• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 3

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
391
0
43
india

என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -3

“அத்தை! இந்தாங்க காஃபி!” என்று இரண்டு முறை கூவியும் சுந்தரி திரும்பி காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. கூடவே மாமியார் எதையோ வெறித்துப் பார்ப்பதைக் கண்ட ஜனனி, தானும் மாமியாரின் பார்வை சென்ற திசையில் தனது பார்வையை திருப்பினாள்.

ஹாலில் கண்ட காட்சியில் அவளும் ஒரு நிமிடம் ஃப்ரீஸ் ஆகி நின்று விட்டதென்னவோ உண்மை.

“என்ன மாமியாரும் மருமகளும் காலங்கார்த்தால ஸ்டோன் பேப்பர் விளையாடறீங்களா? நம்ம வீட்டு வாண்டு கூட இன்னும் எழுந்துக்கலையே?” என்று வந்த கார்த்திக் அவனும் தன் பங்குக்கு ஒரேயொரு நொடி சிலையாகி பின்னர் தெளிவானான்.

“ஹேய் ஃப்ளவர்! தூக்கத்தில நடக்கிற வியாதி எதுவும் வந்துடுச்சா உனக்கு? இந்த டைம் எல்லாம் உனக்கு அர்த்த ராத்திரி ஆச்சே.. எதுக்கு இப்படி பவுடர் டப்பாவ ஒரே நாளில் காலி பண்ணிட்டு வந்து நிக்கற? பாரு! அம்மாவும் என் பொண்டாட்டியும் பேயறைஞ்சது மாதிரி நிக்கறாங்க. எனக்கே ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிடுச்சு” என்று காலாய்த்தவனைக் கண்டு முறைத்தாள் மலர்விழி.

அவன் சொன்னது போல் அல்லாமல், மிகவும் நேர்த்தியாக உடையணிந்து ஒரு MNCக்கு வேலைக்குச் செல்லும் பெண்ணைப் போல மிதமான அலங்காரத்துடன் வந்திருந்தாள் மலர்விழி.

கார்த்திக் சொன்னதற்குச் சிரித்த சுந்தரி மற்றும் ஜனனியும் மலர்விழியின் நெற்றிக்கண் பார்வையில் இருந்து தப்பிவில்லை.

“மா.. திஸ் இஸ் டூ மச் சொல்லிட்டேன். ஜன்னீஈஈஈஈஈ உனக்கு என்ன சிரிப்பு.. போய் ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்டு வா. நான் ஆஃபீஸ் கிளம்பணும்.”

“என்னது.. ஜன்னியா? அண்ணின்னு ஒரு மரியாதை இருக்கா பாரு? நீ போகாதே ஜானு. அவளே போய் டீ போட்டுப்பா” என்று மனைவிக்கு சப்போர்ட் செய்ய வந்த கார்த்திக் தங்கையிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடினான்.

“ஓ… அப்படியா.. அப்போ நானும் நிறைய சீக்ரெட்ட வெளியே விட வேண்டியது தான்.. ஜன்னி.. உன் கல்யாணம் நடந்ததுக்கே நான் தான் காரணம். அப்புறம் அந்த மரைன் டிரைவ் ல…” என்று மலர் இழுக்க,

“ஹேய்.. இதோ நான் டீ போட போயிட்டேன். நீ சும்மா போயேன் கார்த்திக்.‌ எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்” என்று அவசரமாக சமையலறைக்குள் ஓடினாள் ஜனனி.

“அம்மா தாயே உன் பவர் என்னன்னு தெரியாமல் விளையாடிட்டேன். எதுவா இருந்தாலும் கொஞ்சம் பார்த்து பண்ணும்மா” என்ற கார்த்திக்கை மொபைல் அழைத்தது.

“ஈஸ்வர்?? என்ன இந்த நேரத்தில கூப்பிடறான்?” என்று சத்தமாக யோசித்தவன், மலரிடம், “ஆல் தி பெஸ்ட் ஃப்ளவர்! ஃபர்ஸ்ட் டைம் வேலைக்குப் போற, கொஞ்சம் முன்னால நான் சொன்னதை ஆஃபீஸ்லயும் யூஸ் பண்ணு.” தங்கையை லேசாக அணைத்து வாழ்த்தி அவளது கன்னத்தில் தட்டிவிட்டு மொபைலை ஆன் செய்து கொண்டே சென்றான்.

“குட் மார்னிங் ஈஸ்வர்! என்ன விஷயம்? இவ்வளவு ஏர்லி மார்னிங் கூப்பிட்டு இருக்க?”

“கூப்பிட வேண்டிய அவசியம் வந்தது. நீ உடனே கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு வா. யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம். கேட்டா ஆஃபீஸ் விஷயம்னு மட்டும் சொல்லு. ரொம்ப அவசரம், எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ வா” என்று இடத்தைச் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

கார்த்திக்கை ஈஸ்வர் வரச் சொன்ன இடம் கமல் சக்சேனாவின் வீடு. “இங்கே எதுக்குடா?* என்று காதைக் கடித்தவனுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக உள்ளே சென்றவனை வரவேற்றார் திருமதி சக்சேனா. உடன் வயதான ஒரு தம்பதியினர். கமலின் பெற்றோராம். ஒரே மகனை சாகக் கூடாத வயதில் பறிகொடுத்துவிட்டு நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோமே என்று புலம்பினார்கள்.

“மாஜி! நீங்க இரண்டு பேரும் உள்ளே இருங்க” என்று வேலைக்காரருக்கு கண் காட்டிய திருமதி.கமல், ஈஸ்வரிடம் திரும்பினாள்.

“மிஸ்டர்.ஈஸ்வர்! காலங்கார்த்தால உங்களைத் தொந்தரவு பண்ணதுக்கு மன்னிக்கணும். எனக்கு வேற வழி தெரியல..” என்று ஒரு மன்னிப்பு டன் ஆரம்பித்தாள் திருமதி.சக்சேனா.

“இட்ஸ் ஓகே மேடம். என் வேலைல நேரம் காலம் பார்க்க முடியாது. இருபத்து நாலு மணி நேரமும் ரெடியா இருக்கணும். போலீஸ் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கும் போது நீங்க கூப்பிட்டது தான் ஆச்சரியம். அதுவும் என் பெர்சனல் நம்பர்ல கூப்பிட்டது இன்னும் ஆச்சரியம்.”

“இன்வெஸ்டிகேஷனா.. “ என்று விரக்தியில் சிரித்தாள் அவள். பின்னர் அவளே தொடர்ந்தாள்.

“ஒரு முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் பண்ணத்தான் உங்களை வரச் சொன்னேன். உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவரும் சில தடவை சொல்லி இருக்கார், எதுக்குச் சொன்னார்னு சட்டுன்னு ஞாபகம் வரலை. அவரோட பெர்சனல் மொபைல்ல இருந்து தான் உங்க நம்பர் எடுத்தேன். அதுவும் எமர்ஜென்சி கான்டாக்ட் லிஸ்ட்ல இருந்து..” என்று அவள் சொல்லச் சொல்ல ஈஸ்வர் ஷாக்கானான்.

ஒரே ஒரு முறை கம்பெனி விஷயமாக சந்தித்திருக்கிறான். தேவை என்றால் அழையுங்கள் என்று சம்பிரதாயமாக மொபைல் எண்ணைப் பகிர்ந்து கொண்டிருக்கிறான். அது தவிர வேறெந்த தொடர்பும் இல்லாத நபர், அவனது நம்பரை எமர்ஜென்சி கான்டாக்ட்டில் வைப்பது என்றால் அவருக்கு நடக்க இருக்கும் விபரீதம் தெரிந்திருக்க வேண்டும் என்று அர்த்தமாகிறதே. இதுவே இந்த மரணம் தற்கொலை அல்ல என்று நிரூபிக்கப் போதுமானது.

ஆனால் இல்லை என்று போலீஸ் முடிவு செய்து விட்டது என்றாள் திருமதி சக்சேனா. “காலங்கார்த்தால கமிஷனர் ஆஃபீஸ்ல இருந்து ஃபோன் பண்ணி சொல்லிட்டாங்க. சந்தேகப் படற மாதிரி அவர் உடம்புல எதுவும் இல்லேன்னு. அதனால இது சூசைட் தான்னு கேஸ க்ளோஸ் பண்றோம்னு சொல்லிட்டாங்க.”

“வாட்?? சூசைடா இருந்தாலும், அதுக்குக் காரணம்

“அதுக்குத் தான், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லைன்னு தெளிவா அவர் கையில ஒரு லெட்டர் இருந்ததே.”

“அந்த லெட்டர்ல இருந்த எழுத்து அவரோடது தானா மேடம்? அதை நான் பார்க்கலாமா?”

“அப்படி ஒரு கேள்வியே அவசியமில்லாத படி அந்த லெட்டர் பிரிண்ட் பண்ணி இருந்தது. அதுவும் இவரோட ஆஃபீஸ் லெட்டர் ஹெட்ல.”

“ஓ.. “

“போலீஸ் கேஸ் க்ளோஸ் பண்ணிட்டாங்க. நாங்க இனிமேல் இறுதி சடங்கு எல்லாம் பண்ணனும். எங்க சம்பிரதாயம் எரிக்கிறது தான். ஆனால் எனக்கு இதை இப்படியே விட மனசில்லை. என்ன செய்யறதுன்னு நிறைய யோசிச்சுப் பார்த்த போது தான் உங்க நம்பர் கண்ணுல பட்டது. உடனே கூப்பிட்டேன்.”

“நாங்க என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க மேடம்?”

“யூ ஸீ மிஸ்டர்.ஈஸ்வர்! கமல், தன்னோட திறமையால மட்டுமே தான் இந்த பொஸிஷனுக்கு வந்தார். எதுலயுமே ரொம்ப சின்சியர். ஒரு நேர்மையான அதிகாரியை மிஞ்சி மிஞ்சிப் போனால் லஞ்சம் இல்லை பொண்ணு விஷயத்தில் மிரட்டி இருக்கணும். அதுவும் இல்லேன்னா குடும்பத்தை ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கணும். நானும் என் இரண்டு பொண்ணும் உலகத்தின் பார்வையில் அழகா இருக்கிறது கூட காரணமாக இருக்கலாம். எதுவா இருந்தாலும் கண்டுபிடிக்கணும். இதைச் செய்தவன் இன்னும் ஒரு ஆளுக்கு செய்ய யோசிக்க கூடாது.”

“மேடம்… இது.. இதுல இரண்டு பெரிய கம்பெனி இன்வால்வ் ஆகி இருக்கே.. நாம எப்படி…?”

“எனக்கும் தெரியலை ஈஸ்வர். ஆனால் ஏதாவது செய்யணும்” என்ற திருமதி சக்சேனா உடைந்து அழுதாள். அவளது இரண்டு பெண்களும் ஓடி வந்து தாயைக் கட்டிக் கொண்டு அழுதனர். நிச்சயமாக அழகிகள் தான். அழகு, ஆபத்து தான்.

“ஓகே மேடம். நீங்க சேஃபா இருங்க. சாரோட ரூம் கொஞ்சம் பார்க்கலாமா? போலீஸ் எப்படியும் புரட்டிப் போட்டிருப்பாங்க. எவிடன்ஸ் எதையாவது விட்டு வச்சிருக்காங்களா பார்க்கணும்”

“இப்போ வேண்டாம் ஈஸ்வர். அவரோட ரூம் பூட்டித் தான் இருக்கு. லாஸ்ட் ரைட்ஸ் முடிச்சதும் உங்க வேலையை ஃப்ரீயா ஆரம்பிங்க. இந்தாங்க ரூம் சாவி” என்று மூன்று சாவிகளைக் கொண்டு வந்து நீட்டினாள். ஒரு நொடி ஆச்சரியமாகப் பார்த்த ஈஸ்வர் அதை வாங்கி அறையைத் திறந்தான்.

எதையும் தொடாமல் பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து பின்னர் அறையைப் பூட்டிச் சாவியை திருமதி சக்சேனாவிடமே கொடுத்துவிட்டான்.

“சாராட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்தீங்களா மேடம்? அதுல எதுவும்…?”

“சந்தேகம் வரும்படியான எதுவும் அதுல இல்லைன்னு ஃபோன்லயே சொல்லிட்டாங்க. ரொம்ப உயரத்தில் இருந்து விழுந்து தலைல அடிபட்டது தான் ரீசன்னு ரிப்போர்ட் சொல்லுது. அதை வாங்கத்தான் இப்போ கமிஷனர் ஆஃபீஸ் வரச் சொல்லி இருக்காங்க. நீங்க என் கூட வந்தால் உதவியா இருக்கும்.”

“நாங்களா..?”

“ஏன்.. ஏதாவது பிரச்சனையா?”

“இல்லை..இல்லை.. கார்த்திக் லாயர் தான். ஆனால் நான் எதுக்கு அங்கேன்னு கமிஷனர் கேட்டா என்ன சொல்றதுன்னு தான் யோசனை? அவருக்கு என்னை நல்லா தெரியும்”

“உண்மையைச் சொல்லிட வேண்டியது தான்” என்றவளுக்கு மறுப்பாக தலையசைத்தான் ஈஸ்வர்.

“இல்லை மேடம். இந்த விஷயத்தில் நாம ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். இப்போதைக்கு நீங்க கார்த்திக்கோட போங்க. போஸ்ட்மார்ட்டம் பண்ணின டாக்டர் யாருன்னு பார்த்து நான் டீடெயில்ஸ் வாங்கறேன். கார்த்திக் டூ மினிட்ஸ்” என்று வெளியே அழைத்துச் சென்றான்.

“என்னடா இது பிள்ளையார் பிடிக்க போனா ஆஞ்சநேயர் வரார்…” என்று சத்தமில்லாமல் அலறினான் கார்த்திக்.

அவனிடம் ஏதோ அறிவுரைகளை வழங்கியவன், “பீ கேர் ஃபுல்” என்று விடைபெற்றான்.

*************

“ஹலோ சார்! ஐயாம் மலர்விழி ராஜ்மோகன்! இன்னைக்கு தான் ஜூனியர் அக்கவுண்ட்டன்டா ஜாயின் பண்றேன்” என்று அட்டென்ஷனில் சல்யூட் அடிக்காத குறையாக நின்றவளை மேலும் கீழுமாகப் பார்த்து வைத்ததோடு அவளது பெயரை சரியாக உச்சரிக்க கடும் முயற்சி செய்தான் விகாஸ் மிஸ்ரா, அந்த அக்கவுண்ட்ஸ் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன்.

நல்ல வேளையாக அவர்கள் விகாஸின் தனி அறையில் இருந்தனர். இல்லையெனில் மலரின் பெயரை வைத்தே கம்பெனியில் ஒரு ராகிங் நடந்திருக்கும். நல்ல வேளையாக அவனது சிரமம் உணர்ந்த மலர், “நீங்க என்னை மலர்னு கூப்பிடலாம் சார்” என்று அனுமதி கொடுத்தாள்.

சிறு வயதில் இருந்தே அவளுக்கு பழகிய விஷயம் தானே. விவரம் தெரியாத வயதில் எனக்கு மட்டும் ஏன் இப்படி பெயர் இருக்கிறது என்று அழுதிருக்கிறாள். விவரம் தெரிந்த பிறகு அவள் பெயரை மற்றவர் கொலை செய்யும் போதெல்லாம் பெயரை மாற்றியே தீருவேன் என்று உண்ணாவிரதம் இருந்திருக்காறாள்.

ஒரு கட்டத்தில், இது எனது மொழியின் பெருமையாக்கும் என்று வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டாள். அவளைத் தெரிந்த அனைவரும் அவளை மலர் என்று தான் அழைப்பார்கள். நெருங்கிய வெகு சிலர் மட்டுமே ஃப்ளவர் என்பார்கள். இன்னும் மிக நெருங்கிய சிலர் மான்ஸ்டர் என்று செல்லமாக அழைப்பதும் உண்டு.

“ஹான்… ஓகே.. மலர். வெல்கம் டூ அவர் டீம். ப்ளீஸ் உட்காருங்க” என்று அவளது ப்ரோஃபைல் டீடெயில்ஸை பார்வையிட்டான் விகாஸ்.

“நீங்க ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க. அடுத்து என்ன பண்ணனும்னு நம்ம டீம் ரேணுகா வந்து கைட் பண்ணுவாங்க. ஆல் தி பெஸ்ட்”

“தாங்க் யூ ஸார்!”

“நோ ஸார் இன் கார்ப்பரேட் வேர்ல்டு மலர். கால் மீ விகாஸ்”

“தாங்க் யூ விகாஸ்!” என்று தலையில் லேசாக தட்டிக் கொண்டவளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.

“இது உங்களுக்கு முதல் வேலை இல்லையா, போகப் போக பழகிடுவீங்க.”

“கண்டிப்பா விகாஸ்” என்று வெளியே வந்த மலர்விழி அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்தபடி நடந்தாள். ரிசப்ஷன் சென்று விவரம் சொன்னவள் அங்கேயே நின்று ரிசப்ஷனிஸ்டிடம் சரளமாகப் பேசத் தொடங்கிளாள்.

அப்போது தான் அலுவலகத்தில் நுழைந்த ஜிக்யாசாவின் விழிகளில் இருவரும் சிக்கினார்கள். சட்டென்று முகம் மாறிய ரிசப்ஷனிஸ்ட், “குட்மார்னிங் ஜிக்யாசா!” என்று சொல்லி விட்டு தனது வேலைகளில் கவனமானாள்.

மலர்விழியும் ஜிக்யாசாவும் ஒருவரையொருவர் அளவெடுத்தனர். அவள் யாரென்று தெரியாததால் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே அமர்ந்து கொண்டாள் மலர்விழி. ஜிக்யாசாவிற்கோ அவள் யாரென்று தெரியும் என்பதால் தலை முதல் கால் வரை அவளை அளவெடுத்தாள். ரஞ்சன் அவளது புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்ததையும் அவள் அறிவாள்.

மலர்விழியின் அருகில் அமர்ந்து, “ஹாய் மலர்! ஐயாம் ஜிக்யாசா! செக்ரட்டரி டு தி பாஸ்!” என்று அறிமுகம் செய்து கொண்டாள்.

“பாஸ்??”

“பாஸ் தான்.. மிஸ்டர்.ரஞ்சன் கோஸ்வாமி, ஹெட் ஆபரேஷன்ஸ் . சிஇஓ போஸ்ட்டுக்கு பதிலா இப்போ இந்த போஸ்ட் தான். யூ.எஸ், யூ.கே. தவிர மத்த எல்லா கன்ட்ரீஸோட கன்ட்ரோலும் நம்ம பாஸ் கிட்ட தான் வரும்.”

“ஓ.. க்ரேட்..” பெரிய பதவியில் இருக்கிறேன் பார் என்று அவளே மார் தட்டிக் கொள்ளும் போது சும்மா இருக்க முடியுமா. ஆனால் அவளது உடையும் அலங்காரமும் தான் மலருக்கு பிடிக்கவே இல்லை. இந்த இடத்திற்குத் தேவையில்லாதது என்று தோன்றியது.

“ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க? விகாஸ் என்ன பண்றான்? அவனைப் பார்த்தீங்களா இல்லையா? லேப்டாப் கொடுத்தாங்களா? டெக் டீம் என்ன பண்றாங்க? உங்க சீட் எல்லாம் நேத்தே அலாட் பண்ணியிருக்கணுமே?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

“ஹலோ.. ஹலோ..‌ ஜிக்யாசா.. கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க.. விகாஸைப் பார்த்துட்டேன். வெயிட்டிங் ஃபார் ரேணுகா. ஐ கேன் மேனேஜ். தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்” என்று அவளுக்கு ஆஃபீஸ் உள்ளே செல்ல வழியைக் காட்டினாள்.

“ரேணுகாவா? அவ எப்போதும் லேட்” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே அந்த ரேணுகா அங்கே வந்து சேர,

“ஆல் தி பெஸ்ட் மலர். எதுன்னாலும் நீங்க என் கிட்ட கேட்கலாம். பாஸ் கூட உங்க கிட்ட ஒரு நாள் பேசுவார். இப்போ அவர் கொஞ்சம் பிஸி” என்று ஒயிலாக நடந்து உள்ளே சென்றாள்.

********
Xyz கம்பெனி மலர்விழியின் திறமைக்கு நன்றாகத் தீனி போட்டது.
கோடிக்கணக்கில் பணத்தை கையாளும் பொறுப்பு அவளுக்கு. உலகின் பல மூலைகளிலும் இருந்தும் வந்து சேர்ந்த செலவுக் கணக்குகளைப் பார்க்கும் போதே பல நேரங்களில் தலை சுற்றியது. சில சமயங்களில் அல்ப விஷயத்திற்காக சண்டை போட்டு பணத்தை வாங்கும் மக்களையும் பார்க்கிறாள்.

நல்ல சவாலான வேலை என்பதால் தனது ஹாக்கர் சர்டிபிகேட் எல்லாம் மலர்விழி மறந்தே போய் விட்டாள். அதை ஒருவன் வந்து ஞாபகப் படுத்தும் வரை.

விகாஸையும் சேர்த்து அவர்களது டீமில் மொத்தம் ஐந்து பேர் தான். இவளும் ரேணுகாவும் மட்டுமே பெண்கள். டீமுக்குள் நல்ல ஒற்றுமை இருந்தது. விகாஸ் நல்ல தலைமைப் பண்புடன் இருந்து தனக்கு கீழே இருந்தவர்களை வழி நடத்தினான்.

கை நிறைய சம்பளம், அவரவர் வேலைக்கு ஏற்றபடி சலுகைகள், ரகம் ரகமான விடுப்புகள், என வேலை செய்வோருக்கு சொர்க்கமாகவே இருந்தது அந்தக் கம்பெனி. சில வருடங்களுக்கு முன்பு வரை வந்த லாபத்தை போனஸ் என்று தொழிலாளர் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் 2009ல் ரிசஷன் என்று அமெரிக்கப் பொருளாதாரம் அடிவாங்கிய பிறகு அந்தப் பழக்கம் எல்லாம் மலையேறிவிட்டது. ஆனால் பார்ட்டி கலாச்சாரம் மட்டும் மாறவே இல்லை.

கம்பெனி தொழிலாளர்களை பல்வேறு விதத்தில் ஊக்குவித்தாலும் இந்த பார்ட்டி கலாச்சாரம் என்னவோ மலர்விழிக்குப் பிடிப்பதில்லை. அவள் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்களில் நான்கு டீம் அவுட்டிங் போய் வந்துவிட்டார்கள்.

ஒரு அவுட்டிங்கில் விகாஸ் தனது மனைவி மற்றும் மகளை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தான். திருமதி.விகாஸ் ஸ்ரீதேவியின் சாயலில் இருந்தாள். ஜூனியர் விகாஸோ அசல் ஸ்ரீதேவி போலவே இருந்தாள்.

மற்றவர்கள் எல்லாம் திருமணம் ஆகாதவர்கள் என்பதால் கேர்ள் ஃப்ரண்ட், பாய் ஃப்ரண்ட் என்று அழைத்து வந்தனர். மலர்விழி மட்டும் தனியே தான் சென்றாள். ஐந்தே பேர் இருக்கும் இவர்கள் டீமுக்கான ஒரு நாள் செலவு பத்தாயிரம் ரூபாய்.

வருடத்திற்கு சில கோடிகளைத் தாண்டும் இது போன்ற செலவுகளைக் காணும் போது மலருக்கு இவையெல்லாம் அவசியம் தானா என்று தோன்றியது. ஆனால் கம்பெனியைப் பொறுத்தவரை அவையெல்லாம் பணிபுரிபவரை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும் உத்திகள். இப்படி, சில நூறு கோடிகளைக் கரைக்கும் படியான நிகழ்வு ஒன்று விரைவில் நடைபெற இருக்கிறது என்பதை அறிந்து தலை சுற்றிப் போனாள் மலர்விழி.

இந்தியாவில் கம்பெனி தொடங்கி குறிப்பிட்ட ஆண்டு தொடக்கம் என்று ஒரு கொண்டாட்டம். மும்பையில் ஒரு நாள் பார்ட்டி. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் பணிபுரியும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் வெளிநாட்டு மக்களை எல்லாம் மும்பையைச் சுற்றிக் காட்ட ஏற்பாடுகள். தாஜ் ஹோட்டல் முழுவதும் ஒரு வாரம் இவர்களுக்கு மட்டுமே.

மும்பை அலுவலகம் மொத்தமும் அந்த நாளுக்காகத் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு டீமுக்கும் தனித்தனியாக வேலை பிரித்துக் கொடுக்கப் பட்டிருந்தது.

பார்ட்டி நடப்பதற்கு முதல் நாள் அமெரிக்காவில் இருந்து சிலரை வரவேற்று ஹோட்டலில் விட்டு வரும் வேலை. இப்படி செலவுகளுக்குப் பஞ்சமில்லை.

பல இடங்களில் இது போன்ற சில்லறைச் செலவுகளுக்கு டபுள் என்ட்ரி ஆகி இருப்பது தெரிய வந்தது. இப்படியே போனால் சில பல லட்சக்கணக்கான ரூபாய்கள் அடிவாங்கும் என்று மலர் விகாஸிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் தீவிர விவாதத்தில் இருக்கும் போது இன்டர்காம் ஒலித்தது. எடுத்து ஹலோ சொன்ன விகாஸ் எழுந்து சற்று தள்ளிச் சென்று பேசினான். அவனது முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிய புருவங்களை உயர்த்தினாள் மலர்விழி. மேலதிகாரியின் விஷயத்தில் அவள் எப்படித் தலையிட முடியும்.

ஆனால் தனது இருக்கையில் வந்து அமர்ந்த விகாஸ் தலையைப் பிடித்துக் கொண்டதும் அவளால் சும்மா இருக்க முடியவில்லை.

“என்னாச்சு விகாஸ்? ஏதாவது பிரச்சனையா? ஃபோன்ல யாரு?” அவளது குரல் கேட்ட பிறகு தான் தான் செய்த மடத்தனம் புரிந்தது அவனுக்கு.

“நத்திங்.. வீட்டுல இருந்து ஃபோன்.. அது கொஞ்சம் பர்சனல்.. ப்ளீஸ்.. மலர்..” அவனது ப்ளீஸே இதற்கு மேல் எதுவும் கேட்காதே என்றது.

ஆனால் மலர்விழிக்குத் தான் மண்டை காய்ந்தது.

‘வீட்டுல இருந்து அவன் மொபைல்ல தான கூப்பிடுவாங்க. அது ரீச்சபிளா இல்லேன்னா லேன்ட் லைன்ல கூட கூப்பிடலாம். ஆனால் இப்போ
இன்டர்காம்ல தானே போன் வந்தது, அதுல யார் கூட என்ன பெர்சனல் விஷயம்’ என்று அவள் பங்குக்குத் தலையைப் பிடித்துக் கொண்டாள் மலர்விழி.

“சரி காஃபி சொல்றேன்.. ஃப்ரீயாகிட்டு சொல்லுங்க. நாம டிஸ்கஸ் பண்ணலாம்” என்று வெளியே வந்து விட்டாள்.

அன்றைய தினத்திற்குப் பிறகு பார்ட்டிக்கான ஏற்பாடுகள் படுஜோராக நடந்தேறின. அதை முன்னிட்டு (!?) பாஸின் செக்ரட்டரி என்று ஜிக்யாசாவின் காற்று அடிக்கடி விகாஸின் பக்கம் வீசியது. ஏற்கனவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு உடையுடன் பவனி வருபவள் இப்போதெல்லாம் கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி போல பவனி வந்தாள். அவள் வந்து போன போதெல்லாம் விகாஸின் முகம் பேயறைந்தது போலாயிற்று.

அப்படி என்ன தான் விஷயம் அது என்பதை மலர்விழி பார்ட்டி நடந்த போது அறிந்து கொதித்துப் போனாள். விகாஸிடம் அதைப்பற்றி மலர்விழி பேச நினைத்த நேரத்தில் அவன் ஒரு பெரிய விபத்தில் சிக்கி மும்பையின் ஒரு பெரிய மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.