• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 15

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
484
39
43
india

அத்தியாயம் - 15

கதிருடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்தப் பெண்ணைப் பார்த்த சம்யுக்தாவுக்கு பல கேள்விகள் உள்ளுக்குள் குடைந்தாலும், ஒன்றே ஒன்று தெளிவாகப் புரிந்தது.



கதிரின் கைப்பேசியை வாங்கி அதிலிருந்த எழில்மலரின் எண்ணை அழைக்க, “சொல்லுங்க கதிர்” என்றது எதிர்முனை.



“எழில், ஒரு முக்கிய விஷயம் சொல்லணும். எங்கேயிருக்க?” என சம்யுக்தாவின் குரல் கேட்டதும், “வீட்ல தான். இது கதிரோட ஃபோன் நம்பர் ஆச்சே. உன்கிட்டே எப்படி?” என்றாள் எழில்மலர்.



தன் கைப்பேசித் தொலைந்துவிட்டதாகச் சொன்ன சம்யுக்தா, “இன்னைக்கு ‘செல்ப்’ தம்பட்டமோட ஷோ வேற ஹோட்டல்ல நடக்குது. அதைக் கேள்விப்பட்டு வந்தேன். அவரைப் பார்த்துப் பேசவும் வாய்ப்புக் கிடைச்சது. அவர் ஃபோன் தான் இது” எனத் தோழிக்கு விளக்கியவள்,



“நீயும் வர்றியா?” எனக் கேட்க, சற்றுநேரம் மறுமுனையில் அமைதி நிலவியது.



“என்னடி அமைதியாயிருக்க?” என சம்யுக்தாவே அதைக் கலைக்க, “இல்லடி சம்யு. அது…” என எழில்மலர் பதில் சொல்லத் தடுமாறினாள்.



“நீ வந்தா ஒரு விஷயம் காட்டலாம் என நினைச்சேன். சரி அட்ரஸ் நோட் பண்ணிக்கோ. நீ நின்னுட்டு இருக்கிற இடத்துல இருந்து, இடது பக்கமா திரும்பி ஒரு இருபது அடி முன்னால் நடந்து போ. ஆச்சர்யம் காத்திருக்கு” என்றதும்,



“சம்யு?” என்றாள் எழில்மலர்.



“சொன்னதைச் செய்” எனப் பேசியை வைக்க, சம்யுக்தா சொன்னதைப் போல் அரக்கப் பறக்க ஓடிச் சென்றாள் எழில்மலர்.



அவள் எதிர்பார்த்ததைப் போலவே, அங்கே மேஜையில் அமர்ந்திருந்த சம்யுக்தாவைப் பார்த்ததும், அசடு வழிந்தவளிடம், “மலர் இங்க எங்கே பறந்து வந்துச்சு?” என்றாள் சம்யுக்தா கிண்டலாக.



ஆனால் அவளின் கேள்வி அவள் கருத்தில் பதியும் முன்னால் சம்யுக்தாவின் அயர்ந்த தோற்றமும், அவளுக்குச் சற்றும் பொருந்தாத சட்டை அணிந்திருப்பதும் கண்ணில் பட, “என்னடி ஆச்சு..?” என்றாள்.



“ச்சே.. பார்த்ததும் ஏதோ நடந்திருக்குன்னு கண்டுபிடிச்சு வக்கீல்ன்னு ப்ரூப் பண்ணறீங்க.. முதல்ல உட்காருங்க” என நாற்காலியை இழுத்துப் போட்ட கதிரைப் பார்த்து அவளின் திகைப்பு அதிகரித்தது. அவன் சொன்னதைப் போல் எழில்மலர் செய்தாலும், குழப்பம் மட்டும் தீரவில்லை.



கதிர் மேலும் ஒரு கப் காபியை வரவழைத்தவன், பின்னர், “என் கவச குண்டலதைக் கிண்டல் செஞ்சீங்களே. அதுல இருக்கிற சட்டை தான் இப்போ உங்க ஃபிரெண்டுக்கு உதவியிருக்கு” என எழில்மலரிடம் சொன்னான்.



எழில்மலர் சம்யுக்தாவைப் பார்த்து, “என்ன ஆச்சு சம்யு?” எனக் கேட்க, சம்யுக்தாவும் நடந்தவைகளை ஒரு வரி விடாமல் சொன்னாள்.



“ஐயோ. அவன் மட்டும் என் கையில் கிடைச்சா” என எழில்மலர் பற்களைக் கடிக்க,

“அவனுங்களைப் போலீஸ் பார்த்துக்கும். கதிர் வண்டி நம்பர் நோட் பண்ணியிருக்கிறார்” என்றாள் சம்யுக்தா.



“நான் அவனைச் சொல்லலை. உன்னைப் பொண்ணு பார்க்க வந்தானே. அவனைச் சொன்னேன். இப்படி ஓர் இக்கட்டில் உன்னை நிக்க வைச்சுட்டுப் போனானே. அந்த..” என அவள் மேற்கொண்டு திட்டும் முன்னால்,



“ஹே. ரொம்பத் திட்டாத. அது வேறு யாருமில்லை. கதிர்வேலோட பெரியப்பா பையன், அண்ணன் சக்திவேல்” என்றாள் சம்யுக்தா.



“இப்படிப்பட்ட ஒரு ரோசக்கார அண்ணனுக்குத் தான் இந்தப் பாசக்காரத் தம்பி உன்னைப் பெண் கேட்டாரா?” என்றாள் எழில்மலர் கடுப்புடன்.



“கதிரோட அவர் பேசறதில்ல எழில்.. ஆனா பாரு, கதிர் மாதிரி ஆளுங்க இந்த உலகத்துல இருக்கத் தான் செய்யறாங்க. என்ன எப்பவும் எச்சரிக்கையா இருப்பேன்.. கொஞ்சம் கல்யாணக் கனவுல ஜெர்க் ஆயிட்டேன்” எனச் சம்யுக்தா புன்னகைத்தாள்.



“ஆளைத் தெரியுமில்ல கேஸ் போட்டு மானத்தை வாங்கிடலாம்” என எழில்மலர் சொல்ல, “அதற்கு நான் நல்ல வக்கீலைப் பார்த்துட்டேன்” என்றான் கதிர்.



“என்ன கிண்டலா?” என எழில்மலர் முறைக்க,



“இல்லை.. நீங்க எனக்குக் க்ளோஸாகிட்டீங்க” என இதயமிருக்கும் இடத்தின் மேல் கையை வைத்துச் சொன்ன கதிர்,



“சக்தி மேலே கேஸ் போட்டா அப்புறம் அதற்கும் நான் தான் உங்களை உசுப்பிவிட்டேன்ன்னு நினைச்சுக்குவான்.. பின்னாடி பிரச்சனை ஆகக் கூடாது பாருங்க” என எழில்மலரின் கண்களை ஊடுருவினான்.



எழில்மலர் என்ன சொல்வதென்று தடுமாறுகையில், இருக்கையில் இருந்து எழுந்த கதிர், “நீங்கப் பேசிட்டு இருங்க. ஏழு மணிக்கு ஷோ ஆரம்பிச்சிடும். முடிச்சிட்டு வரேன். கிளம்பிடாதீங்க. அரைமணி நேரம் தான். நானே வந்து உங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என சம்யுக்தாவிடம் சொன்னவன், தோழிகளுக்குத் தனிமை கொடுத்து நகர்ந்தான்.



முதலில் எழில்மலரிடம் கதிர் பொடி வைத்துப் பேசியதைப் பார்த்த சம்யுக்தாவுக்கு, தனக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது எனப் புரிய, “என்னடி நடக்குது இங்கே? பொய் வேறே சொல்ல ஆரம்பிச்சுட்ட” என எழில்மலரிடம் கேட்டாள்.



“அது. வந்து…” என மென்று முழுங்க, “கதிரோட ஷோ பார்க்க வந்தியா?” என சம்யுக்தாவே பதிலும் எடுத்துக் கொடுத்தாள்.



“ம்ம்ம்..” என எழில்மலர் தலையைக் கவிழ்த்துக் கொள்ள, “அதுக்கு ஏன் என்கிட்டேயே பொய்.. கதிரைப் பிடிச்சிருக்குன்னு என்கிட்டே சொல்ல வேண்டியது தானே. நான் அவர்கிட்டே பேசட்டுமா?” என்றாள்.



“அது. கதிர் என்னைப் பிடிச்சிருக்குன்னு ஏற்கனவே சொல்லிட்டார்” என்றதும், “அடப்பாவி.. இது எப்போ நடந்தது?” எனப் பார்த்தாள். நடந்தவைகளைக் கோர்வையாகச் சொல்லி முடித்தாள் எழில்மலர்.



“சொல்லவேயில்லை.?” என சம்யுக்தா முறைக்க, “நீ மட்டும் இன்னைக்கு மாப்பிள்ளைப் பார்க்க வர்றதைச் சொன்னியா?” என்றாள் எழில்மலர்.



“அதுவும் இதுவும் ஒண்ணா? பார்த்துப் பிடிச்சிருந்தா உன்கிட்டே தான் முதல்ல சொல்லியிருப்பேன். ஆனா உன் விஷயத்தில் கதிர் லவ் சொல்லியிருக்கார்டி” என்றதும், “நான் இன்னும் ஒத்துக்கலையே” என்றாள் எழில்மலர்.



“ஆமா,ஆமா . நீ இப்படி விழுந்தடிச்சு கதிரோட ‘ஷோ’ பார்க்க ஓடி வந்தும் உனக்கு இதில் இஷ்டமில்லைன்னு நல்லாவேத் தெரியுது” என்றாள் சம்யுக்தா பரிகாசக் குரலில்.



“சம்யு. கதிர் எப்படி?” என்றாள் எழில்மலர்.



“எப்படின்னா? இங்க வர்றதுக்கு முன்னாடி என்கிட்டே கேட்டிருக்கணும்” என சம்யுக்தா சொல்ல, “என்னடி நீ?” என எழில்மலர் பாவமாகத் தோழியைப் பார்த்தாள்.



“அனைவருக்கும் வணக்கம். நீங்க கொடுத்த ஆதரவின் பெயரில் என்னை மீண்டும், மீண்டும் இங்க நிகழ்ச்சி நடத்தக் கூப்பிட்டிருக்காங்க. அதற்கு உங்களுக்கு நன்றிச் சொல்லிக் கொள்கிறேன்.



எல்லோரும் இளமையாக இருக்க ஒரு வழி சொல்லறேன்.. நல்லாக் கவனமாகக் கேட்டுக்கோங்க.. முதல்ல நல்லாச் சாப்பிடுங்க. அடுத்து நல்லாத் தூங்குங்க. அப்புறம் யாராவது உங்க வயசைக் கேட்டா குறைச்சுப் பொய் சொல்லிடுங்க. என்றுமே இளமையாக இருக்கலாம்” என்ற கதிரின் பேச்சு தோழிகளின் உரையாடலை நிறுத்தியது.



கூட்டம் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ‘அப்பாடா.. தோழியின் பரிகாசத்தில் இருந்து விடுதலை’ என்று நிம்மதியானாள் எழில்மலர்.



மீண்டும் அதையே கதிர் சொல்ல, கூட்டத்தில் பாதிபேர் கூட இம்முறை கைத்தட்டவில்லை. ஆனால் கதிர் மீண்டும் அதையே மூன்றாம் முறையாகச் சொல்ல இப்போது அங்கே கனத்த அமைதி நிலவியது.



“முதல் தடவை ஜோக் சொன்னப்போ எல்லோரும் சிரிச்சீங்க. ஆனால் அதையே திரும்பத் திரும்பச் சொன்னா உங்களுக்குச் சிரிப்பு வரலை.



ஜோக்குக்கே அப்படின்னா, அப்புறம் ஏன் வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவங்களை மறுபடியும் நினைத்து, நினைத்துக் கண்ணீர் வடிக்கிறீர்கள்? துக்கத்தைக் கொண்டாடுகிறீர்கள்?” என நிறுத்தினான் கதிர்.



அவன் சொல்ல வருவதன் அர்த்தம் புரிய அங்கிருந்தவர்கள் அதை ஆமோதிக்கும் வகையில் கைத்தட்ட, “இதை நான் சொல்லலை. எனக்குப் பிடிச்ச சார்லி சாப்ளின் சொன்னார். அதையே நானும் சொல்லறேன். வாழ்க்கையில் நடப்பது நல்லதோ, கேட்டதோ அதை அனுபவித்துக் கொண்டே அதைக் கடந்து செல்லுங்கள். சிந்தியுங்கள்…” என்றவனது பார்வை, இப்போது சம்யுக்தாவைச் சந்தித்தது.



அதைத் தனக்குத் தான் சொல்கிறான் என நன்றாகவே அவளுக்குப் புரிய, வலது கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள் சம்யுக்தா.



அதைப் பார்த்துப் புன்னகைத்தவன், “ஒரு ஆணின் வாழ்க்கையில் அமைந்த ஓர் நல்ல சந்தர்ப்பம் என்பதற்கு சூப்பர் உதாரணம் ஒண்ணு சொல்லறேன் கேளுங்க.. இந்த உதாரணத்தைக் கேட்டுத் தாய்க் குலம் என்னை மன்னிக்கணும். இதைச் சொல்லாமல் என்னால் இருக்கவும் முடியலை” என நிறுத்தினான் கதிர்.



அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகமாக, “மனைவியின் கன்னத்தில் அமர்ந்திருக்கும் கொசு” என்றான். ஒரு சில நொடிகள் கனத்த அமைதி நிலவியது. உடனே கூட்டத்தில், ‘சூப்பர் பாஸ். பின்னிட்டீங்க” என உடனே அதைப் புரிந்துக் கொண்டதைக் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்.



“பள்ளி மாணவர்கள் இருக்காங்களே. அவங்கெல்லாம் எவ்வளவு அறிவாளியா இருக்காங்க பாருங்க. எங்க பக்கத்து வீட்டுச் சின்னப் பொண்ணுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறேன்..



‘காம்பவுண்ட் செண்டென்ஸ்’ (கூட்டு வாக்கியம்) ஒன்றை எழுதிட்டு வா என ஹோம்வொர்க் கொடுத்தா, “ஸ்டிக் நோ பில்ஸ்’ என காம்பவுண்ட் சுவற்றில் எழுதியிருக்கும், ‘இங்கே நோட்டீஸ் ஒட்டாதீர்கள்’ என்ற வாக்கியத்தை எழுதிட்டு வர்றா” எனக் கதிர் சொல்ல,



“செம பல்பு” என்றனர் சிலர்.



“இவளாவது ஹோம்வொர்க் செஞ்சிட்டு வந்தா. இந்த மாணவனைப் பாருங்க.. ‘ஹோம்வர்க் எங்க’ன்னு ஆசிரியர் கேட்டா, “ஹோம்பேஜ்” போய் பாருங்கன்னு சொல்லறான்.



‘மீன்கள் எல்லாம் ஏன் உப்புத் தண்ணில இருக்குது தெரியுமா?’ எனக் கேட்டா, ‘காரத் தண்ணியில் போட்டா அதுக்கு தும்மல் வந்திடும் அதான்’ன்னு சொல்லறான் இன்னொருத்தன். விட்டா மீன் வறுவல் செஞ்சு சாப்பிட்டிடுவான்.



இதில் பாருங்க நம்ம ஆளு ஒருத்தனுக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் அவ்வளவா வராது. பள்ளியில் படிக்கறப்போ, சும்மா இருக்காமல் நன்றியுரை சொல்லறேன் பேர்வழி என மேடை ஏறினான்.



‘அனைவருக்கும் வணக்கம். நான் இங்கே இப்படி நின்றிருப்பதற்குக் காரணம் என் ஆசிரியர் சாந்தி தான் காரணம் என ஆரம்பித்தான். அவனுக்கு அன்னைக்கு நல்லாத் திட்டு விழுந்தது.. காந்தியை பயபுள்ள அப்படிப் படிச்சிருக்கு'



அப்பவாவது ஒழுங்காப் படிக்கணும் எனப் படிச்சானா? இல்லையே. காந்தி டீச்சரோட சாபம் சும்மா விடுமா? ஓரளவுக்குப் படிச்சு, பெரியவனாகி ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்திடறான்.



அடுத்து அவனுக்குக் கல்யாணம் ஆச்சு. ஆரம்பத்தில் வர்ற சின்னச் சின்ன உரசல்ல புதுப் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போயிட்டாங்க. பேசாம இருக்க வேண்டியது தானே நம்ம ஆளு.. வித்தியாசமா இருக்கட்டும் என லெட்டர் எழுதறாரு..



‘எனதருமை மனைவியே’ன்னு எழுதறதுக்குப் பதிலா ‘எனதெருமை மனைவியே’ன்னு ஆரம்பிச்சான். அதைப் பார்த்த மனைவி அவனைச் சும்மா விட்டிருப்பாங்க? ஒரு ஒத்தச் சுழி கொம்பு வந்து அவன் வாழ்க்கையில் எப்படி எல்லாம் முட்டி, முட்டி ரணகளம் பண்ணிடுச்சுப் பாருங்க.



அதனால் தான் இந்தக் காலத்துல வாட்ஸ் ஏப், பேஸ்புக்ன்னு கிளம்பிட்டாங்க போல. கேட்டா, ‘ஆட்டோ கரெக்ட்’ சொதப்பிடுச்சுன்னு சொல்லிடலாம் பாருங்க” எனக் கதிர் சொல்ல, அங்கிருந்தவர்கள் சிரித்து ஆர்ப்பரித்தார்கள்.



“கொஞ்ச நாள்ல மனைவியே அவனைக் கூப்பிட்டு, சமாதானமா போகலாம் என்ற எண்ணத்தில், “பீஸ்” ன்னு சொல்லியிருக்காங்க.. நம்ம ஆளு “பீஸ் புலவா? அடிப்பாவி என்னை இங்க தனியா தவிக்க விட்டுட்டு நீ மட்டும் அதைச் செஞ்சு சாப்பிடறியா?’ எனக் கேட்டிருக்கிறான்” எனக் கதிர் தொடர, அங்கே மீண்டும் கரகோஷம் எழும்பியது.



இப்படிப் பேசி அனைவரையும் சிரிக்க வைத்த கதிர், சம்யுக்தாவை நன்றாகவே மாற்றியிருந்தான். கதிர் அவன் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள, பெண்களின் கூட்டம் அவனை மொய்த்துக் கொண்டது.



எழில்மலர் மேடையைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, “யாரோ காதுல புகை வர்ற மாதிரி இருக்கு” என்ற சம்யுக்தாவின் குரலில் துள்ளி விழுந்தாள்.



“ப்ச்” என எழில்மலர் சலித்துக் கொண்டு, “நான் அதுக்காக இப்படிப் பார்க்கலை.. என்னால் இன்னுமே உனக்கு நடந்ததை நினைச்சுப் பார்க்க முடியலை. என்றாள்.



“ஹேய்.. அதை நானே மறந்துட்டேன். ரோட்ல நடந்து போறப்போ சகதி வந்து பூசுதுன்னு நடக்காம இருக்க முடியுமா?” எனச் சம்யுக்தா சொல்லிக் கொண்டிருக்க அங்கே கதிர் வந்தான்.



“ரசிகைகள் நிறையச் சேர்ந்துட்டாங்க போல” என எழில்மலர் கேட்க, “அய்யாவோட திறமை அப்படி. யூ சீ ஒன்ஸ் அப்பான் எ டைம் பெண்கள் என்னைக் கொஞ்சறதுக்கு லைன்ல நின்னாங்க” எனக் கதிர் ஆரம்பித்தான்.



“நீங்க பேபியா இருந்தப்போ தானே?” என்றாள் எழில்மலர்.



“அட. மனசுல இருந்ததைக் கேட்ச் பண்ணிட்டீங்களே. நம்ம ரெண்டு பேரு அலைவரிசையும் ஒரே மாதிரியில்லை” எனக் கதிர் சம்யுக்தாவுக்குத் தெரியாமல் எழில்மலரைப் பார்த்துக் கண்ணடிக்க, எழில்மலர் அவசரமாக சம்யுக்தாவைப் பார்த்தாள்.



“இப்படி என் கண் முன்னாடியே ரெண்டு பேரும் கடலையை வரிசையாப் போட்டா அப்புறம் நான் கொலை பண்ணற வரிசையில நிப்பேன். நீங்க கண்ணடிச்சது எனக்குத் தெரிஞ்சிடுச்சு. எனக்கு வீட்டுக்குப் போகணும் கதிர்” என்றாள் சம்யுக்தா.



“பார்த்துட்டீங்களா? குட். இப்படித் தான் எந்நேரமும் அலர்ட்டா இருக்கணும்” எனக் கதிர் கிண்டல் செய்தாலும் சம்யுக்தாவின் மனநிலையை மனதில் கொண்டு உடனே கிளம்பிவிட்டான்.



“கதிர், அப்பா என்னைத் தைரியமாத் தான் வளர்த்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நாளா என் மேலே கடுப்புல இருக்கறார். அதனால் இந்த விஷயம் வெளியில் தெரிய வேண்டாம்” எனக் கதிரிடம் சம்யுக்தா சொல்ல,



“கவலையேப்படாதீங்க. அங்கிள் அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டேனில்ல” என்றான் கதிர்.



“தேங்க்ஸ் கதிர்” எனச் சம்யுக்தா புன்னகைத்தாள்.



“நீங்க எப்படி வந்தீங்க?” என எழில்மலரிடம் கதிர் கேட்க, “என்னோட பிறந்தவன் டிராப் பண்ணினான்” என்றாள்.



“வாங்க உங்களையும் விட்டுடறேன். எப்படியும் உங்க வீட்டுக்குத் தான் முதல்ல போகணும்” எனக் கதிர் சொல்ல, பெண்கள் இருவரும் அவனைப் பார்த்தனர்.



“இல்லை. சம்யு இப்படியே வீட்டுக்குப் போனா, அவங்க அப்பாகிட்டே இருந்து பல கேள்விகள் வரும். உங்க ட்ரெஸ் மாத்திட்டுப் போனா, கேள்விகளின் எண்ணிக்கைக் குறையும்” என்றான் கதிர்.



அவன் சொன்னதில் உள்ள உண்மையை உணர்ந்து கொண்ட தோழிகள், அதையே ஆமோதித்தனர். எழில்மலர், உடனே சுகந்தனை அழைத்து, “நான் நேரா வீட்டுக்கு வந்துடறேன்” எனத் தகவல் தர, “அப்பாடா. எனக்கு ஒரு வேலை மிச்சம்” என்றான்.



பெண்கள் இருவரும் கதிருடன் கிளம்பி, எழில்மலரின் வீட்டுக்குச் சென்றனர். எழில்மலரின் பெற்றோர், ஓர் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்ததால், அங்கே எந்தக் கேள்வியும் வரவில்லை.



ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் மின்சாரம் தடைப்பெற்றிருக்க, “சாரி. சீக்கிரம் வந்திடறோம். நீங்க இங்க உட்காருங்க கதிர்” என வரவேற்பறையில் இருந்த சோபாவில் அவனை அமரச் செய்துவிட்டு பெண்கள் உள்ளே சென்றனர்.



கதிர் தன் கைப்பேசியின் ஒளியில் அங்கிருந்த புத்தக அலமாரிக்குள் தலையைவிட்டு எதையோ பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று, “திருடன். திருடன்” என அவன் கையிலிருந்த ஹெல்மெட்டைக் கொண்டு கதிரின் முதுகில் ஓங்கி ஓர் அடி வைத்தான் அப்போது தான் உள்ளே வந்த சுகந்தன்.



சுகந்தன் தன் வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு கதவைத் திறக்க முயல, கதவு தானாகத் திறந்து கொண்டது. அவன் பார்த்த காட்சி, அங்கே ஓர் புதியவன் தங்கள் அலமாரிக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தது.



ஒன்றும் ஒன்றும் இரண்டு என மிகத் தெளிவாக கணக்குப் போட்டு, திருடன் என முடிவு கட்டி, கதிரின் முதுகில் ஓங்கி ஒன்று போட்டான். கதிரும், தன் காரை வீட்டின் மதில் சுவரையொட்டி வெளியிலேயே நிறுத்தியிருந்தான். அதனால் சுகந்தனுக்கு அவன் திருடனாக இருக்க முடியாது என எள்ளளவும் சந்தேகம் வரவில்லை.



சுகந்தனின் கத்தலுடன், “ஆஹ், அம்மா…” எனக் கதிரின் அலறலும் சேர்ந்து கொள்ள, உள்ளிருந்து பெண்கள் இருவரும் பதறியடித்துக் கொண்டு வந்தனர்.



அப்போது சுகந்தன் மீண்டும் ஹெல்மெட்டை ஓங்கிக் கதிரை அடிக்க முயல, கதிர் அவன் கையைப் பற்றி தடுத்து, “சொன்னாக் கேளுங்க. நான் மலரோட ஃபிரெண்ட்” எனச் சொல்லிக் கொண்டிருந்தான்.



“டேய்.. என்ன பண்ணற? அவர் எனக்குத் தெரிஞ்சவர்” என எழில்மலர் சொல்ல,



“என்மேலே ஏதாவது கடுப்புன்னா வாய்ல சொல்லிடுங்க. நெய்யும், பாலும் சாப்பிட்டு வளர்ந்த உடம்புங்க. இப்படி ஆளை வச்சு அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்.. சொல்லிட்டேன்.. சின்னப்புள்ளை உடம்புக்கு இந்த ஹெல்மெட் அடியெல்லாம் டூ மச் யூ நோ” என்றான் கதிர்.



“சாரி சார். நான் தெரியாமல்” எனச் சுகந்தன் திணற, “என்னமோ தெரியலை.. உங்க வீட்ல யாரை முதல் தடவை மீட் பண்ணினாலும் உடம்பை ரணகளப்படுத்திடறீங்க. கீப் அப் த குட் வொர்க்..” என்றான் கதிர்.



“ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் இல்லை.. ஏதோ தெரியாமல்” என வழிந்த சுகந்தன், “ஆமா, காலிபிளவர் என்ன பண்ணினா?” என அவன் செய்ததை மறக்க, பேச்சின் திசையைத் திருப்பினான்.



“ஐயோ, மறுபடியுமா?” என இப்போது பெண்கள் இருவரும் அலற, “காலிபிளவரா?” எனக் கதிர் யோசனையாகப் பார்த்தான்.



“மலரை, பிளவர்ன்னு கூப்பிடுவேன்.. அவளைக் கட்டிக்கப் போறவரோடபேரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு காலிபிளவர்ன்னு சொன்னேன். இவளைக் கட்டிக்கிட்டா ஆளு காலி பாருங்க” என்றான் சுகந்தன்.



“ஓஹ் அப்படியா? பாவம் அந்தப் பையன்” எனக் கதிர் சொல்வதிலேயே அவனுக்கு அவனே பாவப்பட்டதை போலிருந்தது எழில்மலருக்கும், சம்யுக்தாவுக்கும்.



“அப்படியெல்லாம் பாவப்பட்டா ஆளைக் காலிப் பண்ண முடியுமா? அதான் கிண்டல் பண்ணி காலி பண்ணறதை” என்ற சுகந்தன், “நீங்க இன்னும் என்ன நடந்ததுன்னே சொல்லலையே” என்றான் கதிரிடம்.



“யூ சீ ஒன்ஸ் அப்பான் எ டைம். “ என ஆரம்பித்து பெங்களூரில் நடந்ததைச் சுருக்கமாக அல்லாமல் மிகவும் விரிவாக கதிர் சொல்லி முடிக்கவும், மின்சாரம் வரவும் சரியாக இருந்தது.



கதிரின் சுவாரசியமான பேச்சில் அவனை சுகந்தனுக்கு மிகவுமே பிடித்துவிட்டது. நேரமாகிவிட்டதால், “கிளம்பலாமா?” என சம்யுக்தா கேட்க, “என்ன மேடம், ரொம்ப நாளா ஆளையே காணோம்.?” என்றான் சுகந்தன் அவளிடம்.



“பிஸி” என அவள் பதில் தர, “நாங்கெல்லாம் என்ன பசின்னா சொன்னோம். ஃபிரெண்டோட உடன்பிறப்பு, நமக்கும் ஓர் உடன்பிறப்பு. அவனைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கணும்.. பாக்கெட் மணி கொடுக்கணும் என ஒரு பொறுப்பு வேண்டாம்?” என்றான்.



“பருப்பு இருந்தா அதை வச்சு வடை சுடலாம். பொறுப்பை வச்சு என்னச் செய்ய முடியும்?” என எழில்மலர் கேட்க, “ம்ம்ம்.. பொறுப்பா அந்தப் பருப்பை வச்சு வடை சுடலாம்” என்றான் சுகந்தன்.



“அப்பாடா. இப்போவாவது வந்த விருந்தாளிக்கு ஏதாவது கொடுக்கணும் எனப் பொறுப்பு வந்ததே” எனக் கதிர் அங்கிருந்த சோபாவில் அமர, கிட்டத்தட்ட ஒன்பது மணியளவில் எழில்மலரின் பெற்றோர்கள் திருமண வரவேற்பு முடிந்து வந்து சேர்ந்தனர்.



கதிரை நண்பன் என்று எழில்மலர் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்த, கதிர் சொன்னதைக் கேட்டவாறே வந்த எழில்மலரின் அன்னை, மாணிக்கம், “வீட்டுக்கு வந்தவங்களுக்குக் குடிக்க ஒண்ணும் கொடுக்கலையா?” என மகளைப் பார்த்து முறைத்தார்.



“அது அம்மா” என நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் முழித்தாள் எழில்மலர். “நீங்க பேசிட்டு இருங்க. குடிக்கக் கொண்டு வரேன்” என அவரே, மகளுக்குத் திருட்டு முழியிலிருந்து விடுதலை தந்து, சமையலறை நோக்கிச் சென்றார்.



“பிளவர், சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு நீ போன ஹோட்டல்ல கதிர்ன்னு ஒருத்தர் காமெடி ஷோ பண்ணுவாராம். சும்மா எல்லோரையும் ஜோக்கால் விளாசித் தள்ளுவாராம். இப்போ தான் ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க. ஒருதரம் போய்ப் பார்க்கணும்” என்றான் சுகந்தன்.



அந்தக் கதிரின் ஷோவைத் தான் பார்க்கப் போகிறோம் என்று எழில்மலர் அவனிடம் சொல்லவில்லை. சுகந்தனும் அவளுடைய கிளையண்ட்டைச் சந்திக்கச் சென்றாதாக நினைத்துக் கொண்டான்.



“கேட்டுக்கோங்க நம்ம பெருமையை” எனக் கதிர் தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட, “நீங்க தான் அந்தக் கதிரா?” என ஆச்சரியமாக சுகந்தன் பார்த்தான்..



“அப்படித் தான் சொல்லிக்கிறாங்க. ஆனால் நானாவது ஜோக்கால் விளாசித் தள்ளறேன். இங்கே ஒருத்தர் ஹெல்மட்டால் இல்லை விளாசறாங்க” என்றான் கதிர்.



சற்றுநேரம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, மாணிக்கம் கையில் இரண்டு கோப்பைகளில் ‘போர்ன்விட்டா’ எடுத்துக் கொண்டு வந்து, “நைட் நேரம். அதான் டீ காபி வேண்டாம் என..” எனச் சொல்லி, சம்யுக்தாவுக்கும், கதிருக்கும் தர, நல்லபிள்ளையாக இருவரும் எடுத்துப் பருகினர்.



திடீரென்று சம்யுக்தா, “ஆஹ்..” என அலறியவாறே குளியலறையை நோக்கி ஓட, “என்னடி ஆச்சு?” என அவள் பின்னாடியே ஓடினாள் எழில்மலர். கதிரோ திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.



“நீங்க குடிங்க தம்பி. இப்படித் தான் எதையாவது விளையாட்டுத்தனமா பண்ணிட்டு இருப்பாங்க” என்றார் மாணிக்கம்.



‘இதற்கு மேல் இதைக் குடிப்பதா? ஐயகோ உன் ஜிம் பாடிக்கு வந்த சோதனையைப் பார்த்தாயா கதிர்?’ என மனதுக்குள் புலம்பிக் கொண்டவன், “உங்க வீட்டு உபசரிப்புப் பிரமாதம் ஆன்ட்டி. அங்க தான் நீங்க நிக்கறீங்க” என்றான் கதிர்.



“என்னங்க தம்பி இதுக்குப் போய்” என மாணிக்கம் வெட்கத்துடன் சிரிக்க, “போர்ன்விட்டால என்னடா கலந்து வச்ச?” எனக் கத்தியவாறே சுகந்தனிடம் வந்து நின்றாள் எழில்மலர்.



“ஆஹ் அம்மா போர்ன்விட்டாவா போட்டீங்க” என இப்போது சுகந்தன் அலற, “போர்ன்விட்டா தானேடா. எதுக்கு குண்டு போட்டா மாதிரி ரியாக்ஷன் கொடுக்கிற?” என்றார் உடையை மாற்றிக் கொண்டு வந்த அவன் தந்தை, இரத்தினம்.



“அம்மா, பிளவரோட போர்ன்விட்டாவை எதுக்குமா போட்டீங்க? ஹார்லிக்ஸ் போட்டிருக்க வேண்டியது தானே?” எனச் சுகந்தன் சொல்ல,



“அம்மா, இந்தப் பக்கி என் போர்ன்விட்டால மிளகாய்த்தூள் கலந்து வச்சிருக்கான். சம்யுக்குத் தான் காரமே ஆகாதே” என எழில்மலர் சுகந்தனைப் போட்டுக் கொடுத்தாள்.



வீட்டுக்கு வந்த விருந்தாளியின் முன்னால் இப்படிச் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்களே என மாணிக்கம் இருவரையும் முறைக்க, “ஹலோ, சம்யுக்கு ஆகாதா? வாட் அபௌட் மீ?” எனச் சின்னப் பிள்ளையாய் சண்டைக்கு நின்றான் கதிர்.



உடனே, ‘அதானே பார்த்தேன். இவளோட ஃபிரெண்ட் அப்புறம் எப்படி இருப்பார்?’ என மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டார் மாணிக்கம்.



“சாரி சார். பிளவரைக் குறிவச்சு தாக்கினதுல நீங்க காலியாகிட்டீங்க” என்றான் சுகந்தன்.



“ஹெல்மெட்ல அடி வாங்கினப்பவே ஜாக்கிரைதயா இருந்திருக்கணும். மிஸ்ஸாயிடுச்சு” எனக் கதிர் உச்சுக் கொட்ட, “என்ன நடந்தது?” என்றார் இரத்தினம்.



சுகந்தன் வழிந்துகொண்டே நடந்ததைச் சொல்லி முடிக்க, அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது. அப்போது வாயைக் கழுவிக் கொண்டு வந்த சம்யுக்தாவும், “இந்த கோமாளித்தனத்தால தான் உங்க வீட்டுக்கே வர்றதில்லை. இப்போப் புரியுதா?” எனச் சுகந்தனிடம் சம்யுக்தா பாய,



“மலருக்கு வைக்கிற பொறில வந்து வாலண்டியரா மாட்டிக்கிட்டா நான் என்ன செய்ய முடியும் சிஸ்?” என்றான் சுகந்தன்.



“கிளம்பலாமா?” என எழுந்தவாறே சம்யுக்தாவிடம் கேட்ட கதிர், “ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது” எனப் பாடினான்.



சம்யுக்தாவுக்கும், எழில்மலருக்கும் அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து இரகசியப் புன்முறுவல் சிந்தினர்.



தன் வீட்டை நோக்கிச் செல்கையில் சம்யுக்தாவின் மனதில் பெருத்த மாற்றல் ஏற்பட்டிருந்தது. எதையும் எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் வலுக்க, “தேங்க்ஸ் கதிர்” எனக் காரிலிருந்து இறங்கி, வீட்டினுள் சம்யுக்தா சென்றாள். மணி ஒன்பதரையைத் தாண்டியிருந்தது.



சில சமயம் வேலை விஷயமாக வீட்டுக்கு வரத் தாமதம் ஆகும் என்ற காரணத்தால் சம்யுக்தாவின் பெற்றோர்கள் அவளுக்காகக் காத்திருக்காமல் இரவு உணவை முடித்துவிட்டு தங்கள் அறையில் அமர்ந்து ஏதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.



இன்றும் அப்படித் தான் இருப்பார்கள் என சம்யுக்தா எண்ணியதுக்கு மாறாக, இருவரும் வரவேற்பறையில் காத்திருந்தனர். பின்னே தாங்கள் பார்த்த மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா? எனக் கேட்க வேண்டுமே. இதை எப்படி மறந்தாள்?



ஏற்கனவே தன் மேல் கோபத்தில் இருக்கும் தந்தை, இதைக் கேள்விப்பட்டால், ‘நீயாச்சு. உன் புருசனாச்சு. உன்னைப் பார்த்துக்கற வேலையை என்னால் இனி செய்ய முடியாது. உடனே திருமணம் செய்து கொள்’ என்று பிடிவாதம் பிடிப்பாரோ என நினைத்தவள் அதை முகத்தில் காட்டாமல்,



“என்னப்பா புக் படிக்கலையா?” என்றாள் இயல்பாக.



“உன் ஃபோன் எங்கேடி.எத்தனை தடவைக் கூப்பிடறது?” என அவள் அன்னை மௌனத்தைக் கலைக்க,



‘ஆஹ். இதை எப்படி மறந்தோம்?” எனத் திகைத்தவள், “அது அப்பா.. காணோம்” எனத் திக்கினாள்.



“என்ன. போய் மாப்பிள்ளையைப் பார்த்தியா இல்லையா?” எனக் கேட்ட குணசீலனின் குரலில் ஏகத்துக்குக் கோபம் எட்டிப் பார்த்தது.



“பார்த்தேன்பா. ஆனா, அவருக்கு என்னைப் பிடிக்கலையாம்” எனச் சம்யுக்தா சொன்னதும், சற்றும் யோசிக்காமல் குணசீலனின் கை சக்திக்கு அழைத்தது.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 15
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.