அத்தியாயம்- 2
"அர்ஜூன்! பார்த்து வண்டி ஓட்டிட்டு வா. மெதுவா வந்தா போதும். பெட்ரோல் செக் பண்ணி ஆச்சா? கையில கேஷ் வச்சிருக்கேல்ல? லைசென்ஸ எடுத்துட்டியா?ஆதியையும் கூட்டிட்டு வர, கேர் ஃபுல்லா வா. வழி தெரியுமில்ல? இல்லேன்னா என் பின்னாடியே வா, வேண்டாம் வேண்டாம் நான் பைபாஸ்ல போவேன். நீ மெயின் ரோட்டிலயே வா.
ஆல்வேஸ் கீப் லெஃப்ட், சிக்னல் ஸ்கிப் பண்ணாத. ஹெல்மெட் எடுத்துட்டியா? அதை முதல்ல மாட்டு. அன்ட் முக்கியமா வண்டி ஓட்டும் போது மொபைல் யூஸ் பண்ணாத. காதுல என்ன ஹெட் ஃபோனா? முதல்ல அதைக் கழட்டி என் கிட்ட தா. ஃபோன் வந்தா வண்டிய ஓரமா நிப்பாட்டி பேசு. இல்லேன்னா வீட்டுக்கு வந்து பேசினால் போதும்.
என்னடா ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் நிக்கிற. இவன் என்ன பேசறது, நான் என்ன கேட்கிறதுன்னு நினைப்பா? உன் வயசு அப்படித் தான் நினைக்கச் சொல்லும். பட்டதுக்கு அப்புறம் தான் புரியும். வசு! பாத்தியா இவன, இவ்வளவு பேசறேன், சிலை மாதிரி நிக்கறான்" படபடவென்று பொரிந்து தள்ளினான் விஷ்ணு. டீன் ஏஜ் பிள்ளைகளை வைத்திருக்கும் தகப்பனின் ஆதங்கம், ஆனால் அதைச் சொல்லும் விதம்??
"ஸ்ஸ்ஸ் ஷப்பா! முடியல. ஸ்பீடு பத்தி யார் பேசறதுன்னே இல்லாமல் போச்சு" முணுமுணுத்தான் இளையவன் ஆதித்யா. அர்ஜூனிடம் இருந்து பதில் இல்லாமல் போக, விஷ்ணுவின் முகம் கோபத்தில் சிவந்து கொண்டே போனது. எரிமலை எந்நேரத்திலும் வெடித்து சிதற வாய்ப்பு இருப்பதை அறிந்த வசுதா, ஓர் அர்த்தமுள்ள பார்வையை அர்ஜூனின் பக்கம் வீச, அவன் உஷாராகி பவ்யமாக பதில் சொன்னான்.
"பா! நான் கரெக்டா வந்துடுவேன். இரண்டு மூணு தடவை அந்த வீட்டுக்கு வண்டியில போயிட்டு வந்திருக்கேன். இல்லேன்னா இருக்கவே இருக்கு கூகுள் மேப்ஸ். நீங்க கிளம்புங்க. லாரி அப்போவே கிளம்பிடுச்சு பாருங்க"
"கூகுள் மேப் ஆ? வண்டி ஓட்டும் போது மொபைல் யூஸ் பண்ணாதன்னு இப்போ தானே சொன்னேன்"
"அப்பா! நான் தான் பாக்கணும்னு இல்லை. ஆதி பாத்து சொல்லுவான். நீங்க கிளம்புங்க"
"ம்ம்.. பாத்து வந்து சேரு. அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை ஃபோன் பண்ணி எங்க வந்துட்டு இருக்கேன்னு சொல்லு" என்று "ஃபைனல் டச்" கொடுத்து விட்டு விஷ்ணுவின் கார் சீறிப் பாய்ந்தது.
"இவ்வளவு நேரமா காதுல ஓட்டைய போடற அளவுக்கு அட்வைஸ் பண்ணினாரு. இப்போ, நிதானமா போங்கன்னு இவருக்கு யாரு சொல்றது. அந்த ஹெல்மெட்ட கொடுடா. இதோட சேர்த்து மண்டையும் கழண்டு வந்துடும் போல, அவ்வளவு டைட்டா இருக்கு. டேய் ஆதி ஏறிட்டியாடா? பாத்து உட்காரு"
"கிளம்பலாம் அர்ஜூன்"
"இது ஒரு வண்டி, இதை ஓட்டுறதுக்கு ஆயிரத்தெட்டு அட்வைஸ். தேவை தான் எனக்கு. இதுல நாப்பதுல போறதே பெரிசு. இதுல ஸ்பீடா போகாதேன்னு அட்வைஸ் வேற"
"அப்பாகிட்ட சொல்லித் தான் பாரேன்"
"என்னத்த பாக்கணும்?"
"அதான், இது ஒரு வண்டினு அலுப்பா சொன்னியே? அதைத்தான்.." வாய் மூடிச் சிரித்தான் ஆதித்யா.
"டேய்! டேய்! உனக்கேன்டா என் மேல இவ்வளவு காண்டு. எங்க அப்பாவோட வண்டி, இந்த வண்டில எங்க அப்பாவப் பாக்கிறேன், பூப்போல ஹேண்டில் பண்ணுன்னு லெக்சர் கொடுப்பார், தேவையா எனக்கு?"
"அப்போ புலம்பாம ஓட்டு"
"உன்னை நம்பவே முடியாதுடா. அப்பா கேட்டா, சேம் சைட் கோல் போடுவ. நான் எதுக்கும் வாயைத் திறக்காமலே வரேன்"
பிள்ளைகள் நிதானமாக வர, தகப்பனின் கைகளில் கார் பறந்து கொண்டிருந்தது. வண்டியில் ஏறியவுடன் சீட் பெல்ட் போட்டுக்கொண்ட வசுதா, எதற்கும் இருக்கட்டும் என்று வாய்க்கு ஒரு பெரிய பூட்டாகப் போட்டு, கண்களை இறுக மூடி, சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். புது வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக இருந்ததால் தான் இந்த மௌன சாமியார் வேஷம், இல்லையென்றால் வாயைத் திறந்து விட்டு, "ஷட்டப் வசு! கொஞ்சம்நேவிகேட்டர் வேலை பார்க்காமல் வரயா?" என்று வாங்கிக் கட்டிக் கொள்வாள். இப்போது கூட பொறுமை எப்போது வேண்டுமானாலும் போய்விடக் கூடிய அபாயக் கட்டத்தில் இருந்தது.
"இடியட். … , … சிக்னல் கண்ணுக்கு தெரியுதா இல்லையா? ரெட் போட்டது கூடத் தெரியாமல் க்ராஸ் பண்ற?
ஸ்லோ வெஹிகில்ஸ் எதுக்கு ஃபாஸ்ட் லேன்ல வரீங்க?
லெஃப்ட்ல ஓவர்டேக் பண்றியே அறிவிருக்கா?
கவர்ன்மென்ட் பஸ்ஸ ஓட்டினா ரோடே அவங்களுக்கு தான்னு நினைப்பு. வழி விடறாங்களா பாரு?"
'பூட்டின காருக்குள்ள உட்கார்ந்து கைய ஆட்டி ஆட்டிக் கத்தினா அவங்களுக்கு கேட்கவா போகுது. பக்கத்தில இருக்கிற நம்ம காது ஜவ்வு தான் கிழியுது. இவர் கை ஆட்டுறதுல நாம அறை வாங்கிடாம இருக்கணுமேன்னு ஜாக்கிரதையா உட்கார வேண்டியது இருக்கு. இப்படி எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்கன்னு யாரு இவருக்கு சொல்றது' மைன்ட் வாய்ஸில் மட்டுமே பேசிக்கொண்டு வந்தாள் வசுதா.
"பசங்க கிளம்பி அரை மணி நேரம் ஆகி இருக்கும்ல? ஃபோன் பண்ணல பாரு. இவனுக்கெல்லாம் எப்போ தான் பொறுப்பு வரப்போகுதோ? எங்க வராங்கன்னு நீ ஃபோன் பண்ணி கேளு"
"……….."
"உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் வசு"
"அவனுக்கு தான் ட்ரை பண்றேன், …... ஃபுல் ரிங் போயிட்டு கட் ஆகிடுச்சு"
"கட் ஆனா மறுபடியும் கூப்பிடு. வந்த ஃபோன எடுக்காமல் அவன் என்ன தான் பண்றான்"
"ஏங்க, இது உங்களுக்கே நல்லா இருக்கா? வண்டிய நிறுத்திட்டு தான் பேசணும்னு நீங்க தானே சொல்லி விட்டீங்க. வெயிட் பண்ணுங்க, அவனே கூப்பிடுவான்"
சற்று நேரத்தில் பாடத் தொடங்கிய அவளது மொபைலை முன் ஜாக்கிரதை முத்தம்மாவாக ஸ்பீக்கரில் போட்டாள்.
"மா! நாங்க …… கிட்ட வந்துட்டு இருக்கோம். ரொம்ப ட்ராஃபிக்கா இருக்கு. நான் கட் பண்றேன்" அவ்வளவு தான், அதுவும் ஆதித்யாவின் குரலில்.
"ட்ராஃபிக்கா இருந்தா எதுக்கு ஃபோன் பண்றான். அப்புறம் பேச வேண்டியது தானே" அதற்கும் புலம்பினான் விஷ்ணு.
'உங்களைத் திருத்தவே முடியாது' மறுபடியும் மௌனத்திற்குச் சென்றாள் வசுதா.
பிள்ளைகளிடமிருந்து அடுத்த கவனம், பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிக்குத் திரும்பியது. டோல் கேட் தாண்டி செக்கிங்கில் நின்ற வண்டியைக் கண்டு அவசரமாகக் காரை ஓரங்கட்டினான். "சாதாரண செக்கிங் தான் சார். முடிஞ்சிருச்சு. அதான் நம்ம கிட்ட பேப்பர்ஸ் எல்லாம் பக்காவா இருக்கே. நீங்க கிளம்புங்க சார். இதோ வந்திடறோம்" டிரைவரின் உத்தரவாதம் கிடைத்த பின்னரே அமைதியாக தனது காரைக் கிளப்பினான்.
எல்லாரும் ஒரே நேரத்தில் வந்து சேர, நல்ல நேரம் முடிவதற்குள் புது வீட்டில் காலடி எடுத்து வைத்தது வசுதாவின் குடும்பம். அடுத்த அரை மணி நேரம் ஆண்கள் எல்லாம் லாரியைக் காலி செய்வதில் இருக்க, வீட்டின் ஒரே பெண்ணரசியான(!) வசுதாவை அவளுக்கே அவளுக்கான கடமைகள் அழைத்தன.
தயாராக வைத்திருந்த விளக்கை ஏற்றி, கேஸ் அடுப்பை அவசரமாகத் தேடியெடுத்து சிலிண்டரோடு இணைத்து, கையோடு கொண்டு வந்திருந்த பாலைக் காய்ச்சி முடித்த போது, "மா! தயவு செஞ்சு வெறும் பாலைக் கொண்டு வந்து நீட்டாத. காஃபி போட்டுக் கொடு. அதான் நேத்து வந்த போதே காஃபி பவுடர், ஃபில்டர் எல்லாம் கொண்டு வந்து கிச்சன்ல வச்சிட்டு போனியே" இதெல்லாம் கரெக்டா ஞாபகம் இருக்கும்.
"அம்மா எனக்கு எதுவானாலும் ஓகே. ஆனால் தயவு செஞ்சு கொஞ்சம் சூடா கொடு" அண்ணனின் குரலைத் தொடர்ந்தான் தம்பி. சொன்னது போதாது என்று அவளருகில் வந்து நின்று கொண்டான்.
"வசு! காஃபியோட ஏதாவது ஸ்நாக்ஸும் எடுத்துட்டு வாயேன். ரொம்ப டயர்டா இருக்கு. எதையாவது உள்ள போட்டே ஆகணும். அப்போ தான் அடுத்த வேலையைப் பார்க்க முடியும்" தன் பங்கிற்கு விஷ்ணுவும் குரல் கொடுத்ததில் கோபத்தின் உச்சிக்கே சென்றாள் வசுதா. ஆனாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. விஷ்ணுவின் பசி வரலாறு அப்படி. பசி வந்தால் அவனுக்கு பத்தல்ல பல விஷயங்கள் பறந்து போகும்.
'ஹலோ! என்னை எல்லாரும் என்னன்னு நினைச்சிட்டு இருக்கீங்க? நானும் தான் சொல்லப் போனால் நான் மட்டும் தான் கிட்டத்தட்ட ஆறு மாசமா ஓயாத வேலை பாத்துருக்கேன். நீ தான் இப்போ வேலைக்குப் போகலையேன்னு சொல்லிச் சொல்லியே எல்லா வேலையும் என் தலைல கட்டியாச்சு. அதுக்கு முன்னாடி ஏதோ இவர் தான் எல்லா வேலையும் பாத்த மாதிரி' மானசீகமாக தோளில் இடித்துக் கொண்டாள்.
'உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி வலிக்குது. சட்டுபுட்டுனு வேலையை முடிச்சிட்டு படுத்திடணும், ஹூம்.. தூக்கம் வருமான்னு தான் தெரியலை.
என்னால காஃபி எல்லாம் போட முடியாது. ஸ்நாக்ஸ் வேணும்னா எழுந்து வந்து எடுத்துக்கோங்க' காரசாரமாக மனதுக்குள் நினைத்தவள் வெளியே சத்தம் இல்லாமல் மூவரின் விருப்பத்தையும் நிறைவேற்றி வைத்தாள்.
இது தான் அவள், இனி ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும் வரை, வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். அதற்கான எந்த பிரதிபலிப்பும் எங்கே இருந்தும் வராது. பல நேரங்களில், இவர்கள் தன்னை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று தோன்றும், அதே நேரத்தில் 'இவங்களுக்கு நான் செய்யாமல் யார் செய்வா?' என்றும் தோன்றும்.
காபியை அடுத்து பலதரப்பட்ட டெக்னீஷியன்களின் படையெடுப்பு. டிவி, ஏசி, ஃபிரிட்ஜ், வாட்டர் ப்யூரிஃபையர் என்று அனைத்து பொருட்களும் வேலை செய்யத் தயாரான போது நேரம், இரவு ஒன்பது மணியைத் தொட்டது.
"வசு! இன்னைக்கு இவ்வளவு போதும். சாப்பிட்டு படுக்கலாம். நாளைக்கு எல்லாருக்கும் லீவு தானே. திங்க்ஸை எல்லாரும் சேர்ந்தே எடுத்து வைக்கலாம்" குடும்பத் தலைவனாக விஷ்ணு முடிவெடுக்க, அடுத்த பிரச்சினை ஆரம்பமானது.
"என்ன டிபன் செய்யப் போற வசு?"
"மாவு அரைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன். இட்லி மட்டும் செஞ்சிட்டா பொடி வச்சு சாப்பிட்டுக்கலாம்"
"இட்லியா? வசு ப்ளீஸ்! கோவிச்சுக்காம கொஞ்சம் தோசை பண்ணிடேன். சைட் டிஷ்ஷூன்னு எதுவும் செய்ய வேண்டாம். பொடியே போதும். முடிஞ்சா பொடி தோசையாவே பண்ணிடு. பட் இட்லி வேண்டாமே ப்ளீஸ்!" சொல்லிக் கொண்டே டிவியை ஆன் செய்தான்.
"வசு! டிட்டிஎச் வேலிடிட்டி இரண்டு நாளில் முடியுது. மறக்காமல் ரிசார்ஜ் பண்ணிடு" அவளுக்கு அடுத்த டாஸ்க்கைக் கொடுத்து விட்ட திருப்தியுடன் புதிதாக வாங்கிய ரெக்ளைனரில் சாய்ந்து, ஸ்டார் மூவீஸில் கேசினோ ராயலை ஆயிரத்து எட்டாவது தடவையாகப் பார்க்கத் தொடங்கினான் விஷ்ணு.
"மா! எனக்கு இட்லி தான் வேணும். ரொம்ப நாளாவே காரச் சட்னி செய்யறேன்னு ஏமாத்திட்டே இருக்க. இன்னைக்காவது செய்யேன்" இது இளையவன் ஆதித்யா. அவன் ஒரு இட்லி பைத்தியம். காரச் சட்னியும் கூட இருந்தால் கணக்கில்லாமல் இட்லிகளை உள்ளே தள்ளுவான். வசுதா அவனைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்க்க, "இப்போ என்ன? சட்னி செய்ய முடியாது. மிக்சி பேக்கிங்ல இருக்கு, வீட்டுல வெங்காயம் இல்லை, கூடவே
உங்களுக்கு ரொம்பவே முடியலை, இன்னொரு நாள் செஞ்சு தருவீங்க, அதானே. ம்ச்… போங்கம்மா...இதையே எத்தனை நாளுக்கு சொல்லுவீங்க?"
"டேய் ஆதி! உனக்கு அம்மாவைப் பத்தி தெரியாதா? இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுன்னு கிடையாது, எப்போதுமே ஒரே பேச்சு தான். அப்படித் தானே மா"
"எதையாச்சும் சீக்கிரம் செஞ்சு தாங்க. நான் எல்லாருக்கும் தட்டு எடுத்து வைக்கிறேன்" என்று ஆதித்யா பொறுப்பாக நகர்ந்தான்.
"அர்ஜூன்! அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றியா? நான் ஒரு சைட் இட்லி வைக்கிறேன், நீ தோசை செய்யறியா?"
"சரி மா. எனக்கும் இட்லியே வச்சிடுங்க. அப்பாக்கு மட்டும் தோசை செய்யலாம்"
பிள்ளைகளுடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்தவள் வேலையில் கவனமாக,
"வசு! டிபனுக்கு முன்னாடி ஒரு காஃபி கிடைக்குமா?" என்ற குரலில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டாள்.
"ஹலோ! என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? எனக்கும் உங்களை மாதிரியே இரண்டு கை தான் இருக்கு. இவர் பெரிய மகாராஜா மாதிரி உட்கார்ந்து டிவி பார்த்துட்டே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டே இருப்பார். நாம ஹாலுக்கும் கிச்சனுக்கும் நடையா நடந்துட்டே இருக்கணும். நம்ம காலெல்லாம் இரும்புல செஞ்சு இருக்கு, வலிக்கவே வலிக்காது. இவருக்கு மட்டும் கார் ஓட்டுறதுலயே காலெல்லாம் வெட்டிப் போட்டுடலாம் போல வலிக்கும்" புலம்பித் தள்ளியவள், "காஃபி வேணும்னா வந்து போட்டுக்கோங்க" என்று முடித்தாள்.
"இதை முதல்லயே சொல்ல வேண்டியது தானே" என்று வந்தவன், இட்லி தோசை இரண்டும் தயாராவது கண்டு புருவம் உயர்த்தினாலும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அதற்கும் ஒரு புலம்பலைக் கேட்க அவன் தயாராக இல்லை.
"பால் இவ்வளவு தான் இருக்கா?"
"உங்களுக்கு மட்டும் தானே, இது போதும்"
"ஃபில்டர்ல தண்ணி ஊத்தணுமா? டிகாஷன் வச்ச பாத்திரம் காலியா இருக்கு?"
"டிகாஷன் ஃபில்டர்லயே இருக்கும் பாருங்க. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். பாத்து மிக்ஸ் பண்ணுங்க"
"சர்க்கரை எங்க இருக்கு?"
"இதுக்கு பேரு தான் சர்க்கரை. கண்ணு முன்னாடி இருக்கு, அதுவும் கண்ணாடி ஜார்ல"
"கேஸ் ஸ்டவ்ல சின்ன பர்னர் ஃப்ரீயா தானே இருக்கு? காஃபியை அதுல வச்சிக்கட்டுமா? கொஞ்சம் தள்ளிக்கோ"
"அந்த ஸ்டூல் மேல இன்டக்ஷன் ஸ்டவ் பாக்ஸோட இருக்கு பாருங்க. அதை எடுத்து யூஸ் பண்ணிக்கோங்க"
"ம்ம்"
"இந்த ப்ளக்ல மாட்டலாமா?"
"ம்ம்"
"இதே பாத்திரத்தில சூடு பண்ணலாமா?"
"…..……."
"ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்றியா பாரு. அப்பாடா காஃபி ரெடி. வசு! டம்ளர மட்டும் எடுத்துக் கொடுத்திடேன்"
வசுதா உக்கிரமாக முறைத்ததில், "எங்க இருக்குன்னு தெரிஞ்சா எடுத்துக்க மாட்டேனா?" என்றான் பரிதாபமாக.
கண்முன்னே வரிசையாக, சைஸ் வாரியாக அடுக்கப்பட்டிருந்த டம்ளர்களில் இருந்து ஒன்றை எடுத்து "டங்"ஙென்று அவள் வைத்த வேகத்தில், அடுத்த கேள்வி தொண்டைக்குழியில் புதைந்தது.
"ஒரு காஃபிக்கு இவ்வளவு அக்கப்போரா?"
"என்ன வசு, இப்படி சொல்லிட்ட? எவ்வளவு பெரிய ப்ராசஸ் பாரு. உலகத்திலேயே ரொம்பக் கஷ்டமான வேலை கரெக்டா காஃபியை மிக்ஸ் பண்றது தான், யூ நோ?"
"நாளைக்கு காலைல வரைக்கும் இது ஞாபகம் இருக்குமா?"
"…."
"அதான், காஃபி போடறது கஷ்டமான வேலைன்னு"
"ஹி…ஹி.. எனக்கு தான் கஷ்டமான வேலை. உனக்கு இதெல்லாம் ஜூஜூபிடா!" ஒரு அசட்டுச் சிரிப்புடன் அவளது கன்னம் தட்டி விட்டு, காஃபியை எடுத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தான்.
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று முணுமுணுத்தவாறு வேலையில் கவனமானாள்.
அனைவரும் இட்லி, தோசைகளைக் காலி செய்து விட்டு நித்திரைக்குச் சென்றனர். இல்லை இல்லை.. செல்ல முயற்சி செய்தனர்.
"என்னங்க இதென்ன இவ்வளவு அமைதியா இருக்கு? இப்படி இருந்தால் எப்படி தூங்க முடியும்?"
"அதானே நாள் பூராவும் வண்டிச் சத்தம் கேட்டுட்டே இருக்கும். நம்ம வீட்டு வாசல்ல வந்து எல்லா வண்டியும் பிரேக் போடும். டெய்லி அட்லீஸ்ட் இரண்டு வண்டியாவது ஸ்கிட் ஆகி ரோட்டுல விழும். மணிக்கு இரண்டாவது ஆம்புலன்ஸ் அலறிட்டே போகும். அதையெல்லாம் தாலாட்டு மாதிரி அனுபவிச்சிட்டு இப்போ ஏதோ காட்டுக்குள்ள வந்தது மாதிரி இருக்கு மா"
"வீடு வாங்கும் போதே இதையெல்லாம் செக் பண்ணி இருக்கணும். இட்ஸ் டூ லேட் யூ நோ"
"அம்மா! நமக்குத் தான் தூக்கம் வரல. அங்க பாருங்க அப்பாவ. குறட்டை விட ஆரம்பிச்சாச்சு. இனிமேல் இந்த சத்தத்தை வச்சுத் தூங்க வேண்டியது தான்"
"ஹூம். கொடுத்து வச்ச மகராசன். எவ்வளவு வேலை செஞ்சாலும், நமக்கு இந்த தூக்கம் வருவேனாங்குது" பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள்.
நேரம் காலம் பார்க்காமல் மொபைல் ஃபோனைக் கையில் எடுத்த பிள்ளைகளைக் கண்டு, "டேய் சீக்கிரம் தூங்கிடுங்கடா. அப்பா காலைல சீக்கிரமே எழுந்திடுவார், அப்புறம் யாரையும் தூங்க விடமாட்டார்" என்று ஒரு எச்சரிக்கை விடுத்துத் தானும் படுக்கையில் சாய்ந்தாள்.
ஒரு வழியாக அனைவரும் தூங்கி விட, அவர்களிடம் எதையோ எதிர்பார்த்திருந்த வசுதாவும் ஏமாற்றத்துடன் உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை அதே எதிர்பார்ப்புடன் எழுந்த வசுதா, கணவன் தனக்கு முன்னரே எழுந்து விட்டதை அறிந்து மனம் சுணங்கினாள்.
"எழுந்துட்டியா வசு! பாத்திரம் எல்லாம் தேய்ச்சு வச்சிட்டேன். பாலைக் காய்ச்சி இருக்கேன். சுவாமிக்கு எடுத்து வைக்கணும், எந்த கப்புல எடுத்து வைக்கிறதுன்னு தெரியலை.
மோட்டார் போட்டு ஒரு அரைமணி நேரம் ஓட விட்டேன். போதுமான்னு தெரியலை. போகப் போக செக் பண்ணி பாக்கணும். செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டேன்.
காஃபி கலந்து குடேன். அப்படியே ஏதாவது டிபனும் சீக்கிரம் பண்ணிடு. சாப்பிட்டு நம்ம க்ளீனிங் வேலையை ஆரம்பிச்சுடலாம்.
லஞ்ச் வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம். ஓகேவா?"
ஒரு சின்னத் தலையாட்டலுடன் வேலைகளைத் தொடங்கினாள். நியூஸ் பேப்பருக்குள் மூழ்கி இருந்தவனின் கையில் காஃபியைத் திணிக்க, அவன் அதை உறிஞ்சியபடி பேப்பரை எழுத்து விடாமல் படிக்கலானான். வசுதாவைக் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கமாக நடப்பது தான், ஆனாலும் இந்த பாழாய்ப் போன மனது எதிர்பார்க்கிறதே, என்ன செய்ய?
"ஹேப்பி பர்த்டே மா!" வாழ்த்திய கையோடு, இன்னைக்கு என்ன ஸ்பெஷலா செய்ய போற?" என்ற கேள்வியோடு வந்த பிள்ளைகளிடம், "தேங்க்ஸ் டா" ஒரு புன்னகையுடன் காஃபியை கொடுத்து விட்டு, டிபன் வேலையை ஆரம்பித்தாள்.
"ஹேய் ஹேப்பி பர்த்டே வசு! விஷ் பண்ணலேன்னு தான் இவ்வளவு நேரம் மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருந்தியா? நீ என்ன சின்ன குழந்தையா?"
"ஏன், ஒரு விஷ் பண்றதுக்கு, சின்ன கிஃப்ட் கொடுக்கிறதுக்கெல்லாம் கூட சின்ன குழந்தையாத் தான் இருக்கணுமா? உங்களுக்கு நான் எல்லாம் பண்றேன், எனக்கு தான் எப்போதும் எதுவும் கிடையாது"
"இதையும் சேர்த்து சொல்லிடு வசு! கல்யாணத்துக்கு அப்புறம் தான் எதுவும் கிடையாது. அதுக்கு முன்னாடி உன் பர்த்டேவ பிரமாதமா கொண்டாடினாங்க, நான் தான் உனக்கு எதுவுமே வாங்கித் தரலை.
உன் கிட்ட நிறைய தடவை சொல்லியாச்சு.
என்னைப் பொறுத்தவரை பர்த்டேங்கிறது, நம்ம லைஃப்ல ஜஸ்ட் அனதர் டே. நீ எப்படி கேட்டாலும் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நான் இப்படி தான் இருப்பேன். எதிர்பார்த்து ஏமாந்து போகாத. நீதான் நிறைய புது டிரஸ் வச்சிருப்பியே, இப்போ தேவையில்லாம சீன் போடறத விட்டு, அதில் ஒன்ன எடுத்து உடுத்திக்கோ. சாயங்காலம் கோவிலுக்கு போகலாம்"
அழுவது அவளுக்கு பிடிக்காது. அவளது நாற்பத்தைந்து வயதில் அவள் அழுத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இப்போது அழுகை வரும் போல இருந்தது. பல்லைக் கடித்தபடி திரும்பி நின்றிருந்தவளை அவனது அடுத்த கேள்வி எட்டி சலிப்பை ஏற்படுத்தியது.
"என்ன ஸ்வீட் பண்ணப் போற வசு?"
"எதுக்கு?"
"எதுக்கா? உன் பர்த்டேக்குத் தான். காஜூ கத்லி பண்றியா? போன வாரம் தான் நிறைய காஜூ வாங்கிட்டு வந்தோமே?"
"ஐ.. காஜூ கத்லி நிறைய பண்ணு மா. நான் அப்படியே சாப்பிடுவேன்" இது ஆதித்யா.
"எனக்கு காஜூ கத்லி பிடிக்காது" வசுதா முணுமுணுக்க அதைக் கச்சிதமாக வழிமொழிந்தான் அர்ஜூன், கூடவே என்ன பிடிக்கும் என்ற குறிப்போடு.
"எனக்கும் அம்மாவுக்கும் மில்க் ஸ்வீட் தான் பிடிக்கும்"
"ஓ.. அப்படின்னா, காஜூ கத்லி கூட ஒரு மில்க் ஸ்வீட்டும் பண்ணிடு. எல்லாருக்கும் திருப்தி ஆகிடும்"
"இன்னும் பாத்திரம் எல்லாம் எடுத்து வைக்கலை. நீங்க எல்லாரும் நாளைக்கு அவங்கவங்க வேலையை பாத்துட்டு கிளம்பிடுவீங்க. ஸ்வீட் பண்ணிட்டு இருந்தா அந்த வேலையெல்லாம் எப்போ பாக்கிறது?"
"அதுவும் சரி தான். அப்போ பால் பாயசம் பண்ணிடு"
"அப்பா இன்னைக்கு அம்மாவோட பர்த்டே, அவங்களுக்கு பிடிச்சது தான் செய்யணும். உங்களுக்கு பிடிச்சதா நீங்க லிஸ்ட் போடக் கூடாது. அம்மா நீங்க ஜவ்வரிசி பாயாசமே பண்ணுங்க" சம்மன் இல்லாமலே ஆஜரான அர்ஜூன் அவன் பங்கைச் சிறப்பாகச் செய்தான், தாய்க்கு பிடித்தவை எல்லாம் அவனுக்கும் பிடிக்குமே, அது தான் இந்த சேவைக்கு காரணம்.
"எந்த சைட் போனாலும் இப்படி செஞ்சா எப்படிடா?" மகனிடம் கேள்வி கேட்டவன், "ஸ்வீட்டையும் வெளியே வாங்கிக்கலாம். நீ டிபனை வேலையைப் பாரு" என்று பேச்சை முடித்துக் கொண்டு போனான்.
எட்டு மணிக்கே டிபனை முடித்தவர்களுக்கு அந்த நாள் இறக்கையில்லாமல் பறந்தது. மதிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டவர்கள் தீயாய் வேலை செய்ததில்,
அன்றைய தினத்தின் முடிவில் சமையறையும் ஆண்களின் உடை அலமாரிகளும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. வசுதாவின் அலமாரிப் பக்கம் திரும்பி பார்க்கும் தைரியம் அங்கே யாருக்கும் இருக்கவில்லை.
இத்தனைக்கும் இடையே பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃபோன் கால், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று குவிந்த வண்ணம் இருக்க, அவ்வப்போது அவற்றுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது தந்தையின் அழைப்பு இன்னும் வரவில்லை, அவரும் மாப்பிள்ளைக்கு தப்பாத மாமனார் தான். ஞாபக மறதி என்பது இவர்களது ஏக போகச் சொத்து, அதுவே பல நேரங்களில் வரப்பிரசாதமாகத் தோன்றியதும் உண்டு.
பொறுத்துப் பார்த்தவள் அவரை அழைக்க, "இன்று …. கிழமை. மௌன விரதம்" என்று குறுஞ்செய்தி வந்தது. "ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று அடுத்த கேள்வி தொடர்ந்தது. "இன்று எனது பிறந்த நாள்" என்று பதில் அளித்தவள் அதற்கு வந்த பதிலில் மொபைலைத் தூக்கி எறிந்தாள். சில நொடிகளுக்குப் பின் சமாதானமாகி அதனை எடுக்கும் போது அது உயிரை விட்டிருந்தது.
இத்தனை வருடங்களில் எதையாவது, அட்லீஸ்ட் ஒரு டிவி ரிமோட்டையாவது எறிந்து பழகி இருக்க வேண்டும். முன் அனுபவம் இல்லாமல் செய்த காரியம் இப்படி நஷ்டத்தில் முடிந்து விட்டதே.. ஐயகோ! பிள்ளைகள் இருவரும் கைகொட்டிச் சிரிக்க, "இப்போ தான் வீடு வாங்கிட்டு வந்திருக்கோம். இஎம்ஐக்கே பாதி சம்பளம் போயிடும். இப்படியா பொறுப்பில்லாமல் நடந்துப்ப? எதைத் தூக்கி எறியறோம்னு பார்க்க மாட்டியா. புது மொபைல் எல்லாம் கேட்டுடாத. இப்போதைக்கு சான்ஸே இல்லை" தூக்கி எறியும் துறையில் ஏகப்பட்ட முன் அனுபவம் பெற்ற விஷ்ணு பொறுப்பை பற்றிய பாடம் நடத்தினான்.
'எல்லாம் இந்த அப்பாவால வந்தது. ஒரு நிமிஷம் பேசியிருந்தால் என்ன? பெரிய மௌன விரதம்" மனதுக்குள் தந்தையைப் பாராட்டியவளுக்கு(!) அவரது பதில் செய்தி ஞாபகம் வர, இன்னும் எதைப் போட்டு உடைப்பது என்று சுற்றிலும் தேடினாள்.
"அப்பாவோட ஆசிர்வாதங்கள். நாளை உன்னுடன் பேசுகிறேன்"
'அப்பாஆஆஆஆஆ இன்னைக்கு பர்த்டேக்கு நாளைக்கு பேசி என்ன ஆகப்போகுது' என்று பல்லைக் கடித்தாள்.
இதே அப்பா அவளது பிறந்த நாளுக்கென்று ஒரு வாரம் முன்பே சுளையாகப் பணம் அனுப்பி விட்டதை இந்த மேடத்துக்கு யாராவது ஞாபகப் படுத்தினால் என்ன? வல்லாரை கீரைக்கே ஞாபகம் இல்லாமல் போனால் வேறு யாருக்கு ஞாபகம் இருக்கும்.
எந்த வயதிலும் அப்பா என்பவர் மகளுக்கு.…
Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.