண்ணற வழியைப் பாரு. நான் எத்தனைத் திக்கா ‘கோட்’ அடிச்சிருக்கேன்னு கண்டுபிடிச்சா எல்லாம் டாக்டரேட் பட்டம் தர மாட்டாங்க.” என்றாள் எழில்மலர்.



“கூடிய சீக்கிரம் உன் திருட்டுத்தனத்தைக் கண்டுப்பிடிக்கிறேன். ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” எனப் பாடியவாறே சுகந்தன் குளிக்கச் செல்ல, எழில்மலர் கிளம்பினாள்.



பாலசரவணனின் பிரச்சனைக்குக் காரணமான அந்த வீட்டுப் பத்திரத்தின் நகலைத் தனக்கு வேண்டிய ஆட்களை வைத்துத் தேடிப்பிடித்துவிட்டாள் எழில்மலர். அதைப் பற்றிப் பேசுவதற்கு நண்பர்களை வரச் சொல்லியிருந்தாள்.



அலுவலகம் சென்று தன் வண்டியை எழில்மலர் நிறுத்தும்போதே அங்கே தன் அக்மார்க் குழிப் புன்னகையுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான் கதிர்.



“வாங்க.. உள்ளே போய்ப் பேசலாம்” என எழிலமலர் சொல்ல, “வரவேண்டிய பாலசரவணன் இன்னும் வரலை. அவனுக்குக் கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை” என்றான் கதிர்.



“டேய். பாவி. நீ தானே அவசரம் என பேங்க்குக்குப் போகிற வேலையைக் கொடுத்து அனுப்பின” என மறுமுனையில் இருந்த பாலசரவணன் அலற,



“என்ன சார் நீங்க? அவரைச் சீக்கிரம் வரச் சொல்லுங்க. எனக்கு நேரந்தவறாமை மிகவும் முக்கியம்” என்றாள் எழில்மலர்.



“கேட்டியாடா. சீக்கிரம் வந்து சேரு. உன்னை மாதிரி எல்லோரும் இங்கே வெட்டியா இல்ல” எனக் கைப்பேசியில் சொல்லி, அழைப்பை வைத்தான் கதிர்.



“மலர், பாலசரவணன் வரக் கொஞ்ச நேரமாகும்.. அதுக்கு முன்னாடி உங்ககிட்டே முக்கியமான விஷயம் சொல்லணும். எனக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய லட்சியம் இருக்கு” என நிறுத்தினான்.



“என்ன லட்சியம்? காக்காவுக்கு பாத்ரூம் கட்டறதா?” எனக் கதிர் முன்பு சொன்னதை வைத்து அவள் கிண்டாலாகக் கேட்க,



“ப்ச். அதெல்லாம் ஒரு லட்சியமா? ஜூஜூபி மேட்டர். அதற்கு நாலு கட்டம் போட்டு, பைப் வச்சா கட்டிடலாம். முக்கியமான விஷயம் என சொன்னேனா இல்லையா? இது வேற.. நான் ஒரு பெண்ணைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணும் என பெரிய லட்சியமே வச்சிருக்கேன்” என்றான்.



அவன் சொன்னதைக் கேட்டு அவனைச் சுவாராசியமாகப் பார்க்க, “சேலையை மாத்தலாம், வேலையை மாத்தலாம், சாலையை மாத்தலாம், இவ்வளவு ஏன், வாழையைக் கூட மாத்தலாம் ஆனால் போட்ட மாலையை மாத்த முடியுமா? அதான் நிறுத்தி, நிதானமாக் காதலிச்சுட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம் என இருக்கிறேன்” என்றான்.



தன்னைப் போலவே யோசிக்கும் ஒருவனைப் பார்த்ததில் எழில்மலருக்கு உள்ளுக்குள் சந்தோசம் பொங்கி வழிந்தது. கூடுதலாக அவன் பேசிய விதத்தில் சிரிப்புக் கொப்பளித்துக் கொண்டு வர, பக்கென்று சிரித்துவிட்டாள்.



“ரொம்பவும் உயர்ந்த லட்சியம் தான். ஆமா, லவ் பண்ணும்போது அந்தப் பொண்ணோட குணம் பிடிக்கலைன்னா என்னப் பண்ணுவீங்க? விட்டுடுவீங்களா?” என்றாள்.



“அது எப்படிங்க விடமுடியும்? அதான் லவ் பண்ணறதுக்கு முன்னாடியே மனசுல நல்லா அலசி, பிழிஞ்சி காயப்போட்டிடுவோமே. பிடித்த, பிடிக்காத விஷயங்களைக் காதலனா இருக்கும் போது மாத்திக்கிறது ரொம்பச் சுலபம். அப்படியும் இல்லையா,” என சுற்றும் முற்றும் பார்த்தவன்,



“டக்குன்னு கால்ல விழுந்திடமாட்டேன். அதெல்லாம் நமக்குக் கை வந்த கலையாக்கும்” என்றான் இரகசியக் குரலில்.



இதை ஏன் தன்னிடம் சொல்கிறான் என்று முதலில் அவளுக்கு உறைக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒருவேளை ‘நான் ஓர் பெண்ணைக் காதலிக்கிறேன்.’ எனச் சொல்லிவிடுவானோ எனத் தோன்றியதும் அவள் நெஞ்சு அடைத்துக் கொண்டது.



அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என முயன்று மனதைச் சமன் செய்தவள், புன்னகைக்க முயன்றாள். அதே சமயத்தில் அங்கே பாலசரவணன் வர, “வாங்க உள்ளே போய்ப் பேசலாம்” என பேச்சை மாற்றிவிட்டாள் எழில்மலர்.

“ஏண்டா, என்னைப் பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா?” எனக் கதிரின் காதில் பாலசரவணன் முணுமுணுக்க, “ச்சே. என் தோழன்டா நீ” என்றான் கதிர்.

“அதைத் தான் நானும் சொன்னேன். உன் அகராதியில் தோழனுக்கு, கேனையன் எனப் போட்டிருக்கும்” என முறைத்தவாறே உள்ளே சென்றான்.

ஆனால் பாலசரவணனின் முறைப்பெல்லாம் எழில்மலர் சொன்ன விஷயத்தில் பனியாய் உருகிப் போனது. பத்திரப்பதிவு செய்த போது அந்த கீர்த்திகாவின் வீட்டின் எண்ணும் மூலப்பத்திரத்தில் இருந்த எண்ணும் வேறு, வேறாகப் பதிந்திருக்கிறது. அதை மாற்றச் செலவு செய்ய வேண்டும்.

ஆனால் அதிலும் ஓர் சிக்கல் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் அந்த வீட்டின் மேல் கடன் வாங்கி அதைக் கட்டாமல் விட்டிருக்கிறார்கள். எண் மாறியதால் அதை எளிதாகக் கண்டுபிடிக்கமுடியவில்லை எனச் சொல்லவும், பாலசரவணனுக்குத் தலைகால் புரியவில்லை.

அதைக் கேட்ட மகிழ்ச்சியில், “தேங்யு. வெரி மச்.. என் வயிற்றில் பாலை வார்த்துட்டீங்க.” என எழில்மலரின் கையைப் பற்றிக் குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி, கதிரின் வயிற்றில் புளியைக் கரையோ கரை என்று கரைத்தான்.

“அப்பாகிட்டேப் போய் ஜாடைமாடையா சொல்லிப் பார்த்து ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்” என விசிலடித்தவாறே கிளம்பினான் பாலசரவணன்.

ஆனால் மறுநாளே கதிரை அழைத்த பாலசரவணன், “டேய். பிரச்சனை ஓவர். கீர்த்திகா வீட்டைக் காலி செய்யப் போறா” என்றான்.

“இவ்வளவு சீக்கிரமாகவா??” எனக் கதிர் ஆச்சர்யப்பட, “ஆமாம்டா” என்றவன் நடந்ததைச் சொன்னான்.

அதாவது வீட்டுப் பத்திரத்தில் இருக்கும் பிரச்சனையைப் பற்றி தன் தந்தையிடம் சொல்லலாம் என்று சென்றால் அதற்குள் அவ்விஷயம் கீர்த்திகாவின் கணவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

அதனால் பாலசரவணனின் தந்தையிடம், “சார் உங்க பையன்கிட்டே சொல்லி அந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்யுங்க. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை சார். எப்படியாவது இந்த வீட்டை விக்கணும். குறைஞ்ச விலையா இருந்தாலும் பரவாயில்லை” என்றார்.

அதைக் கேட்டதும் பாலசரவணனுக்கு பூமிக்கும், வானத்துக்கும் குதிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும் நல்லபிள்ளையாக அவருக்கு உதவுவதாக வாக்களித்தான்.

நண்பன் சொன்னதைக் கேட்ட கதிர், “எப்படியோ உன் கவலை தீர்ந்தது. இதற்காக நம்ம அலைஞ்சது வீணாப் போச்சு” என்றான்.

“உன் மனசைத் தொட்டுச் சொல்லு” என பாலசரவணன் சொல்ல, “ஹி. ஹி. அதையெல்லாம் நீ கண்டுக்கக்கூடாது” என்றான் கதிர்.

“இன்னும் மேட்டர் முடியலை. புதுசா வாங்கின வீட்ல பிரச்சனை இருக்குன்னு எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சதுன்னு நீ யோசிக்கலையா?” என்றான் பாலசரவணன்.

“அதானே” எனக் கதிர் சொல்ல, “நான் கீர்த்திகாவை அந்த வீட்டை விட்டுத் துரத்த நினைச்ச மாதிரியே அவளும் அங்கிருந்து கிளம்ப நினைச்சிருக்கா. அதான் ஏதாவது நூல் கிடைக்காதா என தேடித் பிடிச்சிருக்கா” என்றான் பாலசரவணன்.

“ச்சே. இருந்தாலும் அவ ரொம்பப் பாவமில்லை” என கதிர் கீர்த்திகாவுக்காக பரிதாபம் கொள்ள, “ஒரு வெங்காயமும் இல்லை. அவ தன் ப்ரெண்டோட மொட்டைமாடில நின்னு பேசினதைக் கேட்டேன்” என்றவன் கேட்டதைச் சொன்னான்.

கீர்த்திகா தன் தோழியிடம், “என் கணவருக்கு இங்கிலீஷ் என்ன, தமிழ் கூட அவ்வளவு சரியா எழுத வராது. அதுவும் இவர் காலேஜ்ல வச்ச அரியர் வேற. மொழிப்புலமைக்கும் புத்சாலித்தனத்துக்கும் சம்மந்தமில்லைன்னு இப்போப் புரியுது. சரவணனுக்கு இதெல்லாம் தெரிஞ்சா ‘இதுக்குத் தானா என்னை வேண்டாம்’ எனச் சொன்னேன்னு கிண்டலாப் பார்ப்பான்” என்றாள்.

அதைக் கேட்டதும் பாலசரவணன் அவள் முன்னால் சென்று எனக்குத் தெரிந்துவிட்டதே எனப் போய் நின்றிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. ஓசைஎழுப்பாமல் அங்கிருந்து நழுவிவிட்டான்.

அதைக் கேட்ட கதிர், “எப்படியோ கீழே விழுந்தும் உன் மீசையில் மண் ஒட்டலை” எனப் பரிகாசம் செய்து அழைப்பை வைத்தான்.

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால் இரட்டிப்பாகும். அதனால் அதைக் கொண்டாடியே தீரவேண்டும் எனக் கதிரையும், எழில்மலரையும் அழைத்து நன்றி சொன்னதோடு நில்லாமல், “உங்களுக்கு ட்ரீட் கொடுக்கணும் வாங்க” என அழைத்துச் சென்றான் பாலசரவணன்.

கதிர் வருவான் என்ற எண்ணத்தில் எழில்மலர் உற்சாகமாகக் கிளம்பினாள். இவள் சென்றபொழுது பாலசரவணன் மட்டும் அங்கே இருந்தான். கதிர் இன்னும் வந்திருக்கவில்லை. அதனால் எழில்மலருக்குச் சப்பென்றானது.

அவர்களுக்கு வேண்டிய உணவினை வரவழைத்து வெகுநேரமாகியும் கதிர் வந்திருக்கவில்லை. அதனால் எழில்மலர் கைக்கடிகாரத்தை அவ்வப்பொழுதுத் திருப்பி, திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அவன் இப்படித் தான்.. சொன்னா சொன்ன டைமுக்கு வரமாட்டான்” என அன்று கதிர் செய்ததற்கு பாலசரவணன் பழி வாங்க நினைக்க, “இட்ஸ்.. ஒ.கே. எனக்கு ஒண்ணும் அவரசமில்லை. அவருக்கு என்ன வேலையோ” என்றாள் எழில்மலர்.

‘ஆஹ். இந்த ட்விஸ்டை நான் எதிர்பார்க்கலையே.’ எனப் பாலசரவணன் உள்ளுக்குள் பேசிக் கொண்டிருக்க, “பீஹிஹி. பீஹிஹி.” எனச் சிரிப்பு சத்தம் கேட்டது. வேறு யார்? கதிர் தான் சிரித்தவாறே நண்பன் அருகில் அமர்ந்தான்.



‘இருடா மகனே. உனக்கு ஆப்பை ரெடி பண்ணறேன்.’ என உடனே சுதாரித்து, “நீங்க ரொம்ப ஸ்மார்ட்ங்க. என் வாழ்க்கையில் விளக்கேத்தி வச்சுட்டீங்க. எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு” என பாலசரவணன் எழில்மலரிடம் சொல்ல,

‘என்னடா இது வம்பாகிவிட்டது?’ என எழில்மலர் திகைத்தாள். இருந்தும் திகைப்பை வெளிக்கட்டாமல், “என் வேலையைத் தான் செஞ்சேன்” என்றாள் புன்சிரிப்புடன்.

கதிரின் கடுப்பைக் கிளப்புவதற்காகவே பாலசரவணன் அப்படி நடந்து கொண்டான். மற்றபடி அவன் மனதில் வேறெந்த எண்ணமுமில்லை.

‘டேய், நீ ஹீரோன்னா எல்லோர் முன்னாடியும் சும்மா சிக்ஸர் அடிச்சுட்டே இருப்பியா? நாங்களும் அடிப்போமில்லை.’ என வில்லன் வீரப்பாவாகி, பாலசரவணன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.

“நீ கல்யாணம் பண்ணிக்கப் போகிற பொண்ணா சரவணா?” எனக் கேட்ட குரலில் அனைவரும் திரும்ப, அங்கே ஓர் பெண் நின்று கொண்டிருந்தாள்.

‘யார்றா இது புது என்ட்ரி?’ என எழில்மலர் முழிக்க, “கீர்த்திகா, உன் தீர்ப்பு ரொம்பத் தப்பும்மா. என் ஆட்டத்தை யாராலும் விளையாட முடியாது. விளையாடவும் கூடாது” என்றான் கதிர், அங்கு நின்று கொண்டிருந்த கீர்த்திகாவைப் பார்த்து.

அவர்கள் அனைவரும் வெவ்வேறு பிரிவு என்றாலும் ஒரே கல்லூரியில் படித்ததால் கதிருக்கு அவளை நன்றாகவே தெரியும்.

கதிர் சொன்னதின் உள்கருத்து எழில்மலருக்குப் புரிய, கதிருக்கும் தன்னைப் போல் மனதில் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது என அவளின் மனம் கூச்சலிட்டது.

அவன் இன்னும் வாய்விட்டுச் சொல்லவில்லை என்றாலும் உண்மை பிடிபட்டதில் எழில்மலர் கனவுகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள்.

“அதானே பார்த்தேன்” என கீர்த்திகா பாலசரவணனைப் பார்க்க, தன்னை நக்கலாகப் பார்க்கிறாளோ என அவனுக்கு லேசாக சந்தேகம் எட்டிப் பார்த்தது.

அதையெல்லாம் கதிர் கவனத்தில் கொள்ளாமல், “மலர், உங்களுக்கு லவ் அட் பர்ஸ்ட் சைட்ல நம்பிக்கை இருக்கா?” என எழில்மலரிடம் கதிர் கேட்க, “என்ன?” எனப் புரியாமல் விழித்தாள்.

“இல்லை, அப்படி இருந்தா சொல்லுங்க.. மறுபடியும் உங்க முன்னாடி நடந்து வரலாம் என இருக்கிறேன். பல தடவை உங்க முன்னால் நடந்து வந்துட்டேன். நீங்க என்னைச் சரியா பார்க்கலையேன்னு டவுட்.. ” என்ற கதிரிடம்,

“என்ன சொல்ல வர்றீங்க?” எனப் புரிந்தும், புரியாமலும் அவனைப் பார்த்தாள்.



“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” எனக் கதிர் கேட்க, “ம்ம்ஹூம்” என மறுப்பாகத் தலையாட்டினாள்.



“அப்போ எனக்கு இன்னும் சான்ஸ் இருக்கு. முதல் முதலா பெங்களூருல உங்களைப் பார்க்கும் போது உங்க என்ட்ரி தடாலடியா இருந்தாலும் உங்களைப் பார்த்தவுடனே எனக்குப் பிடிச்சுப் போச்சு.



இத்தனை நாள் எப்படி என் இதயம் துடிச்சுட்டு இருந்ததுன்னு புரியலை. நீங்க பேசின விதம். எனக்குக் கவுன்ட்டர் கொடுத்தது. இப்படிச் சொல்லிட்டே போகலாம். ஆனா நீங்க என்னை வில்லன் ரேஞ்சுக்குக் கற்பனை செஞ்சு வச்சிருந்தீங்க.



அதுவும் என் அண்ணனுக்கு வேற பொண்ணு பார்த்துட்டு இருந்தேனா என்னால முந்திக்க முடியலை. அப்புறம் சரித்திரம் என்னைத் தப்பா பேசும் பாருங்க.



உங்களை மறுபடியும் பார்த்தா கண்டிப்பா மனசைச் சொல்லணும் என நினைச்சுட்டு இருந்தேன். உங்களோட இத்தனை நாட்கள் பழகினதுல எங்க குடும்பத்துக்கு ஏத்த குத்துவிளக்கு நீங்க தான் என முடிவு பண்ணிட்டேன். தமிழ்கிட்டே அணுசரணையா பேசினதுல உங்க நல்ல மனசும் புரிஞ்சிடுச்சு” என்றான்.



“டேய், குத்துவிளக்கு வேணா தி.நகர் போகலாம்டா” எனப் பாலசரவணன் இடையில் புக, “விளையாடாதீங்க சார்.. நம்ம வந்த வேலையைப் பார்க்கலாம்” என்றாள் எழில்மலர்.



“விளையாட்டாச் சொல்லறதுனால நம்ப மாட்டேங்கிறீங்க போல. ஆனா, எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உங்களை மாதிரியே எனக்குத் தோணுது. அன்னைக்கு என் ஷோ ஒண்ணு ஒரு ஹோட்டல்ல பண்ணினேன்.



அப்போக் கூட உங்களை மாதிரியே ஓர் பெண்ணைப் பார்த்தேன். அந்த அளவுக்கு என் மனம் மென்டலாகிடுச்சு.. அத்தோட உங்ககிட்டே பேசிட்டிருக்கிறப்போ எல்லாம் என் மனசு கலகலன்னு இருக்குது” எனக் கதிர் சொல்லிக் கொண்டிருக்க,



“அது வேற ஒண்ணுமில்லை. கல்லாவில் சில்லறையைக் குலுக்கிட்டு இருக்காங்க” என்றான் பாலசரவணன்.



“கொஞ்சம் பேசாமல் இருக்கறீங்களா? அவர் எவ்வளவு அழகா, தன் ஆழமான காதலைச் சொல்லிட்டு இருக்கார். அதைப் பார்த்துக் கிண்டல் பண்ணிட்டு” என அவனை அடக்கியது வேறு யாருமில்லை. கீர்த்திகாவேதான்.



‘நீ எப்போதிலிருந்து காதலுக்கு மரியாதை செய்ய ஆரம்பிச்ச?’ என ‘ஞே’ எனப் பாலசரவணன் முழித்துக் கொண்டிருக்க,



“என் மனசுல இருந்ததைச் சொல்லிட்டேன் மலர். உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. ‘ஐம். இன் லவ் வித் யூ’” என்ற கதிர், அங்கு பூக்குவளையில் வைத்திருந்த பூவை எடுத்து எழில்மலரிடம் நீட்டினான்.



‘என்னடா பாலசரவணன், சிக்சர் அடிக்கறேன்னு சொல்லி, டக் அவுட் ஆயிட்ட?’ என பாலசரவணனின் மனசாட்சி, கதிரின் குரலில் கிண்டல் செய்தது.



கதிர் பேசியதைக் கேட்டதும் எழில்மலரின் மனம் ஒரு நிலையில் இல்லை. சிறுபிள்ளையென எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தது. ‘டேய் மெண்டல்காரா. அந்த ஹோட்டல்ல உட்கார்ந்துட்டு இருந்தது நான் தான்’ எனக் கதிரை மர்ம முறுவலுடன் பார்க்க,



“டேய், என்னடா நடக்குது இங்கே? என் செலவுல வந்து உன் லவ்வைச் சொல்லிட்டு இருக்கற? சைக்கிள் கேப்ல வண்டி ஓட்டறவங்களைப் பார்த்திருக்கிறேன்.. ஆனா, நீ ஸ்பேஸ் சட்டிலே விட்டுட்டு இருக்க” எனப் பாலசரவணன் கதிரைக் கடுப்புடன் பார்த்தான்.



“லவ் எல்லாம் வந்தவுடனே சொல்லிடணும் மச்சி. போட்டி நிறைஞ்ச உலகம் பாரு” என்றான் கதிர்.



“விளையாடறியா? லவ்வை இப்படியா எல்லோர் முன்னாடியும் சொல்லுவே? அதுவும் என் முன்னாடி” என கீர்த்திகாவை ஓர் பார்வைப் பார்த்தான். பின்னே அவன் காதலித்து தோற்ற பெண்ணின் முன்னால் இப்படியா தன்னைத் தலைக்குனிய வைப்பான் தோழன்?



“இந்த ஆட்டத்தை ஆரம்பிச்சது நீ தான். இப்படி எல்லோர் முன்னாடியும் சொல்லத் தான் தைரியம் வேணும்” என்றான் கதிர்.



“ம்ஹ்ஹ்.’ எனப் பெருமூச்சொன்றை வெளியேற்றி, “ஆல் த பெஸ்ட் கதிர்” என அவனை கீர்த்திகா வாழ்த்திவிட்டுக் கிளம்ப, “அப்போ நானும் கிளம்பறேன்” என எழில்மலரும் கிளம்பினாள்.



அவளால் அவள் மனதில் நிரம்பி வழியும் சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு அங்கே உட்கார முடியவில்லை. அதே சமயத்தில் கதிருக்கு உடனடியாக பதிலும் சொல்ல பிடித்தமில்லை. அதுவும் பாலசரவணனின் முன்னால். அதனால் கிளம்புகிறேன் என எழுந்துவிட்டாள்.



“கிளம்புங்க. ஆனால் நான் சொன்னதைப் பத்தி நைட் குப்புறப் படுத்து, லவ் சாங்ஸ் கேட்டுட்டு யோசிங்க. நான் கனவுல வருவேன். கண்டிப்பா வருவேன்” என அவள் கைப்பையில் அந்த சிகப்பு ரோஜாவை சொருகி அவளை வழியனுப்பி வைத்தான் கதிர்.



“உன்னால் மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?” எனப் பாலசரவணன் கேட்க, “எல்லாம் நம்ம மூளையோட டிசைன் அப்படி” எனக் கதிர் சொல்லிக் கொண்டிருந்தது எழில்மலரின் செவிகளைத் தீண்டிப் புன்னகைக்க வைத்தது.



“உனக்குக் கொஞ்சமாவது கவலையிருக்கா? தோழன் ஒருத்தன் லவ்ல பெயிலாகி இருக்கிறானே. அவனுக்கு ஆறுதலைக் கொடுப்போமேன்னு இருக்கா?” என பாலசரவணன் முறைக்க,



“அது நடந்து எத்தனை வருஷமாகுது. என்னமோ நேத்து நடந்த மாதிரியே ஃபீல் பண்ணிட்டு இருக்க? சரி உனக்கில்லாத ஆறு.தலையா? சொல்லு. ஆடு, மாடு, கோழி, பன்றி, எருமை, பாம்பு என எல்லாத் தலையையும் கொண்டு வர்றேன்” என்றான் கதிர்,



‘நீ கொஞ்சம்.’ என ஆரம்பித்த பாலசரவணன், வாயின் மேல் கையை வைத்து, பேசாதே என்பதைப் போல் சாமிக்ஞை செய்தவன், “எனக்கு உடனே கல்யாணம் நடக்கணும். எனக்குக் கல்யாணமே நடக்காதுங்கிற மாதிரி கீர்த்திகா பார்த்துட்டுப் போறா” என்றான்.



‘இதைத் தான்டா நான் அன்னைக்கே சொன்னேன்’ எனக் கதிர் முறைக்க, “சரி. சரி.. இப்போ புரியுது. ஹீரோ ஆகறது எவ்வளவு சிரமம் என. நாலையும் யோசிக்கணும்” என பாலசரவணன் நண்பனிடம் சரணடைந்தான்.



“அப்போ அப்பாகிட்டே சொல்ல வேண்டியது தானே?” என்றான் கதிர்.



“என்னடா பேசற? எனக்குன்னு ஒரு கெத்து வேண்டாம். நான் போய் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நிக்கச் சொல்லறியா? நெவர். கல்யாணம் பண்ணிக்கோன்னு அவர் என்கிட்டே வந்து கெஞ்சணும்” என்றான் பாலசரவணன்.



“ம்ம்ம். இது வேறயா? சரி யோசிக்கறேன்” எனக் கதிர் விடைப்பெற்றான்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 12
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.