• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 14

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
473
36
43
india

அத்தியாயம் – 14

அன்று சக்தி காலை உணவிற்காக அமர, அவன் கைப்பேசி இசைத்தது. ‘கரெக்டா சாப்பிடறப்போ கூப்பிட்டிடுவான். எப்படித் தான் மூக்கு வேர்க்குமோ? வாய் ஊறுமோ?’ எனத் திட்டிக் கொண்டே, “சொல்லு.” என அழைப்பை எடுத்தான்.



“வாட் இஸ் திஸ். இன்னும் பெரிசா எந்த ஃபீலும் இல்லை.” எனக் கேட்டது சாட்சாத் கதிரே தான்.



“சரி அதை விடுங்க. உங்களுக்கு ஒரு பொண்ணுப் பார்த்திருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ம்ம்மம் எனச் சொல்லுங்க. ஆளு யாருன்னு சொல்லறேன்” என்றான் கதிர்.



“எங்களுக்குப் பார்த்துக்கத் தெரியும். நீ போய் உன் வேலையைப் பாரு” எனச் சக்தி சொல்ல, “என் வேலையை நான் முடிச்சுட்டேன். ஆனால் நீங்க எனக்கு முன்னாடி தடைக்கல்லா இருக்கறீங்களே. அதான்” என்றான் கதிர்.



“காலங்கார்த்தால உயிரை வாங்காத” என அழைபைத் துண்டித்த சக்தி, சாப்பிட ஆரம்பித்தான்.



சாப்பிடுகையில், “தரகர் ஒரு பொண்ணு ஜாதகம் கொடுத்திருந்தார். எல்லாம் பொருந்தி வந்திருக்குப்பா. இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஓஹோன்னு வருவியாம். சாயந்திரம் போட்டோ கொடுக்கறேன்னு சொல்லியிருக்கார்” என அவன் அன்னை, சிவகாமி அதே பேச்சை ஆரம்பித்தார்.



சக்திக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முப்பது வயதாகிவிடும். ஆகையினால் அவன் அன்னை அவனுக்குத் திருமணம் முடித்து வைத்துவிட வேண்டும் என்று மும்முரமாக இருந்தார்.



முதலில் தங்கை வெண்மதிக்குத் திருமணம் ஆகட்டும் என்று தான் பிடிவாதமாக இருந்தான்., ஆனால் அவளுக்கு இப்போது தான் இருப்பத்தொரு வயதாகிறது. அத்தோடு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த விபத்தில் இடது காலை இழந்து செயற்கைக் காலை வைத்து சற்றுச் சாய்த்து நடந்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.



காலில் தோன்றிய பலம் இன்னும் மனதை எட்டவில்லை என்பதால் இன்னும் கொஞ்ச நாளாகட்டும் என்று வெண்மதி சொல்ல, அவர்கள் அன்னையும் ஆமோதித்தார்.



வெண்மதியும் சொந்தக் காலில் நின்று தொழிலில் சாதித்த பின்னரே கல்யாணம் என்று திடமாகச் சொல்லவும், சக்திக்கு மறுத்துக் கூற முடியவில்லை.



ஏற்கனவே கதிர் மேல் எரிச்சலில் இருந்தவன், அன்னை அப்படிக் கேட்டதும், “அம்மா, உங்களுக்குத் திருப்தியா இருந்தா நான் நேர்ல பொண்ணைப் பார்க்கிறேன். எங்காவது வெளில மீட் பண்ண ஏற்பாடு செய்யுங்க. நான் மட்டும் பேசிப் பார்த்துப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பார்க்கலாம்” என முடிவாகச் சக்திச் சொல்லவும்,



ஏதோ இந்த அளவுக்கு ஒத்துக் கொண்டானே என்று சிவகாமியும் துரிதமாகச் செயல்பட்டு அதற்கு ஏற்பாடும் செய்தார்.



பெண்ணிடம் பேசுவதற்குத் தகுந்த இடத்தையும், நேரத்தையும் சொன்னவர், “பொண்ணு பெயர், சம்யுக்தா. தந்தை வங்கியில் மேலாளர். தாய் வேறொரு வங்கியில் வேலை செய்கிறார். பெண் ஓர் பத்திரிக்கையில் வேலை செய்கிறது” என்று சொன்னதும், சக்தியின் மனதில் சம்யுக்தாவின் முகம் மின்னி மறைந்தது.



ஆனால் அவனுக்குத் தெரிந்தது எல்லாம் அந்தப் பெண்ணின் பெயர் சதா என்று மட்டுமே. அதனால் இவள் அவளாக இருக்கக் கூடும் என்று துளியும் சந்தேகம் வரவில்லை.



அன்னையிடம் தங்கள் உணவகத்தைப் பற்றிய விஷயம் செய்தித்தாளில் வந்ததைப் பற்றியெல்லாம் வெண்மதியும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. தாய் கவலைப்படுவார் என்று சக்தி நினைக்க, வெண்மதி அதைப் பற்றியே மறந்தவளாக உற்சாகமாக வளைய வந்து கொண்டிருந்தாள்.



அதற்குக் காரணம் சித்தார்த்தும், சம்யுக்தாவும் என்று சக்திக்குத் தெரியாது. அன்னை சொன்ன விஷயங்களைக் கேட்ட வெண்மதிக்கு, ‘சம்யுக்தாவாக இருக்குமோ?’ என்ற சந்தேகம் எழுந்தது.



ஆனால் அதைப் பற்றி அண்ணனிடம் இப்போது சொன்னால், போய் அவளைச் சந்திக்காமலேயே இருந்துவிடுவான். ஏனெனில் அன்று பத்திரிக்கை அலுவலகம் சென்றுவிட்டு வந்து அந்தப் புலம்பு, புலம்பினானே சக்தி.



அண்ணன் நேரில் சென்று பேசிவிட்டு வரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அமைதியானாள் வெண்மதி.



ஏற்கனவே திட்டமிட்டதைப் போல் மாலை ஆறு மணியளவில் உணவகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இடத்துக்குச் சக்தி சென்றான். ஆனால் அந்த சம்யுக்தா இன்னும் வந்திருக்கவில்லை.



சக்திக்கு நேரம் தவறாமை மிகவும் அவசியம். மிலிட்டரி ஆபிசர் போல் கைக்கடிகாரத்தைத் திருப்பி, திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னும் ஐந்து நமிடங்கள் இருந்தன. ஆனால் அடுத்து வந்த இரண்டு நிமிடங்களில் ஆயிரம் முறைகளாவது கண்கள் அவன் கடிகாரத்தில் பதிந்து மீண்டிருக்கும்.



‘சரி கையைக் கழுவிவிட்டு வரலாம்’ எனச் சக்தி கைகழுவி விட்டு வர, அப்போது அவன் மேஜையில் சம்யுக்தா அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில் அவளைப் பார்த்த சக்தியின் மனதில் ஏனோ நிம்மதி அலையடித்தது.



அதே சமயத்தில் அவள் தன்னை ஏமாற்றிவிட்டாள் என நொறுங்கிய உணர்வும் தோன்றியது. அத்தோடு அவள் சித்தார்த்துடன் பழகுவதைப் பார்த்து அவனைக் காதலிக்கிறாள் என்று யூகம் வேறு கொண்டிருந்தான் .



அதனால், ‘இனிமேலும் என்னை ஏமாற்ற இடம் கொடுக்கமாட்டேன். இவள் என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்ல இடம் தரக் கூடாது.’ என முடிவு செய்து கொண்டவன், “இந்த இடம் எனக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கு” என்றான் மிகவும் மிடுக்காக.



“நீங்க சக்திவேல்?” எனச் சம்யுக்தா ஆச்சர்யமாகக் கேட்க, ‘இவளே தான் தனக்குப் பார்த்த பெண்’ என அவனுக்கும் தெளிவானது.



சக்திவேல் என்ற பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட மேஜை என்று வரவேற்பில் கேட்டுவிட்டே வந்திருந்தாள் சம்யுக்தா.



“சம்யுக்தா?” என்றவனின் கேள்வியில் அவள் தலையசைக்க, “அப்போ சதான்னு பெயரிலும் பித்தலாட்டமா?” என்றான்.



“அது என் புனைப் பெயர்” என்றதும், “நீ நினைக்கிற மாதிரி நான் பணக்காரன் இல்லை. என்னால் உன் பணப் பசிக்குத் தீனி போட முடியாது” என்றான் சக்தி.



“பணமில்லைன்னா என்னா? அதுக்குத் தான் ரெஸ்டாரன்ட் வச்சிருக்கீங்களே. அதிலிருந்து உணவு போடறது” என சம்யுக்தா புருவத்தை உயர்த்தி, குறும்பாக அவனைப் பார்த்தாள்.



ஏனோ அந்தப் பேச்சு சக்திக்குக் கதிரை ஞாபகப்படுத்த, ‘இவளுக்குக் கதிரைத் தெரியும் என்றாளே’ என நேரங்காலம் தெரியாமல் அது வேறு அவன் நினைவில் வந்து ஊஞ்சலாடியது.



“அதுக்கு முதல்ல உன்னைப் பிடிக்கணும். எனக்கு உன்னைப் பிடிக்கலை” என அவன் தோள் பையை எடுத்துக் கொண்டு நகர ஆரம்பித்தான்.



“பேசிப் பார்க்கலாம் என கூப்பிட்டுட்டு இப்படிக் கிளம்பினா என்ன அர்த்தம்? உட்கார்ந்துப் பேசுங்க. இது தான் நீங்க கத்து வச்சிருக்கிற மரியாதையா?” எனச் சம்யுக்தா கேட்க,



“நீ மரியாதையைப் பற்றிப் பேசற? பெரியவங்களை முகத்தில் அடிச்ச மாதிரி எனக்குப் பேசத் தெரியாது. பணக்காரியைக் கல்யாணம் பண்ணனும் என நினைக்கிற ஆளும் கிடையாது” என்றான்.



அவன் பேசியதைக் கேட்டு புருவத்தைச் சுருக்கியவள், “ஓ. நான் அன்னைக்கு பேசினதை ஒட்டுக் கேட்டீங்களா?” என சம்யுக்தா முறைக்க, “நீங்க ஊருக்கே கேட்கிற மாதிரி பேசினா அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் ?” என்றான். (நிஜமாவா ராசா? நீ ஒட்டுக்கேட்கலையா?)



“எப்படியும் ஒட்டுக் கேக்கறவங்க யாரும் நல்லதைக் கேட்டதா சரித்திரம் இல்லை. பேசறதை உட்கார்ந்து பேசிட்டுப் போங்க” என அவள் சொல்ல, “என் டைமை வேஸ்ட் பண்ண எனக்குப் பிடிக்கலை. வீட்ல சொல்லிக்கிறேன்” எனக் கிளம்பிவிட்டான்.



போனால் போகட்டும் எனத் தன்னால் ஏன் விட முடியவில்லை? தான் ஏன் இத்தனை மெனக்கெடுகிறோம் என்று சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை.



தன்னைப் பற்றி மனோஜின் குடும்பம் தவறாக நினைத்த பொழுது வராத தவிப்பு, இப்போது மட்டும் ஏன் வருகிறது என அவளுக்குப் புரியவில்லை.



அப்படியும் சம்யுக்தா சொன்னதைக் கேட்காமல் சக்தி அங்கிருந்து கிளம்பிவிட, “போங்கடா. போங்க. எனக்கு வேற மாப்பிள்ளையா கிடைக்காது? இந்த அழகு தேவதையை மிஸ் பண்ணிட்டேன் என நீங்க பீல் பண்ணுவீங்க” என முணுமுணுத்தாள் சம்யுக்தா. அது நன்றாகவே சக்தியின் காதுகளுக்குக் கேட்டது.



‘பெரிய ரதி. இவளை விட்டா எனக்குப் பொண்ணா கிடைக்காது?’ எனக் கிளம்பி, கார் நிறுத்துமிடத்துக்குச் சென்றான் சக்தி.



‘என்னங்கடா இது. மாப்பிள்ளை விஷயத்தைப் பற்றிப் பேசினால் பசிக்குச் சாப்பாடு கூட கிடைக்க மாட்டேங்குது. அன்னைக்கும் இப்படித் தானே அப்பா இடையில் சாப்பிடவிடாமல் இழுத்துக் கொண்டு சென்றார்’ என நினைத்த சம்யுக்தா,



‘சரி, எதையாவது சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என அவள் பையைப் பார்க்க, அது காணாமல் போயிருந்தது. அப்போது தான் சக்தி ஓர் கருப்புப் பையுடன் சென்றது அவள் ஞாபகத்தில் உரச, அவனைப் பிடிக்க ஓடினாள்.



சக்தி கைப்பையைக் கழற்றி காரினுள் போட்டவன், ஏறி அதை உயிர்ப்பித்து நகர்த்தினான். சில அடி தூரம் தான் சென்றிருப்பான். அப்போது கையை அசைத்தவாறே சம்யுக்தா தன்னை நோக்கி ஓடி வருவது தெரிய, ஏனோ அவனுக்கு அது பிடித்தது.



ஆனாலும் காரை நிறுத்தாமலேயே, ஜன்னல் கண்ணாடியைச் சிறிது இறக்கியவன், “இப்படி வந்து கெஞ்சினா மட்டும் சம்மதம் சொல்லிடுவேனா.. வேற ஆளைப் பாரு” என அவன் கதவை மீண்டும் ஏற்ற ஆரம்பித்தான்.



“இருங்க.. என் ப்…” என அவள் அதன்பிறகு சொன்ன, ‘பை’ காற்றோடு மட்டுமே கலந்தது. ஏனெனில் அங்கிருந்து, ‘சர்ரென்று’ சக்தி கிளம்பிச் சென்றிருந்தான்.



“டேய். மாக்கா. சக்தின்னு பெயர் வச்சா இப்படி சக்திமான் மாதிரி சர்ன்னு கிளம்பிடுவியா? என் பையைத் திருட்டிட்டுப் போயிட்டு, உன்னை வந்து கெஞ்சறேனா? நீ என் கையில் மாட்டுவ இல்ல.. அப்போ வச்சுக்கறேன்” என முணுமுணுத்த சம்யுக்தா, சித்தார்த்தையோ, எழில்மலரையோ அழைக்க நினைத்தாள்.



ஆனால் எப்படி அழைப்பது? வண்டிச்சாவி முதற்கொண்டு அனைத்தையும் பொண்ணுப் பார்க்க வருகிறேன் என்ற போர்வையில் லவட்டிக் கொண்டு போய்விட்டானே சக்தி.



‘பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு ஏப்பம் விடுவாங்க எனக் கேள்விப்பட்டிருக்கேன். இவன் ‘போர் ஜி’ ஃபோனை இல்லை ஏப்பம் விட்டிருக்கான்.. இது புது டெக்னிக்காயில்ல இருக்கு.’ எனச் சிரித்துக் கொண்டாள்.



சம்யுக்தா நின்றிருந்த இடம் அந்த ஹோட்டலின் கார் நிறுத்துமிடம் என்பதால் யாரையும் காணவில்லை.



உள்ளே சென்று உதவி கேட்கலாம் எனத் திரும்ப எத்தனிக்க, அப்பொழுது அங்கே வந்த ஒருவன், தன் காரை நோக்கிச் சென்று கொண்டே, “இப்போவெல்லாம் யாரையும் நம்ப முடியறதில்லை. நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கணும்” என்றான் சம்யுக்தாவிடம்.



நடந்ததைப் பார்த்திருக்கிறான் என எண்ணிக் கொண்டவள், “சார், அவசரமா ஒரு ஃபோன் செய்யணும்? ப்ளீஸ் சார் ஃபோன் தர்றீங்களா?” என அவனிடம் கேட்டாள்.



“அதை எடுக்கத் தான் போயிட்டு இருக்கேன். கார்லேயே வச்சுட்டேன் இருங்க” என அவன் காரினுள் ஏறினான்.



சற்றுநேரம் முன்னேயும் பின்னேயும் தேடி எடுத்துக் கொண்டு வெளியில் இறங்கியவன், கைப்பேசியை அவளிடம் கொடுத்தான். அப்படிக் கொடுக்கையில் அவன் வேண்டுமென்றே தன் கையை உரசினானோ என்று சந்தேகம் வந்தது சம்யுக்தாவுக்கு.



‘எதுக்கு வம்பு? பேசாமல் உள்ளே சென்று உதவி கேட்கலாம்’ என சம்யுக்தாவின் மனம் எச்சரிக்கையடைய, “தேங்க்ஸ் சார். நான் உள்ளே போய்ப் பார்த்துக்கிறேன். நீங்க அவசரமா கிளம்பிட்டு இருக்கீங்க” என அவனிடம் கைப்பேசியைத் திருப்பித் தந்தாள்.



அவனோ அதை வாங்காமல், “இல்ல பேசிட்டுக் கொடுங்க” என்றான்.



“இல்லை சார். தெரிஞ்சவங்க உள்ளே இருக்காங்க” என மீண்டும் திருப்பித் தர முயற்சிக்க, “யாருமில்லையே.. நான் ரொம்ப நேரமா உங்களைக் கவனிச்சுட்டு தானே இருக்கேன்” என இப்பொழுது கைப்பேசியுடன் சேர்த்து அவள் கைகளையும் பற்றினான் அந்தப் புதியவன்.



‘ஆக சக்தியிடம் பையைக் கேட்டதை மட்டும் அவன் பார்க்கவில்லை. நெடுநேரம் தன்னையே நோட்டம் விட்டிருக்கிறான்’ எனச் சம்யுக்தாவுக்குப் புரிந்து போனது.



அவனிடமிருந்து கையை விடுவிடுக்க முயன்ற வேளையில், சக்தி எடுத்துச் சென்ற பையிலிருந்த ‘பெப்பர் ஸ்ப்ரே’ தேவையில்லாமல் ஞாபத்துக்கு வந்தது.



‘ச்சே. அதைப் போய் எடுத்துட்டுப் போயிட்டானே.’ எனச் சக்தியைத் திட்டித் தீர்த்தாள் சம்யுக்தா.



அதே சமயத்தில் சர்ரென்று ஓர் கார் அவர்களின் அருகில் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய மூன்று நபர்கள், “டேய் நீ சொன்ன மாதிரியே ஆளு பார்க்க அம்சமா இருக்காடா” எனச் சம்யுக்தாவைச் சூழ்ந்து கொண்டவர்கள், அவளை வர்ணிக்கிறேன் பேர்வழி என அறுவருக்கத்தக்க வகையில் பேச ஆரம்பித்தனர்.



மாலை மயங்கி, கார் நிறுத்துமிடத்தில் சற்று வெளிச்சம் குறைவாக இருந்தது. அத்தோடு கார் நிறுத்துமிடத்தில் கூட்டம் என்று சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை.



தான் ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டோம் எனச் சம்யுக்தாவுக்கு நன்றாகப் புரிய, தன் பலம் கொண்ட மட்டும், கத்த ஆரம்பித்தாள். கார் நிறுத்துமிடம் உணவகத்தின் வாயிலிருந்து சற்று பக்கவாட்டில் இருப்பதால் இவள் சத்தம் எழுப்பியும் எவ்விதப் பலனுமில்லாமல் போனது.



வந்த மூன்று பேர் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, ஏற்கனவே அங்கே நின்றிருந்தவன் காரிலிருந்த மதுப்பாட்டிலை வெளியில் எடுத்து சம்யுக்தாவின் வாயில் ஊற்ற முயன்றான். சம்யுக்தாவும் தெரிந்த தற்காப்புக் கலைகளை வைத்துச் சற்றுநேரம் போராடி, அதை வாயில் படாதவாறு பார்த்துக் கொண்டாள்.



நான்கு ஆட்களின் வலிமையின் முன்னால் அவள் சோர்ந்துப் போக ஆரம்பித்தாள். இருந்தும் யாராவது வந்துவிட மாட்டர்களா? என்ற நம்பிக்கையில் மனதில் தேக்கி வைத்த தைரியத்திலிருந்து தளராமல் போராடிக் கொண்டிருந்தாள்.



ஆனால் சற்று நேரத்திலேயே அவள் வாயில் மதுவை ஊற்றுவதில் வெற்றி பெற்றுவிட்டான் அவன். அதை, ‘த்தூ’வென அவர்களின் முகங்களில் துப்பினாள். அதில் ஒருவன் பிடி இளக, கண்ணைக் கசக்கிக் கொண்டான்.



இப்போது மற்ற மூவரின் வெறி அதிகமாகியது. சற்று முரட்டுத்தனமாக அவள் வாயைத் திறந்து மதுவை ஊற்ற, இப்போது அவளால் துப்ப முடியவில்லை. விழுங்க வேண்டியதாகிவிட்டது.



“டேய். யாராவது வந்திடப் போறாங்க.. சீக்கிரம் அவளை வண்டியில் ஏத்துங்க. நம்ம இடத்துக்குப் போய் மிச்சத்தைப் பார்த்துக்கலாம்” என்றான் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தவன்.



அது தான் சரியென்று உடனே நின்றிருந்த காரில் அவளைத் தள்ளி, கூடவே இரண்டு பேர் ஏற முயல, அவர்களில் ஒருவனை சம்யுக்தா எட்டி உதைத்தாள். அவன் எட்டிப் போய் யாரோ காலடியில் விழுந்தான்.



“பிரதர் ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்ற குரலில், மற்ற மூவரும், ‘எவன்டா அது?’ என்ற எரிச்சலுடன் திரும்பினர்.



“டேய். அவனைப் போய் நீங்க கவனிங்க. இவளை நான் பார்த்துக்கிறேன்” என அவர்களில் ஒருவன் சொல்ல, மற்ற இரண்டு பேரும் அந்த இளைஞனை நோக்கி எட்டு வைத்தார்கள்.



“அந்த அளவுக்கு உங்களுக்கு எல்லாம் சீன் இல்லை பிரதர்” என வந்த குரலில் சம்யுக்தாவும் நம்பிக்கையுடன் பார்க்க, அங்கே கதிர் நின்று கொண்டிருந்தான்.



“கதிர்” என அவள் கத்தவும், சம்யுக்தாவைப் பார்த்ததும் அவள் பெயர் தெரியாவிட்டாலும் அவள் யாரென்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. ‘அட, நம்ம ஆளோடஃபிரெண்ட்’ என எண்ணிக் கொண்டான்.



“டேய், தெரிஞ்சவன்டா” என ஒருவன் கத்த, சம்யுக்தாவைப் பிடித்திருந்தவனின் பிடி லேசாகத் தளர்ந்ததோ என்னவோ, சம்யுக்தா திமிறிக் கொண்டு அங்கிருந்து ஓடி கதிரின் பின்னால் அடைக்கலம் தேடினாள்.



அதற்குள் கதிர் கொடுத்த தகவலின் பெயரில் உணவகத்தின் ஊழியர்கள் பத்து பேர் திரண்டு வந்துவிட, ‘விட்டால் போதும்’ என அந்த இளைஞர்கள் காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.



கதிர் அந்த உணவகத்தில் தான் தன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்து வருவதால் அவன் அங்கு சற்று பிரபலமாகிவிட்டான். அதனால் கதிர் சம்யுக்தாவின் இக்கட்டைப் பார்த்ததும் முதலில் அவர்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு அங்கே சென்றான்.



“ரொம்ப தேங்க்ஸ் கதிர். நீங்க மட்டும் வரலேன்னா என் நிலைமை.?” என சம்யுக்தா நடுங்க, “ஒண்ணும் ஆகியிருக்காது. அதான் எட்டி உதைச்சீங்களே. அப்படியே தொடர்ந்திருந்தா அவனுங்க பல்லு, செல்லு எல்லாம் கழண்டிருக்கும்.



அப்புறம், ஹாஸ்பிடல் பில்லு எகிறியிருக்கும்.. நான் வரலைன்னாலும், போன வாரம் தான் இங்கே கேமரா இன்ஸ்டால் பண்ணியிருக்காங்க. அதைக் கண்காணிச்சுட்டு இருக்கிறவங்க தகவல் தந்திருப்பாங்க” எனக் கதிர் அவளுக்குத் தைரியம் சொன்னான்.



நடந்தவற்றில் சம்யுக்தா திகைத்திருந்தாலும், கதிர் சொன்னதைக் கேட்டதும் முகத்தில் புன்னகை அரும்பியது.



சம்யுக்தா நின்றிருந்த நிலையைப் பார்த்தால், ஏதோ நடந்திருக்கிறது என்று எளிதாக யூகித்து விடலாம். அந்தப் பொறுக்கிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் சம்யுக்தாவின் சட்டை ஆங்காங்கே கிழிந்து, தோளில் சிராய்ப்பு ஏற்பட்டு, முகமெல்லாம் சிவந்து போய் இருந்தது.



போதாதற்கு அவர்கள் செய்த மது அபிசேகம் வேறு. நல்லவேளை சம்யுக்தா முயன்ற வரையில் அதைத் துப்பிவிட்டாள்.



கீழே போட்டுவிட்டுச் சென்ற பாட்டிலைக் குனிந்து எடுத்த சம்யுக்தா, “ச்சே. யாரையுமே நம்ப முடியாது போல. பார்க்க டீசென்ட்டா இருந்துட்டு என்ன வேலை பண்ணியிருக்காங்க” என்றாள்.



“ம்ம்ஹூம். அப்படியெல்லாம் ஒரு ஜெண்டில்மேனைப் பார்த்துச் சொல்லக் கூடாது” எனக் கதிர் தன்னையே சுட்டிக் காட்டிக் கொண்டு அலற, சம்யுக்தா புன்னகைத்தாள்.



“அதை விடுங்க. டேஸ்ட் பண்ணினீங்களே எப்படி இருந்தது?” எனக் கதிர் புருவத்தை உயர்த்திக் கேட்க, “என்ன கிண்டலா?” என்றாள்.



“அப்பாடி.. கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே” என்றவன், தான் எப்போதும் வைத்திருக்கும் கைப்பையிலிருந்து தன் சட்டையை எடுத்துக் அவளிடம் தந்து, “தப்பா நினைச்சுக்க வேண்டாம். இது என் சட்டை. உள்ளே போய் மாத்திக்கோங்க” என்றான்.



தன்னைக் குனிந்துப் பார்த்த சம்யுக்தா அவன் சொன்னதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் கையிலருந்த பாட்டிலை அவனிடம் தந்து, ‘டஸ்ட் பின்ல போட்டுடுங்க’ எனச் சட்டையை வாங்கிக் கொண்டு பெண்கள் அறைக்குச் சென்றாள்.



கதிரைப் பற்றி எழில்மலர் மூலம் சற்று தெரிந்து கொண்டதும், அன்று அவனது மேடைப் பேச்சு வேறு சேர்த்து கொள்ள சம்யுக்தாவுக்கு அவனை நம்பலாம் என்று தோன்றியது.



சம்யுக்தா நகர, செல்லும் அவளையே பார்த்திருந்தான் கதிர். தனக்கு ஓர் இக்கட்டு என்ற நிலையிலும் அந்த பாட்டிலைக் குப்பைக் கூடையில் போடச் சொல்லும் அவளின் பொதுநலக் குணத்தை எண்ணி வியந்தான்.



அன்றும் இப்படித் தானே தன்னுடன் வேலை செய்பவனிடம் இனிமையாகப் பேசி அவனைத் தெளிய வைத்தாள் சம்யுக்தா. அதுவும் தனக்கு வந்த பதவி உயர்வை வேண்டாம் என்று சொல்லி.



கதிர், பாலசரவணனுக்காக ஓர் ‘காப்பி ஷாப்பி’ல் காத்திருந்த பொழுது தான் சம்யுக்தா, சித்தார்த்திடம் பேசிய வார்த்தைகள் அவன் காதைத் தீண்டியது.



அப்பொழுது அவள் சித்தார்த்திடம், ‘உங்க சவால்ல ஜெயிக்க மட்டும் தான் நினைக்கறீங்க.. உங்க திறமையை வெளிக் கொண்டுவர இல்லை’ என்பதை இயல்பாகவும், தெளிவாகவும் சொல்ல, அவளை மிகவுமே கதிருக்குப் பிடித்துப் போனது.



இவளைப் போன்ற ஒருத்தியின் குணம் தான் தன் அண்ணனுக்குப் பொருத்தமாக இருக்கும் என அன்றே நினைத்தான். அதன்பிறகு அதை மறந்தும் விட்டான். ஆனால் சம்யுக்தாவை மீண்டும் பெங்களூருவில் பார்த்தும் பட்டென்று மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டான் கதிர்.



அதை விளையாட்டாக எடுத்துக் கொண்ட சம்யுக்தாவும் அங்கிருந்து கிளம்பிவிட்டாள். அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் சம்யுக்தா வேலைச் செய்யும் பத்திரிக்கையின் பெயரையும் கேட்டறிந்து கொண்டான் கதிர்.



சட்டையை மாற்றி, முகத்தைக் கழுவவும், சற்று தெளிந்ததைப் போல் உணர்ந்தாள் சம்யுக்தா. ‘நல்லவேளை கதிர் வந்தான்.. இல்லையென்றால் அவர்கள் என்ன செய்திருப்பார்களோ.’ என நினைத்து ஆசுவாசப்பட்டுக் கொண்டாள் சம்யுக்தா.



அவளும் எப்போதும் எச்சரிக்கையுடன் தான் செயல்படுவாள். தற்காப்புக் கலைகளும் சிறிது கற்று வைத்திருக்கிறாள். அதனால் தான் எப்போதும் ‘பெப்பர் ஸ்ப்ரே’யைப் பையில் வைத்திருப்பாள்.



ஆனால் சக்தியினால் இன்று நடந்த களேபரத்தில் சம்யுக்தா சற்றுத் தடுமாறிவிட்டாள்.



கதிரின் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியில் வந்தவளைப் பார்த்த கதிரின் முகத்தில் அப்படி ஓர் புன்னகை. ஏனெனில் அது அவளுக்கு மிகவும் பெரிதாக இருந்தது.



“என்னைப் பார்த்தா ஜோக்கர் மாதிரி இருக்கா?” என சம்யுக்தா முறைத்தாள்.



“யூ சீ. ஒன்ஸ் அப்பான் எ டைம்” என்று அவன் ஆரம்பிக்க, “பாப்பா, மூச்சா போன கதை தானே. சொல்லிட்டீங்க” என்றாள் சம்யுக்தா.



“அதில்லைங்க மிஸ் முந்திரி. இது பீப்பாய் உருண்ட கதை. வாங்க ஏதாவது குடிச்சிட்டுப் பேசலாம்” எனக் கதிர் சொன்னதும், மறுத்துக் கூறாமல் அவனுடன் சென்றாள் சம்யுக்தா. கதிரை இப்போது பெரும்பாலானோருக்கு அங்கே தெரியுமாதலால் சம்யுக்தாவுக்கு ஏகப்பட்ட மரியாதையும் கிட்டின.



காபி அருந்துவாளா எனக் கேட்டு, சூடாக காபி கொண்டு வரச் சொன்னான். சூடான பானம் உள்ளே இறங்கியதும், கை கால்களின் நடுக்கம் குறைந்தது சம்யுக்தாவுக்கு.



“ஏங்க, உங்க வீரமெல்லாம், இந்த டம்மிப் பீசு மேலே தானா? உங்க ‘பெப்பர் ஸ்ப்ரே’ எங்க போச்சு? இருந்திருந்தா அவனுங்களைப் பெப்பர் ஆம்லெட் போட்டிருக்கலாமே” என்றான் கதிர்.



உதடு பிரித்துப் புன்னகைத்தவள், தனக்கு மாப்பிள்ளைப் பார்ப்பதையும், அவள் இங்கு வந்ததையும், சென்றவன் அவளது கைப்பையை எடுத்துக் கொண்டுச் சென்றதையும் என அனைத்தையும் சுருக்கமாகக் கூறினாள்.



“இதுக்குத் தான் அன்னைக்கே என் அண்ணனுக்கு உங்களை ஜோடி சேர்க்க நினைச்சேன். கேட்டிருந்தா இப்போ உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லையே?” என்றான்.



“உங்க அண்ணன் பெயர் சக்திவேலா?” என சம்யுக்தா கேட்க, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என ஆச்சரியமானான் கதிர்.



“பொண்ணுப் பார்க்க வந்தது யாருன்னு நினைச்சீங்க?” என சம்யுக்தா வறண்ட குரலில் கேட்க, கதிர் சற்று அதிர்ந்த பார்வை பார்த்துவிட்டு, “ஐ.அம். வெரி சாரி. மிஸ்…” எனத் தடுமாற, “சம்யுக்தா” என்றாள்.



“அவனுக்குக் கோபம் வரும் தான். ஆனால் அதற்காக அவன் இப்படி எல்லாம் செய்வான் எனக் கொஞ்சமும் நினைக்கலை” என்றான் கதிர் உண்மையான வருத்ததுடன். அதற்கு அவள் பதிலேதும் சொல்லவில்லை. மௌனமாகக் காபியை அருந்தினாள். கதிரே பேசுவதைத் தொடர்ந்தான்.



“சரி சரி. என் எதிரி இப்போ உங்களுக்கும் எதிரியாயிட்டான். அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடனும்.. அவன் வாழ்க்கை முழுக்க வருத்தப்படணும்ன்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு” எனக் கதிர் நிறுத்தவும்,



“நான் கூட ரொம்பவும் பாசக்கார தம்பின்னு நினைச்சேன்” என்றாள் சம்யுக்தா.



“ஒரு பக்கம் மட்டும் பாசம் இருந்து என்ன பண்ணறது? அந்தப் பக்கமும் பிச்சுட்டு வரணுமில்லை” என்றான் கதிர்.



“சரி. என்ன வழி?” என சம்யுக்தா கேட்க, “சக்தியையே கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை முழுக்க அவனைப் பழி வாங்கிடுங்க” என்றான்.



“அது சரி” என சம்யுக்தா சிரிக்க, “சக்திவேல் என் பெரியப்பா பையன். அதனால் எனக்கு அண்ணன் ஆகிவிட்டான். நான் கதிர்வேல்” எனச் சிறுவயதில் நடந்த விஷயங்களைச் சொல்லி அவளைச் சிரிக்க வைத்து, அவனுக்கும் சக்திக்கும் இடையில் நடக்கும் சின்னச் சண்டையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டான்.



பின்னர், “சக்தி, ரொம்ப நல்லவன் சம்யு. என்ன கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்து. ஹாய் சொல்லும். நம்ம சிரிப்பை வைச்சு அதற்கு ‘பை’ சொல்ல வைக்கணும்” என்றான் கதிர்.



சம்யுக்தாவுக்கு இப்பொழுது வெண்மதியின் கால் ஏன் ஊனமானது எனப் புரிந்தது. அதனால் தான் சக்தி, கதிருடனும் பேசுவதில்லை எனப் புரிந்தது.



சம்யுக்தாவும், சக்தியுடனான மோதலில் ஆரம்பித்து அனைத்தையும் சுருக்கமாகச் சொன்னாள். “ஆஹ். நீங்க தான் என்னைப் பத்தி எழுதின சதாவா? அதனால் தான் அன்னைக்கு என்கிட்டே ஃபோன்ல அத்தனைக் காரமா பேசினானா?” என உரக்க யோசித்தான் கதிர்.



இப்போது சம்யுக்தா சற்று இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தாள். சம்யுக்தாவின் குணமே அது என்பதால் நடந்தவைகளை ஒதுக்கிவிட்டு கதிருடன் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாள்.



கதிருடன் பேசியவாறே அங்கே பக்கவாட்டில் பார்வையை ஓட்டிய சம்யுக்தா, சுரிதார் அணிந்து, முகமெல்லாம் மலர்ச்சியுடன் வந்தப் பெண்ணைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 14
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.