• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 2

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
457
19
43
india
அத்தியாயம் – 2

மாபெரும் வீரன் என்றால் காதலைப் பெரும் படை கொண்டு துரத்திவிட முடியுமா என்ன? உலகின் பெரும் பகுதியை வென்ற அலெக்சாண்டரையும் தனது விழியால் வீழ்த்தக் காத்திருந்தாள் ஒருத்தி.

பாரசீக வெற்றிக்குப் பின்னர் பல சிறிய தேசங்களை வென்ற அலெக்சாண்டரின் படை மலை நாடான பாக்தீரியா வந்து சேர்ந்த்து.

அங்கு ஏற்கனவே அலெக்சாண்டரின் வீரதீரச் செயல்கள் பரவிக் கிடந்தன. கிட்டத்தட்ட அவனை ஒரு மாவீரனாகவே அவர்கள் கருதி வந்தனர். இன்னும் சொல்லப் போனால் கடவுளுக்கு இணையாக நினைத்தனர்.

அதிலும் இளம் வயதில் குதிரை பியூசெபாலஸை சமயோசித புத்தியுடன் அடக்கி, அதனை இன்றும் தனது உற்ற நண்பனைப் போல பாவித்து வரும் தகவல்கள் கூட அவர்களை எட்டியிருந்தது.

இதனால் அலெக்சாண்டரையும் அவரது படையினரையும் அவர்கள் மாலையிட்டு வரவேற்றனர். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் அவர்களுக்கு அன்றிரவு ஒரு விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

மாலை மங்கியதும் மது வகைகள் தாராளமாகப் பரிமாறப்பட்டன. மலையின மக்களின் அன்பு உபசாரத்தில் உச்சி குளிர்ந்து போயினர் படை வீரர்கள். அவர்கள் அதுவரை அறிந்திராத பல்வேறு மாமிச வகையறாக்கள், ஆட்டம் பாட்டம் வேறு.

தளபதி பார்மீனியோ மற்றும் ஹெபஸ்டின் உள்ளிட்ட நண்பர்கள் புடைசூழச் சென்றிருந்தான் அலெக்சாண்டர்.

அங்கு ஒரு பெண் நடனமாடிக் கொண்டிருந்தாள். நல்ல அழகு. சற்று அழுத்தமாகத் தொட்டலே ரத்தம் வரும் என்பது போன்ற நிறத்தில் இருந்தாள். நல்ல உயரம். எல்லாவிதத்திலும் அலெக்சாண்டருக்குப் பொருத்தமானவளாகத் தோன்றினாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க அலெக்சாண்டருக்குள் ஏதேதோ மாற்றங்கள். அதுவரை போர் ஒன்றை மட்டுமே நினைவில் கொண்டு திரிந்த அலெக்சாண்டருக்கு இது புதிய நிகழ்வாகத் தோன்றியது.

அலெக்சாண்டரின் பார்வை அவளிடமே பதிந்திருந்தது. தளபதி பார்மீனியோ மற்றும் அலெக்சாண்டரின் நண்பன் ஹெபஸ்டின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அவள் எனது மகள் ராக்சேனா” என்று பாக்தீரிய அரசன் அறிமுகம் செய்து வைத்தான்.

அலெக்சாண்டர் அவளைப் பார்க்க, அவளும் இவர் மீது ஒரு கூர்மையான பார்வையைப் படர விட்டாள். அவளது பார்வை அவனை எடை போட்டது.

பார்த்த மாத்திரத்தில் கட்டுக்கோப்பான உடல் என்பது புரிந்தது. நல்ல நிறம், சராசரி கிரேக்கர்களை விட உயரம் குறைவாக இருக்கும் என்று தோன்றியது. தலை ஒருபுறமாகச் சாய்ந்து இருந்ததோ? மஞ்சள் நிறத்தில் சுருள் சுருளாக நீண்ட முடி தோள் வரையில் நீண்டு இருந்தது, ஆழ்ந்த பழுப்பு நிறக் கண்கள் பார்ப்பவரை வசீகரித்தது. தாடியோ மீசையோ இல்லாத மழுமழுவென்ற முகம் அவளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.

அலெக்சாண்டரும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அது என்ன பார்வை? அந்தப் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவளை மீண்டும் பார்க்கத் தூண்டியது. இதுநாள்வரை இதுமாதிரியான சுகத்தை அவன் அனுபவித்ததே கிடையாது. எனவே மீண்டும் அவளைப் பார்க்கத் தூண்டியது மனம்.

நடனம் முடிவடைந்து, விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண்ணோடு உடனடியாகப் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது.

அடுத்தகணமே சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராக்சேனா அலெக்சாண்டர் முன்பு தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள். ஆயுதங்களைப் பிடிக்க மட்டுமே பழகியிருந்த அலெக்சாண்டரின் விரல்கள், முதன்முறையாக ஒரு பெண்ணை ஸ்பரிசிக்க நீண்டன. அவளது தோள் மேல் கை வைத்தான். முகம் உயர்த்தினாள். கண்களில் வெட்கமும் பயமும் போரிட்டுக் கொண்டிருந்தன.

குதிரையை அடக்கி சாதனை படைத்த அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டது முதல் தனது மனதில் அலெக்சாண்டருக்கு ஒரு தனி இடம் கொடுத்து வந்ததை நாணத்துடன் தெரியப்படுத்தினாள்.

இன்னும் சொல்லப் போனால், “மணந்தால் மாவீரனான உங்களைத்தான் மணப்பேன். இல்லையென்றால் கன்னியாகவே காலம் கழிப்பேன்” என்றாள். அப்போது அவள் கண்களில் தெரிந்த உறுதியைக் கண்டு அலெக்சாண்டரின் புருவங்கள் ஆச்சரியத்தில் நிமிர்ந்தன. அறிமுக மொழிகள், காதல் மொழிகளாக நீண்டன. அவளிடமிருந்த இறுக்கம், நெருக்கமாக உருமாறியது. கிரேக்கர்களின் வழக்கமாக ஜோதிடரை வரவழைத்து ஒரு நல்ல நாள் பார்த்து மலைஜாதியினர் முன்னிலையில் அலெக்சாண்டருக்கும் ராக்சேனாவுக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

ஆசியாவை வெற்றி கொண்ட அலெக்சாண்டர் பாரசீக மரபுகளை ஏற்கத் தொடங்கி இருந்தான். இதில் உள்ளூர் ஆடைகள் அணிவதும், அரசரின் முன்னிலையில் சாஷ்டாங்கமாக வணங்க வேண்டிய ‘ப்ரோஸ்கைநீசிஸ்’ என்ற வழக்கை அறிமுகப்படுத்துவதும் அடங்கும்.

மாசிடோனியர்களின் பார்வையில், ப்ரோஸ்கைநீசிஸ் என்பது தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய செயல். அது கடவுள்களுக்கு மட்டுமே பொருத்தமானது, மனித அரசர்களுக்கு அல்ல. தங்களை சுதந்திரமாகப் பிறந்த வீரர்களாகவும், அரசரின் நெருங்கிய தோழர்களாகவும் கருதிய மூத்த அதிகாரிகள், இந்த மாற்றங்களைப் பற்றி கடும் வெறுப்படைந்தனர். பிலிப் காலத்தில் நிலவிய மரபுகளை இவை பாதிப்பதோடு, இராணுவத்தில் தங்களுக்கு அச்சுறுத்துலாக இருக்கின்றன என அவர்கள் நம்பினர்.

க்ளைடஸ், இந்த மாற்றங்களுக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்த முக்கிய நபர்களில் ஒருவராக மாறினார். குறிப்பாக, பாரசீக வழக்கங்களில் பயிற்சி பெற்ற இளையவர்கள் முக்கிய நிர்வாக மற்றும் இராணுவப் பதவிகளுக்கு உயர்த்தப்படுவதைக் கண்ட அவர், அரசவையின் கிழக்குமயமாக்கலை மாசிடோனிய மரபுகளின் துரோகமாகவே கருதினார். பிலிப்பின் போர்களில் பங்கேற்ற அனுபவமுள்ள வீரர்கள் பலரும் முக்கிய பதவிகளில் இருந்து தாங்கள் ஒதுக்கப்படுவதைப் பார்த்தனர்.

ஏற்கெனவே நடந்திருந்த சில தூக்குத் தண்டனைகள், அரசருக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால் அவர் யாராக இருந்தாலும், தண்டனை நிச்சயம் என்று புரிய வைத்தன.. அதே போல், அரிஸ்டாட்டிலின் உறவினருமான அரசவை வரலாற்றாசிரியர் காலிஸ்தனீஸ், ப்ரோஸ்கைநீசிஸை விமர்சித்ததற்காக அலெக்சாண்டரின் கோபத்திற்கு இரையாகியதும் இந்த அச்சத்தை மேலும் வலுப்படுத்தியது.

ஏற்கனவே பயணத்தின் திசை குறித்துக் கவலைப்பட்டிருந்த க்ளைடஸ், மேலும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினார். தன்னை முக்கிய இராணுவத்திலிருந்து மாற்றி நியமிக்க அலெக்சாண்டர் திட்டமிட்டிருப்பதை அறிந்தபோது, தனது எதிர்ப்புக் குரலை மௌனமாக்கும் முயற்சி அது என்பதைப் புரிந்து கொண்டார்.

டேரியஸ் இரண்டாம் முறையாகத் தோற்று ஓடிய போது அலெக்சாண்டர் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். மதுபானம் பெருமளவில் அருந்தப்பட்டது; உரையாடல் வம்சப் பெருமை மற்றும் புகழ் தேடல் போன்ற விஷயங்களுக்குத் திரும்பியது. அரசவையினர் அலெக்சாண்டரைக் கடவுளாகப் புகழ்ந்து, அவன் தந்தை பிலிப்பின் சாதனைகளைக் குறைத்துப் பேசினர்.

மிகுந்த போதையில் இருந்த க்ளைடஸ், இதை பிலிப்பை அவமதிப்பதும், வரலாற்றைத் திட்டமிட்டு மாற்றுவதுமாகக் கருதினார். அவர் எழுந்து, “அலெக்சாண்டரின் வெற்றிகள் எல்லாம் அவரது தந்தை அமைத்த அடித்தளங்களுக்கும், மாசிடோனிய இராணுவத்தின் விசுவாசத்திற்குமே கடன்பட்டவை” என்று வெளிப்படையாக அறிவித்தார்.

அரங்கம் முழுவதும் மௌனம் நிலவியது. மதுவின் பிடியில் இருந்த அலெக்சாண்டர், முதலில் அவமதிப்புகளைப் புறக்கணிக்க முயன்றான். ஆனால் வாதம் தீவிரமடைந்தபோது, க்ளைடஸின் கோபம் மேலும் பெருகியது.

அரசவையினர் அவரை அடக்க முயன்று வெளியே அழைத்துச் சென்றனர்; ஆனால் க்ளைடஸ் தப்பித்து மீண்டும் அரங்கத்திற்குள் வந்து தனது விமர்சனத்தைத் தொடர்ந்தார். அலெக்சாண்டர் பதிலுக்கு கடும் அவமதிப்புகளைச் சொன்னதோடு, அருகிலிருந்த காவலரிடமிருந்து ஒரு ஆயுதத்தைப் பிடித்தார்.

பின்வந்த நிகழ்வு, கோபமும் காயமடைந்த அகந்தையும் உண்டாக்கிய திடீர் வெடிப்பாக நிகழ்ந்தது.

அலெக்சாண்டர் ஒரு ஈட்டியை எடுத்து எறிந்தான், அது க்ளைடஸின் மார்பில் பாய்ந்தது. ஈட்டி அவரது இதயத்தைத் துளைத்ததால், க்ளைடஸ் உடனடியாகத் தரையில் விழுந்து உயிரிழந்தார்.

அரங்கத்தில் இருந்த அதிகாரிகளும் ஆலோசகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அரசன், தனது மிக நெருங்கிய விசுவாசமான நண்பர்களில் ஒருவரை, இவ்வளவு வெளிப்படையாகவும் வன்முறையாகவும் கொல்வான் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஒருகாலத்தில் அலெக்சாண்டரின் உயிரைக் காப்பாற்றிய மனிதன், இப்போது அவரது கையால் உயிரிழந்திருந்தான். இந்தச் சம்பவம் அதைப் பார்த்த அனைவரையும் உலுக்கியது.

சில நாட்களிலேயே தனது அடுத்த இலக்கு பற்றி யோசிக்கத் தொடங்கினான் அலெக்சாண்டர். இந்தியா, அவனது தந்தை பிலிப்பின் கனவு. அதனால் தனது கனவாகவும் மாறிவிட்ட தேசம். இன்னும் வெல்லப்படாத தேசம். கனவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியில் அலெக்சாண்டரின் மனம் துள்ளிக் குதித்தது. இந்த முறை போருக்குத் தனது நெருங்கிய நண்பரான ஹெபஸ்டினை படைத்தளபதியாக நியமித்தான்.

“வீரர்களே! தயாராக இருங்கள். அடுத்து நாம் வெகு நாட்களாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியா மீது போர் தொடுக்கப் போகிறோம். ஒரு மிகப் பெரிய சொர்க்கத்தை நாம் பார்க்கப் போகிறோம்” என்று உற்சாகமாகவும், ஆர்வத்துடனும் பேசினார் அலெக்சாண்டர். கிழக்கு நோக்கிப் பயணம். இந்தியாவை வெல்ல இப்படித்தான் சென்றாக வேண்டும். ராக்சேனாவையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

கிளம்பும் முன்பு அலெக்சாண்டர் தனது படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டான். பிலிப்பின் காலத்தில் இருந்தே மாசிடோனிய ராணுவத்தில் தெளிவான பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று, வீரர்களைச் சுழற்சி முறையில் போருக்குப் பயன்படுத்துவது என்பது. ஒரு போரில் கலந்து கொண்ட வீரகளுக்கு தாய்நாடு திரும்பி ஓய்வு எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படிச் செல்லும் போது போரில் கொள்ளையடித்த பொருட்களில் தங்கள் பங்கைத் தங்களுடன் எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு. இப்போதும் அப்படியே, படையில் ஒரு பாதி தங்கள் நாடு திரும்பி இருந்தனர், மறுபாதி அடுத்த போரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்தனர்.

அப்படித் தொடர்ந்தவர்கள், இப்போது பெர்சியாவில் இருந்து கொள்ளையடித்த பொருட்களைச் சுமக்க முடியாமல் அவர்கள் திணறுவதை கவனித்தான். இந்தப் படையினர் அனைவரும் மிக சமீபத்தில் கிரேக்கத்தில் இருந்து வந்து இணைந்து கொண்டவர்கள். போரும் அதன் மூலம் கிடைக்கும் பரிசுகளும் அவர்களுக்குப் புதியது. இத்தனை பொருட்களையும் தூக்கிக் கொண்டு இந்தியா முழுவதும் பயணிப்பது இயலாத காரியம் என்று அவனுக்குத் தெரியும். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது அவனுக்கு.

“உடனடியாக என்னுடைய சொத்துகளை எல்லாம் எடுத்து வந்து ஒரே இடத்தில் குவியுங்கள்” என்று கட்டளையிட்டன்.

ஏன், எதற்காக என்று கேள்வி கேட்டுப் பழக்கமில்லை மாசிடோனிய வீரர்களுக்கு, குறிப்பாக அலெக்சாண்டர் விஷயத்தில். எல்லாவற்றையும் குவித்தார்கள். அடுத்ததாக எல்லா வீரர்களுடைய உடமைகள், சொத்துகளையும் எடுத்து வந்து குவிக்கச் சொன்னான். அதுவும் மறுபேசில்லாமல் நடந்தது.

“எல்லாவற்றையும் தீக்கு இரையாக்குங்கள்” என்று அடுத்த கட்டளை பிறந்த போது வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எதற்காக இப்படிச் செய்யச் சொல்கிறார்? ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் உத்தரவிட்டது மன்னன். எதிர்த்தால் தலை உடலில் இருக்காது.

அதனால், அடுத்த நொடியே அனைத்துப் பொருள்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டது. சிலர் அதில் ஓர் அர்த்தம் இருக்கும் என்று தங்களுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டார்கள். மேலும் சிலரோ அர்த்தமற்ற செயல் என்று உள்ளுக்குள் புலம்பினார்கள். சொத்துகள் எல்லாவற்றையும் நெருப்புக்கு இரையாகும்வரை காத்திருந்தான் அலெக்சாண்டர்.

“வீரர்களே, விலைமதிப்பு மிகுந்த பொருள்கள் எல்லாம் நம் கண் முன்னால் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன என்று கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் இந்தியாவில் பெறப் போகும் செல்வங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இவை எல்லாம் வெகு அற்பமானவை. நாம் அடுத்து செல்ல இருப்பது சொர்க்க பூமிக்கு. மாணிக்கங்களாலும் வைர வைடூரியங்களாலும் நிறைந்த இந்தியாவுக்கு” என்று அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசினான். வீரர்கள் புரிந்து கொண்டு சமாதானம் அடைந்தார்கள்.

“எத்தனை சேதங்கள் வந்தாலும் சரி, பாதிப்புகள் ஏற்பட்டாலும் சரி, தடைகள் வந்தாலும் சரி, எல்லாவற்றையும் தீரத்துடன் எதிர்கொண்டு இந்தியாவைக் கைப்பற்றியே தீருவேன். இதில் மாற்றமே இல்லை. உங்கள் உழைப்பும் உதவியும் இருந்தால் எல்லாமே எனக்கு சாத்தியம்.” உறுதியாகப் பேசினார் அலெக்சாண்டர்.

இந்தியா புதிய தேசம். அதிகம் அறிந்திராத தேசம். அரசியல் சூழல். தட்பவெப்பச் சூழல். எதுவுமே தெரியாமல் யுத்தத்துக்குக் கிளம்புவது ஆபத்து என்பது அலெக்சாண்டருக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது. அதே நேரத்தில் சராசரி கிரேக்கர்களைப் போல அவனும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். தன்னுடன் எப்போதும் ஒரு ஜோதிடரை அழைத்துக் கொண்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான். இப்போதும் அவரை அழைத்து விவரம் கேட்க நினைத்தான். ஆனால், ஜோதிடர் என்ன சொன்னாலும் தனது இந்தியப் படையெடுப்பைத் தடுக்க முடியாது என்று முடிவு செய்தவனாக இந்தியப் படையெடுப்புக்கான ஆயத்தங்களில் இறங்கினான்.

“உடனடியாக அரசியல் வல்லுநர் மற்றும் வரலாற்று ஆசிரியர்களை அழைத்து வாருங்கள். இந்தியாவின் ஒவ்வொரு அங்குலத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டான்.

வரைபடத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டான்.

“இந்தியாவுக்கென பிரத்யேகமான போர்முறைகளை வகுக்க வேண்டும். ஒவ்வொரு நாடாகக் கைப்பற்றியபடி முன்னேற வேண்டும். அந்தந்த நாடுகளில் ஒற்றர்களை நியமனம் செய்து அவ்வப்போது நாடுகளில் நிலவும் சூழ்நிலைகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒரு பெரும்படையை நாட்டின் மையப்பகுதியில் நிறுத்தி வைக்க வேண்டும். எந்த இடத்தில் ஆபத்து அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்துக்கு உடனடியாகப் படை வந்து சேரும் வகையில் அது இருக்க வேண்டும்.” தன்னுடைய கனவு தேசத்துக்காகக் கரங்களை விட மூளைக்கு அதிக வேலையைக் கொடுத்திருந்தான் அலெக்சாண்டர்.

கி.மு. 327. இந்துகுஷ் மலைத்தொடரைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைய வேண்டும். ஆனால் இந்த மலைத் தொடரைக் கடப்பது என்பது அத்தனை எளிதல்ல. ஏராளமான சின்னஞ்சிறு நாடுகள். குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் என்று நிறைய எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டும். இவர்கள் பெரும்பாலும் மலை இன மக்களாக இருப்பதால் இவர்களது போர் முறை சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

வியூகங்கள் வகுக்கப்பட்டு, மலைத்தொடரைக் கடக்கும் முயற்சியில் மாசிடோனியப் படைகள் ஈடுபட்டிருந்தன. மாபெரும் மலைத்தொடர். அதைக் கடக்க வேண்டும் என்றால் நிறைய இழப்புகளைச் சமாளிக்க வேண்டும் என்பது புரிந்தது. அது போலவே நிறைய சிக்கல்கள். ஒவ்வொன்றாக சமாளித்து முன்னேறிக் கொண்டிருந்தது அலெக்சாண்டரின் படை.

வீரர்கள் சோர்வடைந்த போது ஓரிடத்தில் சிறிது தங்கிச் செல்லலாம் என்று முடிவெடுத்தான்.

“இந்த இடம் தங்குவதற்கு வசதியாக இருக்கிறது. தங்குமிடங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.” உத்தரவிட்ட அடுத்தகணம் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின. ஆயுதங்களை எல்லாம் பாதுகாப்பாக வைத்து விட்டு, அவரவருக்கு ஏற்ற இடங்களில் தங்கும் காரியத்தில் ஈடுபட்டனர். படைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். தன்னுடைய தலைமையில் ஒரு பிரிவு. ஹெபாஸ்டின் மற்றும் பெர்டிகாஸ் தலைமையில் ஒரு பிரிவு.

சுவாத் பள்ளத்தாக்கில் கால் வைத்தவுடனே அலெக்ஸாண்டரின் படைக்குச் சிக்கல்கள் தொடங்கின. இந்தியாவுக்குள் நுழைவதற்கு அவர்களே பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார்கள். மலைஜாதியினரின் பூர்விக இடத்தில் அவர்களை எதிர்கொள்வது சிரமமாக இருந்தாலும் தாக்குதல்களை லாகவமாக எதிர்கொண்டனர். வெட்ட வெட்ட முளைக்கும் செடி போல மலைஜாதி வீரர்கள் சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர். இதனால் போர் நீண்டு கொண்டே போனது. முடிவு பற்றிய கணிப்புகள் எல்லாம் பொய்த்துக் கொண்டே போனது.

அவர்கள் எங்கிருந்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. மன்னன் ஹஸ்தி, தன் வாளைச் சுழற்றி அலெக்சாண்டரின் படைகளை அடித்து நொறுக்கத் தொடங்கினான். அவனது வேகமும், ஆவேசமும் மாசிடோனியப் படைகளைச் சற்று கலங்கடித்தது.

ஹஸ்தி ஒரு மாவீரன், புஷ்கலாவதி என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட பகுதிக்கு மன்னன். அவன், தலைநகரைச் சுற்றித் தடிமனான மதில் சுவர்களை எழுப்பியிருந்தான் ஹஸ்தி. அதனை இடித்து நொறுக்கவே சில நாட்கள் பிடித்தது மாசிடோனிய வீரர்களுக்கு. கிட்டத்தட்ட இருபது நாட்கள் தொடர்ந்து போர் செய்த பிறகே ஹஸ்தி வீழ்ந்தது.

வெற்றிக் களிப்போடு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறின அலெக்சாண்டரின் படைகள்.

அஷ்வாயனர் மற்றும் அஷ்வகாயனரிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய அளவில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் அடங்கவில்லை.

அவர்களின், மசாகா, பஸீரா, ஓரா உள்ளிட்ட மலைக் கோட்டைகளில் கடும் போர் நடைபெற்றது. மசாகாவில் நடந்த ரத்தப்போரில் முதல் நாளே மாசிடோனியர் கடும் இழப்புகளுடன் பின்வாங்கினர். அலெக்ஸாண்டரும் கணுக்காலில் கடுமையாகக் காயமடைந்தான். நான்காவது நாளில் மசாகாவின் அரசன் கொல்லப்பட்ட போதும் நகரம் சரணடைய மறுத்தது. இந்த கடும் எதிர்ப்பு மாசிடோனியப் படையின் வலிமையையும் நம்பிக்கையையும் சிதைத்தது.

இதுநாள்வரை வீரர்களை மாத்திரமே சந்தித்து வந்த அலெக்சாண்டர் புதிதாக ஒரு வீராங்கனையைப் போர்க்களத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மன்னனின் தாய் கிருபா தலைமையேற்று போரை வழி நடத்தினாள். ராணியின் தலைமையில் பெண்களும் போரில் ஈடுபட்டனர். கிருபாவின் படைகளைச் சமாளிக்கத் திணறியது மாசிடோனியப் படை. தட்ப வெப்பச் சூழல். அது மாசிடோனிய வீரர்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. இந்தியாவைக் கைப்பற்றும் திட்டம் அதன் வாயிலிலேயே தகர்கிறது என்று உணர்ந்த அலெக்ஸாண்டர் சமாதானம் வேண்டி தூது அனுப்பினான். ராணி அதை ஏற்றுக் கொண்டு போரை நிறுத்தினாள்.

ஆனால் அலெக்சாண்டரின் படை இரவில் நகரத்தில் புகுந்து முழு மக்கள் தொகையையும் கொன்றது; ஓராவிலும் அதேபோல் நடந்தது. எப்படியாவது வெற்றி பெறுவது என்பது மட்டுமே அவர்களின் லட்சியமாக இருந்தது.

இவ்வாறாக பல்வேறு சிற்றரசர்களை வெற்றி கொண்டு ஒருவாறு இந்துகுஷ் மலையை மிகவும் சிரமப்பட்டுத் தாண்டியது மாசிடோனியப் படை. அப்படியே சிந்து நதியின் மேற்குக் கரையில் இருந்த காந்தார தேசத்தை அடைந்தன.

இது மிகவும் செழிப்பான பூமி. ரிக், யஜுர், சாம வேதங்களையும், மருத்துவம், இலக்கணம், அரசியல், கணிதம் போன்ற பல்வேறு பாடங்களையும் கற்றுத் தரும் மிகப் பெரிய பல்கலைக் கழகம் ஒன்று காந்தாரத்தின் தலைநகரமான தட்சசீலத்தில் இருந்தது.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.