என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -13
“இந்த இரண்டு எக்ஸாமும் எப்போ ஆன்லைன் ஆகும்? கண்டிப்பா நமக்கு கிடைச்சிடுமா?” மலர்விழியின் கேள்வியில் ஆர்வமும் அதே நேரத்தில் ஒரு குழப்பமும் தெரிந்தது.
“ஷ்யூர்.. கண்டிப்பா இது இரண்டும் நமக்குத் தான். உனக்கு சந்தேகமே வேண்டாம்” என்று வெளியே சொன்ன ரஞ்சன் ‘அதுக்காகத் தானே தடைகளை எல்லாம் தடம் தெரியாமல் களையறேன். இது கிடைக்கறதுக்காக இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
“ஓ.. நீங்க அவ்வளவு கான்ஃபிடன்டா இருக்கும் போது அது நமக்குத் தான்.”
“இப்போ எதுக்கு இந்த கேள்வி?”
“நம்ம ப்ரிபரேட்டரி வொர்க் எதுவும் பண்ணனுமா? அதுக்கு எவ்வளவு நாள் தேவைப்படும்? அதெல்லாம் தெரிஞ்சா நல்லா இருக்கும்”
“தெரிஞ்சு என்ன பண்ணலாம்னு ஐடியா?”
“இப்போ எதுக்கு கேள்வியா கேட்கிறீங்க? எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு சார். குறைஞ்சது ஒரு பதினைந்து நாளாவது லீவ் தேவைப்படும். நீங்க வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்கோங்க மலர்விழி, இந்த வொர்க் இன்னைக்கு கண்டிப்பா முடிச்சிடணும்னு இடையில் கூப்பிட்டு தொந்தரவு பண்ண முடியாது. மேரேஜுக்காக லீவ் போட்டா நான் லேப்டாப் தொடவே மாட்டேன்” என்றாள் ஸ்ட்ரிக்டான குரலில்.
“ஓ.. உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கா? கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்.மலர்விழி” என்று அதற்கும் அவன் நையாண்டி செய்தான்.
“ம்ச்.. கொஞ்சம் சீரியஸா பதில் சொல்லுங்க ரஞ்சன். இதுக்கும் ஏதாவது ஜோக் சொல்லாதீங்க. அதைக் கேட்க நான் தயாராக இல்லை.”
“ஓகே… ஸீஸ் ஃபயர்.. ஸீஸ் ஃபயர்… இந்த எக்ஸாம்ஸ் இரண்டும் நெக்ஸ்ட் இயர்ல தான் ஆன்லைன்ல வரும். அரவுண்ட், நெக்ஸ்ட் டிசம்பர். இன்னும் ஒரு வருஷம் நமக்கு டைம் இருக்கு.”
“வாவ்.. சூப்பர்.. தென் ஓகே… வி வில் ராக்” என்று குதூகலித்தாள் மலர்.
“அதுக்கு முன்னாடி அவங்க கிட்ட இரண்டு மூன்று ரவுண்டு டிஸ்கஷன்ஸ் இருக்கும்.”
“ரேஸ்ல எத்தனை பேர் இருக்காங்க?”
“வழக்கம் போலத் தான்.. நாமளும் அந்த ABCயும் தான். இப்போ இந்தியால மார்க்கெட்ல இருக்கற வேற யாரும் இவ்வளவு பெரிய எக்ஸாம் ஹேண்டில் பண்றவங்க கிடையாது. ஸோ, டைரக்ட் ஃபைட் தான்.”
“ம்ம்… அவங்க தான் இப்போ பெரிசா எதையும் பண்ணலையே .. அப்புறம் எதுக்கு இவ்வளவு பயம்?”
“இது அவங்க மேல உள்ள பயம் இல்லை. இந்த எக்ஸாம் ஆன்லைன் போறதுல நிறைய கன்சர்ன்ஸ் நமக்கு இருக்கு. ஃபர்ஸ்ட் கன்சர்ன் நம்பர் ஆஃப் எக்ஸாம்ஸ்.. கூடவே அதை டெலிவர் பண்ண ஆகும் காஸ்ட் தான். இதை பேஸ் பண்ணி அடுத்தடுத்த வந்துட்டே இருக்கும்.
பேப்பர் பென்சிலா இருக்கும் போது ஏதாவது காலேஜ் இல்லை ஸ்கூல் ஹால்ல நடத்திட்டு போயிடலாம். இந்தியா பூராவும் சென்டர் இருக்கும், அஞ்சு லட்சம் பேரும் ஒரே நாளில் கூட எழுதிடலாம். ஆனால் ஆன்லைன் ஆகும் போது சிஸ்டம் ப்ரோவைட் பண்ணனும். அஞ்சு லட்சம் பேரும் ஒரே நாளில் எழுதறது சாத்தியம் இல்லை.
அதே மாதிரி நம்ம டைரக்ட் சைட்ல இந்தியா முழுவதும் சேர்த்தாலே முன்னூறு சிஸ்டம் தான் இருக்கும். தர்ட் பார்ட்டி சைட்ல கொடுக்கணும். அதுல ஒரிஜினல் சாஃப்வேரான்னு ஆரம்பிச்சு க்வாலிக்டி செக், அது இதுன்னு ஏகப்பட்ட இம்சை வந்து சேரும். இல்லேன்னா நாமளே இவன்ட் மாதிரி மேஜர் சிட்டீஸ்ல அரேஞ்ச் பண்ணலாம். சர்வர் மட்டும் நம்மோடது வச்சிட்டு மத்த எல்லாம் ரென்ட் பண்ணிக்கலாம்.
அடுத்து இதையெல்லாம் சமாளிக்க மேன் பவர், எப்படியும் டெம்போரரி ஸ்டாஃப் தேவை. அவங்களுக்கு சாலரி, ட்ரைனிங்னு நிறைய…
இதையெல்லாம் இன்க்ளூட் பண்ணினா எக்ஸாம் காஸ்ட், ஐ மீன் ஃபீஸ் எங்கேயோ போயிடும். முன்னாடி மேக்ஸிமம் ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம். ஆன்லைன் ஆகும் போது கண்டிப்பா டபுள் ஆகிடும். நான் சொல்றது மினிமம் தான். அதுவே, நமக்கு ப்ராஃபிட் கிடையாது.” நீளமாகப் பேசி முடித்தான் ரஞ்சன்.
“ஆனால் பல்க்கா பண்றதுக்கு நம்மளால முடியும்னு ப்ரூவ் பண்ண ஒரு சான்ஸ் கொடுத்தால் தானே தெரியும். இது ஆரம்பமா இருந்தால் இது போல் ஃப்யூச்சர்ல நிறைய எக்ஸாம்ஸ் வருமே. இந்தியாவில் பிஸினஸ் வளர இது கண்டிப்பா ஹெல்ப்பா இருக்கும்.”
“நீ சொல்றது கரெக்ட் தான். அதுக்கு தான் தீவிரமா வேலை செய்துட்டு இருக்கேன். எல்லா டீமுக்கும் வேலை இருக்கும், ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணி பேசணும். அவங்களோட முதல் ரவுண்டு டிஸ்கஷன் நெக்ஸ்ட் வீக் இருக்கும். அதுக்குள்ள நாம ஒரு ப்ரபோஸல் ரெடி பண்ணனும்.”
“முரளிதரன் கிட்ட டிஸ்கஸ் பண்ணி இருப்பீங்க தானே.. அவர் என்ன சொல்றார்?”
“ம்.. அவரா.. அவர் இன்னும் ABCலயே இருக்கிறதா நினைப்பு. இது அவங்களுக்கு கிடைச்சிடும்னு சில காரணங்கள் சொல்றார். நாம ட்ரை பண்றதே வேஸ்ட்டு சொல்ற மாதிரி இருக்கு அவர் பேசுறது.”
“வாட்.. முரளியா அப்படிச் சொன்னார்?” ஏனாம்?”
“அவங்களுக்கு பல்க்கா எக்ஸாம் நடத்தி அனுபவம் இருக்காம். அவங்க சீப்பாவே கொட்டேஷன் கொடுக்க முடியுமாம். நாம என்ன தலைகீழா நின்னாலும் நடக்காது. வேஸ்ட் ட்ரையல்னு சொல்றார்.”
“ஓ… “
“இதையெல்லாம் விட இன்னும் ஒரு விஷயம் சொன்னார், அது நினைச்சால் எனக்குமே இது கஷ்டம்னு தான் தோணுது. ஆனாலும் நான் ட்ரை பண்றதை விடப்போவதில்லை.”
“அப்படி என்ன சொன்னார் நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு?”
“இந்திய கவர்மென்ட் நடத்தற எக்ஸாமுக்கு மெயின் சர்வர் இங்கேயே இருக்கணும்னு கேட்பாங்களாம். அது தான் அவங்களோட ஃபர்ஸ்ட் ப்ரியாரிட்டியா இருக்கும்னு சொல்றார். நம்ம மெயின் சர்வர் அமெரிக்காவில் இருக்கு. இங்கே சர்வர் வைக்கணும்னு கேட்க முடியாத நிலைமைல நான் இருக்கேன்.”
“ஏன்… இப்போ தான் எங்கேயும் பிரச்சினை இல்லையே.. அப்புறம் என்ன?”
“பிரச்சினை இல்லையா… யார் சொன்னது? போன வாரம் கூட நாக்பூர்ல ஒரு ஆள் மாறாட்டம் நடந்திருக்கு, ஹைதராபாத்ல நாலு எக்ஸாம் ரிசல்ட்டை மாத்தி இருக்காங்க. இதையெல்லாம் தாண்டி சண்டிகர்ல ஒரு ஃபுல் செஷன் எக்ஸாம் ஆள் மாறாட்டம் பண்ணி இருக்காங்க. இன்னைக்கு தான் அதுக்கான ரிப்போர்ட் வந்தது. எப்படி நடந்திருக்கும் மலர். நாம இவ்வளவு அலர்ட்டா இருந்தும் யார் பண்ணி இருப்பாங்க? இதெல்லாம் ஸ்டாஃப் ஹெல்ப் இல்லாமல் நடக்கவே முடியாது. க்வாலிட்டி ட்ரைனிங் பத்தி கேள்வி வரும். பீ கேர் ஃபுல்” கடைசியில் முத்தாய்ப்பாக பாலை(ball) மலரை நோக்கித் திருப்பி விட்டான் ரஞ்சன்.
“நான் கூட ஒரு இன்சிடன்ட் ரிப்போர்ட் பார்த்தேன்.. நீங்க சொன்ன எல்லாத்துக்கும் அது தான் ஹைலைட், **** எக்ஸாம், எவ்வளவு பெரிய ப்ரஸ்டீஜியஸ் எக்ஸாம் டெல்லில இரண்டு டாக்டர்ஸ் அதை எழுத ப்ராக்ஸி ஏற்பாடு பண்ணி இருக்காங்க. சென்டர் ஸ்டாஃப் கண்டுபிடிச்சு அவங்களைத் திருப்பி அனுப்பி இருக்காங்க. அவங்களுக்கும் ஒரே மாதிரி ட்ரைனிங் தான் கொடுக்கிறோம். செல்ஃப் டிஸிப்ளின் இல்லாதவர்களுக்கு எத்தனை ட்ரைனிங் கொடுத்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை” மலர் தன்னையும் தனது டீமையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. யாரோ செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்க அவள் தயாராக இல்லை.
“எனக்குத் தெரியும் மலர், எல்லாரும் இப்போ அக்கவுண்ட்ஸ் க்ளோஸிங்ல பிஸி. அதனால இந்த என்கொயரி அடுத்த மாசம் தான் நடத்தப் போறாங்க. முதல்ல சென்டர் ஸ்டாஃப் கிட்ட தான் நடக்கும். பார்த்துக்கலாம், இப்போ ஒரு காஃபி குடிக்கலாம் வா.. ரொம்ப நேரம் லெக்சர் கொடுத்ததுல தொண்டை வறண்டு போச்சு. எனர்ஜி லெவல் டவுன் ஆகிப் போச்சு” என்று எழுந்தவன் தனது லேப்டாப்பையும் தூக்கிக் கொண்டு முன்னே நடந்தான்.
இருவருக்கும் காஃபி சொல்லி விட்டு வந்தவன், “அப்புறம் எப்படி போயிட்டு இருக்கு உங்க கல்யாண வேலையெல்லாம். பர்ச்சேஸ் எல்லாம் எப்போ, இன்விடேஷன் ரெடியா?” என்று புருவத்தை உயர்த்தினான்.
“அதெல்லாம் என் பர்சனல் விஷயம் சார். உங்க கிட்ட எதுக்கு சொல்லணும்?”
“அது சரி, உங்க வீட்டுல தான் எங்களுக்கு ஒரே பொண்ணு, கல்யாணம் எங்க முறைப்படி தான் நடக்கணும், அதுவும் எங்க ஊர்ல தான் நடக்கணும் அப்படின்னு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாங்க.”
“இங்கே கண்டிப்பா ஒரு ரிசப்ஷன் உண்டுன்னு சொன்னாங்களே..”
“அது உங்க அப்பாவோட கெத்த காட்டுறதுக்கு.. மஹாராஷ்டிரா கவர்மென்ட்டோட சீஃப் செக்ரட்டரி இல்லையா?”
“அடப்பாவி மனுஷா… உங்க கெத்தை நீங்க காட்ட மாட்டீங்களா? xyz edu servicesஓட ஹெட் ஆச்சே..யாரையும் ரிசப்ஷனுக்கு கூப்பிட மாட்டீங்க, அப்படித்தானே. அப்படி யாராவது வந்தால் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லிடறேன்.”
“ஹேய்.. ஃப்ளவர் சும்மா கேலிக்குப் பேசறதெல்லாம் சீரியஸா எடுத்துக்கக் கூடாது. ஓகே பேபி… நானே கல்யாணத்தை இவ்வளவு டிலே பண்றாங்களேன்னு கடுப்புல இருக்கேன். நீ இன்னும் என்னைச் சீண்டினால் என்ன செய்ய?”
“ம்ம்.. அது.. உங்களுக்காகத்தான் எங்கேஜ்மென்ட் மார்கழில வச்சாங்க. இல்லேன்னா அதுக்கும் தை பிறக்கட்டும்னு சொல்லி இருப்பாங்க. இப்போ என்ன இன்னும் நாப்பது நாள் தான் இருக்கு. இந்த கோர்ட்ஷிப் பீரியட நல்லா என்ஜாய் பண்ணுங்க சார்” என்று அவன் என்றோ ஒரு நாள் அவளுக்குச் சொன்ன சமாதானத்தை அவனுக்கே திருப்பிச் சொன்னாள்.
“ஓஓஓஓஓஓ… அப்படி… நீ சொன்னா சரி தான் டார்லிங்.. அப்புறம் நாம ஹனிமூன் எங்கே போகலாம்னு சொல்லு.. இப்பவே டிக்கெட் போட்டுடலாம்.”
“அதுக்கு முன்னாடி நான் லீவ் அப்ளை பண்ணனும் பாஸ். என் பாஸ் அதை அப்ரூவ் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் ஹனிமூன் ப்ளான் எல்லாம். நீங்க சொல்லுங்க, எத்தனை நாள் லீவ் போடலாம்.”
“நம்ம கம்பெனில மேரேஜுக்கு அஞ்சு நாள் லீவ் உண்டு. அதைத் தவிர மேக்ஸிமம் டென் டேஸ் எடுக்கலாம். ஆனால் எனக்கு அவ்வளவு நாள் அப்ரூவ் ஆகுமான்னு தெரியலை. நீ எதுக்கும் இப்போவே அப்ளை பண்ணி வை, ஆனால் அதுக்கு நம்ம மேரேஜ் இன்விடேஷன் வேணும்.”
“என் கிட்ட தான் சாஃப்ட் காப்பி இருக்கே. இப்போவே அப்ளை பண்றேன். அச்சோ என் லேப்டாப் ரூம்ல இருக்கே.”
“இந்தா, என் லேப்டாப் யூஸ் பண்ணிக்கோ” என்று நீட்டியவனுக்கு ஏதோ அழைப்பு வர மொபைலை எடுத்துக் கொண்டு தள்ளிச் சென்றான்.
தனது மெயில் ஐடியை ஓபன் செய்து லீவ் லெட்டரை கல்யாணப் பத்திரிகையுடன் சேர்த்து அனுப்பி விட்டு வெளியே வந்தாள் மலர்விழி.
மூடுவதற்கு முன் தற்செயலாக அவளது பார்வை கம்ப்யூட்டர் திரையில் விழ அங்கே இருந்ததைக் கண்டு நடுங்கிப் போனாள்.
“My Pending project” என்ற தலைப்பில் அங்கே இருந்த விஷயங்களை மேலோட்டமாக பார்த்தாலே தலை சுற்றியது. தூரத்தில் ரஞ்சன் அழைப்பை முடித்துக்கொண்டு வருவது தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.
ரஞ்சன் வந்து பார்த்த போது அவளது மெயில் பாக்ஸைத் திறந்து சின்சியராக வேலை செய்து கொண்டிருந்தாள்.
தனக்கு வந்து சேர்ந்த அவளது மெயிலைப் பார்த்தவன், “பதினைந்து நாளா? ரொம்ப தெளிவாத் தான் இருக்க” என்றான்.
“ஆனால் அப்ரூவ் பண்ண வேண்டியது நான் இல்லை. எச்ஆர் கிட்ட போகணும். நானே ஃபார்வேர்ட் பண்ணிக்கறேன். இப்பவே வேலை வாங்கறாளே கடவுளே, ஒளிமயமான எதிர்காலம் எனக்கு காத்திருக்கும் போலிருக்கே” என்று புலம்பிக் கொண்டே லேப்டாப்பை மூடினான். அவனது புலம்பலுக்கு பதில் சொல்ல விரும்பாத மலர்விழி வெட்கப்படுவது போல தலைகுனிந்து தனது உணர்வுகளை மறைத்தாள்.
**********
கமல் சக்சேனாவின் அபார்ட்மெண்ட் வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை நூறாவது முறையாக ஆராய்ந்து கொண்டிருந்தான், ஈஸ்வர்.
“டேய் அதுல அப்படி என்ன இருக்குன்னு இத்தனை தடவை பார்க்கிற? நீ ஆயிரம் தடவை பார்த்தாலும் எதுவும் புதுசா மாறிடாது. அதே பழைய இத்துப் போன ரீல் தான்” என்று அலுத்துக் கொண்டாலும் தானும் சேர்ந்து அதில் ஆராய்ச்சி செய்தான் கார்த்திக்.
அவர்களது டேபிள் மேல் கமலின் மொபைல், லேப்டாப், டைரிகள் அனைத்தும் பரப்பப் பட்டிருந்தன.
இன்று எப்படியாவது நூல்கண்டின் நுனியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று தீயாய் வேலை செய்தனர் இருவரும்.
அவன் இறந்த அன்று எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் கமல் சக்சேனாவின் முகம் சாதாரணமாகவே இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய தினங்களிலும் அவன் C ப்ளாக்கில் தனது காலை நடையை மேற்கொண்டு இருக்கிறான். அந்த காட்சிகளை உற்றுப் பார்த்ததில் அவன் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டே நடப்பது போலிருந்தது. முகத்தில் அவ்வப்போது டென்ஷன் தலைகாட்டியது.
அந்தப் பெண்ணைப் பார்த்தால் அங்கேயே வசிப்பவள் போல் இல்லை.
விடியற்காலையில் முகத்தில் முழுமையான மேக்கப்புடன் காட்சி தந்தவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
“இந்தப் பொண்ணு xyz கம்பெனியை வொர்க் பண்ணினா மலருக்குத் தெரிஞ்சிருக்குமே.. அவளைக் கேட்போமா?” என்றான் கார்த்திக்.
“போடா ஃபூல். இது யாருன்னு நல்லா உத்துப் பாரு. உனக்கே தெரியும்” என்று அவன் மண்டையில் தட்டினான் ஈஸ்வர்.
உற்றுப் பார்த்த கார்த்திக், “ஹேய்.. இவ அந்த ஜலக்கிரீடை ஸ்பெஷல் தானே” என்று கூவினான். கமலுடன் பல ஃபோட்டோக்களில் நீச்சல் உடையில் காட்சி அளித்த ஜிக்யாசா தான் அது.
“இவ எதுக்கு அவர் கம்பெனி மாறின பிறகும் போய் பார்த்திருக்கா? ஒரு வேளை ப்ரெக்னன்ட்… அப்படி ஏதாவது..”
“அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது. அப்படி இருந்தால் நேரா வீட்டுக்கே போய் மிரட்டி இருக்கலாமே. இது வேற..”
“ஒரு வேளை அவனை யாரோ மிரட்டி இருக்காங்களே, அதுக்கு இவ தான் மீடியேட்டரோ.. மிரட்டி காரியம் சாதிக்க வந்திருப்பாளோ?”
“யூ ஆர் கரெக்ட்.. அப்படித்தான் இருக்கணும். அவ எந்தந்த நாளில் அங்கே வந்தான்னு நாம ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். இப்போ நாம அந்த கமல் வீட்டுக்கு போகணும். கிளம்பு”
“நீ முதல்ல அந்த லேடி கிட்ட ஓடிபி வாங்கு. அப்படியே செக்யூரிட்டி கேட் கிட்ட வந்து நிற்கச் சொல்லு.”
“ஹேய்.. இது தானா நீ சொன்னது..” இருவரும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்த உற்சாகத்தில் இருந்தனர்.
கமல் சக்சேனா குடியிருந்த அபார்ட்மெண்ட் வளாகத்தில் கட்டுப்பாடுகள் அதிகம். யாரும் தன்னிச்சையாக உள்ளே சென்றுவிட முடியாது. அங்கே வசிப்பவர்களது காரோ பைக்கோ அதற்கு தனியாக ஸ்டிக்கர் உண்டு. அதை ஸ்கேன் செய்து தான் உள்ளே செல்ல முடியும். மற்றவர்கள் மொபைலில் க்யூஆர் கோட் இருக்கும். அதை ஸ்கேன் செய்து தான் உள்ளே செல்ல முடியும்.
வெளி மனிதர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு ஒரு ஓடிபி வழங்கப்படும். யாரைப் பார்க்க வருகிறாரோ அந்த வீட்டின் ஒரு குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தி ஓடிபி க்ரியேட் செய்ய வேண்டும். வரப் போகும் நபரின் ஐடி கார்டு முதற்கொண்டு வாங்கிக் கொண்ட பிறகு தான் அந்தச் செயலி ஓடிபியை வழங்கும்.
இதையெல்லாம் தாண்டிய பிறகு நேரில் வரும் போது அவர்களது ஐடி செக் செய்யப்பட்டு ஒரு ஃபோட்டோ எடுத்த பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள். பழைய மரபாக ரிஜிஸ்டரில் கையொப்பம் இடும் வழக்கமும் இருந்தது.
இத்தனை ஏற்பாடுகள் இருந்த போது ஜிக்யாசா கமலின் உதவி இல்லாமல் சாதாரணமாக வந்திருக்க முடியாது.
இருவரும் கமலின் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது அவனது மனைவி ஓடிபியுடன் அங்கே காத்திருந்தாள்.
தங்களுக்குத் தேவையான விவரங்களை பெற்ற பிறகு கமலின் மனைவி வீட்டிற்கு அழைத்ததின் பேரில் அங்கே சென்றனர்.
அங்கே அவள் உங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று என்று ஒரு கத்தைக் காகிதத்தை நீட்டினாள்.
“பாங்க் ஸ்டேட்மெண்ட்இது தான் எங்க கிட்ட இருக்கே மேடம். இன்னொன்னு காப்பி எதுக்கு?”
“இது வேற அக்கவுண்ட் ஈஸ்வர். அநேகமாக உங்க கேள்விக்கெல்லாம் இதில் பதில் இருக்கும்” என்று நீட்டினாள்.
முகத்தில் ஒரு கேள்வியுடனே வாங்கினான் ஈஸ்வர். “எனக்கே இதைப் பார்க்கும் போது நிறைய விஷயங்கள் புரியுது. இந்த கேஸுக்கு இது தான் முக்கிய சாட்சியாக இருக்கப் போகுது” என்றாள் அவள்.
அவள் பேச்சை கவனித்துக் கொண்டு கையில் இருந்த பேப்பரில் கண்களை ஓட்டிய ஈஸ்வர் அதிர்ந்து நின்றான்.
என்னவோ என்று எட்டிப் பார்த்த கார்த்திக், “இவ்வளவா!!!???” என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.
*********
“நீ என்ன இப்போ எல்லாம் இந்த ரூம்லயே டேரா போடற? நீ பாஸ கல்யாணம் பண்ணிக்க போறேன்னா, அது உங்க பெர்சனல் விஷயம். ஆஃபீஸ்ல சேர்ந்தே இருக்கணும்னு அவசியம் இல்லை. இங்கே உனக்கு அவர் டைரக்ட் பாஸ் கூட இல்லை, உன் பாஸோட பாஸ். ஞாபகம் இருக்கா?”
தன் எதிரில் நின்று கத்திக் கொண்டிருந்த ஜிக்யாஸாவை மலர்விழி கண்டுகொள்ளவே இல்லை.
தன் எதிரே இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு நின்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாகத் தன் வேலையை தொடர்ந்தாள். ஜிக்யாசாவின் கோபத்தை மலர்வழியின் செயல் மேலும் தூண்டி விட்டது.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ? நான் நெனச்சா நீ இந்த போஸ்ட்லியே இருக்க மாட்ட தெரியுமா? போஸ்ட் என்ன கம்பெனிய விட்டே தூக்கிடுவேன்” அவளது மிரட்டல் தொடர்ந்தது. ஆனால் மலர்விழியின் ரியாக்ஷன் மாறவில்லை.
“இவ்வளவு பேசிட்டு இருக்கேன், சீனியர் என்று ஒரு மரியாதை இல்லை. நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருக்க” என்று கத்தினாள். அவளைப் பார்க்கப் பார்க்க சினிமா வில்லி போல தோன்றியது மலர்விழிக்கு. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அமைதியாக வேலையில் கவனமாக இருந்தாள் .
“வேலை மட்டும் இல்லை ரஞ்சனைக் கல்யாணம் பண்ணிக்கப் போற தெனாவட்டுல இருக்க இல்லையா? நான் நினைச்சா அந்தக் கல்யாணம் கூட நடக்காது தெரியுமா?” என்று கையை சொடுக்கி சவால் விட்டாள்.
இப்போது அவளை நிமிர்ந்து பார்த்த மலர்விழியின் கண்கள் ‘நீ சினிமா வில்லி இல்லையா சீரியல் வில்லியா?’ என்பது போல பார்த்தது.
“செய்ய மாட்டேன்னு நினைக்காத.. நிச்சயம் நான் நினைச்சதை நடத்தி காட்டுவேன்” என்று சபதம் போட்டு விட்டு சென்றாள், ஜிக்யாசா.
அவள் சென்ற திசையில் பார்த்த மலர்விழியின் கண்கள் லேசாகக் கலங்கியது. அடுத்த நொடியே நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள். அவளே எதைச் செய்து கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு வந்தால் விட்டுவிடுவாளா என்ன?