அத்தியாயம் - 2
கதிர் காதைப் பொத்திக் கொண்டு அலறவும், ‘என்னங்கடா இவன் இத்தனை பில்டப் கொடுக்கிறான்?’ என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட சம்யுக்தாவும், எழில்மலரும், “லவ் கெட்ட வார்த்தையா?” என ஒருசேரக் கூவினர்.“லவ்வை யாராவது கெட்ட வார்த்தைன்னு சொல்லுவாங்களா?” என எதிர்க் கேள்வி கேட்டான் கதிர். தோழிகள் இருவருக்கும் இப்போது மண்டை காய்ந்து போனது. அதற்கு கதிரே விளக்கமளித்து, அவர்கள் மண்டையைக் காப்பாற்றினான்.
“அண்ணியாகப் போறவங்க என்னைத் தப்பா நினைச்சுட்டா அது கெட்டது இல்லையா மிஸ்.?” எனக் கதிர் இழுத்தான்.
“என்னது அண்ணியா?” என எழில்மலர் வியக்க, “பெயரைத் தெரிஞ்சுக்க நல்ல டெக்னிக்.. வாடி எழில் போகலாம்” எனச் சம்யுக்தா திரும்பி நடக்க ஓர் எட்டு வைத்தாள்.
“மிஸ்.முந்திரிக்கொட்டை” எனக் கதிர் சொல்லவும் அவனைத் திரும்பிப் பார்த்து சம்யுக்தா முறைக்க, கதிர் தொடர்ந்து பேசி அந்த முறைப்பைப் புன்னகையாக மாற்றினான்.
“ஆமாம். எனக்கெல்லாம் உங்களை மாதிரி ஆளு செட் ஆகாது. கலகல பார்ட்டி. மோகினி மாதிரி ஒருத்தி தான் வந்து அப்படியே அட்டாக் பண்ணனும்” என நெஞ்சிருக்கும் இடத்தில் தொட்டுக் காட்டியவனின் பார்வை அவனையுமறியாமல் வண்டாய் எழில்மலரை ரீங்காரமிட்டது.
அதையெல்லாம் பகுத்தறிந்து கொள்ளவில்லை எழில்மலர். இவன் என்ன தான் சொல்ல வருகிறான் என அதிலேயே கருத்தைப் பதித்திருந்தாள்.
“அப்போ நான் கலகலன்னு இல்லையா?” என சம்யுக்தா அவனை மடக்க, “நீங்க கலகல பார்ட்டி இல்லை. கலக்கல் பார்ட்டி.. படபடன்னு பட்டாசா பதிலடி கொடுக்கிற சரவெடி. ஆனால் உங்க குரலில் அப்படியே வெண்ணையை உருக்கின மாதிரி அத்தனைக் குழைவு.
குழைவாப் பேசி அதே சமயத்தில் அதிரடியா பதில் சொல்கிற ஆள் தான் என் அண்ணனுக்கு ஏத்த ஜோடி” என்றான் கதிர்.
உங்களைப் பிடிச்சிருக்கு, எனக் கதிர் சொன்னதன் அர்த்தம் இப்போது இருவருக்கும் விளங்க, “அடாவடி.. சரவெடி. பதிலடி. அதிரடி. ரொம்பவும் ரைமிங்கா பேசறதா நினைப்பா? ஆனாலும் இப்படி ஒரு தம்பியை நான் பார்த்ததேயில்லை.. அண்ணன் மேலே அத்தனைப் பாசமா?” என சம்யுக்தா கேட்க,
“ம்ஹூம்ம். அப்படியெல்லாம் தப்பா நினைச்சுக்காதீங்க. யூ சீ. என் அண்ணனை நானே அடிக்க முடியுமா? நீங்க அடாவடி பார்ட்டியா இருக்கீங்க. அதான் அவனைத் தினமும் மொத்துவீங்களே.
நானும் சாப்பாட்டை மொக்கிட்டு நீங்க மொத்துறதைப் பார்த்து என்ஜாய் பண்ணலாமே.. என்னால் முடியாததை நீங்கச் செய்வீங்கன்னு தான் உங்களை ‘செலக்ட்’ பண்ணினேன்” என்றான் கதிர்.
அவன் சொன்னதைக் கேட்டத் தோழிகளுக்குச் சிரிப்பு அரும்ப, “ஆகமொத்தம் எங்க சண்டையில் நீங்க குளிர் காஞ்சுக்குவீங்க?” என்றாள் சம்யுக்தா.
“அப்போ சம்மதமா?” என முகத்தில் நூறு வாட்ஸ் பல்பின் பிரகாசத்துடன் கேட்டான் கதிர். அவன் சிரித்த பொழுது குழிந்த அவன் கன்னத்தில் எழில்மலர் பார்வை தடுமாறி எழுந்தது.
“நான் எங்கே சம்மதம் சொன்னேன். நீங்களே இப்படிப் பேசினா, அப்புறம் உங்களுக்கு அண்ணன் எப்படி இருப்பார்?” என்றாள் சம்யுக்தா.
“உங்க கவலை தேவையில்லை. அவனுக்குச் சிரிக்கவே வராது. முன்கோபக்காரன். ஜோக்கை ஜோக்கா எடுத்துக்கத் தெரியாதவன்” எனக் கதிர் தன் அண்ணனின் குணாதிசியங்களை எடுத்துவிட,
“இப்படிப்பட்ட ஒரு முசுடை என் தலையில் கட்டப் பார்க்கிறீங்களா?” என்றாள் சம்யுக்தா.
“தலையில் கட்ட அவன் என்ன ரிப்பனா? ஆறடியுள்ள மனுஷன்” எனக் கிண்டலாகக் கதிர் சம்யுக்தாவைப் பார்க்க, தன்னைப் போலவே பேசுகிறான் என எழில்மலருக்குச் சிரிப்புப் பீறிட்டது.
“அவங்கவங்களுக்குப் பொண்ணு பார்த்து ஐ. லவ்.யூ. சொல்லிக்கிற இந்தக் காலத்துல அண்ணனுக்குப் பொண்ணு பார்த்து ஐ.லவ்.யூ. சொல்லற நீங்க கொஞ்சம் விசித்திரமான ஆள் தான்” என்றாள் எழில்மலர்.
“பின்னே. என் வாழ்க்கையின் குறிக்கோளே விசித்திரமா இருக்கறது தானே?” எனக் கதிர் சொல்ல, “கதிர், உன்னை எங்கேயெல்லாம் தேடறது? வாடா, பசிக்குது சாப்பிடப் போகலாம்” என நண்பர்கள் நான்கு பேர் அவனைத் தேடி வந்தனர்.
“என் வாழ்க்கைப் பயணத்தில் நான் ‘பிக்கப்’ செய்துகிட்ட தொல்லைகள்.” என நண்பர்களை அறிமுகப்படுத்தியவன், “இவங்க எழில்” என எழில்மலரைப் பார்த்தான்.
இவனுக்கு எப்படித் தன் பெயர் தெரியும் என எழில்மலர் திடுக்கிட, “இவங்க அப்படித் தான் மூணு தடவைக் கூப்பிட்டாங்க” எனச் சம்யுக்தாவைச் சுட்டிக் காட்டினான். பின்னர், “இவங்க மிஸ் முந்திரி” என சம்யுக்தாவை அறிமுகம் செய்ய,
“என்னது முந்திரியா?” என அனைவரும் கதிரைப் பார்த்தனர். அதில் அவனுக்குச் சற்று நெருங்கிய நண்பன் பாலசரவணன், “தெரிஞ்சவங்களா?” என்றான்.
“ஆமாம். கண்ணு முன்னாடி நின்னா பின்னே தெரியாமல் இருப்பாங்களா?” எனத் தனக்கே உரித்தான மொக்கையை எடுத்துவிட்டான் கதிர்.
“டேய்.. வெறியைக் கிளப்பாத?” என நண்பர்கள் அவன் கழுத்தைப் பிடிக்கப் போக, “ரிலாக்ஸ். ரிலாக்ஸ். உங்களுக்கெல்லாம் ரொம்பக் கோபம் வருது.. அது உடம்புக்கு நல்லதில்லை” என்றான் கதிர்.
“உன்னையெல்லாம் ஃபிரெண்டா வச்சிருந்தா உடம்புக்கு என்ன, எதுக்குமே நல்லதில்லை” என நண்பர்கள் முணுமுணுக்க, “ஆமா அதுக்குள்ளே ஏன் சட்டையை மாத்திட்ட? இங்க என்ன சினிமா ஷூட்டிங்கா நடத்தறாங்க?” எனக் கிண்டலாக வினவினான் பாலசரவணன்.
“யூ.. சீ” எனக் கதிர் ஆரம்பிக்க, “ஐயோ. நாங்க வரலை இந்த விளையாட்டுக்கு. கிளம்பறோம்” என அலறினாள் சம்யுக்தா.
“ஏண்டா, இப்படி மொக்கை போட்டே எல்லோரையும் துரத்தற.” எனப் பாலசரவணன் கேட்க,
“மொக்கையா? லைப்ல சிரிக்கணும்டா. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் எனப் பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்போ ஓடற மாதிரி பாவ்லா தான் காட்டுவீங்க. ஆனால் ஓட மாட்டீங்க.
இதையே நான் எந்நேரமும் கவலை, கஷ்டம் எனப் புலம்பிட்டே இருந்தா என்னைப் பார்த்ததும் விடு ஜூட்ன்னு ஓடிட மாட்டீங்க?” எனக் கேட்டான் கதிர்.
கதிர் சொல்வது முற்றிலும் உண்மை என அவன் நண்பர்களுக்கு மட்டுமல்ல, இரு பெண்களுக்கும் புரிந்தது. எந்நேரமும் புலம்பிக் கொண்டிருந்தால், ‘வருகிறான் பார் புலம்பல் கேஸ்’ என ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனாலும் கதிரின் நண்பர்கள் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் அவனைக் கிண்டலடித்தனர். “பாவம் தனியா கஷ்டப்படுவ என நாங்க உன்னைவிட்டு ஓடாமல் இருக்கிறோம். தெரிஞ்சுக்கோ” எனப் பாலசரவணன் சொல்ல,
“அவ்வளவு நல்லவனாடா நீ?” என கதிர், நண்பனை ஓர் பாசப் பார்வை பார்த்தான்.
பேசிய இந்தக் குறைந்த நேரத்தில், கதிரின் சிந்தனைகள் தன்னை ஒத்திருப்பதாக எழில்மலருக்குத் தோன்றியது. கூடுதலாக தன்னைப் போலவே கலகலவென்று பேசுகிறானே என அவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டாள்.
ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக, “எங்களைச் சிரிக்க வைத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். நாங்க கிளம்பறோம். ” என சம்யுக்தா விடைப்பெற்றாள்.
“இப்படித் திடீர்ன்னு கிளம்பினா எப்படி? நாம தான் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆகப்போகிறோமே. அத்தோடு ஒரே ஊர்க்காரங்க வேற.. வாங்க நீங்களும் சாப்பிட. சாப்பிட்டுட்டே அறிமுகமாகிக்கலாம்” எனக் கதிர் அவர்களை உபசரிக்க,
“இல்ல. எங்களுக்கு நேரமாச்சு” என்று மறுத்தாள் சம்யுக்தா.
எழில்மலருக்கு அவன் அழைத்ததும் உடனே அவனுடன் செல்ல மனமில்லை என்றபோதிலும் கதிருடன் வாயடிப்பதில் அலாதிப் பிரியம் ஏற்பட்டது. அதனால் பேச்சின் சுவாரசியத்தில், “நாங்கெல்லாம் டயட்ல இருக்கோம்” என்றாள்.
அதைக் கேட்ட சம்யுக்தா தோழியை வியப்பாகப் பார்த்தாள். அவளாவது பத்திரிக்கைத்துறையில் இருப்பதால் மற்றவர்களிடம் பேசினால் விஷயம் கிடைக்கும் என்று வாயாடுவாள்.
ஆனால் வக்கீலான தோழி எழில்மலரோ, தெரிந்தவர்களிடம் கலகலப்பாகப் பேசினாலும், அறிமுகமில்லாதவர்களிடம் யோசித்து அளவாகத் தான் பேசுவாள். அதை எண்ணி அவள் வியக்க,
“அப்போ சென்னையில் இருக்கிற என் தங்கச்சியோட, ‘ஹோட்டல் மூன்லைட்’ தான் உங்களுக்கு சரி. அங்கே ‘டயட்’ கோழி பிரியாணி போடுவோம்” என்றான் கதிர்.
“டயட் கோழி பிரியாணியா?” என அனைவரும் சுவாரசியமாக கதிரைப் பார்க்க, “ம்ம்ம். தினமும் கோழியை நாலு மைல் ஓடவிட்டு, கொழுப்பைக் குறைச்சு அந்தக் கோழியில் பிரியாணி செஞ்சா அது ‘டயட்’ பிரியாணி தானே?” என்றான் அவன் சிரிக்காமல்.
பக்கென்று சிரித்த சம்யுக்தா, “ஐயோ போதும் சார். சிரிச்சுச் சிரிச்சே எனக்கு வயிறு வலிக்குது” எனச் சொல்ல,
“டேய். மொக்கைப் போட்டே கொல்லாதடா. நீ இன்னும் திருந்தவேயில்லையா?” எனக் கதிரின் நண்பர்கள் அவன் முதுகில் ஆளுக்கு ஒன்றைப் போட்டனர்.
“பார்த்து ஓட விடுங்க சார்.. கோழி எலும்பும், தோலுமா வந்து நிக்கப் போகுது. அப்புறம் எலும்பு பிரியாணி தான் கிடைக்கும். ஆமா, கோழியை ரோட்ல ஓட விடுவீங்களா, இல்லை, ட்ரெட் மில்லிலா? (ஓடுவதற்கு பயன்படும் சாதனம்) ஏன்னா, வெளில ஓடி மாசுக் காத்து பட்ட கோழி எங்க உடம்புக்கு ஒத்துக்காது பாருங்க” என்றாள் எழில்மலர்.
அவள் சொன்னதைக் கேட்ட கதிரின் நண்பர்கள் அனைவரும் நண்பனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க, பாலசரவணன் ஒரு படி மேலே போய், “ஏங்க இவன் தான் மொக்கையை கலர் கலரா பார்சல் பண்ணுவான்னா, நீங்க அந்தக் கலர் மேலே ‘டிசைனே’ போடறீங்க. நீங்க தான் இவனுக்குச் சரியான ஆளு” என்றான்.
“என்னது ஆளா? இதே வேலையாத் தான் சாரும் அலையறாரு” என சம்யுக்தா முறைக்க, “என் அண்ணனுக்கு ஆளுத் தேடிட்டு இருக்கேன்னு தெளிவாச் சொல்லணும். அப்புறம் என் ஃபிரெண்ட்ஸ் என்னைத் தப்பா நினைச்சுக்குவாங்களே” என்றான் கதிர்.
‘இதுவேறயா?’ எனக் கதிரைப் பார்த்த பாலசரவணன், “அதில்லைங்க. இவனை விட பெருசா மொக்கைப் போடற ஆள், அதாவது உங்களை மாதிரி ஓர் ஆள் தான் இவனுக்குக் கிடைப்பான் எனச் சாபம் விட்டோம்” என எழில்மலரிடம் விளக்க முயல, எழில்மலர் இப்போது பாலசரவணனை முறைத்தாள்.
“டேய். போதும்டா. என்னாலேயே பேசி ஜெயிக்க முடியலைன்னா நீ எல்லாம் அவங்களுக்குத் தூசு.தோல்வியை ஒத்துக்கோ.” எனக் கையில் இல்லாத தூசியை வாயால் ஊதுவதைப் போல் ஊதித் தள்ளினான் கதிர்.
“நேரம்டா” எனப் பாலசரவணன் தலையில் அடித்துக் கொள்ள, “சரி. நாங்க கிளம்பறோம்” என சம்யுக்தா மீண்டும் கிளம்ப எத்தனித்தாள். எழில்மலருக்கு, ‘இவள் ஏன் இப்படி அவசரப்படுகிறாள்?’ எனத் தோழியை நினைத்து எரிச்சல் வந்தது.
“பெரியவங்கப் பேசிட்டு இருக்கும் போது இப்படி நடுவுல கிளம்பலாமா? இது உங்களுக்கு அழகா?” என சம்யுக்தாவிடம் கதிர் கேட்க, எதையோ தேடுவதைப் போல் பாவனை செய்தாள் சம்யுக்தா.
“வேண்டாம்டா” என கதிர் தடுப்பதற்குள், “என்ன தேடறீங்க?” என பாலசரவணன் சம்யுக்தாவிடம் கேட்டான்.
“இல்ல. பெரியவங்க பேசறாங்கன்னு சொன்னாரே. அதான் எங்கேன்னு வலை வீசித் தேடினேன்” என சம்யுக்தா சொல்ல,
பாலசரவணின் தோளில் கைகளைப் போட்ட கதிர், “மொக்கையைப் போட மட்டும் கத்து வச்சுக்கக் கூடாது. பல்பை வாங்காம எப்படி பேசறதுன்னும் கத்து வச்சுக்கணும்டா. நீ இன்னும் வளரணும். கோக் குடிச்சா எல்லாம் வளர மாட்ட” என அவன் கையில் இருந்த கோக் பாட்டிலைச் சுட்டிக் காட்டியவன், “வா. உனக்கு பூஸ்ட் ஊத்தி வளர்த்தலாம்” என்றான்.
மாலை மயங்கி, இருள் பூசிக் கொள்ள ஆரம்பிக்க, “நீங்க கிளம்புங்க.. சென்னை போனதும் மறக்காம ‘டயட் பிரியாணி’ சாப்பிடுங்க. ஆனா மறுபடியும் எங்கே மீட் பண்ணலாம் எனச் சொன்னா வசதியாயிருக்கும்” எனத் தூண்டில் போட்டான் கதிர்.
எழில்மலருக்கு கதிருடன் நின்று வாயடிக்க ஆசையிருந்தாலும் முதன் முறையாக சந்தித்தவனிடம் தங்களைப் பற்றிய விஷயங்களைச் சொல்லவும் தயக்கமாக இருந்தது.
அதனால் “அதுவா, காக்காக்கு பாத்ரூம் கட்டி, திறப்புவிழா வைப்பீங்கயில்ல? அங்கே மீட் பண்ணலாம்” என எழில்மலர் சொல்லிவிட்டு, சம்யுக்தாவுடன் நகர்ந்தாள்.
“எந்தப் பத்திரிக்கைல வேலைச் செய்யறீங்கன்னு சொன்னா, பத்திரிக்கை அனுப்ப வசதியா இருக்கும். அத்தோட உங்க பத்திரிக்கையையும் வாங்கிப் படிச்ச மாதிரி இருக்கும்” என அவர்கள் சென்ற திசையைப் பார்த்து கதிர் குரல் கொடுக்க, சம்யுக்தா உடனே பதில் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
“ஏண்டா? அது எப்படிடா எங்க போனாலும் கடலைப்போடப் பொண்ணுங்க உன்னைத் தேடி வராங்க.” எனப் பாலசரவணன் மெதுவாகத் தான் கேட்டான் என்றாலும், பூங்காவில் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்திருந்ததால் தோழிகளின் காதில் நன்றாகவே விழுந்தது.
“நம்ம மூளையோட டிசைன் அப்படி. யூ சீ. ஒன்ஸ் அப்பான் எ டைம்” எனக் கதிர் ஆரம்பித்தது வரையில் தோழிகளின் காதில் விழுந்து புன்னகையை வரவழைத்த அதே சமயத்தில், “சூப்பர் ‘செல்ப்’ தம்பட்டமா இருக்கிறானே.” என்று சம்யுக்தாவைச் சொல்லவும் வைத்தது.
Author: siteadmin
Article Title: அத்தியாயம் -2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் -2
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.