• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் -16

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
453
18
43
india
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -16

மலர்விழியின் சிரிப்பை மொத்த வீடும் பயத்துடன் பார்க்க, இது நாள் வரை சிரிப்பை மறந்தது போல் இருந்தவள் இன்று பைத்தியம் போல் சிரித்துக் கொண்டே இருந்தாள்.

“என்ன எல்லாரும் அப்படிப் பார்க்கறீங்க? அவனோட லவ் நிஜம் தான், அதை விட அவனுக்கு இந்த பொஸிஷன் மேல தான் ஜாஸ்தி லவ், என்னென்னவோ செய்து டார்கெட் ரீச் பண்ணிட்டான். நானும் அவனை லவ் பண்றேன் தான். ஆனால் அதுக்காக அவன் செய்த எல்லாம் சரின்னு என்னால அக்சப்ட் பண்ண முடியாது. குறைநிறைகளோட அப்படியே ஏத்துக்கணும்னு சொல்வதெல்லாம் கதைக்கு வேணா நல்லா இருக்கும். நிஜத்தில் நிச்சயமாக சரிவராது.. அதான் எனக்கு அம்னீஷியா, அதுவும் செலக்டிவ் அம்னீஷியா வந்திடுச்சு” என்று மீண்டும் சிரித்தாள். சிரித்துச் சிரித்து அவள் கண்கள் குளமாகி இருந்தன.

“ஃப்ளவர்…” என்று அருகில் வந்து அவளைத் தொட்டான் கார்த்திக். இன்னும் ரஞ்சன் என்ன செய்தான் என்று வேறு யாருக்கும் தெரியாது. தெரிந்தால் அவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று உணர்ந்து தான் மலர்விழி தானே முடிவெடுத்து விட்டாள்.

“டோன்ட் வொர்ரி கார்த்திக்.‌ எனக்கு எதுவும் ஆகாது. கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் பழைய பரமசிவமா தெளிவாகிடுவேன். அது வரைக்கும் உன் ஓட்டை வாய் ஃப்ரண்டுக்கு கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம்” என்றாள் அவள்.

“எந்த விஷயம் எனக்குத் தெரியக் கூடாது மலர்? உனக்கு எப்பவுமே அம்னீஷியா இல்லை, நீ அப்படி நடிச்சு உன்னைச் சுத்தி இருக்கிற எல்லாரையும் ஏன் டாக்டரைக் கூட நம்ப வச்சுட்டேங்கறதா?” என்று கேட்டபடி உள்ளே வந்தான் ஈஸ்வர்.

அதுவரையில் அவளது பேச்சையும் சிரிப்பையும் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்த குடும்பத்தினருக்கு இப்போது தான் விஷயம் தெளிவாக விளங்கியது.

“ஏய் மலர்.. நீயே எங்களை ஏமாத்தினியா.. நாங்க எவ்வளவு பயந்து போயிட்டோம்னு உனக்குத் தெரியுமா? உடம்பெல்லாம் கொழுப்புடி உனக்கு. எல்லாம் உங்க அப்பா கொடுக்கற செல்லம்” என்று வழக்கம் போல மகளைக் கடிந்து கொண்டார் சுந்தரி. அவளருகில் வந்து மகளைக் கட்டிக் கொண்டு அழுதார்.

சுந்தரியோ ஜனனியோ அவள் ரஞ்சனை பற்றிச் சொன்ன விஷயத்தை பெரிதாக நினைக்கவில்லை. மலருக்கு அம்னீஷியா இல்லை என்பதில் அவர்கள் மகிழ்ந்து போனார்கள். கல்யாணம் அவள் முடிவு தான் என்பதில் தெளிவாக இருந்ததால் ரஞ்சனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

ரஞ்சனின் நல்லவேளையோ என்னவோ ராஜ்மோகன் அங்கே இல்லை. இருந்திருந்தால் மகளிடம் இருந்து ரஞ்சனைப் பற்றிய விஷயங்களை வாங்கி இருப்பார். நீதி நேர்மை என்று பேசி ரஞ்சனை கூண்டில் ஏற்றி வேண்டும் என்று பேசியிருப்பார் என்று கார்த்திக் சந்தோஷப் பட்டான்.

ஆனால் அப்படி இருக்காது என்று மகளிர் அணி சொன்னது. “இது பொண்ணு விஷயம் கார்த்திக். வக்கீல் மாதிரி யோசிக்காமல் மலர்விழியோட அண்ணாவா யோசிங்க. மாமா அப்படித் தான் யோசிப்பார், ஜஸ்ட் லைக் தட் முடிவெடுக்க மாட்டார். அவரே மலரை இன்னும் கொஞ்ச நாள் நடின்னு சொன்னாலும் சொல்லி இருப்பார்” என்று உறுதியாகச் சொன்னாள் ஜனனி.

“எங்க அப்பாவை, தி கிரேட் ராஜ்மோகனை எமோஷனல் அட்டாக் பண்ணமுடியும்னு சொல்றியா? நோ சான்ஸ்” என்று எகிறினான் கார்த்திக்.

“டேய் அடங்குடா, இந்த விஷயத்தில் நாங்க ஒரு பொண்ணுக்கு பேரன்ட்ஸா தான் எதையும் யோசிக்க முடியும். அப்புறம் தான் கொள்கை, கோட்பாடு எல்லாம். மலரே ஒரு முடிவு எடுத்திருக்கான்னா அது கரெக்டா தான் இருக்கும்னு எங்களுக்குத் தெரியும். நீ போய் உன் வேலையைப் பாருடா. என் பொண்ணுக்கு ரெஸ்ட் வேணும். இல்லேன்னா தலைவலி வந்திடும்” என்று மகனை விரட்டி விட்டார் சுந்தரி.

“யூ டூ மம்மி..!” என்றவன் நண்பனை அழைத்துக் கொண்டு தனது அலுவலக அறைக்குள் சென்றான்.

“உனக்குக் கூட மூளை வேலை செஞ்சிருக்கே!” என்று மலரிடம் வம்பு செய்தான் ஈஸ்வர்.

“ஹலோ.. என்ன சார்.. ரொம்ப பேசறீங்க? இந்த கேஸ்ல நீங்களே பாதி விஷயத்துக்கு என் கிட்ட தான் வரணும். மைன்ட் இட்”

“ஹா.. ஹா.. ஹா.. எனிவேஸ், நைஸ் ஜாப் ஃப்ளவர்” என்று அவளைப் பாராட்டிய ஈஸ்வரும் நண்பனின் பின்னோடு சென்றான்.

மலர்விழியும் அவர்களின் பின்னோடு சென்றாள்.

“இப்போ எதுக்கு எங்க பின்னாடி வர்ற?” என்று எகிறினான் கார்த்திக். அவனுக்கு மலர் நடித்தது பிடிக்கவில்லை. ரஞ்சனை அவாய்ட் செய்வதற்காக வீட்டில் அனைவரையும் தண்டித்து விட்டாளே என்ற கோபம்.

“நான் ஒன்னும் உன் கிட்ட பேச வரலை, ஈஸ்வர்! எனக்கு உங்களோட சில விஷயங்களை பேசணும். அதுக்குத் தான் வந்தேன்.”

“யப்பா நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க, அப்புறம் பேசலாம் “ என்று அமைதியாக அமர்ந்து கொண்டான் ஈஸ்வர்.

“நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாத ஈஸ்வர். எவனையோ அவாய்ட் பண்றதுக்காக நம்ம கிட்ட நடிச்சிருக்கா, எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?”

“ஆக்சுவலா நான் யாரையுமே தெரியாத மாதிரி தான் நடிக்கணும்னு ப்ளான் பண்ணினேன். இவன் இப்படி அழறதை பார்க்க சகிக்காதுன்னு தான் ப்ளானை மாத்திட்டேன். ஆக்சுவலா அந்த டாக்டர் தான் எனக்கு டிப்ஸ் கொடுத்தார். பின் மண்டையில அடிபட்டதால நிஜமாகவே அப்படி நடக்க சான்ஸ் இருக்குன்னு சொன்னார். நான் அப்படியே கப்புனு பிடிச்சிட்டேன்” என்றவளைமுறைத்தாலும், தன் தோளோடு அணைத்து அவள் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தான் கார்த்திக்.

“அச்சோ! ஃப்ளவரை அப்படி குட்டாதே, நிஜமாகவே அம்னீஷியா வந்துடப் போகுது. அப்புறம் நீ யாரடா மானிடான்னு கேட்டு வைக்கப் போறா” என்று நண்பனையும் அவன் தங்கையையும் சேர்த்தே கேலி செய்தான் ஈஸ்வர்.

சற்று நேரம் அமைதியாக கழிந்தது.
“இப்போ உனக்கு என்ன பேசணும் மலர்?” என்று ஈஸ்வர் பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

“இட்ஸ் ஸோ சிம்பிள். எங்க ஆஃபீஸ் ல நடந்த சில மரணங்களுக்கு யார் காரணம்னு தெரியணும், அவ்வளவு தான். எனக்கே சில விஷயங்கள் தெரியும். அதெல்லாம் உங்களுக்குத் தெரிய சான்ஸ் இல்லை” என்ற‌‌ மலரை இருவரும் கவலையுடன் பார்த்தனர்.

“ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க ப்ரதர். நான் நல்லா தான் இருக்கேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். ரஞ்சன் கொலை செய்யற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது. அவனோட லட்சியம் எல்லாம் பணம் கூட கிடையாது, பதவி மட்டும்தான். சின்ன வயசுலயே இந்த சாதனை பண்ணிட்டான்ற பேரு. அவ்வளவு தான். அதுக்காக சில தில்லுமுல்லு வேலை பார்த்திருக்கான். அதை வச்சு அவனை நீங்க ஹிட் லிஸ்ட்ல கொண்டு வரக் கூடாது.” ரஞ்சனின் மேல் இருந்த காதல் இந்த நேரத்திலும் அவனுக்காகப் பேச வைத்தது.

“கொலை செய்யறது மட்டும் குற்றம் கிடையாது மலர். அதைத் தூண்டும் விதமாக எதைச் செய்தாலும் குற்றம் தான். இது தற்கொலைக்கும் பொருந்தும்” என்று அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான் கார்த்திக்.

“அப்படி என்ன தூண்டி விட்டான் சொல்லுங்க, எனக்குத் தெரியணும்.”

“முதல்ல நீ சொல்லு, ஏன் ரஞ்சனை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்ன?”

“அது… வந்து.. அவன் அந்த ஜிக்யாஸா & க்ரூப்புக்கு ஏதோ டார்ச்சர் கொடுத்துட்டே இருந்தான். இவன் சொல்றதைக் கேட்கலேன்னா அவங்களை கம்பெனி மேலிடத்தில் எக்ஸ்போஸ் பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கான்.‌”

“அப்போ அந்த அஞ்சு பேர் க்ரூப்புக்கு லீடர் அந்த ஜிக்யாஸா தானா? அந்த பாங்க் ஸ்டேட்மெண்ட்டில் இருந்த பேப் (babe) இவ தானா?” என்று இடைமறித்தான் கார்த்திக்.

“அஞ்சு பேரா.. இல்லை ஜிக்யாஸாவோட சேர்த்து ஆறாகுதே.. யார்.. யார் அது.. எனக்குத் தெரிஞ்சு மூணு பேர் தானே.. யாரோட பாங்க் ஸ்டேட்மெண்ட்” இவை மலர்விழியின் சந்தேகங்கள். கமல் சக்சேனாவைக் கூட அவள் கணக்கில் வைக்கவில்லை. விகாஸ், முரளிதரன் மற்றும் ஜிக்யாஸா மூவரின் மரணம் தான் அவளுக்குத் தெரியும்.

வேறு வழியின்றி ஈஸ்வர் கமல் சக்சேனாவின் கேஸை சுருக்கமாக அவளுக்கு விளக்கினான்.

“ஓ.. அந்த ச்சாங் எங்க ஷாங்காய் ஆஃபீஸ்ல அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல இருந்தான். ஆலிவர் சிட்னி ஆஃபீஸ்ல இருந்தான் . ரீசன்டா தான் இரண்டு பேரும் இறந்தாங்க.. அட்வெஞ்சர் போன் இடத்தில் நடந்த ஆக்சிடன்ட்ல.. நீங்க சொல்றதைப் பார்த்தால் அந்த ஆக்சிடன்ட் கேசுவலா நடந்தது இல்லையா ப்ளான் பண்ணினதா? யாரோட ப்ளான்? எனக்கு இப்போ தான் ஞாபகம் வருது.. அந்த இரண்டு பேரும் ஒரே நாளில் தான் இறந்து போனாங்க”

‘இந்த ரஞ்சன் ஆறு பேரை சாகத் தூண்டி இருக்கானா?’ நினைக்கவே மலர்விழிக்குத் தலை சுற்றியது.

‘ம்ம்.. இந்த ஆறு பேரை மட்டும் இல்லை மலர்.. லிஸ்ட் ரொம்ப பெரிசு.. இவனோட ஹேக்கிங் ஸ்கில்ஸ் வச்சு எல்லாரையும் ஹேக் பண்ணி எக்ஸாம் சென்டர்ல நிறைய குளறுபடி பண்ணி அதை வச்சு நிறைய பேரை கார்னர் பண்ணி இருக்கான். அவன் கிட்ட இருந்து தப்பிச்சது நீ ஒருத்தி தான். உனக்கு இதெல்லாம் தெரியவே வேண்டாம்.’ என்று கார்த்திக்கும் ஈஸ்வரும் முடிவு செய்தனர்.

“ஓகே நீ சொல்லி முடி…”

“லேட்டஸ்ட்டா இரண்டு எக்ஸாம் இங்கே ஆன்லைன் ஆச்சே அதுல கூட அந்த முரளிதரன் ஏதோ ஃபூல் ப்ளே பண்ணிட்டான்னு அவனையும் எமோஷனல் அட்டாக் பண்ணி இருக்கான்.

பெரிய எக்ஸாம் கையை விட்டுப் போனதும் இவனுக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. ஆனால் அந்த விஷயத்தில் தான் எனக்கு பயம்மா இருந்தது, முரளியை இவனே எதுவும் பண்ணிடுவானோன்னு. எக்ஸாம் கைக்கு வர என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொன்னான். ஆனால் அந்த ஜிக்யாஸா என்னைக் கேட்டிருக்கா. அதைப் பார்த்துத் தான் நான் அன்னைக்கு… ” என்ற மலர்விழி அடுத்து பேச முடியாமல் திணறினாள்.

“பாஸ்டர்ட்..” என்று பல்லைக் கடித்த கார்த்திக், “இப்போ என்ன ரஞ்சன் காதலுக்கு மரியாதை செஞ்சுட்டான்னு அவனுக்கு அவார்ட் கொடுக்கணுமா.. ஃப்ராட் .. ஃப்ராட்.. சீட்.. பக்கா 420 அவன். உன் கிட்ட நடந்ததை வச்சு அவனுக்கு நல்லவன்னு சர்டிஃபிகேட் கொடுக்க முடியாது. அன்டர்ஸ்டான்ட்.” என்று கொதித்தான்.

“அப்போ.. கோடிக்கணக்கில் பணம் வாங்கிட்டு பொண்ணுங்களை அனுப்பி வச்சு கம்பெனிக்கு துரோகம் பண்ணவங்களை சும்மா விடணும்னு சொல்றியா.. இவங்க வீட்டு பொண்ணுன்னா அப்படியே துடிக்குது.. இருநூற்று ஐம்பது கோடி.. அதைக் காப்பாற்ற அந்த விகாஸ் என்னென்ன பண்ணினான். இந்த முரளியைப் பாரு. அந்த Last project அவன் தான்னு தெரிஞ்சு ஐம்பது கோடி ரூபாயை ஜஸ்ட் ஒரு நாளில் காலி பண்ணி இருக்கான். இந்தப் பணம் எப்படி வந்ததுன்னு வீட்டுல யாரும் கேட்கலை. இனிமேல் தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம். எப்படி அவங்களால நிம்மதியா இருக்க முடியும்?” ரஞ்சனின் லாயராக மாறி வாதாடினாள் மலர்.

“மலர்.. கூல் டவுன்.. இந்த விஷயத்தை இதோட விட்டுடு. கார்ப்பரேட் வேர்ல்டுல இதெல்லாம் சகஜம்.‌ நாம நேர்ல பார்த்ததால இங்கே விஷயம் தெரியுது. இதைவிட மோசமான விஷயங்கள் எல்லாம் அங்கே நடந்துட்டு தான் இருக்கு.

சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் போய் சேர்ந்தாச்சு. எல்லாமே ஏதோ ஒரு ஆக்சிடன்ட்ல நடந்த சாவு. யாரோ பக்காவா ப்ளான் பண்ணாங்கன்னு நாம சொன்னா, நம்மளைத் தான் லூசு மாதிரி பார்ப்பாங்க. அஃப்கோர்ஸ் அவங்களுக்கு காமன் எதிரி இருக்காங்கன்னு நாம ப்ரூவ் பண்ணலாம். அதுக்கு சம்பந்தப்பட்ட குடும்பம் ஒத்துழைக்கணும். அவங்க கன்சர்ன் இல்லாமல் நாமளா எதுவும் பண்ண முடியாது.

அப்புறம் அந்த பண விஷயம்.. பணம் தானே இங்கே எல்லாம். அதுக்காகத்தானே ஓடிட்டே இருக்கோம். பணம் தானே ஒருத்தனோட சோஷியல் ஸ்டேட்டஸ நிர்ணயம் செய்யுது. அப்படி இருக்கும் போது இட் இஸ் கொயட் நேச்சுரல் , மணி லான்டரிங் எல்லாம் இப்போ ரொம்ப சாதாரணம்.

அப்படி சம்பாதிச்சும் என்ன ஆச்சு பார்.‌ முரளிதரன் மட்டும் தான் கரெக்டா பணத்தை செலவு பண்ணிட்டு போயிருக்கான். மத்தவங்களுக்கு அதுக்கான டைம் கிடைக்கவே இல்லை. ஃபேமிலிக்கு விஷயம் தெரியாது கோடிக்கணக்கில் பணம் அனாமத்தா அப்படியே இருக்கப் போகுது. நாம இந்த டீடெயில்ஸ் கொண்டு போய் யார் கிட்ட கொடுக்க முடியும்? போலீஸ்? சிபிஐ? ஈடி? எங்க கொடுத்தாலும் அந்த ஃபேமிலீஸுக்குப் பிரச்சினை தான். கூடவே நமக்கும் பிரச்சினை ஆகிடும்.

நீயா எதுக்கு இப்படி ஆராய்ச்சி பண்ணினேன்னு முதல் கேள்வி வரும். இத்தனை நாள் என்னத்தைக் கிழிச்சீங்கன்னு கேவலமா கேட்கவும் செய்வாங்க. ரஞ்சன் விஷயத்துல நீ வீட்டுக்கு வெளியே உன் அம்னீஷியாவை கன்டிநியூ பண்ணினாலும் நல்லது தான். ஒரு வேளை நமக்குத் தெரியாமல் இன்னும் யாராவது இருக்கலாம், ஏதாவது அரசியல் தலையீடு கூட இருக்கலாம். அவங்க உன்னை டார்கெட் பண்ணிட்டா ரொம்ப கஷ்டம். நாம அவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஹோப் யூ அன்டர்ஸ்டான்ட்.‌” என்று அனுபவசாலியாக அவளுக்கு அறிவுரை வழங்கினான் ஈஸ்வர்.

அனைத்தையும் தெளிவாக உள்வாங்கிக் கொண்டவள் சரி என்பது போலத் தலையாட்டினாள்.

“எல்லாமே வேஸ்ட் ஆஃப் எனர்ஜி. வேஸ்ட் ஆஃப் டைம்” என்று கையில் இருந்த அத்தனையையும் குப்பைத் தொட்டியில் போட்ட கார்த்திக் அறிந்திருக்க சாத்தியம் இல்லை.

ஈஸ்வர் சொன்னது நிஜம் என்பதை நிரூபிக்க அதே மும்பையில் அதே xyz edu servicesல் இன்னொருவன் தயாராகிக் கொண்டிருந்தான். மீண்டும் ஒரு விகாஸ் வரலாம் அவனும் ஆக்சிடன்ட்டில் மரணம் அடையலாம், இல்லை தற்கொலை செய்து கொள்ளலாம். அந்த மரணத்தை விசாரணை செய்ய இவர்களே செல்லலாம் என்று.. இது முடிவல்ல ஆரம்பம்..

******

நியூ ஜெர்சி, xyz edu services pvt Ltdன் தலைமை அலுவலகம்.

அன்று ரஞ்சன் கோஸ்வாமி சிஈஓவாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து பெரிய பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனது ஹோட்டல் அறையில் தயாராகிக் கொண்டிருந்தான் ரஞ்சன். கண்ணாடி வழியாக தன் உருவத்தைப் பார்த்தவன், “You always Rock Ranjan” என்று சொல்லிக் கொண்டான்.

தனது மொபைலை எடுத்து ஒரு தமிழ் பாடலை ஒலிக்கச் செய்தான். மலர்விழி அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் அது. பாடலின் ஹிந்தி வெர்ஷனை அவன் கேட்டிருக்கிறான். ஆனால் தமிழில் கேட்கும் போது, இவனுக்குப் பொருத்தமாக இருந்ததாகத் தோன்றியது. அன்று முதல் அப்பாடல் அவனது தேசிய கீதமாகிப் போனது. இப்போதும் மலர்விழியின் ஞாபகம் உள்ளுக்குள் நீரூற்று போல் பாய்கிறது. ஆனால் அவள் தான் இவனை வேண்டாம் என்று தெளிவாகச் சொல்லிவிட்டாளே.

******

இந்தப் பதவி ஏற்கும் முன்பு கூட அவளைப் பார்த்துப் பேசினான்.
“ஃப்ளவர்” என்று இவன் அழைத்த போதே இவனைக் கண்டனப் பார்வை பார்த்தாள் அவள்.

“அப்படிப் பார்க்காதே.. நீ மறந்து போயிருந்தாலும். நம்ம லவ் பண்ணது நிஜம். நம்ம எங்கேஜ்மென்ட் ஃபோட்டோஸ், மேரேஜ் இன்விடேஷன் எல்லாம் பார்த்த தானே. உனக்கு ஞாபகம் வரும் போது வரட்டும். ஆனால் இப்போ குறித்த தேதில நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ப்ளீஸ்டா.. எனக்கு இத்தனை பெரிய பதவி கிடைக்கும் போது நீ இல்லாமல் நல்லாவே இருக்காது மலர். சொன்னா கேளேன்..” என்று கெஞ்சினான்.

“நீங்க சொல்றது எல்லாமே சரியாக இருக்கலாம் ரஞ்சன். ஆனால் எனக்கு இப்போ உங்களைப் பார்க்கும் போது பாஸுன்னு மட்டும் தான் ஞாபகம் வருது. வேறெந்த ஃபீலிங்கும் இல்லை. எனக்கு இதே நிலைமை கன்டிநியூ ஆகாதுன்னு சொன்னாலும் எப்போ பழசெல்லாம் நினைவுக்கு வரும்னு கூட தெரியாது. அதுவரைக்கும் என்னால ரோபோ மாதிரி வாழ முடியாது. உங்களுக்கும் அதனால் கஷ்டம் தான். ஸோ, நம்ம ரிலேஷன்ஷிப்பை இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம்.

போற இடத்தில் உங்களுக்கு ஏதாவது க்ளிக் ஆகலாம், எனக்கே வேற யாரையாவது பிடிக்கலாம். அதனால ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்று கையெடுத்துக் கும்பிட்டவள் அங்கே நிற்காமல் சென்று விட்டாள்.

கார்த்திக் எப்போதையும் விட பலமாக அவனை முறைத்து நிற்க சுந்தரி பார்வையால் கெஞ்சினாள்.

ஜனனி நேரடியாகவே சொல்லிவிட்டாள். “நீங்க அவ நிலைமைல இருந்து யோசிச்சு பாருங்க ரஞ்சன். அடிக்கடி உங்களை ஞாபகப்படுத்திக்க நினைச்சா தலைவலி வந்து ரொம்ப அவஸ்தைப் படறா. இப்போ கல்யாணம் ஆனாலும் அவளோட இந்த தலைவலி விடாது. அதைத் தான் நீங்க விரும்பறீங்களா?” என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பி வந்துவிட்டான்.

அவ்வப்போது மலர்விழியின் நினைவுகள் வந்தாலும் நிதர்சனத்தை உணர்ந்து வாழப் பழகிக் கொண்டான்.

அலுவலக விஷயத்தில் அவன் மாறவே இல்லை. என் வழி தனி வழி என்று எப்போதும் போலவே அனைவரையும் டீல் செய்து கொண்டிருக்கிறான்.

“எங்கேயும், யார் கையிலும் சிக்காத வரையில் நீ தனிக் காட்டு ராஜா தான் டா ரஞ்சன்.” என்று சிரித்துக் கொண்டான்.

*****

“ஹூம்.. “ என்று பெருமூச்சு விட்டவனது கவனம் பாட்டில் சென்றது.

“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. ”

சின்னச் சின்ன ஆசை” பாடல் தொடர்ந்து கொண்டிருக்க இவன் வாய்
விட்டு பாடினான்.

“என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை!”

அதே நேரத்தில் மலர்விழி தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தாள்.
 
  • Like
Reactions: Brindha Ganesh