அத்தியாயம் - 16
சம்யுக்தாவிடம் முகத்தில் அடித்த மாதிரி பேசிவிட்டு, வண்டியை சற்றுநேரம் கடற்கரைச் சாலையில் ஓட்டிக் கொண்டு சென்றான் சக்தி.அப்படியே வீட்டுக்குச் செல்ல அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒன்று பெண்ணைப் பார்க்காமல் வந்துவிட்டான் என அன்னை எண்ணக்கூடும். மற்றொன்று, இதே மனநிலமையில் அவனுக்கு வீட்டுக்குச் செல்லவும் இஷ்டமில்லை.
அதனால் வண்டியை ஓரம் கட்டிவிட்டு கடற்கரை மணலில் கால்கள் புதைய இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தான். ஏனோ சம்யுக்தா தான் தனக்குப் பார்த்திருக்கும் பெண் என்றதில் நிம்மதியும், தவிப்பும் ஒருசேர வந்து அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
இவள் ஏன் அடிக்கடி என் கண்களில் பட்டு என்னை இம்சை செய்கிறாள் என அப்போதும் சம்யுக்தாவைத் திட்டிக் கொண்டிருந்தான். அவளை மறக்கவென்று கடற்கரைக்குச் சென்றவன், மறந்தும் கூட வேறு விஷயத்தைப் பற்றி யோசிக்கவில்லை.
அவன் எண்ணம் யாவும் சம்யுக்தாவே நிறைந்திருந்தாள். அவளை முதல் முதலில் சந்தித்ததில் ஆரம்பித்து மாலையில் அவளைவிட்டு வந்தது வரையில் நடந்த நிகழ்வுகளை ஒரு பத்து தடவைகளாவது ஓட்டியிருப்பான். ஆனால் அவளை நினைக்க நினைக்க அவன் நெஞ்சம் நொறுங்கிக் கொண்டிருந்தது.
கடற்கரைக் காற்றின் குளுமையும் அவன் மனதின் வெப்பத்தைக் குறைக்கவில்லை. வெகுதூரம் தான் நடந்து வந்துவிட்டது புரிய, மனநிலையில் பெரிதாக எவ்வித மாற்றமுமில்லாமல் மீண்டும் காரை நோக்கி நடந்தான் சக்தி.
இரவு வீட்டுக்குச் சென்ற சக்தியை தங்கையும், அன்னையும் ஆவலுடன் பார்க்க, ஏதும் சொல்லாமல் விடுவிடுவென்று அவன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் முகத்திலிருந்தே பெண்ணைப் பிடிக்கவில்லை என்பதை இருவரும் உணர்ந்துகொள்ள, ‘நடக்கிறது நடக்கட்டும்’ எனச் சிவகாமி அதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்யவில்லை.
ஆனால் வெண்மதியினால் அப்படி இருக்க முடியவில்லை. சம்யுக்தாவை ஏனோ அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் அவளின் குரலே அவள் பக்கம் இழுக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது கூடுதலாக சித்தார்த்தின் தோழி வேறு.
தன் பொருட்டு அண்ணன் சம்யுக்தாவிடம் சண்டைப் போட்டதனால் அவளே அதைச் சரி செய்ய வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். அண்ணனிடம் பதில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என சக்தி இரவு உணவருந்திக் கொண்டு வரும் வரையில் குட்டி போட்ட பூனையாய் அங்கும், இங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள் வெண்மதி.
இத்தனை நேரம் தொடர்ந்து தங்கையால் நடக்க முடியாதே எனச் சந்தேகம் கொண்ட சக்தி, தங்கை அவனிடம் ஏதோ கேட்கத் தயங்குகிறாள் எனப் புரிந்துக் கொண்டான். “என்னடா மதி? என்ன கேட்கணும்?” என்றான்.
“அண்ணா, நீங்க பார்க்கப் போன பொண்ணு சம்யு. சதா” என வெண்மதி ஆரம்பிக்க, “புரியுதுடா. நீ நினைக்கிற மாதிரி உன் ரெஸ்டாரன்ட் பத்தி தப்பா எழுதின பெண்ணே தான். கவலைப்படாத. அவளை எனக்குப் பிடிக்கலை” என்றான்.
“அதில்ல அண்ணா” என வெண்மதி ஏதோ சொல்ல வர, “இல்லடா சின்னக்குட்டி. நான் சும்மா தட்டிக் கழிக்கலை. அடுத்துப் பார்க்கிற பெண்ணை நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்” எனச் சக்தி சொல்லிக் கொண்டிருக்க அவன் கைப்பேசி இசைதத்து.
“இப்போ போய் நிம்மதியா தூங்கு. காலையில் எனக்கு நேரத்துல போகணும். சாயந்திரம் வந்து நிதானமாகப் பேசலாம்” எனத் தங்கையிடம் சொன்னான். அவனுக்குமே சம்யுக்தாவைப் பற்றி அப்போதைக்குப் பேச வேண்டாம் என்று தோன்றியது.
அதனால் வந்த அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றான்.
‘ச்சே. இந்த அண்ணன் ஏன் எதையும் பேச விடமாட்டேங்கிறார்? சம்யு மேலே எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அவங்களை எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லணும். ’ என நினைத்தவாறே வெண்மதி அண்ணனைத் தொந்தரவு செய்யாமல் படுக்கச் சென்றாள்.
‘ஹலோ’ என்ற சக்தியின் குரலில், “என் பெண்ணைப் பிடிக்கலைன்னு சொன்னீங்களா?” என மறுமுனையில் இருந்த சம்யுக்தாவின் தந்தை, குணசீலன் கேட்கவும், சற்றுத் தடுமாறித் தான் போனான்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றவன், “ஆமாம் சொன்னேன். ஆனால் நீங்க இப்படிக் கவலைப்படற மாதிரி தானே உங்க பொண்ணு பிடிக்கலைன்னு சொன்ன பையனைப் பெத்தவங்களுக்கும் இருக்கும்” என்றான் சக்தி.
அதைக் கேட்ட குணசீலன் என்ன சொல்வதென்று திகைத்து விழித்தார். சக்தியை அழைப்பார் என்று எதிர்பார்க்காத சம்யுக்தா, “அப்பா என்னப் பண்ணறீங்க?” எனக் கைப்பேசியைப் பறித்து அணைத்தாள்.
ஆனால் சக்தி சொன்ன பதிலில் தொய்ந்து போய் சோபாவில் அமர்ந்த குணசீலன், ‘இவனுக்கு எப்படி அந்த விஷயம் தெரிந்தது. ஒருவேளை மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேடுவதால் அன்று நடந்ததை கேசவமூர்த்தி இவனிடம் சொல்லியிருப்பானோ?’ என்று கலங்கினார்.
ஆனாலும் அடுத்த நொடியே, ‘ச்சே ச்சே. அவன் அப்படியெல்லாம் செய்பவன் அல்ல’ என மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டார்.
“ஏன்டா, இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? உனக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தது தப்பா? என்னால கேசவனை ஏறெடுத்துப் பார்க்க முடியலைம்மா. வேலைக்குப் போகவே பிடிக்கலை” என மகளிடம் சொன்னார்.
“நீ போறப்போ இதைப் போட்டுட்டுப் போகலையே. இது யாரோட டிரஸ்..?” என அப்போது தான் மகளின் மாற்று ஆடை கவனத்தை ஈர்க்க, அவள் அன்னை அதட்டினார்.
“அம்மா” என விழிக்க, “என்னடி நடந்தது?” என அவள் அன்னை அதட்ட, அதற்குமேல் அவளால் உண்மையை மறைக்க முடியவில்லை.
மகள் சொன்னதைக் கேட்டு ஆழப்பெருமூச்சு விட்ட குணசீலன், “இதுக்குத் தான் தெரிஞ்ச பையனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன். கேட்டியா?” என மீண்டும் அதிலேயே போய் நின்றார்.
“அப்பா, அடுத்து நீங்க யாரைப் பார்த்து கல்யாணம் செய்யச் சொன்னாலும் செய்யறேன்” என அழுகுரலில் சத்தியம் செய்யாத குறையாகச் சம்யுக்தா சொல்ல, “இப்படி அவ சொல்லற எல்லாத்தையும் நம்பி அவளுக்குச் செல்லம் கொடுங்க” எனப் பொறிந்தார் அவள் அன்னை.
எதற்கும் கலங்காமல் தைரியமாக இருக்கும் தன் மகள் கலங்கியதில் சற்றே மனம் இளகியவர், “விடும்மா. நம்ம பெண்ணை நாம் சுதத்திரமாகவும், நம்பிக்கையோடும் வளர்த்திருக்கோம்.. நம்ம பெயரை ஒருநாளும் களங்கப்படுத்தமாட்டா” என்றார் மனைவியிடம் குணசீலன்,
“எப்படி உன் ‘பேக்’கை வாங்கப் போற? இப்படிப் பொறுப்பற்ற ஆளுங்களை எப்படி நம்பறது?” எனச் சக்தியைப் பற்றி எரிச்சலில் வினவினார்.
“நான் பார்த்துக்கறேன்ப்பா. மீண்டும் அவரைக் கூப்பிட்டு வைக்காதீங்க. அவரோட தங்கச்சி சித்துவுக்குத் தெரிஞ்ச பொண்ணு.. அவ மூலமா வாங்கிக்கிறேன். கவலைப்படாதீங்க” எனச் சமாதானம் செய்த பிறகே அவளை விட்டார்.
தந்தையிடம் இருந்து ஒருவழியாகத் தப்பி, “அம்மா, உங்க ஃபோனை ரெண்டு நாளுக்கு வச்சுக்கிறேன். ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. செல்ல அம்மா” என அதை எடுத்தவள், அன்னையின் கன்னங்களில் முத்தங்களைப் பெருஞ்சாரலாய்க் கொட்டி, கொதித்துக் கொண்டிருந்த அவர் மனதைக் குளிர்வித்துவிட்டுச் சென்றாள்.
“ஒண்ணு பேசி அப்பாவைக் கவுத்திடு. இல்லை, முத்தம் வச்சு அம்மாவைக் கவுத்திடு” என அன்னை சொல்வது காதுகளில் உரச, புன்சிரிப்புடன் தன்னறைக்குச் சென்றாள் சம்யுக்தா.
‘இனிமேல் வேலைக்குப் போகாதே. இரவில் வெகுநேரம் வெளியில் இருக்காதே.’ என அவள் அன்னை அவளிடம் சொல்லாதது ஆறுதலாக இருந்தது. தந்தை அப்படிச் சொல்ல மாட்டார் என்று அவளுக்குத் தெரியும். அவரின் உந்துதலால் தானே அவள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தது.
இளஞ்சூட்டில் குளித்த பின்னர் பழுதாயிருந்த புத்துணர்வு அவளுக்கு மீண்டும் சீரானது. முதலில் தன் மேலதிகாரியிடம், இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாகக் கேட்டுக் கொண்டாள்.
எப்பொழுதாவது நடப்பது தான். அதுவும் சம்யுக்தா தேவையில்லாமல் இப்படிச் செய்ய மாட்டாள் என்ற காரணத்தால் அவளுக்கு உடனே இந்தச் சலுகைகள் கிடைத்துவிடும்.
அன்று மாலை நிகழ்ச்சியில் கதிர் சொன்னதை அசைப்போட்டவாறே படுக்கையில் சரிந்த சம்யுக்தா, “தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் கதிர். ஐம் பைன்” எனக் கதிர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் அன்னையின் கைப்பேசியிலிருந்து அவனுக்குச் செய்தி அனுப்பினாள் சம்யுக்தா.
“இதைப் படிச்சுட்டுச் சிரிங்க. அப்படியே தூங்குங்க. ‘ஒரு டாக்டர்கிட்டே போன பேஷன்ட் ஒருத்தர், ‘டாக்டர், என் பிளாஸ்டிக் பக்கெட்ல ஓட்டை விழுந்துடுச்சு’ன்னு சொன்னாராம்.
அதற்கு அந்த டாக்டர். ‘அதை ஏன் என்கிட்டே சொல்லறீங்க’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பேஷன்ட்டா வந்தவன், ‘நீங்க தான் பிளாஸ்டிக் சர்ஜரில கிங்ன்னு சொன்னாங்க.. அதான்’ எனச் சொன்னான். ‘குட்நைட்.’” என ஓர் நகைச்சுவைத் துணுக்கோடு, எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தான் கதிர்.
அதைப் படித்த சம்யுக்தா புன்சிரிப்புடனும், நிம்மதியுடனும் உறங்கவும் செய்தாள். ஆனால் அந்த நிம்மதி மறுநாளே விடைபெற்றுக் கொண்டு போனது.
****
சம்யுக்தாவை இறக்கிவிட்ட கதிர் நேராகத் தன் வீட்டுக்குச் சென்று அன்னையிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டான். அது அவனின் வழக்கம். அவன் அன்னை பத்மா அவனுக்கு ஓர் நல்ல தோழியாக இருந்தார். அதனால் எவ்வித தயக்கமுமில்லாமல் அனைத்தையும் பகிர்ந்து கொள்வான்.
அன்னையிடம் பேசிக் கொண்டிருந்த கதிரின் கைப்பேசிக்கு எழில்மலரிடம் இருந்து அழைப்பு வர, ‘அட.. நம்ம பிளவர்” என அவன் முகமெல்லாம் புன்னகைப் பூசிக் கொண்டது. அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
பேசிக் கொண்டிருந்த அன்னையை மறந்துவிட்டு தன்னறைக்குச் செல்லவும், ‘யார் அந்த பிளவர்?’ என பத்மா யோசனையாகச் செல்லும் மகனையே பார்த்திருந்தார். பின்னர், ‘சரி.. விஷயம் வெளியில் வராமலா போய்விடும்’ என அவரும் நகர்ந்தார்.
“சொல்லுங்க மலர்” எனக் கதிர் இயல்பாகச் சொல்ல, “வந்து. சம்யுக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு தேங்க்ஸ்” என்றாள் மறுமுனையிலிருந்தவள்.
“யூ சீ ஒன்ஸ் அப்பான் எ டைம். நான் என்.எஸ்.எஸ்.ல இருந்தேன். அதனால் நமக்கெல்லாம் ஹெல்ப் பண்ணறது செல்பி எடுக்கற மாதிரி.. ரொம்ப ஈசி.. அதையெல்லாம் பெரிசு பண்ணக்கூடாது” எனத் தொடர்ந்து அவன் சாகசக் கதைகளை அவிழ்த்துவிட்டான் கதிர்.
அதாவது ஒருதரம் கதிர் வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது ஓர் மரத்தின் அடியில் கூட்டம் கூடியிருந்தது. அதைப் பார்த்து ஓரம் கட்டிய கதிரின் பார்வையில் உயரே இருந்த ஓர்
மரக்கிளையில் ஓர் சிறுவன் நின்று கொண்டிருந்தது கண்களில் பட்டது.
உடனே தன் வீர, தீர சாகசங்களைக் கையாண்டு கதிர் மரத்திலேறி அந்தச் சிறுவனை மீட்டுக் கொண்டு கீழே வந்தான். கீழே வந்த சிறுவன், “இப்போ எதுக்கு அண்ணா என்னைக் கீழே தூக்கிட்டு வந்தீங்க?” எனக் கதிரிடம் கேட்க,
“என்னப்பா இப்படிச் சொல்லற, உன்னால் இறங்க முடியாமல் தானே திண்டாடிட்டு இருந்த.?” என்றான் கதிர்.
“நான் திண்டாடிட்டு இருந்தேனா. போங்கண்ணா. அங்க மரத்தில் ஓர் பூனைக் குட்டி மாட்டிக்கிச்சு. அதைக் காப்பாத்தப் போன என்னை இறக்கிவிட்டுட்டீங்க. நீங்களே போய் அந்தப் பூனைக் குட்டியையும் காப்பத்துங்க” என்றான் சிறுவன்.
கதிர் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்த எழில்மலர், “சம்யு வீட்டில் வேற ஒண்ணும் பிரச்சனையில்லையே?” எனக் கேட்டாள்.
“இல்லை. உங்க ஃபிரெண்ட்டை நீங்களே கூப்பிட்டுக் கேட்க வேண்டியது தானே?” என்றான் கதிர் ஓர்வித மர்மப் புன்னகையுடன்.
“அவகிட்டே ஃபோன் இல்லையே” என முதல் மாணவியாக பதில் தந்த வேகத்திலேயே அவள் இதை ஏற்கவே யோசித்து, பதிலையும் தயார் செய்து வைத்திருக்கிறாள் எனக் கதிருக்குப் புரிந்தது.
“அவங்க அம்மாவோட ஃபோன் இருக்கே. வீட்டுப் ஃபோன் இருக்கே” (உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு என்ன பாடுபடப் போறாளோ.)
“ஓ ஆமாமில்லை.? ஆனா சம்யு வீட்டில் என்ன சொல்லி வச்சாளோ” என அவள் இழுத்த இழுப்பிலேயே அவளுக்கு அவனுடன் மேலும் பேச வேண்டும் என்பதைக் கதிருக்குப் பறைசாற்றியது.
இருந்தாலும் அவளைச் சீண்டும் விதமாக, “வேற ஒண்ணுமில்லையே. வச்சிடறேன்” எனக் கதிர் சொன்னதும், “அவ்வளவு தானா?” என எழில்மலர் மனதில் நினைத்தைக் சத்தமாகக் கேட்டுவிட்டாள்.
“ம்ம்ம். வேற என்ன பேசணும்.? இருட்டிடுச்சுப் பாருங்க. லேட்டாத் தூங்கினா பூச்சாண்டி வந்து பயமுறுத்துவான்” எனக் கதிர் சொல்ல, அதற்குமேல் எழில்மலரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
“இதுக்குத் தான் என்கிட்டே வந்து உங்க லவ்வைச் சொன்னீங்களா? சரி லவ் சொன்னோமே பதில் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் என ஒரு எதிர்பார்ப்பு வேண்டாம்?.
என்னமோ லவ் அட் பர்ஸ்ட் சைட்ல நம்பிக்கை இருக்கா, தும்பிக்கை இருக்கான்னு கேள்வி வேற? பேஸ்புக்ல ஃபிரெண்ட் ரிகுஸ்ட் அனுப்பினா லிமிட் தாண்டிடுச்சாம்” எனப் படபடவென்று பேசிக் கொண்டிருந்தாள் எழில்மலர்.
“அது அய்யாவுக்கு இப்போ நிறைய ஃபேன்ஸ் யூ நோ. கண்ணு வைக்கக் கூடாது” எனக் கதிர் சொல்ல, “பார்த்து. ஃபேன் தலையில வந்து விழப்போகுது” என்றாள்.
“இது லவ்வும்மா லவ்வு. நோ பொறாமை. ஃபிரெண்ட் லிஸ்ட்ல தானே உன்னைச் சேர்த்துக்க முடியலை.. ஆனால் என் மனசைத் தான் உன்கிட்டே முழுசா தந்துட்டேனே.. உனக்கு வேண்டியதைப் போட்டு நிரப்பிக்கோ. அப்படியே கன்னத்துல ரெண்டு இச்சு தந்து, உன்னைப் பிடிச்சுருக்குன்னு சொல்லிடு” என்றான் கதிர் அலட்டாமல்.
“என்ன? நான் எப்போ உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்?”
“இன்னைக்கு என்னைப் பார்க்கத் தானே அந்த ஹோட்டலுக்கு வந்தே?” எனக் கதிர் கேட்க, “உங்களைப் பார்க்கவா? என் கிளையன்ட் ஒருத்தர் வரேன்ன்னாரு. திடீர்ன்னு வர முடியாமல் போயிடுச்சு” என்றாள் எழில்மலர், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில்.
“இந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம் செல்லம். அன்னைக்கே நீயும், சம்யுவும் என் நிகழ்ச்சியைப் பார்த்ததா சம்யுக்தா சொன்னாங்க.. என் மனம் மெண்டல் ஆகலை. நீ அன்னைக்கு நிஜமா அங்கே உட்கார்ந்திருந்த. இல்லையா?” என்றான்.
அகப்பட்டுவிட்டோமே என எழில்மலர் விழித்துக் கொண்டிருக்க, “என்னடா? என்னைப் பிடிச்சிருக்கு தானே? லவ் பண்ணுவ தானே? இல்லை, திரும்பவும் அப்பிளிகேஷன் ஃபில் பண்ணணுமா?” எனக் கதிர் கேட்க,
“என்ன திரும்பவுமா?” என எழில்மலர் அலற, “தப்பா நினைச்சுக்காத. திரும்பவும் உன்கிட்டே அப்பிளிகேஷன் போடணுமா?ன்னு கேட்டேன்” என்றான் கதிர்.
“ம்ம்ம். பதிலை நாளைக்குச் சொல்லறேன். உங்க பூச்சாண்டி வந்து பிடிக்கிறதுக்கு முன்னாடி இழுத்துப் போர்த்திட்டுத் தூங்குங்க” என எழில்மலர் அழைப்பை வைக்க, புன்முறுவலுடன் கதிர் படுக்கையில் விழுந்தான்.
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 16
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 16
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.